பூ-02
அந்த அமைதியான வண்ணமயமான அறையில், மேஜையில் கரம் ஊன்றி அதில் முகம் புதைத்து அமர்ந்திருந்தாள் அக்னிகா. அவளுக்கு எதிர்புறம் உள்ள இருக்கையில் அவளது மன உணர்வுகளை அவதானித்தபடியே அமர்ந்திருந்தாள், அந்த மனநல மருந்தகத்தின் தலைமை மருத்துவச்சி, சுசித்ரா.
“அக்னி..” என்று சுசித்ரா மெல்ல அழைக்க,
அவளை நிமிர்ந்து பார்த்தவள் விழிகளில் அப்பட்டமான விரக்தியும் சோகமும்.
அதில் முதன்முறை தன்னிடம் வந்து சேர்ந்தபோது இருந்த அக்னிகாவின் விழிகளைக் கண்ட உணர்வில் திக்கென்று உணர்த்த சுசித்ரா, “என்னடா?” என்று மேலும் பரிவாய் அழைத்தாள்.
“உங்க அண்ணனை என்முன்ன வரவேணாம்னு சொல்லிவை சுசி” என்று அடித்தொன்டையிலிருந்து அவள் கத்தியது கூட, கதறலாகவும் கெஞ்சலாகவும் தான் வெளிவந்தது!
“என்னை ஸைகேட்ரிஸ்டுனு நினைச்சியா இல்லை கடவுள்னு நினைச்சியா நீ? அது அவனோட லவ்.. நான் எப்படி போய் ஆர்டர் போட முடியும்?” என்று நகைப்போடு அர்த்தமாக சுசி பேச,
அயர்ந்து போனவள், “முடியலை சுசி” என்றாள்.
“ச்சில் (chill) அக்னி.. ஏன் நீ இவ்வளவு பதட்டமாகுற?” என்று சுசித்ரா வினவ,
“தி.. தினம் என்னைப் பார்க்குறதுக்குனு அந்த ட்ரெயின்ல வராரு… நேத்து வீடு வரையும் வந்தாச்சு.. இதுல டெய்லி அந்தப் பேப்பர் ரோஸ் வேற” என்று கூறும்போதே அவள் முகத்தில் அப்படியெரு வெறுப்பு.
“உனக்கு ஏன் பேப்பர் ரேஸஸ்ல அப்படியொரு வெறுப்பு?” என்று சுசித்ரா தெரிந்துகொண்டே கேட்க,
ஆத்திரத்துடன் அவளை ஏறிட்டவள், “உனக்குத் தெரியாதா சுசி?” என்று கத்தியபடி மேஜையிலிருந்தவற்றை எல்லாம் கீழே தள்ளிவிட்டாள்.
இப்படியான பலரைக் கடந்து வந்திட்டதால் சுசிக்கு அவளது செயல்கள் பெரிதாய் எந்த அதிர்வையும் கொடுக்கவில்லை!
“எரிச்சலா வருது சுசி. உங்க அண்ணன் அ..அ..அந்தப் பேப்பர் ரோஸை நீட்டும்போது கன்னம் கன்னமா அறையனும் போலக் கோவமா வருது” என்று அக்னி கத்த,
“காம் டௌன் (calm down) அக்னி” என்று பொறுமையாய் பேசினாள்.
“எப்புட்ரி பொறுமையா இருக்கச் சொல்ற?” என்று கத்திய அக்னி அழுதபடி மேஜையில் தலை சாய்க்க,
அவள் தலையைப் பரிவாய் கோதியவள், “ரிலாக்ஸ்டாமா..” என்று கூறினாள்.
மனதில் முட்டி மோதிய நினைவுகளில் அவள் உடல் மெல்ல நடுங்கத் துவங்க,
“ஓ.. காட் (Oh god)” என்ற முனுமுனுப்போடு அவளுக்கான மயக்க ஊசியை எடுத்தவள் மெல்ல அவள் கரத்தினில் செலுத்தினாள்.
அவள் செயல் புரிந்தபோதும் ‘அப்படியே மயங்கியாவது சில நிமிடங்கள் இந்த நினைவுகளின் தொல்லையிலிருந்து தப்பிப்போமே’ என்ற எண்ணத்துடன் அக்னிகா அசராது அமர்ந்திருக்க, செவிலியர்களை வரச் செய்து அவளைப் படுக்கையில் கிடத்தினாள்.
அத்தனை நேரம் பக்கத்து அறையில் அமர்ந்தபடி தவிப்போடு தன்னவளின் தவிப்புகளைப் பார்த்துக் கொண்டிருந்த சிவப்ரியன் முன், சுசித்ரா வந்து நிற்க,
தங்கையை அணைத்துக் கொண்டு கண்களை இறுக மூடிக் கொண்டான் அவன்.
“அண்ணா..” என்று சுசி அவனுக்குத் தட்டிக் கொடுக்க,
“ரொம்ப படுத்துறேனா?” என்று கமரும் குரலில் கேட்டான்.
“அப்படினு அவ நினைச்சுக்குறா அண்ணா. நீ போற ரூட் தான் அவளுக்கும் உனக்கும் நல்லது. ஆனா ஒரு ரெண்டு நாள் அவளைப் பார்க்க போகாத அண்ணா. ரொம்ப நொந்துருக்கா” என்று சுசித்ரா கூற,
“அவளும் என்னை விரும்புறா சுசிமா” என்று கூறினான்.
“ஐ க்னோ அண்ணா. ஆனா அவ பாஸ்டுக்கும் பிரஸன்டுக்கும் இடையில அல்லாடுறா. ஷீ நீட் சம் மோர் டைம் (she need some more time)” என்று சுசித்ரா கூற,
“ம்ம்..” என்று கூறியபடி தங்கையிடமிருந்து விலகினான்.
“போய் பார்க்கனும்னா பார்த்துட்டு கிளம்பிப் போ” என்று சுசி கூற,
சிறு தலையசைப்போடு அவள் படுத்திருக்கும் அறைக்குள் சென்றான்.
அயர்ந்துபோய் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த அக்னிகாவின் அருகே அமர்ந்தவன், அவள் கரத்தினைப் பற்றிக் கொள்ள, அவனுள் சொல்லொண்ணா வலி ஒன்று ஊடுறுவியது!
“அக்னி..” என்று பெருமூச்சோடு அழைத்தவன் அவள் தலையை மிக பரிவாய் கோதி,
“உன் மனசுல இந்த கேள்வி இருந்தும் எங்க நான் சொல்லும் பதில் உன் கட்டுப்பாட்டை உடைச்சுடுமோனு பயந்துட்டு தான் நீ இப்படி இருக்கனு எனக்குத் தெரியுது..
ஒருமுறை நான் ஏன் பேப்பர் ரோஸ் தரேன்னு கேளுடி.. பிறகு புரியும்” என்று ஆழ்ந்த அமைதியான குரலில் கூறினான்.
“உன்னை எவ்ளோ விரும்புறேன்னு தெரியுது தானே உனக்கு? அப்பறம் ஏன்டி இப்படி பண்ற?” என்று கேட்டவன், “உனக்கும் என்னை பிடிக்கும்னு தெரியும்டி.. ப்ளீஸ் நடிச்சு நீயும் வருந்தி என்னையும் வருத்தாத” என்றான்.
மனதின் பாரம் மொத்தமும் திரட்டி அழுத்தமாய் அவள் நெற்றியில் இதழ் பதித்தவன் எழுந்து செல்ல, அவளது மயக்க நிலையையும் மீரி பீரிட்ட காதல் அவள் கண்களை உடைத்துக் கொண்டு கண்ணீராய் வெளி வந்தது!
அடுத்த இரண்டு நாட்கள் அவளைக் காண சிவப்ரியன் வரவில்லை! அது ஒருபக்கம் அவளை நிம்மதியடையச் செய்தது என்னவோ உண்மை தான் என்றாலும் கூட, அவன் பார்வை வட்டத்தில் கழித்த பயணங்களை மனம் அசைபோடவேச் செய்தது!
அவளுக்கு அவன் காதல் புரியவில்லையே என்று கூறுகின்றனர் அனைவரும்… ஆனால் அவன் காதலை தனக்குள் அணு அணுவாய் பருகிக் கொண்டிருப்பவளாயிற்றே அவள்? ஆனாலும் கூட அவனுடைய காதலை ஏற்று அவனோடு வாழ அவளுக்கு மனம் வரவில்லை. இது கைசேரா காதல் என்று அவள் மனம் மிக மிக ஆழமாய் நம்பிவிட்டதை யாராலும் மாற்ற இயலவில்லை…
ஒரு பெருமூச்சுடன் பொழுதைக் கழித்து வீடு திரும்பியவள் இரவு உணவைத் தயாரித்துக் கொண்டு தொலைகாட்சி முன் அமர்ந்தாள்.
கடந்த மாதம் நடந்த மர்ம கொலையைப் பற்றிய செய்தி இன்னமும் அத்தனை செய்தி தொகுப்புகளிலும் பேசு பொருளாக அதே சூட்டுடனே வலம் வருவதை ஒருவித ஆச்சரியத்துடன் கண்டவள், ‘அப்படி என்னதான் ஆச்சு அதுல? இவங்க ஏரியா தானே?’ என்று எண்ணியவாரு இணையத்தில் அதைப்பற்றித் தேடி, ஒரு காணொளியை உயிர்ப்பித்தாள்.
“கடந்த மாதம் ஆறாம் தேதி ஞாயிறு இரவு தன்விஷா எனும் பெண், தனது நண்பர்களுடன் படித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருக்க, வழியில் அவளது வண்டி பழுதடைந்து நின்றுவிட்டது. வீட்டின் அருகே வந்துவிட்டதால் யாரையும் அழைக்காது வண்டியை நகர்த்திக் கொண்டே சென்றவள், அதைத் தன் அன்னைக்குக் குறுஞ்செய்தியாகவும் அனுப்பியிருக்க, அவர் உறங்கி விட்டிருந்த காரணத்தால் குறுஞ்செய்தி பார்க்கப்படாமல் போனது!
மேலும் யாருமற்ற தார் சாலையில் தெருமுனையிலிருக்கும் மின் விளக்கின் கீழ் யாரோ தலையைத் தாங்கிக் கொண்டு அமர்ந்திருப்பதைப் போல் கண்டவள், உள்ளுக்குள் எழுந்த பயத்துடன் மெல்ல தன் அடிகளை எடுத்து வைத்திருக்க, அமர்ந்திருந்த உருவம் மெல்ல எழுந்து நின்றது!
அதில் மேலும் பயம் கொண்ட பெண் தன் அன்னைக்கு அழைக்க, அந்த உருவம் மெல்ல அவளை நோக்கி வந்தது. தன் முதுகுத் தண்டு சில்லிடுவதைக் கண்டவள், கையில் வைத்திருக்கும் ஏதோ ஓர் இரும்பு ஆயுதத்தை அவன் தரையோடு தேய்த்துக் கொண்டே வருவதன் சத்தம் கேட்கவும், வண்டியைப் போட்டுவிட்டு ஓடியபடி வீட்டிற்கு அழைக்க, அழைப்பு ஏற்கப்பட்டதும், தன்னை யாரோ துறத்துவதாகக் கூறி அழத் துவங்கினாள்.
அவளுக்கு தைரியம் கூறியபடியே அவளது தந்தை புறப்பட்டு வர, அவள் குறிப்பிட்ட இடத்தில், ரத்த வெள்ளத்தில் மிதந்தபடியே பெரிய கடப்பாரையை அவள் வயிற்றில் குத்தி சாலையோடு உடலை அறைந்து வைத்து, வாயில் கொதிக்கும் உலோதத்தை ஊற்றி கொடூரமாக கொலை செய்யப்பட்டிருந்த தன்விஷாவின் உடலும், அருகே சாலையில் அவள் ரத்தம் கொண்டு ‘sorry’ என்று எழுதப்பட்டதும் காணக்கிடைத்திருந்தது” என்று பேசிக் கொண்டிருந்த காணொளியை அப்படியே அணைத்து வைத்தாள்.
கேட்ட செய்தியிலும், காணொளியில் கண்ட ‘கிரைம் ஸ்பாட்’ என்ற ரத்தம் தோய்ந்த வீதியும் அவள் நெஞ்சுக்கூட்டை ஏற்றி இறக்க, மூச்சுக்கு வெகுவாகச் சிரமப்படுவதைப் போல் உணர்ந்தாள்.
அவள் வெகுவாகப் போராடிக் கொண்டிருந்த நேரம் பார்த்துப் பெரும் இடி சத்தத்துடன் மின்சாரம் துண்டிக்கப்பட, அவளது படபடப்பு இன்னுமின்னும் அதிகமானது. வீட்டில் தனித்து இருப்பதில் என்றுமே அவள் பயந்ததில்லை. தனிமை அவளுக்குப் பழக்கப்பட்ட ஒன்று தான் என்றாலும், வெளியே வீசும் காற்றும், மழைத் துளிகளின் வேகம் ஜன்னல் கதவுகளைத் தட்டுவதைப் போல் எழுப்பும் சப்தமும், சுற்றிலும் சூழ்ந்த இருட்டும், கண்ட காணொளியும் என அவளை மேலும் பதற வைத்தது!
பயத்தில் எச்சிலைக் கூட்டி விழுங்கியவள், வாய் வழியே மூச்சை இழுத்துவிட, கதவை யாரோ ஓங்கி தட்டியதைப் போன்று சப்தம் கேட்டு அவள் உடல் தூக்கிப் போட்டது! அது இடி சப்தம் என்பதை அவளால் அந்த நொடி உணர்ந்துக்கொள்ள இயலவில்லை…
காதுகளை இறுக மூடிக் கொண்டவள் அலைபேசியை நடுநடுங்கும் கரங்களுடன் எடுத்துப் பயத்தில் என்ன செய்வதென்றே புரியாத வெளிச்சத்தை முதலில் இயக்கினாள்.
யாரையேனும் அழைக்கலாமா என்று நினைத்தவள் மழையால் ஜன்னல் கதவுகளில் கேட்கும் சப்தத்தில் மேலும் பயம் கொள்ள, படபடப்புடன் சுசித்ராவுக்கு அழைத்தாள்.
நேரம் பிந்தி அழைக்கும் பழக்கமில்லாத அக்னிகா அழைக்கவும் சிறிதாய் பதட்டம் கொண்ட சுசித்ரா, அழைப்பை ஏற்று, “சொல்லு அக்னி..” என்க,
“சு..சுசி..” என்று மூச்சு வாங்க அழைத்தாள்.
“ஏ அக்னி.. என்னாச்சு?” என்று சுசித்ரா பதறி எழ,
“சு..சுசி.. க..கர்..” என்று அவள் பேசி முடிக்கும் முன் மின்சாரம் மீண்டும் இணைக்கப்பட்டது!
வியர்த்த முகத்தில் மின்விசிறியின் காற்றுப் படவும், வாயைத் திறந்து நன்கு மூச்சை இழுத்தவள் அப்படியே சோஃபாவில் சாய, “அக்னி.. அக்னி கேட்குதாடி..” என்று சுசி பதறினாள்.
அப்போதே வீட்டிற்குள் வந்த சிவப்ரியன் தங்கை பதட்டத்துடன் கத்துவதைக் கண்டு பயத்தோடு வர, “சிவாண்ணா.. அக்னி கால் பண்ணா.. ஏதோ மூச்சுக்குத் திணறுற போலப் பேசினா.. இப்ப ஏதும் பேச மாட்றா” என்று சுசி பதட்டமாய் கூறினாள்.
“சுசி..” என்று மெல்ல அக்னி அழைக்க,
“அக்னி..” என்று தானும் அழைத்தாள்.
“சா..சாரிடி.. ஐம் ஓகே நவ்.. கரென்ட் போயிடுச்சு.. கொஞ்சம் பயந்துட்டேன்” என்று மூச்சு வாங்கியபடி அக்னிகா கூற,
“பைத்தியக்காரி… பதற வைக்குறடி.. இரு நான் வரேன்” என்றவள் அவள் வேண்டாம் என்பதையெல்லாம் பொருட்படுத்தாது சிவப்ரியனையும் அழைத்துக் கொண்டு வந்து சேர்ந்தாள்.
மழையோடு மழையாக மகிழுந்தில் இருவரும் அவள் வீடு வந்திட, வாசலில் அழைப்பு மணியை அழுத்திவிட்டு இருவரும் காத்திருந்தனர்.
“கால் பண்ணு சுசி.. இன்னும் வந்து கதவைத் திறக்க மாட்றா” என்று சிவப்ரியன் பதட்டத்துடன் கூற,
சோர்வான முகத்துடன் வந்து அக்னிகா கதவைத் திறந்தாள்.
அவள் முகத்திலிருந்த சோர்வும், வியர்வையும் கண்டு பதட்டமடைந்த சிவப்ரியன் தங்கையை நோக்க, கண்களை மூடித் திறந்து அண்ணனை ஆசுவாசப்படுத்தியவள், அவளை தோளோடு அணைத்தபடி உள்ளே வர, பயத்தில் அவள் உண்டு கொண்டிருந்த உணவு, மேஜையில் அலங்காரத்திற்கு வைத்திருந்த பிளாஸ்டிக் பூந்தொட்டி என அனைத்தையும் அவள் கீழே தள்ளிவிட்டிருந்தது தெரிந்தது.
சிவப்ரியன் சென்று நீர் எடுத்து வர, அக்னிக்கு அதை புகட்டிய சுசி, “என்னாச்சு அக்னி?” என்று கேட்டாள்.
“சாரி சுசி..” என்று இரவு வேளை அவளை அழைய வைத்ததற்காக அவள் வருந்த,
“பல்ல உடைக்கப் போறேன். என்னனு சொல்லுடி” என்று சுசி கூறினாள்.
தான் காணொளியைப் பார்த்துக் கொண்டிருந்தது, அத்துடன் மின்சாரம் தடைபட்டது, மழை பெய்தது, ஜன்னல் மற்றும் கதவின் சப்தம் கேட்டது என அனைத்தையும் கூறியவள் உடலில் மெல்ல அந்த நடுக்கம் ஓடி மறைந்தது.
“லூசாடி உனக்கு? இப்பத்தான் கஷ்டப்பட்டு இருள் பயத்துலருந்து வெளிய வந்திருக்க. நைட் டைம் இப்ப நியூஸ் கேட்கலைனா தூக்கம் வராதா உனக்கு?” என்று சிவப்ரியன் கோபம் கொள்ள,
தன்மேல் பிழை இருப்பதால் மௌனமாய் தலை கவிழ்ந்தாள்.
அவனுக்குக் கண்கள் சிவந்தே போனது.. இன்னும் அவள் உடலில் மிஞ்சியிருந்த நடக்கமே இத்தனை பதட்டம் கொள்ள வைக்குமெனில், அவளும் பதட்டம் கொண்ட சமயத்தில் எப்படி தவித்திருப்பாளோ? என்று எண்ணியே அவனுக்கு நெஞ்சம் நடுங்கியது… காதல் ஒரு கம்பீரமான இரும்பனைக்கூட, தென்றல் மோதி பூ நோகுமே என்று சிந்திக்க வைத்திடும் போலும்!?
அவள் உடலின் நடுக்கம் அடங்கும் வரை, சுசி அவளுக்குத் தட்டிக் கொடுக்க, சிவப்ரியன் கீழே கொட்டியிருந்த உணவை சுத்தம் செய்து அவளுக்கு வேறு உணவை எடுத்து வந்தான்.
“சாப்பிடு அக்னி..” என்று அவன் அதை நீட்ட,
மறுப்பு ஏதும் கூறாமல் வாங்கி உண்டாள்.
உணவை முடித்துக் கொண்டு கைகழுவி வந்தவளுக்கு அவர்களை இந்த மழை நேரம் அனுப்பவும் சங்கோஜமாகத்தான் இருந்தது. அதேநேரம் ஒரே ஒரு படுக்கையறை மட்டுமே கொண்ட தன் வீட்டில் அவர்களுக்கு உறங்க எங்கு இடம் கொடுப்பது என்றும் யோசனையாக இருந்தது.
அப்போதே தான் இரவு சட்டையில் இருப்பதைக் கண்டவளுக்கு ஏனோ என்றுமில்லாத கூச்சம் வேறு வந்தது.
சமையலறையிலேயே நின்று கொண்டவள் பெருமூச்சு விட்டு தன்னை ஆசுவாசம் செய்ய, உள்ளே வந்த சிவப்ரியன், “அக்னி.. கிளம்புறேன்டா” என்றான்.
சட்டெனத் திரும்பியவள், “ப்ரியன்.. இருங்க..” என்க,
சுசித்ராவும் உள்ளே வந்தாள்.
தனக்குள் எழும் புதுமையான உணர்வுகளை சமாளிக்கத் தெரியாது, சிரம் தாழ்த்தியவள், “நா.. நான் ஹால் சோஃபால படுத்துக்குறேன். நீங்க ரூம்ல படுத்துக்கோங்க. மழை பெய்யுது. காலைல போய்க்கலாம்” என்று கூற,
“நான் இங்கதான் இருக்கப்போறேன் அக்னி. சிவாண்ணா தான் கிளம்புறான்” என்று சுசித்ரா கூறினாள்.
‘இந்த நேரம் கிளம்பனுமா?’ என்று அக்கறையோடு கேட்கத் துடித்த வார்த்தைகளைத் தனக்குள்ளேயே அடக்கிக் கொண்டவள், “ம்ம்..” என தலையசைக்க,
சிவப்ரியன் புறப்பட்டு வாசலுக்குச் சென்றான்.
தானும் வாசல் வரை சென்றவள் கதவின் அருகே நின்றுகொண்டு அவனை நோக்க,
“மழைல நனையாம போய் தூங்கு ஒழுங்கா” என்றான்.
மழையில் நனையும் ஆசையெல்லாம் எப்போதோ மடிந்து போனவை என்று அவள் மனதோடு நினைத்துக் கொள்ள, “விரக்தியா யோசிச்சு முடிச்சுட்டியா?” என்று கேட்டான்.
அவள் அவனைக் கண்டு “ப்ச்..” என்க,
தன் தங்கை உள்ளே சென்றுவிட்டதை எட்டிப் பார்த்து உறுதி செய்துக் கொண்டவன், அவள் எதிர்ப்பார்க்காத விதமாய் அவளை இறுக அணைத்துக் கொண்டான்.
பெண்ணவள் அதில் பதறிப் போக, அவள் முதுகில் லேசாய் தட்டிக் கொடுத்தவன், “போய் தூங்குடாமா.. ஒன்னுமில்ல.. எதுவும் யோசிக்காத. எல்லாமே சரியாப்போகும். நான் இருக்கேன்” என்று சென்றுவிட்டான்.
அப்படியே அதிர்ந்து நின்றவள் மனம் மத்தளம் இசைக்க, சுசி அழைத்ததன் பெயரில் உள்ளே சென்றாள். அரை விநாடிக்கும் குறைவான நேரமாக இருந்தாலும் அவ்வணைப்பில் அவள் உணர்ந்த கதகதப்பும் பாதுகாப்பும், அவள் மனதில் ‘கைசேரா காதல்’ என்ற எண்ணத்தை லேசாய் ஆட்டிப் பார்த்தது!
-தொடரும்…
அக்னி யாரும் இல்லையா?.