Loading

காதலொன்று கண்டேன்!

 

தேடல் 03

 

(I)

 

நிலத்தில் அவன் ஓங்கி அடித்த வேகத்தில் குடை இரண்டாகச் சிதறிப் போக,வாயில் கை வைத்துக் கொண்ட சத்யாவுக்குமே,அவனின் நடவடிக்கை உவப்பாய்த் தோன்றிடவில்லை.

 

அப்படித் தோன்றிடாவிடினும்,அதை வாயைத் திறந்து,அவனிடம் கூற முடியுமா என்ன..?அவனுக்கல்லவா மொத்து விழும்.பேசாமல் அமைதி காத்திட,அதிதியின் முகம் கறுத்துப் போயிருந்தது.

 

“இங்க பாரு பைத்தியக்காரி..இதுக்கப்றம் என்ன பாக்கறது பேசறதுன்னு ஏதாச்சும் கிறுக்குத்தனம் பண்ணிட்டு இருந்த.. மூஞ்ச ஒடச்சி பல்ல பேத்துருவேன்..”

 

விழிகள் அனல் வீச,விரல் நீட்டி எச்சரித்தவளின் பார்வையில் தெரிந்த தீட்சண்யத்தில் சத்தியமாய் மிரண்டு தான் போனாள்,அவள்.பயத்தில் தொண்டைக்குழி ஏறி இறங்கிற்று.

 

அவன் போட்ட சத்தத்தில் அருகே நின்றிருந்தவர்களின் பார்வை,அவள் மீது தரித்திட,அவமானமாய் போயிற்று,அவளுக்கும்.

 

மெதுவாய் சொல்லியிருக்கலாம் என்று தோழனுக்கும் தோன்றிற்று.அதை சொல்லிடும் தைரியம் இல்லாது போய் விடவே,இந்த அமைதி.

 

அதற்கு மேல் எதுவும் பேசாது நனைந்தவாறே,அவன் விடுவிடுவென நடந்திட,விழிகளில் பிரசவமான நீர்த்திரளுடன் தோழியரின் அருகே வந்தாள்,அதிதி.

 

●●●●●●●

 

“மீச கூட சரியா மொளக்கல..அப்டி என்னடா மூக்குக்கு மேல கோவம் வருது உனக்கு..? ரோட்னு பாக்காம அந்த பொண்ணுக்கு திட்டிட்டு வந்துருக்க..” அடுப்பில் இருந்து தோசையை எடுத்து அவனின் தட்டில் இட்டவாறு காரமாய் வினவினார்,வேல் முருகன்.

 

அவனோ,அவரின் பேச்சைக் கேட்பது போலவே காட்டிக் கொள்ளவில்லை.உணவை அள்ளிக் கொள்வதில் கவனமாய் இருக்க,கொதித்து விட்டார்,அவர்.

 

அவனின் செயலில் அவருக்கு அப்படியொரு கோபம்.சத்யா தான் அவரின் காதுக்கு விடயத்தை எத்தி வைத்து விட்டு அவனின் கையில் சிக்காமல் ஓடியிருந்தது.

 

“டேய்ய்ய்ய்ய்”

 

“அப்பா நிம்மதியா சாப்ட விடேன்பா..”சலிப்புடன் அலுத்துக் கொண்டவனின், தலையில் ஓங்கி ஒன்று வைத்தவருக்கு ஆத்திரம் அடங்க மறுத்தது.

 

“பேசுவடா பேசுவ..உன்ன செல்லம் கொடுத்து கெடுத்து வச்சிருக்கேன்ல இதுவும் பேசுவ… இதுக்கு மேலயும் பேசுவ..”

 

“அத அப்றம் பேசறேன்..இப்போ இன்னும் ரெண்டு தோச போட்டு கொடு..செம்ம பசி..” அவன் அலட்சியம் காட்ட,தாயுமானவரின் மனமும் கனிந்தது.

