Loading

பூ-26

 

சிவப்ரியன் வந்து கதவைத் தட்டவுமே, தாழ் திறந்துவிட்டாள்.

 

தாழ் திறந்தும் திறக்கப்படாத கதவை, தானே திறந்து உள்ளே சென்றவன், சாளரத்தின் அருகே, கம்பிகளை இறுக பற்றிக் கொண்டு, தனக்கு புறம் காட்டி நிற்பவளைக் கண்டான்.

 

அவள் சொரூபத்தில் கூட சோகம் தெளித்தது. கனமான மனதுடன், கனத்தக் கால்களால் அடிவைத்து, அவளை நெருங்கியவன், பின்னிருந்து அவளை இறுக அணைத்துக் கொண்டான்.

 

அவனது ஒற்றை அணைப்பின் கதகதப்பு, அவளை நெகிழ வைக்கப் போதுமானதாய் இருந்ததோ?

 

அப்படியே அவன் கரங்களுக்கிடையில் இளகி, அவன் பாதத்தில் பொத்தென்று விழுந்தாள்.

 

தன் காலடியில் உருகி விழுந்தவளை, பரபரப்போடு தன் நெஞ்சம் சேர்த்துக் கொண்டவன், மீண்டும் உருகிச்செல்லக்கூட இடமில்லாத வகையில், அவளை இறுக்கமாய் அணைத்துக் கொண்டு, அவள் தலையைத் தன் நெஞ்சில் புதைத்துக் கொண்டான்.

 

மௌனத்தைக் கலைக்கும் விதமாய், அவளது விசும்பல் ஒலி… 

 

‘நம்பிக்கையும், அன்பும், நேசமும் வைத்த ஒருவர் செய்த அவச்செயல், எத்தனை கொடூரமானது என்பதை மீண்டும் மீண்டும் ஏன் இந்த இறைவன் இவளுக்குக் கொடுத்துக்கொண்டே இருக்கின்றான்?’ என்று வருந்தியவனுக்கு, முடிந்தால், அவ்விறைவினடம் கூடச் சென்று சண்டை பிடித்திடும் வேகம் தான்..

 

“ஷ்ஷ்.. ஸ்பார்கில்..” என்று மிக மென்மையாய் அவளை அழைத்தவன், அவள் முதுகைத் தடவிக் கொடுக்க, அவன் கழுத்தைச் சுற்றித் தன் கரம் கோர்த்து, அவனை அத்தனை இறுக்கமாய் அணைத்துக் கொண்டு, வெடித்து அழுதாள்..

 

“நா.. நான் இதை எதிர்ப்பார்த்தேன்.. அ..அங்க.. அண்ணா..ப்ச்..” என்று தடுமாறியவள், “என்னை அடைச்சு வச்சிருத்தப்போ அவங்க கைல இருந்த புக்.. எனக்கும் அவங்களுக்கும் ஒன்னுபோல எடுத்த புக் அது.‌. எ..என்கிட்ட குடுக்கும்போது, இதைப் படிச்சா உ..உன் மென்டல் ஹெல்த் பில்ட் ஆகும்னு சந்தோஷமா சொல்லிக் குடுத்தாங்க.‌ அ..ஆனா.. அது அவங்களுக்கு வேலை செய்யலை போல” என்று கூற,

 

எதுவும் பேசாமல், அவளுக்கு ஆறுதலைத் தன் அணைப்பில் மட்டுமே கொடுத்தான்.

 

“ஆனா.. அப்பக்கூட ஒரு நம்பிக்கை இருந்தது.. அ.. அந்தப் புக், அவங்கட்ட மட்டுமா இருக்குனு தோனுச்சு.. நிச்சயம் அண்ணா.. ப்ச்.. அவங்களா இருக்காதுனு ஒரு நம்பிக்கை வந்தது.. அ..அதை உடைச்சுட்டாங்களே.. அ..அப்ப சாத்விக்கை எனக்காகத்தானே கொன்னாங்க? அந்தக் கொலைல அப்போ எனக்கும் பங்கிருப்பதா தானே ஆகும்?” என்று அவள் அழ,

 

“டேய்.. அப்படியெல்லாம் இல்லைடா” என்று மென்மையாய் கூறினான்.

 

“சத்தியமா சாத்விக் மேல எனக்கும் கொலை செய்யற அளவு வெறி இருந்தது தான்.. ஆனா ஒருகாலமும் அதை செய்ய நான் நினைக்கலை.. இ..இங்க தப்பு செய்யுற எல்லாருக்கும் ஆண்டவன் ஒரு கணக்கு வச்சுருப்பான்னு நான் நம்பினேன்.. என் நம்பிக்கையை நீங்க பூமர், முட்டாள்தனம்னு என்ன வேணா சொல்லிக்கோங்க.. ஆனா நான் கர்மாவை நம்பினேன்.. நான் சாபம் கொடுக்குறேன், கொடுக்கலைங்குறதையெல்லாம் தாண்டி, செய்ததுக்கான பலன்னு ஒன்னு கண்டிப்பா இருக்கும்னுதான் நம்பினேன்.. அதனாலதான் சாத்விக்கைப் பத்தி எதுவும் அடுத்து யோசிக்கக்கூட கூடாதுனு நினைச்சேன். அவன் செய்தது தப்புக்கும் மேல.. ஆனா அதுக்கு சட்டத்தையும் தாண்டின ஒன்னு இருக்கும்னு நம்பினேன்.. ஆனா திரும்ப இது வேற யாருக்கும் நடந்துட்டா? அதுக்குள்ள அவனுக்கான பாடம் கொடுக்க வேண்டாமானும் தோனுச்சு.. ஆ..ஆனா அதுக்குள்ள..” என்று அழுகையில் குலுங்கியவள், “இப்ப அந்தக் கொலைல எனக்கும் பங்கு இருக்கும் தானே?” என்று கரைந்தாள்.

 

“டேய் ஸ்பார்கில்..” என்று அவள் முகம் தாங்கியவன், கட்டை விரல்களில் அவள் கன்னம் அழுத்தி, அவள் கண்ணீரைத் துடைத்தான்.

 

அவன் விரலின் ஸ்பரிசத்தை, கன்னங்கள் விரும்பியதோ? கண்களின் உதவியை நாடி, மீண்டும் கண்ணீர் பொழியச் செய்து, அவன் ஸ்பரிசத்தை மீண்டும் பெற்றது.

 

“இங்கப்பாருடா.. சரியோ தப்போ? அதை உன் சுயத்தோட நீ செய்யனும்.. அப்பத்தான் நீ சொல்ற போல அதுக்கான பலனும் உன்கிட்ட வரும்.. நீ சொன்ன அந்த கடவுளுக்கு கருணை அதிகம்டா ஸ்பார்கில்.. சரியை நீ தெரியாம செய்தாகூட கணக்கில் சேர்த்துப்பார்.. ஆனா தப்பை அப்படியில்லைடா.. தெரியாம செய்ற தப்பையே மன்னிக்கும் கடவுளா, நீ செய்யாத தப்புக்குத் தண்டிக்கப் போறார்? அதிரூபனோட விஷயம் உனக்கு எவ்வளவு மனவலியைக் கொடுக்கும்னு எனக்கு புரியுதுடா கண்ணம்மா..” என்றபடி, அவள் தலையைத் தன் மடியில் கிடத்தி, சிகை கோதிக் கொடுத்தான்.

 

மெல்லிய விசும்பலோடு, அவன் வயிற்றைச் சுற்றிக் கரம் கொடுத்து அவள் கட்டிக் கொள்ள, மெல்லிய புன்னகை, அவன் இதழில்..

 

அவள் தலைகோதியபடி, “நான் இருக்கேன்டி ஸ்பார்கில்” என்று அவன் கூற,

 

அவள் உடல் சிலிர்த்தடங்கியது.

 

கண்ணீரோடு அவனை அவள் நிமிர்ந்து பார்க்க, 

 

அதை இரு விநாடி ஆழ்ந்து பார்த்தவன், “ஏமாற்றம் கொடுக்காத ஒரு உறவும் இந்த உலகத்துல இருக்குனு நான் உனக்குக் காட்டுறேன்.. அன்னிக்கு இந்த உறவுகள் கொடுத்த கசடு, உன் மனசுலருந்து சுத்தமா அழிஞ்சுடும்” என்று ஆத்மார்த்தமான குரலில் கூறினான்.

 

அவள் கண்ணீர் இன்னும் பெருகியோட, இதழ் கடித்துத் தன் கேவல் அடக்கினாள்.

 

தன் விரலால் அவள் இதழைப் பற்களிடமிருந்து காத்தவன், “அந்த இதழைக் கடிக்கும் உரிமை உனக்கில்ல” என்று கிசுகிசுப்பான குரலில் கூற,

 

கண்ணீர் பூசிய விழிகளோடு, நாணம் கலந்தது.

 

“ப்ச்..” என்றவளாய், அவனை அணைத்துக் கொண்டவள், “வலிக்குது” என்க,

 

“நான் மருந்து போடுறேன்..” என்றவன், அவள் முகம்பற்றி, “என் காதலால” எனக்கூறி அவள் நெற்றியில் முத்தமிட்டான்.

 

“பயமாருக்கு..” என்று அவள் அடுத்து மீண்டும் ஒன்றைக் கூற,

 

“பயத்தைப் போக்க நான் தயாரா இருக்கேன்..” எனக்கூறி, அவள் உச்சியில் முத்தமிட்டான்.

 

“ரொம்ப கோலையா இருக்கேன்ல?” என்று அவள் குரல் உடையக் கேட்க,

 

“தைரியப்படுத்த துணையா நான் இருக்கும்போது, வெளிக்காட்ட முடியாத உன் பயத்தையும் தாங்க நான் தயாராதான் இருப்பேன்” எனக் கூறி, அவள் கண்ணீரை அழுந்தத் துடைத்துவிட்டான்.

 

“நிறையா புலம்புவேன்” என்று அவள் கூற,

 

“கேட்கத் தயாரா இருப்பேன்” என்றான்.

 

“அடிக்கடி அழுவேன்” என்று அவள் கூற, 

 

“ஆறுதல்படுத்த நான் இருப்பேன்” என்றான்.

 

“அடிக்கடி சண்டையும் போடுவேன்” என்று அவள் கூற,

 

“சாமாதானம் செய்ய நான் இருப்பேன்” என்றான்.

 

“உங்க அளவுக்கு லவ் பண்ண முடியும்னு தோன்றலை” என்று அவன் கூற,

 

“நீ குடுக்கும் ஒன்னை நூறா பெருக்கித்தர நான் இருப்பேன்” என்றான்.

 

விசும்பியடி அவனை அணைத்துக் கொண்டவள், “உங்கள ரொம்ப காதலிப்பேன்” என்க,

 

“நீ காதலிக்கவும், காதலிக்கப்படவும், நான் இருப்பேன்” என்றான்.

 

அவன் முகம்பற்றி, அழுத்தமாய் முத்தம் பதித்தவள், கண்ணீராய் கசிந்துருகிய காதலை, அவனுக்குக் கடத்தினாள்…

 

உவர் நீரில் சுவைத்தக் காதலையெல்லாம், தன் மனதோடு சேர்த்துக் கொண்டவன், தன் காதலை அவளுக்குப் பதிலாய் கொடுத்து, “என்னை நம்புடி.. அதுமட்டும் போதும்.. காலத்துக்கும் உன்னைக் கண்ணுக்குள்ள வச்சுத் தாங்குவேன்” என்று கூறினான்.

 

அவன் காதலின் பாரம் நெஞ்சை முட்ட, அமைதியாய் அவன் மடியிலேயே படுத்துக் கொண்டாள். சில நிமிடங்கள் மௌனமாய் கரைய, சட்டென எழுந்தவள், “மஹி சுசி எங்க?” என்று கேட்டாள்.

 

“ஹால்லதான்..” என்று அவன் கூற,

 

“ப்ச்..” என்று நெற்றியில் கரம் வைத்தவள், “வருத்தப்பட்டுட்டு இருப்பாங்க” என்று கூறினாள்.

 

“இப்பப் போய் பேசு.. உள்ள உன் ஆள்கூட ரொமான்ஸ் பண்ணிட்டு வந்து எங்களை கவனிக்குறியானு சண்டை போடப்போறா” என்று சிவப்ரியன் அவளைக் கேலி செய்ய,

 

“ப்ச்.. சும்மாருங்க ப்ரியன்” என்றபடி எழுந்தவள், கதவைத் திறந்துக் கொண்டு கூடத்திற்குச் சென்றாள்.

 

தோழிகள் இருவரும் கவலையாய் அமர்ந்திருக்க, அவர்கள் முன்வந்து மண்டியிட்டு அமர்ந்தவள், இருவரையும் அணைத்தபடி, “சாரி” என்க,

 

ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட மஹி மற்றும் சுசி, ஒன்றுபோல், “எங்களுக்கு எங்க அக்னியைப் புரியும்” என்றனர்.

 

வியப்பாய் அவர்களைப் பார்த்தவள் கண்கள், நெகிழ்ச்சியில் கலங்க, “போதும் அக்னி.. இதுக்கு மேல நீ அழுறதை பார்க்க முடியாது” என்று மஹதி அவள் கண்ணீர் துடைத்தாள்.

 

“எ..என்னால ஏத்துக்கவே முடியலைடா.. அதான்.. அ..அவங்கட்ட” என்று அக்னி விளக்கம் கொடுக்க முற்பட,

 

“எங்களுக்குள்ள நாங்க பொஸஸ் ஆகி சண்டை போடுவோம் தான். அண்ணா கூட நீ டைம் ஸ்பென்ட் பண்றதுக்குலாம் அப்படி நடந்துக்க மாட்டோம்.. உறவுகளுக்கான முக்கியத்துவம் எங்களுக்கும் புரியும்டா” என்று சுசி கூறினாள்.

 

தோழிகள் இருவரையும் அணைத்துக் கொண்டு “இந்த மாதிரி உறவுகள் கிடைக்க நிச்சயம் நான் குடுத்து வச்சுருக்கனும்” என்று நெகிழ்வாய் கூற,

 

“போதும் போதும்.. அழுது அழுது உன் கண்ணெல்லாம் வீங்கி கிடக்கு. அப்றம் அண்ணா எங்களைத் திட்டப்போகுது” என்று மஹதி கூறினாள்.

 

“சேட்டை தான உனக்கு?” என்று அவள் தலையில் கொட்டிய சிவப்ரியன், “மூனு பேரும் போய் ஃப்ரெஷ் ஆயிட்டு வாங்க. நான் டீ போடுறேன்” என்று கூற,

 

“நீயும் தான் இன்னும் காக்கில இருக்க. நீ போய் ஃப்ரெஷ் ஆகு அண்ணா. நான் போடுறேன்” என்று சுசித்ரா அவனை அனுப்பினாள்.

 

அனைவரும் புத்துணர்ச்சி பெற்றுவர, சுசியும் தேநீரோடு வந்து சேர்ந்தாள்.

 

அமைதியாய், அத்தேநீர் நேரம் கடக்க, குடித்து முடித்துவிட்டு எழுந்த அக்னிகா, “சரி நான் வரேன்” என்று கூறினாள்.

 

அவளைச் சட்டென்று நிமிர்ந்து பார்த்த தோழிகள், அமைதியாய் அவளைப் பார்க்கும் சிவப்ரியனைப் பார்த்துவிட்டு, “எதுக்குடி?” என்க,

 

“போயிட்டு வரேன்” என்று அழுத்தமாய் கூறினாள்.

 

புரிய வேண்டியவனுக்கு மட்டும் தெளிவாய் புரிந்திட்டதை, அவன் இதழோர குறுநகை எடுத்துக்கூற, அவளும் மெல்லமாய் சிரித்துக் கொண்டாள்.

 

இவர்கள் பரிபாஷனைகளைக் கண்டு உள்ளுக்குள் குழம்பிய தோழிகள், “தனியா போறியா? நாங்க வரோம்” என்க,

 

“வேணாம்டி.. பக்கம் தானே? நான் போயிப்பேன்..” என்றவள், “அதிதி அண்ணியை (அதிரூபன் மனைவி) பார்க்கப் போகனும்” என்று கூறினாள்.

 

பெண்கள் இருவரும் மீண்டும் சிவப்ரியனை நோக்க,

 

“கோர்ட்ல வச்சே அழுதுட்டே தான் போனாங்க. நான் தான் அரெஸ்ட் பண்ணிருக்கேன்.. நானே அவங்க முன்ன வந்து நின்னா நல்லாருக்காது.. நீ போயிட்டு வாடா” என்று மென்மையான குரலில் கூறினான்.

 

பெருமூச்சுடன் தலையசைத்தவள், “இதான் சொல்வீங்கனு நினைச்சேன்.. இருந்தாலும் சொல்வோமேனு சொன்னேன்.. நீங்க வொர்ரி பண்ணிக்காதீங்க. நான் போய் அண்ணியையும் தம்பியையும் பார்த்துட்டு வீட்டுக்குப் போறேன்” எனக் கூறி, தோழிகளிடமும், “ரீச் ஆயிட்டு கால் பண்ணிடுறேன்” என்று கூறினாள்.

 

“பார்த்துப்போ” என்று மஹதி கூற,

 

“எதும் யோசிக்காத.. உன்னால முடிஞ்ச ஆறுதலைச் சொல்லிட்டு வா. நீ அழுதா அவங்களுக்கு அது இன்னும் சங்கடமாகும்.. இதுல அவங்க தப்புனு எதுவும் இல்லை..” என்று சுசி கூறினாள்.

 

“ம்ம்.. சொன்னா புரிஞ்சுப்பாங்க சுசி” என்றவள், “சரி நான் வரேன்” என்க,

 

“பை ஸ்பார்கில்” என்றான்.

 

மென்மையானதொரு புன்னகையுடன், அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டவள், தனது மிதி வண்டியை எடுத்துக் கொண்டு, வானை நிமிர்ந்து பார்த்தாள்…

 

கலைந்து செல்லும் மேகங்களால், வானம் தெளிவு பெருவது போல், தெளிவைப் பெறுவதற்காக என்று சில உறவுகளை களைத்தாகத்தான் வேண்டும் என்ற நிதர்சனம் புரிய, கசப்பானதொரு புன்னகையுடன், அந்நிதர்சனம் பழகிக்கொள்ளும் மனப்பக்குவத்தோடு புறப்பட்டாள்…

-தொடரும்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
17
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்