பூ-13
பல காவலர்கள் சூழ்ந்து அங்குள்ள மற்ற மருத்துவர்களைக் கைது செய்துகொண்டிருக்க, விட்டத்தை வெறித்தபடியே அசைவற்று அமர்ந்திருந்தாள் அக்னிகா.
கோபத்துடன் அங்குள்ளோரை அடித்து மற்ற காவலர்களிடம் சேர்ப்பித்துக் கொண்டிருந்தவன், நோயாளிகள் அணியும் பச்சைநிற உடையில் பிரம்மை பிடித்தவள் போல் அமர்ந்திருப்பவளைக் கண்டு அவளை நெருங்க, அவளிடம் அப்போதும் கூட அசைவே இல்லை.
அவள் தோளில் மெல்ல கரம் வைத்து உலுக்கியவன், “ம்மா..” என்க,
ஏதோ துற் சொப்பனத்திலிருந்து விழித்ததைப் போல் திடுக்கிட்டு எழுந்தவள் அவனைக் கண்டு அச்சத்துடன் நடுங்கினாள். அவள் கால்கள் அவள் அமர்ந்திருந்த திண்டோடு சேர்த்து சங்கிலியிடப் பட்டிருந்தது!
“அ…ஆ..” என்று பேச்சே மறந்தவள் போல் கத்தியவள் அங்கு அருகே இருந்த பொருட்களை அவனை நோக்கித் தூக்கி எறிய, “ச்சில்.. காம் டௌன்” என்றபடி நெருங்கியவன், “ஒன்னுமில்லமா..” என்றான்.
அவன் கைவைத்த நொடி என்ன உணர்ந்தாளோ? அவனையே பார்த்துக் கொண்டிருந்தவள், “கா..காப்பாத்துங்க..” என்று கத்தி அழத் துவங்கிட,
அவனுக்கு அவளது கதறல் உடலில் பெரும் அதிர்வைக் கொடுத்திருந்தது.
மற்ற பெண் காவலர்களை அழைத்தவன் அவர்களிடம் அவளை ஒப்படைக்க முற்பட, அவன் புஜங்களைப் பற்றிக் கொண்டு, “போ.. போ.. வேணாம் போ..” என்று அவர்களைத் துறத்த முற்பட்டாள்.
அவள் பின்னே வந்து பிடித்துக் கொண்டோர் வழுக்கட்டாயமாக அவளை இழுக்க, ஆடவனை ஏமாற்றமான பார்வை பார்த்தவள் அப்படியே மயங்கிச் சரிந்தாள்.
அவளை மருத்துவமனையில் சேர்ப்பித்தவன், கைது செய்த மருத்துவருக்கு எதிரான ஆதாரங்களுடன் நீதிமன்றத்தில் சேர்க்க நினைக்க, அப்போதுதான் அக்னிகாவைப் பற்றிய விடயம் அவனுக்குத் தெரிய வந்தது!
மருத்துவ அறிக்கைகளில் அவளை வைத்துச் செய்த ஆராய்ச்சிகளின் குறிப்புகளை எடுத்துப் பார்வையிட்டவன், அவள் ஆற்றும் எதிர்வினைகளைக் காணொளிகளாக அம்மருத்துவர் சேர்த்து வைத்திருப்பதைப் பார்வையிட, சொல்லொன்னா வலியில் தவித்துப் போனான்.
‘என்ன மாதிரியான உலகம் இது?’ என்று வெறுத்துப் போனவன்,
“ஏன்டா.. யாருமில்லாம ஒருத்தி கிடைச்சுட்டா இப்படித்தான் உங்க இஷ்டத்துக்குப் பயன்படுத்துவீங்களா? மனசாட்சினு ஒன்னு கொஞ்சம் கூட இல்லையாடா உங்களுக்குலாம்? மிருகம் கூட மனசாட்சியோட நடந்துக்கும்.. மிருக குணம்னு உங்களுக்குச் சொன்னா அது மிருகத்துக்குத் தான் அசிங்கம். அந்தப் பொண்ணு கத்துறதைப் பார்க்க ஈரகொளையே நடுங்குது.. நீங்க அதை வீடியோ எடுத்து வச்சு ரிசர்ச் பண்ணுறீங்க” என்று ஆதங்கமும் ஆத்திரமும் கலக்கப் பேசினான்.
கிட்டத்தட்ட ஆறு மாதங்களாக அவளைப் பல ஆராய்ச்சிகளுக்குப் பயன்படுத்தி மனதளவில் அவளை பைத்தியமாகவே ஆக்கியிருந்தனர், அம்மருத்துவக் குழுவினர்.
அனைத்தையும் நீதிமன்றத்தில் சேர்ப்பித்தவன் வலுவான பல ஆதரங்களின் அடிப்படையில் அவனுக்கு ஆயுள் தண்டனை வாங்கிக் கொடுக்க, அதுவுமே அவனுக்கு போதுமாக தோன்றவில்லை!
“சிறைல போய் அநாவசியமா கலி தின்னு பூமிக்கு பாரமா நீ எதுக்கு இருக்கனும்? உனக்கெல்லாம் அந்த தண்டனை கொஞ்சமும் போதாது” என்றவன் அவனுக்கு தொழு நோய் ஏற்படுத்தும் ஊசியைப் போட்டு அனுப்பி வைத்திருந்தான்.
நோய் காரணமாக தினம் தினம் வலியை அனுபவித்து, மற்றவரைத் துன்புறுத்துவதன் வேதனையை நொடிக்கு நொடி உணர்ந்து அவன் இறக்க வேண்டும் என்று அவன் வழங்கிய சாபமும் சரிவர வேலையைச் செய்தது!
இங்கு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அக்னிகாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவள் அதிகப்படியான மன அழுத்தத்தில் இருப்பதையும், இது நிலைத்தால் அவள் உயிருக்கே பெரும் ஆபத்து விளையும் என்பதையும் தெரிவித்திருக்க, தனது தங்கை சுசித்ராவின் பெயரில் அவளது பொருப்பைக் கொடுத்தான்.
சுசித்ராவின் மருத்துவமனையிலேயே அக்னிகாவிற்கு ஒரு அறையை உருவாக்கியவன் தங்கைக்கு அவளது நிலைகளை எடுத்துக் கூறி, “அ..அவங்க திருநங்கை சுசிமா.. உனக்கு எதும் பிரச்சினை இல்லைதானே?” என்று தங்கை தவறாக எடுத்துக்கொள்ளக்கூடாதே என்ற தயக்கத்துடன் வினவ,
“அண்ணா.. நான் ஒரு மனநல மருத்துவர் அண்ணா.. இன்னும் இப்படியான விஷயங்களுக்கு பழைமைவாதியா நான் பிஹேவ் பண்ணுவேன்னு நீ நினைக்குறியா?” என்று அதட்டலாகக் கேட்டிருந்தாள்.
வண்ணமயமாக இருந்த அறையில் ஆங்காங்கே காகித மலர்களை அலங்காரத்திற்கு ஒட்டி வைத்து அழகுபடுத்தி அங்கே அவளைப் படுக்க வைத்திருந்தனர்.
அண்ணன் தங்கை இருவருமாக அவளைக் காண உள்ளே செல்ல, அதீத ஆத்திரத்துடன் அந்த மலர்களை கிழித்து திசைக்கொன்றாக தூக்கி வீசிக் கொண்டிருந்தாள், அக்னிகா.
“ஹே..” என்று அவளைப் பிடித்துக் கொண்ட சுசித்ரா, “அக்னி மா.. ச்சில்.. ரிலாக்ஸ்” என்று கூற,
மனமுடைய அவளைப் பார்த்தவள், “எ..எனக்கு.. எனக்கு.. ஆ..” என்று பேச முடியாமல் தவிப்பாய் கதறத் துவங்கினாள்.
அவள் உடலின் நடுக்கமும், கதறலும் கேட்ட சுசியின் உடலே ஒருநொடி திடுக்கிட்டு மீண்டது!
“ஒன்னுமில்ல டா.. அக்னி.. இங்கப் பாரு.. நாங்க இருக்கோம். உனக்கு ஒன்னும் ஆகாது..” என்று சுசித்ரா பேச,
“அ..அவன்.. என்னை.. ஆ.. எனக்.. எனக்கு வேணாம்.. யாருமே வேணாம்..” என்று கத்தியவள் சட்டென எழுந்து வெளியே ஓடினாள்.
“ஏ.. அக்னி..” என்று இருவரும் அவளைத் தொடர்ந்து ஓட,
வேகமாக மேல் தளத்திற்கு ஓடியவள், அங்கிருந்தே கீழே குதித்து தற்கொலை செய்துகொள்ள முற்பட்டாள்.
அவள் முயற்சியைக் கண்டு உள்ளம் அதிர்ந்த சிவப்ரியன், “ஏ.. அக்னி..” எனச் சென்று அவள் விழும் முன் இழுத்துத் தன்னோடு அணைத்துக் கொள்ள,
“நான் போறேன்.. என்னை விடு.. என்னை விடு” என்று அவனை கடுமையாக அடித்தபடி கத்தி அழுதாள்.
அவள் தலையை மிக மிக பரிவாய் கோதியவன், “ஸ்பார்கில்..” என்று பரிவாய் அழைக்க,
அழுது அழுது விசும்பியவள் அக்குரலில் மெல்ல அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
அவள் தலைகோதியபடியே “உனக்கு நாங்க இருக்கோம்டா. ஒன்னுமே இல்லை.. யூ வில் பீ ஆல்ரைட்.. ஒன்னுமாகாதுமா.. நாங்க இருக்கோம்.. நான் இருக்கேன்” என்று ஆறுதல் வார்த்தைகள் பேச,
அவனையே பிரம்மிப்பாய் பார்த்தவள் மீண்டும் மூர்ச்சையானாள்.
அவளது நிலையை நன்கு புரிந்துகொள்ள வேண்டுமெனில் அவள் அனைத்தையும் வாய்விட்டுக் கூற வேண்டுமென புரிய, சுசி அவளை மனவசியம் செய்ய முடிவெடுத்தாள்.
அதற்கான ஆயத்தங்களைச் செய்த சுசி, அவளைப் பேசத் தூண்ட, தனது காதல் விடயம் துவங்கி, அவன் ஆராய்ச்சி கூடத்தில் தன்னை விற்றதும், அங்கே தனக்கு நடந்த அவளங்களையும் கூறி வெடித்து அழத் துவங்கினாள்.
மனம் பாரம் தீரும் வரை அழுது அறற்றியவள் மயங்கிச் சரிந்திட, எதிர் அறையில் அமர்ந்து அவள் செயல்களைப் பார்த்துக் கொண்டிருந்த சிவப்ரியனுக்கு யாரோ உயிரைப் பிடுங்கி உளையில் எறிவதைப் போன்று இருந்தது.
யார் இவள்? தான் உரை வதையை சுமக்கும் அளவு, தன் மனதில் இவள் என்ன செய்துவிட்டாள்? என்று மனம் குழம்பி நின்றான்… கண்கள் அவன் கட்டுப்பாட்டையெல்லாம் மீறி கண்ணீரை வாரி இறைத்தது..
கண்கள் சிவக்க அமர்ந்திருக்கும் தன் அண்ணனிடம் வந்த சுசித்ரா, “ஷி இஸ் டெரிபிலி அபெக்டட்.. அவ மென்டல் ஹெல்த் மொத்தமா பாதிக்கப்பட்டிருக்கு அண்ணா” என்று கூற,
“அந்தப் பையன் யாருனு கேட்க முடியாதா சுசி?” என்று ஆத்திரத்தை உள்ளடக்கிய குரலில் கேட்டான்.
“நீ கேட்க வர்றது புரியுது அண்ணா.. ஆனா அது அவளோட ஹெல்துக்கு நல்லதில்லை. இதுக்கே ரொம்ப கஷ்டப்பட்டு அவளைப் பேச வச்சிருக்கேன். இன்னும் அவனைப் பத்தின டீடைல்ஸ் கேட்குறது அவளோட உயிருக்கே ஆபத்தா கூட அமையலாம். முதல்ல அதை அவ கடந்து வரனும் அண்ணா. அவனுக்குத் தண்டனை குடுப்பதை விட, அவளோட மனநலம் தான் இப்ப முக்கியம்.. கண்டிப்பா அவளே அவனைப் பத்தி வாய் திறந்து தண்டனை கொடுக்கச் சொல்லி கேட்குமளவு அவளை மாத்துவேன்” என்று சுசி கூற,
பெருமூச்சு விட்ட சிவப்ரியன், “எப்படி சுசி இப்படியெல்லாம் மனிதர்கள் நடந்துக்குறாங்க?” என்று ஆற்றாமையோடு கேட்டான்.
“பல சைக்கோ அன்ட் சீரியல் கில்லர்களைப் பார்த்துக் கடந்து வந்த நீயே இப்படிக் கேட்டா, நான் என்ன அண்ணா சொல்லுறது? இப்ப உள்ள ஜெனரஷேன் சின்னச் சின்ன ஏமாற்றங்களைக் கூடத் தாங்கிக்க மாட்டேங்குறாங்க அண்ணா. ஒன்பது வயசு பொண்ணு, அப்பா பிரண்ட்ஸ் முன்ன திட்டினதைத் தாங்கிக்க முடியாம சூசைட் பண்ணதா ஒரு நியூஸ் பார்த்தேன். இப்படி இருக்க, அவன் காதல் உண்மையோ பொய்யோ.. அதை வச்சு பல வருடங்களுக்கான கனவைக் கட்டி முடிச்சவனுக்கு இதை ஏற்கும் மனப்பக்குவம் சுத்தமா வரலை. அந்தக் கோவத்தை எப்படி வெளிப்படுத்தனு தெரியாம இப்படியொரு கேடுகெட்ட வேலையைப் பார்த்திருக்கான். யாருக்கும் சாபம் விடக் கூடாது தான் அண்ணா.. ஆனா இவனெல்லாம் நிச்சயமாவே நல்லாருக்க மாட்டான்” என்று சுசி மனமுடையக் கூற,
ஒரு பெருமூச்சு விட்டவன் கண்ணாடி வழியே எதிர் அறையில் இருப்பவளை நோக்கினான்.
“இவளை மீட்டு எடுத்துடுவோமா சுசிமா?” என்று குரல் கமற, ஏக்கத்துடன் கேட்ட அண்ணனின் முகத்தைக் கூர்ந்து நோக்கிய அந்த மனநல மருத்துவச்சிக்கு அன்றே அண்ணனின் மனம் புரிந்துவிட்டது!
அவனாக உணரும் நொடி தன்னிடம் தானேக் கூறப்போகிறான் என்று மனதோடு நினைத்துக் கொண்டவள், “உண்மையான அன்பு அவளை மீட்கும் சிவாண்ணா” என்று கூறினாள்.
அன்றிலிருத்து அவளைத் தங்களில் ஒருத்தியாகத் தான் பார்த்துக் கொண்டனர் இருவரும். காலை எழுவது, மூன்று வேளையும் அவர்கள் கொடுக்கும் உணவை உண்பது, புது மனிதர்களைப் பார்த்தால் கதறியழுவது, திடீரென நினைவில் வந்துபோகும் பழைய நினைவுகளில் பயந்து அலறுவது, உறங்குவது மட்டுமே அவளது வாடிக்கையான செயலாக அமைந்தது!
அவளுக்கு அளப்பறியா அன்பை பொழிந்து பார்த்துக் கொண்ட இருவருக்கும் அந்த ஒரு மாத காலம் அவளின் மனநலத்தில் துளியளவு கூட தேர்ச்சி இல்லாதிருப்பது பெரும் பாரத்தைக் கொடுத்தது. இதில் மேலும் சங்கடமான விடயம், இந்த ஒரு மாதத்திலேயே அவள் இருமுறை தற்கொலை செய்ய முயற்சித்தவையே!
தாங்க முடியாத மன அழுத்தமும், நடந்தவற்றை மீண்டும் மீண்டும் யோசித்து, அதே சம்பவத்திற்குள் தன்னைப் புதைத்து, மீண்டும் அந்த ரணத்தை அனுபவிப்பதன் வேதனையும் அதிலிருந்து தப்பிக்கும் வழி மரணம் மட்டுமேயென அவளை நம்பவைத்திருந்ததன் வெளிப்பாடே அது.
அன்றைய நாள் அவளைக் காண வந்த சிவப்ரியன் அறைக்குள் நுழைய, பிரம்மை பிடித்தவளைப் போல் அமர்ந்திருந்தவள், அவனது அரவம் உணர்ந்து திடுக்கிட்டு எழுந்தாள்.
“ஹே ஸ்பார்கில்.. ஜஸ்ட் ரிலாக்ஸ்.. நாந்தான்டா” என்று கூறியபடி வந்தவன் அவளருகே அமர்ந்துகொண்டான்.
அவனுக்கு அவளிடம் பேசுவதற்கென்று எதுவும் இல்லையென்றாலும் கூட ஒருநாளுக்கு ஒருமுறையாவது அவளைப் பார்க்க வந்திடுவான். தனது வருகையிலும், இருப்பிலும் மட்டுமே ‘உனக்காக நான் இருக்கின்றேன்’ என்ற உணர்வை கடத்திவிட்டுச் செல்வான்.
“சாப்டியாடா?” என்று மெல்ல அவள் தலையைக் கோதியபடி அவன் கேட்க,
தலையை மட்டும் அசைத்து பதில் கொடுத்தாள்.
சிறு புன்னகையுடன், “ஐஸ்கிரீம் சாப்பிடுறியா?” என்று அவன் கேட்க,
அவளுக்கு பதிலாற்ற தோன்றவில்லை!
தானே சென்று அவளுக்காக ஒரு பனிகூழை வாங்கி வந்தவன், அவளுக்குக் கொடுக்க, அதையும் அவனையும் மாறி மாறிப் பார்த்தவள் வாங்கி அமைதியாக உண்டாள்.
சிறிது நேரம் அப்படியே அமர்ந்திருந்தவள், அவன் தோள் சாய, அதில் இன்பமாய் அதிர்ந்தவன் அவள் கன்னம் தட்டி சிகை வருடினான்.
பக்கத்து அறையில் உள்ள மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தையைப் பார்வையிட்டு வந்த சுசித்ரா, அக்குழந்தை அவளுக்குக் கொடுத்த காகித ரோஜாவை வாங்கியபடியே அக்னிகாவின் அறைக்குள் நுழைய, அவள் கையில் உள்ள ரோஜா அவளை பித்தேற்ற போதுமாக இருந்தது.
“ஏ அண்ணா.. எப்ப வந்த?” என்று சுசி வினவ,
ஆத்திரத்தோடு எழுந்த அக்னிகா, அவள் கையிலிருந்து காகித ரோஜாவை பிடுங்கி துண்டு துண்டாகக் கிழித்து எறிந்தாள்.
“ஆ.. அ..அதை கொண்டு வராத.. எனக்கு பிடிக்கலை” என்று பித்துபிடித்தவள் போல் கத்தியவள் அங்குள்ளவற்றைத் தூக்கி எறிந்தும், மண்டைக்குள் கொடுக்கும் குடைச்சல் தாங்க இயலாது தன்னையே அடித்துக் காயப்படுத்திக் கொண்டும் கதற, அவளை சமன் செய்ய இருவரும் வெகுவாக முயற்சித்தனர்.
அப்போது சுசித்ராவின் அலைபேசி ஒலி எழுப்ப, ‘நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை..’ என்று பாடல் ஓடியது… அத்தனை நேரம் கத்திக் கதறிக் கொண்டிருந்தவள் இசை கேட்டதும் சட்டென அதீத அமைதியோடு நின்றாள்.
“அக்னிமா.. சாரிடி.. சாரி.. தெரியாம கொண்டு வந்துட்டேன்டா” என்று சுசித்ரா அவளை சமாதானம் செய்ய,
அலைபேசி அணைந்து மீண்டும் ஒலித்தது. அதை எடுத்து பாவை அணைக்க முற்பட அவள் கரம் பற்றி தடுத்த சிவப்ரியன், “சுசி.. ஷி இஸ் லிஸனிங் டு தட்” என்றான்.
சுசி அக்னிகாவை நோக்க, அலைபேசியைப் பார்த்துக் கொண்டே சீரான மூச்சை இழுத்துவிட்டவள் மெல்ல மெல்ல சாந்தம் அடைந்தாள்.
அப்போதே அவளை மீட்க சுசித்ராவிற்கு நல்ல யோசனை கிடைத்து. அதுவே இசை!
தினமும் அவளது அறையில் அவள் முழித்துக் கொண்டிருக்கும் நேரம் யாவும் இசையின் ராஜியம் ஓங்கி ஒலிக்கும். அவளுக்காகவே அத்தனை மொழி பாடல்களையும் அங்கு ஓட விட்டு அதுகுறித்தே அவளுடனான பேச்சை வளர்த்த இருவரும் அது அவளது மன அழுத்தத்திலிருந்து அவளை மீட்டுக் கொண்டு வருவதை கண்கூடாகப் பார்த்தனர்.
அப்படியான தருணம் தான், தன் மொத்த குடும்பத்தையும் சுற்றுலா சென்றபோது நடந்த விபத்தில் இழந்துவிட்டு, அந்த அழுத்தத்திலிருந்து மீள்வதற்காக அங்கு வந்த மஹதி அவர்களுடன் பழக்கமானாள்.
தினமும் தான் வந்து காத்திருக்கும் நேரம், அக்னிகாவின் அறையில் ஒலிக்கும் பாடல்களைக் கேட்டு அதில் ஈர்க்கப் பெற்றவள் ஒருநாள் சுசித்ராவிடமே அதுகுறித்து கேட்டிருந்தாள்.
மற்ற வாடிக்கையாளர்கள் பற்றி பகிர்ந்துகொள்வது தொழிலுக்கு உகந்தது அன்று என்றபோதும், அவள் கேட்டதற்காக, “அங்க என் பிரண்ட் இருக்கா. மெண்டலி டிப்ரஸ்ட் பேஷென்ட். அவளை சாந்தப்படுத்த தான் எப்போதுமே பாடல் ஓடும்” என்று மட்டும் கூறியிருந்தாள்.
இயல்பிலேயே துருதுருப்பான குணம் கொண்ட மஹதிக்கு, சுசித்ராவிடம் மேற்கொண்ட ஆலோசனையினால் ஓரளவு விரைவாகவே மீள முடிந்தது. அப்படியிருக்க, ஒருநாள் நேரடியாகவே, “நான் உங்க ஃபிரெண்ட பார்க்கலாமா?” என்று கேட்டிருந்தாள்.
“அவ புது ஆட்களைப் பார்த்தா விகரஸா பிஹேவ் பண்ணுவா மஹதி. உங்களுக்கு தான் கஷ்டம்” என்க, ஏனோ மஹதிக்கு அதற்காக பார்க்காமல் செல்ல வேண்டும் என தோன்றவில்லை!
“அவங்களுக்கு என்ன பிடிக்கும்னு சொல்லுங்க. நான் அதை கொண்டு வந்து அவங்களைப் பார்க்க வரேன்” என்று மஹதி கூற,
அவள் மீண்டும் மீண்டும் கேட்பதால் ஒரு வாய்ப்பு கொடுத்துதான் பார்ப்போமே என ஒப்புக் கொண்டாள்.
அவளுக்கு இசைமீது நாட்டம் உள்ளது என்பதை தவிர சுசித்ராவிற்குமே ஏதும் தெரியாதமையால் அதைதான் கூறியிருந்தாள்.
அதனால் மஹதி புல்லாங்குழல் ஒன்று வாங்கி வந்திருக்க, “அவளுக்கு பேப்பர் ரோஸ்னா சுத்தமா பிடிக்காது. அது பத்தி மட்டும் பேசாதீங்க” என்று கூறியிருந்தாள்.
இருவருமாய் அவளது அறைக்குள் நுழைய, சுசித்ராவைப் பார்த்து சன்னமான புன்னகையைக் கொடுத்த அக்னிகா, புதிதாக வந்திருக்கும் மஹதியைக் கண்டு மெல்ல மிரண்டு கட்டிலோடு ஒடுங்கினாள்.
“ஹாய் அக்னிகா.. பயப்படாதீங்க. நான் மஹதி” என்றபடி மெல்ல முன் வந்தவள், “உங்களுக்கு நான் ஒரு கிஃப்ட் வச்சிருக்கேன்” என்று புல்லாங்குழலைக் காட்ட,
அதையும் அவளையும் மாறி மாறி பார்த்தவள் மருண்ட விழிகளுடன் அதை எடுக்கச் சென்று சட்டென சுசியை நோக்கினாள்.
சிறு புன்னகையுடன் சுசி ‘எடுத்துக்கோ’ என்பதுபோல் தலையசைக்க, அதீத உற்சாகத்துடன் அதை எடுத்துக் கொண்டவள் அதனை ஆசையாக வருடினாள்.
அவள் கண்களின் பளபளப்பு அந்த இரண்டு பெண்களையுமே கலங்க வைத்ததெனத்தான் கூற வேண்டும்…
சிவப்ரியனும் அவளைப் பார்க்க வேண்டி வந்திருக்க, சரியாய் அவன் நுழையும் நேரம், ‘பாதி ஜீவன் கொண்டு தேகம் வாழ்ந்து வந்ததோ..’ என்ற பாடல் வரிகளை அத்தனை அற்புதமாய் புல்லாங்குழலில் இசைத்தாள், அக்னிகா!
-தொடரும்…