பூ-25
குழப்பமே உருவாய் அவ்வறையில் கூடியிருந்த செய்தியாளர்கள் முன், நடுநாயகமாய், நிமிர்ந்து, தன் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு, கம்பீரமாய் வந்து நின்றான், சிவப்ரியன்.
அவனைத் தொடர்ந்து, ராம், சந்தோஷ் மற்றும் திலகா வர, செய்தியாளர்களிடையே பெரும் சலசலப்பு.
காவல் பணியை ராஜினாமா செய்ததாகக் கூறியவன், தற்போது காக்கி உடையில் வருகின்றான். தொடர் கொலையாளி என்று கைது செய்யப்பட்ட திலகா, இவர்களுடன் காவலர் உடையில் வந்து நிற்கின்றாள்.. அவர்களுக்கு ஒன்றுமே விளங்காத நிலைதான்…
“சார்.. இந்த வழக்கில் என்னதான் நடக்குது?” என்று ஒரு செய்தியாளர் கேட்க,
அவரது ‘சார்’ என்ற அழைப்பில், ஒரு கோனல் சிரிப்பு சிரித்துக் கொண்டவன், “பொறுமையா இங்க காத்திருந்ததுக்கு நன்றி. உங்க பணியை நாங்க தடுக்க நினைக்கலை. எங்களுக்கான நேரத்தில் நீங்க இடையூறு செய்றது, வழக்கைப் பாதிக்கக்கூடாதுனுதான் காக்க வைத்தோம். உங்க எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்ல நாங்களும் கடமை பட்டிருக்கோம்” என்று நிதானமாகக் கூறினான்.
செய்தியாளர்கள் அவன் பேசப்போவதை கவனிக்க ஆயத்தமாக,
அதிரூபனின் புகைப்படத்தைக் காட்டிய சிவப்ரியன், “அதிரூபன்.. தனியா ஒரு சின்ன டிபார்ட்மெண்ட் ஸ்டோர் நடத்திட்டு இருக்கார். திருநங்கை ஒருத்தரால் வளர்க்கப்பட்டவர், அவங்க தனக்கு நடந்த அப்யூஸால இறந்துபோன கோபத்தில், இந்தக் கொலைகளையெல்லாம் செய்திருக்கிறார்” என்று விளக்கம் கொடுக்க,
“இதுக்கு அவருக்கு என்ன தண்டனை தருவீங்க சார்? இத்தனைப் பேரைக் கொலை செய்திருக்கார். அவருக்கு மரண தண்டனைக் கிடைக்குமா?” என்று ஒரு செய்தியாளர் கேட்டார்.
“நம்ம நாட்டில் மரணம் ஒரு தண்டனையா அத்தனை சீக்கிரம் கொடுக்கப்படுறதில்லை.. நம்ம சட்டம் அவர் குற்றத்துக்குத் தகுந்த தண்டனையைக் கொடுக்கும். ஆனா அது மரண தண்டனையாக இருக்காது” என்று சிவப்ரியன் கூற,
“அப்ப இத்தனை உயிரிழப்புகளுக்கு என்ன சார் பதில்?” என்று ஒரு பத்திரிகையாளர் கேட்டார்.
“இறந்து போனவர்களும் தண்டனைக்கு உரியவர்கள் தான். ஆனா மரணத்தைக் கொடுக்கும் உரிமை அதிரூபன் கையில் இல்லை” என்று புதிராய் சிவப்ரியன் பேச,
“இப்ப என்ன சார் சொல்ல வரீங்க? அதிரூபன் செய்ததை நியாயம் செய்யப் பார்க்குறீங்களா?” என்று ஒரு பெண் கேட்டாள்.
“அவர் செயலை நியாயம் செய்யலை. ஆனா அதற்குப் பின் இருக்கும் காரணம் நியாயமானது” என்று அவன் கூற,
“என்ன சொல்ல வரீங்க சார்?” என்று கேட்டனர்.
“சிம்பில்.. பாலியல் வன்கொடுமை.. இது பெண்ணுக்கு மட்டுமில்லை, ஆண், திருநங்கைனு எல்லா பாலினத்தவருக்கும் நடக்குது. ஆனா இதைப் பற்றி ஒவ்வொரு முறையும் ஹேஷ்டேக் போட்டு ஒரு செய்தியா தான் பேசுறோம்.. தண்டனை போதலைனுகூட நமக்குள் பேசிக்குறோம்.. ஆனா யாருமே தனிமனித கடமையை யோசிக்கலையே? ஒரு ஆணோ? பெண்ணோ? திருநங்கையோ? இரவு நேரமும் தனியா வெளிய தைரியமா போய் வரும்போது, அவங்க கற்புக்கு எந்தப் பாதகமும் வராம இருக்கனும் அப்படிங்குறதை, ஒவ்வொருத்தரும் புரிஞ்சுக்கனும். சுய உணர்வுகளுக்காகப் பிறரை வன்புணர்வுக்கு ஆட்படுத்துவது தப்புங்குறதை உணர்ந்து எல்லாரும் செயல்படனும். இதெல்லாம் எப்படி சார் நடக்கும்னு நம்ம சாதாரணமா சொல்றதாலதான், யாரோ ஒருத்தர் தவறு செய்தாலும் இதென்ன புதுசானு நாம கடந்துபோயிடுவோமுங்குற திமிரைக் கொடுக்குது.
இப்ப இந்த வழக்குக்கு வருவோம்.. நம்ம சமூகத்தில், திருநங்கைகளுக்கான உரிமைனு நாம எந்த இடத்தில் கொடுத்திருக்கோம்? ஒரு வெப்சைட்ல லாகின் பண்றதிலிருந்து, பள்ளிக்கூடத்தில் படிக்கப் போகும் இடம் வரை, ஆண் பெண்னு இரண்டு கேடகரி தானே இருக்கு? சில இடங்களில் அதர்ஸ் கேடகரி இருக்கேனு நீங்க கேட்கலாம். ஆனா அவங்க என்ன ஆடா? மாடா? டிரான்ஸ்-ஜென்டர்னு ஆப்ஷன் தருவதுல என்ன ஆகிடப் போகுது? ஃபிஸிகலி டிஸேபில், டிரான்ஸ் ஜென்டர், பார்வையற்றவர்கள்னு எல்லாருமே இருக்கும் சமூகத்தில் தானே நாம இருக்கோம்? அவங்களும் ஆக்ஸஸ் பண்ற போல எதை நாம கொடுக்குறோம்? பிறகு எங்க இருக்கு நம்ம ஈக்வாலிடி?” என்று நீளமாய், சற்றே காட்டமாய் அவன் பேச,
“திருநங்கைகளையும் பெண்னு சேர்க்கலாம்னுகூட நினைச்சு மூன்றாம் பாலினத்தவர்னு கொடுக்காம இருந்திருக்கலாமே சார்?” என்று ஒருவன் கேட்டான்.
“அப்படினா அவங்களை ‘அது’, ‘ஒன்பது’, ‘உஸ்ஸு’னு கேலி பேசுறதை நிறுத்தனும் மிஸ்டர். அவங்களும் பெண் தானே? பெண்ணுனே சொல்லிட்டுப் போங்க. திருநங்கையாக பால் திரிந்தவர்களும் பெண் என்ற அடிப்படைலயே பார்க்கபடட்டும். தப்பே இல்லை. ஆனா பெண்களுக்கான உரிமைகளை, அவங்களுக்கும் குடுங்க. ஒரு வகுப்புல திருநங்கையும் படிக்குறாங்கனா, அவங்களை தனித்துவமா ட்ரீட் பண்ணாம நார்மலைஸ் பண்ணுங்க. அவங்க தப்பான தொழில் தான் செய்றாங்கனு அடைமொழி படுத்தும் முன்ன, அவங்க படிக்கவோ, வேலைக்குப் போகவோ நாம விட்டோமானு யோசிங்க. இதெல்லாம் நம்ம சமூதாய பொறுப்புனு எப்ப நாம உணருரோமோ அப்போதான் நம்மால இதுபோன்ற கொலைகளையெல்லாம் தடுக்க முடியும்” என்று சிவப்ரியன் கூற,
அங்கு பெரும் அமைதி சூழ்ந்தது.
