பூ-27
அங்கு அதிரூபன் வீட்டில், அதிதிகாவுடன் அமர்ந்திருந்தாள், அக்னிகா. அவள் மடியில் உறங்கிய நிலையில், அதிதி அதிரூபனின் மூன்று வயது மகன்…
அந்தக் குழத்தையின் தலையைக் கோதியபடியே அக்னிகா மௌனமாய் இருக்க, அவள் அருகே, கண்ணீரே உருவாய் அமர்ந்திருந்தாள், அதிதிகா.
அவளால் நடந்த சம்பவத்தைக் கொஞ்சம் கூட ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. மனமெல்லாம் ரணமாய் தைத்தது. தன்னவன்; தனக்கானவன்; ஒரு கொலைகாரன். பலர் உயிரைத் துடிக்கத் துடிக்க எடுத்துக்கொண்ட கொலைகாரன் என்று நினைக்கவே அவள் மனம் சொல்லில் வடிக்க இயலாத அளவு வலியைக் கொடுத்தது.
பாரம் தாங்காமல் கண்ணீரோடு அவள் விசும்ப, அவள் தோளில் மொன்மையாய் கரம் பதித்து, அதில் அழுத்தம் கொடுத்து, “அண்ணி” என்றாள்.
“முடியல அக்னி.. எவ்ளோ வலிக்குது தெரியுமா?” என்று அதிதி கேட்க,
கலங்கத் துடித்தக் கண்களைக் கட்டுப்படுத்திக் கொண்டு, “என் வாழ்க்கைல நான் சந்திச்ச சொற்ப நல் மனிதர்கள்ல ஒருவர்னு அவரைப் பார்த்தேன் அண்ணி.. பாரம் தாங்க முடியாம தவிச்சேன்.. தவிக்குறேன்.. ஆனா உங்களுக்கும் அவருக்குமான உறவு அதைவிட நெருக்கமானது.. அது உங்களுக்கு எப்படியான வலியைக் கொடுக்கும்னு என்னால புரிஞ்சுக்க முடியுது..” என்று கூறினாள்.
“என்ன சொல்றதுனு கூடப் புரியல அக்னி.. அவர் ஆயிரம் காரணம் சொல்லட்டுமே.. கொலை ஒரு முடிவாயிடுமா? பேசுற பத்து பேரைக் கொன்னுட்டா பத்தாயிரம் பேரோட வாய் அடைபட்டுடுமா? ஒருத்தர் பேச்சைக் கேட்டுக் கூனிக்குறுகி நாம ஏன் சாகனும்? அவங்க முன்ன வாழ்ந்து காட்டுவோம்னு அவங்கம்மா நினைச்சுருந்தா இதெல்லாம் நடந்திருக்குமா?” என்று ஆற்றாமையாய் அதிதி அழ,
“நான் யாரையும் நியாயப்படுத்தலை அண்ணி. இறந்துபோனவங்க நல்லவங்க கெட்டவங்க, தப்பு சரினுலாம் முத்திரைக்குத்த நமக்கு உரிமையில்லை… இறப்பு நிச்சயம் எதுக்கும் ஒரு தீர்வே கிடையாது தான்.. அதேநேரம் அவங்க சூழலில் நாம இல்லாதவரை அந்த வலி நமக்குப் புரியாது.. இதைப் பற்றி இந்த நேரம் நாம யோசிப்பதும், பேசுறதும் சரியும் கிடையாது, இதுல நமக்குப் பயனும் கிடையாது” என்று பக்குவமாய் எடுத்துக் கூறினாள்.
“இவங்க இப்படினு எதிர்ப்பார்க்கலையே அக்னி” என்று அழுதபடி அவள் அக்னியின் தோள் சாய,
மென்மையாய் தட்டிக் கொடுத்தாள்.
“எதுல குறை வச்சேன் நான்? ஏன் இப்படி ஆனாரு? இதோ.. இந்தப் புள்ளைகூட அவருக்கு மனசுல இல்லையா? கட்டினவ குழந்தைனு யாரையும் யோசிக்கலையா?” என்று அதிதி அழ,
“அவங்க பேசின வீடியோவைப் பார்த்தீங்க தானே அண்ணி.. இதுல நீங்கக் குறை நிறைனு செய்து தடுக்க எதுவுமே இல்லை.. உங்களால எதையும் உருவாக்கியிருக்கவோ, தடுக்கவோ முடிஞ்சிருக்காது அண்ணி..” என்று மென்மையாய் எடுத்துரைத்தாள்.
