
குழந்தையை வீட்டிற்கு அழைத்து வந்த பிறகு, தினசரி வந்து பார்த்து சென்றான் வசந்த்.. இப்படி அவளது நாட்கள் முழுமையாக குழந்தைக்காகவே சென்றது என்று தான் சொல்ல வேண்டும்…
மொத்தமாக சன்விகாவை தனது பெரியம்மா வீட்டில் அவர்களின் பொறுப்பில் விட்டு இருந்தாள்.. சன்விகா குழந்தையாக இருக்கும் போது எதையுமே பெரிதாக செய்யாதவள்.. இரண்டாவது குழந்தை கௌஷிக்க்கு அனைத்தும் இவளே செய்யும்படியாக இருந்தது..
தன் தாய் செய்கிறேன் என்று கூறும்பொழுது கூட ,தானே செய்து கொள்கிறேன் என்று கூறி இருந்தாள்..
அவளிடம் அதிக திடம், மன உறுதி அனைத்தும் வந்திருந்தது.. மாமனாரின் இறப்பிலிருந்து அவளது வாழ்க்கை தடம் புரண்டது.. அதைத்தாண்டி இப்பொழுது குழந்தையின் உடல்நிலை அனைத்தும் அவளது வாழ்க்கையை இறுக்கி பிடிக்க.. அவளும் இறுகி இருந்தாள் ..
எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும் தாங்கிக் கொள்ளும் மனநிலைக்கு வந்துவிட்டாள் என்று தான் சொல்ல வேண்டும். அப்படியே கிடுகிடு என்று நாட்கள் செல்ல..
குழந்தைக்கு ஐந்து மாதம் இருக்கும் பொழுது தன் புகுந்து வீட்டிற்கு வந்துவிட்டாள். சன்விகாவிற்கு மூன்று வயதை தொட்டிருக்க. ஜூன் மாதம் குழந்தையை எல்கேஜில் சேர்த்திருந்தாள்.
ஆரம்பத்தில் இரண்டு நாட்கள் வசந்த் சன்விகாவை பள்ளியில் விட்டுவிட்டு உடன் இருந்தான்.. வேலையின் காரணமாக மதியமே அழைத்துக் கொண்டு வந்து விட்டான்.. ஆனால் மூணாவது நாளில் இருந்து மாலை வரை இருக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் கூறி விட …
அவ்வளவு நேரம் அவனால் இருக்க முடியாது என்பதால் என்ன செய்வது என்று யோசித்தவன். தன்னால் முடிந்தவரை கௌசிக்கை ( இரண்டாவது மகனின் பெயர் கௌஷிக்) தான் பார்த்துக் கொள்வதாக கூறினான்..அது சரி வராது என்றவள்.. சன்விகாவை பள்ளிக்கு அழைத்துச் செல்லும் பொழுது கௌசிக்கை தாய் வீட்டில் விட்டுவிட்டு, வரும்போது அழைத்துக் கொண்டு வந்தாள்.
அவளும் இரண்டு நாட்கள் தன் மகளுடன் இருந்துவிட்டு அதன் பிறகு வீட்டிற்கு வந்து விட்டாள்.. சன்விகாவும் அதன் பிறகு தானே பள்ளிக்கு செல்ல ஆரம்பித்து விட்டாள்.. கௌஷிக்கும் அடியெடுத்து வைக்க ஆரம்பித்து விட்டான்.
அவனுக்கு எட்டு மாதம் இருக்கும் பொழுது சிறு சிறு புள்ளிகளாக உடம்பில் ஆங்காங்கே இருக்க பயந்தவள்.. ஒரு வேலை அம்மையாக இருக்குமோ? என்று ஊரில் உள்ள பாட்டி ஒருவரை நாடி கேட்க..
அவரும் அம்மை தான் என்று கூறி விட ..வீட்டை சுத்தம் செய்து வேப்பிலை முன் வாசலில் சொருகி வைத்து ,சுத்த பத்தமாக இருந்து அனைத்தையும் செய்தாள்.. அப்பொழுது குழந்தை கௌஷிக்கு சளி பிடித்து இருந்தது.. அம்மை இருப்பதால் மருத்துவரை அணுக முடியாது என்று வீட்டில் இருக்கும் மருந்தைக் கொடுத்து பார்த்துக் கொண்டாள்.
