Loading

வசந்துக்கு தன் தாய் சொன்ன வார்த்தையை நம்ப முடியவில்லை. தனக்கு திருமணமாகாமல், கன்னி கழியாமலே ,அவருடைய தேவைக்கு மட்டும் உபயோகிக்க நினைத்திருக்கிறார் என்று எண்ணும் பொழுது மனம் வலித்தது, வெம்பி துடித்தது..

தன் தாயை அமைதியாக பார்த்தபடி நின்றான்..

” அப்படி ஒன்னும் அம்மா சொல்லலடா வசந்த் .. நீ வந்து புதுசா கணக்கு வழக்கு கேட்கவும் தான் ..” என்று வசந்த் அண்ணன் ரஞ்சித் சமாளிக்க..

தன் அண்ணனை பார்த்து போதும் ! என்று கை காட்டியவன்.

“ஓ! நான் கணக்கு வழக்கு கேட்கவும் அப்படி தான ? அப்போ நான் செலவு பண்ண பணத்தை நான் கேட்க கூடாது.. கணக்கு வழக்கு கேட்க கூடாது . அப்படி நான் சம்பாதிக்கிறது எல்லாத்தையும் உங்களுக்கு தூக்கி கொடுத்திடணும் உங்களுக்கு மட்டும்.. இப்போ தானே உங்க எண்ணமெல்லாம் கொஞ்சம் கொஞ்சமா புரியுது. இனி உங்களை எல்லாம் புரிஞ்சுக்க முயற்சி பண்றேன்.. இவ்வளவு நாள் ஏமாளியாவே வாழ்ந்திருக்கேன்.. அதை நினைக்கும் போது தான் கொஞ்சம் வலிக்குது..”என்றான் குரல் உடைய,

“இல்லடா அம்மா அப்படி சொல்லல .. இவ்வளவு நாள் நீ காசு கேட்டதில்லைல அதான்..”

“எனக்குன்னு குடும்பம், புள்ள குட்டி இருந்தா எனக்கும் தனிப்பட்ட செலவு இருக்கும்.. அப்போ காசு கேக்க தான் செய்வேன் .. உங்களுக்கே தூக்கி குடுத்துட்டு இருக்க முடியாது ..”

இவ்வளவு நேரம் பொறுமையாக பேசிக் கொண்டிருந்த ரஞ்சித்தும் எகிற ஆரம்பித்தான்.. “இவ்வளவு நாள் கொடுத்த இல்ல ..அப்புறம் இப்ப மட்டும் என்ன ? ” என்று ரஞ்சித் எகிறிக் கொண்டு வர..

விரக்தியாக சிரித்தான் ..”ஆமாம் கொடுத்தேன். உண்மைதான் ..அது எவ்வளவு பெரிய தப்புன்னு இப்ப தான புரியுது .. புரிஞ்சுகிட்டேன்.. எவ்வளவு பெரிய தத்தியா, ஏமாளியா ,கோமாளியா இருந்திருக்கேன் இப்பதான உணர முடியுது.. இவ்வளவு நாளா கூட உணரல ..

அந்த மனுஷன் சொன்னது உண்மையா தான் ஆயிடுச்சு.. உன் அம்மா  என்ன  வெளிநாட்டுக்கு அனுப்பி சம்பாதித்து காசு பணம்னு பார்த்திட்டு இருந்தா.. இப்ப நானும் பக்கவாதம் வந்து படுத்துட்டேன்… என் மூலமா எதுவும் பெருசா பணம் வராது.. இப்ப நீ சம்பாதிக்க ஆரம்பிச்ச உடனே உன்னை சுரண்ட ஆரம்பிச்சிட்டா.. உனக்குன்னு ஒரு தனிப்பட்ட வாழ்க்கை இருக்குடா. அங்கவே இருக்காத, இவ உனக்கு பொண்ணு பாத்து கட்டி வைப்பா , காலகாலத்துல உனக்கு கல்யாணம் ஆகி குடும்பம் குட்டின்னு வாழுவனு கனவு கண்டுட்டு இருக்காத.. இவ ஒரு பணத்தாசை புடிச்ச பேயி.

நீ இங்க வந்தா தான் டா உண்டு. இல்லனா , உனக்குன்னு ஒரு வாழ்க்கை இருக்குன்னு உன் கூட பொறந்தவனுங்களும் யோசிக்காம  உன் காசுல உட்கார்ந்து தின்றதுக்கு தான் பாப்பானுங்களே தவிர உனக்குனு ஒரு வாழ்க்கை இருக்குனு யோசிக்க மாட்டாங்க.. சுயநலம் புடிச்ச சுயநலவாதிங்க..

அந்த மனுஷன்  சொல்லலனா . இப்பயும் கூட நான் வந்திருக்க மாட்டேன்..  பொண்ணு பாக்குறீங்கன்னு ரெண்டு வருஷமா அங்க அமைதியா இருந்தேன்.

நீ அங்கவே இருந்தா இவ  இப்போதைக்கு உனக்கு கல்யாணம் பண்ண மாட்ட.. உனக்குன்னு ஒரு வாழ்க்கையை நீயே தேடிக்கிட்டா தான் உண்டு. பெத்தவ ,கூட பொறந்தவன்னு பார்த்து உன் வாழ்க்கையை நீயே அழிச்சு,  மண்ணள்ளி போட்டுக்காத உன் தலையில..

சீக்கிரம் இங்க வந்து சேருற வேலைய பாரு. இன்னமும் இந்த சுயநலம் புடிச்ச குடும்பத்துக்கு உழைச்சிக் கொட்டிட்டு இருக்காத.. என்று சொன்னதோட தான், மனசு கேட்காம அப்படியே வந்தாலும் திரும்ப ரெண்டு மாசத்துல போலாம்னு ஐடியாவுல தான் வந்தேன்…. பொண்ணு கிடைக்கவும் தான் இங்கவே இருந்துட்டேன்..

இப்பதானே தெரியுது உங்க நல்ல மனசு. உங்க மனசு மட்டும் இல்ல.. உங்க பையன் மனசும்..

ஆமா  எப்படிடா மனசு வந்து கேக்குற ? எனக்கு பெரியவன் தானே நீ.. நீ கல்யாணம் பண்ணிக்கும் போது அசிங்கமா இல்ல .. கேவலமாக இல்ல ..”என நாக்கை புடுங்கிக் கொள்ளும் அளவிற்கு..இன்னும் கெட்ட கெட்ட வார்த்தையில் நான்கு ஐந்து வார்த்தைகளை கேட்க.

இந்த வீட்டுக்குன்னு ஒத்த ரூபா இதுவரைக்கும் செலவு பண்ணி இருக்கியா? நீ .. நான் காசு கொடுக்குறத பத்தி நீ பேசுறியா ?என் பொண்டாட்டி சொல்லி கொடுத்ததால காசு கொடுக்குறது இல்லையா ?..ஆமாம். பா .. ஆமாம் .

என் பொண்டாட்டி சொல்லி கொடுத்து தான் நான் இந்த வீட்டுக்கு கல்யாணம் ஆனதிலிருந்து ஒத்த பைசா கூட செலவு பண்றது இல்ல.. நீ தான் லட்ச கணக்கில் செலவு பண்ணி இருக்கையாச்சே.

நீ பாக்குற உத்தியோகத்தை கூட இந்த அம்மா தானே வாங்கி கொடுத்தாங்க.. அதனால சம்பள கவர் இந்த அம்மா கைல கொண்டு வந்து கொடுத்துட்டு , அதுக்கப்புறம் தான் நீ வாங்கிக்கிற.. லட்ச லட்சமா செலவு பண்ணிருக்க இல்ல இவங்களுக்காகவும், இந்த குடும்பத்துக்காகவும்… “என்றான் கோபம் சிறிதும் மட்டுப்படாமல் ஏளனமாகவும் எள்ளலாலகவும்

“ஏய்! என்னடா பேசுற ?”என்று எகிறி கொண்டு வந்தான் ரஞ்சித்..

“என்னடா? என்ன ? என்னவோ இல்லாததை சொல்லிட்ட மாதிரி குரலை உசத்திகிட்டு அம்புட்டு வேகமா வர சொல்லு? என்ன சொல்லு ? நான் கேட்டுக்குறேன்..

இப்போ நீ  ஒய்யாரமா உட்கார்ந்து இருக்க கவர்மெண்ட் உத்தியோகம் எப்படி வந்துச்சு?
யார் மூலியமா கிடைச்சுச்சு ? யார் வாங்கி கொடுத்தது ?அதுக்கு பணம் கட்டினது யாரு? சும்மா கிடைச்சிடல இல்ல..  உனக்கு இந்த வேலை வாங்கி கொடுக்க எவன் எவன் கால்ல விழுந்தது.. எம்புட்டு காசு செலவு பண்ணதுன்னு எங்களுக்கு தாண்டா தெரியும். அந்த காசு சம்பாதிக்க பட்ட கஷ்டம் எங்களுக்கு தாண்டா தெரியும்…

இன்னைக்கு நீ ஆயிரம் பேசலாம். ஆனா, அன்னைக்கு நிலைமை என்ன என்றத மறந்துடாத..  “

“என்ன டா நீயும் அந்த ஆளும்.. சொல்லிக் காட்டுறீங்களா? உங்க காசுல வாங்குன வேலைன்னு..”என்று கொதித்தான் ரஞ்சித்.