“என் அன்புகூட அவரைத் தடுக்கலையா அக்னி?” என்று ஏக்கமாய் அதிதி கேட்க,
“படங்களிலும் கதைகளிலும் வேணும்னா சொல்லலாம் அண்ணி.. ஆனா நிஜத்துல நிதர்சனம்னு ஒன்னு இருக்கே… முன்னாடியே உங்களுக்கு தெரிஞ்சு, கௌன்ஸிலிங் எதும் குடுத்திருந்தாகூட அவங்க மாறியிருப்பாங்கனு நம்மால உறுதியா சொல்ல முடியாதே?” என்றாள்.
அக்னி பேசுவதை முதலில் அதிதியால் ஏற்க முடியவில்லை.. தன்மீதே பழியைப் போட்டுக் கொண்டாள்.
“நான் அவரை நல்லா கவனிச்சிருக்கலாம் அக்னி.. நைட்டெல்லாம் சில நாட்கள் அடிச்சுபோட்ட போல படுத்துத் தூங்கியிருக்கும்போதுகூட எனக்கு வேலைப்பழுவாருக்கும்னு தானே தோனுச்சு.. அவரை நம்பினேனே அக்னி” என்று அதிதி அழ,
“இதுல உங்க பிழை எதுவும் இல்லை அண்ணி” என்றாள்.
“என்னால ஏத்துக்கவோ தாங்கிக்கவோ முடியல அக்னி.. இனி நான் என்ன பண்ணுவேன்? என் பிள்ளைக்கும் எனக்கும் அந்த ஸ்கூல்ல இனி இடமில்லைனு சொல்லிட்டாங்க.. பேரென்ட்ஸ்லாம் நாங்களும் அந்த கொ..கொலைக்கு உடந்தையாருப்போமோனு பயப்படுறாங்களாம்.. மூனு வயசு குழந்தைக்கு எப்படி அக்னி அதெல்லாம் தெரியும்? அவனைப்போய் கொலைகாரன் மகன்னு சொல்றாங்க” என்று அதிதி கேவி அழ,
அக்னிக்கும் கண்கள் கலங்கியது..
சொல்! எத்தனை வீரியம்மிக்கவையாக உள்ளது.. ஒருவரை ஆக்கவும் அழிக்கவும் வல்ல, மோசமான மற்றும் அற்புதமான ஆயுதம் அல்லவா இந்தச் சொல்? என்று வியந்து, நொந்து போனவள், “அண்ணி” என்று மென்மையாய் அழைத்தாள்.
அதிதி கண்ணீரோடு அவளை நோக்க, “தம்பியை நினைச்சு வருத்தப்படும் நீங்க.. அவன் எதிர்காலத்தையும் யோசிக்கனும் தானே?” என்று கேட்டாள்.
அதிதி புரியாது விழிக்க, “ஒரு வார்த்தை… ஒரே ஒரு வார்த்தை எத்தனைக் கொடுமையானது பாருங்க… மனித மனம் வார்த்தைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கக்கூடியது.. அது பல இடங்களில் நன்மையாக அமைந்தாலும் சில இடங்களில் வலிகளைத்தான் தரும்.. இப்ப இவனுக்கு எதையும் புரிஞ்சுக்குற வயசு இல்லைதான்… ஆனா இன்னும் போகப்போக எல்லாம் புரியும்.. அப்பவும் இப்படியான வார்த்தைகள் அவனைத் தாக்கினா அவன் மனநிலை என்னாகும்னு யோசிங்க” என்றாள்.
அதிதி அச்சத்துடன் விழிக்க,
“நீங்க தான் அவனுக்கான எதிர்காலத்தைப் பாதுகாக்க உதவனும்.. நடந்ததை நினைச்சு உங்களை நீங்களே குறை சொல்லிட்டு உக்காந்துட்டு இருந்தா, நாளைக்கு அவனும் அப்படித்தானே வருவான்? அவனுக்கு சொல்லிக்கொடுக்க, முதல்ல உங்கக்கிட்ட தைரியம் இருக்க வேணாமா? நீங்க பக்குவமா யோசிக்க வேண்டாமா?” என்றாள்.
அதிதியின் முகம் யோசனையைத் தத்தெடுக்க,
அவள் கண்ணீர் துடைத்து, “உங்க வலியும் வேதனையும் என்னால உணர முடியலைனாலும் புரிஞ்சுக்க முடியும்.. கண்டிப்பா வலிக்கும் தான்.. ஆனா இது தேங்கி நிற்குறதால குறையப்போவதில்லை அண்ணி.. இதோட உங்க வாழ்க்கை முடியலை.. என்னடா இவ இப்படியொரு நேரத்தில் இதை சொல்றாளேனு நினைக்காதீங்க.. நிதர்சனம் சொல்றேன்.. முடிஞ்சா கொஞ்சம் காலம் போனதும் இன்னொரு கல்யாணம் கூட பண்ணிக்கோங்க.. காதலும் கல்யாணமும் காயத்தை ஆற்றுவதற்காக செய்றதுல தப்பு ஒன்னும் இல்லை.. உங்களுக்கு எதிரிருப்பவர் ஏற்கும் பட்சத்துல.. தம்பிக்கு ஒரு அப்பாவா, உங்களுக்கும் உங்க கசடுகளைப் புரிஞ்சு, அறிஞ்சு, கழைக்கும் ஒரு உறுதுணையா இருக்கும்.. இதை இப்பவே செய்ய மனம் வராது.. ஆனா ஒரு காலம் இந்த கட்டத்தை உங்க முன்ன நிறுத்தும்போது எதையும் நினைச்சு, மறுகாம, மறுக்காம ஏத்துக்கோங்க.. இங்கயே இருந்து இதைக்கேட்டு கஷ்டபட முடியலைனா, இடம் மாறுங்க.. அம்மா ஊருக்குப் போங்க.. முடிஞ்சளவு மனசை ஒருநிலைப்படுத்த முயற்சிங்க.. உங்க சந்தோஷம் இன்னும் முடிஞ்சுடலை.. அது உங்க கைல தான் இருக்கு” என்றவள், “தம்பிகிட்டயும் இருக்கு” என்று குழந்தையைக் காட்டினாள்.
அதிதியிடம் பெரும் பெருமூச்சு… நிதர்சனம் இதுதான் என்று புரிந்தாலும்கூட அதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை அவளால்.. ஐந்து வருட வாழ்க்கையாயிற்றே அவனுடனானது… எத்தனை காதல்? எத்தனை சந்தோஷம்? எத்தனை சண்டைகள்? என்று நினைக்க நினைக்க மனம் கனத்துக்கொண்டே தான் இருந்தது.
வெளியே வந்துதான் ஆக வேண்டும் என்ற நிதர்சனத்தை அக்னிகா உணர்த்த, கண்ணீர் பொங்கி பீறிட்டது.
“உங்க வலி நிச்சயம் உங்க இடத்துல இருந்தாதான் எனக்குத் தெரியும்.. அப்படியிருக்க என்னால புரிஞ்சுக்க முடியாம கூடப் போகலாம்.. ஆனா நான் சொல்றது எதுவும் உங்களை ஹர்ட் பண்றதுக்கோ, உங்க உணர்வுகளை முட்டாள்தனமாக்கவோ இல்லை அண்ணி” என்று அக்னி கூற,
“அத்தனை வலிகளைச் சுமந்த பிறகும்கூட, அடுத்தவன் வலியைப் பார்த்து, என்னால உணர முடியாதுனும் தன் வலியைவிட பெரிதுபடுத்தி சொல்லவும் ஒரு மனசு வேணும் அக்னி.. அப்படியிருக்க உன்னை எப்படி ஹர்ட் பண்றனு சொல்லுவேன்?” என்று கண்ணீர் கண்களில் கனிவைக் கூட்டிக் கூறினாள்.
“எவ்வளவு வலிகளைச் சுமந்திருந்தாலும், சுமந்துட்டு இருந்தாலும், அவரவர் வலி அவரவருக்கு மட்டுமே தானே அண்ணி புரியும்? அப்படிப்பார்த்தா கண்ணால பார்க்குறதை மட்டுமே வச்சு நீங்க எவ்வளவு வலியைச் சுமக்குறீங்கனு என்னால எப்படி உணர முடியும்?” என்று அக்னி கூற,
விரக்தியாய் சிரித்துக் கொண்டாள்.
“ஆனா வலியைச் சுமக்கும் நேரம், நம்ம எதிர்வினை எப்படி இருக்குமுங்குறதைப் பொருத்துத்தான் நம்ம எதிர்காலமும், நம்மைச் சார்ந்தவங்க எதிர்காலமும் இருக்கும் அண்ணி.. அதைச் செப்பனிடும் பணி நம்ம கைல தான்” என்று அக்னி கூற, அவளை அமைதியாய் நிமிர்ந்து பார்த்தவள், மெல்ல தலையசைத்தாள்.
