Loading

காதலொன்று கண்டேன்!

 

தேடல் 38

 

“அப்பாக்கு ஏதோ ஆச்சுடா..” சடலமாய் வீற்றிருந்தவரைப் பார்த்து நடுங்கிய குரலில் உரைத்தான்,பையன். விழிகளில் ஜீவனே இல்லை.ஒளியிழந்து மங்கிப் போய் இருந்தது.

 

ருக்மணி விடயத்தை கூறியிருக்க,அடித்துப் பிடித்துக் கொண்டு வந்த சத்யாவின் விழிகளில் கண்ணீர்.அவனுக்கு அதிர்வு தான்.

 

நேற்று அவன் கண்டவர் இன்று உயிருடன் இல்லை.என்னவென்றாலும்,அவருக்கும் அவனுக்கும் தனிப் பிணைப்பு உண்டே.

 

“என்னடா ஆச்சு..?” பையனின் முன்னே மண்டியிட்டு வினவ,எங்கோ வெறித்திருந்தவனின் விழிகள் நிலைகுத்தியிருக்க,இதழ்கள் பிதுங்கின.

 

“நானும் அதே தான் தான் டா கேக்கேறன்..அப்பா பேசாம இருக்காரு டா..” தள்ர்ந்த குரலில் மொழிந்தவன் சரியாக இல்லை என்பதே தோழனுக்கு அவன் பதிலில் தான் புரிந்தது.

 

வெறித்த பார்வையும் இறுகிய முகமுமாய் இருந்தவனின் விழிகளில் இல்லாத ஈரம் கூறிற்று,அவன் அதன் பின்னர் அழவில்லை என்பதை.விழிகளில் அப்படியொரு சிவப்பு.துளிக்கண்ணீர் கூட உதிர்ந்தபாடில்லை.

 

“ஆரி ஆரி..” அவனை உலுக்க,அசைவில்லை.புலன்கள் இசைந்தாலும்,எதிர்வினை இல்லை,பையனிடம் இருந்து.

 

“ஆரி..” தோழன் வேகமாய் கன்னத்தை தட்ட,அதற்கும் பதில் கொடுக்காதவனே, மயங்கிச் சரிந்திருந்தான்,அதீத அழுத்தத்தில்.

 

கட்டிலில் படுத்திருந்தவனை இயலாமையுடன் பார்த்தான்,பையன்.அவைனப் பார்ப்பதா இல்லை,மரணச் சடங்குகளுக்கான ஏற்பாடுகளை கவனிப்பதா என்று அவனுக்கு புரியவேயில்லை.

 

முன்னிருந்த எதையும் செய்திட,சிலர் முன் வந்தாலும் இருவருக்கும் உற்ற துணையாய் அவன் மட்டுமே அவ்விடத்தில்.

 

மீளவும் பையன் கண் விழிக்கையில் இரண்டு மணி நேரங்கள் கடந்து இருந்தது.உடனடியாக எழுந்து சென்று தாயுமானவரின் தலைமாட்டில் அமர்ந்து கொண்டான்.

 

சித்தம் கொஞ்சம் தெளிந்து இருக்க,அவருடன் இருக்கப் போகும் இறுதி நிமிடங்களை உறக்கத்தில் கரைத்த தன் மீதே கோபம் அவனுக்கு.

 

முகம் கசங்கி கன்றி போய் இருக்க,விழிகளில் சிவப்பு.அழவில்லை,அவன்.அழுகையும் வரவில்லை.அழுது தீர்க்க முடியாத வலி என்று கண்ணீரும் அடங்கி விட்டது போலும்.

 

உண்மை தானே,அழுதால் நிரம்பி விடுமா அவரின் இறப்பின் வெற்றிடம்..?

யார் கொண்டும் நிரப்பப் முடியா இடம் அது,அவள் வாழ்வில் இனி தொடர் வெற்றிடமாய் நீடிக்கும்.

 

பையனோ,அவரின் சடலத்தின் அருகே அவரின் முகத்தை பார்த்தவாறே அமர்ந்து இருந்தான்.அவரை விட்டு அசைய மறுத்தது,அவன் விழிகள்.