அப்படி இருக்கும் பொழுது ,கவிதா பேரப்பிள்ளைக்கு அம்மை போட்டு இருப்பதால் சிறிது தின்பண்டங்கள் வாங்கிக்கொண்டு பார்த்துவிட்டு செல்வதற்காக வந்தவர், சிறிது நேரத்திற்கு பிறகு கௌஷிக்குக்கு அல்லை குத்தி இழுப்பதாக கூறினார்..
“அப்படின்னா என்னம்மா?” என்றாள் புரியாமல் கேள்வியாக,
“சளி பிடித்திருந்து மூச்சு வாங்குச்சுன்னா அந்த மாதிரி இருக்கும் .. உடனே ஹாஸ்பிடல் கூட்டிட்டு போறதுதான் நல்லது..” என்றார்..
அம்மை போட்டிருந்ததால் மருத்துவரை பார்க்க யோசித்தாள்..
“நெஞ்சு சளி நிறைய இருக்கு போல டி .. புள்ள மூச்சு விட சிரமப்படுது ஹாஸ்பிடல்ல கூட்டிட்டு போங்க “என்று கூறினார் கவிதா .
சரி என்று மருத்துவமனை செல்ல.
அங்கு அவனுக்கு மூச்சு திணறல் பிரச்சனை இருப்பதாக கூறி விட்டார்கள்..
அவனை மருத்துவமனையில் அட்மிட் செய்தார்கள். ரொம்ப மூச்சு வாங்குவதால் டிரிப்ஸ் ஏற்றப்பட்டது.. மாலை 6 மணிக்கு மேல் மூச்சு திணறல் பிரச்சனை அதிகமாக இருக்க..
ஏற்கனவே அவனுக்கு மால் ரொட்டேஷன் ஆபரேஷன் செய்திருந்தமையால் சேலம் கொண்டு செல்லுங்கள். இங்கே எங்களிடம் அந்தளவு வசதி வாய்ப்புகள் இல்லை.. அது மட்டும் இல்லாமல் ஏற்கனவே இவனுக்கு ஆபரேஷன் செய்த மருத்துவரை அணுகுவது நல்லது என்று கூறி விட ..
ஒரு வயது குழந்தை வரை பார்க்கும் மருத்துவர் என்பதால் வேகமாக ஆம்புலன்ஸில் சேலத்திற்கு இரவு 9 மணிக்கு அழைத்துச் செல்லப்பட்டான் கௌஷிக் ஆக்சிஜன் உதவியுடன்
..
அங்கு செல்லும்போது சேலம் தொடுவதற்கு முன்பாகவே , அவனது உடல் பச்சை நிறத்தில் மாற தூக்கி வாரி போட்டது இருவருக்கும்…
கௌஷிக்கின் உடல் பச்சை நிறத்தில் மாறியவுடன் வேகமாக ஆம்புலன்ஸை இயக்க கூற..
மருத்துவமனை சென்றவுடன் மருத்துவர்கள் அவனை பரிசோதித்து விட்டு ,இப்பொழுது எதுவும் கூற முடியாது என்று கூறியவர்கள் .அவனை NICU வில் அட்மிட் செய்துவிட்டு உள்ளே யாரும் செல்லக்கூடாது என்று கூறிவிட்டு இருவரையும் வெளியே நிற்க வைத்து விட்டார்கள்.
குழந்தையை அட்மிட் செய்த சிறிது நேரத்திலே குழந்தைக்கு உடல் முழுவதும் பச்சையாக இருப்பதால் மூச்சு திணறி , மூச்சுவிட ரொம்பவே சிரமமாக இருக்கிறது. எதுவும் சொல்றதுக்கு இல்லை..ஆண்டவனை வேண்டிக்கோங்க என்று ஒற்றை வார்த்தையில் கூறிவிட்டு சென்றுவிட்டார் மருத்துவர்…
இறுகி விட்டாள் என்று தான் சொல்ல வேண்டும் நிவேதா.. குழந்தையை பற்றி எதுவுமே கூற முடியாது என்று கூறி மருத்துவர்கள் சென்றவுடன் தலையில் அடித்துக் கொண்டு வசந்த் அழுதான்..
