
காதலொன்று கண்டேன்!
தேடல் 40
சில மாதங்களுக்கு பிறகு,
“இவங்க தான உங்க வைஃப் சித்தார்த்..?” தூரத்தே இருந்தவளைக் காட்டி,தன்னிடம் வினவிய மூத்த பெண்மணிக்கு நாலாப்புறமுமாய் தலையைசத்தவனின் பார்வை,அவளைத் தான் தொட்டு மீண்டது.
அவர்களின் தூரத்து சொந்த பெண்ணொருத்தியின் நிச்சயார்த்த விழாவிற்கு,மொத்தப் பேரும் வந்திருக்க,அதில் துளியும் லயிப்பின்றி ஓரமாய் அமர்ந்து இருந்தாள்,யாழவள்.
நெருங்கிய உறவினர்கள் யாரிடமும் அவள் பேச்சுக் கொடுக்காதிருக்க,அதுவே அங்கு பேசு பொருளாகிப் போனதை அவள் கண்டு கொள்ளவேயில்லை.
ஜீவனிழந்த விழிகளுடன் இருந்தவளைப் பார்க்க பார்க்க,டாக்டரின் குற்றவுணர்வு கூடிக் கொண்டே போக,அவன் செய்து விட்ட காரியத்தின் வீரியம் அவனை கொன்று தின்றது.
அவள் காதலை அவன் கேட்ட போதிலும்,ஏனோ இப்போது மனம் முழுக்க மண்டியிருக்கும் குற்றவுணர்வு அவ்வெண்ணதை மூழ்கடித்திருக்க,அழுத்தமாய் நெற்றியை நீவியவனின் பார்வையில் பெரும் அலைப்புறுதல்.
அன்று அவர்கள் வீட்டுக்கு கிளம்பிக் கொண்டிருந்த சமயம்,அவளிடம் பேச்சுக் கொடுக்க,அவனின் பெயரைக் கேட்டதும் அவள் விழிகளில் வந்து போன உணர்வுகள் கூறின,ஒரு பொழுதும் அவள் காதல் வேறொருத்தனுக்கு சொந்தமாகிடாது என்று.
“இன்னும் அவன மறக்காம தான் இருக்கியா தென்றல்..?” ஆதங்க மிகுதியாய் வந்தது,அவன் குரல்.
“நா மறந்துருவேன்னு சொன்னேன் தான்..ஆனா இப்போ சத்தியமா முடில அத்தான்..பேசாம செத்துட்டா பரவால்லன்னு தோணுது..” என்றவளின் வார்த்தைகளில் கொஞ்சமும் பொய்யில்லை.
அவளின் கூற்றில் அவனுக்கு ஏதோ ஆக,தான் செய்த காரியத்தின் வீரியம் நெஞ்சைச் சுட,ஏனோ அத்தனை கனம் மனதில்.
அவனிடம் பேசி விட்டு, அவள் இறங்கிப் போய் விட,அவள் செல்லும் திசையையே வெறித்திருந்தவனின் விழிகளில் பலவித பாவங்கள்.
மறுநாள்,
பொழுது விடியும் முன்னமே தன்னிடம் ஏதோ பேச வேண்டும் எனக் கூறிய டாக்டரின் பேச்சில் அவள் விழிகள் இடுங்கின.
அது மட்டுமின்றி எதுவும் பேசாமல் அவளை வண்டியில் ஏறச் சொல்லி விட்டு அவன் வண்டியைக் கிளப்ப,அது வேறு அவளை பெரும் யோசனைக்குள் தள்ளியது.
“அத்தான் நாம எங்க போறோம்..?” பயணம் துவங்கியது முதல் பல தடவை கேட்டு விட்ட போதிலும்,அவன் பதில் சொல்லவில்லை.