” சொல்லிக்காட்ட கூடாது தான்..  ஆன நீ இவ்வளவு சுயநலமா யோசிப்பேன்னு நினைக்கலையே..  நீ எல்லாம் ஒரு மனுசனாடா.. சுயநலவாதி”  என்று திட்ட.

” ஏய் ! என்ன என் புருஷன பத்தி இப்படி எல்லாம் பேசுற ? “என்று இளவரசி சண்டைக்கு வர..

” ஏம்மா எனக்கு வேற வேலை இல்லையா உங்க புருஷனை பத்தி பேசுறது தான் வேலையா? நான் பேசிட்டு இருக்கும்போது நடுவுல வந்து பேசுனது உங்க புருஷன் தான் நான் கிடையாது சரியா?

நீங்க ரொம்ப நல்லவங்க தான். நீங்க எந்த அளவுக்கு நல்லவங்கன்றதெல்லாம் நான் எப்பையோ பாத்துட்டேன். எனக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறதுக்கு அம்மா வரமாட்டேன்னு சொன்னபோது, போக கூடாதுன்னு உங்கள சொல்லும் போதும் ,நீங்களே வழிய  வந்து நிக்கும் போது நான் யோசித்து இருக்கணும் .

அதுக்கப்புறம் நீங்க பண்ண எல்லா காரியத்தையும் நான் கண்ணார பார்த்துட்டு தான் இருக்கேன் . நடந்த விஷயத்தை எனக்கு யாரும் சொல்ல வேண்டியது கிடையாது. இதுவரைக்கும் என் பொண்டாட்டி உங்கள பத்தி எதுவும் சொன்னது கிடையாது. ஆனா, நானே பாத்துட்டு தான் இருக்கேன்.. போதும் விடுங்க ! உங்களுக்கும் எனக்கும் நடுவுல எதுவும் கிடையாது.. நான் யாரோ தானே.. என் பணத்தை எண்ணி வையுங்க..முதல்ல என்று தன் தாயைப் பார்த்து கூறியவன்.

ஆமா என் பொண்டாட்டி சொல்லி கொடுத்து தான் நான் பேசுறேன் .. அப்படின்னே வச்சுக்குங்க .ஆனா, எனக்குன்னு குடும்பம் இருக்கு.. பிள்ளை குட்டின்னு வரும்போது நான் என் குடும்பம்னு சுயநலமா வாழ்றதுல தப்பில்லைனு நினைக்கிறேன்..” என்றவன் மேற்கொண்டு எதுவும் பேசாமல், தான் எழுதி வைத்த கணக்கு வழக்கு நோட்டை வீட்டில் தன் தாயின் கண்ணில் படும்படி ஓரிடத்தில் வைத்துவிட்டு,

“இன்னும் அஞ்சு நாள் டைம் .கரும்பு பணம் வந்து ஒரு வாரம் ஆகுது.. அந்த பணத்தை எடுத்து கொடுப்பியோ, நீ வெளியே எங்கையாவது கடன் வாங்கி கொடுப்பியோ ,இல்ல வீட்டுக்குள்ள யாருக்கும் தெரியாம பதிக்கி வச்சிருக்க பணத்தை எடுத்து கொடுப்பியோ , ஆன எனக்கு என்னோட பணம் வேணும்..பணத்தை எடுத்து வச்சுட்டு மறுவேலை  பாருங்க..!” என்றவன்..

இவ்வளவு நேரம் நடந்த அனைத்தையும் கண்களில் வழியும் நீருடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த தன் மனைவி நிவேதாவை கைபிடித்து அழைத்துக் கொண்டு தன் வீட்டிற்கு சென்றான்.

வீட்டிற்குள் நுழைந்ததும் அவள் மடியில் படுத்துக்கொண்டு தன் மனப்பரத்தை இறக்கி வைத்தான்.

முழுமையாக அவளுக்கு விவரம் எதுவும் தெரியாது தான். சண்டை ஆகும் பொழுதே சத்தம் கேட்டு வெளியில் சென்றவள் தன் கணவனின் கையைப் பிடித்து அவனைப் பேச விடாதவாறு  இழுக்க..

அவனோ ,ஒரே வார்த்தையாக “நீ வீட்டுக்கு போ ” என்று கூறிவிட்டான்..

தன் தாய் பேசிய வார்த்தைகளை கேட்கும் போது, தன் மனைவிக்கு எந்த அளவிற்கு வலிக்கும் என்பதையும் உணர்ந்தான்..  அதேநேரம்  மனைவி முன்பு கூனி குறுகி நிற்பதற்கு ஒரு மாதிரி இருந்தது..

வீட்டிற்கு வந்து அவள் மடியில் படுத்து விட்டான்.. அவள் கைகளை கன்னங்களில் வைத்து பிடித்துக் கொண்டு,

அவனது கண்ணீரை பார்க்க சகிக்காமல் அவனை தன் மடியோடு சேர்த்து அணைத்து தலைகோதி விட்டாள்..

அவனை தன்னால் முடிந்த அளவிற்கு தேற்ற முயற்சி செய்தாள். சிறிது நேரம் அவளது மடியில் இளைப்பாறியவன் .அதன் பிறகு அவளையும் தேற்றி விட்டு “நீ இத எதையும் பெரிசா யோசிச்சிக்கிட்டு இருக்காத..” என்று கூறிவிட்டு வெளியே கிளம்பி விட்டான்..

அவளுக்கு சிறிதும் மனம் கேட்காமல் ,தனது நண்பனுக்கு போன் செய்து இருந்தாள்.

என்ன இந்த நேரத்தில் அழைக்கிறாள் என்று, யோசனையுடனே போன் எடுத்தான்..

அவளோ , அழுகையுடனே நடந்து அனைத்தையும் கூறியிருந்தாள்..

அவள் கூறியதை அமைதியாக கேட்டவன்.

“சரிடி இந்த நேரத்துல மாமாவுக்கு பக்கபலமாவும் உறுதுணையாகவும் இருக்க வேண்டியது நீதான்.. இனி அவரோட மொத்த உலகமும் நீங்க தான்.. அவர் இப்போ ஏமாந்து நிற்கிறது வெளியாளுங்க கிட்ட கிடையாது ,வேர்த்து மனுஷங்க இல்ல.  அவரை நம்ப வைத்து ஏமாத்துனது சொந்த குடும்பம், ரத்த சொந்தம், ரத்த உறவு, அதுவும் பாசம் என்ற போர்வையில் ஏமாத்திருக்காங்க .. அது எந்த அளவுக்கு அவரை பாதிக்கும்ன்னு உனக்கே தெரியும்.

  இனி அவருக்காக நீங்க இருக்கீங்கனு உணர வை. உண்மையான உறவா இருக்கீங்கன்னு காட்டு. அதுதான் இப்ப நீ பண்ண வேண்டியது. ஏற்கனவே மன வேதனையில் இருப்பவருக்கு சின்னதா ஒரு விஷயம் நாளும் சத்தம் போட தான் செய்வார்.ஆனா, அதை நீ பெருசா எடுத்துக்காம கடந்து வா. அவரை பழையபடி கொண்டுவர என்ன பண்ணனுமோ அதை செய்.

நீ முதல்ல அமைதியா இரு  நிவே… நீ கலங்கி நின்னா அவருக்கு இன்னுமும் நிம்மதி போயிடும்..  இது உங்களுக்கு சோதனை காலம் என்று நினைச்சுக்கோ. ஆனா நீ அவருக்கு எப்பவும் உறுதுணையா பக்கபலமா இரு..   நீ உடைஞ்சி ஒரு மூலைல உக்காந்துட்டா அவருக்கு இன்னமும் கஷ்டமாகிடும், இப்போ அவர முழுசா பார்க்க வேண்டியது உன்னோட பொறுப்பு..

அவங்களோட உண்மையான முகம் வெளியே வந்திருக்கு அவ்வளவுதான்.. அதை பெருசா நீயோ மாமாவோ யோசிக்காதீங்க உங்களுடைய மன நிம்மதி தான் போகும்.. அவருக்கு எப்பவும் கூட நீ இருக்கன்றது  புரியவை. வார்த்தையா இல்லை. செயலால்.. அதுதான் இப்போ அவருக்கு ரொம்பவே தேவையானதும் கூட.
பெத்த தாயே அவரை பேசின வார்த்தை அவரால தாங்க முடியாது. அவரோட வேதனையை நீ புரிஞ்சுக்கணும்… அவர் பேசுறத காது கொடுத்து கேளு..

இந்த கஷ்டமான காலம் …ஒரு நாள் கடந்து போகும். நீ அவருக்கு துணையா இருந்து பழையபடி மீட்டுக் கொண்டு வா..

இப்போ நீ பண்ண வேண்டியது  அவர் கூட பேசு ,அவருக்காக டைம் ஸ்பென்ட் பண்ணு. பாப்பாவ அவர் கிட்ட விடு .அதிகமா போன் யூஸ் பண்ண வேணாம். நீ மாமாவ பாரு. பாப்பாவை பாரு சரியா? அப்படி ஏதாவது சொல்லனும்னா மெசேஜ் பண்ணு ..”என்று கூறி வைத்து விட்டான் நவிலன்.

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
1
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்