Loading

பூ-20

 

அதிகாலை பொழுது… இரவு பெய்த அடைமழை ஓய்ந்து, மெல்லிய குளிர் படர்ந்திருந்த அந்தக் காலை வேளையில், ஒருவர் கதகதப்பை மற்றவர் உணர்ந்த வண்ணம் தூங்கிக் கொண்டிருந்தனர், அக்னிகா மற்றும் சிவப்ரியன். இருவருக்குமே வெகுகாலம் கழித்துக் கிடைக்கும் ஆழ்ந்த உறக்கமாய் அது அமைந்தது…

 

அந்த நிம்மதியான உணர்வை உணர்ந்தபடியே, துயில் கலைந்த அக்னிகா, தன்னை அணைத்துக் கொண்டு சிறு குழந்தைபோல் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பவனைப் பார்த்தாள்.

 

அப்படியொரு உறக்கம் அவனிடம். அவன் உறக்கத்திலேயே அவனது சோர்வை அவளால் உணர முடிந்தது.

 

அவள் கரங்களின் அரவணைப்பிற்குள் உறங்கிக்கொண்டிருந்தான்.

 

அவனை அணைத்தபடி அழுது அறற்றி, கலைப்பில் உறங்கிப்போனதோடு சரி.. படுத்தவுடன் இருவரிடமும் அப்படியொரு உறக்கம். அந்த நிம்மதியான உறக்கம், இருவருக்கும், ஒருவர் மீது மற்றவர் கொண்டிருக்கும் காதலை, பூதாகரமாய் விளக்கியது.

 

தற்போது அவன் முகம் பார்த்தவளுக்கு, ‘இந்தக் காதலை ஏற்றால் தான் என்ன பிழை?’ என்று தோன்றியது. அவனையே இமைக்க மறந்து பார்த்திருந்தாள்.. உறக்கம் கலைந்து தானாய் கண் விழித்தவன் முதலில் கண்டது அவளைத்தான்… இன்று இரவு அவளைக் காண நேரிடும் வாய்ப்பு அமையாது என்று அறிந்ததால் தான் விதி இப்படியான விடியலை பரிசாய் கொடுத்தது போலும்.

 

அவன் பார்வை உணர்ந்து நாணம் கொண்டவள் மெல்லிய புன்னகை சிந்த, அவளை இன்னும் இருக்கிக் கொண்டு, “குட் மார்னிங்” என்று கிசுகிசுத்தான்.

 

விழிகள் விரிய அவனைப் பார்த்தவள் இதழில் புன்னகைக்கு குறைவில்லை… “இப்படியே உன் ஃபிரெண்டுக்கு ஒரு வீடியோ கால் போடுவமா?” என்று நக்கலாய் அவன் கேட்க,

 

விழிகள் விரிய அவனைப் பார்த்தவள், அவன் புஜத்தில் அடித்து, “விளையாட்டா?” என்றாள்.

 

“சீரியஸாதான்டி சொல்றேன்” என்றவன், எட்டி மேஜையிலிருந்து அவளது அலைபேசியை எடுத்து, அவள் ரேகை வைத்துத் திறந்தான்.

 

“ப்ரியன்.. விளையாடாதீங்க.. கேலி செய்வாங்க” என்று அவள் கூற,

 

“என்ன கேலி செய்வாங்களாம்? இரு பாத்துடுவோம்” என்றவனாய், அழைத்தேவிட்டான்‌.

 

இவளுக்குத்தான் வெட்கம் பிடுங்கித் தின்றது. 

 

“நான் போறேன் விடுங்க” என்று அவள் எழ முற்பட்டவளைத் தன் கைவளைவில் பிடித்துக் கொண்டவன், “இரேன்டி” என்க,

 

அழைப்பை ஏற்றிருந்த சுசி, “எங்கடா அண்ணா இருக்க? நைட்டு வீட்டுப்பக்கமே வரக்காணும்?” என்று தூக்கத்தோடு கேட்டாள்.

 

“உன் ஃபிரெண்டு வீட்லதான்” என்று அவன் கூற,

 

“ப்ரியன்..” என்று மெல்லிய குரலில் அதட்டினாள்.

 

“என்னடா சொல்ற?” என்று அவள் புரியாமல் கேட்க,

 

அலைபேசியைத் தூக்கி பிடித்துக் கொண்டு தங்கள் இருவரையும் காண்பித்தான். அப்போதுதான் அது அக்னிகாவின் எண்ணிலிருந்து வந்திருக்கும் அழைப்பென்றே உரைத்தது.

 

“அச்சோ..” என்று முகத்தைத் தன் கரங்களில் மூடிக் கொண்ட அக்னிகா, அவனை மனதோடு வறுத்தெடுக்க,

 

“டேய் என்னங்கடா நடக்குது இங்க?” என்று சுசி ஆச்சரியமாய் கேட்டாள்.

