Loading

சுந்தர் ஒன்று புரியாமல் தன் தாயை வலியுடன் பார்க்க..

” என்னம்மா பேசிட்டு இருக்க ?”என்று வீடே அதிரும் அளவிற்கு கத்தினாள் வனிதா.

” சுந்தர் இப்ப இருக்க உறவு கூட பின்னாடி இல்லாம போயிரும் போல பயமா இருக்கு டா..எனக்கு இப்போ எல்லாம்  உன் பொண்டாட்டி தினமும் என் புள்ளையை குத்தி காட்டி பேசறது கேட்டுட்டு அமைதியா இருக்க முடியல.. இவ்வளவு நாள் உனக்காக  அமைதியா இருந்துட்டேன்.ஆன, இப்படி நான் அமைதியாவே இருக்கிறது என் புள்ளையை விட்டுக் கொடுத்த மாதிரி ஆயிடும் போல ..

அவ காதலிச்சது என்னவோ தப்புதான் . அதுக்காக யாரு வேணாலும்  என் புள்ளையை என்ன வேணாலும் பேசுங்கனு கேட்டுட்டு அமைதியா வேடிக்கை பார்க்க முடியாது .. அவளே இப்போ அமைதியா தான் இருக்கா. ஆனா, உன் பொண்டாட்டி தினமும் பேசுற பேச்சு ஒன்னும் சரியா இல்ல..”  என கூறியிருந்தார்..

அப்பொழுது வனிதா தான் ,” ம்மா அதுக்குன்னு என்ன பேச்சு பேசுற. அவர் உன் புள்ள மா..என்னோட அண்ணன் மா. நான் வேற வீட்டுக்கு போறவ மா.. அதுக்காக நீங்க என் விருப்பத்துக்கு ஏத்த மாதிரி தான் கல்யாணம் பண்ணி வைக்கணும்னு நான் சொல்லல.. அவங்க பேசுறாங்கனு ,அதுக்காக அண்ணனை விட சொல்றியா ? அவனுக்குனு இருக்கிறது  நாம தான மா.  நமக்கும் அவன் தானே மா.. எனக்காக என் எதிர்கால வாழ்க்கைக்காக யோசிச்சு இவ்வளவு செஞ்ச என்  அண்ணனுக்காக இத கூட நான் செய்ய மாட்டேன்னா..அவனுக்காக பொறுத்துப்பேன் ..நீ அதை பெருசா நினைக்காத ..

அவங்க இப்படித்தானே ஆரம்பத்தில் இருந்தே தெரியுமே! என்ன அப்ப இருந்ததை விட இப்ப கொஞ்சம் அதிகமா பேசிட்டு இருக்காங்க அவ்வளவுதான்! அதுக்காக, அவங்க ஒருத்தவங்களுக்காக நீ ஏன் மா அண்ணனை தண்டிக்க நினைக்கிற? அவரை பத்தி யோசிக்க மாட்டியா? அவங்க பண்றதுக்கு அவன் என்னமா பண்ணுவான்?

அண்ணன் நம்ப எல்லார் மேலவும் உசுரையே வெச்சி இருக்கார் அவரையே வீட்டை விட்டு வெளியே போக சொல்றியா ?”என்று அழுது ஆர்ப்பாட்டம் செய்து தன் தாயை அமைதியாக இருக்க வைத்தாள்.

சுந்தர் தான் இதில் மனமுடைந்து போனான் என்று தான் சொல்ல வேண்டும். சுந்தரிடம் தனியாக பேசினாள் “அம்மா பேசியத பெருசா எடுத்துக்காத ..அண்ணா!” என..

அவனோ, கொந்தளித்தான்..” அவ கிட்ட நானும் எவ்வளவோ பேசிப் பாத்துட்டேன் அமைதியாக இருக்க சொல்லி..அப்பவும் திரும்ப திரும்ப பேசுறாளா?..இனி அமைதியா இதை விடக்கூடாது..இருக்கு அவளுக்கு இன்னைக்கு ” என்று எகிறினான்..

“அண்ணா ப்ளீஸ்! அண்ணிக்கிட்ட உன் தனிப்பட்ட விஷயத்தில் சண்டை போடுறது வேற .. எங்களை வச்சு நீ சண்டையோ அடிக்கிறதோ வேணாம்.உன்ன நம்பி தான் வந்திருக்காங்க.. இப்ப நான் அவங்களுக்கு இடைஞ்சலா கூட இருக்கலாம். நான் அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன்.. அம்மா எதுவும் பெருசா பேச மாட்டாங்க.அதை நான் பார்த்துக்கிறேன் ..நீ இதை வச்சி அண்ணி கிட்ட சண்டை போடாத!”  என்றவள் அமைதியாகி விட்டாள்.

