Loading

பூ-03

 

அந்தக் காலை வேளையதில் தொலைக்காட்சியில் ஓடிக் கொண்டிருந்த செய்தியில் கைகள் வெடவெடக்க, அதிர்ந்து நின்றாள் அக்னிகா.

 

“ **** பகுதி அருகே கடந்த மாதம் நடந்தார் போல் மீண்டும் ஒரு கொலை சம்பவம் நடந்துள்ளது. **** பகுதியைச் சேர்ந்த சாத்விக் என்ற இளைஞன், இரவு, நண்பர்களுடன் திரைப்படம் பார்த்துவிட்டு வீடு திரும்ப, வெகுநேரம் ஆன பின்பும் மகன் வீடு திரும்பாததாலும், அவரது அலைபேசி இயக்கம் அணைக்கப்பட்டிருந்ததாலும் பதறிப் போன அவரது தாய், அவர் தோழர்களுக்கு அழைத்திருந்தார். சாத்விக் புறப்பட்டு வெகுநேரம் ஆனதை அவர்கள் தெரிவித்திருக்க, உடனே காவல்துறைக்கு புகார் கொடுத்திருந்தவர் அடுத்த அரைமணி நேரத்தில் அவரது மகன் இறந்திருக்கும் இடத்திற்கு வரவழைக்கப்பட்டார். 

 

கூர்மையான கடப்பாரையால் அவரது வயிற்றில் குத்தி உடலைச் சாலையோடு சேர்த்து அறைந்திருக்க, வாயில் கொதிக்கும் உலோகம் ஊற்றப்படு, சாலையில் அவர் ரத்தம் கொண்டு ‘sorry’ என்ற வார்த்தையும் எழுதப்பட்டிருப்பதைக் கண்ட அவரது தாய் சம்பவ இடத்திலேயே மயங்கிச் சரிந்தார். இது தொடர்பாகக் காவல்துறை கண்காணிப்பாளர் திரு. சிவப்ரியன் இவ்வழக்கை விசாரித்து வருகின்றார்” என்று செய்தி வாசிப்பாளர் வாசித்து முடிக்க,

 

தொலைக்காட்சியையே வைத்தக் கண் எடுக்காமல் அச்சத்துடன் பார்த்துக்கொண்டிருந்தாள் அக்னிகா.

 

அவள் கால்கள் வெளிப்படையாக நடுங்க, கண்கள் அருவியாய் பொழிந்துக் கொண்டிருந்தது.

 

அப்போதே அறையிலிருந்து துயில் கலைந்து வந்த சுசித்ரா, “அக்னி..” என்று அவள் அருகே வர, 

 

தொலைக்காட்சியில் இறந்தவனின் புகைப்படமும் செய்தியும் ஓடிக் கொண்டிருந்தது.

 

அவள் உடல் நடுங்குவதில் பயந்துபோன சுசித்ரா, “அக்னி.. என்னாச்சு உனக்கு? என்ன பண்ணுதுடா?” என்று கேட்க,

 

தொண்டையை அடைத்தத் தேம்பலுடன் தொலைக்காட்சியைக் காட்டியவள், “சா..சா..சாத்விக்..” என்றுவிட்டு அவள் கழுத்தில் முகம் புதைத்து அழத் துவங்கினாள்.

 

“எ..எந்த சாத்விக்?” என்று சுசித்ரா கேட்க,

 

அக்னி மேலும் உடல் நடுங்க அழத் துவங்கினாள்.

 

அவளை இறுக அணைத்துக் கொண்ட சுசித்ராவுக்கே கண்கள் கலங்கியது. ‘இவனெல்லாம் மனுஷனே இல்ல.. சாவ வேண்டியவன் தான்’ என்று தோன்றினாலும் கூட அக்னிகாவின் நிலையும் புரியவே செய்தது.

 

“பி..பிடிக்காம போ..போச்சுதான்.. வெ..வெறுத்துட்டேன் தான். ஆனா இ..இப்படி பார்க்கனும்னு நினைக்கலை சுசி” என்று அவள் கதற,

 

அவளது முதுகை தடவிக் கொடுத்த சுசித்ரா, “அக்னி காம் டௌன்” என்றாள்.

 

அவள் உடலின் நடுக்கம் மெல்ல மெல்ல அதிகரிக்கவும், “அக்னி.. போதும்.. நிறுத்து” என்று பதட்டத்தை உள்ளடக்கிய குரலில் சுசித்ரா கூறினாள்.

 

ஆனால் செய்தியில் சொன்னவையும், சாத்விக்கின் முகமும் என மாறி மாறி அவள் மனதில் தோன்றி, அவளை மேலும் மேலும் நடுங்கச் செய்ய, மெல்ல மயக்க நிலையில் அவளை இழுக்கத் துவங்கியது.

 

“ஓ காட்” என்று பதட்டமடைந்த சுசித்ராவிற்கு, தற்போது சிவப்ரியனையும் அழைக்க இயலாத சூழல்.

 

மயக்க நிலைக்கு அவள் சென்ற பிறகும் உடல் தூக்கிப் போட, அவளை மருத்துவமனை அழைத்துச் செல்ல வேண்டிய கட்டாயத்தால் வண்டி ஏற்பாடு செய்ய கதவைத் திறந்தாள்.

 

அப்போதே அங்கு ஆபத்பாந்தவனாய் வந்திறங்கிய அதிரூபனைக் கண்டவள், அவனிடம் நிலவரத்தைக் கூறி அவன் உதவியோடு அருகேவுள்ள மருத்துவமனைக்கு அக்னிகாவை அழைத்துச் சென்றாள்.

 

அக்னிகாவை சிகிச்சையறைக்குள் அனுப்பிவிட்டு இருவரும் வெளியே அமரவும், “ம்மா.. அக்னிக்கு என்னாச்சு?” என்று அதிரூபன் கேட்க,

 

“டி..டீவி பார்த்துட்டு இருந்தா அண்ணா. நியூஸ்ல கொலை செய்தி வரவும் அதுல பயந்து இப்படியாகிடுச்சு” என்று சுசி கூறினாள்.

 

(அதிரூபனுக்கு சுசித்ரா அக்னியின் தோழி என்றவரை தெரியும்)

 

உள்ளிருந்து மருத்துவர் வெளியே வர, இருவரும் பதட்டத்துடன் எழுந்தனர்.

 

“நீங்க?” என்று அவர் கேட்க,

 

“நான் அவளுக்கு அண்ணா போலதான், இவங்க அவ ஃபிரண்டு டாக்டர்” என்று அதிரூபன் கூறினான்.

 

“ம்ம்.. அவங்க ரொம்ப பயந்துருக்காங்க. நல்லவேளை சீக்கிரம் கூட்டிட்டு வந்தீங்க. இல்லைனா ஃபிக்ஸ் வந்துருக்கக்கூட சான்ஸ் இருக்கு. ட்ரீட்மெண்ட் குடுத்துருக்கோம். டேப்லெட்ஸ் தரேன். ஒரு த்ரீ டேஸ் நல்லா ரெஸ்ட் எடுக்கச் சொல்லுங்க” என்று கூறிவிட்டு அவர் செல்ல,

 

“ஒரு நிமிஷம் அண்ணா..” என்று சுசியும் அவரோடு சென்றாள்.

 

மேலும் தான் அவளது மனநல மருத்துவர் என்பது வரை கூறியவள், அவளுக்கு வேறு எதுவும் பிரச்சினை இல்லை என்பதை கேட்டு உறுதி செய்துகொண்டு வர,

 

அதிரூபனும் செவிலி குடுத்த தாளில் இருந்த மருந்துகளை வாங்கி வந்திருந்தான்.

 

சில நிமிடங்களுக்குப் பின் செவிலி அவர்களை உள்ளே செல்ல அனுமதிக்க, உறக்க நிலையில் படுத்திருந்த அக்னிகாவைப் பார்க்க இருவரும் உள்ளே சென்றனர்.

 

“என்னவோமா.. இவளுக்கு ஒரு விடிவுகாலம் வரமாட்டேங்குது. கடவுள் ஏந்தான் இப்படியெல்லாம் சோதிக்குறாரோ” என்று உண்மையான வருத்தத்துடன் அதிரூபன் கூற,

 

கலக்கமாக அக்னியைப் பார்த்தபடியே பாவை தலையசைத்தாள்.

 

அதிரூபனுக்கு வேலைக்கு நேரமானதால் சுசித்ராவைப் பார்த்துக் கொள்ளும்படி கூறிவிட்டு அவன் புறப்பட, அவளது அலைபேசி ஒலித்தது.

 

அழைப்பை ஏற்று காதில் வைத்தவள், “ஹலோ..” என்க,

 

“சுசி எங்கருக்க? வீடு பூட்டிருக்கு?” என்று சிவா கேட்டான்.

 

“நீ எங்க இங்க வந்த?” என்று சுசி கேட்க,

 

அவள் செய்தியைப் பார்த்திருப்பது புரிந்தவனாய், “இறந்துப்போனவன் இந்த ஏரியால கொஞ்ச வருஷம் முன்ன இருந்திருக்கான். இங்க உள்ள ஸ்டேஷன்ல கொஞ்சம் ரிபோர்ட்ஸ் கலெக்ட் பண்ண வந்தேன்” என்று கூறியவன், “அக்னிக்கு எதும் முடியலையா?” என்று கேட்டான்.

 

“ஹ்ம்.. வீ ஆர் இன் ஹாஸ்பிடல் (we are in hospital)” என்று சுசி கூற,

 

“வாட்? என்னாச்சு சுசி?” என்று கேட்டான்.

 

“டீவில நியூஸ் பார்த்து பயந்து மயங்கிட்டா. மித்ததை பிறகு பேசிக்கலாம். நீ போய் வேலைய கவனி” என்று சுசி கூற,

 

தன் கடமைகளை முன் நிறுத்தியவன் சரியென்று கூறி அழைப்பைத் துண்டித்துவிட்டுச் சென்றான்.

 

சாத்விக் முன்பு வசித்த பகுதியில் சென்று விசாரித்தவன், மீண்டும் டீ.சீயின் அலுவலகம் சென்றான்.

 

அவனுக்காகவே காத்திருந்தவர், விரைப்பாக சல்யூட் அடித்தவனுக்கு பதிலாய் தலையசைத்து அவனை அமரும்படி பணித்தார்.

 

ஒரு ஆழ்ந்த மூச்சை இழுத்து விட்டவர், “மிஸ்டர் சிவன்.. இது அநேகமா சீரியல் கில்லிங் ஆர் சைக்கோ கில்லிங் லிஸ்ட்லதான் வரும்…” என்று கூற,

 

“கண்டிப்பா சீரியல் கில்லிங் தான் சார்” என்று கூறினான்.

 

டிசி மகாலிங்கம் அவனைப் புரியாமல் பார்க்க, “இறந்துபோனவன் ஒரு ரெண்டு வருஷம் முன்ன தங்கிருந்த இடம் பக்கம் போகும்போது விசாரிச்சேன் சார். அப்பவே அவரை யாரோ ஒருவர் ராத்திரி நேரம் துரத்தியதாகவும், அவர்கிட்டருந்து தப்பிச்சு வந்து போலீஸ் கம்பிளைன்ட் கொடுத்தவர் அது யாரு என்னனு தெரியாததால் வேற இடம் மாறினா நிம்மதியா இருக்கும்னு பக்கத்து ஊர் போனதாகவும் தெரிஞ்சது. கண்டிப்பா சைக்கோ கில்லர் தன்னோட இறை மிஸ் ஆன பிறகும் சும்மா இருந்திருக்கவே மாட்டான். அரொகென்டா எதாவது பிகேவ் பண்ணிருப்பான். பக்காவா ப்ளான் போட்டு விட்ட இறைய மறுபடியும் புடிச்சிருக்கான்னா இவன் சீரியல் கில்லரா தான் இருக்கனும்.. அன்ட் அதெப்டி அப்பத் துரத்தின ஆளும் இப்ப கொலை செய்தவனும் ஒரே ஆளா இருக்க முடியும்னு நீங்கக் கேட்கலாம். அந்த ஆளும் கடப்பாரையை தரையோடு தேய்ச்சுக்கிட்டே துரத்தினதா ரிப்போர்ட் இருக்கு சார்” என்று வழக்குக் கைக்கு வந்த சில நிமிடங்களிலேயே தெளிவாக ஆராய்ந்து பதிலாற்றினான்.

