பூ-18
அடர்ந்த இருள் படிந்த சாலையில், கருமையோடு கருமையாய், வந்தது அந்த உருவம்…
காவலர்கள் குடியிருப்புப் பகுதியில் இருக்கும் சிவப்ரியனின் வீட்டின் அருகே வந்த அந்த உருவம், அசராமல் வீட்டிற்குள் ஏறிக் குதித்தது.
அதன் பிறகு வெரும் சுவர் மட்டுமே தெரிந்தது. அடுத்த பத்து நிமிடத்திற்குப் பின், மீண்டும் அது ஏறி மதில் சுவரில் அமர, அந்த நாய் அந்த உருவத்தைப் பார்த்து, குறைக்கத் துவங்கியது.
அந்த நாயையே பார்த்த உருவம் கீழே குதிக்க, எம்பி அவன் கையுறையைக் கடித்து இழுத்தது.
நாயைப் பார்த்துவிட்டுக் கையுறையைத் தேட குனிந்த உருவம், தெருமுனையில் சிவனின் நிழல் ஆடுவதைக் கண்டு, விரைந்து சென்றுவிட, நாயும் குறைப்பதை நிறுத்தி, சிவனை நோக்கியது.
இதனை, நாயின் கழுத்துப்பட்டியில் பொருத்தப்பட்ட கண்காணிப்புக் கருவியின் உபயத்தால் பார்த்துக்கொண்டிருந்தான், சிவப்ரியன்.
முன்பே அந்தத் தெருநாயின் கழுத்தில் இதைக் கட்ட வேண்டும் என்ற நோக்கத்தோடு வாங்கி வந்தவன் வேலையை, மிச்சம் செய்யும் விதமாக, ராம் நாயினை பிடித்து வந்திருக்க, அந்தப் பட்டியை யாரும் கவனிக்கும் முன்பே அதன் கழுத்தில் கட்டிவிட்டு அனுப்பியிருந்தான்.
அதிலிருந்த காமிரா மூலம் அதன் முன் வந்து செல்லும் நபர்களைச் சிறிது நேரம் பார்வையிட்டவன், அதில் இருக்கும் டிராக்கர் மூலமாக, அது எங்கே சென்று கொண்டிருந்தது என்பதையும் அவ்வப்போது பார்த்து வந்தான்.
கடைசியில் தன் வீட்டிற்கே வந்து நின்ற அந்தக் குற்றவாளியைக் கண்டுகொண்டு நாய் வந்திருக்க, காணொளிகளைத் தனது அலைபேசியில் பதிவிரக்கம் செய்துகொண்டு, மீண்டும் அதன் கழுத்தில் கட்டிவிட்டு அனுப்பியிருந்தான்.
கண்களை மூடிச் சாய்ந்து அமர்ந்த சிவப்ரியன், மூச்சை இழுத்துவிட, எங்கோ எதையோ தவர விடுவதாய் தோன்றியது.
விரைந்து எழுந்து குளித்துத் தயாராகி வந்தவன் முன் உணவினை எடுத்து வைத்தாள், சுசித்ரா.
“வேலைக்குப் போறியா?” என்று கேட்டபடி, உணவை அள்ளி வாயில் வைத்தான்.
“ம்ம்.. மூனு பேருமே போறோம். என்ன அண்ணா?” என்று சுசி கேட்க,
அவள் அறையைப் பார்த்தவன், மணியைப் பார்த்துவிட்டு, “ரெடியாகலை அதுங்க ரெண்டும்?” என்று கேட்டான்.
“ஆகுவாளுங்க.. அக்னி நல்ல தூக்கம். இப்பத்தான் எழுப்பிவிட்டேன்.. மஹி ரெடியாகிட்டா” எனும்போதே மஹதி வந்தாள்.
தனது கையுறைகளை அணிந்துகொண்டு, வந்தவள், “இப்பவே லேட் சுசி.. சாப்பாடைக் கட்டிக் குடு. நான் இவளைக் காலேஜ்ல விட்டுட்டு அப்படியே கடைக்குப் போயிடுறேன்” என்று கூற,
“அவ குளிச்சுட்டு வர்றதுக்குள்ள நீ சாப்பிடலாம் தானே?” என்ற சிவா, தானே உணவை அவளுக்கு நீட்டினான்.
“ஓகே..” என்றபடி புன்னகையாய் அவன் அருகேவுள்ள நாற்காலியை இழுத்துப்போட்டு அவள் அமர,
அவளுக்கு உணவை ஊட்டி விட்டான்.
சுசிக்கு லேசாக உடைமை எட்டிப் பார்க்கத்தான் செய்தது.
அதை உணர்ந்து எழும் குறுஞ்சிரிப்பை அடக்கியபடி மஹதிக்கு அவன் உணவை ஊட்ட, அறையிலிருந்து கல்லூரிப் பையை சரிபார்த்தபடி அக்னிகா வந்தாள்.
சுசியின் முகம் போகும் போக்கை புருவம் சுருக்கிப் பார்த்தபடி அவள் சிவா பக்கம் திரும்ப, அவன் மஹதிக்கு ஊட்டிக் கொண்டிருந்தான்.
பக்கென்று வந்த சிரிப்பை அடக்கியபடி வந்தவள், “சுசி.. ரொம்ப பசிக்குது” என்க,
அடுத்த நொடியே அவள் வாயிலும் உணவைத் திணித்திருந்தான்.
அவள் உணரும் முன்பே உணவு அவள் வாய்க்குள் வந்திருந்தது.
அதிர்ந்துபோய் அவள் அவனை நோக்க,
அவன் சின்ன சிரிப்போடு, “ரொம்ப பொறும்பாத.. இந்தா வாங்கு” என்று சுசிக்கும் நீட்டினான்.
அவன் தலையில் குட்டியபடி வந்து தானும் அமர்ந்த சுசி, “ஆ..” என்று வாய் திறக்க,
சிரித்தபடி உணவை ஊட்டி அவள் மூக்கை செல்லமாய் நிமிண்டினான்.
வாயில் உள்ளதை மென்றபடி இன்னொரு தட்டை அக்னி எடுக்கப் போக, அவள் இருகரங்களையும் தன் ஒரே கரத்தில் பிடித்துக் கொண்டவன், அவள் வாய்க்கு நேரே உணவை நீட்ட, அவள் திருதிருவென்று விழித்தாள்.
சுசி மற்றும் மஹதியின் ஆர்வமான பார்வை அவளுக்கு சிறு கூச்சத்தைக் கொடுத்தது.
“ம்ம்.. மணியாகுது” என்று சிவப்ரியன் கூற,
“ப்..ப்ரியன்” என்று தடுமாறினாள்.
“நீயா சாப்பிட்டா உனக்கு நல்லது. முரண்டு பிடிச்சா எனக்கு நல்லது. எப்படி வசதி?” என்று அவன் குதர்க்கமாய் கேட்க,
விழிகள் விரித்தவள், வேகமாய் உணவை வாங்கிக் கொண்டாள்.
சுசி மற்றும் மஹதி இவர்கள் சம்பாஷனைகளில் சிரித்துக் கொள்ள,
“வேலை முடிச்சுட்டு நான் வீட்டுக்குப் போயிடுறேன் சுசி. என் டிரஸஸ்லாம் பேக் பண்ணிக்கிட்டேன்” என்று அக்னிகா கூறினாள்.
சுசி சிவாவைப் பார்க்க, அவன் உணவை ஊட்டியபடி தலையாட்டினான்.
பின் சுசியும் சம்மதமாய் அக்னிக்கு தலையசைப்பைக் கொடுக்க,
அவன் அடுத்த வாய் ஊட்டவும், “போதும்.. எவ்ளோ சாப்பிடுறது? மூனு பேர் சாப்பாட்டை எனக்கே தந்துடாதீங்க” என்று அவன் கரம் பற்றி, அவன் விரல்களுக்கு இடையிலிருந்த உணவை அவனே உண்ணும்படி செய்தாள்.
லேசாய் அவள் புறம் சரிந்தவன், மெல்ல உணவை மென்று முழுங்கி, “எனக்கு நீ ஊட்டனும்னு ஆசைப்படுறதை வெளிப்படையாவே சொல்லியிருக்கலாம்ல ஸ்பார்கில்? நான் எப்படி ஓபனா இருக்கேன்? நீ அப்படி என்கிட்ட இருக்க மாட்டேங்குறியே?” என்று குறும்பாய் கூற,
அவனை விழிகள் விரிய பார்த்தவள், தனது தோழிகளைப் படக்கென்று திரும்பிப் பார்த்தாள்.
“மஹி.. நீ வா சாப்பாடு கட்டுவோம்” என்று சுசி மஹதியைக் கூட்டிக் கொண்டு சமையலறைக்குள் செல்ல,
வாய் பிளந்து தன் தோழிகள் செல்வதைப் பார்த்தவள் எழ முற்பட, அவள் கரம் பற்றி தன் அருகிலேயே அமர்த்திக் கொண்டான்.
“ப்ச்..” என்றவள், “என்ன திடீர்னு இப்படிலாம் பண்றீங்க?” என்று கேட்க,
“ப்ச்” என்று தோள்களை குலுக்கியபடி கண்கள் சிமிட்டியவன், “தோனுது” என்றான்.
“விளையாடாதீங்க.. காலேஜ் போனும்” என்று அவள் தடுமாற,
“எனக்கு பசிக்குது” என்றான்.
“அப்ப சாப்பிடுங்க” என்று அவள் கூற,
“என் கை பிஸியாருக்கே” என்று அவளைப் பற்றியிருக்கும் கரம் பார்த்தான்.
“அந்தக் கை என்ன மாங்கா பறிக்குதா?” என்று அவள் கூற,
“இல்ல.. அந்தக் கைக்கு நான் ஸ்டேச்சு கேம் சொல்லிக்கொடுத்து சிலையாக்கிட்டேன்” என்று கூறினான்.
‘ஞ’ என்று விழித்தபடி அவனை அக்னி நோக்க,
“அதான் இப்ப யாருமில்லையே? தைரியமா ஊட்டிவிடு” என்று அவன் கூறினான்.
“இங்கப் பாருங்க ப்ரியன்.. இந்த விளையாட்டெல்லாம் வேணாம். என்னை விடுங்க” என்று கோபமாகத்தான் சொல்ல முயற்சித்தாள்.
ஆனால் அது முடியவில்லை…
“ஊட்டி விடு, உன்னை விடுறேன்” என்று அவன் கூற,
“ப்ரியன் திஸ் இஸ் டூ மச்” என்றாள்.
அவளைக் கொஞ்சம் போல் நெருங்கி, முகத்தைப் பாவம்போல் வைத்தபடி, “பசிக்குதுடி” என்று அவன் கூற,
அவள் இமைகள் தடுமாறியது.
‘படுத்துறாரு’ என்றபடி ஒருவாய் உணவை வேகமாய் எடுத்து அவன் வாயருகே அவள் கொண்டு செல்ல, அவன் அலைபேசி அதிர்ந்து ஒலித்தது.
அதில் திடுக்கிட்டு உணவை அவள் தவறவிட, விழும் முன் அதைப் பிடித்துத் தட்டில் போட்டவன், விரல்களைச் சப்பிக்கொண்டு எழுந்து சென்றான்.
“சாப்பிடலையா” என்று அவள் பேச வரும் நேரம் அவன் அழைப்பை ஏற்று விட, பெண்ணவள் மௌனமானாள்.
எதிரில் என்ன சொல்லப்பட்டதோ? “வரேன்” என்றவன், சென்று கைகளைக் கழுவிக் கொண்டுவர,
“சாப்பிடலை?” என்றாள்.
“வேலைமா.. கிளம்பனும்” என்றவன், அவளை அணைத்துக் கொண்டு, மென்மையாய் தலைகோதி, “சேஃபா போயிட்டு சேஃபா வா. உன் லைவ் லொகேஷன் எனக்கு ஷேர் செய்து வச்சிரு. எஸ்.ஓ.எஸ் ஆக்டிவேட் பண்ணிக்கோ. எதும்னா எனக்கு ஸிக்னல் குடுத்துடு. ஜஸ்ட் உன் பாதுகாப்புக்குத்தான் சொல்றேன். கண்டதையும் யோசிக்காம ரிலாக்ஸா போயிட்டு ரிலாக்ஸா வா. அந்த வீட்லயே தங்கினாலும் சரிதான். ஆனா மஹியைக் கூட வச்சுக்கோ. இது எனக்காக” என்று கூறி நகர,
செல்லும் அவனையே அமைதியாகப் பார்த்து நின்றாள்.
வேகமாய், தனது வண்டியைக் கிளப்பிக் கொண்டு வந்தவன், சந்தோஷ் அழைத்து வரச்சொல்லிய இடத்தை அடைய, அங்கு, தார் சாலை ஒன்றில், கண்கள் திறந்திருந்த நிலையில், வாயில் கொதிக்கும் உலோகம் ஊற்றப்பட்டு, சாலையோடு கடப்பாரையால் ஒரு உடல் அறைந்து வைக்கப்பட்டிருந்தது. அருகே ரத்தத்தால் ‘சாரி’ என்ற வார்த்தையும்.
சுற்றிலும் காவலர்களால் அவ்விடம் தடை செய்யப்பட்டிருந்தது.
தன்விஷா, சாத்விக், தினேஷ், இவர்களையடுத்து கொலையாளி திட்டமிட்டு, காவலர்களால் சிறு காயத்தோடு காப்பாற்றப்பட்ட திலக்… இந்த வரிசையில், அடுத்து சேர்ந்திருந்தாள், ஹர்ஷினி.
ராம், சிவப்ரியன், சந்தோஷ் மற்றும் திலகா ஆகிய நால்வரும், அந்தச் சடலத்தையே பார்த்துக் கொண்டிருந்தனர். பார்ப்பதற்கே பயம் உணரச்செய்யும் சடலம் தான்… ஆனால் பார்த்துப் பார்த்துப் பழகிவிட்டது போலும் என்பதாய், வெறித்து நின்றனர்.
உடற்கூர் ஆய்வாளர்கள் மற்றும் தடையவியல் துறையினர் தங்கள் பணியை முடித்து உடலை அப்புறப்படுத்த, உடற்கூற் ஆய்வாளர், காவலர்கள் நால்வரையும் நெருங்கி, “நைட் ஒன்னுலருந்து ரெண்டுக்குள்ள கொலை நடந்திருக்க வாய்ப்புகள் அதிகம். மற்றபடி பழைய கேஸ்ல இல்லாத புது தகவல் எதுவும் இப்பவரை இல்லை” என்றார்.
தான் வீடு சென்று சேரவே இரவு பன்னிரெண்டு மணியைத் தாண்டியிருக்கும். தன்வீட்டிலிருந்து இங்கு வண்டியில் அவன் வந்து சேர ஒரு மணி ஆகியிருக்கும் என்று மனதோடு அனுமாணித்த சிவப்ரியன், தனது குழுவினரோடு அவ்விடத்தை சோதனை செய்துவிட்டுச் சென்றான்.
காவல் நிலையத்தை அடைந்ததும் அவர்கள் முகமெல்லாம் இருண்டு தான் இருந்தது. இன்று மாலை செய்தியாளர் சந்திப்பு இருப்பதாய், கூறிய மகாலிங்கம், ’காவல்துறை தூங்கிக் கொண்டிருந்ததானு கேட்டு கழுவி ஊத்தப்போறானுங்க. டிபார்ட்மென்டுக்கே பெரிய அவமானம்’ என்று முனுமுனுத்துவிட்டே வைத்திருந்தார்.
“இப்ப என்ன பண்றது சார்?” என்று திலகா கேட்க,
“நேற்று பண்ணிரெண்டு மணிபோல அவன் என் வீட்டுக்கு வந்தான்” என்று சிவப்ரியன் கூறினான்.
மற்ற மூவரும் அவனை ஆச்சரியமாய் நோக்க, தனது அலைபேசியை எடுத்து, தெருநாய் மூலமாக பதிவான காணொளியைக் காட்டினான்.
“சார்… இது வழமையா அவன் கொலைசெய்யும்போது போடும் அவுட் ஃபிட். ஆனா அவன் எப்பவுமே கொலை செய்யப்போகும்போது ஜாமர் வச்சுப்பான் தானே?” என்று ராம் கேட்டான்.
மற்ற மூவருமே ‘அட ஆமாம்ல?’ என்று ஆச்சரியம் கொள்ள,
“சப்போஸ் சார் வீட்லருந்து அவன் தன்னோட வீட்டுக்குப் போயிட்டு பிறகு ஜாமரை எடுத்துக்கிட்டுக்கூட கொலை செய்யப் போயிருக்கலாமே ராம் சார்? எங்க போனாலும் ஜாமர் வச்சுட்டேவா போகப்போறான்?” என்று திலகா கேட்டாள்.
“அப்படியும் இருக்கலாம் திலகா மேம். ஆனா அப்படியிருந்தாலும் கூட நமக்கு ஒரு க்ளூ கிடைச்சதுக்கு சமானம் தான். சார் வீட்டுலருந்து அவன் இந்த இடத்திற்கு வர எப்படியும் ஒரு மணி ஆகும். கொலை ஒன்றுலருந்து இரண்டு மணிக்குள்ள நடக்கப்பட்டிருக்கலாம்னு ஃபாரன்சிக் ஆஃபிஸர் சொன்னாங்க. அன்ட் ஹர்ஷினி ஃபோன்ல அவங்க ஃபிரெண்ட்கூட ஒன்னு பத்து வரை கால்பேசிட்டு இருந்ததா அவங்க கால் ஹிஸ்டரில இருந்தது. ஒன்று பத்துக்கு அவங்க இருந்த லொகேஷன் அன்ட் கொலை நடந்த இடத்துக்கு அவங்க லொகேஷன் வந்த டைம் ட்ரேஸ் செய்தப்ப மணி ஒன்னு இருபத்தி நாலு. எப்படியும் கொலை ஒரு ஒன்னரை மணிக்கு நடந்திருக்கலாம்னு வச்சுப்போம். அவன் வந்து அவனோட திரவங்களையெல்லாம் ரெடி செய்யவும் அவனுக்கு நேரம் வேணும் இல்லையா? அதுக்குள்ள அவனால வீட்டுக்குப் போய் ஜாமரை எடுத்துட்டு வந்து இத்தனையும் செய்ய முடியும்னா…” என்று நீளமாக பேசிய சந்தோஷ் நிறுத்த,
“அவன் வீடு இந்த சுத்துவட்டாரத்தில் பக்கத்துல இருக்குனு அர்த்தம்” என்று சிவன் கூறினான்.
அனைவரும் பரபரப்பாய் கொலை நடந்த பகுதிக்கு அருகிலுள்ள இடங்களில் கிடைத்தக் காணொளிகளையெல்லாம் திரட்டினர்.
திரட்டிக் கொண்டுவந்து அவர்கள் அதனை பார்வையிட, கொலையாளி உண்மையில் ஜாமரோடு வரவில்லை என்பது புரிந்தது.
“சார்… முதல் நாளே நீங்க சைக்கோ கில்லர்ஸ விட சீரியல் கில்லர்ஸோட ப்ளான் பக்காவா இருக்கும்னு தானே சொன்னீங்க?” என்று ராம் கேட்க,
“அப்றம் எப்படி அவன் ஜாமரை மறந்தான்?” என்று சந்தோஷ் கேட்டான்.
“வேணும்னே விட்டுட்டு வந்திருந்தா?” என்று சிவன் கேட்க,
“மாட்டுவோம்னு தெரிஞ்சு எப்படி சார் வேணும்னே விட முடியும்?” என்று திலகா கேட்டாள்.
“நம்மலை சேலெஞ்ச் செய்யக்கூட நினைச்சிருக்கலாம் திலகா” என்று கூறியவன், அந்த காணொளிகளைப் பார்வையிட்டான்.
அந்த காணொளியில் ஒரு கையில் மட்டுமே கருப்புநிற கையுறை இருந்தது. மற்றொரு கையில், இருளில் தெருவிளக்கின் ஒளியில் வெளிர் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒரு கையுறை தெரிந்தது.
சட்டென்று துனுக்குற்ற சிவப்ரியன், தனது அலைபேசியில் தன் வீட்டின் அருகே அவனிருக்கும்போது எடுத்த காணொளியை ஓடவிட்டான். அவன் வீட்டின் அருகே எடுக்கப்பட்டக் காணொளி, இருட்டான இடத்தில் எடுக்கப்பட்டதால், அதன் நிறம் சரியாகத் தெரியவில்லை. ஆனால் இதில் நன்றாகத் தெரிந்தது. தன் வீட்டின் அருகே எடுக்கப்பட்டக் காணொளியில், கையுறைக்குள் அவன் அணிந்திருந்த மற்றொரு கையுறையில் ஏதோ ஒரு வடிவமைப்பு இருப்பது தெரிந்தது. உள்ளங்கை பக்கமாக இருந்தமையால், அவன் நாயைத் துறத்த கை ஓங்கியிறக்கிய இடைவெளியில் அது தெரிந்தது.
கடைவீதிகளில் எடுக்கப்பட்டக் காணொளியில் அதுதெரியவில்லை.
“புல்லட் ப்ரூஃப் க்ளௌஸுக்குள்ள இன்னொரு க்ளௌஸ் போட்டிருக்கான் சார்” என்று ராம் கூற,
“இந்த டிசைன் சரியா தெரியலையே” என்று திலகா கூறினாள்.
அதையே கூர்ந்து பார்த்தவனுக்கு, அதை எங்கேயோ பார்த்திருந்ததாய் தோன்றியது. பார்த்தே இருந்தாலும், அது ஒரு சாதாரண கையுறை தான். பலர் வாங்கிப் பயன்படுத்தியிருக்கலாம் என்றாலும், குற்றவாளியும் இந்தப் பகுதியில் எங்கேயோ இருப்பதாகவே அவனுக்குத் தோன்றியதால், அது தனக்குத் தெரிந்த நபராகவும் இருக்கலாம் என்று நினைத்தான்.
“பிங்க் கலர்ல இருக்கே.. ஒருவேள கில்லர் லேடியா?” என்று சந்தோஷ் கேட்க,
“ஏன்? பிங்க் கலர் லேடீஸுக்குப் பாத்தியப்பட்ட நிறமா?” என்று திலகா கேட்டாள்.
“காய்ஸ்..” என்று ஓங்கி அழைத்து அவர்களை அமைதி செய்த சிவன், “இந்த டிசைன் தான் இப்பதிக்கு நமக்கான க்ளூ. இதை பற்றி யோசிங்க. அன்ட் நாம கடப்பாரை செய்து கொடுக்கும் ஆசாரிகிட்ட விசாரிச்சப்ப அவர் மூன்றுதான் செய்து கொடுத்ததா சொன்னார். விசாரிச்சதுல தன்விஷா, சாத்விக் அன்ட் தினேஷைக் கொள்ள அவன் பயன்படுத்திய கடப்பாரைகள்தான் அதுனு தெரிய வந்துடுச்சு.. இப்ப மறுபடி அவன் அந்த ஆள்கிட்ட வாங்கியிருக்க மாட்டான். வேற என்ன சோர்ஸ் தேடியிருக்கலாம்னு யோசிங்க” என்று கூற,
ராமின் அலைபேசி ஒலித்தது.
அதை ஏற்று பேசிவிட்டு வைத்தவன், “சில பழைய திருநங்கைகளுக்கு எதிரான கேஸஸ் தேடச்சொல்லி தேவ் சார்கிட்ட சொல்லிருந்தேன் சார். அவர்தான் அனுப்பிருக்கார். பத்து வருடத்திற்கு முன்னயிருந்து நடந்த வழக்குகள் எல்லாம் அனுப்பிருக்கார்” என்று கூற,
“சார்.. டைம் ஆச்சு.. பிரஸ் மீட்டிங் போகனும்” என்று திலகா கூறினாள்.
நேரத்தைப் பார்த்தவன், தாமதித்தால் மகாலிங்கம் இன்னும் கோபம் கொள்ள நேரிடும் எனப் புரிந்தவனாய், “ஓகே டீம்.. போகலாம்.. வந்து இதை செக் செய்யலாம்” என்று கூறி, அவர்களுடன் புறப்பட்டான்.
-தொடரும்…
மஹதி இருக்க சான்ஸ் இருக்கிறது.