 

அவனின் இந்த முரட்டுத் தனமான நடத்தைக்கு காரணம் என்னவென்று, அவரைத் தவிர வேறு யாராலும் ஆழமாய் உணர்ந்திட இயலாது.

 

அவன் கேட்ட தோசை இரண்டையும் போட்டு விட்டு,அவனின் அருகே அமர்ந்து கொண்டவனின் பார்வை அவனை கனிவுடன் தழுவியது.

 

“ஏன் டா இப்டி பண்ண..?”

 

“அவ சும்மா லவ் அது இதுன்னு என் பின்னாடி திரியுறாப்பா..அதுவும் இல்லாம நேத்து சின்னப் பொண்ணு ஒன்னு கிட்ட எனக்கு கிஃப்ட் கொடுத்து அனுப்பி இருக்கா..இன்னிக்கி நா மழைல நனைறென்னு குடய வேற எனக்கு கொடுக்க வர்ரா..செம்ம கோவம் வந்துருச்சு எனக்கு..அதான் பா..அதுல்ல அவளோட ஆட்டியூட்டும் எனக்கு புடிக்கல..” சிலுப்பிக் கொண்டான்,அவன்.

 

“நீ ஏன் இப்டி நடந்துக்குறன்னு எனக்கு தெரியும் டா..ஃபர்ஸ்டு பொண்ணுங்கள மதிக்க கத்துக்கோடா..நாம மத்த பொண்ணுங்கள மதிச்சு நடந்தா தான் நம்ம லைஃப்ல இருக்குற பொண்ணுங்களயும் மத்தவங்க மதிச்சு நடப்பாங்க..”

 

“என்னோட லைஃப்ல தான் பொண்ணுன்னு யாரும் இல்லியே..அதுக்கப்றம் நா எதுக்கு மதிச்சு நடக்கனும்..?” தன் பிடியில் தான் நின்றான்,அவனும்.

 

அதைக் கேட்கையில் அவன் விழிகளில் அவனை மீறி சிறு வலி பரவிட,அதைக் கண்டதும் மனதில் அத்தனை வலி,அவனின் தாயுமானவருக்கு.

 

மனமோ,அவனின் தாயாரை அத்தனை அர்ச்சித்தது,வலியுடன்.அவரின் நடத்தையால் அல்லவா அவனும் இப்படி வளர்ந்து நிற்கிறான்..?

 

“இங்க பாருப்பா..எல்லா பொண்ணுங்களும் ஒரே மாதிரி இல்லடா..நம்பு அத..நல்ல பொண்ணுங்களும் இந்த ஒலகத்துல இருக்காங்கடா..”

 

“இந்த ஒலகத்துல இருக்கலாம்..ஆனா என்னோட ஒலகத்துல யாரும் இல்லல..அப்றம் நா எப்டி நம்பறது..?” வாஸ்தவமான கேள்வி தான்.

 

முதல் வாழ்க்கை தோற்றுப் போன பின்னர்,இன்னொருவனை நம்ப முடியாமல் பெண்களுக்குள் இருக்கும் சிறு வெறுப்பு..

முதல் பிரசவத்தில் ஜீவன் நிற்கா சிசுவை பார்த்த தாயிற்கு,இரண்டாவது பிரசவத்தை எண்ணுகையில் உண்டாகிடும் பயம்..

நம்பிய ஒருவர் உடைத்துப் போட்ட பின்னர்,வேறு யாரையும் நம்பத் தோன்றாமல் மனதுக்குள் இருக்கும் நம்பிக்கையின்மை..

எல்லாமே,அவனுக்குள் ஆழமாய் தடம் பதித்திருக்க,அவனை மாற்றுவது ஒன்றும் அத்தனை எளிதானது அல்ல,எனப் புரிந்து போனது,வேல் முருகனுக்கு.

 

இதற்கு மேலும் பேசிப் பயனில்லை என்று அவர் அமைதியாகி விட,அவரின் அமைதியில் அவனுக்குள் சிறு குற்றவுணர்வு.

 

“அப்பா நா வேணும்னே பண்றதில்ல பா..எந்தப் பொண்ண பாக்கும் போதும் அம்மா மேல இருக்குற கோவம் தான் பா ஞாபகம் வருது..எல்லாரும் அம்மா மாதிரி தான் இருப்பாங்கங்குற தாட் தான் பா மனசுக்குள்ள ஃபர்ஸ்டாவே வருது..”

 

“………………..”

 

“சத்தியமா யாரயும் நம்பத் தோணல பா..நம்பவே தோணல எனக்கு..நா என்னப்பா பண்றது..? எல்லாரும் அம்மாவ மாதிரி தான் இருப்பாங்கன்னு கோவமா வருது பா..” உடைந்த குரலில் அவன் முடித்திட,அப்படியே அவனை தோளோடு சேர்த்தணைத்து உச்சி முகர்ந்தவரின் விழிகளில் நீர் கோர்த்திருந்தது.

 

“அப்பா ஒன்னும் சொல்லலடா..நீ ரிலாக்ஸ் ஆகு..அப்பா ஒன்னும் சொல்லல..” அவன் தலையை வருடி விட,இயல்பானான் அவனும்.

 

வேல்முருகனின் மனதில் மகனுக்கான வேண்டுதல்கள் துளிர்த்தது.காலத்தால் மாற்றம் பிறந்திட வேண்டும் என்று பிரார்த்தித்தவர் மறந்து போயிருந்தார்,காலத்தால் மட்டுமல்ல,காதலாலும் மாற்றங்கள் சாத்தியம் என்பது.

 

இங்கோ,

 

“என்னடி வந்ததுல இருந்து ஒரு மாதிரி இருக்க..? ஒரு பையனோட பேசப் போய் அவன் கத்தி திட்டுனான்னு தம்பி சொன்னான்..என்னாச்சு..?” தாயாரின் கேள்வியில் அவளுக்கு திக்கென்றது.

 

“அது அவன் என் ஃப்ரெண்ட் மா..நனைறானேன்னு குடய கொடுத்தேன்..அவனுக்கும் எனக்கும் சின்ன சண்ட..அந்த கோபத்துல கத்தி திட்டிட்டான்..”

 

“இப்டி ஒரு ஃப்ரெண்ட்ஷிப் உனக்கு தேவயா..?” தலையில் அடித்துக் கொண்டு அவளின் தாயார் சமயலறைக்குள் நுழைந்திடவுமே அவளுக்கு மூச்சே வந்தது.

 

அதற்குள் தோழி ஆராதனாவும் அவளைப் பார்க்க வந்திருக்க,அவளின் வாயைப் பொத்தி அறைக்குள் இழுத்துச் சென்று இருந்தாள்.

 

“நா சத்தியமா நெனச்சு பாக்கலடி அவன் இவ்ளோ ஹார்ஷா பிஹேவ் பண்ணுவான்னு நெனச்சு கூட பாக்கல டி..பேசாம அவன விட்டுத் தொலடி..” என்க,மறுப்பாய் அசைந்தது,அவள் சிரசு.

 

“அவன் என்னோட ஈகோவ டச் பண்ணிட்டான்..அவன என்ன லவ் பண்ண வச்சு என் பின்னாடி நாயா அலய விடனும்..” அவள் சபதமெடுக்க தோழிக்குத் தான் புரையேறி இலேசாக நெஞ்சு வலித்தது.

 

காலங்கள் யாருக்காகவும் காத்து நிற்பதில்லை.உடன் எவர் வந்தாலும் வராவிடினும் பாதியில் பலர் விட்டுச் சென்றாலும் தன் பாட்டில் தன் சுழற்சியை நிறுத்தாது ஓடிக் கொண்டு இருக்கும்.

 

இதோ காலவோட்டத்தில் மூன்று வருடங்களில் ஓடியிருக்க,எல்லோர் வாழ்வியலிலும் அளவிட முடியா மாற்றங்கள்,ஏற்க வேண்டிய நிர்ப்பந்தத்துடன்.

 

அரசு பொறியியல் கல்லூரி வளாகமது மாணாக்கர் கூட்டத்தினால் நிரம்பி வழிய,கிளை விரித்து நிற்கும் ஆலமரத்தை சுற்றி போடப்பட்டிருக்கும் கட்டுத் திண்டில் முகத்தில் பதட்டம் மின்ன அமர்ந்திருந்தான்,தோழன்.

 

அவன் இன்னும் வராதிருக்கு தோழனுக்கு பதட்டம் கூடித் தான் போனது.”ஐயோ அந்த ப்ரொஃப் வேற நேரங்காலத்தோட வர சொல்லுச்சு இவன இன்னும் காணோம்..” நகத்தை கடித்துத் துப்பியவாறு தனக்குள் புலம்பிட,சுற்றி நின்றிருந்தவர்களின் பார்வை அவன் மீது சிரிப்புடன் படிந்தது.

 

“இவன் ஒருத்தனுக்கு ஃப்ரெண்டா இருக்கப் போய் ஊரே நம்மள பாத்து சிரிக்கிது..ஐயோ ஐயோ..” முணுமுணுத்திடும் போதே,அங்கு வந்து சேர்ந்தாள்,அதிதி.

 

“சரி வந்துட்டா டார்ச்சர் பண்ணவே..” கடுகடுத்தவனுக்கு அவளுக்கு திட்ட வேண்டும் போல் இருந்தாலும்,அடக்கிக் கொண்டான் வம்பு வேண்டாமென.

 

“எங்க இன்னும் டேன்ஜர் வர்லியா..?” வாயிலைப் பார்த்தவாறு வினவிட கடுப்பாகிற்று,சத்யாவுக்கு.

 

“அதான் அவன் டேன்ஜர்னு தெரியுதுல..அப்றம் எதுக்கு அவன பாக்கனும்னு வந்து தவம் கெடக்குற..காலைல அவன் வாயால வாங்கிக் கட்டிக்கலன்னா உனக்கு நாள் நல்லா இருக்காதோ..”

 

“அவன் என்ன எப்டி திட்டுனாலும் ஐ டோன்ட் கேர்..அவன நா லவ் பண்றேன்..அதுக்காக என்ன வேணுன்னாலும் தாங்கிப்பேன்..அவன் லவ் பண்ற வர எவ்ளோ திட்னாலும் நா கண்டுக்க மாட்டேன்..”

 

“அப்போ வாழ்க்க முழுக்க அவன் கிட்ட திட்டு வாங்கியே சாவு..அவனாவது உன்ன லவ் பண்றதாவது..உன்ன கண்டாலே அவனுக்கு காண்ட் ஆகுது..இதுல லவ் ஒன்னு தான் கொறச்சல்..” அவளுக்கு கேட்கும் படியே திட்டிய தோழனுக்கு தெரியுமே,அவனின் எண்ணப்போக்கு என்னவென்று.

 

“போடா..சும்மா கலாய்க்காம..”

 

“இங்க பாரு அதிதி..உன்னோட நல்லதுக்கு தான் சொல்றேன்..இந்த ஜென்மத்துல மட்டுல்ல அடுத்த ஏழு ஜென்மம் வந்தாலும் அவன் உன்ன லவ் பண்ண மாட்டேன்..இப்போவே ஒதுங்கிக்கோ..அது தான் உனக்கு பெட்டர்..” அவன் அழுத்தி கூறிட,அவளோ இதழ் சுளித்து விட்டு திரும்பிட,கல்லூரி வளாகத்தினுள் நுழைந்தது,அவனின் இரு சக்கர வாகனம்.

 

●●●●●●●●●

 

(II)

 

சிவந்த விழிகளுடன் தன்னறைக்குள் வந்த டாக்டரை அடுத்தடுத்த வேலைகள் மூழ்கடித்திட,அவனின் மனச் சஞ்சலங்களை ஒதுக்கி வைத்திட அது போதுமாய் இருந்தது.