 

அவனைப் பெருமை பொங்க பார்த்தவர், “ஸோ?” என்க,

 

“விசாரிக்கனும் சார்” என்று நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு கூறினான்.

 

“ஓகே.. உங்களுக்கு இதில் யார் துணை வேண்டுமானாலும் பயன்படுத்திக்கோங்க” என்று மகாலிங்கம் கூற,

 

“எஸ் சார்” என்றவன் தனக்கு துணையாக வேண்டியவர்களை முடிவு செய்தோனாய் புறப்பட்டுத் தடயவியல் அலுவலகம் சென்றான்.

 

அங்கு அவனுக்கென்றே காத்திருந்தார், சிறந்த தடயவியல் நிபுணர் சர்வேஷ். உள்ளே நுழைந்தவன் அவரிடம் வழக்கைப் பற்றி விசாரிக்க,

 

“இட்ஸ் ரியலி சோ ஸ்கேரி (இது நிஜமாவே ரொம்ப பயங்கரமாக உள்ளது)” என்றவர், “உடலைத் தரையோடு சேர்த்து கடப்பாரைக் கொண்டு அரைஞ்சுருக்கான். வாயில் கொதிக்கும் உலோகத்தை ஊற்றி உயிரிழக்க வைத்தப் பிறகுதான் இப்படி தரையில் வைத்து அரைஞ்சுருக்கான்” என்று சாத்விக்கின் உடலைக் காட்டியபடி விவரித்தார்.

 

மேலும் கொலை நடந்த இடத்தினில் எடுக்கப்பட்ட புகைப்படங்களைக் காட்டியவர், “இந்த சாரி.. இதையும் கூட இறந்துபோன விக்டிமோட விரலால் தான் எழுதப்பட்டிருக்கு. இதுக்காக அவரோட விரலில் கூர்மையான ஏதோ ஒன்றைக் கொண்டு ஆழமா காயப்படுத்திருக்கான்.” என்று கூறி சாத்விக்கின் விரலினைக் காட்டினார்.

 

அனைத்தையும் தனது அழுத்தமான பார்வையோடு கண்டவன், “எனி அதர் எவிடென்ஸ்?” என்று கேட்க,

 

“இப்போதிக்கு வேற ஏதுமில்லை சார். ஸ்பாட்ல எடுத்த ரத்தம் கை ரேகை எல்லாம் இவர்கூடதான் மேட்ச் ஆகுது. கொலையாளியைச் சார்ந்த ஏதும் இப்பவரைக் கிடைக்கலை” என்று கூறினார்.

 

அவருக்கு நன்றி கூறி வெளியே வந்தவன் நேரே தனது காவல் நிலையத்திற்கு செல்ல, அவன் கேட்டுக்கொண்டபடி சந்தோஷ், ராம் என்ற இரு ஆண் காவலர்களும், திலகா என்ற ஒரு பெண் காவலரும் வந்து சேர்ந்தனர்.

 

அவர்களுடன் வழக்கைப் பற்றி சிறிது நேரம் ஆலோசித்தவன், வழக்கைப் பற்றிய அவர்களுடைய கண்ணோட்டத்தினையும் கேட்டுத் தெரிந்துக் கொண்டான்.

 

“சார்.. எனக்கு ஒரு கெஸ்” என்று திலகா கூற,

 

“எஸ் மிஸ் திலகா” என்றான்.

 

“அந்த கில்லர் கடந்த இரண்டு சம்பவத்திலும் வாய்ல உலோகத்தை உருக்கி ஊற்றியிருக்குறதைப் பார்த்தா தவறாக பேசுபவர்களுக்கு அப்படியான தண்டனையா குடுக்குறானோனு ஒரு எண்ணம்” என்று திலகா கூறவும்,

 

“இருக்கலாம் மிஸ் திலகா” என்ற ராம், “சார்.. அவன் உடலை ஆணி கொண்டு சுவரோட அரைஞ்சிருக்குறதை பார்க்கும்போது பைபில் பிராஸ்பரிடீஸ் ஏதும் ஃபாலோ பண்ணுவானோனு ஒரு கெஸ்” என்று கூற,

 

“புரியலையே ராம்?” என்று சிவன் புருவம் சுருக்கினான்.