இப்படித்தான் அவளுடைய வாழ்க்கையும் இங்கு சென்றது.. அவள் மேல் படிப்பு இரண்டு வருடமும் முழுமையாக  முடித்த பிறகு ,உறுதியாக அவள் தாய் அவளுக்கு சீக்கிரம் திருமணம் செய்தே ஆக வேண்டும் என்று கூறிவிட்டார்.

தரகரையும் அன்று வர வைத்திருக்க.. அவளுக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை. தன் அண்ணனை தான் கண்கள் கலங்க பார்த்தாள் ..

“எனக்கு இப்போதைக்கு கல்யாணம் வேண்டாம் “என்று எவ்வளவோ கூறி பார்த்தாள்.

” இதுக்கு மேல உன்னை இங்க வச்சுட்டு இருக்க முடியாது” என்று கூறிய கோமதி அவளை அடக்கி விட்டார் ..

“ஒன்னு உன் அண்ணன்  இந்த வீட்டை விட்டு போகணும்.. இல்ல நீ கல்யாணம் பண்ணிக்கோ! என்ன பண்ணலாம்னு இருக்க ? நீயே முடிவை சொல்லு?” என்று கேட்பவரிடம் …

நான் திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறவும் அவளால் முடியவில்லை. ஏனென்றால், இங்கு நவிலனின் நிலை என்ன என்று அவளுக்கு தெரியாது ..இவர் கேட்கிறார் என்பதற்காக உடனடியாக திருமணம் செய்துவிட முடியாது. ஓடிப்போய் திருமணம் செய்யும் அளவிற்கு எல்லாம் அவள் மனநிலை கிடையாது..

நவி ஒத்துக்கொள்ளவும் மாட்டான்.  அதே அளவிற்கு சுயநலமாக தனக்காக என்று யோசித்து அண்ணனை வீட்டை விட்டு வெளியே அனுப்பவும் முடியாது..என இருதலைக் கொள்ளியாக தவித்தவள்  அழுகையில் கரைந்தாள் ..

எப்படியோ தன் தாயின் போனை மட்டும் தனியாக எடுத்துக்கொண்டு வந்து நிவேதாவிற்கு அழைத்து இருந்தாள்.

நிவேதாவிடம் வனிதாவின் அன்னை நம்பரும் இருக்க.. “சொல்லு வனிதா?” என்று கேட்டிருந்தாள்.

அதன் பிறகு,  நல விசாரிப்பு முடிந்து வனிதா தன் வீட்டு சூழ்நிலையை விளக்கமாக எடுத்துரைக்க ..

“உனக்கு அவன் மேல நம்பிக்கை இருக்கு இல்ல ?”என்று கேட்டிருந்தாள்.

“ஏன் அடுத்தவங்க  கேட்கிற மாதிரியே நீங்களும் கேக்குறீங்க ?எனக்கு அவர் மேல முழு நம்பிக்கை இருக்கு ..!”என்று கூறியிருந்தாள்..

“சரி வனி.. நல்லதே நடக்கும்னு  நினை..இதுக்கு மேல இதுல நான் இப்போதைக்கு என்ன பேசுறதுன்னு தெரியல ..ஆனா அவன் மேல நம்பிக்கை வை..இப்போதைக்கு வேற எதுவும் சொல்றதுக்கு இல்ல” என்று வைத்து விட்டாள் நிவேதா..

வனிதாவிற்கு தான் பித்து பிடித்து விடுவது போல் இருந்தது.. எதுவுமே சொல்லவில்லை.. ஆறுதல் வார்த்தையும் கூறவில்லை .. அவன் மேல் நம்பிக்கை இருக்கிறதா? என்ற ஒற்றை வார்த்தையில் முடித்து விட்டார்கள் என்று சிறிது கண் கலங்கினாள் .பயந்தால் என்று தான் கூற வேண்டும்..

தன் காதல் கைகூடாமல் போய்விடுமோ? என்று முதல் முறையாக அவளுக்கு பயம்  தோற்றுவித்தது .அவனுக்கு போன் செய்ய இவளுக்கு ஒரு நொடி ஆகாது.  ஆனால் ,இவளுக்கு விருப்பமில்லை ஏனோ.. அதை அவனும் விரும்ப மாட்டான்.

தன் குடும்பத்தை ஏமாற்றி எந்த ஒரு காரியமும் செய்ய அவள் விரும்பவும் இல்லை .ஆனால், வனிதா நவியின் மீது முழு நம்பிக்கை வைத்தமையால் அமைதியாக இருந்தாள்.

வனிதாவிடம் பேசி வைத்தவுடன் நிவே அழைத்தது என்னவோ தனது நண்பனுக்கு தான்..

” அம்மாகிட்ட உன் விஷயத்தை பத்தி பேசினியா ?”என்று கேட்டிருந்தாள்.. எடுத்த எடுப்பில் …

ஏற்கனவே சொல்லி தான் இருந்தாள் அவனிடம்..எப்படியும் வனிதா வீட்டில் இரு வருடத்திற்கு மேல் சமாளிக்க முடியாது என்று நிவே மூன்று மாதங்களாகவே அவனிடம் வீட்டில் தாயிடம் பேச சொல்லி தான் கூறிக் கொண்டிருக்கிறாள்..

இவனும் பேசியிருந்தான்..ஆனால்,  நவிலனின் தாய் தான் ஒத்துக் கொள்வதாக இல்லை..”அவர் ஒரே வார்த்தையாக அவங்க வசதிக்கு நம்ம வசதி சரிப்பட்டு வராது. வயசு கோளாறுல அந்த புள்ளைய காதலிச்சு இருக்கலாம். ஆனா, இப்போ அது சரிப்பட்டு வராதுன்னு உனக்கே தெரிய வேணாமா? பொண்ணு கேட்டு போனா அசிங்க பட்டு ,அவமானம்  பட்டு தான் டா நிப்போம்…அந்த புள்ள வாழ்க்கை என்ன ?நம்ம வாழ்க்கை என்ன? அதெல்லாம் சரிப்பட்டு வருமா நீயே சொல்லு ?

அங்க போய் நம்ம கேட்கணும்னாலும் நமக்கு ஒரு தகுதி வேணும் இல்ல.. நமக்கே தெரியும் நம்ம எந்த இடத்துல இருக்கோம்னு .. நமக்கு கீழ பாக்குறதுல தப்பு இல்ல …மேல பாக்குறது ரொம்ப தப்பா போய்டும். அந்த புள்ளையை மறந்துட்டு வேற வேலையைப் பாரு டா..கஷ்டம் தான் ..ஆன,வேற எதுவும் சொல்றதுக்கு இல்ல “என்றவர் அமைதியாகி விட்டார்..

இது சரிப்பட்டு வராது என்று அவரும் மூன்று மாதங்களாக அவன் எப்படி கேட்டாலும் இந்த ஒற்றை வார்த்தையில் முடித்துக் கொண்டார்..
தன் தாயை மீறி எதுவும் செய்ய முடியாமல் கையறுந்த நிலையில் அவன் இருக்க..

இறுதியாக அவன் தன் தாய்க் கூறியது போல,” இது சரிப்பட்டு வராது போல” என்று கூற..

“ஓ! அப்போ அவளை விட்டுடலாம்னு முடிவு பண்ணிட்டியா? அப்போ அம்மா தான் உனக்கு முக்கியமா போய்ட்டாங்க ..அவ முக்கியமா இல்ல .. சரி அது உன் விருப்பம்..அப்போ அய்யா  ஏன் அவ மேல விருப்பட்டீங்க ? சரி வாரதுனு தெரிஞ்சு தான காதலிச்ச? இல்ல எல்லாரும் சொல்ற போல வயசுக் கோளாறா? சரி அவ வேணாம்னு  முடிவு பண்ணத முன்னாடியே சொல்லி இருக்கலாம் இல்ல? இல்ல ,அவளை கைக் கழுவி விட்டுற எண்ணத்துல தான் இவ்வளவு. நாள் இருந்தியா?” என்று கேட்டிருந்தாள் … நண்பன் என்பதை தாண்டி அவன் தவறை சுட்டி காட்டிடவே..

“என்ன பாத்தா எப்படி தெரியுது டி உனக்கு? ஊர்ல இருக்கவங்க சொல்ற மாதிரியா ..”என்றவன் அடுத்த வார்த்தை பேசாமல் நிறுத்தி இருந்தாள் நிவேதா ..கோபத்தில்..

” கோபம் வருதா சாருக்கு ? நாலு வருஷம் ஒரு பேச்சு வார்த்தை கூட இல்லாமல் உனக்காக அவ காத்துட்டு இருந்து இருக்கா.. அந்த இடத்திலிருந்து பாரு சரியா? நீ தான் அங்க இங்கன்னு ஓடிட்டு இருந்த வேலை குடும்பம்ன்னு .. அவ எங்க சுத்தினாலும் யார் கிட்டயும் எதையும் ஷேர் பண்ண முடியாம இருந்தது அவளுக்கு தான் தெரியும்…இனி சொல்றதுக்கெல்லாம் ஒன்னும் இல்ல.. பொண்ணா அவ இடத்தில் இருந்து மட்டும் யோசி.. வீட்டில் அவளுக்கு எத்தனை பிரச்சனை இருந்திருக்கும்.. உன்ன லவ் பண்றான்னு தெரியும் அவங்க வீட்ல எல்லாருக்கும்.. அவங்க அண்ணியை பத்தி உனக்கு நான் சொல்ல வேண்டியதில்லை. அவங்க அம்மாவை பத்தி சொல்ல வேண்டியது இல்ல.. வீட்ல இருக்க இத்தனை பிரச்சனையும் தாண்டி இந்த நாலு வருஷத்துல உன்கிட்டயும் பேசாம , வேற யார் கிட்டயும் எதையும் ஷேர் செய்யமா அவளோட சூழ்நிலை என்னன்னு யோசி..” என்று அவளது நிலையும் எடுத்துக் கூறி இருக்க..

அவனும் ,” எனக்கு அவ நிலமை  புரியாமல் இல்ல டி..ஆன இப்போ என்ன செய்றதுனு  தெரியல . அம்மாவை மீறி வேறு எதுவும் செஞ்சுற முடியுமா ? ஏற்கனவே பெரியவனும் சொல்லாம கொள்ளாம கல்யாணம் பண்ணிட்டு வந்துட்டான் .இப்போ நானும்னு ..” என்றவன் அமைதியாக…

” இப்போ வரைக்கும் உன்ன இங்க யாரும்  தப்பான முடிவு எடுக்க சொல்லவே இல்லையே.. அம்மாவை பேசி சரி கட்டி அவங்க வீட்டுல பேசுனு மட்டும் தான் சொல்றேன்… உன்ன போராட தான் சொல்றேன். எதிர்த்து நிக்க சொல்லல சரியா? போராட தைரியம் இல்லனா எதுக்கு டா லவ் பண்றீங்க பிரச்சனை வரமா இருக்காது .அதை எப்படி சரி பண்ணனும்னு யோசி.. “என்று அவள்  அவ்வளவு கூற..

“அம்மா ஒத்துக்கணுமே  முதல்ல…”

“ஓ!  அம்மா ஒத்துகணுமா? பாரு டா அம்மாவை கேட்டா லவ் பண்ண? இல்லல …நீ லவ் பண்ணும் போது அவ உன்னை விட வசதியானவனு உனக்கு தெரியாதா? அவங்க வீட்டுல ஒத்துக்குவாங்களா இல்லையானு தெரியாதா? அவங்க அம்மா ,அப்பா,அண்ணன் பத்தி எல்லாம் தெரியும் தானே.? நீ வேற ஏதோ ஒரு ஊர்ல, வேற ஏதோ ஒரு பொண்ண விரும்பலையே? உனக்கு தெரிஞ்ச பொண்ணு அவ.. ஏன் இந்த நாலு வருஷத்துல அவங்க பேமிலி பத்தி உனக்கு முழுசா தெரியும் தானே! அப்போ அதுக்கேத்த மாதிரி தானே அம்மாவை சமாதானம் பண்ணனும்..

அம்மா கிட்ட பேசணும். ஆனா, இது எதுவுமே பண்ணாம ,அம்மா ஆட்டுக்குட்டின்னு காரணம் சொல்லிட்டு இருக்க ? அப்ப அவளை விட்டுடலாம்னு முடிவு பண்ணிக்கோ..” என்று வைத்துவிட்டாள் கோபமாக..வேறு எதுவும் பேசவில்லை .

அவன் யோசிக்கட்டும் என்று தான் இவ்வளவும் பேசினாலே தவிர.. தனது நண்பனை குத்தி காட்ட வேண்டும் என்றோ ?இல்லை அவன் மனதை நோகடிக்க வேண்டும் என்றோ எதையும் கூறவில்லை..

இவனை நம்பி தானே அவள் இருக்கிறாள். ஆனால், இவனோ, தாய் என்று அம்மாவின் முந்தியை பிடித்துக் கொண்டிருப்பது போல் இருக்கிறது அவனின் செயல் என்று எண்ணி கோபத்தில் அத்தனையும் பேசிவிட்டு வைத்துவிட்டாள்..

அடுத்து என்ன செய்வது என்று நிறைய யோசித்தாள். தனது நண்பனின் வாழ்க்கைக்கு போராட வேண்டும். போராட்ட கூடியவனோ தாய் என்ற ஒற்றை வார்த்தையில் பாச வலையில் சிக்கித் தவிக்கிறான் ..அதை விட்டு வெளியில் வந்து விட்டால் சுற்றியுள்ளவர்களை எவ்வளவு வேணாலும் பேசி சரி கட்டி விடுவான் ..ஆனால், அவனது  முதல் பிரச்சினையே,அவனது தயக்கத்திற்கான காரணமே, தாய் தானே !என்று அனைத்தையும் யோசித்தவள். ஒரு முடிவு எடுத்தவளாக மறுநாள் காலை கிளம்பி சரண்யா வீட்டிற்கு வந்திருந்தாள்..

சரண்யாவிடம் கூட தான் வருவதாக கூறவில்லை .வந்த பிறகு தான் சரண்யாவிற்கு தெரியும்..,” என்ன டி அதிசயமா இருக்கு சொல்லாம கொள்ளாம வந்திருக்க?” என்று கேட்டாள்.

“ஒரு முக்கியமான விஷயம்..அதான்  என்ன பிரேம் வீட்டுக்கு  கூட்டிட்டு போ ” என்றாள்..

” தனியாவா வந்த?” என்று கேட்டாள் சரண்யா..

” கொஸ்டின் கேட்காம நான் சொன்னத செய்!” என்று அவள் தீவிரமாக இருக்க ..

சரி என்று சரண்யா பிரேம் வீட்டிற்கு அழைத்து சென்றாள்.

பிரேமையும் போன் செய்து அவன் வீட்டிற்கு வரவைத்து இருந்தாள். இவர்கள் செல்லும் போது பிரேம் வீட்டில் இருந்தான் ..அவன் வீட்டில் வேறு  யாரும் இல்லாமல் இருக்க.

“என்ன நிவேதா எப்படி இருக்க?  இவ்ளோ தூரம் இங்க வந்து இருக்க?” என்றான் பிரேம்.

” ஏன்டா உங்க வீட்டுக்கு வரக்கூடாதா ? வந்தவளை வானு கூட கூப்பிடாம இப்படி கேள்வி  கேட்கிற? “என்றாள்..

” இ..இல்லை அ..அது” என்று தடுமாறியவன்..”சரி  எப்படி வந்த ?” என்று கேட்டான் ..

“எப்படியோ வந்தேன் அதை விடு! எனக்கு ஒரு ஹெல்ப் மட்டும் பண்ணு.. நான் வனிதாவை பாக்கணும். அதுக்கு மட்டும் ஏதாவது உதவி பண்ணு ..ஒரு பத்தே பத்து நிமிஷம் அவளை இங்க வர வைக்கிற மாதிரி பண்ணு பிளீஸ் !” என்றாள்..

” என்ன?” என்று சரண்யாவும் பிரேமும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்..

அவள் பிரேம் வீட்டிற்கு வந்ததே அதிர்ச்சி தான்.. இதில் வனிதாவை வேறு வர சொல்வது.. இன்னும் அதிர்ச்சி அவர்களுக்கு.. இருவரும் அதிர்ச்சியுடன் நோக்க ..

“முடியுமா? முடியாதா?” என்றாள் வேகமாக..

முதல் முறையாக இவ்வளவு சத்தமாக பேசுகிறாள்.. அன்பாக மட்டுமே பேசி பழகி பார்த்தவர்களுக்கு முதல் முறை குரலை உயர்த்தி பேசும் நிவேதா புதிது… ஒரு பக்கம் அதிர்ச்சி.. இன்னொரு பக்கம் ஏதோ செய்ய முடிவெடுத்து விட்டாள் என்ற எண்ணமும் இருக்க செய்தது.

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
3
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்