ஆனால் ,அவளின் கண்களில் இருந்து ஒரு சொட்டு கண்ணீர் கூட வரவில்லை.. அவ்வளவு இறுக்கமாகி நின்றாள். அத்தனையும் பொறுத்துக் கொண்டாள் என்று தான் சொல்ல வேண்டும்.. அமைதியின் உருவமாக இருந்தாள் தன் கணவனை தேற்றினாள்…
” ஏன்டி இப்படி இருக்க ?” அவன் கேட்டதற்கு கூட பதில் அளிக்கவில்லை..
இரவு இரண்டு மணி போல் தான் குழந்தைக்கு இப்பொழுது கொஞ்சம் பரவாயில்லை என்று கூறினார்கள் …
ஆனால் இன்னும் முழுமையாக குணமடையாததால், அவனை என்ஐசியூ (NICU) பிரிவில் இருந்து ஐசியூ (ICU) பிரிவிற்கு மாற்றினார்கள்..
அவனுக்கு இப்பொழுது பயப்படும் படியாக எதுவும் இல்லை(உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை) என்று கூறிய பிறகே சாந்தமடைந்தாள் .
ஐசியூல் ஒருத்தவர்கள் மட்டுமே அனுமதி. அதுவும் குழந்தை ஹாஸ்பிடல் என்றமையால் பாலூட்டும் தாய்மார்கள் இருக்கும் இடம் என்பதால் , அதிகமாக தாய்க்கு தான் அனுமதி சுற்றி உள்ள தாய்மார்களுக்கு ஆண் இருந்தால் அசவுரியமாக இருக்கும் என்று கூறி விட..
இவன் வெளியே தங்கிக் கொண்டான் ..குழந்தையுடன் அவள் இருந்து கொண்டாள். அவள் குளிக்க செல்லும் நேரங்களில் மட்டுமே வசந்த் குழந்தையை பார்த்துக்க கொள்ள நேரிடும் ..
இப்படியே ஒரு வாரம் கடந்து இருந்தது.. மருத்துவமனைக்கு ரஞ்சித் வந்து பார்த்துவிட்டு சென்றான்.. கவிதாவும் இரண்டு நாட்களுக்குப் பிறகு, வந்து அவளுடன் தங்கி விட்டு சென்றார்…
அவனுக்கு 6 வயது வரைக்கும் இப்படித்தான் மூச்சு திணறல் பிரச்சினை இருக்கும் என்று மருத்துவர் ஒரே வார்த்தையாக கூறிவிட்டார். பனிக்குட நீர் குடித்து இருக்கிறான் ஆகையால் இப்பிரச்சனை என்றனர்…
இதை சரி செய்வதற்கு எதுவும் இல்லையா? என்று கேட்டதற்கு இன்னும் ஒரு ஆறு மாத காலம் சென்ற பிறகு டெஸ்ட் எடுத்து பார்க்கலாம் என்று கூறினார்கள். அதுவரை பஃப் அடிக்குமாறு கொடுத்து இருந்தார்கள்.. (சிறிய குழந்தைகளுக்கு இன்ஹேலர் “மூச்சு மருந்து ஸ்ப்ரே”நேராக வாயில் அழுத்திக் கொடுக்க முடியாது. அதனால் தான் “ஸ்பேசர்” (பஃப்) என்ற ஒரு சிறிய பிளாஸ்டிக் குழாய்/கப் மாதிரி இருக்கும் .. அதை உபயோகிக்குமாறு கூறினார்கள் தினசரி..
தினமும் மாலை 6 மணிக்கு மாத்திரையும் கொடுத்திருந்தார்கள். மாத்திரையை பவுடர் செய்து குழந்தைக்கு கொடுக்குமாறு.. ஓரளவிற்கு அவன் வளர்ந்த பிறகு, அந்த மாத்திரையை சப்ப சொல்லி கொடுத்திருந்தார்கள்.
இப்பொழுது அந்த டெஸ்ட் எடுக்க முடியாது. அதற்கான வயது அவனுக்கு வரவில்லை எப்படி இருக்கிறது என்பதை பொறுத்து டெஸ்ட் எடுத்துக் கொள்ளலாம் என்று கூறிவிட்டார்கள்.. அதுவும் சென்னையில் தான் எடுக்க வேண்டும் என்று கூறினார்கள்..