அவனுக்கு அவளிடம் பேசுவதற்கு பல விடயங்கள் இருக்க,அதை எப்படி ஆரம்பிப்பதென்பது பெரும் யோசனையாய்.அவளிடம் இருந்து கிடைக்கப் பெறும் எதிர்வினை என்னவாய் இருக்கும் என்கின்ற எண்ணமே,அவனுக்கு அழுத்தத்தை தந்து இருந்தது.
தான் கேட்ட கேள்விக்கு பதில் கிடைக்காது போக சோர்ந்து போனவளுக்கு,யன்னலுக்கு வெளியே பார்வையை அலைய விடுவதை தவிர வேறு வழியும் இருக்கவில்லை.
சில நிமிடங்களின் பின்னர் இருக்கையில் கண்மூடி சாய்ந்து கொள்ள,அதற்குள் அடைக்கலம் கேட்ட பையனின் விம்பம் அவளுக்கு கண்ணீரைத் தந்திட,இமை சிமிட்டியவளின் செய்கை டாக்டருக்கு புரிந்து போக,கனத்துப் போனது அவன் மனமும்.
அவன் செய்த தவறின் ஆழம் நெற்றிப் பொட்டில் அடித்திட,இப்போது தான் செய்யப் போகும் காரியம் முற்றிலும் சரியாகவே தோன்றிற்று.மனதில் இருந்த சிறு உறுத்தலும் மறைந்தது போல்.
இரண்டு மணி நேரப் பயணத்தின் பின்னர்,வண்டியை ஓரம் கட்டியவனை இமை பிரித்து பார்த்தவளுக்கு,அவன் விழிகளில் தெரிந்த அலைப்புறுதல் ஏதேதோ யோசனையைத் தந்து விட்டிருந்தது.
“தென்றல்..”
“என்னத்தான்..?”
“நா சொல்லப் போறத தப்பா எடுத்துக்க கூடாது சரியா..?” என்று தவிப்பாய் கேட்க,அவளும் சிரசு தன்னாலே அசைந்து சம்மதம் சொன்னது.
அவனுக்கு அவள் முன் பிழையாகி நிற்க விருப்பம் இல்லை என்றாலும்,இதற்கு மேலும் அவனால் உண்மைகளை மறைத்திட இயலாது;அதற்கு அவன் மனமும் இடம் தந்திடாது.
அவன் உண்மைகளை உரைத்திட்ட பின்னர்,அவளின் எதிர்வினை என்னவென்றாலும் அதை முழுதாய் ஏற்கத் தயாராகி இருந்தான்.
“தென்றல்..”
“ஆர்யா தப்பானவன் இல்ல..”
“தெரியும் அத்தான்..கண்டிப்பா அவரால தப்பு பண்ண முடியாது..அவரு கல்யாணம் பண்ணது கூட சந்தர்ப்ப சூழ்நெலயால தான் இருக்கும்..”
“அவன் கல்யாணம் பண்ணிகிட்டான்னு நம்பறியா தென்றல்..?”
“நம்ப முடில..நம்பாம இருக்க எந்த ஆதாரமும் இல்ல..” விட்டேற்றியாய் வந்த அவள் பதிலில் ஆதங்கமும் வலியும் மிகுதியாய்.
“ஒருவேள ஆர்யாவுக்கு கல்யாணம் ஆகி இல்லன்னு கன்ஃபார்ம் ஆனா என்ன பண்ணுவ..?”
“தெரில” உரைக்கும் பொழுதே,ஒரு துளிக் கண்ணீர் கன்னத்தை தொட்டது.
அவனுக்கு திருமணமாகி இல்லை என்றால்,ஏன் தன்னிடம் அந்த பொய்யை உரைத்திட வேண்டும் என்கின்ற எண்ணம் தானே,அவளில் முதன்மையாய் நிறையும்.அது ஏனோ நெஞ்சை அடைத்திட்டது.