அந்த அமைதியைத் தானே கலைத்த சிவப்ரியன், “எல்லாமே நம்ம கடமைனு நினைச்சா, மாற்றம் வரும். தனி மனிதனிடத்திலிருந்துதான் மாற்றம் பிறக்கும். யாராவது வந்து இன்ஸிஸ்ட் பண்ணாதான் மாறமுடியும்னு எதிர்ப்பார்க்காம, நாமலா மாற முயற்சி செய்யனும்” எனக் கூறி, “வெல்.. இந்த கேஸ் என்னால முடித்துவைக்கப்பட்டது இல்லை. இதுல என்னைவிட ராம், சந்தோஷ் அன்ட் திலகாவோட பங்களிப்பு தான் அதிகம். அதிலும் மிஸ் திலகவதியாலதான் அந்த குற்றவாளியைப் பிடிக்க முடிஞ்சது” என்று கூற,
“கொஞ்சம் புரியும்படி நடந்ததை விளக்க முடியுமா சார்?” என்று ஒரு பெண் கேட்டாள்.
கொலையாளி திருநங்கைகளுக்கு எதிரானவர்களைத்தான் கடத்துகின்றான் என்பதால், நிச்சயம் அக்னிகாவை எதுவும் செய்யமாட்டான் என்று அவளைத் தேடி ஓடிய சிலமணி நேரம் பின்பே சிவப்ரியனுக்கு உரைத்தது.
தனது கூட்டத்துடன், காவல் நிலையத்தில், தனது அறையில் கூடியவன், ஒரு திட்டம் தீட்டினான்.
“டீம்.. நான் ப்ரஸ்ஸ கூப்டு வேலையை ராஜினாமா செய்யப்போறதா அறிவிக்கப் போறேன்” என்று அவன் கூற,
“சார்?!” என்று மூவருமே அதிர்வாய் அழைத்தனர்.
“ச்சில்.. ஜஸ்ட் அனௌன்ஸ்மென்ட் தான். மகாலிங்கம் சார்கிட்ட பேசிட்டேன். அவரும் இதுக்கு கோ-ஆப்ரேட் செய்றதா சொல்லிட்டார். கில்லருக்கு நான் வேலையை விட்டுட்டதா நம்ப வைக்கத்தான் போறேன். அன்ட் மிஸ் திலகா. நீங்க ஒரு உதவி செய்யனும்” என்று சிவப்ரியன் கூற,
“சொல்லுங்க சார்” என்றாள்.
“ஓகே.. இது எந்தளவு வர்க் ஆகும்னு தெரியலை. ஆனா இப்ப நமக்கு இருக்கும் கடைசி ஆப்ஷன் இதுதான். உங்க எல்லாருக்கும் அக்னியையும் தெரியும், எனக்கும் அவளுக்குமான உறவும் தெரியும்னு நம்புறேன்..” எனக்கூறி ஒரு இடைவெளி விட்டவன், “கில்லருக்கு நான் வேலையிலிருந்து போகனும்.. ஏன்னா அக்னிகா ஒரு திருநங்கை. அவனைப் பொருத்தவரை, திருநங்கைகளுக்கு ஆதரவா நடக்கும் எதுவும் தடையில்லாம நடக்கனும். நான் அவனைப் பிடிக்கவும் கூடாது, என்னால அக்னிகாவுக்கு நடக்கும் நல்லதும் கெடக் கூடாது. அதுக்கு நான் இந்தப் பணியில் இருக்கக் கூடாது. நான் வேலையிலிருந்து ரிலீவ் ஆகிட்டதா அவனை நம்ப வைக்கனும். கண்டிப்பா மீடியா இதை வச்சு, இந்த வழக்கின் நிலை என்னாகுமோ? அப்படினு பல கதைகள் உருவாக்கும். அந்த நேரம், ராமும் சந்தோஷும் மிஸ் திலகாவைத்தான் கில்லர்னு அறிவிக்கனும்” என்க, ஆண்கள் இருவரும் அவனை அதிர்வாய் பார்த்தனர்.
திலகா லேசாய் புன்னகைக்க, அவளுக்கு விடயம் புரிந்துவிட்டதை சிவப்ரியனும் புரிந்துகொண்டான்.
“எஸ் திலகா.. நீங்க ஒரு திருநங்கைனும், நீங்க தான் இந்த கொலைகளைச் செய்றதாகவும் இந்த வழக்கை முடிச்சு வைக்கனும். உண்மையான குற்றவாளி இதைப் பார்த்தா, நிச்சயம் ட்ரிகர் ஆவான். ஒன்னு ராம் அன்ட் சந்தோஷ் இந்த வழக்கை மூடி வைக்க முயற்சிக்குறதா நினைச்சு, அவங்களை டார்கெட் பண்ணி வருவான். இல்லைனா, திலகாவைக் காப்பாற்ற வருவான். ரெண்டுல எது நடந்தாலும் நமக்கு நல்லது தான். சோ.. வி ஷுட் ட்ராப் ஹிம்” என்று தீவிரக் குரலில் சிவப்ரியன் கூற,
“எனக்கு இதுக்கு முழு சம்மதம் சார்” என்று திலகா கூறினாள்.
“தேங்ஸ் திலகா” என்றவன், “ஓகே டீம்.. வி வில் ப்ரொசீட்” என்று கூறி, தன் திட்டத்தின் படி, முதலில் வேலையை ராஜினாமா செய்ததாய் செய்தி வெளியிட்டான்.
அவன் எதிர்ப்பார்த்தபடியே அக்னிகா வீடு வந்து சேர்ந்தாள்.
அன்று இரவே, திலகவதியைப் பற்றிய செய்தி வெளியாக, அதை தொலைகாட்சியில் பார்த்துக் கொண்டிருந்த அதிரூபன், பெரும் கோபத்திற்கு ஆளானான்.
‘ஷிட் ஷிட் ஷிட்..’ என்று கோபத்தின் உச்சத்தில் எம்பிக் குதித்தவனுக்கு, தொலைகாட்சியில் ஒலிபரப்பான, பரிதாபமான திலகாவின் முகம் மனதில் வந்து வந்து போனது.
நிதானமாக யோசித்து, திட்டம் வகுத்தவன், முதலில் ராம் மற்றும் சந்தோஷை தனது பாணியில் கொலை செய்து, அவர்களது தீர்ப்புத் தவறென்று நிரூபித்தபின் திலகாவைக் காப்பாற்ற வேண்டும் என்று திட்டம் வகுத்தான்.
அதன்படி, தனது பொருட்களுடன், அவர்கள் வீட்டை நோக்கிச் சென்றான்.
முதலில் ராம், வீட்டில் தனியாகத்தான் இருப்பான் என்பதால், அவனைத் தாக்கவே, அதிரூபன் சென்றான். ராம் மற்றும் சந்தோஷ், இருவரின் வீட்டிலும், மறைமுகமாய் காவல் படை பதுங்கியிருக்க, அதை எதிர்பாராத அதிரூபன், அமைதியாய் ராமின் வீட்டிற்குள் நுழைந்தான்.
படுக்கையில் படுத்திருந்த ராமைப் பார்த்தவன், ‘உனக்கு நிம்மதியான உறக்கத்தைத் தரேன்டா’ என்றபடி, தனது பெட்டியைத் திறந்து, உலோகத்தை உருக்கத் துவங்கினான்.
இவை யாவும், ஜாமரின் பயன்பாட்டை மீறி, செயல்படும் ‘டிஜிட்டல் கேமரா’ மூலம் அதிரூபனே அறியாமல், பதிவு செய்யப்பட்டது. தனது உலோகத்தை உருக்கிவிட்டு, படுக்கையின் அருகே சென்றவன், புறம் காட்டிப் படுத்திருந்தவனைத் திருப்ப, அவ்விடத்தில் படுத்திருந்த சிவப்ரியன், அதிரூபன் சுதாரிக்கும் முன், அவன் கையில் உள்ள உலோகத்தை எட்டி உதைத்திருந்தான்.
அதிர்ச்சியில் விழித்த அதிரூபன், தப்ப வேண்டி திரும்ப, காவலர்கள் அவனைச் சூழ்ந்திருந்தனர்.
அவனைப் பின்னிருந்து, வளைத்துப் பிடித்துக் கொண்ட சிவப்ரியன், அவன் முகத்திரையை அவிழ்க்க, அவர்களுக்கு முன்னிருந்த ஆளுயரக் கண்ணாடியில், அதிரூபனின் முகம் தெரிந்தது.
“ரூபன் அண்ணா” என்று அதிர்வோடு அவன் முனுமுனுக்க, கண்கள் சிவந்து கோபத்தில் ஜொலிக்க, இதழில் ஒரு குரூரப் புன்னகையுடன் அவனைப் பார்த்தான், அதிரூபன்…
அப்போதுதான், அந்த காணொளியில் பாதி வடிவமைப்போடு கண்ட கையுறையை ரூபனுடன் ஒருமுறை கை குலுக்கும்போது பார்த்தது, சிவப்ரியனுக்கு நினைவு வந்தது.
“வெல் மூவ் சிவப்ரியன்” என்று ரூபன் கூற,
“தேங்ஸ்.. பட் சாரி” என்றவன், அவன் கரங்களில் விலங்கைப் பூட்டினான்.
செய்தியாளர் கேட்டக் கேள்வியில், சில நிமிடங்களில் நடந்ததை மனதோடு ஓட்டிப் பார்த்த சிவப்ரியன், “அதிரூபன் எனக்கு நான் வேலையை ராஜினாமா செய்யனும்னு எனக்கு கடிதம் மூலம் தூது அனுப்பினார்” என்றவன் அக்னியின் பெயர் அன்றி, அவளைக் கடத்தி மிரட்டியதை மேலோட்டமாய் கூறினான்.
“அதனாலதான் கில்லரை ட்ராப் பண்ண நான் வேலையை விட்ட போலவும், மிஸ் திலகாவை திருநங்கைனும், அவங்கதான் கொலையாளினும் ஒரு நாடகம் போட்டோம். அஸ் வி எக்ஸ்பெக்டட், அவன் ட்ரிகர் ஆகி, எங்க ட்ராப்ல மாட்டிக்கிட்டான்” என்று கூற,
செய்தியாளர்கள் அவர்கள் திட்டத்தை எண்ணி வியந்து, பாராட்டினர்.
பின் ராம், சந்தோஷ் மற்றும் திலகாவிடமும் பேட்டி எடுக்கப்பட, திலகாவின் செயலுக்குப் பெரும் பாராட்டுக்கள் வழங்கப்பட்டது.
செய்தியாளர்கள் கூட்டமைப்பை முடித்துக் கொண்டு, டீ.ஜீ மகாலிங்கத்தைச் சந்திக்கச் சென்ற, நம் காவலர் குழு, அவரது அனுமதியுடன் உள்ளே நுழைய,
“ஆம் வெரி ப்ரௌட் ஆஃப் யூ மை பாய்” என்று மகாலிங்கம் அவன் புஜங்களைப் பற்றி உலுக்கியபடி கூறினார்.
“இல்லை சார்.. இந்த வழக்கில் நீங்க ராம், சந்தோஷ் அன்ட் திலகாவை நினைச்சுத்தான் பெருமைபடனும். நிச்சயம் அவங்க இல்லாம இது சாத்தியமே இல்லை” என்று எந்தவித தலைகணமும் இன்றி அவன் கூற,
“ரியலி உங்க பணி, ரொம்ப பெருசு. ராம், சந்தோஷ் அன்ட் திலகா.. மை பிக் அப்லாஸ் டூ யூ ஆல்” என்று மகாலிங்கம் மனமார பாராட்டினார்.
மூவரும் புன்னகையோடு தங்கள் நன்றியை வெளிப்படுத்த, வழக்கு சம்மந்தமான கோப்புகளை தயார் செய்து, அதிரூபனை நீதிமன்றம் அழைத்துச் செல்லும் பணிக்கு ஆயத்தமாயினர்.
நீதிமன்றத்தில், வழக்கு சம்மந்தமான தகவல்கள், கொலையுண்டோரின் எண்ணிக்கை, கொலைசெய்யப்பட்ட விதம், அக்னிகாவின் வாக்குமூலம், அதிரூபனுக்கு எதிரான ஆதாரங்கள் என்று அனைத்தும் சமர்ப்பிக்கப்பட, கண்களில் கண்ணீரோடும், கையில் தன் மகனோடும், ஆயுள் தண்டனைப் பெற்று, சிறைக்குச் செல்ல தயாராக இருக்கும் தன் கணவரைப் பார்க்க இயலாமல், அங்கிருந்த சென்றாள், அதிரூபனின் மனைவி…
அழுகையோடு சென்றவரைக் கண்டு ஒரு பெருமூச்சு விட்ட சிவப்ரியன், அதிரூபனை சிறைச்சாலைக்கு அனுப்பிவைக்க வேண்டி, அழைத்துச் செல்ல, “அவளை நல்லா பார்த்துக்கோ” என்று அதிரூபன் கூறினான்.
“உண்மைலயே அவ மேல பாசம் இருந்திருந்தா, இப்படி இறங்கிருக்க மாட்டீங்க.. செயலோட நோக்கம் மட்டுமில்ல, செயல்பாடோட முறையை வச்சுத்தான், உலகம் பேசும்.. உங்க கொலையால இங்க எதுவும் மாறிடப்போறதில்லை.. அதை புரிஞ்சுக்கும் நிலையிலும் நீங்க இல்லை..” என்றவனாய், அவரை வண்டியில் ஏற்றினான்.
அத்தனை வேலைகளையும் துரிதமாய் செய்துகொண்டு இருந்தாலும்கூட, அவன் மனதில் உருத்திக் கொண்டே இருந்தது, அவனவளின் மனவோட்டம் மட்டுமே…
தன் வாழ்க்கையில் தனக்குக் கிடைத்த நல் உள்ளங்கள் என்று அவள் குறிப்பிடும்போதெல்லாம், அதிரூபனைச் சேர்க்காமல் அவள் கூறியதே இல்லை… தற்போது இது அவளை எத்தனைதூரம் பாதித்திருக்கும் என்று நினைக்கவே, அவனுக்கு அத்தனை வலித்தது.
அடுத்தடுத்த வேலைகள் அவனை இழுத்துக்கொள்ளப் பார்க்க, “திலகா.. நீங்களும் சந்தோஷும் போய் அவனை ஜெயில்ல விட முடியுமா? ராமுக்கு வேற வேலைக் கொடுத்து அனுப்பிருக்கேன்.. எ..எனக்கு.. வீட்டுக்குப் போகனும் கொஞ்சம்…” என்று தடுமாற்றமாய், திலகாவிடம் கூறினான்.
அவன் எதற்காக வீட்டிற்குச் செல்லத் தவிக்கின்றான் என்பது திலகாவிற்குப் புரிந்தது. இரண்டு நாட்களாய் அவன் அல்லாடித் தவிப்பதை அவளும் பார்த்துக் கொண்டுதானே இருக்கின்றாள்?
“நானும் சந்தோஷ் சாரும் போறோம் சார். யூ கேரி ஆன்” என்று அவள் கூற,
நன்றியாய் ஒரு பார்வைப் பார்த்தவன், தனது வண்டியை எடுத்துக் கொண்டு, விரைந்து வீட்டை வந்தடைந்தான்.
வண்டியை அரக்க பறக்க நிறுத்திவிட்டு, வீட்டுக் கூடத்திற்குள் அவன் நுழைய, சுசித்ராவும், மஹதியும் சோகமே உருவாய் அமர்ந்திருந்தனர்.
“சுசி.. மஹி” என்று அவன் அழைக்க, இருவரும், “வா அண்ணா” என்றனர்.
“அக்னி?” என்று அவன் கேட்க,
“கோர்ட்லருந்து வந்ததும் ரூமுக்குப் போய் கதவை பூட்டினவதான்.. இன்னும் வரலை” என்று மஹதி கூறினாள்.
கண்களை அழுத்தமாய் மூடி, பெரும் பெருமூச்சை வெளியிட்டவன், அவள் அறை நோக்கிச் சென்றான்.
தானும் செல்லவிருந்த சுசியைப் பிடித்து நிறுத்திய மஹதி, “அண்ணா மட்டும் போகட்டும் சுசி..” என்று கூற,
கண்களில் நீரோடு சுசித்ராவும் அமைதியாய் அமர்ந்து கொண்டாள்.
செய்தியைப் பார்த்ததிலிருந்து மூன்று பெண்களுக்கும் நிலைகொள்ள முடியவில்லை. அத்தனை வருத்தமாக இருந்தனர். அதிலும் அக்னிகாவைத்தான் சொல்லவும் வேண்டுமா?
அறைக்குள் சென்று அடைந்தவள் வெளியே வரவே இல்லை. தோழிகள் சென்று அழைத்தபோதும் கூட, ‘அவங்க வந்தா சொல்லு’ என்பதோடு முடித்துக் கொண்டாள்.
தற்போது அவன் தன் உயிரானவள் உயிர் மீட்க, அறை வாசலில் சித்தமாய் காத்து நின்றான்….
-தொடரும்…