அவள் கரம்பற்றி, “சொல்லால மட்டுமில்ல.. செயலாலும் உங்களுக்கு உறுதுணையா நாங்க இருக்கோம் அண்ணி.. மனசை தளரவிடாதீங்க” என்று கூறிய அக்னி, “அ..அண்ணி.. ப்ரியன்.. அவங்களும் பார்க்க வரலாம்னு தான் நினைச்சாங்க.. ஆனா அவங்கதான் அரெஸ்ட் பண்ணது. உங்களுக்கு இன்னும் சங்கடமாயிடும்னு தான் வரலை.. கோர்ட்லயே உங்களைப் பார்த்துட்டு ரொம்ப வருத்தப்பட்டதா சொன்னாங்க” என்று கூற,
விரக்தியான சிரிப்போடு, “யாரோ பண்ண தப்புக்கு யாருக்கோ நான் ஏன் அக்னி தண்டனைத் தரணும்? அவங்க மேல நான் கோபம் கொள்வதால எதுவும் மாறிடப் போறதில்லை” என்று கூறினாள்.
அவள் தோள்களைத் தட்டிக் கொடுத்த அக்னி, “எல்லாம் சரியாகும் அண்ணி..” என்க,
மூச்சை நன்கு இழுத்துவிட்டு, தன் முகத்தைத் தேய்த்துக் கொண்டவள், அக்னியைப் பார்த்து, “தேங்ஸ் அக்னி” என்றாள்.
“எல்லாம் மாறிடனும்னு நமக்குள்ள இருக்கும் ஆசையைவிட தயக்கமும் பயமும் அதிகம் இருக்கும். அதை கடக்க நான் ரொம்ப கஷ்டப்பட்டேன்.. ஆனா கடந்த பிறகு கிடைக்குற நிம்மதியை வார்த்தைகள்ல சொல்லிட முடியாது அண்ணி.. ஆனா இப்ப நான் உணரும் நிம்மதியை நீங்களும் கூடிய சீக்கிரம் உணருவீங்கனா நம்புறேன்.. என் நம்பிக்கையும் வேண்டுதலும் வீண் போகாது” என்று அக்னி கூற,
கண்ணீரோடு அவளை அணைத்துக் கொண்டாள்.
அவள் முதுகை வருடிக் கொடுத்து, ஆறுதல் படுத்திய அக்னி, சிலநிமிடம் குழந்தையைப் பற்றி பேசிவிட்டு, விடைபெற எழ,
வாசல் வரை சென்றவளை, “அக்னி..” என்று நிறுத்தினாள்.
அக்னி திரும்பிப் பார்க்க, “சிவப்ரியன் சார் உனக்கு நல்ல பொருத்தம். காலம் எத்தனையோ மாறிடுச்சு.. பழசையெல்லாம் நினைச்சு எதையும் இழந்துடாத..” எனக்கூறி, “இழக்க மாட்டனு தான் தோன்றுது” என்க,
மெல்லிய புன்னகையுடன், “மாட்டேன் அண்ணி” என்றவள், மனமார புன்னகைத்துக் கொண்டு, விடை பெற்றாள்.
இனி எதையும் மாற்ற இயலாது என்றாலும், நடக்கப்போவதை தான் உருவாக்கலாம், என்ற நம்பிக்கையோடு, தனக்காகவும், தன் மகனுக்காகவுமான வாழ்வை வாழ, ஆயத்தமானாள் அதிதிகா. அதற்கு முதல் படியாய், தன் தாய் வீட்டுக்கு செல்ல ஆயத்தமானவள், தன் வாழ்வின் புது அத்தியாயத்தை, அங்கிருந்து துவங்க முடிவு செய்தவளாய் புறப்பட்டாள்.
செல்பவளுக்கு மனமார வாழ்த்துக்கள் கூறி, அவள் வாழ்வு சிறக்க வேண்டும் என்று மனம் நிறைக்கப் பிரார்த்தனை செய்துக் கொண்டாள், அக்னிகா.
ஒருவருக்கு ஒருவர் ஆறுதல் கூறத்தானே மனிதர்கள் படைக்கப்பட்டனர்? ஆறுதல் பெறுவதிலும், ஆறுதல் கொடுப்பதிலும் உள்ள அலாதியான சுகந்தம் புரியாமல் தானே மனிதம் ஆங்காங்கே மடிந்து வாடுகிறது…
அன்புக்கு இருக்கும் ஆக்கத்தை உணர்ந்து, ஆக்கம் கொடுக்கும் ஆகச்சிறந்த அன்பை மட்டுமே பரப்புவோம்.. அன்பு மலரட்டும், வாசம் பரவட்டும்…
-தொடரும்…