அதன் பிறகு தொடர்ந்து குழந்தை கௌசிக்கை மாதத்தில் இரு முறை பெட்டில் அட்மிட் செய்யும்படியாக இருந்தது.. அவனுக்கு ஆரம்பத்திலே மால் ரொட்டேஷன் ஆப்ரேஷன் செய்தமையால், சொந்த ஊரில் இருக்கும் மருத்துவர்கள் யாரும் அவனை பார்ப்பதற்கு சிறிது அஞ்சினர்.. அவளோ இனி இங்கு காட்டுவது வேஸ்ட் என்று எண்ணியவள். குழந்தைக்கு இருமல் ஆரம்பிக்கும் பொழுதே சேலம் சென்று விடுவாள்.
ஆரம்பத்தில் இருக்கும் பொழுதே காட்டி விடுவாள்..
அதற்கும் காரணம் இருந்தது . அவனுக்கு சளி பிடித்த ஓரிரு நாட்களிலேயே இருமல் வந்து விட..இருமல் வந்த பத்தாவது நிமிடத்தில் மூச்சுத் திணறல் பிரச்சனை வந்துவிடுகிறது..
(Nebulizer mechine) நெபுலைசர் மெஷின் வீட்டில் வாங்கி வைத்துக் கொண்டாள். நெப் வைப்பதற்கு மருத்துவரின் உதவியுடன்.. எப்படி புகை வைக்க வேண்டும் என்று கேட்டு தெரிந்தும் கொண்டாள்.. என்னென்ன மருந்து வைக்க வேண்டும்..மருந்தின் அளவீடுகள் என அனைத்தையும்..
இன்னும் அவசரமாக தேவைப்பட்டால் என்று ஆக்சிஜன் சிலிண்டர் கூட வீட்டில் வாங்கி வைத்துக் கொண்டாள் .அதுவும் மருத்துவரின் உதவியுடன்..
ரொம்ப அவசரம் என்று வரும் பொழுது சேலம் அழைத்து சென்றார்கள் ..
மாதத்தில் இரு முறை எப்படியும் அங்குதான்.. பாதி நாட்கள் சேலத்திலே இருக்கும்படியாக நாட்கள் ஓடியது.. கௌஷிகை கவனிப்பதில் அவள் பெரிதாக தன் கணவன் தன்னிடம் எவ்வாறு நடந்து கொள்கிறான். எப்படி பேசுகிறான் என்று எதையும் கணக்கில் கொள்ளும் அளவிற்கு மனநிலையில் இல்லை..
அவளது முழு கவனமும் இப்பொழுது குழந்தைகள் மீது இருந்தது ..கணவன் தாயுடன் எவ்வளவு ஒட்டினாலும் பரவாயில்லை.. அவர் கூறுவதை கேட்டாலும் தனக்கு என்ன வந்தது. தனக்கு இனி தன் குழந்தைகள் தான் உலகம் என்று எண்ணி விட்டாள்.
அவள் எண்ணுவதற்கான மொத்த காரணத்தையும் குடும்பமே அவளுக்கு அமைத்துக் கொடுக்க ..இருப்பவர்களை கருத்தில் கொள்ளும் அளவிற்கு இல்லை.. அவளது மனநிலை.. சன்விகாவின் படிப்பும் ,கௌஷிக் உடல் நிலையையும் கவனத்தில் கொள்வதிலே அவளது முழு நேரமும் சென்றது ..
அவள் தனிமையில் வாடும் போதோ? இல்லை குழந்தைகள் உடல் நலத்தில் பயந்து இருக்கும் பொழுதோ? அவளது நண்பன் அவளுக்கு உறுதுணையாக இருந்தான்.. போனில் பேச முடியாவிட்டால் போனாலும், அவ்வப்பொழுது மெசேஜ் செய்து தன் இருப்பை காட்டிக் கொண்டு இருந்தான் ..அவளாக போன் செய்யும்போது பேசுவானே தவிர , இவனாக போன் செய்வதை நிறுத்திருந்தான் ..குழந்தையின் உடல் நலத்தை கருத்தில் கொண்டு,
அனைத்து நேரங்களிலும் அவளுக்கு உதவியாக இருந்தான். குழந்தைக்கு உடல்நிலை சரியாகி வீட்டிற்கு வந்த பிறகுதான் குழந்தையின் உடல்நிலை பற்றி கூறியிருக்க.. அவளை தேற்றி நான் இருக்கேன்டி என்று கூறியிருந்தான்..