 

அனைத்தையும் கவனித்துக் கொண்டது சத்யா தான்.ஊரில் இருக்கும் ஆட்களாலே நிரம்பியிருந்தது வீடு.சொந்தமென்று, சொல்லிக் கொண்டு அங்கு வந்திருந்தது ஒரு சிலரே.ஆனாலும்,எதையும் பொறுப்பெடுத்து செய்ய யாரும் முன்வரவில்லை.

 

பெரிதாய் அழுகுரல் இல்லை அந்த வீட்டில்.அழ வேண்டியவனும் அழுகையை மறந்து, வெறித்த பாவையுடன்,எச்சில் கூட்டி விழுங்கிட,ஏறி இறங்கிய தொண்டைக்குழியுடன் அமர்ந்து இருக்க,அன்றிரவே அவரின் உடலை அடக்கம் செய்ய தீர்மானிக்கப்பட்டது.

 

“சொந்தம்னு யாரும் இல்லல..கொண்டு போய்ரலாம்டா..” பையனின் கெஞ்சலுக்கு யாரும் எதிர்ப்பேச்சு பேசவில்லை.அவனுக்குமே இயலவில்லை,அவரை மூச்சற்று உடலாய் பார்த்திட.

 

அவர் தேகம் மூச்சால் ஏறி இறங்குவது போல் தோன்றிற்று..

“அப்பு..” என படுத்திருப்பவர் தன்னை அழைப்பது போல் புலப்பட்டது..

அவரின் முகத்தை பார்த்தவாறு அவன் விழிகளை மூட,அவரின் ஸ்பரிசத்தின் மென்மையை சிகை உணர்ந்திற்று..

என்னென்னவோ ஆக,நிதர்சம் புரிந்தால் பையனும் பயந்தான்.

 

“அப்பா மூச்சு விட்ற மாதிரி இருக்குடா..” சத்யாவை அழைத்து இரு முறை கூற,அவன் பையனுக்கு ஏதேனுமொ என்று வெகுவாய் பயந்திட,தாமதிக்க விரும்பவில்லை.

 

எந்த வித உணர்வும் இன்றி,இறுதிக் கிரியையகள் பையன் செய்திட,மழையும் அடித்து ஊற்றியது.அவன் வாழ்வில் எந்த ஒரு இடத்திலும் மழை.

 

அடக்கம் செய்து விட்டு வீடு வந்தான்,பையன்.தோழன் உடன் வரும் அரவம் கேட்டது.இருளில் மூழ்கி வீடே வெறிச்சோடிப் போயிருந்தது.

 

ருக்மணியோ,மகனை அழைத்துக் கொண்டு வேறிடம் சென்று விட்டாள்.இன்னும் பையனுக்கு தொந்தரவாக இருக்க,அவள் மனம் விரும்பவில்லை.

 

எப்போது அவன் வீட்டுக்கு வந்தாலும் விழித்திருந்தால்,வாசல் வந்து விடுவார் மனிதர்.அவனைக் கண்டதும் விழிகள் சிரிக்க,அவர் முகம் விகசிக்கும்.அதை நினைக்கையில் விழிகளில் நீர் சேர்ந்தது.

 

“இனிமெ அப்பா வரவே மாட்டார்ல..” நலுங்கிய தொனியில் உரைத்தவனுக்கு தானும் செத்து விட்டால் என்னவென்றே தோன்றிற்று.

 

அவரின்றி அவனின் நாட்களை யோசித்துப் பார்த்ததே இல்லை.யோசிக்கும் தைரியமே பையனுக்கு இருந்தது இல்லை.அப்படித் தவறுதலாக நினைவில் வந்தாலும்,மனிதரை கட்டிக் கொண்டு ஆறுதல் தேடிடுவான்.

 

அவர் மீள முடியா துயிலுக்கு சென்று விட்டார்,என்கின்ற உண்மையை இன்னும் அவன் மனம் ஏற்காது இருக்க,இதழ்களில் விரக்திச் சிரிப்பு.

 

அறையின் விளக்கை கூட ஒளிர விடாது,அவர் அறையில் அவரின் சாய்வு நாற்காலியில் சாய்ந்து அமர்ந்தவனோ, மெதுவாய் அதை தடவிக் கொடுக்க,அவனின் நிலையைக் கண்ட சத்யாவின் விழிகளில் கண்ணீர் எழுந்திற்று.

 

கண்டவனுக்கே,ஒரு மாதிரியாகிற்று.இயல்பான தந்தை-மகன் பிணைப்பு அல்லவே அது.இயல்பு மீறிய,விதிகள் தோற்கும் ஓர் அழகியலே,அப்புவுக்கும் அவனின் அப்பாவுக்கும் இடையிலான பந்தம்.

 

இருவரின் பிணைப்பையும் கண்கூடாக கண்டு, மகிழ்ந்து தளர்ந்து நெகிழ்ந்து போனவர்களில், அவனும் ஒருவன்.

 

அவன் நிலையே அப்படி இருக்கையில்,அதில் வாழ்ந்தவனின்,அத்தோடு ஜீவனை பிணைத்தவனின், நிலையை சொல்ல வார்த்தைகள் போதுமா..?

 

விழித்தெழுந்ததும், தினத்துக்கு ஆயிரம் தடவை,”அப்பு” என்கின்ற அவரின் அழைப்பு செவியை மோதிக் கொண்டு இருக்கும்.அவரின் இன்மையை,ஏன் ஒரு நொடி கூட அவர் உணரவிட்டது இல்லை,மனிதர்.அப்படி பார்த்துக் கொள்வார்,அவர் பெறா அவரின் உயிரை.

 

விவரம் தெரியும் முன்னரே அவனின் உலகமாக இருந்தவர், விவரம் அறிந்து முழுதாய் அவரை மட்டும் அவன் நம்பி இருக்கையில் விட்டுச் சென்றதை விதியின் சதி என்பதா..?

 

இரவு பையன் உண்ணவில்லை.உணவை மறத்துவனை சத்யாவும் வற்புறுத்தவில்லை.வற்புறுத்தவே மனம் வராத அளவு,அத்தனை உடைந்து போயிருந்தான்,பையன்.

 

“எல்லாத்தயும் ஏத்துகிட்டு பழகனும்ல..” நெஞ்சை நீவி தனக்குத் தானே மொழிந்து கொண்டான்.அதீத அழுத்தத்தில் நெஞ்சுக் கூட இறுகி,வலது புறம் மூச்செடுக்க கூட முடியாமல் வலி.

 

சத்யா தான்,மாத்திரைகளை வாங்கி வந்து கொடுத்து,சீர் படுத்தியது.

 

“இப்போ நிம்மதியா இருக்குடா..நா இல்லன்னா அப்பா எப்டி சமாளிக்க போறாருன்னு யோசிச்சு யோசிச்சு பயந்து கிட்டு இருந்தேன்டா…இப்போ அந்த விஷயத்துல கொஞ்சம் நிம்மதியா இருக்குடா..” விரக்தியாய் கூறியவனுக்கு,என்ன பதில் சொல்லவென்று தெரியாத தோழனின் விழிகளில் நீர் மட்டுமே.

 

மறுநாள் எழுந்து கொண்டவனோ,வழமை போல் இருவருக்கும் காஃபி கலக்கி முடிக்கையிலேயே, கூடத்தில் மாட்டப்பட்டிருந்த புகைப்படம் விழிகளில் விழ,அவர் இல்லையென்கின்ற நிதர்சனம் புரிந்தது.ஆழ மூச்சிழுத்துக் கொண்டான்.அழுதாலாவது வலி மட்டுப்படம முனையும்.பையனுக்கோ அழுகையின் நாமமே இல்லை.

 

தொண்டை வரை வந்த விசும்பலை விழுங்கிக் கொண்டது,மொத்தமாய் சேர்த்து அழுதிடத் தானோ..?

 

வம்படியாய் தோழன் உணவை நீட்ட,ஏனோ தந்தையின் அப்போதும் அவரின் அதட்டலும் அதன் பின்னர் ஊட்டி விடுவதும் நினைவில் வர பையன் செத்துத் தான் போனான்.

 

பையனின் நிலையைப் பார்த்து தோழனே,”அழுதுரேன்டா..” எனக் கெஞ்ச,அவனோ அசைந்து கொடுத்திடவில்லை.

 

இரு நாட்கள் கடந்திருக்க,நாளை அவளின் திருமணம்.அது தோழனுக்கு இன்று தான் தெரிய வர,அப்படி ஒரு கோபம்.

 

“நாளக்கி யாழ்கு கல்யாணமா..?” அவளை தோழனுடன் சேர்த்து வைத்திடலாம் என்று அவனுக்குள் கொஞ்சம் நம்பிக்கை இருந்தது.

 

“ஆமாடா..”

 

“டேய் அந்த பொண்ணு கல்யாணம் பண்ணா உனக்குனனு யா்ரா இருக்கா..?”

 

“நா பேசறது புரியுதாடா உனக்கு..?நாளக்கி நீ தனிச்சிப் போய்ருவடா..சாப்டியா தூங்கனியா கேக்கக் கூட ஆள் இருக்காது..நோய்னு ஏதாச்சும் வந்து யாருடா உன்னப் பாத்துப்பாங்க.. வீட்டுக்கு வந்தா வான்னு கூப்ட கூட ஆள் இருக்காதுடா..என்னடா பேசற நீ..?ஏன்டா புரிஞ்சிக்க மாட்டேங்குற..?”

 

உண்மை தானே.அவளுக்கும் திருமணமாகி விட்டால் அவனுக்கென்று யாரும் இருக்கப் போவதில்லை.அவன் மட்டும் தான் அவனுக்கு.”சாப்பிட்டாயா..?” என்கின்ற கேள்வி கூட,அவன் வாழ்வில இருக்கப் போவதில்லை.இருள் சூழ் வீடும்,அரவமற்ற அமைதியுமே அவனை வரவேற்கும்.அவனுக்கென்று எந்த நிலையிலும் யாரும் இருக்க மாட்டார்கள்.

 

“அப்போ பாத்துக்கலாம்..” ஜீவனே இல்லாத குரலில் மொழிந்தான்,பையன்.

 

“என்னடா பேசற நீ..” அவன் கத்த பையனிடம் அமைதி.அந்த அமைதியே அவன் ஏதோ ஒன்றை யோசிப்பதை எடுத்துக் காட்டியது.

 

“நா சொல்றத கேளு ஆரி..”தோழனின் பேச்சுக்கு செவி சாய்க்காதவனோ,தன் யோசனையில் ஆழ,இங்கு தோழன் முடிவெடுத்து விட்டிருந்தான்,அவளிடம் உண்மையைச் சொல்வதென்று.

 

பையனா தந்தையின் அறைக்குள் சென்று அடைந்து கொள்ள, இங்கு தோழன் அலைபேசியை எடுத்துக்கொண்டு சற்றுத் தள்ளி வெளியே வந்தான்,பையன் காணாமல்.

 

அவளின் எண்ணை ஏற்கனவே பதிந்து வைத்திருக்க யோசியாது,அவளுக்கு அழைப்பு எடுக்க, அவளின் கையில் இருந்து அலைபேசி பறிக்கப்படவும் தோழனிடம் இருந்து அழைப்பு வரவும் சரியாய் இருந்தது.

 

“யாருன்னு பாத்துட்டு தர்ரேன்..” என்று அவள் கூறியதை பொருட்படுத்தாமல், அலைபேசியை பறித்து ஒளித்து வைத்தனர்,உடன் இருந்தவர்கள்.

 

“அத்தான் ஃபோன் பண்ணி நீ அவர் கூட பேசப் போனனா..”கலாய்த்தவாறு வெட்கச் சிரிப்புடன் உரைத்த தங்கையோ,திருமணம் முடிந்த கையோடு அலைபேசியை வாங்கிக் கொள் என்று கட்டளையும் இட்டு விட்டாள்.

 

சிறிது நேரத்தின் பின் அலைபேசி ஜார்ஜ் இருந்து அணைந்து போக,அழைப்பெடுத்து தோற்றுப் போய்,மனம் நொந்து சுவற்றில் ஓங்கி குத்தினான், தோழன்.

 

சில நேரங்களில் விதியின் விளையாட்டை தடுக்க யாராலும் முடிவதில்லை.அது தான் இங்கு நடந்தேறியது.

 

இங்கு தன் கையில் இருந்த கோப்பில் இடப்பட்டிருந்த பெயரைக் கண்டதும், டாக்டரின் விழிகளில் அப்பட்டமான அதிர்வு.

 

“ஆர்யன் துருவேந்திரன்” என பெரிய எழுத்துக்களால் எழுதப்பட்டிருந்த பெயரை அவன் விரல்கள் வருட, அப்போது தான் புரிந்தது தன்னை காண அன்று வந்தது பையனின் தோழன் என்பது.

 

என்ன செய்வது என்று புரியாமல் திகைத்து நின்றான்,டாக்டர். அவனுக்கு பையனின் நடத்தையில் இருந்து ஏதோ ஒன்றை ஊகிக்க முடியுமாக இருக்க, விழிகள் இடுங்கின.

 

சரியாக அதே நேரம் பார்த்து சத்யாவிடம் இருந்து அழைப்பு வர, அது ஏற்று காதில் வைத்தவனுக்கு,புரிந்து தான் இருந்தது தோழன் பேசப்போவது பையனை பற்றி என்று.

 

மதியழனிடம் விசாரித்து,யாழ் அவளின் அத்தை மகன் யார் என்று தெரிந்து கொண்டவனுக்கு நிம்மதி தான்.

 

அவனுக்கு ஏற்கனவே டாக்டரை தெரிந்து இருக்க,அவனின் குணத்தை கணித்தவனுக்கு எப்படியும் அவன் தமக்கு உதவுவான், என்று அசாத்திய நம்பிக்கை இருக்க,அது பொய்த்துப் போகப் போவது தெரிந்திட வாய்ப்பில்லை.

 

சத்யா அனைத்தையும் ஒப்பிக்க,அதைக் கேட்ட டாக்டருக்கு மனம் கலங்கினாலும் ஏனோ யாழவளை விட்டுக் கொடுக்க மனம் வரவில்லை.

 

அவனுக்காக மனம் யோசித்தது.அவளையும் அதனுடன் கூட்டு சேர்த்துக் கொண்டது.

 

எப்படி என்றாலும் அவனை திருமணம் செய்தால்,அவளின் வாழ்வு அவனுடன் முடிந்து போகும் என மனம் வாதிட,பையன் செய்யப்போகும் செயலை தானே, தானும் செய்யப் போவதாய் நினைத்து தன் செயலுக்கு நியாயம் கற்பித்துக் கொண்டான்,டாக்டர்.

அது தானே,மனிதங்களின் இயல்பான குணம்.

 

அவரவர்க்கு அவரவர் நியாயம்!அடுத்தவருக்கோ,அது அளப்பறிய காயம்!

 

சரி என்பதாய் கேட்டு அலைபேசியை துண்டித்தவனோ, தீர்மானம் எடுத்திருந்தான், யாழவளிடம் எதையும் கூறப்போவதில்லை என்று.

 

நொடி நேர சுயநலம்,சிலருக்கு வாழ்க்கை முழுக்க தீரா வலியைத் தரும்.

 

மறுநாள்,பத்தரை மணிக்கு முகூர்த்தம் என்று இருக்க,நேரத்தை பார்த்துக் கொண்டு தயாராகிக் கொண்டிருந்தாள்,பாவையவள்.

 

எப்படியும் அவன் வந்திடுவான் என்று உள் மனம் கூறி, உள்ளுணர்வு உணர்த்திக் கொண்டே இருக்க,அந்த நம்பிக்கை இது தான் அவள் தயாரானதே.

 

டாக்டரும் சத்யா பேசியதே மொத்தமாக மறந்து விட்டு திருமணத்தை எதிர்கொள்ள காத்திருக்க,அவன் மனம் மட்டும் கொஞ்சமாய் நெருடிக் கொண்டே இருந்தது.

 

என்னவென்றாலும் அவள் மீதான சுயநலம் என்பது அவனுக்கு சமீபமாக தோன்றிய உணர்வல்லவா? அவனின் இயல்பு அல்லவே..?

 

இதே நேரம் சங்கவி வந்து பாவையவளை, கோயிலின் பின்னே அழைத்துச் செல்ல அங்கு இலேசாக தலை சேர்த்து கழுத்தை வருடியவாறு எங்கோ பார்த்துக் கொண்டிருந்தான், பையன்.

 

காதல் தேடும்.

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 8

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
4
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments