காதல்-1
காலை எட்டு மணிக்கு அரக்கப் பறக்க தயாராகிக் கொண்டிருந்தார் சுமித்ரா. அடுத்த வாரம் பணியிலிருந்து ஓய்வு பெறவிருக்கும் பணிசெய்யும் இல்லத்து ராணி. ஐம்பத்தெட்டு வயதிலும் ஓடிக்கொண்டிருக்கிறார் அவரின் அன்பு மிகுந்த குடும்பத்திற்காக. தலையில் ஆங்காங்கே வெள்ளிக் கம்பிகள் மின்னினாலும் நடை இன்னும் ஓட்டமாய்த்தான் இருக்கிறது. அவரின் பணி நிறைவு விழா முடிந்த அடுத்த மாதம் சுமித்ராவின் முதல் மகள் மீராவிற்கு திருமண வைபவம். இரண்டாவது மகனான மித்ரன் இப்போதுதான் மருத்துவம் முடித்து பணிக்கு செல்லத் துவங்கியிருந்தான்.
பேராசிரியையாக பணிபுரியும் மீராவிற்கு இது காதல் திருமணம், இருவீட்டாரின் ஒப்புதலுடன். ‘ஆயிரத்தில் ஒரிரு இடங்களில்தான் இது சாத்தியம்’ என அடிக்கடி சுமித்ரா சொல்வது தற்போது அவருக்கே நினைவு வந்தது.
உணவை மேசையில் எடுத்து வைத்துக் கொண்டிருந்தவரை பிண்ணிருந்து அணைத்தது ஒரு கரம். சுமித்ராவின் அன்புக் கணவர் நித்திலன்.
“அச்சோ, என்னது இது? பிள்ளைங்க வந்துடுவாங்க, சும்மா இருங்க” என்று அவரை விளக்கியவாரே சொன்னார்.
“நம்ம பிள்ளைங்க ஒன்னும் சின்ன பிள்ளைங்க கிடையாது. அவங்களுக்கு இங்கிதம் தெரியும்.” என்றவாறு சுமித்ராவிடம் இருந்து உணவை வாங்கி சரியாக எடுத்து வைக்கத் தொடங்கினார்.
“ஆமாப்பா, நாங்க ஒன்னுமே பாக்கல, இல்ல மீரா” கையில் மருத்துவருக்கான மேல்சட்டை சகிதம் இறங்கினான் மித்ரன், உடன் மீராவும்.
கன்னங்கள் சிவக்க அங்கிருந்து அமைதியாக சமையலறைக்கு சென்றுவிட்டார் சுமித்ரா.
“எங்கள வம்பிழுக்கலன்னா உனக்கு தூக்கம் வராதே. என் சுமி இன்னைக்கு அழகா இருக்காள்ல” இருவருக்கும் பரிமாறியபடியே மேலும் பேச்சை வளர்த்தார்.
மீராவும் மித்ரனும் ஒருவரையொருவர் நமட்டுச் சிரிப்புடன் பார்த்துக் கொண்டனர். இருவருக்கும் தோசை வார்த்து எடுத்து வந்தவர், கணவருக்கு தேநீர் எடுத்து வரவும் மறக்கவில்லை.
“எப்படித்தானோ, அவருக்கு என்ன வேணும்ங்குறது அப்டியே கொண்டு வந்து கொடுக்குறீங்கமா நீங்க”
அதற்கு சிறு புன்னகையை மட்டுமே உதிர்த்தவர், மீராவிடம் “இன்னைக்கு ஈவ்னிங்க் மாப்பிள்ளை வீட்டுல இருந்து எல்லாரையும் வர சொல்லிடு மீரா. மித்து நீயும் சீக்கிரம் வந்துடு” என்றார்.
நித்திலன் புரியாது “எதுக்கு சுமி? என்ன விசயம்?” கேட்டாரே ஒரு கேள்வி, மீராவிற்கு புரையேறிவிட்டது.
“நான் சொன்னேன்ல! பெட்ல நான் தான் ஜெயிச்சேன். எடு, எடு ஆயிரம் ரூபா எடு”
“போங்கப்பா, உங்கள நம்பி பெட் கட்டினேன் பாருங்க. என்னை சொல்லணும். வழக்கம்போல சொதப்பிட்டீங்க.”
மகளின் கோபத்தில் மேலும் சிந்தித்தவர், புரியாது மனைவியைப் பார்க்க சுமித்ரா உதட்டை சுழித்துக் கொண்டு சென்றுவிட்டார்.
“ஏய், யாராவது சொல்லிட்டுப் போங்க. இன்னைக்கு என்ன விசயம்?”