 

அவன் எண்ணிய மன நிம்மதி அவனுக்கு வேலையில் கிடைத்திட,நிம்மதியாய் இருந்தது.

 

“டாக்டர் இந்தாங்க டயர்டா இருக்கீங்க போல டீ..” ஆண் தாதி ஒருவர்,அவன் கேளாமலே காஃபியை வைத்து விட்டுச் செல்ல,அவனுக்கும் அது தேவையாய் இருந்தது.

 

நன்றியுடன் சிறு தலையசைப்போடு இதழ் பிரித்து புன்னகைத்து இருந்தான்,அவரைப் பார்த்து.

 

சூடாக உள்ளிறங்கிய டீயில் மனமும் சற்றே மட்டுப்பட,வேலையில் ஆழ்ந்திருந்தவனை கலைத்தார்,தாதி.

 

“டாக்டர் உங்கள பாக்க உங்க அப்பா வந்து இருக்காரு..” அவர் கூறி விட்டுச் செல்ல நெற்றியை அழுந்தத் தேய்த்துக் கொண்டே,வெளியே வந்திட புன்னகை முகமாய் நின்று இருந்தார்,அன்பரசன்.

 

“என்னப்பா என்ன விஷயம்..? எதுக்குப்பா ஹாஸ்பிடல்கு வந்து இருக்கீங்க..?” கேள்வி கேட்கையில் தந்தையின் மீது பரபரவென படிந்த பார்வை அவரின் தேகசுகத்தை ஆராய்ந்து முடித்திருந்தது.

 

“அதான் பா நேத்து பேசுன விஷயம்..அதுக்கு எந்த பதிலும் சொல்லல நீ..ராம் கூட என்ன ஏதுன்னு கால் பண்ணி கேட்டு கிட்டே இருக்கான்..” என்கவும் அவனுக்கு சட்டென்று கோபம் ஏறிற்று.

 

“நா தான் சொல்றென்னு சொன்னேன்ல பா..அப்றம் எதுக்கு ஹாஸ்பிடல்கு வந்து இருக்கீங்க..?”

 

“நீ ஒன்னு சொல்லுடா..எங்களுக்கும் ஆச இருக்காதா..” என்றிட,அவனுக்கு தற்காலிகமான தீர்வு கிடைத்தால் போதுமென்கின்ற எண்ணம்.

 

“நா கல்யாணம் பண்ணிக்கறேன்..ஆனா அந்த தீப்தி வேணாம்..” பட்டென்று உரைத்து விட்டு திரும்பிச் சென்றிட,அன்பரசனின் முகத்தில் மென்னகை.

 

டாக்டரின் வீடே களை கட்டியிருந்தது.வீட்டில் சிரிப்பு சத்தம் நிரம்பியிருக்க,அது தந்த புன்னகையில் உள்ளே வந்தார்,அவனின் தந்தை.

 

“தாத்தா..” என ஓடி வந்து காலைக் கட்டிக் கொண்ட பேரப்பிள்ளையை தூக்கி உச்சி முகர்ந்தவரின் பார்வை,உணவை வெளுத்துக் கட்டிக் கொண்டிருந்த மகளின் மீது வாஞ்சையுடன் நிலைத்தது.

 

சித்தார்த்துடன் பிறந்தவள் அவள்.அவனின் இரட்டைப் பிறவி.நான்கு வருடங்களுக்கு முன் திருமணமாகி இருக்க,இப்போது அவளுக்கு மூன்று வயதில் குழந்தை.டாக்டர் தான் இன்னும் பிடி கொடுக்காமல் போக்குக் காட்டுவது.

 

“என்னப்பா போன வேல என்னாச்சு..? என்ன சொன்னான் உங்க அரும புத்திரன்..?”

 

“ம்ம்ம்ம்ம்..அவனுக்கு தீப்தி வேணாமாம்..”

