
காலையில் ஏழு மணிக்கு மேல் சுந்தரியும் நவிலனமும் வீட்டில் இருந்து கிளம்ப …
“நவிலா பிரேம் அம்மாவை கூப்பிட்டுக்கலாமா ?”என்று கேட்டார்.
“இல்லம்மா வேணாம்.இப்ப கூட்டிட்டு போக தேவையில்லை . அது பிரச்சனையானாலும் ஆகலாம். அதனால பிரேம் மட்டும் வர சொல்லி இருக்கேன்.அவன் வீட்டுக்கு வெளியே தான் நிக்கிறான். நம்ம போகும்போது அப்படியே கூப்பிட்டுக்கலாம்” என்று கூறினான் .
அவன் சொன்னது போலையே பிரேம் வர மூவரும் சேர்ந்து வனிதா வீட்டிற்கு சென்றார்கள்.
வீட்டு வாயிலில் நின்றபடி சுந்தரி தான் ,”அண்ணா வீட்டுக்குள்ள வரலாமா?” என்றார்..
அனைவரும் கூடத்தில் தான் கூடியிருந்தார்கள் வனிதா வீட்டில்..அப்போதுதான் காபி குடித்துக் கொண்டிருந்தார்கள்.
சுகந்தி தான் யார் என்று எட்டிப் பார்த்தாள் .’ இவங்க எதுக்கு வந்திருக்காங்க ?இந்த நேரத்தில்..?” என்று யோசனையுடனே நின்றாளே தவிர, அவர்களை” வாங்க!” என்று அழைக்கவில்லை.
தன் மருமகளை பார்த்த, கோமதி அதன்பிறகு வீட்டு வாயிலை பார்த்தார்.. அங்கு இருக்கும் சுந்தரியை பார்த்துவிட்டு,” வா சுந்தரி நம்ம வீட்டுக்கு வரதுக்கு என்ன கேள்வி கேட்டுட்டு இருக்க?” என்றார்..
பின்னால் இருக்கும் நவிலனை பார்த்ததும் அவருக்கு ஏதோ ஒன்று புரிய வர.. ஒரு சில நொடி தயக்கத்திற்கு பிறகு,” வா நவிலா !”என்று அழைத்தார்.
பிரேமையும் ,”வாடா நீ ஏண்டா அங்கேயே நிக்கிற?” என்றார். அதன் பிறகு, மூவரும் வீட்டிற்குள் நுழைய..
அதுவரை தன் அறையில் இருந்த வனிதா..” சுந்தரி, நவிலா “என்ற பெயரை கேட்டவுடன் வேகமாக ஹாலுக்கு வந்திருந்தாள்.
கிட்டத்தட்ட ரொம்ப வருடங்களுக்குப் பிறகு, அவனை ஓரளவிற்கு அருகில் பார்க்கிறாள்.. மற்ற நேரங்களில் பார்க்க நேரிட்டாலும், பெரிதாக அவன் முகத்தை பார்ப்பதில்லை.. சிறிது தயக்கமும் ,தடுமாற்றமும் அவளிடம் காணப்பட்டது ..ஆகையாலே, அவனை பார்ப்பதை தவிர்த்து இருந்தாள்..
யதர்ச்சியாக பார்க்க நேரிட்டால் தான். அப்படி இல்லை என்றால் தூரத்திலிருந்து காலேஜ் செல்லும் போது தினமும் பார்த்தாள்..
அவ்வளவே,ஆனால்,இன்று இப்பொழுது ஓரளவிற்கு அருகில் பார்க்கவும் ..லேசாக கண்கள் கலங்கியது.. அவனையே தான் பார்த்தபடி இருந்தாள்..
ரொம்ப நேரமாக தன்னை அவளின் பார்வை துளைப்பதை உணர்ந்து நிமிர்ந்து,அவளை நேராக பார்த்து தலையை மட்டும் அசைத்தான் …(அழுவாதே என்பது போல்..)
