Loading

கோமதி சம்மதம் சொன்னவுடன் அனைவருக்கும் அப்படி ஒரு மகிழ்ச்சி.

தன் தாயை கட்டி அணைத்து கன்னத்தில் இதழ் பதித்தாள் மட்டற்ற மகிழ்ச்சியில் , ஆனந்தத்தில் துள்ளிக் குதித்தபடி வனிதா ஓர விழிப் பார்வையில் தன்னவனையும் பார்க்க மறக்கவில்லை..

“சரி நவிலா.. உன் அத்தை சம்மதம் சொல்லிட்டா. எப்போ கல்யாணம் நிச்சயம் வச்சுக்கலாம் சொல்லு?” என்றார் சங்கர்.

“அது நீங்க பெரியவங்களா பேசி முடிவு பண்ணுங்க மாமா..” என்றான்.

லேசாக சிரித்தார் சங்கர்..

அவரை அமைதியாக பார்த்தான் நவி..

ஆரம்பத்தில் தன் தாயை பேச விட்டான் ..அவன் பேச வேண்டிய சூழ்நிலை வரும்போது பேசினான். இப்போது திருமண பேச்சு வார்த்தை எடுக்கவும் தன் தாயிடம் பேச சொல்கிறான் என்று எண்ணினார் ..

கோமதியும்  அதைத்தான் எண்ணினார்..

” கொஞ்சம் சீக்கிரமா முடிச்சுட்டா நல்லது “என்ற கோமதி  தனது மருமகளை தான் பார்த்தார்..

“அண்ணி சீக்கிரம்னா எவ்வளவு நாள் குள்ள சொல்றீங்க?” என்றார் சுந்தரி.

” ஒரு மூணு மாசத்துக்குள்ள முடிக்கிற மாதிரி..” என்று கூறும் பொழுதே..

“என்ன கோமதி விளையாடுறியா? இப்பதான் வீடு கட்டிருக்கான். இப்பதான் கொஞ்சம் மேல வந்துட்டு இருக்கான் உடனே கல்யாணம்னு சொல்ற?” என்று சங்கர் தன் மனைவியை அதட்ட,

சுந்தரி தன் மகனை பார்த்தார் ..

அவன் தன் தாயின் கையில் தட்டி கொடுத்துவிட்டு,” பண்ணலாம் அத்தை .. நீங்க சொன்ன போல மூணு மாசத்துக்குள்ள கல்யாணம் முடிச்சிடலாம் ” என்றான்..

அதிர்ச்சியாக அவனைப் பார்த்தாள் வனிதா… மூன்று மாதத்திற்குள் திருமணம் என்றால் ,எவ்வளவு வேலைகள், செலவுகள் இருக்கும் என்று அவளுக்கும் ஒரு அளவிற்கு தெரியுமே.. ‘இந்த அளவிற்கு அவனுக்கு கஷ்டத்தை கொடுக்கணுமா?’ என்று எண்ணி வருந்தினாள்..

” நீ என்னடா அவ தான் கேட்கிறானா முடிச்சிடலாம்  சொல்ற? நடக்கிறத பேசு நவிலா. அவ்வளவு ஈசி கிடையாது.. வீடு கட்டுறதும், கல்யாணம் பண்றதும்..”

“எனக்கும் புரியுது மாமா.. புரியாமல் இல்ல.. அத்தையோட இடத்துல இருந்தும் பார்க்கணும் இல்லையா? அத்தை சொன்ன மாதிரி மூணு மாசத்துல கல்யாணம் வச்சுக்கலாம்.. என் பக்கம் இருந்து  ஒன்னும் பிரச்சனை இல்ல..”

கண்கள் பனிக்க அவனைத்தான் பார்த்தாள்.. ‘தன்னால் தானே!’ என்று மனதிற்குள் வேதனை அடைந்தாள்..

இவ்வளவு நேரம் பெரியவர்களிடம் பேசிக்கொண்டு இருந்தவன். அவ்வபோது பார்வையை தன்னவள் மீதும் வைத்துக் கொண்டுதான் இருந்தான்..

அவள் கண் கலங்குகிறாள் அதுவும் தனக்காக என்று எண்ணும் பொழுது அவளின் வருத்தத்தை பொறுக்க முடியாமல்,” பிரேம்!” என்று சற்று உரக்கவே அழைத்தான்.

அவன் அவ்வாறு அழைத்த அடுத்த நொடி , தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.