 

“நம்ம அந்நியன் படத்துல தப்பு செய்பவர்களுக்கு கருட புராணம் வச்சு தண்டனைக் குடுக்குற போல அவன் ஏன் பைபில் ஃபாலோ பண்ண கூடாது? ஏசுவை சிலுவையில் அறைந்தாங்களே.. அதுமாதிரி விக்டிம்ஸ தரையோட சேர்த்து அறைவதாக இருக்கலாம்ல சார்?” என்று ராம் கேட்க,

 

“ஆனா பைபில்ல இப்படியான கொடூர தண்டனைகள் இல்லையே மிஸ்டர் ராம். பைபிள்ல மோஸ்ட்லி பாவ மன்னிப்பு தானே அதிகம்” என்று சந்தோஷ் கூறினார்.

 

“ஆமா சந்தோஷ் சார். ஆனா மேத்யூ என்ற பாதிரியாரின் வசனம்படி ஒருத்தர் பேசுற வார்த்தை மிக கவனமா இருக்கனும், அதேநேரம் அவர் பேசுற வார்த்தைகள் தவறா இருக்கும் பட்சத்தில் கண்டனம் செலுத்த வேணும்னு ஒரு வசனம் இருக்கு. அதுவுமில்லாம அவரோட கோட்பாடின்படி தவறா பேசுபவர்களுக்கு மரணத்தைத் தண்டனையா விதிக்கலாம்னும் சொல்லப்பட்டிருக்கு” என்று ராம் கூற,

 

“நல்லது. கொலை நடந்த இடத்தில் சந்தேகப்படும்படியா எதுவும் பார்த்தீங்களா?” என்று சிவன் கேட்டான்.

 

முற்றும் முழுதாய் அவனே கொலை நடந்த இடத்தை, ஒரு காவலனாகவும், ஒரு கொலையாளியாகவும் யோசித்து நோட்டம் விட்டு பார்த்துவிட்டான் தான். ஆனாலும் ஒருவர் பார்வை போல் மற்றவர் பார்வை இருப்பதில்லை என்பதை நம்புபவன். ஆகவே தனது பார்வைக்கும் தப்பிய ஏதேனும் அவர்கள் கண்களுக்கு சிக்கியிருக்குமோ என்று கேட்டான்.

 

மற்றவர்கள் சற்றே யோசித்தும் விசித்திரமாக ஏதுமில்லை என்று கூறிவிட, “ஓகே. திலகா நீங்க சந்தோஷ் கூட சேர்ந்து சாத்விக் நண்பர்களுடனிருந்து புறப்பட்டு எந்த பாதையில் பயணப்பட்டார்னு தெரிஞ்சு சீசிடீவி ஃபுட்டேஜ் கலெக்ட் பண்ணிட்டு வாங்க. நானும் ராமும் ஸ்பாட்டை சுற்றியுள்ள இடங்களில் விசாரிச்சுட்டு வரோம்” என்று கூறினான்.

 

அவன் சொல்படியே இருவராய் பிரிந்து சென்றவர்கள் அவர்களுக்கான பணிகளில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த சிவன் மற்றும் ராம் தடுப்புகயிற்றால் தடை செய்யப்பட்ட இடத்தினுள் நுழைந்தனர்.

 

சுற்றிமுற்றி அவ்விடத்தையும் சுற்றியுள்ள ரத்தக் கரையையும் பார்வையிட்டவன் கண்களை மூடி ஆழ்ந்து யோசித்தான். முந்தையதாக நடந்த தன்விஷாவின் கொலையையும் இதையும் செய்தது ஒரே ஆள் எனும் பட்சத்தில் கொலை எப்படி நடந்திருக்கக் கூடும் என்று யோசித்துப் பார்த்தான்.

 

இரவு வேளை, இருள் சூழ்ந்த வீதி. தெருமுனையில் ஒரு மின்கம்பம் என்று யோசித்தவன் கண்களைத் திறக்க, “சார்..” என்று ராம் அழைத்தான்.

 

சிவன் ராமை ஏறிட, “அந்த மின்கம்பம் கிட்ட போய் பார்ப்போம் சார். எதாவது க்ளூ கிடைக்கலாம். முதல் கொலையப்ப கொலையாளி மின்கம்பத்தின் அடியில் உட்கார்ந்திருந்ததா தானே தன்விஷா சொன்னதா ரிப்போர் பண்ணிருக்கு” என்று ராம் கூறினான்.

 

தன்னைவிட பெரும் பதவியில் இருப்பவன் தன் சொல்லுக்கு என்ன எதிர்வினை ஆற்றப்போறானோ? என்ற அச்சத்துடன் ராம் கூறியிருக்க, எவ்வித ஈகோவுமின்றி அவன் யோசனையை ஏற்று சிவன் செயல்பட்டான்.

 

கொலை நடந்த இடத்திலிருந்து அவர்கள் கம்பத்தை நோக்கிச் செல்ல, சாலையில் கடப்பாரையைத் தேய்த்துக் கொண்டே வந்ததன் அடையாலமாய் லேசான விரிசல் கோடுகள் தென்பட்டன.

 

அதனைப் பார்வையிட்டபடியே கம்பத்தின் அருகே இருவரும் வர, அங்கே வெகுநேரமாக கடப்பாரையை வைத்துத் தட்டியதன் அடையாளமாய் சிறிய பள்ளம் (ஓட்டை) தென்பட்டது!

 

அதைக் குனிந்து தொட்டுப் பார்த்தவன், “ரொம்ப நேரம் வெயிட் பண்ணிதான் போட்டிருப்பான் போல ராம்” என்று கூற,

 

“அப்ப அக்கம் பக்கத்துல யாரும் பார்த்திருக்க வாய்ப்பு உண்டா சார்?” என்று கேட்டான்.

 

“வாய்ப்பு குறைவு தான் ராம். இந்த அளவு பள்ளத்தை லேசான சத்தத்தோடு அவன் கடப்பாரையால உருவாக்கனும்னாலும் அரைமணி நேரமே தாராளம் தான். கொலை நடந்தது மேபி நைட்டு ஓன்றிலிருந்து இரண்டு மணிக்குள்ள இருக்கலாம்னு சர்வேஷ் சொல்றார். அதுபடி பார்த்தா இங்க சுற்றுவட்டாரத்தில் கடைகள் தான் அதிகம். வீடுகள் இல்லை. கடைகளும் பத்து மணிக்கு மேல் பூட்டிட்டுப் போகக்கூடிய கடைகள் தான். அந்த நேரம் சப்தம் கேட்டு டிஸ்டர்ப் ஆகவும் கூட ஆள் குறைவு” என்று சிவன் கூற,

 

ராமுக்கு அவனது யோசனையில் சற்றே ஆச்சரியமாகத்தான் இருந்தது.

 

“இருந்தாலும் விசாரிச்சுப் பார்ப்போம் ராம். எதுக்குமே பாதி பாதி வாய்ப்பு இருக்கும் தானே?” என்றான்.

 

இருவருமாய் அக்கம் பக்கம் உள்ள அனைவரிடமும் விசாரித்து, அங்கு கடைகளில் உள்ள கண்காணிப்பு காமிராக்களின் காணொளிகளைப் பெற்று வருவதற்கும், திலகா மற்றும் சந்தோஷ் சாத்விக்கின் நண்பர்களிடம் விசாரித்து அவன் எந்தெந்த வழிகளில் பயணித்திருக்கலாம் என்று ஆராய்ந்து கண்காணிப்புக் காமிராக்களின் காணொளிகளை பெற்று வருவதற்கும் இரவு பதினோரு மணியை நெருங்கியிருந்தது.

 

நேரம் இத்தனை விரைவில் பறந்துவிட்டது அவர்கள் நால்வருக்குமே ஆச்சரியமாக இருந்தாலும் நாள் முழுதும் அலைந்ததில் உடல் ஓய்வுக்கு வெகுவாகக் கெஞ்சியது!

 

“ஓகே கைஸ். நாளைக்கு மார்னிங் மீட் பண்ணுவோம். எல்லாரும் பத்திரமா போங்க” என்று கூறிய சிவன் சேகரித்த காணொளிகளை எடுத்துக் கொண்டு புறப்பட,

 

அவன் அலைபேசி ஒலித்தது.