“கல்யாணம் ஆகி இல்லன்னா என்ன பண்ணுவ தென்றல்..? ஏன் அப்டி பண்ணான் உன்ன ஹர்ட் பண்ற நடந்து கிட்டான் எதுக்கு அந்த ட்ராமா ப்ளா ப்ளான்னு எல்லாம் யோசிக்க மாட்டியா..?” அர்த்தமாய் கேட்டிட,அவள் கண்ணீருடன்”இல்லை” என்றாள்.
“எனக்கு அவர் மேல நம்பிக்க இருக்கு..” உறுதியாய் கூறியவளுக்குள் ஆழமான நம்பிக்கை,அவனால் தவறு செய்திட முடியாது என்று.
“ஆர்யாவுக்கு கல்யாணம் ஆகல..ஆனா அவன் உன்ன அவாய்ட் பண்ணதுக்கு வேலிட்டான ரீசன் இருக்கு..அது என்னன்னு நா சொல்ல விரும்பல..நீ அவன் கிட்டவே கேட்டுக்கோ..” என்க,அவள் விழிகள் தெறித்து விரிந்தன.
டாக்டரின் வார்த்தைகளை எளிதாய் நம்பிட முடியாது,அவனையே அதிர்ந்து பார்த்திட,அவன் விழிகளில் குற்றவுணர்வு.
“நெஜந்தான்..ஆனா அவன் மேல எந்தப் தப்பும் இல்ல..தோ இது தான் அவன் வீடு..போய் பேசிக்க..” என்க,சுவாசிக்க மறந்தாள்,அவள்.
அவன் கூறியது அனைத்தையும் கிரகித்துக் கொண்டவளின் விழிகளில் இருந்து சரசரவென்று கண்ணீர் வழிய,அதை துடைக்க கூட மறந்து அவள் அமர்ந்து இருந்த விதம் அவனை மொத்தமாய் கூறிட்டது.
“போ தென்றல்..” அவன் கூறிட,உடனே இறங்கிக் கொண்டவளுக்கு அத்தனை அழுகை.
இறங்கிச் செல்பவளை இமைக்காது பார்த்து இருந்தான்,டாக்டர்.மனதில் இருந்து பெரும் பாரம் அகன்ற உணர்வு.அவன் செய்த தவறுக்கு பிராய்ச்சித்தம் என நினைத்துக் கொண்டவனுக்குள் முகிழ்த்திருக்கும் உணர்வு என்னவென்று அவனுக்கே,பிரித்தறியத் தான் முடியவில்லை.
படபடவென்று கதவு தட்டப்பட,யோசனையுடன் வந்து கதவைத் திறந்தான்,ஆர்னவ்.
டாக்டருக்கு பையன் ஊரை விட்டு கிளம்பியிருந்த விடயம் எதுவும் தெரியாதிருக்கவே,முன்பிருந்த அவனின் வீட்டுக்கு அழைத்து வந்திருந்தான்,அவளையும் நோகடிக்க.
நெற்றியை நீவியவாறு கதவைத் திறந்தவனுக்கு,அங்கிருந்த பாவையவளைக் கண்டதும் தூக்கி வாரிப் போட,விழிகள் அதிர்வில் குளித்தன.
“அவரு எங்க..?” விம்மியவாறு கேட்டவளோ,அனுமதியின்றியே வீட்டினுள் நுழைந்திட,ஆர்னவ்வுக்கு தலைகால் புரியாத நிலை.
அவளிடம் எப்படிச் சொல்வதென்று தெரியாமல் விழித்தவனுக்கு,சத்யா மட்டுமே உதவியாய்.
பின்னூடு வந்த டாக்டருக்கும் ஆர்னவ்வின் முகபாவம் யோசனையைத் தோற்றுவித்தது.
“அவரோட ரூம் எது..?” கேட்டவளுக்கு தன்னாலே கை காட்டி விட்டவனுக்கு வார்த்தைகளும் வரவில்லை.அவளை இவ்விடத்தில் அவன் கொஞ்சமும் எதிர்ப்பார்த்திடவில்லை.
உண்மையை உரைத்த பின்னர்,அவனால் நிச்சயம் யாரையும் எதிர் கொள்ள முடியாது போகும் என்பதால் அமைதி காத்திட,கதவைத் திறந்து கொண்டு வந்தவளுக்கு அவன் இவ்விடம் இல்லை என்பது புரிந்ததும் உள்ளுக்குள் நொருங்கிற்று.
கரை கடந்த கண்ணீருடன் மேசையின் அருகே வர,அதை கையில் எடுத்தவளுக்கு ஏதோ தோன்றியிருக்க வேண்டும்.ட்ராயரை திறந்தவளின் கண்ணீர்த் துளிகள் ஜிமிக்கிகளை நனைத்திட துடைத்துக் கொண்டே நாட்குறிப்பை புரட்டியவளுக்கு பார்த்ததுமே புரிந்து போனது,அது அவளுக்கானது என்று.
ஓரிரண்டு பக்கங்களை வாசித்தே கேவிக் கேவி அழுதவளின் சத்தம் கேட்டு அறைக்குள் வந்த டாக்டருக்கும் என்ன செய்வதென்று புரியவில்லை.அதிர்ந்து போயிருந்த ஆர்னவ்விடம் எதையும் கேட்கவும் அவனுக்குத் தோன்றவில்லை.
வாய் பொத்தி அழுதவளுக்கு அவன் மீது கோபமாக வந்தது.அவனின் சட்டையைப் பிடித்து அறை விடும் வேகம்.
யாரிடம் தான் அவளின் உணர்வுகளை அவளும் கொட்டித் தீர்க்க..?
அவன் தானே வேண்டும்.அவனுக்காக மட்டுமல்லவா அவை உயிர்த்தெழும்.
முகம் முழுக்க வியர்த்து வழியே வீட்டுக்குள் நுழைந்த தோழனுக்குள் படபடவென்றிருந்தது.எதற்காக பையன் அத்தனை பாடுபட்டானோ அது முற்றிலும் தோற்றுப் போன நிலையல்லவா இது.
கலங்கிய விழிகளுடன் அவன் உள்ளே வர,அங்கிருந்த டாக்டரை கண்டதும் அப்படி ஒரு ஆத்திரம் அவனுக்கு.
கண்ணிமைக்கும் நேரத்தில் பொறி கலங்கிட ஒரு அறை வைத்தவனை அதிர்ந்து போய் கன்னத்தில் கை வைத்து பார்த்தான்,டாக்டர்.
“சாரி..நா பண்ணது தப்பு..” அவன் கூறி முடிக்கும் முன்னே அடுத்த அறை.
“திரும்ப திரும்ப எதுக்குடா தப்பு பண்ற..?” ஆதங்கமாய் கேட்டவனுக்கு பாவையவளைக் காணக் காண மனம் கனத்தது.
“நா பண்ண தப்ப..” அவன் கூறும் முன்னமே,அவனை இழுத்துக் கொண்டு வெளியே வந்தவன் அவளிருந்த அறைக் கதவை சாற்றி விட,டாக்டரின் புருவங்கள் இடுங்கின.
“ஆர்யா..” அவன் கேட்கும் போதே,கூடத்துக்கு அழைத்து வந்தவன் விழிகளால் சுட்ட,அதைக் கண்டவனின் நெஞ்சம் வெடித்த உணர்வு.
மாலையிட்டு திலகமிட்டு அவனின் தாயுமானவரின் புகைப்படம்.அதன் பக்கத்தில் அவனது படம்.நொருங்கி விட்டான்,அவன்.
“கடைசி நேரத்துல கூட அவன் பக்கத்துல யாழ இருக்க விடலல நீ..” ஆதங்கத்துடன் கேட்டவனின் விழிகள் கலங்கிட,சட்டென அவற்றை அகற்றினான்,யாழவள் வரும் முன்பே.