அதை பார்த்துக் கொண்டிருந்த பெரியவர்களுக்கும் உள்ளுக்குள் ஆனந்தமாக  இருந்தது…

“இல்ல மாமா .பண்ணலாம் எதுவும் பிரச்சினை இல்லை. என்ன  நிச்சயம் வைக்க ஒரு 20 நாள் போகட்டுமே ..இப்போ ஐப்பசி மாசம்.. கார்த்திகை இருவது தேதிக்கு மேல வைக்கிற மாதிரி பாத்துக்கலாம்..  மார்கழி விட்டு தை கடைசில கல்யாணம் வச்சுக்கலாம்.. பிரச்சனை இல்ல. ஆனா எனக்கு ஒரே ஒரு வேண்டுகோள் மட்டும் இருக்கு..”

“என்ன?” என்பது போல் அனைவரும் பார்க்க .

“எனக்கு பழனி முருகன் கோவில்ல கல்யாணம் பண்ண ஆசை..” என்றான் தயக்கமாக..

“ஓ! அப்போ தான் சிம்பிளா எல்லாத்தையும் முடிச்சிடலாம் அப்படி தான..பெருசா செலவு எதும் வாராது..”என்று சுகந்தி மீண்டும் வாய் திறக்க..

“உன்ன வாய் திறக்காதன்னு சொல்லி இருந்தேன்..”  என்று சீறினான் சுந்தர்..

“அப்படி இல்ல  அக்கா. நான் விருப்பப்படுறேன்.. கல்யாணம் மட்டும் அங்க முடிச்சுக்கலாம். மத்தபடி ரிசப்ஷன் , பெண் அழைப்பு எல்லாம் உங்களுக்கு எப்படி விருப்பமோ அதுபோல பண்ணிக்கலாம்..  ஆனா உங்க அளவுக்கு ,நீங்க யோசிச்சு வச்சிருக்க அளவுக்கு பண்ண முடியாது தான்.  என்னளவுக்கு பண்ணலாம்..ஓரளவுக்கு உங்களோட விருப்பம் குறையாத அளவுக்கு பாத்துப்பேன் நீங்க VAS மண்டபத்துல கல்யாணம் பண்ணனும்னு ஆசைப்பட்டீங்கன்னா ..அது எனக்கு செட் ஆகாது .. கட்டுப்படியாகாது.. ஆனா, மகாலட்சுமி மண்டபமும் ஓரளவுக்கு நல்ல மண்டபம் தான்.. அங்க பண்ணலாம் ” என்றான்.

சங்கர் தான் ,”சரிடா அதை பொறுமையாக  பாத்துக்கலாம்.. நிச்சயம் எப்போ வைக்கலாம் சொல்லு? நாளைக்கு போயிட்டு நம்ம ஜோசியரை பார்த்துட்டு நல்ல நாள் குறிச்சிட்டு வரலாமா?”

” அம்மாகிட்ட அதை பத்தி பேசிக்கோங்க மாமா.. வேற ஏதாவது என்கிட்ட பேசுற மாதிரி விஷயத்தை பேசுங்க.. சொல்லுங்க .. நான் பதில் சொல்றேன்..”

அவன் எதைக் குறிப்பிடுகிறான் என்று உணர்ந்த சங்கரும்..” சரி டா பேசிக்கலாம் ..” என்றார்.

“அம்மா கூட பிரேம் அம்மாவை அனுப்பி விடுறேன் மாமா ஜோசியக்காரங்களை பார்க்க ..” என்றான்..

“அதானே அப்புறம் கட்டு கழுத்தியா வந்து எல்லாத்துக்கும்  நிக்க முடியும்..” என்று சுகந்தி வாய் வைத்துக் கொண்டு அமைதியாக இல்லாமல் கூற..

இவ்வளவு நேரம் சுகந்தி பேசிய அனைத்திற்கும் அமைதியாக சென்றான் அனைவரையும் கருத்தில் கொண்டு… ஆனால் இப்பொழுது அப்படி ஒரு கோபம் அவன் வாய் திறக்கப் போகும் வேளையில், சுந்தரி ஒரு பக்கமும், பிரேம் ஒரு பக்கமும் கையை பிடித்துக் கொள்ள… அமைதி காத்தான்..

அங்கு அவன் அமைதியாக இருந்தது என்னவோ பெரியவர்களுக்கு மதிப்பு கொடுத்து, முக்கியமாக வனிதாவை கருத்தில் கொண்டும்…

ஆனால் இவ்வளவு நேரம் அமைதியாக இருந்த வனிதா இப்பொழுது பொங்கி விட்டாள் ..

“அண்ணி இவ்வளவு நேரம் நீங்க பேசும்போது அமைதியா இருந்ததுக்கு காரணம் பெரியவங்க பேசும்போது குறுக்கால பேசக்கூடாது. எனக்கு அத பத்தி எதுவும் தெரியாது. அதனால நம்ம பேசினா அது அதிகப்படியா இருக்கும்னு வாயை திறக்காமல் அமைதியாக இருந்தேன்

நீங்க இவ்ளோ பேசியும் அமைதியா கேட்டுட்டு இருந்ததுக்கு காரணம் என் அண்ணன் ..என் அண்ணனோட வாழ்க்கைக்காக ..ஆனால், இனியும் பேசாமல் இருந்தா அது ரொம்பவே தப்பா ஆயிடும்.. இது என்னோட வாழ்க்கை. என் அத்தையை பற்றி பேசுற உரிமை உங்களுக்கு யார் கொடுத்தது? பெத்த புள்ளைக்கு அம்மா நல்லது நினைக்கிற அளவுக்கு வேற யாரும் நினைச்சிட மாட்டாங்க..

இன்னொரு வார்த்தை அவங்கள பத்தி இப்படி பேசுறதை நிறுத்திக்கோங்க. அவ்வளவுதான் சொல்லுவேன் ! இவ்வளவு நாள் அமைதியா இருந்தா ,இனியும் அமைதியா இருப்பானு மட்டும் கனவு காணாதீங்க.. அப்புறம் உங்களுக்கு தான் அசிங்கமா போகும்…”என்று எச்சரித்தாள்.

கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு மேல் இப்போதுதான் தன் அண்ணியிடம் பழையபடி பேச செய்கிறாள்.

ஆரம்பத்தில் கூட எதிர்த்து இருக்கிறாள் .. தவறு என்று பட்டால்..ஆனால், இப்பொழுது இரண்டு வருடமாக சுகந்தி எது பேசினாலும் அமைதியாக கடந்து தான் செல்கிறாள் கண்டும் காணாமல்,

” என்னடி கல்யாணம் பண்ண போறாங்கனு .. சம்மதம் சொல்லிட்டாங்கன்னு..உனக்கு இரண்டு கொம்பு முளைச்சிருச்சா” என்று அவளும் எகிற..

“கொம்பெல்லாம் முளைக்கல. இவ்வளவு நாள் நீங்க பேசறத கேட்டுட்டு  அமைதியா இருந்ததுக்கு காரணம் என் அண்ணன் ..இப்பயும் அமைதியா இருந்தனா அதைவிட தப்பான விஷயம் எதுவும் கிடையாது சரிங்களா? இப்போ நீங்க பேசுனதுக்கு அவர் பேச ரொம்ப நேரம் ஆயிடாது ..அவர் அமைதியா இருக்கறதுக்கு காரணம் பெரியவங்களுக்கு மதிப்பு கொடுத்தும், என்னை மனசுல வச்சும் ,அதை ஞாபகத்துல வச்சுக்கோங்க ..நீங்களே உங்களுடைய மரியாதையை கீழே இறக்கிக்காதீங்க..”

இப்பொழுது கோமதியுமே பொங்கி விட்டார்..

” என் மகள் பேசாம இருந்தா நானே பேசி இருப்பேன் டி.. பெரியவங்க என்ற மட்டு மரியாத இல்லாம அது என்னடி பேச்சு வேண்டி கிடக்கு உனக்கு.. சொத்து பத்து வேணும்னு ஆசைப்பட்டேன் தான் .அது கூட என் பிள்ளைக்காக..அவ  எதிர்காலத்துக்காக.. ஒரு அம்மாவா.. அதுக்காக நீ என்ன  வேணாலும் சுந்தரியை பாத்து பேசுவ அமைதியா இருப்பேனு நினைச்சிட்டியோ ?”

“அத்த என்ன  அத்தை இப்படி பேசுறீங்க ?”

“அமைதியா இருந்துக்கோ என் பையனுக்காக தான் பாத்துட்டு இருக்கேன். இல்லன்னு வச்சுக்கோ யோசிக்க கூட மாட்டேன் ..வெளிய போனு அனுப்பி விட்டுருவேன். நீ எப்படி நடந்துக்குறியோ அப்படித்தான் உன் கிட்ட அடுத்தவங்களும் நடப்பாங்க..

இன்னொரு வார்த்தை பெரியவங்க கிட்ட என்ன பேசணும் பேச கூடாதுன்னு யோசிச்சு பேசு.. உன்ன விட சின்ன பையன் அவன் கூட எந்த இடத்தில பெரியவங்களை பேச வைக்கணும்.. எங்க எந்த இடத்தில் தான் பேசணும்னு யோசிச்சு பேசிட்டு இருக்கான்..

அறிவில்ல .. அடகு வச்சிட்டியா என்ன? ” என்று கோபத்துடன் கொந்தளித்தார் .

“சுந்தரி அவ ஒரு கூறு கெட்டவ அவ சொல்றதெல்லாம் மனசுல வச்சுக்காத..” என்று சுந்தரியின் கையைப் பிடிக்க..

” இல்ல அண்ணி அதெல்லாம் எதுவும் இல்லை ..” என்றார் கண்களில் துளிர்த்த நீருடன் சுந்தரி..

அப்போதும் அடங்காமல்,”சரி நிச்சயதார்த்தத்துக்கு என்ன பண்ணுவீங்க ?” என்றாள் மீண்டும்…

“அவங்களுக்கு என்ன பண்ணனும்னு தெரியும். உன்னை யாரும் இங்க நாட்டாமை பண்ண கூப்பிடல.. பெரியவங்க  பேசும் போது உனக்கு இங்க என்னடி வேலை” என்று எகிறினான் சுந்தர்.

” நான் பேசுறேன் அண்ணா.. அவங்க கேட்டதுல ஒன்னும் தப்பு இல்லையே.. என்னால முடிஞ்சது செய்வேன். நிச்சயம் நம்ம பக்கம் எல்லாம் பொண்ணு வீட்ல தான் மாமா செய்வோம்.. காலைல இங்க நிச்சயம் பண்ணிட்டா , மாப்பிள்ளை வீடு பார்க்க பொதுவா மதியம் தான் போவோம் எனக்கு மதியம் செட் ஆகாது. நான் தான் எல்லாம் செய்யணும் உங்களுக்கே தெரியும்..”என்று அவன் மற்றவை கூறி முடிப்பதற்கு முன்பாகவே மீண்டும் வாய் திறந்தாள் சுகந்தி.

” அப்ப சொந்தக்காரங்க எல்லாம் இன்னும் ரெண்டு மூணு நாள் கழிச்சு வந்து உங்க வீட்டை  அந்த பேலசை பார்த்துட்டு போவாங்களோ ..?”

வனிதா பற்களை நரநரவென கடித்தாள். ‘இவங்க இப்போதைக்கு வாய மூட மாட்டாங்க போல ‘என்று தான் தோன்றியது அவளுக்கு .. ‘எவ்வளவு தான் தன் அண்ணனுக்காக கூட பொறுத்துக் கொள்ள முடியும் ‘என்ற எண்ணம் மனதிற்குள் குமறினாள்.

ஆனால் நவிலன் சிறிதும் கோபப்படாமல்,” அவ்வளவு தூரம் எல்லாம் வைக்க சொல்லல அக்கா..ஆனா எனக்கு பெருசா எடுத்துக்கட்டி செய்ய ஆள் இல்லைன்னு உங்களுக்கே தெரியும்… நான் தான் எல்லாத்தையும் இறங்கி செய்யணும் .அதான்… இங்க முடிஞ்ச உடனே அங்க எல்லோரும் ஒரு மணி நேரத்துல வந்தா..இங்கேயும் முடிச்சுட்டு அங்கேயும் பார்க்கிறது எனக்கு கொஞ்சம் சிரமமா  இருக்கும்…

அதுவே  நைட் சாப்பாட்டுக்கு ரெடி பண்றேன்.. சாயங்காலம் நீங்க  5:30-க்கே வந்துட்டீங்கன்னா கூட ஏழு, எட்டு மணிக்கு  சொந்தக்காரங்க கிளம்புற மாதிரி பாத்துக்கலாம் .நீங்க வரதுக்குள்ள எல்லாம் ரெடியா இருக்கும்.. ரொம்ப தூரத்தில் இருந்து உங்களுக்கும் சொந்தம் இருக்காதுன்னு நினைக்கிறேன். எனக்கும் பெருசா கிடையாது ..”என்று கூறினான்..

“பாத்துக்கலாம்டா .. எல்லாத்தையும் பொறுமையா.. நாளைக்கு ஜோசியரைப் பார்த்து நாலு குறிச்சிட்டு வந்ததுக்கு அப்புறம்.. பேசுவோம்.. நான் கூப்பிடுறேன்.. இல்லனா பிரேம் கிட்ட சொல்லி அனுப்புறேன்” என்றார் சங்கர்..

“சரி ” என்றவன் ஒரு தலையசைப் போடு அனைவரிடமும் சொல்லிவிட்டு வனிதாவை திரும்பியும் பாராது தன் தாயுடன் கிளம்பி விட்டான்.

அவர்கள் வீட்டு வாயிலை கூட தாண்டவில்லை… வனிதா தன் அண்ணியிடம் சத்தம் போட  ஆரம்பித்து விட்டாள்..” இவ்வளவு நாள் என் அண்ணனுக்காக மட்டும் தான் அமைதியா இருந்தேன். நீங்க எவ்வளவு பேசினாலும், என் மேல தப்பு இருக்குன்னு நினைச்சு அமைதி இருந்ததா மட்டும் நினைக்காதீங்க . இதுதான் ஃபர்ஸ்ட் அண்ட் லாஸ்ட் ,நீங்க அவங்கள இந்த வார்த்தை பேசுறது.. அவங்க பையனுக்கு அவங்க என்ன செய்யணுமோ செய்வாங்க… கல்யாணத்துல முன்ன நின்னு அவங்க தான் எல்லாம் செய்வாங்க அவங்க பையனுக்கு.. சரியா? பெத்த தாயை விட தன் பிள்ளைக்கு நல்லது  நினைக்கிறவங்க இங்க வேற யாரும் கிடையாது.

இன்னொரு முறை பேசுனீங்கன்னு வச்சுக்கோங்க. என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது”  என்று எகிறி விட்டு தன்னறை நோக்கி சென்று விட்டாள்.

அவள் பேசியது வெளியே சென்ற மூவருக்கும் கேட்க தான் செய்தது. கண்களில் வழியும் நீரை துடைத்தபடி சுந்தரி கிளம்பிவிட்டார்.

தன் தாயைத் தோளோடு அழைத்தபடி நவிலனும் வெளியே சென்றான்..

பிரேம் இங்கு நடந்த வற்றை மேலோட்டமாக கூறி இருந்தான்  நிவேதாவிற்கு..

“சரிடா” என்றவள் அமைதியாகி விட்டாள்.

நவிலன் போன் செய்து எதுவும் கூறவில்லை ..அவளும் அவனுக்கு போன் செய்து எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை.

அன்று இரவே சங்கர் அவனுக்கு அழைத்தார்..

” சொல்லுங்க மாமா!”

“ஜோசியர்  பார்க்க வேண்டாம் நவிலா..அது நமக்கு சரிப்பட்டு வராது. நாள் குறிக்க ஜோசியரை பார்க்க போனா நமக்கு மனசு கேட்காம ஜாதகத்தை பார்க்கிற மாதிரி வரும்.. ஜாதகத்தை பார்த்தா எதும் சொல்லிடுவான்..  மனசு ஒத்து போனதுக்கு அப்புறம் ஜாதகத்தை பார்த்து ஒன்னும் ஆக போறது இல்லை..நல்ல நாள் தானே நமக்குள்ள பார்த்துக்கலாம்.. நீ என்ன சொல்ற?” என்றார்..

“இருங்க மாமா அம்மாகிட்ட தரேன்!” என்றான்.

  சுந்தரி வாங்கி பேசியவர்.. “அதான் அண்ணா நானும் யோசிச்சேன் ..புள்ளைங்க ஆசைப்பட்டாங்கனு நம்ப முடிவு பண்ணிட்டு, பின்னாடி கஷ்டமாயிடும் இல்ல..”

“அதான் இங்க உன் அண்ணியும்  சொன்னா. நம்ம மட்டும் காலண்டரில் நல்ல நாள் பார்த்து நிச்சயத்தை முடிவு பண்ணிக்கலாம்.. ஒரு மூணு தேதி இருக்கு இப்போ தான் பார்த்தேன்.. “

  ” உங்களுக்கு எது சரிப்பட்டு வருதோ பாருங்க மாமா .. கார்த்திகை 20-க்கு மேல வச்சா.. நான் எல்லாம் ரெடி பண்ணிடுவேன் பிரச்சனை இல்ல..  நீங்க ஒரு வார்த்தை வீட்டுல இருக்கவங்க கிட்ட எந்த தேதி சரிப்பட்டு வரும்னு கேட்டுக்கோங்க… “என்று அந்த வீட்டுல என்பதில் அழுத்தம் கொடுத்தான்.

அவருக்கு புரிந்தமையால் புன்னகைத்தவரே, “புரியுது நவிலா..நான் வனிதா கிட்ட கேட்டுட்டு சொல்றேன். அந்த தேதியை முடிவு பண்ணிக்கலாம் ” என்றார்..

Click on a star to rate it!

Rating 4.5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
3
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்