Loading

பூ-14

 

அவள் குழலோசையில் ஆச்சரியமாக உள்ளே நுழைந்த சிவப்ரியன் அவள் இன்னிசை இசைப்பதைக் கண்டு, மேலும் இன்ப அதிர்ச்சிக்கு உள்ளானான்.

 

பல மாதங்கள் கழித்து இசைப்பதால் அவளுக்குச் சற்றே சிரமமாக இருந்தபோதும்கூட, காணமிசைப்பது பெரும் மன அமைதியைக் கொடுத்தது! இசைத்துக் கொண்டிருந்தவள் கண்களில் கண்ணீர் துளி பெருகி ஓடியது! 

 

ஏனோ காரணமே அன்றி அக்கண்ணீரைப் பார்க்கும் மற்ற மூவருக்குமே கண்கள் கலங்கி கண்ணீரின் சங்கமத்தால் அங்கொரு உறவு பிறந்தது!

 

இசைத்து முடித்த அக்னிகா விரைந்து வந்து மஹதியை இறுக அணைத்துக் கொள்ள, தானும் அவளை அணைத்துக் கொண்ட மஹதி, கண்கள் மின்ன, “ஃபிரென்ட்ஸ்?” என்றாள்.

 

கண்ணீரோடு அணைப்பின் இறுக்கம் கூட்டிய அக்னிகா தலையசைக்க, சுசியும் சிவப்ரியனும் கண்ணீருடன் ஒருவரை ஒருவர் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டனர்!

 

உலகத்தில் வக்கிரங்களையும் வஞ்சங்களையும் தீர்க்கும் கொடூர குணம் கொண்டோர் உண்டு என்பதை சாத்விக்கும் அந்த மருத்துவரும் வாழ்ந்து காட்டியிருக்க, காரணமே இல்லாமலும் ஒருவர் மீது வலுவான நேசம் பிறந்து, ஒருவரை ஒருவர் தாங்கிப் பிடிக்க உதவும் பண்பு உள்ளது என்பதை மஹதி, சுசித்ரா மற்றும் சிவப்ரியன் உணர்த்தியிருந்தனர்!

 

அதற்கடுத்து வந்த மாதம் அவளிடம் நல்ல முன்னேற்றம் தென்பட்டது! அவளாக வழிய பேசத் துவங்கவில்லை என்றாலும் கூட, அவர்கள் பேச்சுக்குப் பதிலாற்றத் துவங்கியிருந்தாள். போடும் பாடலைக் கேட்டபடியே அமைதியாக இல்லாது, தானாகப் பாடல்களை மாற்றவும், வேண்டும் பாடல்களைக் கேட்கவும் துவங்கியிருந்தாள்… 

 

அதையெல்லாம் விடவும், தன் பசியை உணரத் துவங்கியிருந்தாள். உணவைக் கொடுத்தாள் பெயருக்கு உண்டுகொண்டிருந்தவள் தானாக வாய் திறந்து பசியைக் கூறத் துவங்கியிருந்தாள்…

 

சிவப்ரியன், மஹதி மற்றும் சுசித்ரா அவளைச் சுற்றி அமர்ந்து பேசிக் கொண்டிருக்க, சிறு புன்னகையுடன் பதிலாற்றிக் கொண்டிருந்தவளிடம், “உனக்கு ஃப்ளூட் மட்டுந்தான் வாசிக்கத் தெரியுமா இல்ல வேற எதுவும் தெரியுமா அக்னி?” என்று மஹதி கேட்டாள்.

 

சிறு கசப்பான புன்னகையைக் கொடுத்த அக்னிகா, “ப்யானோ அன்ட் வயலின் வாசிக்கத்தெரியும். கர்நாடிக் அன்ட் வெஸ்டர்ன் மியூசிக் பாடத் தெரியும்” என்று கூற, மூவருமே அவளை அதிர்ந்து நோக்கினர்.

 

“பாட தெரியுமா?” என்று சுசித்ரா ஆச்சரியமாய் கேட்க,

 

“இந்த லட்சனத்துல நீ இருந்திருக்க.. பாரு நாந்தான் என் அக்னியோட டேலென்ட் எல்லாம் வெளிக்கொண்டு வரேன்” என்று மஹதி கூறினாள்.