 

“அதான பாத்தேன்..அவனாச்சும் கல்யாணத்துக்கு ஒத்துக்கறதாவது..கால காலத்துல கல்யாணம் பண்ணி புள்ள குட்டிங்கள பெத்துக்காம..இர்ரெஸ்பான்ஸிபல் இடியட்..”

 

“ஆனா..?”

 

“ஆனா என்னப்பா..?”

 

“அவனுக்கு தீப்தி வேணாமாம்..ஆனா கல்யாணம் பண்ணிக்கிறானாம்..”

 

“எதே!” அதிர்ந்தவளுக்கு புரையேறிட,நெஞ்சைப் பிடித்தவாறு இருமியவளோ,உணவை விழுங்காது துப்பியிருந்தாள்,வாஷ் பேஸினில்.

 

அவரின் மனைவி பரிமளாவுக்கு உச்சகட்ட அதிர்வு தான்.தாயும் மகளும் டாக்டரிடம் இருந்து சம்மதத்தின் சாயலையேனும் எதிர்ப்பார்த்து இருக்கவில்லையே.

 

“நெஜமாவாங்க சொல்றீங்க..?”

 

“ஆமா பரிமளா..நா எதுக்கு பொய் சொல்லனும்..? வேணும்னா உன் பையன் கிட்டவே கேட்டு பாரு..” விகசிப்பின் பூத்திருந்தன,அவர் இதழ்கள்.

 

“லைட்டா நெஞ்சடக்கிற மாதிரி இருக்கே..” புலம்பியவாறு வந்து மீண்டும் உணவில் கவனம் ஆனாலும்,தம்பியின் மாற்றம் புரியாத புதிராகத் தான் இருந்தது,அகல்யாவுக்கு.

 

அன்று தாய் வீட்டில் இருக்கும் முடிவுடன் அகல்யா இருக்க,டாக்டர் வீட்டுக்கு வந்ததுமே,அவளின் குழந்தையுடன் ஐக்கியமாகிப் போயிருந்தான்.

 

“இவன் மூஞ்சிய பாத்தா கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னதுக்கான அறகுறி கூட இல்ல..மாதாஜி உங்களுக்கு என்ன தோணுது..?” டாக்டரின் முகத்தை ஆராய்ந்து அவள் தாயாரின் காதில் கிசுகிசுத்திட,அவருக்கு கோபம் தான் வந்தது.

 

“அவனே இப்போ தான் கல்யாணத்துக்கு ஒத்து கிட்டு இருக்கான்னு நானே சந்தோஷத்துல இருக்கேன்..அதுல மண்ணள்ளிப் போடாம பேசாம இரு..” நொடித்துக் கொண்டே அவர் எழுந்து செல்ல,தமக்கையானவளுக்கு இன்னுமே தம்பியின் மீது நம்பிக்கை வரவில்லை.

 

அதுவும் இரவில் அவன் கூடத்தில் தனியே அமர்ந்திருக்கும் பொழுதே கேட்டே விட்டிருக்க,தலையசைபைபுடன் அவன் ஒத்துக் கொள்ள அவளுக்கு தலை சுற்றல் வராதது தான் மிச்சம்.

 

அடுத்த நாளே,வரன் பார்க்கத் துவங்கி விட்டிருந்தனர்,அவனின் குடும்பத்தினர்.டாக்டரோ,தன் மனதில் யாரும் இல்லையென தெரிவித்திருக்க,அதன் பின்னரே இந்தப் படலம் துவங்கியது.

 

வரும் வரன்களை எல்லாம் அவன் தட்டிக் கழித்திட,அன்பரசனுக்கு சந்தேகம் வந்து விட்டது,மகனின் மீது.

 

ஒரு நாள் மனதை மறையாது கேட்டிருந்தார்,டாக்டரிடம்.

 

காதல் தேடும்.

 

2025.03.31

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. அந்த பையன் யாரு அவனுக்கு ஏன் பேர் வைக்கல … டாக்டர் மனசுல என்ன இருக்கு …