சிவந்த விழிகளுடன் வெளியே வந்தாள்,அவள்.”அண்ணா அவர் எங்க..?” கலங்கிய குரலில் வந்த கேள்விக்கு என்ன பதில் இயம்பிட..?
டாக்டருக்கு எதுவும் புரியவில்லை.அவளே தேறி வந்திருக்கும் நேரம் தான் செய்திருப்பது..?
சத்யாவைப் பார்த்திட,அவனோ மறுப்பாய் கண்ணைக் காட்டினான்.
“அண்ணா..” அவள் கலைக்க,”ட்ரீட்மண்டுக்காக ஃபாரின் போய் இருக்காராம் தென்றல்..” டாக்டர் சரளமாய் ஒப்புவித்தான்,பொய்யொன்றை.
“ஏதாச்சும் ஏதாச்சும்..” என்கையிலே அவளுக்கு அதீதமாய் பதட்டம்.
“ஆர்யா திரும்பி வந்தா அவன் கிட்ட கேட்டுக்கோ தென்றல்..”
“அவருக்கு எதுவும் இல்லல..” அவள் தவித்துப் போய் கேட்க,இல்லையென்றாள்.
“ஆரி உசுரோட இல்லன்னு தெரிஞ்சா இவ தாங்க மாட்டாளே..” மனதில் நினைத்த தோழனுக்கு தலை சுற்றியது.
“ட்ரீட்மண்ட் எடுக்கத் தான் போய் இருக்காராம்..இவங்க கூட கான்டெக்ட்ல இல்லயாம்..”
“அண்ணா அவரு..அவரு என்ன வெறுத்துடல தான..? அதான் இப்டி..?” என்றவளுக்கு குரல் கம்மியது.
“நீ வேறமா அவனப் பத்தி தான் உனக்கு தெரியும் தான..எங்க அவனுக்கு வியாதின்னு தெரிஞ்சா நீ கஷ்டப்படுவன்னு தெரிஞ்சு தான் வேணாம்னான்..மொத டாக்டர் கன்ஃபார்மா எதுவும் சொல்லல..அதான் அவன் வாழ்க்கைல உன்னயும் இழுத்து விட அவன் விரும்பல..இப்போ ஓகே..க்யூர் ஆகி வந்துருவான்..” அவனும் பொய்யை அடித்து விட,அவளுக்கும் என்னவோ ஆனது.
“அப்போ உங்க கூட எதுக்கு பேசல..?” அவளின் கேள்விக்கும் பொய்யொன்றை கூற,இருவரின் சமாளிப்பிலும் அவளை ஏமாற்ற முடிந்தது.
“அவரு வந்தா ஃபோன் பண்ண சொல்லுங்கண்ணா..” என்றவளுக்கு தெரியாது,அந்த எண்ணில் இருந்து அவளுக்கு அழைப்பு வர வாய்ப்பே இல்லை என்று.
அவளிடம் பிறகு விடயத்தை தெரிவித்துக் கொள்ளலாம் என்ற எண்ணமே,மூவருக்குள்ளும்.
நாட்குறிப்பை நெஞ்சோடு அணைத்தவாறு அலைபேசியில் தெரிந்த அவனின் புகைப்படத்தை உரசி புன்னகையுடன் நடந்தாள் யாழவள்,இங்கு அறைக்குள் அவனின் மாலையிடப்பட்ட புகைப்படம் இருப்பது தெரியாமல்.
காலம் முழுக்க அவ(ன்)ள் காதல் தீராது தேடும்.
முற்றும்.
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


அய்யோ சோக முடிவா.. முடியல. ஆர்யா செத்துட்டானா? என்னாலயும் நம்ப முடியல. ஒரு காதல் கிடைச்சும் அந்த சந்தோஷத்தை முழுசா அனுபவிக்காம செத்து போயிட்டான் ஆர்யா.