“என் அன்புள்ள அப்பா, இன்னைக்கு அம்மா பாதாளக் குழில விழுந்த நாள்.”
“என்னடா சொல்ற? எந்த குழில விழுந்தா?”
“வேற எந்த குழி, இந்த நித்திலன் விரிச்ச குழில தான். இனிய திருமணநாள் நல்வாழ்த்துகள் அப்பா”
“சுத்தம்! இந்த வருசமும் மறந்துட்டேன்.” என்று தலையில் கைவைத்து விட்டார்.
“மீராம்மா நீயாவது சொல்லி இருக்கக் கூடாது.” மகளை நோக்கி ஏமாற்றத்துடன் கேட்க,
“உங்க கல்யாணத்தப்போ நானே இல்ல. அப்ரோம் எப்டி நான் சொல்வேன்” தன் ஆயிரம் ரூபாய் சென்ற கவலையில் அவள் இருந்தாள்.
“எதே! மா, சுமிமா. மித்துமா” என்றபடி சமையலறை நோக்கி சென்றார் நித்திலன்.
மீராவும் மித்ரனும் சிரித்தபடி இருக்க, மீரா கிளம்ப தயாரானாள்.
“ஹே மீரா, எங்க போற? இரு, ரோமியோ ஜூலியட்ட எப்டி கரெக்ட் பன்றாருன்னு பாக்க வேண்டாமா?”
“அடேய், அது அப்பா பாத்துப்பாரு. நீ போய் உன்னோட ஜூலியட்ட கரெக்ட் பன்ற வழியப் பாரு. ஈவ்னிங் அவளையும் கூட்டிட்டு வா.”
இதுவரை சிரித்துக் கொண்டிருந்த அவனின் உதடுகள் அப்படியே சிரிப்பை உள்வாங்கியது.
“அவ வரமாட்டா மீராக்கா. நானும் எவ்ளோ பேசிப் பாத்துட்டேன்.”
சுமையலறையை ஒருமுறை எட்டிப் பார்த்தவள், “என்ன ஆச்சு மித்து? எனிதிங்க் சீரியஸ்?”
அவன் ஆமாம் என்று தலையசைக்க, “அம்மா, அப்பா, நாங்க கிளம்புறோம். டைம் ஆச்சு” சொல்லிவிட்டு இருவரும் கிளம்பினர்.
————————
“ஹலோ! சொல்றா ஏஞ்சலு”
“எங்கடா இருக்க? மணி பதினொன்னு ஆச்சு. கோவிலுக்கு போகணும்னு சொன்னது மறந்துடுச்சா”
“அஞ்சே நிமிசம் வந்துடுறேன்டா. வெய்ட் பண்ணு”
“சரி சரி”
ஐந்து நிமிடங்கள் பத்து நிமிடங்கள் ஆக இவளின் பொறுமை காற்றில் பறந்தது. மீண்டும் அவனுக்கு அழைக்கப் போக, அவனே அழைப்பு விடுத்தான்.
“ஓடியாடா. ஹெல்மட் எடுத்துட்டு வா வா சீக்கிரம்” என்று உடனே வைத்துவிட்டான்.
“எருமமாடு. இவன் லேட் பண்ணிட்டு நம்மள கத்துவான்.” என்றபடி தலைக்கவசத்தை எடுத்துக் கொண்டு பெண்கள் விடுதியில் இருந்து கீழிறிங்கினாள் மித்ரா.
தனது இரு சக்கர வாகனத்தில் அவளுக்காக அவளின் ஆரூயிர் தோழன் காத்துக் கிடந்தான்.
முறைத்துக் கொண்டே வாகனத்தில் ஏறியவள், “ஏன் இவ்ளோ லேட்டு?” தலைக்கவசத்தை அணிந்தவாறு கேட்டாள்.
“துணி துவைக்க லேட் ஆகிடுச்சுடா. கோவிலுக்குப் போய்ட்டு டீ குடிக்க போலாமா?”
“போலாம், போலாம். முதல்ல சீக்கிரம் போ. விளக்கு ஏத்தணும்னு சொன்னேன்ல. டைம் ஆச்சு”
“கத்தாத, பத்தே நிமிசம் போய்டலாம்.” இருவரும் பேசியவாறே கோவிலுக்கு வந்திறங்கினர்.
இரண்டு எள் விளக்குகளை வாங்கியவள், இருவருமாக சென்று இருவருக்குமாக விளக்கை ஏற்றிவிட்டு இறைவனை தரிசித்துவிட்டு அமர்ந்தனர்.
“என்ன ஆச்சுடா, ஏன் முகமே சரியில்ல?” அவனின் ஒவ்வொரு அசைவும் இவளிற்கு அத்துப்படி. அவனுக்கும்தான். இருவருக்குமான பந்தம் சொல்லில் அடங்காதது. நட்பு துளிர்விட்டு ஆழப்பதிந்திருக்கும் ஒரு உன்னதமான உறவு.
முதலில் பணி நிமித்தமாக பார்த்து பேசித்தான் பழக்கம். பின், அதுவே நட்பாக மாறி தற்போது நட்பின் விருட்சமாக உருமாறியிருக்கிறது.
“ஒன்னும் இல்லடா” வார்த்தைகளை விட, அவனின் தவிக்கும் பார்வை பாவையவளுக்கு ஆயிரம் கதை சொல்லியது.
“ஒன்னும் இல்லயா? அதான் மூஞ்சி சுருங்கிப் போய் இருக்கே என்ன ஆச்சு?”
“உங்க வீட்ல உனக்கு வரன் பாக்கலயா?”
“அதுலாம் ஆரம்பிச்சு போய்ட்டு இருக்கு ஒரு வருசமா. ஏன் கேட்குற? ஏய், இரு! உனக்கு ஆரம்பிச்சிட்டாங்களா?”
“அதான் பிரச்சனையே! அதுலாம் எனக்கு ஆரம்பிச்சு நாலு வருசம் ஆகுது. ஆனா, இன்னும் ஒன்னும் செட் ஆகல. இப்போ போய் ஜாதகம் பாத்துட்டு வந்து இருக்காங்க. இந்த வருசத்துல முடிக்கலன்னா அப்ரோம் கல்யாணமே ஆகாதுன்னு சொல்லி இருக்காங்களாம். வீட்ல அவ்ளோ பிரஷர். டென்சன் ஆகுதுடா ஏஞ்சலு. நீ எப்டி சமாளிக்குற?”
“எனக்கு 23 தான ஆகுது. அதுனால பொறுமையா பாக்குறாங்க. சாருக்குத்தான் ரொம்ப வயசாகுது. சரி, சொல்லு. வீட்ல என்ன ஆச்சு?”
“ரெண்டு பொண்ணு போட்டோ அனுப்பி இருக்காங்கடா. அந்த ப்ரோக்கர் வேற வீட்ல என்ன சொன்னான்னு தெரியல. டார்ச்சர் பன்றாங்க. ஊருக்கு போறப்போ போய் பாக்கணுமா. முதல்ல பொண்ணு டீடைல்ஸ் கொடுங்க. என்னை பத்தி சொல்லுங்க சொல்றேன் கேட்க மாட்டிங்குறாங்க.”
“சரி நேர்ல பாக்குறப்போ தெளிவா பேசிடு. அதுக்கு ஏன் இவ்ளோ டென்சன் ஆகுற?”
“அவனவன் வலி அவனவனுக்குத்தான்டா தெரியும். உனக்கு இப்டி ஒரு நிலம வந்தா தான் நான் சொல்றது புரியும். சரி வா டீ குடிக்க போகலாம்.”
இருவரும் பிரகாரத்தை ஒருமுறை சுற்றி வந்து பின், புறப்பட்டனர்.
இரண்டு தினங்கள் கழித்து…
வெகுநேரம் யோசித்தப்பின் மித்ரா அவனுக்கு அழைத்தாள். உள்ளுக்குள் பெரும் ஆழிப்பேரலை ஒன்று உருவாகி கரைசேராமல் அடித்துக் கொண்டிருந்தது. கரைசேரத்தான் துடிக்கிறது, கரைசேருமா என்று அறியவே இந்த அழைப்பு. வெகுநாட்களாக மனத்தில் தோன்றிய எண்ணம், சில நாட்களாக வேரூன்றியது போல் ஒரு உணர்வு. சொன்னால் என்ன ஆகும்? என்ன பதில் வரும்? தன்னை என்னவென்று நினைப்பான்? எனக்கு மட்டும்தான் இப்படி தோன்றுகிறதா? பல கேள்விகள் உள்ளுக்குள். ஆனால், இவையெதற்கும் அவளிடம் பதிலேதும் இல்லை.
இவள் யோசித்துக் கொண்டிருக்க, அங்கு அழைப்பு ஏற்கப்பட்டது.
“சொல்லுடா”
அவனின் குரல் கேட்டபிறகுதான் சுயத்திற்கே வந்தாள் மித்ரா. இரண்டு மூன்று உரையாடலிற்கு பிறகு தான் கேட்க நினைத்ததை கேட்டுவிட்டாள்.
“வீட்ல அலையன்ஸ் சொன்னாங்கள்ல, என்ன ஆச்சுடா?”
“அதுவா, சனிக்கிழமை போய் பாக்கலாம் சொல்லியிருக்காங்க.”
“ம்ம்… ஏன்டா, நாம ஏன் கல்யாணம் பண்ணிக்கக் கூடாது?”
…..
“சுமிமா, சாரிமா. எதாவது பேசுமா. இப்டி அமைதியா இருக்காதேயேன்”
“ஓ, சரி! நமக்கு கல்யாணம் ஆகி எத்தன வருசம் ஆகுது?”
“என்ன சுமி?”
“என்னை டென்சன் பண்ணாதீங்க. நான் ஆஃபீஸ் கிளம்பணும். டிபன் எடுத்து வச்சிட்டேன். கொஞ்ச நேரம் கழிச்சு சாப்டுங்க. நான் கோவிலுக்கு போய்ட்டு ஆஃபீஸ் போய்க்குறேன்.”
“சுமிமா, அப்போ நானு?”
“ஆமா, கல்யாண நாள் தெரியல, எத்தன வருசம் ஆச்சுன்னும் தெரியல. இதுல காலைல ரொமான்ஸ் கேட்குதுல உங்களுக்கு? நல்ல நாள் அதுவுமா வாங்கிக் கட்டிக்காதீங்க.” என்றவாறு தனக்கென தோசை வார்த்துக் கொண்டிருந்தார்.
“அச்சோ சுமிமா சாரிமா” என்று அருகில் வர, “வந்தீங்க, கைல கரண்டிதான் இருக்கு ஒரே இழுப்புதான்.”
‘ஆத்தாடி, இவ செஞ்சாலும் செய்வா’ என்றபடி அமைதியாக தன்னறைக்கு வந்தவர், ‘இவள என்ன பன்றது?’ என்று எண்ணியவருக்கு அருமையான ஒரு யோசனை கிட்டிட அதை செயல்படுத்தத் துவங்கினார்.
சுமித்ரா தயாராகி வருவதற்குள் இவர் தயாராகி தனது புல்லட்டை உயிர்ப்பிக்கத் தொடங்கினார்.
“காலைல இந்த மனுசன் எங்க கிளம்புறாரு. கோவிலுக்கு போறேன்னு தெரியுது. கூட வரலன்னாலும் கொண்டு போய் விடலாம்ல. எல்லாம் நேரம். ரொமான்ஸ்லாம் பிள்ளைங்க முன்னாடிதான்.” புலம்பியபடியே பட்டு சேலையுடுத்தி வந்தவர், தன் கணவனைக் கண்டு அசந்துதான் போனார்.
“சுமிமா, வா நாம கோவிலுக்கு போகலாம்”
“நான் போய்க்குறேன்.” உதட்டை சுழித்தபடி அவர் நகர,
“மித்ரா” அந்த குரலில் தெரிந்த ஆளுமையும் அன்பும் ஒரு நிமிடம் சுமித்ராவை சுயமிழக்க செய்தது. உடல் அணுக்கள் அனைத்தும் அமைதியாய் ஓர் ஆர்ப்பாட்டம் நிகழ்த்தியது. என்ன மாதிரியான குரல் இது, அதுவும் அறுபது நெருங்கும் வயதில். சிரிப்போடு வெட்கமும் சேர்ந்தே வந்தது.
திரும்பி ஒரு பார்வை, அந்த பார்வையில் ஓராயிரம் அர்த்தங்கள் பொதிந்துதான் கிடந்தன. இத்தனை வயதிலும் தன் குரலுக்கு மனைவியின் கன்னங்கள் சிவப்பது நித்திலனிற்கு காதல் கசிந்துருகியது.
சிரிப்போடு வண்டியில் ஏறிக்கொண்டார் சுமித்ரா. இருவரும் கடவுள் தரிசனத்தை முடித்துவிட்டு பிரகாரத்தில் அமர்ந்து இருந்தனர். அந்த அமைதி மனத்திற்குள் ஒருவித தித்திப்பை கொடுத்தது.
“உனக்கு நியாபகம் இருக்கா சுமிமா. கல்யாணம் முடிஞ்சு கொஞ்ச நாள்ல நமக்கு பெரிய சண்டை. அப்போ நீ இங்க தான் கோச்சிக்கிட்டு வந்த. அது தெரியாம நான் எல்லார் வீட்டுக்கும் போன் போட்டு டென்சன் ஆகி கலாட்டா பண்ணிட்டேன். அப்போ உன் ஃப்ரெண்ட் அபிமன்யூ தான் வந்து என்னை செம திட்டு. எப்டி நான் உன்னை அடிக்கலாம்னு. அப்ரோம் ரெண்டு பேரும்தான் பைக் எடுத்துட்டு தேடி இங்க வந்தோம். அப்போ கூட நீ யார் கிட்டயும் எதுவும் பேசல. அபிதான் என்னை அங்க விட்டுட்டு கிளம்பிட்டாரு. என்னால அப்போ உன்னோட முகத்த கூட பாக்க முடியல. தப்பு ரெண்டு பேர் மேலயும் இருந்தாலும் நான் கை நீட்டியிருக்கக் கூடாதுன்னு அன்னைக்கு குற்றவுணர்ச்சியா இருந்துச்சு. அப்ரோம் இங்கதான் இப்டிதான் உன் கைய பிடிச்சிக்கிட்டு உட்காந்துட்டேன். மணி ஒன்பது ஆகிடுச்சு. அபி உனக்கு போன் போட்டு ‘ஒழுங்கா கிளம்புங்க’ன்னு சொன்ன அப்ரோம்தான் நீ எழுந்து என் கூட வந்த. இப்போ அதுலாம் நினைச்சா சிரிப்பா இருக்கு.”
“என்ன, மலரும் நினைவுகளா?”
“அப்படித்தான் வச்சுக்கோயேன்” சுமித்ராவின் கையை இறுகப்பற்றியபடி அமர்ந்திருந்தார் நித்திலன்.
இன்றும் சுமித்ராவிற்கு வியப்புத்தான். ‘எந்த விகல்பமும் இல்லாத மனிதன் இவர். தன் மனைவிக்காக இன்னொரு ஆண் வந்து சண்டையிட்டால் தகாது பேசும் சமூகத்திற்கு மத்தியில் பூத்த நித்தியகல்யாணி இவர். இவரின் அன்புக்கும் காதலுக்கும் தான் என்ன கைமாறு செய்யப் போகிறேன்’ மனத்தில் எண்ணங்கள் அமைதியாக அலைக்கழிக்க, நித்திலனையே வைத்தக்கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார்.
“சுமிமா, பேசாம இன்னைக்கு லீவ் போட்டுடேன்”
எண்ணத்தில் இருந்து வெளியே வந்தவர், “ஏன், எதுக்கு?”
“கோவில்ல புருசன இப்டி சைட் அடிக்கக் கூடாது சுமிமா. ஆனா, வீட்ல அப்டி இல்லல. நாம சினிமாவுக்கு போய்ட்டு அப்டியே பார்க் பீச்சுன்னு சுத்திட்டு ஈவ்னிங் வீட்டுக்கு போய்டலாமே”
“ஆஹான், கிழவனுக்கு வயசு திரும்புது போல?”
“கிழவி இத்தன நேரம் வச்ச கண் வாங்கமா பாத்தப்போ என்ன வயசோ அதே வயசு தான் இந்த கிழவனுக்கும்.”
“அச்சோ, சும்மா இருங்க.”
“சுமிமா, நீ பாத்தப்போ நான் எதாவது சொன்னேனா? அது சரின்னா, நான் வெளிய கூட்டிட்டு போறதும் சரிதான். வர வர நமக்கான நேரமே இருக்க மாட்டிங்குது. வா போலாம்”
சில நாட்களாக உள்ளுணர்வு ஏறுக்குமாறாக துடிக்கிறது இருவருக்கும். அதை ஒருவர் மற்றொருவருக்கு தெரிவிக்காமல் அமைதியாக இருக்கின்றனர். யாருக்கும் எதுவும் நிகழக்கூடாது என்ற வேண்டுதலோடு இருவரும் கிளம்பினர். அதை நிறைவேற்றிவிட்டால் கணக்கு இடிக்குமே!
அன்புடன்
காதல்
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
20
+1
+1
Sumi, nithilan love alaga iruku😍 naduvula vantha antha young pair Kovil ponangale athu sumi ma vum nithi yum ya writer ji? Arambathula irunthu ellam alaga pochula😂 athu enna kadasila oru ikku🤧 all the best ji😍
முதல் வருகிற மித்ரா இவள் தானோ சந்தேகம் வருகிறது எனக்கு. சுமி நித்திலன் செம பசங்க சூப்பர். வாழ்த்துகள். வாழ்க வளமுடன்
அருமையான குடும்பம்!!… உரையாடல்கள் எல்லாம் சூப்பர்!!… யாரு அந்த ரெண்டு பேரா இருக்கும்!!.. மித்ரன் யாரை லவ் பன்னுறான்?.. இன்ட்ரஸ்டிங்!!!