 

“மழை பெய்ததேனு வீட்ல இடம் கேட்டேன்.. ஆனா உன் ஃபிரெண்டோட தாராள மனசைப் பார்த்தியா?” என்று அவன் நக்கல் செய்ய,

 

அவன் மார்பிலேயே வலிக்கும்படி குத்தியவள், “கட் பண்ணுங்க ப்ரியன்” என்று கெஞ்சினாள்.

 

அதில் வாய்விட்டு சிரித்த சுசிக்கு உண்மையில் அத்தனை சந்தோஷமாய் இருந்தது. அவள் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பது மட்டும் தானே சுசியின் அதிகபட்ச ஆசை! தற்போது முகம் விகசிக்க, நாணம் தடையிட அவள் முகம் காட்டும் வர்ணங்களே, அவள் வாழ்வில் வசந்தம் பூக்கும் சாயலை எடுத்துக்காட்டப் போதுமானதாக இருந்தது‌.

 

“ப்ரியன்..” என்று அவள் பல்லைக் கடிக்க,

 

“பேபி கேர்ள்.. நான் கட் பண்றேன்.. ரொம்ப வெட்கப்படாத” என்று சுசி அழைப்பைத் துண்டித்தாள்.

 

அவன் தோள்களில் மாறி மாறி அடித்தவள், “ஏன் ப்ரியன் என்னை இப்படி சங்கடப்படுத்துறீங்க?” என்று ஆற்றாமையாய் கேட்க,

 

“ம்ஹும்.. வெட்கப்பட வைக்குறேன்” என்றான்.

 

“அச்சோ.. ப்ரியன்.. விடுங்களேன்” என்றவள் அவனிடமிருந்து விடுபட போராட, அதில் வாய்விட்டு.. இல்லை இல்லை.. மனம் விட்டு சிரித்தான்.

 

“ம்ம்.. ரொம்ப பண்றீங்க” என்று அவள் சிணுங்கினாள் கூற,

 

சிரித்தபடி அவளை நெஞ்சோடு அணைத்துக் கொண்டு தலை கோதியவன், “சந்தோஷமா இருக்குடி” என்றான்.

 

அவன் அணைப்பில் கட்டுண்டு இருந்தவளும் அவன் முகம் நிமிர்ந்து பார்த்து, “எனக்கும்” என்று ஆத்மார்த்தமான குரலில் கூற,

 

அவளை அத்தனை சந்தோஷத்தோடு பார்த்தான்.

 

“சாரி..” என்று மெல்லொலியில் கூறியவள், “எனக்கு இந்தக் காதல் கொடுக்கும் உணர்வு சந்தோஷமாவே இருந்தாலும், அதை ஏற்க மனம் ரொம்ப பயந்துச்சு… எனக்கு என்ன புரியவைக்கனும்னு புரியலை.‌ ஏன்னா என்னைவிட என் உணர்வுகளை நீங்க நல்லா புரிஞ்சுக்குறீங்க.. ஆனா.. அந்தச் சம்பவம், அது கொடுத்த வலியும் ரணமும்.. இன்னும் மனசுக்குள்ள இருக்கு. சத்தியமா மறக்க முடியலை.. அதுவும் அ..அந்த லேப்ல..” எனறவள் குரல் ஏகத்துக்கும் நடுங்கியது.

 

அவள் முதுகை மென்மையாய் வருடிக் கொடுத்தான்.

 

“இந்த உலகமே இப்படித்தான்னு சொல்லமாட்டேன்.. இதே உலகத்துல தான் நீங்க, சுசி, மஹி, அதிரூபன் அண்ணா போன்ற நல்லவங்களையும் நான் சந்திச்சேன்.. ஆனா அந்தக் கொடுமையான காலத்தை என்னால மறக்க முடியலை. அங்க.. அங்க.. சாப்பிடாம ஒரு.. ஒருத்தரால எத்தனை நாள் இருக்க முடியும்னு பார்க்கப் பட்டினி போடுவாங்க.. உயிரே போற போல இருக்குனு எத்தனை நாள் கதறியிருக்கேன் தெரியுமா? ஒரே நிறத்தை மட்டும் பார்க்க வச்சு, ஒருமாதிரி பைத்தியம் பிடிக்குற போல இருக்கும்.. மக்கிப்போன குப்பைகளுக்கு நடுவுல பூட்டிப் போட்டுடுவாங்க.. பத்து நாளுக்கு ஒருமுறை கூட்டிட்டுப்போய் ப்ரைன் ஃபங்ஷனை டெஸ்ட் பண்ணிப் பார்ப்பாங்க.. அவ்ளோ அழுத்தமா இருக்கும். இ..இன்னும் என்னலாம்..” என்றவள் உடல் அருவருத்து, அழுதபடியே அவனை இறுக அணைத்துக் கொண்டாள்.

 

முகம் முற்றுமாய் வாடி, கண்கள் கலங்க அவளைப் பார்த்தவன், அவளுக்குத் தட்டிக் கொடுத்தபடியே இருந்தான்.

 

“சொ..சொல்லகூட முடியலை ப்ரியன்.. என்னால அதை மறக்கவே முடியலை.. குப்பை மாறி மூச்சு முட்ட வைக்குது‌‌.. எனக்கு.. இதெல்லாம் அந்தக் காதலால தான? கடவுள் படைப்புகளில் ஆண் பெண் என்ற இரண்டு தான்னு இந்த உலகம் சொன்னா, நாங்க மட்டும் அதுலருந்து என்ன மாறிட்டோம்? ஆணும் பெண்ணுமா தானே இருக்கோம்? உயிருள்ள படைப்புகள் அத்தனைக்கும் அன்புங்குறது பொது தானே? அப்படி நினைச்சுத்தானே அவனைக் காதலிச்சேன்? ஆ..ஆனா.. அந்தக் காதல்.. அது என்னை எப்படியொரு நிலைக்குத் தள்ளிடுச்சுனு நினைக்கும்போதெல்லாம் உயிரே போற மாதிரி வலிக்கும் ப்ரியன்… நி..நீங்கக் காதல்னு வந்து சொன்னீங்களே.. எனக்கு அப்பவே உங்களை ரொம்ப பிடிக்கும். அதுக்குப் பெயர் காதலாங்குறதை நான் தெரிஞ்சுக்கலை அப்படிங்குறதை விட, தெரிஞ்சுக்க நான் விரும்பலை, அதுக்கான துணிவும் எனக்கு இல்லை. நீங்கச் சொன்னபிறகு அந்தப் பிடித்தம் அழுத்தம்பெறத் துவங்கிச்சு.. ஆனா அந்த அழுத்தம்.. ரொ..ரொம்ப வலிச்சுது ப்ரியன்..” என்று அவள் கூற,

 

அவன் விழிகளிலிருந்து கண்ணீர் கோடாய் வழிந்தது‌.

 

“நீங்க ஒவ்வொரு முறையும் வந்து காதலைச் சொல்லும்போது.. அப்படியிருக்கும்.. எனக்கு ஏன் இந்த காதல் முதல்லயே கிடைக்கலைனு ஆதங்கமா இருக்கும்.. என்னால ஏற்க முடியாத நேரத்தில் இது ஏன் வந்து வருத்துதுனு தோன்றும்.. அப்றம் நீங்க தர்ற அந்த பேப்பர் பூ..” என்றவள், கண்ணீர் மின்னும் விழிகளோடு, “ஏன் அதைக் குடுத்தீங்க?” என்று அவன் வெகு நாட்களாக அவள் கேட்டுவிட ஆசை கொண்ட கேள்வியைக் கேட்டாள்.

 

இமை குடைகள் நீரில் நனைந்து, இதழ்கள் சிரிக்க அவளைப் பார்த்தவன் முகத்தில் அத்தனை பொழிவு…

 

“ஏன்னா.. நீ என் காகிதப்பூ” என்று அவன் கூற,

 

தற்போது கோபத்தைத் தாண்டி, அவன் காரணத்திற்காக காத்திருந்தாள்.

 

“இயற்கையா இருக்கும் நிஜப்பூவை வாசத்தின் அடிப்படைல தானே பெண்ணோடு ஒப்பிடுறாங்க.. பூவோட உயிர்ப்பு அதோட வாசத்துல மட்டுமா இருக்கு? அது மலர்ந்திருக்குறதுலயும் தானே இருக்கு? மலர்களை வாசத்துக்காக மட்டுமா சூடுறாங்க? அது மலர்ந்து முடியை அலங்கரிக்கும் பாங்குனு ஒன்னும் இருக்கு தானே? எல்லா மலரும் வாசம் வீசுறது இல்லையே.. வாழைப்பூ மணம் வீசும் மலரா என்ன? அதோட நற்குணங்கள் எத்தனை இருக்கு? காதிப்பூனு அவன் உன்னை சொல்லிட்ட வார்த்தை உன்னை வதைச்சதால தானே நீ அதை வெறுக்குற? எனக்கு உன்னை காகிதப்பூனு சொல்றதுல நீ நினைக்கும்படியான அர்த்தங்கள் எதுவும் நினைவு வரலை‌. என்னிக்குமே வாடாம, என் வாழ்க்கைல எப்பவுமே மலர்ந்திருக்கும் மலர் நீ. காகிதப்பூக்களுக்கு மலர்ந்து, வாடி, உதிர கால அளவு எதுவும் இருக்கா என்ன? நாம பத்திரமா வச்சுகிட்டா காலம் முழுக்க நம்மகூடவே வாடாமதானே இருக்கும்? உன்னை நான் பத்திரமா வச்சுப்பேன்.. நீயும் வாடாம என்கூடவே இருப்ப‌… அப்படினா நீ என் காகிதப்பூ தானே?” என்று அவன் கூற,

 

அவனையே ஆச்சரியமும், காதலும் ததும்ப பார்த்திருந்தாள்.

 

விழியிலிருந்து மௌனமாய் வடிந்த கண்ணீரெல்லாம் இதழை உரசி இனிக்கச் செய்தது…

 

“ஐ லவ் யூ ப்ரியன்…” என்று அவள் கூற,

 

கேட்டுவிட மாட்டோமா என்று தவம் கிடந்த சொற்களை அவள் மொழிந்த நொடி, உலகமே தன் வசம் வந்திட்டதாய் உணர்ந்தான்.

 

மலையைப் புரட்டிப்போட்ட மாவீரனென்று புகழ்பெற்று அழைக்கப்பெறும் நேரம், வீரன் அடையும் பெருமை அவனிடம்..

 

அவள் கன்னம் பற்றியவன், உச்சந்தலையில் அழுத்தமாய் தன் இதழ் பதித்து, “லவ் யூ ஸ்பார்கில்..” என்று கூற,

 

உடல் சிலிர்த்து உள்ளம் பூரித்து, அவன் அணைப்பையும், அரவணைப்பையும் ஏற்றாள்.

 

நிமிடங்கள் மௌனமாய் கழிய, ஜன்னல் வழி வந்த வெளிச்சம் உரைத்த பின்புதான், அன்றாட பணியே அவர்களுக்கு நினைவு வந்தது.

 

“ஓ காட்..” என்று பதறி எழுந்தவன், “அக்னிமா.. லேட் ஆச்சு பாரு..” என்க,

 

“அச்சுச்சோ..” என்றபடி அவளும் எழுந்தாள்.

 

விரைந்து சென்று புத்துணர்ச்சி பெற்று வந்தவள், “நான் பிரெட் டோஸ்ட் பண்றேன்.. சமைக்க பெருசா எதுமே இல்லை வீட்ல.. அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க” என்று கூற,

 

மெல்லிய புன்னகையுடன், “சரிங்க வீட்டம்மா” என்றவன், குளிக்கச் சென்றான்.

 

குளித்து முடித்து, அவள் வீட்டில் இருக்கும், அவனது உடை ஒன்றை எடுத்துப் போட்டுக் கொண்டவன், சமையலறை வர, முட்டைகளை வேகவைத்துத் தோலுறித்து, ரொட்டிகளையும் வாட்டி எடுத்து வைத்திருந்தாள்.

 

பெரிய கண்டாடி போத்தலில் பாலை நிறப்பி, வேகவைத்த முட்டைகளை மசித்து, மசாலாக்களையும் சேர்த்து, அதனை ரொட்டிகளுக்கு நடுவே வைத்து, தட்டிலிட்டாள்.

 

சட்டை பொத்தான்களை அணிந்தபடியே வந்தவனிடம் அதை கொடுத்தவள், சென்று துவாளை ஒன்றை எடுத்து வந்து, அவனது ஈரக்கூந்தலை துடைத்துவிட, “ஹ்ம்.. கல்யாணமே ஆகிட்டபோல இருக்கு” என்று கூறினான்.

 

சன்னமான சிரிப்போடு, துவட்டி முடித்துத் தான் தயாராகி வந்தவள், உணவை உண்ண, “ஆமா.. நேத்து அந்த நேரம் எதுக்கு நீ வெளிய போன?” என்று கேட்டான்.

 

சரியாக அந்நேரம், அவனது அலைபேசி ஒலிக்க, “ஹலோ.. சொல்லுங்க ராம்” என்றான்.

 

“எஸ் எஸ் ராம்.. இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவேன்” என்று கூறி அழைப்பைத் துண்டித்த சிவப்ரியன், “டீஸீ சாரைக் காலைல மீட் பண்றதா இருந்தோம்.. மறந்தே போச்சு” என்று கூறிக் கொள்ள,

 

“சரி அப்ப கிளம்புங்க. நைட் பேசிக்கலாம்” என்றாள்.

 

“இன்னிக்கும் என்கூடவே வந்து படுத்துக்கடானு சிம்பாலிக்க சொல்றீங்களோ ஸ்பார்கில்?” என்று சிரித்தவன், “ஓகேடா.. டேக் கேர். பார்த்து போ. ரீச் ஆகிட்டு ஒரு மெசேஜ் போட்டுடு” என்றுவிட்டு புறப்பட்டான்.

 

செல்பவனையே வித்யாசமான உணர்வோடு பார்த்து நின்றாள், அக்னிகா…

 

-தொடரும்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
22
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்