கண்களில் குளம் கட்டி நிற்கும் கண்ணீரை உள்ளிழுத்து கொண்டவள். வேறு புறம் திரும்பி புன்னகைத்தாள். அதை வீட்டில் உள்ள அனைவரும் பார்த்துக்கொண்டு தான் இருந்தார்கள்..
இங்கு சுகந்திக்கு தான் வயிறு பற்றிக்கொண்டு எரிந்தது .
‘வீட்டில் இத்தனை பேர் இருக்கும் போதே எப்படி பாக்குறா பாரு ..?’என்று முனங்கிக் கொண்டாள்..
ஆனால்,வனிதா தன் அண்ணியை பெரிதாக கருத்தில் கொள்ளவில்லை..
“வா மா.. சுந்தரி! வாங்க டா.. காபி குடிக்கலாம் “என்ற சங்கர் அவர்களை தங்களுக்கு எதிரில் உட்கார வைத்து விட்டு, சுகந்தியைப் பார்க்க..
“இல்ல அண்ணா.. இப்பதான் குடிச்சிட்டு வந்தோம்” என்றார் சுந்தரி..
இன்னும் இடத்தை விட்டு நகராத தன் மனைவியை பார்த்த சுந்தர்.. “சுகந்தி அப்பா பேசினது காதுல விழலையா? போய் காபி போட்டு எடுத்துட்டு வா..” என்றான்.
முனகிய படியே சுகந்தி காபி போட்டு எடுத்துக்கொண்டு வந்து கொடுக்கவும், சம்பிரதாயத்திற்கு வாங்கி குடித்தார்கள்..
” சொல்லுமா சுந்தரி..என்ன இவ்வளவு காலையிலேயே… அதும் நவிலனோட வந்திருக்க..?” என்றார் சங்கர்.
“இல்ல அண்ணா.. அ..அது “என்று சிறிது யோசனைக்குப் பிறகு,” நம்ம நவிக்கு வனிதாவை பொண்ணு கேட்டு வந்திருக்கிகேன்..அண்ணா” என்றார் சுந்தரி.
“என்ன? உங்க பையனுக்கு எங்க வீட்டு பொண்ணு கேட்குதா?” என்று சுகந்தி தான் எகிறினாள்.
“பெரியவங்க பேசிட்டு இருக்காங்க. கொஞ்சம் அமைதியா வாயை அடக்கிட்டு இருந்துக்கோ!” என்றான் சுந்தர்.
தன் கணவனை முறைத்தவள். அமைதியாக இருக்க.. கோமதி எதுவும் பேசவில்லை.
“அண்ணா..! உங்களுக்கே நம்ம பசங்க விருப்பம் தெரியும். நானும் நம்ம வனிதா படிச்சிட்டு இருக்குன்னு தான் அமைதியாக இருந்தேன் .இப்போ நவிலனுக்கும் ஓரளவுக்கு வேலை வருது.. புள்ளைங்க இரண்டு பேருக்கும் வயசும் சரியான வயசு தான் அதான்..” என்றார்..
சிறிது தயங்கினாலும் தன் மகன் கொடுத்து கை அழுத்தத்தில் தைரியமாகவே பேசினார் ..
அமைதியாக தன் மனைவியை பார்த்தார் சங்கர்..கோமதி தான் பேசினார்..” ரெண்டு பேரும் விரும்புறாங்க தான் சுந்தரி. நான் இல்லைன்னு சொல்லல .ஆனா, நான் என் புள்ள எதிர்கால வாழ்க்கைக்கு நிறைய எதிர்பார்ப்பு வச்சிருக்கேன் இல்லையா..?”
“நீங்க உங்க பிள்ளைக்கு உங்க வசதிக்கேத்த மாதிரி எதிர்பார்த்து இருக்கலாம் அண்ணி. நான் இல்லைன்னு சொல்லல ..நம்ப புள்ளைங்க விருப்பப்பட்டுட்டாங்க. அவங்க விருப்பமும் நமக்கு வேணும் இல்லையா… நம்ம பிள்ளைங்களுக்காக கொஞ்சம் யோசிக்கலாம் இல்ல.. நீங்க என்னன்னு யோசிச்சு சொல்லுங்கண்ணா ” என்றார்.
தொண்டையை செறுமிக் கொண்ட சங்கர்..” என் புள்ளையோட விருப்பம் எனக்கு முக்கியம் தான் மா சுந்தரி ..நான் இல்லன்னு சொல்லல .. நவிலனும் நல்ல பையன் தான்.. என் கண்ணு முன்னாடி வளர்ந்தவன் தான்.. எந்த கெட்ட பழக்கமும் கிடையாது.. சொந்தக்காலில் நிக்கிறான் தான். இருந்தாலும், வீட்ல எல்லாரும் ஒத்துக்கனும் இல்ல… கல்யாணம் என்பது தனிப்பட்ட விஷயம் இல்லையே! மொத்த குடும்பமும் சம்பந்தப்படுற விஷயமாச்சே காலகாலத்துக்கும் நிலைச்சு நிக்கணும் இல்லையா?” என தன் மகனையும் ,மனைவியையும் பார்த்தார்.
“எனக்கு எதுவும் பிரச்சனை இல்லப்பா பேசலாம்!” என்றான் சுந்தர்..
” என்னங்க?” என்று சுகந்தி வாய் திறக்க..
“இது ஒன்னும் உன் வாழ்க்கை கிடையாது …அமைதியா இருந்துக்கோ.. பெரியவங்க பேசிட்டு இருக்காங்க. பெத்தவங்க பேசிப்பாங்க. அவங்க பிள்ளை வாழ்க்கை பத்தி ..நீ எதுவும் பண்ண போறதில்ல இல்ல அவ கல்யாணத்துக்கு ஏதாவது கை அறுத்து செலவு பண்ண போறியா ?இல்ல உங்க வீட்ல இருந்து ஏதாவது பண்ண போறாங்களா.. இல்லல..
என்னோட அப்பாவும், அம்மாவும் பேசிப்பாங்க ..அமைதியா இருந்துக்கோ .. இல்லன்னு வை நீ உங்க அம்மா வீட்டுக்கு பொட்டி படுக்கையை கட்டிட்டு போற மாதிரி நிலமை வரும்..” என்றான் சற்று கோபமாகவே..
கோமதி தான் சிறிது தயங்கினார்..
” நீ என்ன கோமதி சொல்ற ?”என்று தன் மனைவியை பார்த்தார் சங்கர்..
” ரெண்டு பேரும் விரும்புறாங்க தான்.. என் பொண்ணோட விருப்பமும் முக்கியம்தான்..அதே அளவுக்கு நவிலனையும் நான் பார்த்திட்டு தான் இருக்கேன்.. என் கண்ணு முன்னாடி வளர்ந்தவன் தான்.. ஆனாலும், என் பொண்ணு கல்யாணத்துக்கு அப்புறம் அப்படி வாழனும், இப்படி வாழனும், பெரிய குடும்பத்துக்கு வாக்கப்பட்டு போகணும்னு எனக்கும் ஒரு சில கனவுகள் எதிர்பார்ப்புகள் இருக்கு.. பெத்தவளா என்னுடைய எதிர்பார்ப்பும் தப்புன்னு சொல்ல முடியாதே.. ஆனா அது எல்லாம் என்று தயக்கத்துடன் நிறுத்த…”
இவ்வளவு நேரம் தன் தாய் பேசட்டும் என்று அமைதியாக இருந்த நவிலன் இப்போது பேச ஆரம்பித்தான்..
“அத்தை நீங்க வச்சிருக்க எதிர்பார்ப்பு தப்பு இல்லை தான். நீங்க பெத்த பொண்ணுக்கு எப்படிப்பட்ட வாழ்க்கை அமைச்சு கொடுக்கணும்னு நினைக்கிறதும் சரியான விஷயம் தான்.. நான் இல்லைன்னு சொல்லல… நான் வீடு இப்போதுதான் கட்டி முடிச்சு இருக்கேன்.. ஓரளவுக்கு கடன் இருக்கு .இல்லன்னு பொய் சொல்ல மாட்டேன். ஆனா, ரொம்ப இல்ல.. சீக்கிரம் அடச்சிடுவேன். இப்போதைக்கு (ரெண்ட்டுக்கு )லீசுக்கு எடுத்து தான் கடை வச்சு வேலை செஞ்சிட்டு இருக்கேன் ஓரளவுக்கு வருமானமும் வருது ,வேலைக்கு நாலு அஞ்சு பேரும் வச்சிருக்கேன்..
கொஞ்ச நாள் போச்சுன்னா சொந்தமா இடம் வாங்கி கடை போடுற ஐடியாவில் தான் இருக்கிறேன். இப்போதைக்கு ரெண்ட்டுல தான் இருக்கு.. கையில கொஞ்சம் காசும் இருக்கு. பேங்க்ல போட்டு வச்சிருக்கேன். நகையும் கொஞ்சம் வாங்கி வச்சிருக்கேன்.. தாலிக்கொடி ஏற்கனவே வாங்கி தான் வச்சிருக்கேன். அது இல்லாம கொஞ்சம் கையில பணமும் இருக்கு.. மத்தபடி நீங்க சின்னதுல இருந்து இப்ப வரை என்ன பாத்துட்டு தான் இருக்கீங்க சொந்தக்கால்ல தான் நின்னு கொஞ்சம் கொஞ்சமா மேல வந்திருக்கேன்.. என்ன பத்தி நீங்க பார்த்தது தாண்டி ,வெளியே விசாரிக்கணும்னாலும் விசாரிச்சுக்கலாம்…
ஏன்னா இப்ப இருக்க புள்ளைங்க எல்லாம் வீட்ல இருக்கிற மாதிரி வெளியே இருக்க மாட்டாங்கதான். பொண்ணா கொடுக்கறவங்க நாலு பக்கம் நாலு பேர விசாரிக்கிறது தான் நல்லதும் கூட.. என் வீட்ல ஒரு பொண்ணு இருந்தா விசாரிக்காமல் தூக்கி கொடுத்திட மாட்டேன் இல்லையா.. உங்க பொண்ணு விருப்பத்துக்காக மட்டும் நீங்க யோசிக்க வேணாம் ..அதுவும் ஒரு காரணம். மத்தபடி நீங்க வெளியே என்னை விசாரிக்கலாம்.
ஓரளவுக்கு நான் எங்க போற வரேன், யாருக்கு வேலை செய்றேன் என்ற அளவுக்கு மாமாவும் ,அண்ணனும் பார்த்துட்டு தான் இருக்காங்க.. அவங்களுக்கு தெரியாத ஆளுங்க கிடையாது..அவங்களே விசாரிக்கட்டும் .. வீடு கட்ட ,கடை லீசுக்கு எடுக்க ,அப்படி இப்படின்னு நிறைய சமாளித்ததில் கடன் ஓரளவுக்கு இருக்கத்தான் செய்யுது .கூடிய சீக்கிரத்துல அதையும் அடச்சிடுவேன்…
எதையும் மறைக்க விரும்பல இவ்ளோ தான் இப்போதைக்கு என்கிட்ட இருக்கிறது. ஆனா, உங்க பொண்ண என்னால முடிஞ்ச அளவுக்கு நல்லா வச்சு பாத்துப்பேன் நம்பி உங்க பொண்ண கொடுங்க..” என்றான்.
அமைதியாக கேட்டுக்கொண்டு இருந்த தன் மனைவியை பார்த்த சங்கர்..”அவன் சொல்லாத விஷயமும் இருக்கு கோமதி..” என்றார்
கோமதி தன் கணவனை பார்க்க.. “அவனை நானும் ரொம்ப நாளா பார்த்துகிட்டு தான் இருக்கேன். எனக்கும் என் புள்ள விருப்பப்பட்ட ஒன்னை எதுக்கு நம்ப வீம்புக்காக இழக்கணும்னு ஒரு உறுத்தல் உள்ளுக்குள்ள இருந்துட்டே இருக்கு…அதை தாண்டி நம்ம முன்னாடி வளர்ந்தவன் தானே.. என்ற நம்பிக்கையும் இருக்கு.. அந்த கடன் கூட வீடு கட்ட வாங்கினது கிடையாது ..வீட்டுக்கு வாங்கின கடனை எப்பயோ அடச்சிட்டான்.
அவன் சொல்லாம விட்டது , இப்போ ஒரு மூணு மாசம் முன்னே நாலு செண்டுல ஒரு இடம் வாங்கி போட்டு இருக்கான் .. அந்த இடம் வாங்க தான் வெளியே இப்போ கடன் வாங்கி இருக்கான்..மாச மாசம் வட்டி கட்டிட்டு தான் இருக்கான். எனக்கு என் பிள்ளையை அவனுக்கு கட்டி தரத்துக்கு எந்த பிரச்சனையும் கிடையாது.. வெளியே விசாரிக்கிற அளவுக்கு அப்படின்னா நான் பார்த்துட்டு தான் இருக்கேன் .. வேலைனு பார்த்தா ஒரு சில பெரிய வேலையும் வந்துட்டு தான் இருக்கு. சின்ன வேலை கண்டினியூவா வந்துட்டு தான் இருக்கு ..
கையில ஓரளவுக்கு வருமானம் நிக்கிற அளவுக்கு தான் இருக்கு. குடும்பத்த பாத்துக்குற அளவுக்குத்தான் வருமானம் இருக்கு… நீ தான் இனி சொல்லணும் ” என்றார்..
மகளின் எதிர்காலத்திற்காக மனைவியின் விருப்பத்தை கேட்டு நின்றார்.
கோமதி ரொம்ப நேரமாக யோசனையில் இருக்க..
தன் தாய் ,தந்தையின் அருகில் சென்று இருவரின் அருகில் உட்கார்ந்து தாயின் கையைப் பிடித்த வனிதா..” மா ப்ளீஸ்! மா.. இவ்வளவு தூரம் அப்பாவும் சொல்றார் இல்லமா… என்னால அங்க போய் வாழ முடியும்.. நீ ஒரு அம்மாவா எனக்காக யோசிக்கிற. நான் இல்லன்னு சொல்ல மாட்டேன். எனக்கு ஆடம்பரம் வேணாம். அத்தியாவசியம் போதும். நான் அங்க சந்தோஷமா இருப்பேன்..” என்றாள்.
கோமதிக்கு கண்கள் கலங்கிவிட்டது.. அவரும் தன் மகளை பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார். அதுவும் கிட்டத்தட்ட இந்த இரண்டு வருடங்களாக.. அவளின் ஒவ்வொரு செயலும் மாறி இருக்கிறது. இதற்கு முன்பு அவள் பணக்காரி என்று திமிரு காட்டாதவள் தான் ..ஆனால், உடுத்தும் உடையிலிருந்து உண்ணும் உணவு வரை சிறிது எதிர்பார்ப்பவள்… ஆனால், இந்த இரண்டு வருடங்களில் இதற்கு முன்பு ஆயிரத்திற்கு மேல் உடை எடுத்தால் இப்பொழுது எல்லாம் 600, 700 என்று குறைந்திருக்கிறது..
வெளியே எங்காவது சென்றால் அதிகமாக செலவு செய்பவள் இப்பொழுது எல்லாம் குறைந்த அளவில்தான் செலவு செய்கிறாள். அவளுக்கு தேவையான இதர பொருட்கள் வாங்குவது கூட குறைந்து இருக்கிறது.. அவளிடம் மாற்றத்தை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்..
தன் கணவனை பார்த்தார்.. தன் மகனையும் பார்த்தார்.. இருவரும் கண்மூடி திறக்க ..”சரி.. எனக்கு சம்மதம் ..என் மகளை உனக்கு கட்டிக் கொடுக்க நவிலா “என்றார் முழுமனதாக.. மகளின் விருப்பம்.. கணவன், மகனின் எண்ணம் அனைத்தையும் கருத்தில் கொண்டு..
” அத்த என்னத்த சொல்றீங்க ?” என்று பதறினாள் வெகுவாக சுகந்தி..
“நீ கொஞ்ச நேரம் அமைதியா இருக்கியா ? உன் வாயில விழாம என் புள்ள அங்க போய் சந்தோஷமா வாழ்ந்துட்டு போகட்டும்.. ஒரு தாயா வசதி வாய்ப்பு தான் எதிர்பார்த்தேன். மத்தபடி அந்த பையன் கிட்டையோ, இல்ல அவங்க குடும்பத்து மேலையும் எனக்கு எந்த குறையும் கிடையாது
. வருஷக்கணக்கா என் கண்ணு முன்னாடி தான் பாத்துட்டு இருக்கேன்.
நான் பார்த்து வளர்ந்தவன் தான். அவன் கிட்ட தப்பு சொல்ற அளவுக்கு எதும் இல்லை.. வெளியே அவனை பத்தி நாலு பேரை விசாரிச்சுக்க தான் சொல்றான் . அதை நான் செய்ய வேண்டியது கிடையாது சுந்தரும் ,உங்க மாமாவும் இருக்காங்க அவனை இத்தனை காலமும் பார்த்துக்கிட்டு தான் இருக்காங்க… வேலை விசியமா வெளிய எங்கவும் போக வர ஆகட்டும், இங்கே தெருவுக்குள்ள ஆகட்டும்..
சுந்தரியையும் நான் பாத்துட்டு தான் இருக்கேன். அவங்க பக்கம் தப்பு எதுவும் கிடையாது.. பெத்தவளா இவ்வளவு நாள் என் புள்ள வளர்ந்த வாழ்க்கைக்கு அவங்க குடும்ப வசதி வாய்ப்பு, வாழ்க்கை சரிப்பட்டு வருமானு தான் யோசிச்சேன்..ஆனா, என் மகளுக்கு வசதி வாய்ப்பை விட அவ விருப்பம் தான் முக்கியம்னு அவளே என் கண்ணு முன்னாடி வாழ்ந்து காட்டிட்டா இப்ப ரெண்டு மூணு வருஷமா.. அதை எனக்கு உணர்த்தவும் செஞ்சுட்டா.
இத்தனை வருஷத்துல அவ ஆசைப்பட்ட எதும் கேட்டு நான் ஆகட்டும் அவர் ஆகட்டும் இல்லன்னு சொன்னது கிடையாது.. அப்படி தப்பான ஒருத்தனை என் புள்ள வாழ்க்கை துணையாகவும் தேர்ந்தெடுத்து விடல… அவ இந்த வீட்டை விட்டு போயிட்டா நீ சந்தோஷமா இருக்கலாம் தானே..
இனியாவது அவளை நிம்மதியா வாழ விடு.. அவ விருப்பப்பட்ட வாழ்க்கையை சந்தோஷமா வாழ்ந்துட்டு போகட்டும். அதுக்கு குறுக்க நாங்க யாரும் நிக்க விரும்பல, நீயும் உன்னோட வாழ்க்கையை பார்த்துட்டு போ..! என்று சற்று கோபமாகவே தன் மருமகளை கண்டித்தார் கோமதி…
தனக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை அவள் இங்கிருந்து சென்றாளே போதும் !என்று சுகந்தியும் அமைதியாக வாயை மூடிக் கொண்டாள்..