 

இப்போதெல்லாம் அடிக்கடி மஹதிக்கும் சுசிக்கும் இடையே அக்னியை வைத்து உரிமைப் போராட்டங்கள் நடக்கத் துவங்கியது. மஹதியும் தங்களுள் ஒருத்தியாய் ஆனதால், அக்னிகாவிற்கு நடந்தவற்றைப் பற்றி அவளிடம் கூறியிருக்க, தன்னிலும் கடுமையான வாழ்வை சுமப்போர் உலகில் உள்ளனர் என மஹதி நொந்து கொண்டாள். அதன்பிறகும் அவளுக்கும் அக்னிக்குமான பிணைப்பு அதிகரித்ததே அன்றி அணு அளவும் குறையவில்லை!

 

“ஏ பே..” என்ற சுசி, “அக்னிமா.. ஒரு பாட்டு பாடு” என்று கூற,

 

சற்றே தயங்கியவளை ஊக்கப்படுத்திப் பாடச் செய்தனர்…

 

“(பெண்)ஏனோ…

உன்னப் பாத்தா உள்ள…

சுருக்குன்னு வருது…

ஆனாக் கிட்ட…

நீயா வந்தா…

மனசு அங்க விழுது…

 

(ஆண்)எதுக்கிந்த கோபம்…

நடிச்சது போதும்…

மறஞ்சு நீ பாத்தும்…

வெளுக்குது சாயம்…

 

(பெண்)ஹேய்…

நேத்தே நான் தோத்தேன்…

அட இதுதானா…

உன் வேகம்…

 

(ஆண்)அடியே… அழகே…

என் அழகே… அடியே…

பேசாம நூறு நூறா…

கூறு போடாத…

வலியே வலியே…

என் ஒளியே ஒளியே…

நா ஒன்னும் பூதமில்ல…

தூரம் ஓடாத…

 

காதோட நீ எரிச்ச…

வார்த்த வந்துக் கீறுதே…

ஆனாலும் நீ தெளிச்ச…

காதல் உள்ள ஊறுதே…

வாயாடிப் பேயா…

என் தூக்கம் தூக்கி போற…” என பாடலை ஆண்குரல் பெண் குரல் இரண்டையும் மாற்றி மாற்றி அவள் பாட, மூவரும் அவளை அதிர்ந்து நோக்கினர்.

 

பாடி முடித்தவள் அதிர்ச்சியோடு விழிக்கும் மூவரையும் சங்கோஜமாய் பார்க்க,

 

“அ..அக்னி.. யூ ஜஸ்ட் மெஸ்மரைஸ்ட்” என்று தன்னை மறந்த நிலையில் சிவப்ரியன் கூறினான்.

 

“ஏ.. எப்புட்ரி டபுள் வாய்ஸ்ல..” என்று மஹதி ஆச்சரியமாய் கேட்க,

 

“அ..அப்பா அம்மாகூட இருந்தப்ப கர்னாடக சங்கீதம் சின்ன வயசுலருந்தே கத்துக்கிட்டேன். அப்றம் தனியா வந்துட்ட பிறகு ஒன்னும் பண்ண முடியலை. காலேஜ் போன பிறகுதான் ஆன்லைன் மூலமாவே ப்ளூட், ப்யானோலாம் கத்துக்கிட்டேன்..” என்று கூறியவள் கண்களின் ஓரம் கண்ணீர் உருண்டு ஓடியது!

 

அவளை இருபுறமிருந்தும் அணைத்துக் கொண்ட தோழிகள், “ஃபீல் பண்ணாதடா பட்டு.. உனக்கு நல்ல பியூச்சர் இருக்கு” என்று சுசி கூற,

 

“நா..நான்.. த..தனியா வீடு பார்த்து போக ட்ரை பண்ணேன் காலேஜ் படிக்கும்போது.. ஆ..ஆனா.. எனக்கு வீடு கொடுக்க யாருமே முன் வரலை.. பாட்டு க்ளாஸ் வைக்கவும் ட்ரை பண்ணேன். முதல்ல மியூசிக் அகேடமில வேலை கேட்டுப் பார்ப்போம்னு போனேன்.. குவாலிஃபிகேஷன்ஸ்ல ஜென்டரைப் பார்த்தே என்னை ரி..ரிஜக்ட் பண்ணிடுவாங்க.. இ..இப்படி பிறந்தது என்ன தப்பா? எ..ஏன் எல்லாருமே ந..நம்மை ஒதுக்குறாங்கனு ரொம்ப கஷ்டமா இருக்கும்” என்று நெஞ்சைப் பிடித்தபடி பல்லைக் கடித்துக்கொண்டு கூறி அவள் அழுதாள்.

