Loading

பூ-28

 

“ப்ச்.. சொதப்பிடாத சுசிமா.. அவளுக்குச் சந்தேகம் வராத வகைல கூட்டிட்டு வா..” என்று சிவப்ரியன் கூற,

 

“அண்ணா.. சத்தியமா சொல்றேன்.. உன்னோட முடியலை. எத்தனை முறைதான் சொல்லுவ? அவ்ளோ சந்தேகம்னா நீயே கூட்டிட்டு வர வேண்டியதுதான?” என்று சுசித்ரா கத்தினாள்.

 

தன் தங்கையே கத்துமளவு கடுப்பேற்றி விட்டோம் என்று புரிந்து அசடு வழிந்தவன், “சுசிமா.. சுசி தங்கம்..” என்க, 

 

“ஐஸ் வைகாகாத அண்ணா..” என்று மிரட்டியவளுக்குமே சிரிப்பு வந்ததது.

 

அலைபேசி உபயத்தால் அதை மறைத்துக் கொண்டவள், “கரெக்டா கூட்டிட்டு வந்துடுவேன் வை” என்று கூற,

 

“ஓகேடா” என்று கூறி அழைப்பைத் துண்டித்தவன், மீண்டும் அறையைத் தயார் செய்வதில் குறியானான்.

 

ஆம்! அன்று அக்னிகாவின் பிறந்தாள்.

 

அக்னிகா எப்போதும் தன் பிறந்தநாளை அத்தனை விமர்சியாகவெல்லாம் வரவேற்க மாட்டாள். பிறந்ததையே வெறுப்பவள் இல்லை அவள்… எனினும் கூட அந்த நாள், தன் குடும்பம், உடன் பிறந்தோர் என்று விமர்சியாகக் கொண்டாடிவந்த நினைவின் பாரம் அவளை அவ்வாறு கடந்துசெல்ல வைத்தது.

 

ஆனால் இம்முறை சிவப்ரியன் அப்படி அவளைக் கடக்கவிடத் தயாராக இல்லை.. அந்தப் பிறந்தநாளை, அவள் வாழ்வு முழுமைக்கும் அவள் மறக்கவே முடியாதபடியாக மாற்ற ஆசைக் கொண்டு, அதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தான்.

 

அங்குக் கல்லூரி முடித்து வெளியே வந்த அக்னிகா முன் எதிர்ப்பட்ட மஹதி, “அக்னிமா.. ஹாப்பி பர்த்டே” என்று அணைத்துக் கொள்ள,

 

மெல்லிய புன்னகையுடன், “தேங்ஸ்டா” என்றாள்.

 

“அப்றம் கேர்ள்.. என்ன ப்ளான்?” என்று மஹதி கேட்க,

 

“என்ன என்ன ப்ளான்? வா ஷாப்கு போவோம்” என்று கூறினாள்.

 

“ஹாய் காய்ஸ்” என்றபடி அவர்கள் முன் வந்த சுசித்ராவைப் பார்த்து, “ஹே சுசி.. நீ என்ன இங்க?” என்று பெண்கள் இருவரும் கேட்டனர்.

 

“இந்தப் பக்கமா ஒரு கிளைன்ட் பார்க்க வந்தேன்.‌ இப்ப இவளுக்கும் காலேஜ் முடிஞ்சுருக்கும்ல? செம்ம பசி.. அதான் இவளையும் இழுத்துட்டுப் போய்ச் சாப்பிடலாமேனு வந்தேன்.. நீ என்ன இங்க?” என்று சுசித்ரா மஹதியிடம் கேட்க,

 

“சுசி… இன்னிக்கு அக்னி பிறந்தநாள்” என்று மஹதி கூறினாள்.

 

உண்மையிலேயே மறந்துவிட்டவளைப் போல் அதிர்ச்சி பாவம் காட்டிய சுசித்ரா, “ஏய் அக்னி..‌இன்னிக்கா? சாரி சாரிடாமா. நிஜமாவே நினைவில்லைடா. சாரி அக்னி” என்று மிகுந்த வருத்தத்தோடு கூற,

 

“சுசி.. ஜஸ்ட் காம் டௌன். இந்த நாளை நான் பெருசா எடுத்துக்க மாட்டேன்னு உனக்கே தெரியும்” என்று அக்னி அலட்டிக் கொள்ளாமல் கூறினாள்.

 

ஒரு பெருமூச்சு விட்ட சுசி, “சரி சரி விடு.. போய் சாப்பிடலாமா? ரொம்ப பசிக்குது” என்று கூற,

 

“எனக்கும் பசிக்குதுபா. வாங்க போகலாம்” என்று மஹதி கூறினாள்.

 

சரியென்று அக்னியும் தலையசைக்க, இருவரையும் தனது மகிழுந்தில் ஏற்றிக் கொண்டு புறப்பட்டாள்.

 

சுசி மஹதிக்கு கண் காட்ட, மஹதியும் அக்னியின் கவனத்தை சாலையில் பதியவிடாதபடி தனது அலைபேசியில் உள்ள புகைப்படங்களையெல்லாம் காட்டி பேசிக் கொண்டிருந்தாள்.

 

பயணம் நீள்வதையெல்லாம் உணராமல் மஹதியுடன் பேசிக் கெண்டிருந்த அக்னிகா, வண்டி நின்றதும் திரும்பிப் பார்க்க, அது சுசித்ரா வீட்டில் நின்றிருந்தது.

 

“ஏ என்னடி வீட்டுக்கே வந்துட்ட?” என்று அக்னி கேட்க,

 

“ஆமா.. வீட்லதான் சாப்பிடலாம்னு சொன்னேன்” என்று கூறியபடி சுசித்ரா இறங்கினாள்.

 

“என்ன சொல்றா இவ?” என்று அக்னி கேட்க,

 

“எனக்கும் புரியலை.. எதுக்கு வீட்டுக்கு வந்துருக்கா?” என்றபடி மஹதியும் இறங்கிச் சென்றாள்.

 

இருவரையும் சந்தேகமாய் பார்த்தபடி அக்னியும் வீட்டிற்குள் நுழைய, இருள் படிந்து கிடந்த அறையில் எங்கும் வெளிச்சம் படர்ந்து, காகித வெடிகள் வெடிக்கப்பட்டது.

 

அதன் சப்தத்தில் லேசாய் திடுக்கிட்டு திரும்பிய அக்னி, புன்னகை முகமாய் நின்றிருக்கும் சிவப்ரியனைப் பார்த்தாள்.

 

அவள் பின்னோடு வந்து நின்று, “சர்பிரைஸ்” என்று தோழிகள் கூவ,

 

அவர்களைத் திரும்பிப் பார்த்துவிட்டு, தன்னவனைப் பார்த்தாள்.

 

இரண்டு புருவங்களையும் ஒவ்வொன்றாய் ஏற்றி இறக்கி, அவன் புன்னகைக்க, அதில் எட்டிப் பார்க்கத் துடித்த புன்னகையை அடக்கியபடி சுற்றிலும் தன் பார்வையை சுழல விட்டாள்.

 

அப்போதே அவளது தோழிகளும் அங்கிருந்த அலங்காரத்தைக் கண்டு, சிவப்ரியனை அதிர்வோடு திடுக்கிட்டுப் பார்த்தனர்.

 

நொடியில் சுசித்ராவிற்குள் ஒரு பதட்டம் சூழ, ‘என்ன பண்ணி வச்சிருக்கான் இந்த அண்ணா?’ என்று மனதோடு பதைபதைத்தபடி அக்னியை நோக்கினாள்.

 

அவர்களது பதற்றத்திற்கான காரணம், அவ்வறையெங்கும் காகித மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருப்பதே!

 

மஹதி பதட்டமாய் அக்னியைப் பார்ப்பதும் அலங்காரத்தைப் பார்ப்பதுமாய் இருக்க, 

 

நிதானமான அடிகளோடு, தானே செய்த, காகித மலர்களால் ஆன பூங்கொத்தை, கையில் லாவகமாய் ஏந்திக் கொண்டு, அக்னியை நெருங்கிய சிவப்ரியன், “பிறந்தாள் வாழ்த்துக்கள் ஸ்பார்கில்” என்று கூறினான்.

 

பளிச்சென்று மின்னிய கண்களில், அவனது வசீகரப் புன்னகையின் பேரொளி!

 

தோழிகள் ஒருவரை ஒருவர் பதட்டமாய் பார்த்துக் கொண்டு, அவர்களை நோக்க,

 

மிக மெல்லமாய், தன் இதழ் பூட்டுக்கு விடுதலை கொடுத்து, புன்னகைத்த அக்னிகா, அவன் நீட்டிய பூங்கொத்தை தன் கரங்களில் பெற்றுக் கொண்டு, “நன்றி ப்ரியன்” என்றாள்.

 

சுசித்ராவும் மஹதியும் மிகுந்த அதிர்வோடு அவர்களை நோக்க, 

 

“சர்பிரைஸ் எப்டி?” என்று ப்ரியன் அக்னியைப் பார்த்துக் கேட்டான்.

 

அதில் அழகாய் புன்னகைத்தவள், “உங்க ரூம் டெகரேஷன் போல, ரொம்ப அழகா இருக்கு” என்று கூற,

 

தோழிகளுக்கு மயக்கம் வராதது தான் குறை என்றானது…

 

“என்னங்கடா நடக்குது இங்க?” என்று மஹதி கேட்க,

 

காதலர்கள் இருவரும் அவர்களைத் திரும்பிப் பார்த்தனர்.

 

கலுக்கென்று சிரித்த அக்னி, “சர்பிரைஸ் இப்ப எனக்கு மட்டுமில்ல போல ப்ரியன்” என்று கூற,

 

தோழிகள் அவளை செல்லமாய் முறைத்தனர்.

 

அக்னியின் இடைப்பற்றி, அவளைத் தன்னோடு இழுத்துக் கொண்ட சிவப்ரியன், தங்கைகளைப் பார்த்து, “நான் தான் சொன்னேனே.. அந்த பூ மீதான அவளோட அபிப்ராயத்தை நிச்சயம் என் காதல் மாற்றும்னு..” என்று கூறி, அதிர்வாய் விழிக்கும் அக்னியைப் பார்த்து கண்ணடித்தான்.

 

நாணம் கொடுத்த அதிர்வோடு அவனைப் பார்த்துக் கொண்டிருந்த அக்னி, “ப்ரியன்..” என்று மிக மிக மெல்லமாய், சிணுங்கலாய் அழைக்க,

 

அதில் புன்னதைத்தபடி அவளை விடுத்தவன், குறும்பு புன்னகையோடு நிற்கும் தங்கைகளைப் பார்த்து, கண்கள் சுருக்கி, “கேக் கட் பண்ண போலாமா?” என்றான்.

 

“ம்ம்.. நாங்க அதுக்குத்தான் வந்தோம் அண்ணய்யா.. நீங்கதான் மோட் மாறிட்டீங்க” என்று சுசித்ரா கூற,

 

“சுசி..” என்று மிரட்டல் போல் அழைக்க முயன்ற அவன் குரலும் குழைந்து போனது..

 

அதில் பெரும் சிரிப்பலை ஒன்று பரவ, அந்த சிரிப்பின் இனிமையோடு அணிச்சல் வெட்ட அனைவரும் மேஜைக்கு அருகே சென்றனர்.

 

அழகிய அணிச்சல், அவர்கள் முன் காட்சிப்படுத்தப்பட, அருகே பூ வடிவில் இருந்த மெழுகுவர்த்தியை வைத்து, தீக்குச்சியை அவளிடம் கொடுத்தான்.

 

“வெளிச்சத்தைக் கொண்டு வந்து கொண்டாடுவோம்” என்று அவன் கூற,

 

புன்னகையை வெளிச்சமாக்கி, அதனை மெழுகுவர்த்திக்கும் பங்கிட்டாள், அக்னிகா.

 

“ஹே…” என்று மஹதியும் சுசியும் உற்சாகமாய் கைதட்ட,

 

அணிச்சலை வெட்டியவள், முன் மூவரும் ஆர்வமான முகத்துடன் நின்றனர். யாருக்கு அந்த முதல் துண்டு? என்ற ஆர்வம் அவர்கள் முகத்தில்…

 

மூவரையும் குழப்பத்துடன் பார்த்தவள், அந்த முதல் துண்டை தானே உண்டு மகிழ்ந்தாள்.

 

அதில் சிவப்ரியன் பக்கென்று சிரித்திட, “விவரம் தான்டி நீ” என்று மஹதி கூறினாள்.

 

“சரி அப்ப செகேன்ட் பீஸ் யாருக்கு?” என்று சுசி கேட்க,

 

“இப்படிலாம் இடக்கா கேள்வி கேட்டா முழு கேக்கையும் நானே சாப்டுடுவேன்” என்ற அக்னி, ஒரு துண்டு கேக்கை இரண்டாய் வெட்டி, அவளுக்கும் மஹதிக்கும் ஊட்டிவிட்டாள்.

 

சிவப்ரியன் இதழ் பிதுக்கி பாவம் போல் அவர்களை நோக்க,

 

தோழிகள் இருவரும் சிரித்தபடி அக்னியை அணைத்துக் கொண்டு, “எங்களுக்கு அப்றம் தான் உனக்கு” என்று கேலி செய்தனர்.

 

“பரவால்ல.. என் ஸ்பார்கில் எங்கெல்லாம் சந்தோஷமா இருக்காளோ அங்கெல்லாம் இருக்கட்டும்.. அதுலயும் எனக்கு சந்தோஷம் தான்” என்று மனமாரக் கூறியவனைத்தான் இன்னும் இன்னும் காதலிக்கத்தூண்டியது, அவள் மனம்.

 

“சரி கேக் கட்டிங் மட்டும் தானா? கிஃப்டெல்லாம் இல்லையா?” என்று அக்னி விளையாட்டு போல் கேட்க,

 

“ஏன் இல்லாம?” என்ற தோழிகள் சென்று அவளுக்கான பரிசோடு வந்தனர்.

 

மஹதி, அவளுக்காக ஒரு வயலின் பரிசாக வாங்கி வந்திருந்தாள்.

 

அதனைப் பிரித்துப் பார்த்து மிகுந்த உற்சாகமடைந்த அக்னி, “ஹே மஹிமா.. சூப்பரா இருக்கு” என்று அத்தனை சந்தோஷத்தோடு கூற,

 

“மஹி நிஜமா நல்ல சாய்ஸ் ஃபார் கிஃப்ட் டா” என்று பாராட்டிய சுசி, “கமான் அக்னி.. எதாவது பாட்டு வாசி” என்று கூறினாள்.

 

“வாசிப்போடு சேர்ந்து பாடினா இன்னும் நல்லாருக்கும்” என்று சிவப்ரியன் கூற,

 

அவனை விழிகள் மட்டும் உயர்த்திப் பார்த்து, புன்னகைத்தவள், “என்ன பாட்டு வேணும்?” என்று கேட்டாள்.

 

“பாருடா? கிஃப்ட் குடுத்தது நான்.. பாட்டு சாய்ஸ் மட்டும் அங்கயா?” என்று மஹதி கேட்க,

 

சுசி கலகலவென்று சிரித்து, “போனா போதுனு நமக்கு கேக் ஊட்டினதே பெருசு.. விடுடி” என்று கேலியில் இறங்கினாள்.

 

“நிலா காய்கிறது..” என்று சிவப்ரியன் கூற,

 

“டேய் அண்ணா?!” என்று தங்கைகள் பதறினர்.

 

“ஏய் ஏய்.. அவர் நிலா காய்கிறது நேரம் தேய்கிறது பாட்டு சொல்றாங்க” என்று அக்னி தோழிகளை அமைதி படுத்த,

 

“ஒரு நிமிஷம் பதறிட்டோம்” என்ற தங்கைகளைப் பார்த்து கலகலவென்று சிரித்தவன், “அதெல்லாம் நான் தனியா கேட்டுப்பேன் சிஸ்டர்ஸ்” என்றான்.

 

அவன் பேச்சில் நாணமும் கோபமும் கொண்டு முறைத்தவள், “ஓகே நான் வாசிக்குறேன்” என்று கூறி, முதலில் வாத்தியத்தில் அப்பாடலை இசைத்தாள்.

 

அந்த இசையிலேயே மூவரும் மெய்மறந்து போயினர்.

 

‘நிலா காய்கிறது…

நேரம் தேய்கிறது…

யாரும் ரசிக்கவில்லையே…

இந்த கண்கள் மட்டும் உன்னை காணும்…

தென்றல் போகின்றது…

சோலை சிரிக்கின்றது…

யாரும் சுகிக்கவில்லையே…

சின்ன கைகள் மட்டும் உன்னை தீண்டும்…

காற்று வீசும் வெய்யில் காயும் காயும்…

அதில் மாற்றம் ஏதும் இல்லையே…

ஆஆ… வானும் மண்ணும் நம்மை வாழ சொல்லும்…

அந்த வாழ்த்து ஓயவில்லை என்றென்றும் வானில்…’ என்று பெண் குரலில் பாடியவள், மீண்டும் வயலின் இசைத்து விட்டு, அதே வரிகளை ஆண் குரலில் பாடினாள்.

அவள் பாடி முடித்து நிமிரவே, மூவரும் அத்தனை அத்தனை சந்தோஷத்துடன் அவளுக்குக் கை தட்டினர்.

தனக்காக கைதட்டி, தன்னை சந்தோஷப்படுத்தும் உறவுகள் இருக்கும் வரையிலும், தனக்கு என்ன கவலை? என்று மனமார புன்னகைத்தவள், “தேங்ஸ்” என்க,

சுசித்ரா தனது பரிசை நீட்டினாள்.

அதில் இசை ஆசிரியர் பயிற்சி படிப்பிற்கான, சேர்க்கை படிவம் இருந்தது.

 

 

இது முன்பே அக்னி படிக்க நினைத்தது தான். ஆனால் தனக்கென்று வாடகைக்கு வீடு தேடி அவள் அலைந்த போதே, திருநங்கை என்பதால் வீடு கிடைக்காமல் போனதில், பயிற்சி வகுப்பு வைத்தால் மட்டும் யார் நம்பி சேரப்போகின்றனர்? என்ற எண்ணம் தோன்றியிருந்தது. அதனால் அப்போதே அதை ஒத்தி வைத்திருந்தாள்.

 

அவள் எண்ணம் அறிந்திருந்த சுசித்ரா, தற்போது தானே அதனை உடைக்கும் யுக்தியாய், தன் பரிசைக் கொடுத்து, “உன் பிறந்தநாளுக்கு நான் கொடுக்கும் பரிசு.. மனசார ஏத்துப்பனு நம்புறேன்” என்று கூற,

கண்கள் லேசாய் கலங்கி, இதழ் புன்னகைக்க, “கண்டிப்பா வாங்கிப்பேன்” என்று அவளை அணைத்துக் கொண்டாள்.

சந்தோஷத்துடன் அவளுக்குத் தட்டிக் கொடுத்த சுசி, தன்னவளை மனம் நிறைந்த, அமைதியான புன்னகையுடன் ரசித்துக் கொண்டிருக்கும் தன் அண்ணனைப் பார்த்து, குரல் செறுமி, “அண்ணய்யா கிஃப்ட் என்னவோ?” என்று கேட்டாள்.

கண்களில் ஒருவித எதிர்ப்பார்ப்போடு அக்னிகா சிவப்ரியனைப் பார்க்க, 

அமைதியாய் புன்னகை பூத்த சிவப்ரியன், ஓரடி பின்னே நகர்ந்து, ஒற்றைக் கால் மடக்கி, மண்டியிட்டு அமர்ந்தான்.

தனது சட்டைப் பையிலிருத்து, ஒரு மோதிரத்தை எடுத்தவன், விழிகள் விரிய தன்னைப் பார்க்கும் அக்னிகாவின் விழிகளுக்குள், தன் விழிகளைக் கலக்கவிட்டான்.

“உன் வாழ்க்கைல, உன்னை உயர்த்தும் ஒரு ஊக்கமா, உனக்கு சந்தோஷத்தை மட்டுமே கொடுக்கும் ஒரு காதலா, உனக்குத் தைரியத்தைக் கொடுக்கும் ஒரு துணையா, நீ துவண்டா தாங்கிக்குற ஒரு தோளா நான் இருக்குறதுக்கான அங்கீகாரத்தை எனக்குத் தருவியா அக்னி? உன் கூடவே, உனக்காக சந்தோஷப்பட்டு, உன்னால சந்தோஷம் அடைஞ்சு, உனக்கும் அதை ஆயிரமா கொடுக்கும் உறவா இருக்க ஆசைப்படுறேன்.. அதை எனக்குத் தருவியா? உன்னவனா என்னையே உனக்குக் கொடுப்பதைத் தவிர வேற என்ன பரிசு குடுக்கனு எனக்கும் தெரியலைடி ஸ்பார்கில்.. வில் யூ மேரி மீ?” என்று அடிமன வார்த்தைகளுக்கு, காதலினெனும் மணம் பூசி, நறுமணம் மிக்க வார்த்தைகளாக்கி, அவள் செவியால் நுகர்ச்செய்தான், சிவப்ரியன்.

செவி நுகர்ந்த வித்தையில், அக்னியின் மனம், பனி கொண்டு போர்த்தப்பட்டதாய் தனிந்து, அதன் ஆவி கண்களில் அடைக்கலம் புகுந்து, தனிந்து, நீராகி, கண்ணீராகப் பெருகி, கன்னத்தில் பாதையமைத்து, கழுத்தில் சரன் புகுந்து, எம்பி குதித்து, சில்லென்று தரையிலிருந்து அவள் பாத விரல்களுக்கு நடுவில், சரண் புகுந்து முக்தி பெற்றது…

மோட்சம் பெற்ற ஒவ்வொரு துளி கண்ணீரும், அவன் கேள்விக்கான பதிலாய், அவன் கண்களில் ஒளி கூட்டியது.

மண்டியிட்டிருந்தவன், மெல்ல எழுந்து, அவள் கரம்பற்றி, மோதிரத்தை அணிவிக்க, பாவை விழி தாழ்த்தி, அதனைக் கண்டாள்.

இருவரின் கருவிழி ரேகைகளை, ஒன்றிணைத்து, அதனை இதயவடிவ கல்லில் பதித்து, கம்பிகளை வளைத்து உருவாக்கிய மோதிரத்தில், பதித்திருந்தான். 

பாவை மெல்ல அதனை வருட, 

“நானே செஞ்சேன்..” என்றான், ஆழ்ந்த குரலில்.

விழுக்கென்று அவனை நிமிர்ந்து பார்த்தவள், தொண்டைக்குழியில் முட்டி மோதும் வார்த்தைகளை உதிர்க்க இயலாமல் தவித்தாள்.

“உன் ப்ரியனுக்கு புரியும்டி..” என்று அவன் கூற,

“ப்ரியன்” என்ற கேவலோடு, அவனை கழுத்தோடு கட்டிக் கொண்டவள், விக்கி அழுதபடி, “ரொம்ப பிடிக்குது..” என்றாள்.

மஹதிக்கும் சுசுத்ராவிற்கும் கண்களில் கண்ணீர் பொழிந்தது. தோழியானவள் சந்தோஷத்தில் சந்தோஷம் கொள்ளும் தூய உயிர்களின், தூய்மை மிகுந்த கண்ணீர் துளிகளும் கூட, ஆனந்த கீதம் இசைத்து, அவர்களை உவகைக் கொள்ள வைத்தது.

“சண்டை போடுவேன் அப்ப அப்ப” என்று அக்னி கூற,

“சமாதானம் செய்வேன்.. எப்பவும்” என்றான்.

“அழுவேன்” என்று அவள் கூற,

“சிரிக்க வைப்பேன்” என்றான்.

“நிறையா காதலிப்பேன்.. உங்களை சந்தோஷமா வச்சுப்பேன்” என்று அவள் கூற,

“உன் அன்போட காலடியில அடிமையா காலம்பூரம் இருப்பேன்..” என்று அவள் முகம் தாங்கிக் கூறியவன், “உன்னவனா.. உனக்கானவனா” என்று கூறினான்.

அவன் விரும்பியபடி, “அப்பக் கல்யாணம் பண்ணிக்கோங்க” என்று அவள் கூற,

பொழியும் அவள் விழிநீர் பார்த்து, “என்கூட சந்தோசமா இருப்பியா?” என்றான்.

“இல்லைனு பொய் சொல்லுற அளவு அது சின்ன பொய்யா இருக்காதே” என்றவள், “நீங்க சந்தோஷமா இருப்பீங்களா?” என்று தடுமாற்றமாய் கேட்க,

“இல்லைனு சொல்லும் அபத்தம் எனக்கும் வேண்டாமே” என்றான்.

இருவரும் கண்ணீரோடு அணைத்துக் கொள்ள,

ஒருவரை ஒருவர் பார்த்து, தங்கள் கண்ணீரை துடைத்துக் கொண்ட மஹதி மற்றும் சுசியும், அவர்களை அணைத்துக் கொண்டான்.

தங்கள் சுகந்தமான நிலையில், இன்னும் இனிமை சேர்க்கும் அவர்களின் அன்பையும், ஆராதித்து அரவணைத்துக் கொண்டவர்கள், அத்தனை அதீதங்களையும், அலைகடலாய் கடக்கும் காதலைத் தாங்கி, தம்பதியராய் தங்கள் அடிவைத்திடும் முடிவோடு நுழைந்தனர் அவ்வாழ்வில்… பார்வையாளர் வரிசையில், நிறைவோடு அமர்ந்து, அவர்களை மகிழ்வோடு வாழ்த்தியது, அவர்கள் காதல்… அக்காதலோடு இணைந்து, அவர்கள் நலம்பெற வாழ்த்தி, நாமும் விடை பெறுவோம், காதலாய்…

 எபிலாக்: 

“ஸ்பார்கில்.. சீக்கிரம்டா.. லேட் ஆகுது பார்..” என்று சிவப்ரியன் கூற,

“ஆங் ஆங்.. ரெடியாகிட்டேங்க” என்றபடி, அழகிய ஆரஞ்சு வண்ணத்தில், பளீர் இளஞ்சிவப்பு கறைவைத்த புடவையில் தயாராகி அவ்விடம் வந்தாள், அக்னிகா.

அழகாய் பந்துபோல் சுருண்டிருந்த கொண்டையில், கெட்டியாய் தொடுக்கப்பட்டதைப்போல் அமைக்கப்பெற்ற, நெகிழியால் ஆன மல்லிப்பூ சரமும், பெரிய வட்ட பொட்டும், காதில் பெரிய குடை ஜிமிக்கியும், கழுத்தில் மெல்லிய தங்கத்தால் ஆன, தாலி சங்கிலியும், கைகளில் கவகலவென்று சப்தமிக்கும் இளஞ்சவிப்பு நிற கண்ணாடி வளைகளும், புடவைத் தழுவிய உடலின் நெழிவுகளும் என்று, அத்தனை அம்சமாய் இருந்தாள், அக்னிகா.

“அம்மா ரொம்ப அழகாருக்கீங்க.. உம்மா” என்று பறக்கும் முத்தங்களை அள்ளித் தெளித்தாள், அவர்களின் ஆசை மகள், ருத்ரதேவி.

“தேங்ஸ்டி பட்டு” என்று மகளுக்கு முத்தம் கொஞ்சிய அக்னிகா,

திரும்பி தன்னவனைப் பார்க்க, அவளை அத்தனை ரசனையோடு பார்த்தவன், “பட்டுதங்கம்.. நீங்க போய் அத்தை மாமா ரெடியானு பார்த்துட்டு வர்றீங்களா?” என்று கேட்டான்.

“நீங்க அம்மாவை கட்டிப்பிடிக்கனும். அதுக்கு நான் வெளிய போனும். அதானே அப்பா.. விடுங்க விடுங்க.. ஐ டோன்ட் மைன்ட்” என்று பெரிய மனுஷியைப் போல் கைகளை ஆட்டிப் பேசிய அந்த ஆறுவயது சிட்டு, வெளியே செல்லவும், 

செல்லும் மகளை, வாயில் கைவைத்தபடி ஆச்சரியமாய் பார்த்து நின்றாள், அக்னிகா.

மகள் பேச்சில் வாய்விட்டு சிரித்த சிவப்ரியன், மனையாளை அணைத்துக் கொள்ள,

“இந்த வயசுல என்ன பேச்சு பேசுறா பாருங்க. இந்த மஹியைத்தான் போடனும் நல்லா.. நல்லா பேச சொல்லித்தரா பிள்ளைக்கு” என்று கூறினாள்.

“கியூட்டா பேசுறாடி..” என்றவன், “குழந்தை குழந்தையாதான் இருக்கு.. அந்த குழந்தைத்தனத்தை அப்படியே ரசிப்போமே.. இதெல்லாம் நீ பேசக்கூடாதுனு சொன்னாதான், அதுல என்னனு தோன்றும்.. புரியாம பேசும்வரை, அது அவளுக்கு புரியாததாவே இருந்தா அதுவும் அழகுதானே” என்று கூற,

“போலிஸ்கார் வரவர நிறைய தத்துவம் பேச ஆரம்பிச்சுட்டீங்களே” என்று அவன் மீசையை முறுக்கிவிட்டாள்.

“அப்படியா என்ன?” என்று கேட்டவன், “யூ-டியூப்ல அக்னிகாஸ் ஃபயர் ஸ்பீச் நிறையா கேட்குறேன் போல.. அதான் எனக்கும் அப்படி தத்துவமா கொட்டுது” என்று கூற,

கொள்ளென்று சிரித்தவள், “பார்த்து.. நிறையா கொட்டிடப்போகுது” என்றாள்.

மென்மையான புன்னகையுடன், அவள் தோளில் தன் தாடை பதித்து, அவள் உருவைக் கண்ணாடியில் பார்த்தவன், “பெருமையா இருக்குத்தெரியுமா?” என்று கூற,

அவளிடம் அமைதியானதொரு புன்னகை…

“இப்ப லேட் ஆகலையா மிஸ்டர் போலீஸ்” என்று அவள் கேட்க,

“ஆகுது தான் மிஸஸ் போலீஸ்.. போவோமா?” என்று கேட்டான்.

புன்னகையாய் அவள் தலையசைக்க,

கூடத்தில் ருத்ரதேவி, மூன்று வயது ஆண் குழந்தை ஒருவனுடன் விளையாடிக் கொண்டிருந்தாள்.

அந்த அழகிய ஆண் குழந்தையின் பெற்றோர் என்ற உயரிய பதவியைக் கொண்ட சுசித்ரா, மற்றும் அவளது காதல் கணவன் ஆத்மன் அவ்விடம் வர,

“அம்மா அம்மா..” என்று சுசியின் கால்களைக் கட்டிக் கொண்டான், ஆரவ்.

“எல்லாரும் ரெடியா? கிளம்பலாமா?” என்று சிவப்ரியன் கேட்க,

“மஹி அத்தையைக் காணுமே?” என்று ருத்ரா கூறினாள்.

“வந்துவிட்டேன்டா பட்டு” என்றபடி, தனது ஐந்து மாத சூழ் தாங்கிய வயிற்றை ஏந்திக் கொண்டு மஹதி உள்ளே வர, அவளோடு, அவளது கணவன் ஜார்ஜும் உள்ளே வந்தான்.

“ஹே ஜார்ஜ்.. உனக்கு வேலைனு சொன்னா” என்று உற்சாகக் குரலில் சிவப்ரியன் கேட்க,

“அதானே சகலை‌‌.. நீங்க வரமாட்டீங்கனு மச்சி சொன்னா..” என்று அவன் தோளில் கரமிட்டு அணைத்தபடி, ஆத்மன் கேட்டான்.

“ஆமா.. வரமுடியாத சிசுவேஷனா தான் இருந்தது. ஆனா என் தங்கச்சியோட பெருமைக்குறிய விஷயம் இல்லையா? அதான் வேலையை வேற ஒருத்தருக்கு மாத்திவிட்டுட்டுக் கிளம்பிட்டேன்” என்று ஜார்ஜ் கூற,

 

“வெரி குட் மாமா” என்று ருத்ரா கூறினாள்.

 

அவளைத் தூக்கிக் கொஞ்சிய ஜார்ஜ், “அப்றம் என்ன கிளம்பலாமா?” என்று கேட்க,

 

“கெம்பளாம்” என்று ஆரவ் கூறினான்.

அவன் மழலை மொழியில் சிரித்த அனைவரும், புறப்பட்டு அந்தக் கட்டிடம் முன்பு வந்து நின்றனர்.

 

அந்தக் கட்டிடத்தையும், அதன் உச்சியில், ‘ஒளி அறக்கட்டளையம்’ என்று பொறிக்கப்பட்டிருப்பதையும் அத்தனை சந்தோஷத்தோடு பார்த்து நின்ற அக்னிகாவின் தோளில் கரமிட்ட சிவப்ரியன், அவள் தன்னை நோக்கவும், அழகாய் புன்னகைத்து, அவள் தோளில் தட்டிக் கொடுத்தான்.

 

ஆம்! அது முழுக்க முழுக்க, அக்னிகாவின் உழைப்பால் திறக்கப்பட்ட, அறக்கட்டளையம். 

 

ஏழு ஆண்டுகள்… இந்த ஏழு ஆண்டுகள் எண்ணற்ற மாற்றங்களை அவர்கள் வாழ்வில் நிகழ்த்தியிருந்தது.

ஏழு ஆண்டுகள் முன்பு, அவள் பிறந்தநாளன்று திருமணம் செய்துகொள்ள அவன் கேட்ட அடுத்த வாரமே, சட்டபடி திருமணம் செய்து கொண்டு, சம்பிரதாயப்படியும் தங்கள் திருமணத்தை ஊரறிய செய்துக் கொண்டனர்.

 

அத்தனை சந்தோஷத்துடன், அவனுடனான திருமண வாழ்வையும், சுசித்ராவின் பரிசால் உருவான பட்டப்படிப்பையும் துவங்கியிருந்தாள், அக்னிகா.

 

இரண்டு வருட படிப்பு முடிந்த கையோடு, தனக்கென்று சிறிதாக ஒரு பாட்டு வகுப்பைத் துவங்கி, இணையம் மூலம் அதனை மற்றவர்களும் அறியச் செய்து, தனது உழைப்பால், அடுத்த ஒரு வருடத்திலேயே, ‘மியூசிக் அகாடமி’ என்று பெரிதளவு அதை எடுத்துச் சொன்றாள்… பல இசைக் கருவிகளையும் பயிற்றுவிக்கும் ஏற்பாடுகளைச் செய்து, பல மாணவர்களின் வருகையையும் பெற்று, பல கலைஞர்களுக்கு வேலை ஏற்பாடு செய்து கொடுக்கும் நிலைக்கும், அடுத்த இரண்டு வருடங்களில் வந்திருந்தாள். மேலும் தனது இணைய பக்கங்களில், பல ஊக்கப் பேச்சுக்களையும் அவள் வெளியிடத் துவங்க, அது அவளை இன்னும் பிரபலமாக்க உதவியது.

 

அவளைப் பற்றித் தெரிந்துகொண்ட பின், பல கல்லூரியிலும், பள்ளிகளிலும், அவளை ஊக்கப் பேச்சிற்காகத் தாங்களே வழிய வந்து, அழைக்கத் துவங்கியிருந்தனர்.

 

படிப்பில் கிட்டத்தட்ட ஐந்து பட்டங்களைப் பெற்றுவிட்ட சாதனைத் திருநங்கை என்ற பதக்கமும், அவளை இன்னும் கௌரவித்து இருந்தது, குறிப்பிடத் தக்கது.

 

இதனூடே, அக்னிகா மற்றும் சிவப்ரியன், தங்கள் ஆசை படியே, ஆசிரமம் ஒன்றில், மூன்று வயது குழந்தையான ருத்ரதேவியை, சட்டப்படி தத்தெடுத்து, தங்கள் காதலை இணைத்து, நேசம் பிறக்கச் செய்து, அக்குழந்தைக்கு அதை அமுதாய் ஊட்டி, வளர்த்தனர்.

 

அவர்களுக்கு திருமணம் ஆன நான்கு வருடங்கள் கடந்த நிலையில், சுசித்ரா, தன்னிடம் தனிமையால் பாதிக்கப்பட்டு, அன்பின் ஏக்கங்களில் வாடி, ஆலோசனைக்காக வந்த ஆத்மனையே காதலித்து, அவன் கரம் பற்றி, அடுத்த வருடத்திலேயே குழந்தையும் ஈன்றிருந்தாள்.

சிறியளவில், சொந்தமாக உரக்கடை ஒன்று நடத்திவரும் ஜார்ஜ் என்பவன், சிவப்ரியனிடமே வந்து, மஹதியை விரும்புவதாய் கூறி, பெண் கேட்டிருக்க, அவன் குணநலன்களை ஆராய்ந்து, மஹதியின் விருப்பம் கேட்டு, தன் தலைமையிலேயே அவளுக்குத் திருமணம் செய்து வைத்தான். 

 

அவர்கள் இல்லறம் நல்லறம் பெற்றதில், அவள் மணி வயிற்றில், ஐந்து மாத கருவாய், அவர்கள் மகவு…

 

இப்படியே சென்ற அழகிய நாட்களில், சொந்தமாக அறக்கட்டளையம் துவங்க வேண்டும் என்று, தனது ஆசையை அக்னிகா வெளிப்படுத்த, மனதார அதற்கான உதவிகளையெல்லாம் சிவப்ரியன் செய்து கொடுத்தான்.

 

அதன் பெயரில், சிறியளவில் ஒரு அறக்கட்டளையமும் இனிதே துவங்கப்பட்டு, தற்போது அதன் துவக்க விழாவிற்கு அனைவரும் வந்துள்ளனர்.

 

அக்னியின் ஒளியாய், அவ் அறக்கட்டளையம்…

உள்ளே சென்று, அனைவரும் விளக்குகள் ஏற்றி, விழாவைத் துவக்கி வைக்க,

பலரின் பாராட்டுக்களோடும், சிலரின் உதவித்தொகைகளோடும் அப்பணி இனிதே துவங்கி வைக்கப்பட்டது.

அதனை முடித்துக் கொண்டு, உணவையும் முடித்துக் கொண்டு அனைவரும் வீடு திரும்ப, 

 

“அப்பா அடிக்கடி மம்மியால எனக்கு எப்போமே பெருமை சொல்வாங்க.. இன்னிக்கு நிறையா பேர் மம்மிகிட்ட ஹாப்பி ஹாப்பியா பேசும்போதும், மம்மியோட பொண்ணு நான்னு சொன்னது, எனக்கு கை குடுத்து, அப்ரிஷியேட் பண்ணும்போதும், பெருமையா இருந்தது” என்று கூறிய ருத்ரா, அக்னியின் கன்னத்தில் முத்தமிட்டாள்.

 

மகள் கூறிய சொற்களில், பூரித்துப்போன அக்னி, கண்கள் பனிய, அவளுக்கு பதில் முத்தம் கொடுத்து, சிவப்ரியனைப் பார்த்தாள்.

 

“நிஜமா எனக்கும் அவ்ளோ சந்தோஷம்டி அக்னி.. நீ இன்னும் இன்னும் உயரனும்” என்று சுசி கூற,

 

தூங்கி வழிந்தபடியே மஹதி ‘உம்’ கொட்டினாள்.

 

அதைக் கண்டு அனைவரும் சிரிக்க, “ஷ்ஷ்.. முழிச்சிடப்போறா” என்ற ஜார்ஜ், 

“நாங்க போய் தூங்குறோம்” என்றபடி அவளை ஏந்திக் கொண்டு, அறைக்குச் சென்றான்.

 

“கியூட் கப்பில்” என்று ஆத்மன் கூற,

 

“அவளோட படபட பட்டாசு பேச்சுக்கு ஜார்ஜ் தான் சரியான மேட்ச்” என்று சுசியும் கூறினாள்.

 

“ஸோ? நீங்க ரெண்டு பேரும் தூங்க போகலையா?” என்று சிவப்ரியன் கேட்க,

 

“அத்தை.. டாடி இப்ப உங்களையும் துறத்த ஆரம்பிச்சுட்டார். தம்பியைத் தூக்குங்க போகலாம்” என்று ருத்ரா கூறினாள்.

 

அவள் பேச்சில வெடி சிரிப்பு சிரித்த ஆத்மன், அவளைத் தூக்கிக் கொண்டு, அக்னியைப் பார்த்து, சிரித்துவிட்டு, “குட் நைட்” என்று கூறிச் செல்ல,

 

“புள்ளைய நல்லா வளர்த்துருக்க மேன்” என்றபடி, தன் மகனைத் தூக்கிக் கொண்டு, சுசியும் சென்றாள்.

 

செல்லும் தங்கையையே புன்னகையாய் பார்த்திருந்தவன் தோளில் அடித்த அக்னி, “இப்படியா கேட்பீங்க அவங்கட்ட?” என்க,

 

அவளைத் தோளோடு அணைத்துக் கொண்டு, நெற்றி முட்டியவன், “எனக்கு ஒன்னுமில்லை.. அவங்க முன்ன இப்படி உட்கார்ந்தா நீ தான் முறைப்ப” என்றான்.

 

அவனை முறைக்க முயன்றும் தோற்றவளாய் சிரித்திட்டவள், “எவ்ளோ நிறைவா இருக்கு தெரியுமா?” என்று கேட்க,

 

“தெரியுது..” என்றவன், தனது அலைபேசியை எடுத்து, அவளுக்கு ஒரு குறுஞ்செய்தியைக் காட்டினான்.

 

“என்னங்க?” என்றபடி அதை வாங்கிப் பார்த்தவள், அதிர்ந்து போய் அவனை நோக்க,

 

“உன் சிஸ்டர்” என்று கூறினான்.

 

“உ..உங்களுக்கு எப்படி?” என்று அவள் தடுமாற,

 

“நீ தான் இன்ஸ்டால வைரல் ஆயிட்டியே.. உன் ஹஸ்பென்ட் என்னோட ஐடியைக் கண்டுபிடிக்குறதா அவங்களுக்கு கஷ்டமாருக்கப் போகுது?” என்று கேட்டவன், “உன்னை நினைச்சு ரொம்ப பெருமையா இருக்காம்.. அப்பா அம்மா இருந்திருந்தா, மற்றதெல்லாம் மறந்து ஏற்றிருப்பாங்களோ என்னவோனு சொன்னாங்க..” என்று கூற,

 

அவனை அதிர்வோடு பார்த்தாள்.

 

“த்ரீ இயர்ஸ் முன்னவே இறந்துட்டாங்களாம்.. அப்பாக்கு ஹார்ட் அட்டேக், அம்மாக்கு ஆக்ஸிடென்ட்னு சொன்னாங்க..” என்று கூறி, அவளை அரவணைத்துக் கொண்டான்.

 

எதுவும் கூறாது அமைதியாய் அவன் மடியில் அவள் படுக்க,

“உனக்கே பேசலாம்னுதான் நினைச்சாங்களாம்.. ஆனா அவங்களுக்கு ரொம்ப கில்டா இருந்திருக்கு… அதான் என்கிட்ட பேசினாங்க.. ரொம்ப தேங்ஸ் சொன்னாங்க.. நீ எங்க இருந்தாலும் சந்தோஷமா இருக்கனும்னு வேண்டிப்பாங்கனுலாம் சொன்னாங்க.. அவங்க பையன் பெயர் என்ன தெரியுமா?” என்று கேட்டான்.

 

‘என்ன?’ என்பதைப் போல் அவள் பார்க்க,

“ஈஸ்வரன்” என்று கூறினான்.

 

அதிர்வோடு எழுந்து அமர்ந்தவள், “நிஜமாவா?” என்க,

 

அவளது அக்காவின் சுயவிவரப் படத்தைக் காட்டி, “இது அவங்க ஹஸ்பென்ட். டாக்டரா இருக்கார். இது உன் அக்கா. ஐ.டில வர்க் பண்றாங்க. இது அவங்க மூத்த மகன் ஈஷ்வரன், அவங்க ரெண்டாவது மகள் சாக்ஷி” என்று கூறினான்.

 

கண்களில் கண்ணீர் திரை மின்னியது…

 

“உன் நினைவா வைக்கனும்னு ஆசைப்படு வச்சாங்களாம்.. உன்னைப் பிரிஞ்சு ஒரு வருஷத்துல ட்ராமால அஃபெக்ட் ஆகி கௌன்சிலிங் எல்லாம் போயிருக்காங்க.. எங்கம்மா அப்பா கௌன்சிலிங் போயிருந்தா, நான் போக வேண்டிய நிலையே வந்திருக்காதுனு சொன்னாங்க” என்று சிவப்ரியன் கூற,

 

மெல்லிய விசும்பல் ஒலியோடு, அவன் நெஞ்சில் தலை சாய்த்தாள்.

 

அவள் தலையைக் கோதி, தன் மாரோடு அவள் சிரம் அணைத்துக் கொண்டவன், “அவங்கட்ட பேசுறியா?” என்க,

இடவலமாய் தலையசைத்தாள்.

 

அவளை கேள்வியாய் கூடப் பார்க்காமல், உடனே, அவன் சரியென்றுவிட, “ஏன்னு கேட்க மாட்டீங்களா?” என்று கேட்டாள்.

 

“நீ எது செய்தாலும் அதுல உனக்கான அர்த்தம் ஏதாவது இருக்கும்டா ஸ்பார்கில்.. ஏன்னு கேள்வி கேட்டு, நான் எதுக்கு உன்னை ஜட்ஜ் பண்ணனும்? சில உணர்வுகள், அவங்கவங்களுக்கானது.. அதுல அவங்க பெர்ஸ்பெக்டிவைத் தாண்டி சரி தவறுனு எதுவும் யோசிக்குறதுக்கில்லை.. என் ஸ்பார்கில் எது செய்தாலும் அதுல ஒரு காரணம் இருக்கும்” என்று மிக மிக மென்மையாய், அவள் தலை கோதியபடி மொழிந்தான்.

 

கண்ணீர் வெள்ளமென திரண்டு, கன்னம் இறங்க,

அவனை அணைத்துக் கொண்டு, “என்கிட்ட மனசுவிட்டு பேச முடியும்னு அக்காவா முன்வரும் நாள் ஒன்னு வரும்.. எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாம, நான் அவங்களை எதுவும் தப்பா பேசிட மாட்டேன்னு நம்பக்கூடிய நாள் வரும்.. அப்ப அதே உரிமை அவங்கட்ட இருக்கும்.. அந்த உரிமையோட வருவாங்க” என்று கூறினாள்…

 

அவளைப் புன்னகையோடு பார்த்தவன், “அவங்க மேல கோவமில்லை அப்ப என் ஸ்பார்கில்கு” என்று கூற,

 

“அப்பா அம்மாவை மீறி ஒரு முடிவை எடுக்கும் வயதிலும் நிலையிலும் அவங்க அப்ப இல்லை. அவங்களால என்னை அனுப்ப வேண்டாம்னு கெஞ்சத்தான் முடிஞ்சது.. அதுவாவது செய்தாங்க தானே எனக்காக? பிறகு எப்படிக் கோவம் வரும்?” என்றவள், “சில பிரார்த்தனைகள் தூய்மையானது.. அவங்க மனசைப் போல, அவங்களோட தூய்மையான பார்த்தனைகள் தான் எனக்கான நல்ல வாழ்க்கையை அமைச்சுக் கொடுத்திருக்கும்” என்று நம்பிக்கையோடு கூறினாள்.

வாழ்வில் அத்தனை கசப்பான பக்கங்கள் இருந்தும்கூட, நல்லதை மட்டுமே கருத்தில் கொண்டு பேசும் அவளது நேர்மறை எண்ணங்களில், எப்போதும்போல் கர்வம் கொண்டவன், “அழகாருக்கடி” என்று அவள் நாடி பற்றி கூறினான்.

 

மென்மையாய் புன்னகைத்து தன் கண்ணீரை அவள் துடைத்தபடி, “அழகின் ரகசியம் கண்ணீர் தானோ?” என்றாள்.

 

“இருக்கலாம்.. ஆனா அது மட்டுமாருக்காது” என்றவன், அவள் முகத்தை கரத்தால் வழித்தபடி, “தைரியம், தன்னம்பிக்கை, துணிவு, சாதிக்கனுமுங்குற எண்ணம், கருணை, காதல்னு உனக்குள் இருக்கும் எண்ணற்ற உணர்வுகள் தான் உன் அழகுக்கான ரகசியம்.. நான் மட்டுமே அறிஞ்ச ரகசியம்” என்று கூற,

 

இடவலமாய் தலையாட்டினாள்.

 

ஒற்றைப் புருவம் உயர்த்தி, “இல்லையா?” என்று அவன் கேட்க,

 

அவன் தோள்களைப் பற்றிக் கொண்டு, “நீங்க.. நீங்க சொன்ன அத்தனை உணர்வுகளுக்கும் காரணமானவர் நீங்க.. அப்ப என் அழகின் ரகசியமும் நீங்க தானே?” என்றாள்.

 

அதில் தன் பச்சரிசிப் பற்கள் பிரகாசிக்கப் புன்னகைத்தவன், அவள் நெற்றியில் முத்தமிட,

 

“ஆக்கவும் அழிக்கவும் வல்ல பெரும் ஆயுதம் இந்தக் காதல்.. அதோட இரண்டு கூர் முனைகளையும் அனுபவிச்சுட்டேன்… அழிவை அனுபவிச்சு அதோட விளிம்புக்குப் போன என்னை, இன்னொரு பரிணாமும் இந்த காதலுக்கு உண்டுனு காட்டி, என் வாழ்க்கையையே வண்ணமயமா மாற்றி, இந்த காகிதப்பூவுக்குள் இருக்கும் மகிமையை எல்லாம் கொண்டு வந்தவங்க நீங்க.. வாசம் இல்லைனா என்ன? வாடாத வண்ணங்கள் இருக்கும்னு காட்டி, உடைஞ்சு போச்சுனு நினைச்சதையெல்லாம் செப்பனிட்டு, இன்னிக்கு நான் வாழ லட்சம் காரணங்களையும் குடுத்துருக்கீங்க… கடவுளால் அசிர்வதிக்கப்பட்டவ நான்னு மனசார உணருறேன்… நிறைய கஷ்டங்களைக் கொடுக்கும் விதி, நிச்சயம் நம்ம பாதையை செப்பனிடும்னு மனசார உணர வச்சுட்டீங்க… நிறைவா இருக்கு ப்ரியன்” என்று கூறினாள்.

 

அவள் தாடை பற்றி, “சந்தோஷமா இருக்கியா ஸ்பார்கில்?” என்று அவன் கேட்க,

 

அவன் கன்னங்கள் பற்றி, “நீங்க இருக்குற வாழ்க்கைல, என் சந்தோஷத்துக்கும் நிம்மதிக்கும் பஞ்சமே இருக்காது ப்ரியன்.. லவ் யூ சோ மச்” எனக் கூறி, அவன் நெற்றியில் அழுத்தமாய், தன் அட்சரம் பதித்தாள்…

 

ஆழ்ந்த சந்தோஷமும், நிம்மதியும் கலந்து, முக்குளித்து எழும் அவர்க

ள் காதல் அரவணைத்த வாழ்வு புத்தகம், அந்த காதலின் கதகதப்போடு, துயரெனும் குளிர் புகை அண்டாமல் இன்பமாய் வாழ வேண்டி வாழ்த்தி, நாமும் விடை பெறுவோம்…

 

-சுபம்… 

 

 

 

 

 

 

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
18
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment

    1. கதை அருமை. அக்னிகா புரியாத புதிராகவே இருக்க ப்ரியன் அவள் மேல் காதல் அவ்வளவு அழகு. நட்புகளும் அழகு தான். ப்ரியன் காதலை ஏன் ஏற்க மறுக்கிறாள் என்ற சந்தேகமும் இதற்கு இடையில் கொலையையும் நிகழ்கிறது யாரு கொலைகாரன் இருப்பான் ஆராயா தோன்றும் போது அங்கே அங்கே அவனைப் பற்றி குறிப்புகள் கொடுத்தே கதை நகர்வது அழகு. அதி செம இவன். தண்டனை கொடுத்தவர் யாரும் நல்லவர்கள் இல்லை தான் சட்டம் தண்டிக்காமல் விடவும் சிலநேரங்களில் இது மாதிரி நிகழ்கிறது. அக்னி பற்றி தெரியும் போது நட்புகள் அவளின் தைரியம் அவளை நிமிர்ந்து நிற்க ப்ரியன் எல்லோரும் தான் காரணம். கேலி பேசுவதை விடுத்து அவர்களும் மனிதர்கள் அவர்களுக்கும் உணர்வு இருக்கும் என்பதை உணர்ந்தால் பல பிரச்சினை சரியாகும். சாரதா பாவம் தான். அக்னி ப்ரியன் மஹதி ஜார்ஜ் சுசி ஆத்மன் குழந்தைகள் கொண்டும் அக்னியின் வளர்ச்சி செம. வாழ்த்துகள்டா. வாழ்க வளமுடன்.