” தனியா இருக்கேன்னு பீல் பண்ணாத ..மாமாவுக்கு அவங்க அம்மா முக்கியம் .அதுக்காக நீ முக்கியமில்லை என்று அர்த்தம் இல்லை” என்று கூற…
அவளோ அமைதியாக இருந்தாள்.
“
உன் இடத்திலிருந்து மட்டும் பாக்காத ! அவருடைய இடத்தில் இருந்தும் பார்! வலியை வேதனையை” என்று கூறினான் ..
“
நான் இப்போ அவரை பத்தி யோசிகிறதை விட்டுட்டேன்.. அதை யோசித்தால் எனக்கு இன்னும் கஷ்டமாகும்..அவர் அப்படியே இருந்துட்டு போகட்டும் ..எனக்கு இனி என் புள்ளைங்க இருக்கு.. அவங்க எதிர்காலத்தை பாக்கணும், அது மட்டும் தான் இப்ப என் கண் முன்னாடி இருக்க விசயம்…” என்று கூறி அமைதியாகி விட்டாள் ..
“நீ அம்மாவான பிறகு உனக்கு உன் பிள்ளைங்க கண்ணுக்கு தெரியிற மாதிரி தாண்டி …”என்க..
” இதை பேசினா பேச்சு தண்டா வளரும் .நான் இதை ரொம்ப யோசிக்க விரும்பல.. விடு ” என அமைதியானாள்..
இப்படியே வருடங்கள் உருண்டோடியது…
இப்படி இங்கு நிவேதாவின் வாழ்க்கையை சென்று கொண்டிருக்க… நவிலன் வாழ்க்கையில் முன்னேறுவதற்காக வேலையில் முழு கவனத்தையும் செலுத்திக் கொண்டிருந்தான்…
இங்கு வனிதாவும் அவளது மேல்நிலைப் படிப்பையும் முடித்து இருந்தாள்.
அவளின் மேற்படிப்பிற்காக, இரண்டு வருடம் வரைக்கும் பொறுமையாக இருந்த அவளது தாய் அதற்கு மேல் பொறுக்க முடியாது என்று எண்ணி இரண்டாவது வருட படிப்பு முடிந்தவுடன், அவளுக்கு திருமணம் செய்தாக வேண்டும் என்று முடிவு செய்து விட்டார்..
அதற்கு காரணமும் வலுவாக இருந்தது ..இந்த இடைப்பட்ட காலத்தில் சுகந்தி கொஞ்ச நஞ்சமா அவளை பாடாய்படுத்தி எடுத்து விட்டாள்..
வனிதா என்னவோ துடுக்காக பேசக்கூடியவள் தான். இருந்தாலும், தன் காதலில் கரை சேர வேண்டும்..என்றும்.. அதைவிட முக்கியமாக இப்பொழுது தனக்கு படிப்பு முக்கியம். வீட்டில் உள்ளவர்களை எதிர்த்து அவள் ஓடி சென்று திருமணம் செய்ய வேண்டும் என்று எண்ணவில்லை…
அப்படி அவளே கூப்பிட்டாலும், திருமணம் செய்ய நவிலன் ஒத்துக் கொள்ள மாட்டான் என்று அவளும் அறிவாள். வீட்டில் இருப்பவர்களின் சம்மதம் பெற்று திருமணம் முடிப்பது தான் இருவரின் விருப்பமும்… ஆகையால், இப்பொழுது தன்னுடைய முழு கவனமும் படிப்பில் தான் இருக்க வேண்டும்.
அதற்கு தன் குடும்பத்தின் உதவி தேவை.. அது மட்டுமல்லாது தன்னை பெற்றவர்கள் தன் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை கெடுத்துவிட்டு எந்த ஒரு காரியத்தையும் செய்வதற்கு அவளுக்கு விருப்பமில்லை..
முழுமையாக படிப்பில் கவனம் செலுத்தினாள்.. அதே சமயம் சுகந்தி கொடுக்கும் அனைத்து இடைஞ்சல்களையும் தாங்கிக் கொண்டு அமைதியாகவே கடந்து சென்றாள்.
அது முழுமையாக தன் அண்ணனின் வாழ்க்கைக்காக மட்டுமே.. அன்று தன் தங்கை காதலிக்கிறாள் என்று கேட்டவுடன் அவளை அடித்தவன் தான்..அன்றே அவளிடம் இருக்கும் போனை உடைத்து எரிந்தவன் தான்… அவளை இனி வெளியே விடமாட்டேன் என்று கூறியவன் தான்…ஆனால், அதன் பிறகு அவளுக்கென்று எதிர்காலம் என்ற ஒன்று இருக்கிறது, அதற்கு படிப்பு அவசியம். அவளுக்கென்று ஒரு தனிப்பட்ட வாழ்க்கை இருக்கிறது என்று எண்ணி காலேஜ் அனுப்பினான்..
அவள் தாய் வேண்டாம் என்று உறுதியாக கூறியும் கூட ..தாயை சரிகட்டி, தந்தையிடம் அனுமதி வேண்டி நின்று, அவளுக்கு உறுதுணையாக நின்று அவளை மேற்படிப்பிற்கு காலேஜ் அனுப்ப முழு உதவி செய்தது அவளுடைய அண்ணன்தான்.. அதை தாண்டி அவன் மீது உடன் பிறந்தவனாக பாசமும் நிறையவே இருக்கிறது…
அவளின் காதல் விவகாரம் தெரிந்து ,அவளுடைய அண்ணன் அவளை அடித்தது ஆகட்டும். அவளிடம் இருந்து போன் பறிக்கப்பட்டதாகட்டும். அனைத்துமே அவளின் எதிர்கால வாழ்க்கையை கருத்தில் கொண்டு, இப்பொழுது இந்த வயதில் காதல் தேவையா ?என்று ஒரு அண்ணனாக எண்ணினான்.
அனைத்தும் தங்கையின் மீது இருக்கும் பாசம்… ஆரம்பத்தில் அவளை கண்டித்ததும் வயசு கோளாறில் காதல் என்று சுற்றுகிறாளே என்ற எண்ணத்தில், அதன் பிறகு, அவளுக்கென்று எதிர்காலம் இருக்கிறது. அதற்கு அவளது படிப்பு தான் அவளுக்கு கைகொடுக்கும்.. பெண் பிள்ளைக்கு படிப்பு ரொம்பவே அவசியமானது .சொந்த காலில் நிற்பதற்கு உதவிகரமாக இருக்கும்… என்பதால் அவளை படிக்க அனுமதித்தான் ..
அவள் மீது அவ்வளவு நம்பிக்கை வைத்து அவளை கல்லூரி அனுப்பும்போது, தன் அண்ணனின் எதிர்கால வாழ்க்கையை கருத்தில் கொண்டு தன் அண்ணி எவ்வளவு இடைஞ்சல்கள் கொடுத்தாலும், தொந்தரவு செய்தாலும், துன்புறுத்தினாலும் அனைத்தையும் தாங்கிக் கொண்டாள்.
பெரிதாக அதை வீட்டில் உள்ளவர்களிடமும் அவள் கூறவில்லை.. ஆனால், சிறு சிறு விஷயத்திற்கும் சுகந்தி குத்தி காட்டிக்கொண்டும், அவளை குற்றம் சாடிப் பேசிக் கொண்டும் இருப்பதை கவனித்துக் கொண்டு இருந்த வனிதாவின் அம்மா கோமதி ஒரு நாள் தன் மகனிடம் நீ தனி குடித்தனம் சென்று விடு என்று கூறிவிட்டார் ..
“
அம்மா!” என்று வீடே அதிரும் அளவிற்கு, கோபம் கொப்பளிக்க
வேகமாக கத்தியது என்னவோ வனிதா தான்..
அனைவரும் அதிர்வுடன் அவளைப் பார்த்தனர்..

