பூ-12
அன்று அவளைத் தேடிக் கொண்டு மிகுந்த ஆத்திரத்துடன் வந்தான், சாத்விக்…
மாலைநேர வகுப்புகளையும் முடித்துக் கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தவள் பேருந்து நிலையத்தில் அமர்ந்திருக்க, அவள் முன் கோபம் கொப்பளிக்கும் விழிகளுடன் வந்து நின்றான்.
அவனைக் கண்டதும் அவள் விழிகளில் மின்னல் தோன்றி மறைய, அதில் முன்பு தோன்றிய குளுமையன்றி தற்போது பெரும் எரிச்சல் எழுந்தது அவனுக்கு…
“என்னைய நல்லா ஏமாத்திட்டல்ல நீ?” என்று அவன் கேட்க,
அவளுக்கு அவன் கூற வருவது துளியளவும் புரியவில்லை!
“நான் பார்க்கும்போதெல்லாம் நீயும் என்னைப் பார்த்துப் பார்த்து மயக்கப் பார்த்துட்டல்ல நீ? உன்னைப் போய் விரும்பித் தொலைச்சேன் பாரு” என்று அவன் கூற,
புருவம் சுருக்கி அவனைப் பார்த்தவள், “நீங்கப் பேச வர்றது எனக்குப் புரியலை” என்றாள்.
அவன் தன்னை விரும்பியுள்ளான் என்ற செய்தி குளுமையைத் தராது, மனதின் ஒரு ஓரம் அவளுக்கு ஏதோ பூகம்பம் நிகழப் போவதை எடுத்துக் கூறிக் கொண்டதன் விளைவாய் சிறு நடுக்கம் கொடுத்தது.
“அய்யோ அப்பா.. என்னா நடிப்புடி..” என்றவன், “ஆமா.. நான் உன்னை ‘டி’ னு சொல்லனுமா இல்ல ‘டா’னு சொல்லனுமா?” என்று நக்கலாக வினவ,
அவன் எதைப் பற்றிப் பேசுகிறான் என்பது அவளுக்குப் புரிந்தது.
அவன்மீது துளிர்த்த நேசத்திற்காகத் தன் சுயமரியாதையை அடமானம் வைத்திடும் அளவு அவள் முட்டாளாக இருக்கவில்லை. எனவே அவனுக்குச் சளைக்காத பார்வை பார்த்தவள், “நான் உங்களை விரும்பினது உண்மை தான். உங்களைப் பார்த்ததும் உண்மை தான். ஆனா நீங்களும் என்னை விரும்பிருக்கீங்கனு நிஜமாவே தெரியாது.. அன்ட் நான் ஒரு டிரான்ஸ்னு சொல்லியே முறையா என் நேசத்தை நானே வந்து உங்ககிட்ட வெளிப்படுத்தனும்னு தான் இருந்தேன்” என்று கூற,
“ஏ.. வாயமூடு. இதைச் சொல்ல உனக்கு அசிங்கமா இல்ல? எனக்கு அசிங்கமாருக்கு.. போயும் போயும் பொண்ணே இல்லாத ஒரு பிறவியையா விரும்பிருக்கோம்னு எனக்கு அசிங்கமாருக்கு” என்று அடிக்குரலில் சீறினான்.
யாருமற்ற அந்தப் பேருந்து நிறுத்தத்திலும் கூட, அவன் குரலைத் தாழ்த்தியே பேசியபோதும், வார்த்தைகளில் பெரும் கூர்மை தாங்கி நின்றது!
தன் மனதிற்கு இனியவன் தன்னை வார்த்தைகளால் வதைப்பதில் வலிக்கப் பெற்றவள், “இங்க பாருங்க சாத்விக்.. நா..நானா ஒன்னும் உங்ககிட்ட காதலை சொல்லி உண்மையை மறைச்சு லவ் பண்ண வைக்கலை.. என் காதலை உங்கக்கிட்ட சொல்லனும்னு நினைச்சப்பக் கூட நீங்க என்னை ஏத்துக்கலைனா முறையா ஒதுங்கிடனும்னு தான் இருந்தேன்” என்று கூற,
“பேசாத.. நீ பேசப் பேச எனக்கு இன்னும் தான் ஆத்திரமா வருது.. தெரியாமதான் கேட்குறேன்.. உங்களுக்கு தான் வேற வேற தொழில் எல்லாம் இருக்குல.. அப்றம் எதுக்குடி படிக்குறேன்னு காலேஜ் வந்து எங்க உசுர வாங்குறீங்க? உன்கூட பொண்ணுங்களாம் எப்படி உட்காருறாங்க?” என்று விஷம் பூசிய வார்த்தைகளைக் கக்கினான்.
அதில் மனம் முற்றுமாய் உடைவதை உணர்ந்தவள், “சா..சாத்விக்.. பா..பார்த்து பேசுங்க” என்று கூற,
“என்னத்த பார்த்து பேச.. எதையும் பார்க்க முடியாதுனு தான் தெரிஞ்சுடுச்சே.. பூனு நினைச்சு முகர வந்தா, இது காகிதப்பூவா இல்ல இருக்கு.. உன்னக்கெல்லாம் எப்படி சீட் கொடுத்தானுங்க?” என்று படு நக்கலாகவும் ஆத்திரமாகவும் கூறினான்.
அவன் வார்த்தைகளின் வீரியம் தாங்க இயலாமல் தொண்டையை வந்து முட்டும் கேவலையும் கட்டுப்படுத்த இயலாமல் உடைந்து போனவள், “ப்ளீஸ்.. இட்ஸ்..இட்ஸ் டூ ஹர்டிங் சாத்விக்.. உங்க மேல வச்சிருந்த மரியாதையைக் கெடுத்துக்காதீங்க” என்று திக்கித் திணறி கூறினாள்.
தைரியமானவள் என்பதற்காக எத்தனைத்தான் அவளால் தாங்கிட இயலும்!?
“நாங்கூடதான் உன்மேல பெரிய எண்ணமும் கனவும் வச்சிருந்தேன். வாழ்க்கையை வாசமா மாத்த வருவனு நினைச்சேன்.. ஆனா வாசம் மட்டுமில்ல.. எதுவுமே இல்லாத காகிதப்பூ தான் நீயின்னு இப்பத்தானே தெரியுது.. யார்கிட்டயும் என்னை விரும்புறதை சொல்லித் தொலைச்சுருக்கியா?” என்று சாத்விக் கத்த,
அவன் வார்த்தைகளைக் கேட்டு தன்னையே அந்நொடி வெறுத்து நின்றாள்.
“இந்த கண்றாவியை யாருக்கும் சொல்லித் தொலைச்சுடாத.. எனக்குதான் அசிங்கம்” என்றவன்,
“உனக்கு தகுந்த இடத்துல இருக்கக் கத்துக்கோ.. வந்துட்டா.. காதல் பண்றேன்னு.. அதுக்கெல்லாம் ஒரு தகுதி வேணும்” என்று கூறி அவளை மேலும் கீழுமாய் பார்த்து நக்கலான சிரிப்போடு, “அது உனக்கு இல்லை.. அலங்காரத்துக்கு சும்மாதான் பேப்பர் பூவெல்லாம் பயன்படுத்தமுடியும்.. வன்லி வன் டைம் யூஸ்” என்றான்.
“மரியாதை கெட்ரும்.. இங்கருந்து நீயா போறிய செருப்ப கழட்டி நானே அடிச்சு தொறத்தவா?” என்று அவள் அடிக்குரலில் பல்லைக் கடித்துக் கொண்டு கூற,
“உங்கிட்டலாம் பேசுறதைக்கூட அசிங்கமாதான்டி நினைக்குறேன்.. ச்சீ..” என்றுவிட்டுச் சென்றான்.
செல்பவனையே கண்களில் கண்ணீரோடு பார்த்தவளுக்கு கதறி அழவேண்டும் போன்றிருந்தது! தன்னை வெகு தைரியசாளியாக உருமாற்றியவள் தன்னில் விழும் அத்தனைக் கறைகளையும் பொசுக்கி மிளிர வேண்டும் என்றுதான் தனக்கு அக்னிகா என்று தானே பெயர் சூட்டிக் கொண்டாள்…
இன்று தன்மீது விழுந்த கறைகளைக் குப்பைகளாய் நினைத்துப் பொசுக்க இயலாது, தண்ணீராய் நினைத்து அணைந்துக் கொண்டிருந்தாள்.
பிரம்மை பிடித்தார் போல் புறப்பட்டு தான் தங்கியிருக்கும் விடுதிக்கு வந்தவள், அறைக்குள் நுழைந்து கதவை அடைத்துக் கொள்ள, தொண்டையை அறுத்தக் கேவல் திறந்துகொண்டது!
‘இப்படியொரு பிறப்பை எனக்கு ஏன் கொடுத்த?’ என்று கடவுளை நிந்தித்தவளுக்கு அன்று தன் பெற்றோர் அவமானம் என்று கூறி தன்னை துறத்தியது நினைவில் உதித்தது!
தற்போது தானே தன்னை நினைத்து பெரும் அவமானமாக உணர்ந்தவள் கட்டிலில் முகம் புதைத்து வெடித்துக் கதறினாள். முழுதாய் ஒரு வாரம் கல்லூரிக்கும் செல்ல தோன்றாது அறையிலேயே கிடந்து அள்ளல்பட்டவளுக்கு நரகத்தின் வேதனையைக் கொடுத்திருந்தது இந்த காதல்…
‘அவன விரும்பினதைத் தவிர வேற என்ன தப்புப் பண்ணேன் நானு? இ..இப்படியானதுக்கு நான் என்ன செய்ய முடியும்? இது என்ன என் தப்பா?’ என்று மனதோடு குமைந்தவளுக்கு அவன் காகிதப்பூ என்று கூறிய வார்த்தை மீண்டும் மீண்டும் மூளைக்குள் ஒலித்துப் பெரும் வேதனையைக் கொடுத்தது!
உலகின் மொத்த பாரத்தையும் கையளவு ஒற்றை இதயத்தில் சுமந்திட இயலுமா? அந்நொடி அப்படித்தான் உணர்ந்தாள் பேதை.
இயற்கை விதித்த விதிக்கு யார் என்ன செய்திட இயலும்? அனைத்தையும் தூசாய் தகர்த்து தன் படிப்பிலும், வேலையிலும் முன்னேறிக் கொண்டிருந்தவளது மொத்த வாழ்க்கைக்குமே பெரும் தடைகல்லாய் அமைந்தது அச்சம்பவம்!
பழுக்கக் காய்ச்சிய விலை உயர்ந்த தங்க ஊசிகளை விரும்பியே உடலெங்கும் குத்திக் கொள்வதைப் போல் வேதனை மூட்ட, அதிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காகவேணும் கல்லூரி வரத் துவங்கினாள்.
விதியே என்று நடமாடும் தோழியைக் கண்டு சிலர் கேட்டும், அவ்வப்போது ஒரு காரணத்தினைக் கூறி தப்பிக்க முயன்றாள். அந்தப் பருவத்தோடு முடியப்போகும் கல்லூரி நாட்களை எதிர்நோக்கியவள், மனமாற்றத்திற்கு வேறு எங்காவது சென்றுவிடலாம் என்று தீர்மானித்திருக்க, அதில் கூடை மண்ணை அள்ளிக் கொட்டி அவள் வாழ்க்கையையே தடம் மாற்றிவிட்டான், சாத்விக்…
தன் கைப்பையை பற்றியபடியே யாருமற்ற சாலையில் நடந்து விடுதி சென்று கொண்டிருந்தவள், தன் முன் வந்து நின்ற மகிழுந்தில் கண்ணிமைக்கும் நேரத்திற்குள் கடத்தப்பட்டாள்.
“ஏ… யாரு நீங்க?” என்று பதட்டத்துடன் கத்தியவளுக்கு உடலெங்கும் நடுக்கம் பறவ, அலைபேசியை எடுத்து அவசர எண்ணிற்கு அழைக்க முற்பட்டாள்.
அதற்குள் அதைப் பிடுங்கிக் கொண்ட தடியன் ஒருவன், “அமைதியா வா” என்று கத்திவிட்டு, அவள் கதறுவதைப் பொருட்படுத்தாமல் ஒரு பாழடைந்த கட்டிடத்தில் விட்டுச் சென்றான்.
முகம் வெளுத்து, அச்சத்துடன் வெடவெடத்து நின்றவள், சுற்றி முற்றிப் பார்த்தபடி வழியும் வியர்வையைத் துடைக்க, “என்ன டார்லிங்.. எப்படிருக்கு இந்த எக்ஸ்பீரியன்ஸ்?” என்று அவளுக்குப் பின்னே சாத்விக்கின் குரல் கேட்டது!
அவன் குரல் கேட்ட நொடி ஆணி அரைந்தார் போல் அப்படியே நின்றவள் உடல் அதிர்ந்து அடங்க, “பாருடா.. அவ்ளோ காதலா? என் குரலைக்கூட மணப்பாடமா வச்சிருக்க?” என்றவன், அவளுக்கு முன் வந்தான்.
“உனக்கு என்ன வேணும்?” என்று அவள் பயத்தை உள்ளடக்கிய குரலில் கேட்க,
“எனக்கு உன் நிம்மதி மட்டுந்தான் வேண்டும்.. என் நிம்மதியை மொத்தமா கெடுத்த உன்னோட நிம்மதி மட்டுமே தான் வேணும்” என்று கத்தினான்.
“நான் என்ன பண்ணேன் உன்னை? ஒரு திருநங்கையை ஏற்றுக்க முடியாதுனா நீ என்னைப் பத்தித் தெரிஞ்சுகிட்டு உன் ஆசைகளை வளர்க்குறதா வேணாமானு பார்த்துருக்கனும்” என்று ஆற்றாமையுடன் அவள் கூற,
“லவ் பண்றவ, என்ன படிக்குறா, எங்க இருக்கானு இதெல்லாம் விசாரிச்சு பண்ணலாம்.. ஆனா அவ பொண்ணானு விசாரிக்கனும்னு யாராவது நினைப்பாங்களா யூ ஃபூல்” என்று கத்தியவன், “என்னால இந்த ஏமாற்றத்தைத் தாங்கவே முடியலை.. போயும் போயும் இதையா காதலிச்சோம்னு என்னை நினைச்சா எனக்கே அருவருப்பா இருக்கு” என்று கூறினான்.
அவன் பேசிய வார்த்தைகளை விடவும் அவன் முகம் காட்டிய அறுவறுப்பு அவளை வெகுவாக பதம் பார்த்தது!
“உன்னைக் கெஞ்சி கேட்டுக்குறேன்.. உன்னால ஏற்கனவே நான் நிம்மதியில்லாம இருக்கேன்.. என்னைக் கொல்லாத” என்று கரம் கூப்பி அக்னி கெஞ்ச,
“நீ நிம்மதியே இல்லாமதான்டி இருக்கனும்…என் ஆசைகளையும் கனவுகளையும் உருகுழைச்ச நீ நிம்மதியே இல்லாம தான் இருக்கனும்” என்றான்.
சாத்விக்கிற்கு அவள் பால் எழுந்த ஆசை உண்மையானதே.. வெறும் ஆசை என்ற வரையில்.. வீட்டிற்கு மூத்த மகன், அதிகளவு வசதி இல்லாத போதும் கேட்டதெல்லாம் கிடைத்துவிடுமளவு செல்லம் என்று வளர்ந்தவனுக்கு ஆசைப்பட்ட ஒன்றை அடைய இயலாத தடை, ஆத்திரத்தோடு அலைய வைத்தது. பெரும் கனவுகளோடும் ஆசைகளேடும் காத்திருந்தவனுக்கு அந்த ஏமாற்றம் கொடுத்த வலியை துளியளவும் தாங்கிக் கொள்ள இயலவில்லை. திருநங்கை என்றாலே தவறானவர் என்ற கருத்தை மனதில் ஆழமாகக் கொண்டவனுக்கு அவளைப் பற்றி நினைத்தாலே அருவருப்பாக இருந்தது. அவளைக் காதலித்ததில் தன்னையே நிந்தித்துக் கொண்டவன், தன் கோபத்திற்கு வடிகால் தேடியே ஆகவேண்டும் என்று நினைக்கையில் உருவான வெறியில் தான் ஒரு விடயம் சிக்கியது.
“என்னை என்னடா பண்ணப் போற?” என்று சோர்வும் பயமும் கலந்த குரலில் அவள் கேட்க,
“உன்னை விபச்சார விடுதியில விடுற அளவு கேடுகெட்டவன் நான் இல்ல” என்றவன், “இவதான் அது.. கூட்டிட்டுப் போங்க” என்றான்.
‘யாரிடம் பேசுகின்றான்?’ என்று திரும்பிப் பார்ப்பதற்குள் அவள் கண்களைக் கட்டி மயக்க ஊசியைச் செலுத்தியிருந்தனர்… உபயம், கண் விழிக்கையில் ஆராய்ச்சி கூடம் ஒன்றில் அநாதரவாய் படுத்துக் கிடந்தாள்.
ஆம்! சாத்விக், அப்பகுதியில் உள்ள தனக்கு தெரிந்த ஒருவரின் மனநல ஆராய்ச்சிகளுக்கான சோதனை எலியாக அவளை விற்றிருந்தான்.
சாப்பாடு இல்லாமல் ஒரு மனிதனால் எத்தனை நாட்கள் உயிரோடு இருக்க இயலும்?
தண்ணீர் இல்லாமல் எத்தனை நாட்கள் தாக்குப் பிடிக்க இயலும் போன்ற ஆராய்ச்சிகளின் பட்டியலில், நாற்றம் அதிகமுள்ள இடத்தில் ஒருவரால் எத்தனை நாட்கள் தாக்குப்பிடிக்க இயலும், முழுக்க முழுக்க ஒரே நிறத்தினை வழுக்கட்டாயமாகப் பார்க்க வைத்தாள், மனதில் என்னமாதிரியான அழுத்தங்கள் நிகழும், பிடிக்காத சொற்களை மீண்டும் மீண்டும் ப்ரயோகித்தால், எவ்வளவு தூரம் தாங்கிக் கொள்ள இயலும், எந்த மாதிரியான எதிர்வினைகள் ஏற்படும், மனதில் எப்படியான மாற்றங்கள் நிகழும் போன்ற சோதனைகளோடு, திருநங்கைகளுக்கு பாலியல் உணர்வுகள் தோன்றுமா என்ற அதீத சோதனைகளுக்கு அவளை பயன்படுத்தி மனதளவில் அவளை பித்துப்பிடிக்கச் செய்து சித்திரவதை செய்து கொண்டிருந்தனர்.
அக்னிகா காணாமல் போனதில் விடுதி உரிமையாளர் அருகே உள்ள காவல் துறையில் புகார் கொடுத்திருந்தபோதும், அவள் எங்கு சென்றிருப்பாள் என்பதற்கான முறையான ஆதாரங்கள் இன்றி வழக்கும் மூடிவைக்கப்பட்டது.
அந்த நேரம்தான்.. அம்மருத்துவர் மீது நோயாளி ஒருவர் பாலியல் குற்றம் சுமத்த, அவ்வழக்கு சிவப்ரியன் கரம் சேர்ந்தது. அவரை அடித்துத் துவைத்து எடுத்தவன் மேலும் அவரைப் பற்றித் தோண்டித் துருவி, அவரது சட்டவிரோதமான ஆராய்ச்சி பற்றியும் தெரிந்துகொண்டான்.
ஆத்திரத்தின் உச்சத்திற்கே சென்றவன் ஆயுள் முழுதும் சிறைச்சாலை வாசத்தை அவனுக்குக் கொடுத்துவிடும் நோக்கத்துடன், அவனது ஆராய்ச்சி கூடத்தைக் கண்டுகொண்டு ஆதாரங்களையும் சேர்ப்பிக்க சென்றிருக்க, அங்கே தான் அவனவளைப் பித்து பிடித்த நிலையில் முதன்முறை கண்டான்…
-தொடரும்…
சாத்விக் சாகவேண்டியவன் தான் என்ன ஓரு அரக்கத்தனம்.