 

அழைப்பை ஏற்றவன் “சொல்லு சுசி” என்க,

 

“நாங்க டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்தாச்சு” என்றாள்.

 

“வீட்டுக்குத்தான் வரேன்டா. பாத்துக்கோ அவளை” என்றவன் அடுத்த பத்தாவது நிமிடம் அவள் வீட்டை அடைந்தான்.

 

உள்ளே நுழைந்தவன், “போலீஸ் குவாட்டர்ஸ் கூட்டிட்டுப் போயிருக்கலாம்ல?” என்று கேட்க,

 

“அவளுக்கு அவளோட வீடுதான் கம்ஃபோர்டாம்” என்று ‘அவளோடு வீடுதான்’ என்பதில் ஒரு அழுத்தத்துடன் கூறினாள்.

 

அதில் ஒரு பெருமூச்சு விட்டவன் “என்னாச்சு அவளுக்கு?” என்று வினவ,

 

“இ..இறந்துபோன சாத்விக்..” என்று அவனைப் பார்த்து சுசி தடுமாறினாள்.

 

தனது சட்டையைக் கலைந்தபடியே தங்கையின் தடுமாற்றத்தை கண்டு புருவம் சுருக்கியவன், “ஆமா சாத்விக்.. அவனுக்கு என்ன?” என்று கேட்க,

 

“அ..அண்ணா.. இவந்தான்..” என்று சுசி கூற வரும்முன் அவனது அலைபேசி ஒலித்தது.

 

அழைத்திருப்பது டிசி மகாலிங்கம் என்பதைக் கண்டவன் ஏற்று அவருடன் பேசிவிட்டு வரவே இரவு பதினொன்றரை ஆகிவிட,

 

“அக்னி தூங்கிட்டாளா?” என்று கேட்டான்.

 

“அவ இன்னும் முழிச்சிருப்பாளா?” என்று சுசி கோபமாகக் கேட்டு கடிகாரத்தை நோக்க,

 

சிறு புன்னகையுடன் தங்கையின் கன்னம் பற்றியவன், “அண்ணனுக்கு இன்னிக்கு செம்ம அலைச்சல். இந்த சோஃபாவெல்லாம் அண்ணென் உயரத்துக்கு ஈடு குடுக்காது. அதனால நீ என்ன பண்ற.. இந்த சோஃபால படுக்குற” என்று கூறினான்.

 

அதில் அவனை விழி விரிய கண்டவள், “அப்ப நீ?” என்று கேட்க,

 

“நான் உள்ள என் ஸ்பார்கில்லோட படுத்துக்குறேன்” என்று நகர்ந்தான்.

 

அவன் கரத்தைப் பற்றி தடுத்தவள், “அவளுக்குத் தெரிஞ்சா என்னைக் கொன்னே போட்டுடுவா” என்று கூற,

 

“தெரிஞ்சா தானே? காலைல சீக்கிரம் எழுந்து கிளம்பிடுவேன். டோன்ட் வொரி” என்றான்.

 

“அண்ணா..” என்று சுசி தயங்கவும்,

 

அவள் தலைமேல் கரம் வைத்தவன், “சத்தியமா அவளை ஓன்னும் பண்ணிட மாட்டேன்டி” என்க,

 

“ச்ச ச்ச.. அண்ணா.. நான் அப்படி நினைப்பேனா உன்னை?” என்று கோபம் கொண்டவள், “போய் படு.. ஆனா அவ எழும்முன்ன எழுந்து கிளம்பிடு” என்றுவிட்டு சென்றாள்.

 

தன்னவள் அருகே படுத்துக் கொண்டவனுக்கு அவளது அந்த அருகாமை ஒன்றே போதுமானதாக இருந்தது! கண்களை மூடி அதை ஆழ்ந்து அனுபவித்தவன் அவள் கரத்தை பற்றிக் கொண்டே படுத்து உறங்கினான்.

 

தங்கை பாதியிலேயே விட்டதை அவனும் என்னவென்று கேட்டிருக்கவில்லை, சுசியும் கூறியிருக்க வில்லை. முதலிலேயே கூறியிருந்தால் சிலவற்றைத் தடுத்திருக்க இயலுமோ? விதி யாரைத்தான் விட்டது?!

-தொடரும்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
6
+1
21
+1
1
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்