Loading

“சரி விடு நிவேதா.. “என்ற சீனிவாசன். “உள்ள போய்ட்டு என்னோட பெட்டி எடுத்துட்டு வாயேன் ” என்றார்.

அவர் சொன்ன அந்த பெட்டி பெரிய மகன் வீட்டில் இருக்கிறது..
ஆகையால், அவள் தயக்கத்துடன் இருக்க..

“அது என்னோட பெட்டி நிவேதா.. அவன் வீட்டுக்கு போய் எடுத்துட்டு வரணும்னு யோசிக்காத.. இது என்ன அவன் கட்டினா வீடா என்ன? நான் உழைச்சு சம்பாதிச்சு கட்டின வீடு.  யாராவது ஏதாவது சொல்லுவாங்கன்னு யோசிக்காம எடுத்துட்டு வா.. “

அப்போதும் அவளிடம் அமைதியே நிலவ..

” யார் என்ன சொல்லிடுவாங்கன்னு  நானும் பார்க்கிறேன்.. என்னோட பொருள தான எடுக்க போற.. அதுவும் நான் தானே எடுத்துட்டு வர சொல்றேன். அவங்க வீட்ல போய் நீ அவங்க வீட்டு பொருளை எடுக்க போறது இல்லல. போய் எடுத்துட்டு வா !எனக்காக..”  என்று அவர் மீண்டும் மீண்டும் சொல்லவே..

சரி என்று எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தாள் .அந்த பெட்டியில் அவர் வைத்திருந்த பணத்திலிருந்து இரண்டு 500 தாள்கள் எடுத்து ஆயிரம் ரூபாய் அவளிடம் நீட்டினார்..

” எதுக்கு மாமா ?”என்று கேட்க..

” இப்போ என்னால முன்ன மாதிரி எழுந்துருச்சு நடக்க முடியலையே.. உனக்கு எதுவுமே வாங்கி தர முடியாது.. மாசமா இருக்க புள்ள வேற, ஆசைப்பட்டதை விருப்பப்பட்டதை  சாப்பிடணும்னு தோணும்..  மாசமா இருக்க புள்ளைக்கு வாய்க்கு ருசியா ஏதாவது வாங்கி கொடுத்தா பரவால்ல .. அதுக்கு தான் எனக்கு ஆண்டவன் கொடுத்து வைக்கலையே.. என்னோட தேவைக்கே அடுத்தவங்களை நாடுற  அளவுல இல்ல விட்டு வச்சிருக்கான்.. ” என்றார் வருத்தம் தோய்ந்த குரலில்..

அவள் தயக்கத்துடன் “வேண்டாம்” என்று கூற..

” உன் புருஷன் எதுவும் சொல்ல மாட்டான். அப்படி சொன்னாலும் நான் பேசிக்கிறேன் புடி..”

” இல்ல மாமா எனக்கே வேணாம்..” என்றாள் மனக்குழப்பத்துடன்

“ஆமாமா..  இப்படியே கொஞ்சம் கொஞ்சமா காசு புடுங்கிட்டு போலாம் அதுக்காகத்தானே..!  இம்புட்டும்” என்று உள்ளிருந்து வெளியே வந்தாள் இளவரசி..

தன் பெரிய மருமகளை முறைத்த சீனிவாசன்..” உன்ன மாதிரி மாசம் மாசம் புடுங்கலல்ல.. எனக்கு வட்டி காசு வருதுன்னு சொல்லிட்டு , உன் புருஷன் காரன் கவர்மெண்ட் உத்தியோகத்தில் இருந்தும் கூட, எனக்கு ஒன்னுக்கு ரெண்டு புள்ளை இருக்கு, உங்க பையனோட சம்பளம் செலவுக்கே பத்த மாட்டேங்குது, புள்ளைங்கள பாக்கணும், வீட்டு செலவு பாக்கணும் ..அது இதுன்னு சொல்லி மாசம் மாசம் வாங்குற இல்ல.. அப்போ எல்லாம் தெரியல .நீங்க என்கிட்ட புடுங்குறது .. ஆனா இப்ப கூட இந்த புள்ள என்கிட்ட காசு கேக்கல .நான் தான் மாசமா இருக்குன்னு கொடுத்து இருக்கேன்.. அவ புருஷனுக்கும் சரி , இந்த பிள்ளைக்கும் சரி கொடுத்து தான் பழக்கமே தவிர ,புடுங்கி பழக்கம் இல்ல.. மேற்கொண்டு என்ன பேச வைக்காத..” என்று பெரிய மருமகளிடம் வாதாடியவர்…

“நீ புடி நிவேதா..அந்த புள்ள கிடக்குது .. அது பேசுதுன்னு கொடுக்கிறியா ?” என்று அவள் கையில் திணித்து விட்டார்..

மேற்கொண்டு அவரிடம் எதுவும் பேச முடியாமல் ,வீட்டில் எடுத்துக் கொண்டு சென்று வைத்து விட்டாள்.. ஆனால், அன்று மாலையே தன் கணவன் வந்த பிறகு இளவரசி நடந்ததை கூறி விட..

அவனும் ,” இதுக்குத்தான புருஷனும் பொண்டாட்டியும் என் அப்பன பாத்துக்குறேன்னு பேர்ல நாடகம் நடிச்சிட்டு இருக்கீங்க?” என்று கூறி விட ..

ரோஷத்தோடு தன் கணவன் சண்டையிடுவதற்கு முன்பாகவே, அவர் கொடுத்த அந்த ஆயிரம் ரூபாயை கூட கொண்டுவந்து தன் மாமனாரிடம் நீட்டினாள்..

அவரோ,” எவனோ ஏதோ பேசட்டும் மா.. இப்ப வரைக்கும் என் செலவையும் இவன் தான் பாத்துட்டு இருக்கான்.. சாப்பாடு கூட நீங்க தான் போட்டுட்டு இருக்கீங்க ..இம்புட்டு பேசறவனுக்கு என்ன பாத்துக்க துப்பு கிடையாது.. அவன் பொண்டாட்டிக்கும் துப்பு கிடையாது . என்ன கட்டினவளும் எனக்கு என்னனு உக்காந்து இருக்கா ..  அவனுக்கு நான் என் மொத்த சொத்தையும் எழுதி வச்சாலும் தப்பு கிடையாது.. ஆனா, எதையும் சொத்துக்கு ஆசைப்பட்டு அவன் செய்யல..அவன்  உழைச்சு சம்பாரிச்ச காசையே  இவங்களுக்காக தூக்கி கொடுத்தவன் .அவன் ஏன் டா என்கிட்ட இருந்து புடுங்க போறான்..கை கால் சுகமா இருக்க வரை சுயமா உழைச்சு முன்னேறுறவன் அடுத்தவங்க உழைப்பை பிடுங்கி தின்றவன் கிடையாது .. யாரு எது வேணாலும் பேசட்டும் எனக்கு மனசு ஒன்னும் சரியா படல .. இன்னும் எத்தனை நாளைக்கு உசுரோட இருப்பனோ தெரியல. என் பேரப்புள்ளையை கூட பார்க்கிற வரை இருப்பனா ? தெரியல..  மனசு கிடந்து அடிச்சுக்கிது. இருக்கிற வரைக்கும் கொடுக்கிறத வாங்கிக்கு மா .. அவங்க பேசுறாங்க இவங்க பேசுறாங்கன்னு நினைக்காத.. மாடா உழைச்சிருக்கான் . இந்த குடும்பத்துக்காக ,இப்போ வரைக்கும் உழைச்சிட்டு தான் இருக்கான்” என்று கூறிய சீனிவாசன் “இதை புடிச்சிக்குமா “என்று அவள் கையில் வைத்து கையை மடைக்கிய படியே கண்ணீர் உகந்த..

எதுவும் பேசாமல் நின்றாள்.. வசந்த் தான் ” வாங்கிக்கோ..” என்றான்..

  எதுவும் பேசாமல் தன் கணவனின் முகத்தை பார்க்க.. அவனும் கண்ணை மூடி திறந்தான்..

சரி என்று வாங்கிக் கொண்டு வீட்டிற்குள் வந்து விட்டாள்.. நாட்கள் கிடுகிடுவென்று சென்று ஒரு மாதங்களை கடந்து இருந்தது..

இந்த ஒரு மாதத்தில் முழுவதாக வசந்த் தன் தந்தையை பார்த்துக் கொண்டான் .இந்த பிரச்சனை நடந்த பிறகு , “நான் எதுக்கு உங்க அப்பாவை பாக்கணும்..” என்று இளவரசி சுத்தமாகவே அவர் எப்படி இருக்கிறார் என்பதை திரும்பி பார்க்க கூட விரும்பவில்லை என்று தான் சொல்ல வேண்டும்..

இரு வீட்டிற்கும் வெளியில் தான் கட்டிலில் படுத்திருந்தார் சீனிவாசன். ஆனால், வெளியில் வரும் பொழுது கூட அவரை பெரிதாக எட்டிப் பார்க்காமல் இருந்துவிட்டாள். ஒரு மதங்களை கடந்து பிறகு அவருக்கு கால் வலி தீர்ந்தபாடில்லை.. ஒரே இடத்தில் உட்கார்ந்து இருந்ததில் முதுகு வலித்தது .. முதுகில் புண்ணாகியது தான் மிச்சம்..

இப்படி இருக்கும் பொழுது தான் தொடர்ந்து ஒரு வாரங்களாக அவருக்கு கையோடுக்காலோடு லூஸ் மோஷன் சென்றபடி இருந்தது.. அப்படி இருக்கும் பொழுது , அவன் வயலில் தண்ணி கட்டி விட்டு வருவதற்குள்ளே பாத்ரூம் சென்று இருந்தார்.. அவனுக்கு அடிக்கடி அவரை தூக்கி கொண்டு சென்று கழுவி விட்டு கொண்டுவந்து படுக்க வைக்கவும் கடினமாக இருந்தது..

அது மட்டுமில்லாமல் பெரிய மகனும் ,மருமகளும் வீட்டுக்கு வெளியே இப்படி வீட்டை நார அடிச்சு வச்சா.. யாரு சுத்தம் பண்றது? என்று சண்டையிட்டு இருந்தான்.. மூத்தவன்..

தன் அண்ணனை அற்ப புழுவைப் போல பார்த்தவன்.. மேற்கொண்டு எதுவும் பேச முடியாமல், தன் அப்பாவை தன் தாய் வீட்டிற்கு அருகில் உள்ள மரத்து நிழல் அடியில் படுக்க வைத்து விட்டு, தன் அண்ணனிடம் திரும்பி, “உன்னால தான் பார்க்க முடியல.. அவங்களையாச்சும் பார்க்க சொல்லு.. நான் இருக்கும்போது நான் பாத்துப்பேன்.. நான் இல்லாத போது பொம்பள புள்ள என் பொண்டாட்டி பாக்கவும் முடியாது..

அது இல்லாம மாசமா வேற இருக்கு .. உன்னையும் உன் பொண்டாட்டியையும் பார்க்க சொல்லல.. உங்க அம்மாவ பாக்க சொல்லு..” என்று அவர்  அருகில் இருந்தும் தன் தாயிடம் நேரடியாக பேசாமல் , அண்ணனிடம் கூறிவிட்டு நகர்ந்து விட்டான்.

வசந்தாவும் அவன் இல்லாத வேலைகளில் அவருக்கு பீ மூத்திரம் அள்ள ஆரம்பித்து இருந்தார் .. கையோடு காலோடு செல்ல அடிக்கடி மயக்கமாக இருக்கிறது என்று கூறி இருந்தார்..

ஏற்கனவே சுகர் பிபி என அனைத்தும் அவருக்கு அதிக அளவில் இருக்க. இப்பொழுது லூஸ் மோஷனும் நிற்காமல் ஒரு வாரமாக சென்று கொண்டிருக்க..

“ஆபரேஷன் பண்ணிடலாம்பா.. விசாரிச்சு இருக்கேன்.. கோயம்புத்தூருக்கு போலாம்.. அங்க நல்லா வசதியாகவும், நல்லா பண்ணுவாங்கன்னு சொல்லி இருக்காங்க .. அதனால கோயம்புத்தூர் கங்கா ஹாஸ்பிடல் போய் பண்ணிக்கலாம்.. ” என்று கூறினான் ..

அவருக்கு விருப்பமில்லை என்றாலும் ,மகனின் விருப்பப்படி கோயம்புத்தூருக்கு அவனுடன் சென்றார்.. தன்னால் அவனது வேலைகளும் கெடுகிறது , பொழுதுக்கும் தன்னுடனே இருப்பது போல் இருக்கிறது, அது மட்டும் இல்லாமல், தன் உடல் எடையை எத்தனை முறை தான் தூக்கி தூக்கி படுக்க வைப்பான், உட்கார வைப்பான் என்று எண்ணியவர் சரி என்று அவனுடன் கிளம்பி விட்டார் மருத்துவமனை நோக்கி,

அங்கு சென்ற பிறகு , மருத்துவரை அணுகி ஆபரேஷன் செய்து கொள்வதற்கு அவன் கேட்க ..

மருத்துவரோ,” இனி ஆபரேஷன் செய்வது வேஸ்ட் “என்று கூறிவிட்டார்.

“ஏன் ?”என்று கேட்டதற்கு,

அவனை தனியாக அழைத்துச் சென்று ,”உங்க அப்பா இனி ரொம்ப நாள் இருக்க மாட்டாரு.. அவர் கடைசி காலத்தை எண்ணிட்டு இருக்காரு.. எப்ப வேணாலும் எது வேணாலும் நடக்கலாம்..  இருக்க வரைக்கும் இருந்துட்டு போகட்டும்.. ஆப்ரேஷன் பண்ணா காசு தான் செலவாகும் ..ஆப்ரேஷன் பண்ணாலும் ஒன்னும் வேலைக்காகாது. அவர் பிழைக்க  வாய்ப்பு இல்லை.. அப்புறம் உங்க விருப்பம் பண்றதுனாலும் பண்ணிடலாம்..” என்றவுடன் அவனுக்கு உயிரே நின்று விட்டது …

அவரால் இனி நடக்கவே முடியாது என்று தான்  நினைத்தானே தவிர.. அவர் இருக்க மாட்டார் என்று அவன் சிறிதும் எண்ணவில்லை..

ஏற்கனவே சிறிது கால் தாங்கி தாங்கி தான் எடுத்து வைப்பார்.. இதற்கு முன்பாகவே ஒரு முறை அதிகமாக குடித்து வெளிநாட்டில் இருந்து வரும் பொழுது பிக்ஸ் வந்து கால் இழுத்துக் கொண்டது.. பக்கவாதம் வந்துவிட்டது . ஆகையால், தாங்கி தாங்கி தான் அடி எடுத்து வைத்தபடி இருந்தார். சுகர் பிபி என அனைத்து வியாதிகளும் இருக்கு.. இப்பொழுது இனி அவர் ரொம்ப நாட்கள் இருக்க மாட்டார் என்றவுடன் தன் கண்ணீரை துடைத்துக் கொண்டு, அவர் முன்பு அழுகாமல் அவரிடம் எதுவும் கூறாமல் ,வீட்டிற்கு அழைத்துக் கொண்டு வந்தான்..

” ஏண்டா ஒரு மாதிரி இருக்க.. ஆபரேஷன் பண்ணலாம்னு கூட்டிட்டு போயிட்டு ,வேண்டாம் என்று கூட்டிட்டு வந்துட்ட? என்ன சொன்னாங்க டாக்டர்?”

ஒரு சில நொடி வாய் திறக்காமல் இருந்தவன் ..அவர் மீண்டும் மீண்டும் கேட்கவும்,

” இப்போதைக்கு பண்ண வேணும்னு சொல்லி இருக்காங்க. மருந்து மாத்திரை கொடுத்திருக்காங்க சரியாக.. அப்பவும் சரியாகலைனா ஆபரேஷன் பண்ணிக்கலாம்னு சொல்லி இருக்காங்க. வேற ஒன்னும் இல்லப்பா..” என்று சமாளிக்க முயன்றான்.

“என்னடா.. நான்  போய் சேர்ந்துடுவேன்னு சொல்லிட்டாங்களா அந்த டாக்டர்.. அதனால எதுக்கு வேஸ்ட்டா ஆப்ரேஷன் .பண்ண வேணாம்னு சொல்லிட்டானா ?”என்று சிரித்துக் கொண்டே கேட்க..

” அப்படி எல்லாம் சொல்லல..”என்று மழுப்பினான் தன் கண்ணில் துளிர்க்கும் நீரை உள் இழுத்தபடி,

” என் உடம்புல உலக பட்ட வியாதி இருக்கு. அது மட்டுமா எனக்கே தெரியுது.. கொஞ்ச நாளா என் மனசே கடந்த அடிச்சிட்டு தான் இருக்கு.. எனக்கே இனி நான் இருக்க மாட்டேன்னு தான் தோணுது..” என்றவர் ..”இப்பவும் சொல்றேன் … நீ அவளுக்கும் , உன் அண்ணன் குடும்பத்துக்கும்  பணம் காசு கொட்டி கொடுத்துட்டே கேள்வி கேட்காம இருந்தா. உன்ன நல்லா தான் பாத்துப்பாங்க.. ஆனா, நீ கேள்வி கேட்டா அவங்களுக்கு பிடிக்காது.. சூதனமா பிழைச்சுக்கோ வசந்து  .. அவ்வளவுதான் சொல்ல முடியும்..  வயசு தான் இருக்கு, சம்பாதிக்க தான் கத்து வச்சிருக்க.. ஆனா பாசம் என்ற பெயரில் தூக்கி கொடுத்துட்டு நிக்காத.. எல்லார்கிட்டயும் ஏமாந்து நிக்குற..உனக்குன்னு பொண்டாட்டி புள்ள இருக்கு . இப்ப மருமக இரண்டாவது வேற மாசமா இருக்கு.. நல்ல புள்ள உன்னோட  நல்ல குணத்துக்கு கிடைச்சிருக்க நல்ல புள்ள .. விட்டுப்புடாதடா !உனக்குன்னு ஒரு வாழ்க்கை இருக்கு அதை வாழ பாரு ..அவ்வளவு தான் சொல்லுவேன்.. ” என்ற கண்கள் கலங்கினார்..

அவனுக்கும் கண்கள் கலங்கியது. ஆனால் ,எதுவும் பேசாமல் தலையசைத்தபடி வந்தான்.

Click on a star to rate it!

Rating 4.7 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
6
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்