 

அவள் அனுபவிக்கும் வலியெல்லாம் தன்னை வந்து சரண் புகுவதாய் உணர்ந்தான், சிவப்ரியன். உயிர்வதை என்பது இதுதானோ? என்று தோன்றினது அவனுக்கு. அவள் வலியெல்லாம் அவனும் உணரப் பெறும் நொடி, அவளை மகிழ்வித்துத் தான் மகிழ ஆசை கொண்டான்.

 

அவள் முதுகை வருடிக் கொடுத்த தோழிகள் ஆறுதல் கூற, “ஹே ஸ்பார்கில்.. நீ வேணும்னா பாரு.. கண்டிப்பா நீ மியூசிக் அகேடமி ஓபன் பண்ணுவ.. நடக்கவே நடக்காதுனு நாம ஒரு காலத்தில் நினைத்திருந்த விஷயங்கள் ஒருநாள் நடந்து நம்மை சர்ப்ரைஸ் பண்ணும். எனக்கு போலீஸ் வேலை என்பது எட்டாத கனியாதான் இருந்தது.. ஆனா இன்னிக்கு கிடைச்சு, இந்த போஸ்டிங்ல இருக்கேன். சுசிமா க்ளீனிக் ஓபன் பண்ணுவோமானு யோசனைல இருந்தா.. இதோ பாரு.‌. இவ்ளோ பெரிய சென்டர் ஓபன் பண்ணிருக்கா” என்று சிவப்ரியன் கூறினான்.

 

“ஆமா அக்னி.. நானும் கூடத் தனியா என்ன செஞ்சுடப்போறோம்னு நினைச்சேன்.. ஆனா ஆக்ஸிடென்டால வந்த லைஃப் இன்சூரன்ஸ் அமௌன்ட் வச்சு எனக்குனு ஒரு கடை ஸ்டார்ட் பண்ணிட்டேன்.. இதெல்லாம் நடக்கும்னு யாருமே நினைச்சு பார்க்கமாட்டோம்… ஆனா கண்டிப்பா ஒருநாள் நடக்கும்” என்று மஹதி கூற,

 

சிறு முறுவலுடன் கண்ணீரைத் துடைத்துத் தலையசைத்தாள்.

 

அப்போது அலைபேசி அழைப்பு வரவும் சிவன் எழுந்து புறப்பட்டுவிட, செல்லும் அண்ணனைப் பார்த்துக் கண்ணீரைத் துடைத்துக் கொண்ட சுசி, “ஒன்னு சொல்லவா.. நானும் சிவாண்ணாவும் பயாலஜிகல் சிபிலிங்ஸ் கிடையாது” என்று கூறினாள்.

 

அக்னி அவளை அதிர்ந்து நோக்க, “என்னதூ?” என்று மஹதி கத்தியேவிட்டாள்.

 

“கத்தாதடி..” என்று அவளை அடித்தவள், “எஸ்.. எனக்கு ஒரு ஆறு வயசுருக்கும்போது எங்க பகுதியில் நடந்த ஒரு இயற்கை சீற்றத்தால் எங்க ஏரியா மொத்தமா சேதமடைஞ்சிடுச்சு. அதுல என்னோட பேரென்ட்ஸும், சிவாண்ணாவோட பேரென்ட்சும் இறந்துட்டாங்க.. சிவாண்ணாக்கு அப்ப ஒரு பத்து வயசு இருக்கும். அப்ப நான் சிதிலமடைந்த கட்டிடத்துக்குக் கீழ அழுதுட்டு இருந்தேன். அண்ணா வந்து என் கைய பிடிச்சுகிட்டு என் கண்ணைத் துடைச்சு ஆறுதல் சொன்னான். 

 

எங்கருந்து வந்தானோ தெரியாது.. ஏதோ தேவ தூதன் போல வந்து எனக்குப் பக்கத்துல உக்காந்துகிட்டான். ரெஸ்கியூ டீம் வந்து எங்களைக் காப்பாத்தி கூட்டிட்டுப் போனாங்க. நான் அழுதுட்டே இருந்தேன்னு அண்ணன் தான் என்னைப் பார்த்துகிட்டான். அவங்க எங்களை ஆசிரமத்தில் சேர்க்க கூட்டிட்டுப் போனப்பக்கூட ‘என் தங்கச்சிதான் எங்களை ஒரே ஆசரமத்துல சேத்துடுங்க’ அப்படினு சொன்னான். இப்பவும் கேட்பேன்.. அன்னிக்கு ஏன் அண்ணா அப்படி சொன்னனு.. எனக்கும் ஒரு குட்டி தங்கச்சி இருந்தா. நீ அழும்போது அவ நினைவுதான் வந்தது. உன் வீட்டு ஆட்கள் எல்லாருமே இல்லாம போனதால உன்னை என்கூடவே வச்சுக்கலாம்னுதான் அப்படி சொன்னேன்னு சொல்வான். 

 

அண்ணா ஆசரமத்திலிருந்து ஸ்கூல் முடிச்சு காலேஜ்கு வெளியூர் போயிட்டான். அந்த டிஸாஸ்டரால அவன் கால்ல அடி.. ஒழுங்கா நடக்க முடியாம கஷ்டப்பட்டான். போலீஸ் ட்ரைனிங்ல செலெக்ட் ஆக முடியாதுனு வருத்தப் பட்டான். என்னைப் படிக்க வைக்கனுமேனு ஒரு வேலை சேர்ந்து அவன் காசுலதான் என்னை மேல படிக்க வைச்சான். பிறகு நான்தான் நீ ஆசைபட்டதை நோக்கிப் போண்ணானு சொல்லி அவனைத் தேத்திவிட்டேன். பிசியோலாம் போய்க் காலை க்யூர் பண்ணிக்கிட்டான்.. நடக்கவே சிரமப்பட்டவன் ஓடவே ஆரமிச்சான்.. 

 

எனக்கு அதுல அவ்வளவு சந்தோஷம். அவனோட நேர்மையால படிப்படியா முன்னேறி இங்க இருக்கான். இன்னவரை நானும் அவனை வேற ஆளா பார்த்தது இல்ல.. அவனும் என்னை அப்படி நினைச்சதில்லை.. ஒரு பூகம்பத்தில பூத்த பூவாதான் எங்க உறவும் பூத்துச்சு” என்று கூறிமுடித்துத் தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு புன்னகைத்தாள்.

 

பெண்கள் இருவருக்கும் அத்தனை ஆச்சரியமாக இருந்தது! அவன் இவளிடம் சீண்டி விளையாடுவதும், பாசம் கொண்டு அரவணைப்பதும் அத்தனை ஆத்மார்த்தமாக இருக்க, அவர்களைப் பார்க்கும் யாருக்குமே அவர்கள் ரத்த சொந்தமில்லை என்பதை நம்பவே இயலாதபடிதான் இருந்தனர்.

 

அக்னிகாவிற்கு தன் மனதில் அதிக மதிப்போடு இருந்த சிவப்ரியன் தற்போது மேலும் மதிப்பிற்குரியவனாக மாறியதாய் தோன்றியது. அவன்மீது நேசமா என்றால் நிச்சயம் அவளுக்கு நேசம் உண்டு.. ஆனால் அது காதலில்லை! தன்னைக் காத்து அடைக்கலம் கொடுத்த நன்றிகடனும், பாசம் காட்டி அரவணைக்கும் அக்கறையில் துளிர்த்த நேசமும் அவளுக்கு அதிகம் உண்டு அவன்மீது… 

 

இப்படியான சூழலில் ஆறுமாதங்களில் சொல்லிக்கொள்ளும்படி தேரி வந்தவளை தங்களோடு குவார்டஸில் தங்க வைத்துக் கொண்டனர், சிவப்ரியன் மற்றும் சுசி.

 

அவர்கள் குடும்பத்தில் ஒருத்தியைப் போல் பார்த்துக் கொண்டனர். அவள் படித்த படிப்பைப் பற்றித் தெரிந்துகொண்ட மஹதி தனது கடையிலேயே அவளுக்கு வேலையும் கொடுத்தாள். முதலில் வெளியே சென்று வேலைப் பார்க்க தயங்கி வீட்டிலேயே வேலைப் பார்த்தவளிடம், “நடந்து முடிஞ்சதையே நினைச்சு வீட்டோட அடங்கியிருப்பதுல என்னடா ப்ரயோஜனம்? உன்னைக் கீழ தள்ளனும்னு நினைப்பவர்களுக்கான வாய்ப்பா நீயே மாறிடாத” என்று சிவன் கூறிவிட்டுச் செல்ல, தனது அடியை வாசல்படிநோக்கி வைத்தவள் கட்டப்பட்டிருந்த தன் சிறகுகளை மீண்டும் சிறகடிக்க பயன்படுத்ததினாள்.

 

காயப்பட்ட அந்த சிறகை செப்பனிடும் பணியை, தானே முன்வந்து தனதாக்கிக் கொண்ட சிவப்ரியன், தாய் ஒருவர் குழந்தையின் ஒவ்வொரு அசைவையும் ரசிப்பதைப் போல், அவள் முற்றத்தை ஆத்மார்த்தமாய் ரசித்தான்.

 

தனது ஆசைக்காக, இசை தொழில்நுட்ப கல்வியும் படித்தவள், மெல்ல மெல்ல மீண்டும் வெளியே வரத் துவங்கினாள்.

 

முற்றுமாக அதைக் கடந்து விட்டாளா என்றால் நிச்சயமில்லை.. ஆனால் கடப்பதற்கு தன்னாலான அத்தனை முயற்சிகளையும் எடுத்தாள். இருந்தும்கூட காகிதப்பூவைப் பார்த்தாள் மனதில் எழும் படபடப்பையும் கோபத்தையும் அவளால் துளியளவும் கட்டுப்படுத்த இயலவில்லை! இரவு தூக்கங்கள் வெகு விரைவே வராது சண்டித்தனம் செய்ய, மாத்திரையின் உபயத்தில் அவற்றை கடக்கத் துவங்கினாள்.

 

அவளது சின்னச் சின்ன முன்னேற்றத்தைக் கூட கண்டு ரசித்த சிவப்ரியனிடம் தான் பெற்ற மகள், முதலடி எடுத்துவைப்பதை ரசிக்கும் தந்தையின் ரசிப்புக் குடியிருந்தது!

 

ஒருநாள் தன் தங்கையிடம் வந்தவன், “சுசிமா..” என்க,

 

“என்னண்ணா.. இந்நேரம் வந்திருக்க?” என்றபடி அவனிடம் வந்தாள்.

 

“உன்கிட்ட பேசனும்” என்று அவன் கூறவுமே அவளுக்கு ஓரளவு விடயம் புரிந்து போனது.

 

“நான் ஒருத்திய விரும்புறேன்..” என்று சிவப்ரியன் கண்கள் மின்னக் கூற,

 

“ஆஹாங்? பாருடா.. எங்கண்ணாக்கு ஒருவழியா காதல் காத்து அடிச்சுடுச்சா?” என்று கேட்டு சிரித்தாள்.

 

“யாருனு கேட்க மாட்டியா?” என்று ஆர்வத்துடன் அவன் கேட்க,

 

“யாருண்ணா?” என்று தெரியாததைப் போலவே கேட்டாள்.

 

“அக்னிகா..” என்று அவன் கூற,

 

அவன் எதிர்ப்பார்த்ததைப் போல் சுசித்ராவிடம் ஆச்சரியம் இல்லை!

 

“என்னடா?” என்று அவன் ஆச்சரியமாய் வினவ,

 

“எங்கண்ணனோட ஆசை எனக்கு ஏற்கனவே தெரியும்” என்றாள்.

 

அதில் தான் முற்றுமாய் அதிர்ந்தவன், “எப்ப?” என்க,

 

“அக்னிய ஹிப்னடைஸ் பண்ணி அவளுக்கு நடந்ததை விசாரிச்சுட்டு வந்தப்ப, காது மூக்கெல்லாம் நடுங்கி, கண் சிவக்க துடிச்சிட்டு இருந்த இந்த முகத்தைப் பார்த்தபோதே” என்று அவன் மூக்கைத் தட்டிக் கூறினாள்.

 

“அப்பவேவா?” என்று கேட்ட காவலனுக்கும் லேசாய் வெட்கம் வந்து எட்டிப் பார்த்ததோ?

 

அண்ணன் கன்னம் பற்றியவள், “அவளைப்பற்றி உனக்கு நான் சொல்லி புதுசா எதுவும் தெரியப்போறதில்லை அண்ணா.. அவ மனசு ரொம்ப காயப்பட்டிருக்கு.. அது உடைஞ்ச கண்ணாடி பாத்திரம் மாதிரி.. ஒழுங்கா ஒன்னு சேர்க்க முடியலைனா சேதம் உங்க ரெண்டு பேருக்குமேதான்..” என்று கூற,

 

அவள் கை பற்றியவன், “தெரியும்டா.. அ..அவமேல‌‌..” என்றவன் லேசாய் நெஞ்சை நீவிக் கொண்டு, “சொல்ல தெரியலை சுசிமா.. இங்க என்னமோ பண்ணிட்டா.. அவளை எனக்குள்ள பொத்திக்கனும் போல இருக்கு. அவளோட வளர்ச்சியைப் பார்த்து என் பொண்டாட்டி எவ்வளவு உயரத்தில் வளர்ந்து நிற்குறா பாருடானு எல்லாருக்கும் காட்டி பெருமைபடனும் போல இருக்கு.. அவ கஷ்டபட்டதெல்லாம் ரொம்ப அதிகம்டா. அதுக்கு மொத்தமா சேர்த்து வைச்சு அவளுக்கு காதலைக் கொடுத்து சந்தோஷமா பார்த்துக்கனும்னு தோனுது..” என்றான்.

 

அண்ணனை பெருமை பொங்க பார்த்தவள் சிறு தயக்கத்துடன், “ஆனா அண்ணா…” என்று வார்த்தைகளை மென்று முழுங்க, 

 

அவள் கைகளைத் தட்டிக் கொடுத்தவன், “உடலுறவு இன்பத்தைக் கொடுக்கும் என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவு உண்மை அதுமட்டுமே தான் இன்பமான வாழ்க்கை இல்லை என்பதும். அவகூட ஒரு இன்பமான வாழ்க்கை வாழ எனக்கு இது ஒன்னும் அத்தியாவசிய தேவை இல்லைடா” என்று ஆத்மார்த்தமான குரலில் கூறினான்.

 

அண்ணனை இறுக அணைத்துக் கொண்டவள், “உன்னை நினைச்சா பெருமையா இருக்கு அண்ணா.. ஷி இஸ் ரியலி லக்கி” என்று கூற,

 

“அக்னி என் லைஃப்ல வந்துட்டா நான் தான் ரொம்ப லக்கிடா” என்றான்.

 

பேசிக்கொண்டிருந்த இருவரும், வெளியே ஏதோ கீழே விழும் சப்தம் கேட்டு திரும்ப, கண்களில் கோபம் கொப்பளிக்க, ரத்த நிறத்தில் சிவந்திருக்கும் விழிகளோடு நின்றிருந்தாள் அக்னிகா!

 

இருவரும் அவளைக் கண்டு திடுக்கிட்டு எழ, ஒரு அடிப்பட்ட பார்வையை வீசியவள் நகர முற்பட்டாள்.

 

“அக்னி ஒரு நிமிஷம்..” என்று சுசி நிறுத்த, 

 

“உனக்கு உயிர்ப்பிச்சை கொடுத்திருக்கேன். அதுக்காகவாது என் அண்ணனை ஏத்துக்கோனு சொல்லிடமாட்டனு நம்புறேன் சுசி” என்று அக்னி கூறியிருந்தாள்.

 

“அக்னி என்னடி பேசுற?..” என்று சுசி அதிர,

 

“எல்லாம் தெரிஞ்ச நீயும் இப்படி கேட்காத சுசி.. என்னால மறுபடியும் ஒரு காதலை நினைச்சுக்கூட பார்க்க முடியாது.. ப்ளீஸ்” என்று கலங்கிய குரலில் கூறினாள்.

 

அக்னியின் கரம் பற்றிய சிவப்ரியன், “உன்னை மனசார விரும்புறேன் அக்னி.. என்னை நீ ஏத்துக்கிட்டே ஆகனும்னு சொல்லலை.. ஆனா வேணாம்னு சொல்ல உன்னோட தேவையில்லாத காரணங்களைத் தவிர வேற எதுவானாலும் செல்லு. விலகிடுறேன்..” என்று கூற,

 

“ப்ரியன் ப்ளீஸ்.. தேவையில்லாத எண்ணங்களை உருவாக்கிக்காதீங்க. எனக்கு.. எனக்கு இது செட் ஆகும்னு தோனலை” என்றவளுக்கு தன் மனதில் பெரும் மரியாதைக்குறியவனை சட்டென தவிர்த்திடவும் மனம் வரவில்லை.

 

அவள் கரத்தை விட்டவன், உள்ளே சென்று எதையோ கொண்டுவர, சுசியுடன் வாதத்திலிருந்தவள் அதை கவனிக்கவில்லை. அவள் முன் வந்து மண்டியிட்டவன், “நீ என்ன வேணா சொல்லு.. அதுக்கு உனக்கு உரிமை இருக்கு. ஆனா என் காதலை நிறுத்தச் சொல்ல உனக்கு உரிமை இல்ல.. என் காதல் இந்த உயிர் இருக்கும் வரை உன்னைத் தொடரும். ஐ லவ் யூ டி ஸ்பார்கில்” எனக் கூறி காகித ரோஜாவை நீட்ட,

 

அதைகண்டு பெரும் ஆத்திரத்திற்கு உள்ளானவள், பிடுங்கி கீழித்து அவன் முகத்தில் வீசிவிட்டு அழுதபடியே அறைக்குள் சென்று அடைந்து கொண்டாள்.

 

“ஏன் அண்ணா.. அவளுக்குதான் பேப்பர் பூ பிடிக்காதுல?” என்று சுசி ஆற்றமையோடு வினவ,

 

“அதுக்கு அவள் நினைக்கும் காரணம் தான் அந்த பிடித்தமின்மைக்குக் காரணம் சுசிமா.. அதுயில்லைனு என் காதல் அவளுக்கு உணர்த்தும்” என்று கூறினான்.

 

அவன் காதலைத் தவிர்த்துக் கொண்டு அதேவீட்டில் இருக்க முடியாது தவித்தவள், எங்கே அவனை அவமானப்படுத்தும்படி நடந்துகொள்வோமோ என்ற பயத்தில் மஹதியிடம் பேசி தனக்கு வீடு ஏற்பாடு செய்ய உதவி கேட்டாள்.

 

மஹதி தன்னோடு வரும்படி அழைக்க, அது சுசி மற்றும் சிவனை அவமதிப்பதாய் மாறிவிடும் என்பதால் அடம் செய்து தனியே வீடு பார்க்கத் துவங்கினாள். அப்போது அவளுக்கு அறிமுகமானவனே அதிரூபன். அவள் ஒரு திருநங்கை என்பது தெரிந்தும் கூட, முழு மனதுடன் அவளுக்கு வாடகைக்கு வீடு வழங்கியவன் அவளுக்கு ஒரு அண்ணனாகவே மாறிப்போனான்.

 

அனைத்து நினைவுகளிலிருந்தும் மீண்ட சிவப்ரியன், தற்போது அறையில் படுத்துக்கிடப்பவள் கரம் பற்றி, “சாரிடி ஸ்பார்கில்..” என்று கண்ணீரோடு முனகினான். அவன் உகுத்தக் கண்ணீர் துளி ஒவ்வொன்றும் அவள் காதுமடலில் தஞ்சம் புகுந்தது, அவன் காதல் பேசிடும் விதமாய்…

-தொடரும்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
20
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment