Loading

பூ-15

 

அதிகாலை வேளை… தன்னவளின் அருகே உறங்கிக் கொண்டிருந்த சிவப்ரியன் கண் விழித்தான்.

 

தன்னவள் தலைகோதி நெற்றியில் மென்மையான முத்தம் பதித்தவன் விரைவே சென்று தயாராகிப் புறப்பட்டு வர, கூடத்தில் மஹதியும் சுசித்ராவும் அமர்ந்திருந்தனர்.

 

காலை உணவை எடுத்து வைத்த சுசி உள்ளே சென்று விட, ஒரு பெருமூச்சு விட்டவன் சென்று அதை உண்ணத் துவங்கினான்.

 

அவனுக்கு நீர் எடுத்து வைத்த மஹதி, “அண்ணா.. உங்க மேல கோவம் இல்லை.. ஆனா கொஞ்சம் வருத்தமா இருக்கு.. அதான் சுசி பேசாம இருக்கா..” என்று கூற,

 

“அப்படினு சொல்லச் சொல்லிச் சொன்னாங்களா மேடம்?” என்று உணவில் கவனம் வைத்தபடியே கேட்டான்.

 

மஹதி திகைத்து விழிக்க, “எனக்கு உன்னையும் தெரியும் அவளையும் தெரியும்..” என்றவன் உணவை முடித்துக் கொண்டு, “அக்னியைப் பார்த்துக்கோங்க” என்றுவிட்டுச் சென்றான்.

 

சில நிமிடங்களில் கண்விழித்து எழுந்த அக்னிகா முன், பெண்கள் இருவரும் அமர்ந்திருக்க, ஆழ்ந்த உறக்கம் கொடுத்த தெளிவில் சற்றே தெம்பாக உணர்ந்தாள்.

 

“ஆர் யூ ஓகேடாமா?” என்று சுசித்ரா அவள் தலைகோத, 

 

“ஃபீலிங் பெட்டர்” என்றவள் தன்னில் எதையோ உணர்ந்தாள்.

 

தலையைக் கோதி கண்களை மூடித் திறந்தவள், சென்று புத்துணர்ச்சி பெற்று வர, அவள்மீது அவளவனின் வாசத்தை உணர முடிந்தது!

 

வெளியே வந்தவள், “அவங்க எங்க சுசி?” என்க,

 

“எவங்க?” என்று கேட்டாள்.

 

“ப்ச்..” என்று முறைத்தவள், “ப்ரியன் எங்க?” என்று கேட்க,

 

“தெரியலை” என்று பதில் கொடுத்தாள்.

 

அவளை ஏகத்துக்கும் முறைத்தவள் மஹதியை நோக்க, “சாப்டு கிளம்பிட்டாங்கடா” என்று மஹதி பதில் கூறினாள்.

 

வந்து கட்டிலில் அமர்ந்தவளுக்கு மனதில் பல யோசனைகள்… அவன் கூப்பிட்டு விசாரித்ததில் அவள் மனம் வெகுவாகத் துடித்தது தான் என்றாலும் அவனைக் குறை கூற இதில் ஏதுமில்லை என்பது புரிந்தது.

 

இவ்வழக்கைப் பற்றிச் செய்திகளில் பார்த்ததற்கே அத்தனை நடுங்கியது.. அதில் அவனுக்குக் கிடைக்கும் துப்புகளைக் கொண்டுதான் முன்னேற இயலும் எனும்போது தனது தனிப்பட்ட பிரச்சினைகளுக்காக அவன் பணியைத் தடுப்பது முறையன்று என்ற தெளிவும் அக்னிகாவிற்குப் பிறந்தது!

 

இம்முறை, அவள் தெளிவாக யோசித்திருக்க, எப்போதும் தெளிவாய் செயல்படும் அவள் தோழிகள் அவளுக்காக மட்டுமே யோசித்து சிவப்ரியனுடன் சண்டையிட்டிருப்பது சற்று வருத்தத்தையே கொடுத்தது!

 

“மஹா.. சுசி.. அவங்க வேலை இது.. என்னோட தனிப்பட்ட வலிகளுக்காக அதைத் தடுக்க முடியாது.. எப்பவும் தெளிவா யோசிக்குற நீங்களே அவரை ஹர்ட் பண்ணி அனுப்பிருக்கீங்கனு நினைச்சா வருத்தமா இருக்கு. இப்படி முகத்தைத் தூக்கி வச்சுட்டு அவர இன்னும் கஷ்டப்பட்டுத்தாதீங்க” என்று அக்னிகா கூற,

 

தோழிகள் இருவரும் அவளை ஆச்சரியமாக பார்த்தனர்.

 

அவர்களை அதிர வைக்கும் விதமாக, “ஆமா உங்க அண்ணன் நேத்து எங்க தூங்கினாங்க?” என்று அவள் கேட்க,

 

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து திருதிருவென விழித்தனர்.

 

“சொல்லுங்க..” என்று பல்லைக் கடித்துக் கொண்டு அவள் வினவ,

 

“வி..வீட்லதான்” என்று சுசித்ரா திணறலாய் பதில் கொடுத்தாள்.

 

“வீட்லனா? யார் கூட? உன்கூடவா? மஹா கூடவா? இல்ல… என் கூடவா?” என்று வார்த்தைகளில் பெரும் அழுத்தத்துடன் அக்னிகா வினவ,

 

“அவன்.. ஹால்ல தான் படுத்தான்.. சும்மா கேள்வியா கேட்காம ரெஸ்ட் எடு” என்றபடி சுசித்ரா எழுந்து செல்ல, அடுத்ததாக அவளது துளைக்கும் பார்வை தன்னில் படிவதைக் கண்டு அஞ்சி மஹதியும் எழுந்து வெளியே ஓடினாள்.

 

அவர்களது திணறலையும் படபடப்பையும் கண்டு தன்னை மீறி புன்னகைத்தவள், தன் சட்டையில் படிந்திருக்கும் அவன் வாசத்தை மெல்ல சுவாசித்துப் பார்த்தாள். மனதின் அடி ஆழத்தில் அவள் புதைக்க முயற்சிக்கும் ஆசைகள் யாவும் வெளிவரத் துவங்கிவிட்டனவோ?

 

அங்கு காவல்நிலையம் வந்து சேர்ந்த சிவப்ரியன் முந்தைய நாள் திரட்டிய தகவல்களின் அடிப்படையில் அவர்களது பகுதியைச் சுற்றியுள்ளோரில் திருநங்கைகளை விமர்சித்தோரின் பட்டியலைப் பார்வையிட்டான்.

 

மூன்று ஆண்கள் இரண்டு பெண்கள் அப்பட்டியலில் இருந்தனர்! இவர்கள் ஐவர் தான் கொலையாளியின் அடுத்தக் குறியாக இருக்க இயலும் என உறுதியாக சொல்ல இயலாதென்றாலும், ஐவரில் ஒருவராவது அவனது பட்டியலில் இடம் பெற அதிகம் வாய்ப்புகள் உண்டு என்பது உறுதியே!

 

அதைக்கொண்டு தான், அடுத்த அடியை எடுத்து வைக்க முன் வந்தான்.

 

அவன் வந்த சில நிமிடங்களில் மற்ற காவலர்களும் வந்துவிட, திலகா, சந்தோஷ் மற்றும் ராம் அவன் முன் வந்து நின்றனர்.

 

அவர்களுக்குள் ஒரு ஓரமாய், அக்னிகா சிவப்ரியனுக்கு யாரென்பது பற்றிய கேள்வி இயல்பாய் தோன்றியதென்றாலும் கூட மூவருமே நாகரீகம் கருதி அதை தங்களுக்குள்ளேயே வைத்துக் கொண்டனர்…

 

“சார்..” என்ற திலகாவின் அழைப்பிற்கு சிவப்ரியன் நிமிர,

 

“இந்த லிஸ்ட்ல உள்ள அஞ்சுபேரோட ஃபோன ட்ரேஸ் பண்ண சைபர் கிரைம்கு நேற்றே ரிபோர்ட் பண்ணிட்டேன் சார். அதன்படி அவங்களோட கால்ஸ், மெசேஜஸ் அன்ட் லொகேஷன் எல்லாமே அப்டுடேட் இன்ஃபோ நமக்கு வந்துடும்” என்று கூறினாள்.

 

அவளை மெச்சுதலாய் ஒரு பார்வைப் பார்த்தவன், மற்ற இருவரையும் நோக்க,

 

“அவங்க அஞ்சு பேரையும் ஃபாலோ பண்ண மஃப்டில ஆள் ஏற்பாடு செய்து அனுப்பிருக்கோம் சார்” என்று ராம் மற்றும் சந்தோஷ் கூறினர்.

 

அவர்களது நேர்மையான மற்றும் முறையான ஈடுபாட்டில் மனம் நிறைந்தவன், “ஓகே டீம். இப்ப நமக்கு கிடைச்சிருக்குற இந்த சான்ஸ் வச்சுத்தான் நாம கில்லர பிடிக்கப் போறோம். இவங்க அஞ்சு பேர்ல யாராவது ஒருத்தரையாவது கில்லர் தன் லிஸ்ட்ல வச்சுருக்க அதிகம் வாய்ப்புகள் இருக்கு. அதனால இவங்கள்ல யாரையாவது கில்லர் அப்ரோச் பண்ற நேரம் தான் நமக்கான டைம்” என்று கூற,

 

மற்ற மூவரும் சிரத்தையுடன் கேட்டுக் கொண்டனர்.

 

அவர்கள் நல்ல நேரமா? இல்லை கொலையாளியின் கெட்ட நேரமோ? அவர்களது பட்டியலில் இருந்த ஒரு நபர் நண்பர்களுடன் இரவு கேளிக்கையரங்கம் செல்லவுள்ளதாய் பேசிமுடிவு செய்துகொண்டுள்ள செய்தி வந்து சேர்ந்தது!

 

அவர்களது குறுஞ்செய்திகள்மூலம் எந்தக் கேளிக்கையரங்கம் செல்ல உள்ளனர் என்பதையும், அங்கிருந்து அந்த நபரின் வீடு எங்குள்ளது என்பதையும், வரும் வழியில் ஆள் அரவமற்ற பாதைகள் எத்தனை உள்ளன என்பனவற்றையும் பார்வையிட்டனர்.

 

 

“சார். அந்த மாலிலிருந்து அவனுடைய வீட்டுக்குத் திரும்பும் வழியில் ஆள் அரவமற்ற வீதிகள் மூன்று இருக்கு. ஒருவேலை அங்கருந்து அவனோட நண்பர்கள் வீட்டுக்குப்போறதா இருந்தா நம்ம திட்டம் மட்டுமில்ல கில்லரோட திட்டமும் கெட்டுப்போகும். ஏன்னா அவன் நண்பர்கள் எல்லார் வீடும் மெயின் ஏரியா, போகும் பாதைகளும் மெயின் ரோட்ஸ். அதனால இந்த மூன்று பாதைகள் தான் வழி” என்று திலகா கூற,

 

“ஓகே.. நம்மில் ஒருத்தர் அவனை ஃபாலோ பண்ணுவோம். மீதி மூன்றுபேர் இந்த மூன்று பாதையில் காத்திருப்போம். எப்படியும் கில்லர் வருவதா இருந்தா, இவன் வர்றதுக்கு கொஞ்ச நேரம் முன்னவே அங்க வந்துடுவான். கில்லரைப் பார்த்ததும் பிடிக்கும் ஆர்வத்தில் யாரும் தனியா இறங்க வேண்டாம். மற்ற எல்லாருக்கும் சிக்னல் கொடுத்து ஃபோர்ஸ் வர வைக்கனும். அப்பத்தான் அவனைப் பிடிக்க முடியும்” என்று சிவப்ரியன் கூறினான்.

 

மற்ற மூவரும் அவன் திட்டத்திற்கு வழி மொழிய, அதன்படியே எந்தவித நம்பிக்கையுமே இல்லாத போதும், இப்பணியில் இறங்கினர்.

 

‘திலக்’.. இருபத்தியாறு வயது இளைஞன். அடுத்த குறி அவனாக இருக்கலாம் என்பது நம் காவலர் கூட்டத்தின் கணிப்பு!

 

மாலை ஐந்தரை மணிபோல் தன் பெற்றோரிடம் கூறிக் கொண்டு வீட்டைவிட்டுப் புறப்பட்டான் திலக்.

 

தனது நண்பன் வீட்டிற்கு சென்றவன், அங்கிருந்து அடுத்தவொரு நண்பன் வீட்டிற்கு செல்ல, ‘மொத்தமா மால்ல போய்க் கூடிக்க மாட்டீங்களாடா.. நாய் மாதிரி அலைய வைக்குறானுங்க’ என்று ராம் மனதோடு புலம்பிக் கொண்டான்.

 

அந்த நண்பர்கள் கூட்டம் கேளிக்கை அரங்கம் செல்ல, ராம் தானும் சந்தேகம் வராத வகையில் அவர்களைப் பின்தொடர்ந்தான்.

 

ஒவ்வொரு இடமாகச் சென்று அவர்கள் அடிக்கும் கொட்டம் முதலில் ரசிக்கும்படி இருந்தாலும், சில இடங்களில் மற்றவர்களைத் தொந்தரவு செய்யும் வகையில் அவர்களைத் தள்ளிவிடுவது, பெண்களிடம் கேலி என்ற பெயரில் வம்பு செய்வதென்று அவர்கள் செய்யும் செயல்கள் ராமுக்கு சளிப்பையும் கோபத்தையுமே கொடுத்தது.

 

கடினப்பட்டு தன்னை சாந்தப்படுத்திக் கொண்டவன் அவர்களோடு விதியே என்று அங்கு சுற்ற, ஒருவழியாய் இரவு பத்துமணி மேல் அங்கிருந்து வெளியே வந்தனர்.

 

‘ஹப்பாடா..’ என்று அவன் பெருமூச்சுவிட, அடுத்து இரவு உணவுக்காகக் கடைக்குச் சென்றனர்

 

 

இவர்களை பின்தொடர்ந்து செல்ல, முதலில் முன் வந்த சந்தோஷையே அனுப்பி வைத்திருக்கலாமோ என்று காலம் கடந்து நொந்துகொண்டான் ராம்.

 

ஒவ்வொரு நண்பர்கள் வீடாக சென்று ஒவ்வொராய் பிரிந்து இறுதியில் திலக் மட்டுமே தன் வீடு நோக்கி புறப்பட்டான்.

 

கிட்டத்தட்ட இரவு பன்னிரெண்டு மணியைக் கடந்திருந்தது!

 

தனது இருசக்கர வாகனத்தில் அவன் சென்றுகொண்டிருக்க, மற்ற காவலர்கள் மூவரும் அவரவருக்கான பாதையில் காத்திருந்தனர். கிட்டத்தட்ட திலக் அப்பாதையை அடையும் தூரத்தை நெருங்கிவிட்டதாய் செய்தி வர, மூன்று காவலர்களுக்குமே ஒருவித அதிருப்தி உருவானது‌.

 

ஆனால் அவ்வதிருப்தியை படபடப்பாய் மாற்று விதமாக அமைந்தது அச்செயல்!

 

‘ப்ச்.. எல்லாம் வீணா போச்சு’ என்று திலகா மனதோடு புலம்பும் வேளை, யாரோ அத்தெருவினில் நுழைவதைப் போன்று நிழலாடியது!

 

சட்டெனத் தன்னை மறைத்துக் கொண்டவள் தன் காதொலிப்பானை அழுந்த பற்றி, “சார்..” என்று மெல்லமாய் பதட்டக் குரலில் கூற, அங்கே சிவப்ரியனும் சந்தோஷும் பரபரப்பாயினர்‌.

 

நீண்ட கடப்பாரை ஒன்றை தரையோடு தரையாய் தேய்த்துக் கொண்டு முழுகருப்புநிற அங்கிக்குள் தன்னை மறைத்த வண்ணம் ஒரு உருவம் வருவதைக் கண்டவளுக்கு ஊர்ஜிதமானது அது அந்த கொலையாளி தான் என்று!

 

“திலகா.. பேசாத.. நாங்க அங்க கிளம்பி வரோம். பீ கேர்ஃபுல்” என்று கூறிய சிவப்ரியன், “சந்தோஷ் க்விக்” என்று கூற, 

 

“ஓகே சார்” என்ற சந்தோஷும் புறப்பட்டான்.

 

அத்தெரு முனையில் இருக்கும் மின்கம்பத்தின் அடியில் நின்ற அவ்வுருவம் தான் கொண்டுவந்த பெட்டியைத் திறக்க, சற்று தொலைவில் மறைந்திருந்த திலகா அவன் அறியா வண்ணம் அவனை நோட்டம் விட்டாள்.

 

தன் பெட்டிக்குள்ளிருந்து ஒரு சிறு கிண்ணம் மற்றும் ஆய்வகங்களில் நெருப்புக்காக பயன்படுத்தும் சிறியளவு மதுச்சார அடுப்பை எடுத்து வைத்து அக்கிண்ணத்தில் ஒரு திறவத்தை ஊற்றினான்.

 

அது சடுதியில் கொதிக்கத் துவங்க, அதை தன் தீ ஜூவாலையாய் பளீரிடும் விழிகளோடு பார்த்துக் கொண்டு நின்றான். சற்று முன்னே நடந்து வர, திலகா பதட்டமாய் மகிழுந்தின் பக்கவாட்டில் பதுங்கிக் கொண்டாள்.

 

சற்று தூரம் சென்று, தனது பையிலிருத்து எதையோ எடுத்துக் கீழே தூவிவிட்டு, மீண்டும் மின்கம்பத்திடம் சென்றான்.

 

தன் கடப்பாரையை தரையில் மெல்ல தட்டி திரவம் கொதிப்பதைக் கண்டு எழும் உவகையை அவன் வெளிப்படுத்திக் கொள்ள, தூரத்தில் திலக்கின் வண்டி வந்தது. 

 

அவன் கண்களுக்கும் தான் புலப்படாத வகையில் தன்னை மறைத்துக் கொண்டு திலகா தனது கை துப்பாக்கியை எடுத்துத் தயார் நிலையில் வைத்துக் கொள்ள, சரியாய் வரும்போது கொலையாளி போட்டு வைத்த ஆணியில் பட்டு வண்டி செயலிழந்தது.

 

“அடச்சை..” என்ற எரிச்சலோடு கூறிக் கொண்ட திலக், தூக்கம், சோர்வு என்ற இரு காரணத்தாலும் வண்டியை தள்ள முடியாது தள்ளியபடி வர, மெல்ல அவனுக்கு மின்விளக்கின் அடியில் அமர்ந்திருக்கும் உருவம் தெரிந்தது.

 

அதைகண்டு முதலில் குழம்பி நின்றவன், எழுந்து நின்று தன் கடப்பாரையை அவ்வுருவம் தட்டிய நொடி, உச்சந்தலையில் ஆணி அரைந்ததைப் போன்று சுரீரென்று உரைக்கப்பெற்றவனாய் அதிர்ந்து நின்றான்‌.

 

இரவு தாமதமாக்காமல் வந்துவிடக்கோரி அன்னை பலமுறை கெஞ்சியதை உதாசீனம் செய்தது தவரோ என்று காலம் கடந்து உரைத்தது… 

 

அவ்வுருவம் கடப்பாரையைத் தேய்த்தபடி அவனை நெருங்கவும், சட்டென வண்டியைக் கீழே போட்டவன், “காப்பாத்துங்க” என்று அடைத்தத் தொண்டையைச் சரிசெய்த வண்ணம் கத்த முயற்சித்தபடி ஓட முற்பட, சட்டென சிறு கத்தியைக் குறி பார்த்து அவன் காலுக்கு எறிந்தான்.

 

காலில் வந்து குத்தப்பட்ட கத்தியினால் தடம் புரண்டு விழுந்த திலக், “ஆ..ஆஆ..” என்று கத்த,

 

அவன் கண்ணில் மரண பயம் பொங்கி வழிந்தது!

 

அதை ரசனையோடு பார்த்தபடி கொதிக்கும் திரவத்தை எடுத்துக் கொண்டு வந்த கொலையாளி, மண்டியிட்டு அமர முற்பட, “ஹான்ஸ் அப்..” என்று கத்தியபடி அவன் முன் வந்து நின்றாள் திலகா.

 

அதில் அசராத பாவனையுடன் அவன் நிமிர, அவன் கண்களைக்கூட பார்க்க இயலாத வண்ணம் கருப்பு வலையால் மறைத்திருந்தான்.

 

மெல்ல கைகளை நீட்டி, திரவத்தை திலக் மீதே போட்டுவிட்டு கொலையாளி கரத்தினைத் தூக்க,

 

தப்ப முயன்றும் கொஞ்சம்போல் தன்மீது விழுந்த திரவத்தின் சூட்டில் “ஆ..ஆஆ..” என்று கத்தியபடியே திலக் சாலையில் உருண்டான்.

 

கைகளைத் தூக்கிய வண்ணம் கொலையாளி பின்னே நகர முயற்சிக்க,

 

“டோன்ட் மூவ்” என்று பின்னே ஒரு குரல் கேட்டது!

 

திரும்பிப் பார்க்க, அங்கு சிவப்ரியனும் சந்தோஷும். முன்னே ராமும் வந்துவிட, அனைவரையும் கண்டு கைகளை நன்கு உயர்த்தி தட்டிக் கொண்டான் கொலையாளி!

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
6
+1
17
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment