Loading

பூ-21

 

உலகமே இடிந்துபோனதைப் போல் அமர்ந்திருந்தான், சிவப்ரியன். அவனைச் சுற்றி சோகமே உருவாய் நின்றிருந்தனர், ராம், சந்தோஷ் மற்றும் திலகா.

 

வெளியே கண்ணீரே உருவாய் சுசித்ரா மற்றும் மஹா..

 

“மஹி.. அ..அவ ரொம்ப பயந்துடுவாள்ல? அ..அவ பாவம்டி. ஏன் கடவுள் இப்படி பண்றாரு? அவ சந்தோஷமா இருக்குறத பாத்து இன்னிக்குக் காலைலதான்டி அவ்ளோ சந்தோஷப்படட்டேன்” என்று அழுது கரைய,

 

மஹதிக்கு வார்த்தைகளே வரவில்லை. 

 

உள்ளே உயிரே போகும் வலியில் தவித்துக் கொண்டிருந்த சிவப்ரியனுக்கு அடுத்து என்ன என்றே புரியவில்லை.

 

“சார்..” என்று திலகா அழைக்க,

 

அவனால் நிலையாக இருக்க இயலவில்லை. கண்ணை முட்டிக்கொண்டு அப்படி கண்ணீர் வந்தது.

 

‘எப்படி? எப்படி?’ என்ற கேள்வி மட்டுமே அவனை வண்டாய் குடைந்தது.

 

“சார்.. ஃபோன் டிரேஸ் பண்ணலாம்” என்று ராம் கூற,

 

“அவ லொகேஷன் எனக்கு அனுப்பிதான் இருந்தா ராம்.. அது ஆஃப் ஆயிடுச்சு” என்று இறுக்கமாய் கூறினான்.

 

உள்ளே வந்த சுசித்ரா, ஆத்திரம் பொறுக்காமல் அண்ணன் சட்டையைப் பிடித்து, “அவளைக் கண்டுபிடி அண்ணா.. அவளைக் கண்டுபிடி.. எனக்கு அவளைப் பாக்கனும்” என்று கத்த,

 

அவனால் பதிலே பேச முடியவில்லை.

 

மஹதி கொட்டும் கண்ணீரோடு அவனிடம் வந்து, “அவளைப் பாக்கனும் அண்ணா.. அவ.. அவ.. முடியலை அண்ணா” என்று கதற,

 

இருவரையும் தன் பரந்த கரங்களுக்குள் அரவணைத்துக் கொண்டவனையும் மீறி அவன் உடல் அழுகையில் குலுங்கியது. மற்ற காவலர்களுக்குப் பார்க்கவே அத்தனை வருத்தமாக இருந்தது. எத்தனை கம்பீரமாய் இருப்பவன்… இப்படி ஒருத்தியால் நிலைகுலைந்து இருக்கின்றானே? என்று வியப்பாகவும், வருத்தமாகவும் இருந்தது.

 

“அண்ணா.. அவ வேணும் அண்ணா..” என்று மஹதி கூற,

 

“அவளை எ..எதும் பண்ணிட மாட்டாங்க தானே அண்ணா” என்று அழுகையோடு அழுகையாய் சுசி கேட்டாள்.

 

அவனிடம் ஏது பதில்? அவனிடமும் மன்றாடல் மட்டும் தானே? வருத்தத்தில் நெஞ்சை கசக்கிப் பிழிவதைப் போல் உணர்ந்தான்.

 

“பிடிப்பேன்.. நிச்சயம் அவளைக் கண்டுபிடிப்பேன்” என்றவன், இருவரையும் விலக்கி, “ராம்.. எனக்கு ஒரு ஹெல்ப். என் சிஸ்டர்ஸ பத்திரமா வீட்ல சேர்த்துட்டுப் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்ய முடியுமா?” என்று கேட்க,

 

“நிச்சயமா சார்” என்றான்.

 

பெண்கள் இருவரும் வருத்தமாய் அவனை நோக்க,

 

“கண்டிப்பா அக்னியோட தான் வருவேன். பத்திரமா போங்க” என்று கூறினான்.

 

கண்ணீரோடு கண்ணீராய் பெண்கள் இருவரும் ராமுடன் சென்றனர்.

 

தன் தங்கைகள் இருவரையும் ராமுடன் அனுப்பி வைத்துவிட்டு, அப்படியே அமர்ந்தவன் மனம் பெரும் பதைபதைப்பில் குமைந்தது.

 

அன்றைய காலை எத்தனை அழகாக விடிந்தது? அதன் சுகந்தமும், நிம்மதியும் இன்னும் கொண்டவள் வியர்வை வாசம் பிடித்துக் கொண்ட சட்டையாய் அல்லவா அவன் அகத்தில் உள்ளது?

 

அதன் வாசம் கரையும் முன்பே இப்படி ஒரு சம்பவம் நிகழ வேண்டுமா? 

நிகழத்தான் வேண்டுமா?

 

ஆம்! அக்னிகா, அந்த தொடர் கொலையாளியால் கடத்தப்பட்டுவிட்டாள்.. அவன் உயிரானவள், அவன் உயிர்ப்பைத் தூக்கிக் கொண்டு, கொடியவனிடம் சிக்கிக் கொண்டுவிட்டாள். 

 

காலை அத்தனை சந்தோஷமாய் அவரவர் வேலையைப் பார்த்துச் சென்றனர். மாலை வரை அனைத்தும் நன்றாகத்தான் சென்றது.

 

மாலை வீடு திரும்ப வேண்டி, வெளியேறிய அக்னிகாவை, மஹதி ரயில் நிலையம் வரைக் கூட்டி வந்தாள்.

 

அவளுக்கு கையசைத்து விடை கொடுத்துத் திரும்பியவள், கண்ணிமைக்கும் நொடியில், கடத்தப்பட்டாள்.

 

கடத்தப்பட்ட வண்டியை அரண்டு போய் பார்த்த மஹதி, “ஹே..” என்று அலறியபடி வண்டியின் பின்னே ஓட, ஒரு காகிதம் சுருட்டி அவள் முகத்தில் எரியப்பட்டது.

 

தடுமாறி விழுந்தவள், கண்கள் கலங்கி, கைகள் நடுநடுங்க அதனைப் பிரித்துப் பார்க்க, ‘சிவப்ரியன் வேலையை விட்டுப்போனா, அக்னிகா உயிர் திரும்பும்’ என்று தட்டச்சு செய்திருந்தது. 

 

உடனே சுசித்ராவுக்கு அழைத்தவள், “சு..சுசி.. நம்ம அக்னியைக் கடத்திட்டாங்க” என்று நடு சாலையில் மண்டியிட்டு அமர்ந்தபடி கதறினாள்.

 

மருத்துவமனையிலியுந்த சுசித்ரா, மஹதி கூறிய வார்த்தைகளில் பதறி எழுந்து, “என்னடி சொல்ற?” என்க,

 

“ஆமா சுசி.. அ..அண்ணாவை.. அண்ணாவை வேலையைவிடச் சொல்லி மிரட்டல் கடிதம் போட்டுக் கடத்திட்டுப் போயிட்டாங்க” என்று வெடித்து அழுதாள்.

 

“என்னது?” என்று மேலும் அதிர்ந்த சுசித்ரா, உடனே மஹதியை வரவழைத்துக் கொண்டு, காவல் நிலையம் வந்திருந்தாள். 

 

உள்ளே வழக்கு சம்மந்தமாக தன் படையுடன் பேசிக் கொண்டிருந்த சிவப்ரியன், “அண்ணா.. “ என்ற கதறலோடு பெண்கள் இருவருமே நுழைந்ததில் பதறி நிமிர்ந்தான்.

 

தங்கைகளின் குரலில் பதறிப்போய் நிமிர்ந்த சிவப்ரியன், இருவரும் அழுதபடி வரும் கோலம் கண்டு, பதைபதைப்பாய் எழ, அவனிடம் வந்து அவனை அணைத்துக் கொண்டு வெடித்து அழத் துவங்கினர்.

 

“மஹி.. சுசி.. என்னாச்சு?” என்றவன் கண்கள் அவர்கள் பின்னே, அவனவள் வருகின்றாளா? என்றுதான் தேடியது.

 

அவள் இல்லை என்கவுமே இவனுக்கு மனம் நடுங்கத் துவங்கியது.

 

“சுசி.. மஹி.. அ.. அக்னி எங்க?” என்று அவன் தடுமாற்றமாய் கேட்க,

 

அவனிடம் அந்த காகிதத்தை நீட்டினாள், மஹதி.

 

கைகள் நடுங்குவதாய் உணர்ந்தான்…

 

தன்னை திடப்படுத்திக்கொள்ள முயன்றவனாய் அதை வாங்கியவன், பிரித்துப் பார்க்க, அதிலிருந்த வரிகள் அவனை அதிர்ந்து விழி விரிக்கச் செய்தது.

 

“கடத்திட்டாங்க அண்ணா” என்று மஹதி அழுதபடி கூற,

 

“எப்போ? எ..எப்படி?” என்று தவிப்பாய் கேட்டான்.

 

மற்ற காவலர்கள் நடப்பதைக் கண்டு அதிர்வாய் நின்றிருந்தனர்.

 

“வேலை முடிச்சுட்டு அவளை ரெயில்வே ஸ்டேஷன்ல விட்பபோனேன் அண்ணா.. அ..அங்க என் கண்ணு முன்ன தூக்கிட்டுப் போயிட்டாங்க கார்ல்” என்று கதறி அழுதபடியே மஹதி கூற,

 

அவனுக்கு உலகமே இருண்டு போனதைப் போல் இருந்தது.

 

அவன் வேலையை விட்டால் மட்டுமே அக்னிகா கிடைப்பாள் என்று அத்தாள் கூறிய செய்தி, அவன் உயிர் வரைத் தீண்டி ஆட்டம் காண வைத்தது.

 

தங்கைகளை வெளியே அனுப்பிவிட்டு பொத்தென்று அமர்ந்து விட்டவனுக்கு, நினைவுகளிலிருந்து மீண்டும் கூட, மீள முடியா துயர் வாட்டியது.

 

அவளது அலைபேசி சரியாய், அவள் கடத்தப்பட்ட இடத்திலிருந்து சற்று தொலைவிலேயே அணைத்து வைக்கப் பட்டிருந்தது. 

 

“சார்.. அந்தச் சீரியல் கில்லர் தான் அவங்களை கடத்தியிருப்பான்னு தோனுது‌. நாம இப்ப கைல எடுத்துருக்கும் ஒரே வழக்கு அதுதான்.. அதனால இதை நாம கைவிடனும்னு தான் அவன் இப்படிப் பண்ணிருக்கனும்” என்று சந்தோஷ் கூற,

 

எதையும் யோசிக்கக்கூட முடியவில்லை அவனால். 

 

பத்து நிமிடம் அப்படியே அமர்ந்துவிட்டவன் மனமெங்கும், அவளது பால் முகம் மட்டுமே வந்து போனது..

 

வலியென்றால் அப்படியொரு வலி… இதுதான் உயிர்போகும் வலியோ? என்று வியப்பதற்கும் கூட அவனிடம் சுயமில்லை…

 

‘ம்மா.. அக்னி.. வலிக்குதுடா.. உன்னை இழந்துடக்கூடாதுடா நானு.. செத்துடுவேன்டி ஸ்பார்கில்.. ப்ளீஸ்.. உன்னை வந்து அடைய எனக்கு ஒரு வழி சொல்லு ஸ்பார்கில்‌‌.. ப்ளீஸ்டி.. நீ தான் உன்னை அடைய என்னை வழிநடத்தனும்’ என்று மனதோடு அவளிடம் பேசிக் கொண்டவன், முகத்தை அழுந்தத் துடைத்துக் கொண்டு எழுந்து நின்றான்

 

ராமும் அவ்விடம் வந்து சேர்ந்துவிட, “அக்னிகா கடத்தப்பட்ட இடத்தைச் சுற்றி ஒரு முறை தேடிப் பார்த்துட்டு வருவோம். அந்த இடத்தைச் சுற்றி எங்க கேமராஸ் இருந்தாலும், ஃபுட்டேஜஸ் கலெக்ட் பண்ணிட்டு வந்துடுங்க‌‌. வேற எதாவது சந்தேகம் படும்படியான ஆட்கள், பொருள்னு எதாவது தெரிந்தாலும் கலெக்ட் பண்ணிக்கோங்க” என்று இறுகிய குரலில் சிவப்ரியன் கூறினான்.

 

அவனிடம் அத்தனை நேரம் இருந்த கண்ணீரின் தடங்கள் எல்லாம், வைரமாய் உரைந்து போனதைப் போன்றதொரு இறுக்கம்… அதை மற்ற மூவராலும் உணர முடிந்தது.

 

நால்வரும் உடனே அந்த ரயில் நிலையத்தை அடைய, “சந்தோஷ் திலகா.. நீங்க இந்த சைட் போய் ரோட் சைட் கடைகள்ல விசாரிங்க‌. ராம் நீங்க ரெயில்வே ஸ்டேஷன் வெளிய உள்ள கேமரா ஃபுட்டேஜஸ் வாங்கிட்டு வாங்க. நான் அந்த பக்கம் போய் தேடுறேன்” என்று சிவப்ரியன் கூறினான்.

 

அதன்படி அனைவரும் அவரவருக்கான பணியை நோக்கி ஓடினர்.

 

நேரத்தின் ஓட்டம் அதிவேகமாய் இருந்தது‌… தங்களால் முடிந்தளவு தகவல் திரட்டிக் கொண்டு அனைவரும் மீண்டும் காவல் நிலையம் கூடினர்.

 

“மிஸ் திலகா எங்க?” என்று ராம் கேட்க,

 

“அவங்க வேறு ஒரு பக்கம் தேட போனாங்க சார். வந்துட்டுத்தான் இருக்காங்க” என்று சந்தோஷ் கூறினான்.

 

“ஓகே டீம்.. நாம கொண்டுவந்த ஃபுட்டேஜஸ பார்க்கலாம்” என்று சிவப்ரியன் கூற,

 

இருவரும் தங்கள் பணியில் இறங்கினர். 

 

அங்கு நாற்காலியில் கைகால்கள் கட்டப்பட்ட நிலையில், மயக்கத்திலிருந்த அக்னிகா, மெல்ல மெல்ல சுயம் மீண்டு, கண்விழிக்க முயற்சித்தாள்‌.

 

தலையில் அடிவாங்கியதைப் போன்றதொரு பாரம் அவளுக்கு. மயக்க மருந்தின் வேலையால், கண்கள் திறக்கவே கொஞ்சம் சிரமமாகத்தான் உணர்ந்தாள்.

 

சிரமப்பட்டு அவள் வெற்றிகரமாய் முழித்துக் கொள்ள, அவள் சுதாரிக்கும் முன், அவள் மூக்கைப் பிடித்து, வாய் திறக்கச் செய்து, ஏதோ ஒரு திரவம் மடமடவென்று ஊற்றப்பட்டது.

 

‘ஆ’ என்று கத்த வந்தவளுக்கு, வாயில் ஊற்றப்பட்ட திரவம் உள்ளே செல்ல, அதன் சுவையில், அது எலுமிச்சை பழச்சாறு என்று புரிந்தது. அது கொடுத்த தெளிவு, அவளை ஆசுவாசம் அடைய விடாமல், மேலும் அச்சுறுத்தியது.

 

அவளால் தடுக்கவும் முடியவில்லை, அதை ஏற்கவும் முடியவில்லை.

 

அந்த குவலையிலுள்ள பழச்சாறு காலியாகவும்தான் விடப்பட்டாள்.

 

மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க, தவித்து நின்றவள், ‘அய்யோ? என்னதிது? இதுல என்ன கலந்திருக்கும்? விஷமா? மயக்க மருந்தா?’ என்று படபடப்பாய் யோசிக்க, அவள் முன் வந்து நின்றது அவ்வுருவம்.

 

தன் கண்பார்வைக்கு முன் புலப்பட்ட அந்த கருப்பு நிற பூட்ஸைப் பார்த்தவாறு, அச்சத்துடன் அவள் பார்வையை மேலேற்ற, முழுக்க முழுக்க கருப்பு நிறத்தில் மட்டுமே, உடல் முழுதும் மறைத்திருந்த ஆடையைத் தாங்கி நின்றது அவ்வுருவம்.

 

அவள் முன்பே இருமுறை பார்த்த உருவம்!

 

ஆம்! மினிஸ்டர் மகன் கொள்ளப்பட்ட இரவு, அவள் வீட்டின் அருகே அவள் பார்த்தது, பின் முந்தைய நாள் இரவு, மீண்டும் தன் வீட்டின் அருகே பார்த்த அவ்வுருவத்தை, அவள் தொடர்ந்து சென்றபோது பார்த்தது…

 

தொலைவிலிருந்து பார்த்த அவ்வுருவத்தை, தற்போது வெகு அருகில் பார்க்கின்றாள். தண்டுவடம் சில்லிட்டது. அந்த உருவத்தின் கையிலிருந்த குவலையைப் பார்த்தவள் பதட்டம் இன்னும் அதிகமானது.

 

அவ்வறையை படபடப்பாய் அவள் பார்வையிட, ஒரு மூலையில் நிறைய கடப்பாறைகள் காணப்பட்டது. விழிகள் விரிய அதைப் பார்த்தவள் அவ்வுருவத்தைப் பார்க்க, அந்த உருவத்திடம் எந்த அசைவும் இல்லை.

 

மூக்கின் துவாரங்களின் வழி போதாமல், வாய் திறந்து மூச்சை இழுத்து விட்டவளுக்கு, அவ்வுருவம் ஆணா பெண்ணா என்றுகூட தெரியவில்லை…

 

அந்த உருவம் அவளை நோக்கிக் கரத்தைக் கொண்டுவர, பயத்தில் நாற்காலியோடு ஒன்றி விழிகளை இறுக மூடிக் கொண்டாள். அவள் உச்சந்தலையில் கரம் வைத்த உருவம், மெல்ல தட்டிக் கொடுக்க, அவள் பட்டெனக் கண்கள் திறந்தாள்.

 

மென்மை… அத்தனைக்கு அத்தனை மென்மையாய் அவள் தலைகோதிய அவ்வுருவம், அவள் கன்னம் தட்டிவிட்டு, சென்று அவளுக்கு எதிரே இருந்த நீள்விருக்கையில் சாய்ந்து அமர்ந்தது.

 

கருப்பு நிற கையுறைகளைக் கழட்டிவைத்திட்டு, நீள்விருக்கை முன்னிருந்த மேஜையிலிருந்து, ஒரு ஆங்கில புத்தகத்தைப் படிக்கத் துவங்கியது, அவ்வுருவம்…

 

விசித்திரமாய், வித்யாசமாய் அவ்வுருவத்தைப் பார்த்தாள்.

 

அந்த வருடல்.. அதில் அவளால் பயத்தையோ, அருவருப்பையோ உணர முடியவில்லை.. மாறாய், அதில் ஒரு அன்பை உணர்ந்தாள்.. ஆம்! அன்பு தான்… அதுவும் புது அன்பல்ல.. அவளால் முன்பே அனுபவிக்கப்பட்ட, அவளுக்குப் பழக்கப்பட்ட அன்பை உணர்ந்தாள்…

 

அதில் நெஞ்சம் தடதடக்க அவ்வுருவத்தையே பார்த்தவள், அவ்வுருவத்தின் கரத்தினைக் கண்டு, மனதோடு திடுக்கிட்டுப்போனாள்…

-தொடரும்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
6
+1
23
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments

    1. Athi ya tha irupan nu nenaikren… edavathu irukum so avanga agni k veedu kooda kuduthrukalam