பூ-11
“சார்.. மற்ற ரெண்டு பேரும் சாகும்போது உடல் மட்டுமே தான் தரையோட சேர்த்து அரையப்பட்டிருந்துச்சு. ஆனா தினேஷுக்குக் கை ரெண்டையும் வயிற்றுமேல வச்சு கையோடு சேர்த்து உடலைத் தரையில் அரைஞ்சிருந்தது..” என்று திலகா கூற,
அவளை மெச்சுதலாய் ஒரு பார்வை பார்த்துக் கொண்ட சிவன், “எஸ் திலகா.. காரணம் அவன் சாந்தியைக் கையாலயே அடிச்சு கொன்னதுதான். சாந்தி திருநங்கைனு சொல்லும்போது, சாத்விக்கோட எரிச்சலோட ஒத்துப்போகுதேனு சந்தேகப்பட்டுத்தான் அவனோட காலேஜ் போய் அங்க வேற எதும் திருநங்கைகள் படிச்சாங்களானு குறிப்பிட்ட அந்த வருடத்தில் தேடினேன். அப்பத்தான்… அக்னிகா அங்க அந்த ஆண்டு, அதுவும் சாத்விக்கோட துறையிலேயே படிச்சது தெரியவந்தது” என்று கூறினான்.
“அப்படினா நம்ம சீரியல் கில்லரோட மோட்டிவ் திருநங்கைகளை உடலளவும், மனதளவும் காயப்படுத்துருவங்கதானா சார்?” என்று கேட்ட ராம்,
“ஆனா சார்.. தன்விஷா அன்ட் தினேஷ் இப்படி செஞ்ச கொஞ்ச நாட்களுக்குள்ளயே இறந்துட்டாங்க. சாத்விக் மட்டும் ஏன் இத்தனை வருடம் கழிச்சு இறக்கனும்?” என்று கேட்டான்.
“சாத்விக்குக்கு முதல்லயே ஒரு கொலை முயற்சி நடந்திருக்குனாலும் கூட அதுவுமே இந்தச் சம்பவம் நடந்து மாதங்கள் கடந்திருக்குமே” என்று சந்தோஷ் வினவ,
“சிம்பில்.. மறுபடியும் வேற எங்கேயும் அவன் யாரையாவது தப்பா பேசிருக்கலாம்” என்று முறையாகக் கணித்துக் கூறினான்.
“நம்ம அடுத்த மூவ் என்னது சார்?” என்று திலகா வினவ,
“சமீபமா திருநங்கைகளுக்கு எதிரா நடக்கும் அவலங்களைப் பற்றிய நியூஸ நாம திரட்டனும் திலகா. அவன் எந்த பேஸிஸ்ல எப்படி கொல்லுறான்னு தெரியலை. போற போக்கில் கண்ணில் படும் இப்படியான ஆட்களைத் தேடிக் கொள்ளுறானா இல்லை அதுக்கு எதும் திட்டம் வச்சிருக்கானானு தெரிந்தா அடுத்த கொலைகளைத் தவிர்க்கலாம். இதுவரை நடந்த கொலைகள் இரவு நேரமாதான் நடந்திருக்கு. முடிந்தளவு இரவு நேரம் தனியா வெளியே, முக்கியமா ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களுக்குப் போறதை தவிர்க்கச் சொல்லி அறிவிப்புக் கொடுக்கனும்” என்று அடுத்தக்கட்ட நடவடிக்கைகளைப் பற்றிக் கூறினான்.
இணையத்தில் கேலி என்ற பெயரில் வெளியிடும் போன்மி (மீம்) போன்றவற்றில் தங்களது வக்கிரங்களைக் கொட்டும் மக்களின் விவரங்களைச் சேகரிக்கத் துவங்கியிருந்தனர்.
முதலில் அவ்வாறான போன்மிகளை உருவாக்குபவர்கள் எந்தெந்த இடங்களைச் சார்ந்தவராக உள்ளனர் என்பதைக் கணக்கிட்டனர். இணையத்தில் எண்ணற்ற கணக்கிலடங்காத போன்மீகளில் அவர்கள் இருக்கும் மாநில நபர்களை மட்டுமே பிரித்தெடுப்பது கடல்நீரில் கலந்த மழைத்துளியைத் தேடுவதற்கு சமானமான ஒன்றாகும். எனவே அவர்கள் மாநிலத்தைச் சேர்ந்தவரால் வெளியிட்ட போன்மீகளை மட்டுமே தேடியெடுத்தனர்.
Social media monitoring, web scrapping, API access போன்ற முறைகள் மூலமாக இணைய பாதுகாப்புத் துறை ஆய்வாளர்களால் அந்த மாநிலத்தைச் சேர்ந்தோரால் உருவாக்கப்பட்ட போன்மீகள் மட்டும் பிரித்தெடுக்கப்பட்டது. அதில் குறிப்பிட்ட இந்தத் தலைப்பைச் சார்ந்த போன்மீகளை பிரித்து எடுத்தோர், அதிலிருக்கும் விமர்சனங்களில் உள்ளவர்களின் கணக்கை எடுத்தனர்.
அந்த விமர்சகர்களில் அவர்கள் பகுதியைச் சேர்ந்தோரின் கணக்குகளை சேகரித்தவர்கள் அவர்கள் பகுதியைச் சேர்ந்த நான்கு நபர்கள் அவர்களின் வக்கிரங்களை விமர்சனமாகக் கொட்டியிருப்பதை குறித்துக் கொண்டனர்.
“சார்.. நாம இவ்ளோ எஃபோர்ட் போடுறோம். ஆனா கில்லர் ரான்டமா, தான் கடந்துபோற பாதையில் பார்க்குறவங்களை செலெக்ட் பண்றவனா இருந்தா என்ன செய்ய?” என்று திலகா வினவ,
“நாம கடந்து போகும் இடத்தில் பகிரங்கமா தங்களோட கருத்துக்களைச் சொல்றவங்க ரொம்பவே குறைவு திலகா. ஆனா இணையத்தில் இப்படி முகமறியாதவர்கள் தைரியமா பேசுவாங்க. கேட்க ஆள் கிடையாது என்ற எண்ணம்.. மிஞ்சி போனா ரிப்போர்ட் பண்ணுவாங்க. நம்ம அக்கௌன்ட் ப்ளாக் ஆகும்.. திரும்ப ரீ கெயின் பண்ண முடிஞ்சா பண்ணிப்பாங்க. இல்லைனா வேற அக்கௌன்ட் கிரியேட் பண்ணி பேசுவாங்க.. அவ்ளோதான்.. அதனால இதில் நாம தேடினதில் யாராவது ஒருத்தரையாவது கில்லர் தன் லிஸ்ட்ல வச்சிருக்க அதிக வாய்ப்புகள் இருக்கு.. இவங்களை ஃபாலோ பண்ண ஆட்கள் போட்டா நாம கில்லர பிடிச்சிடலாம்” என்று கூறினான்.
நேரம் கடந்து இரவை அடைய, அணைவரும் அவரவர் இல்லம் திரும்பினர். வீடு திரும்ப வேண்டி தன் வண்டியில் அமர்ந்தவன் மனதில் கணமான உணர்வு! தங்கைக்கு அழைப்பு விடுத்தவன் அவர்கள் எங்கே உள்ளனர் என்று கேட்க முயற்சிக்க, பாவையவள் அழைப்பைத் துண்டித்திருந்தாள்.
மஹதிக்கு அழைத்தவன் அவள் அழைப்பை ஏற்றதும், “எங்க இருக்கீங்க மஹிமா?” என்க,
“இங்க க்வாடர்ஸ்ல தான் அண்ணா” என்றாள்.
“அக்னி?” என்று அவன் கேட்க,
“தூங்கிட்டா” என்று பதில் கூறினாள்.
மஹதிக்கு இது அவனது வேலை என்று புரிந்தபோதும் கூட சற்றே மனத்தாங்களாகத்தான் இருந்தது சிவப்ரியன் மேல்!
ஒரு பெருமூச்சை இழுத்துவிட்டவன் வீட்டை அடைய, சுசித்ரா முகத்தில் கடுகடுப்புடன் அமர்ந்திருந்தாள்.
சென்று கைகால்கள் கழுவி உடைமாற்றி வந்தவன், “சுசிமா..” என்க,
அவள் திரும்பினாள் இல்லை!
மஹதியும் அவள் அருகே அமர்ந்தபடி மௌனம் காக்க, “மஹிமா.. நீயாது புரிஞ்சுக்கோடா.. ரெண்டு பேரும் நியூஸ் பார்க்குறீங்க தானே? கேஸோட வீரியம் புரியாம நடந்துக்காதீங்கடா” என்று தன்மையாக என்றாலும் சற்றே அழுத்தமாகக் கூறினான்.
“நீதான் அண்ணா அவளோட மனநிலையின் வீரியம் புரியாம நடந்துக்குற” என்று கண்கள் கலங்க சுசித்ரா கூற,
அவள் காலடியே வந்து அமர்ந்தவன் அவள் கைகள் பற்றி, “புரியாம இல்லை சுசி” என்றான்.
“மயக்கத்திலிருந்து முழிச்சு அவ எப்படி அழுதா தெரியுமா? மு..முதல் முதலா அவளைப் பார்க்கும்போது எந்த நிலையில் இருந்தாளோ திரும்ப அதே நிலையில் பார்த்த போல இருந்தது எனக்கு.. அவ கதறும்போது உயிரே போயிடுச்சு சிவாண்ணா” என்று சுசி கூற,
“ரொம்ப நொந்துபோயிட்டா ண்ணா.. ஹாஸ்பிடல் கூட்டிட்டுப் போய் ட்ரிப்ஸ் போட்டு இப்ப தான் வீட்டுக்குக் கூட்டிட்டு வந்தோம்” என்று மஹதி கூறினாள்.
அவனுக்கும் கண்கள் கலங்கி விட்டது! “என் நிலைமையை யோசிச்சுப் பாருங்கடா.. அவளை அந்த இடத்தில் நிறுத்தி கேள்வி கேட்க நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன்னு..” என்றவன் பேச இயலாது கண்களை அழுந்த மூடிக்கொள்ள, மூடிய விழிகளை மீண்டும் உடைத்துக் கொண்டு ஒருதுளி வெளியே குதித்தது.
உண்மை தானே? உயிரானவளை இக்கட்டான நிலையில், வலுக்கட்டாயமாக நிருத்தி, அவன் படும் பாடையும்தான் சொல்லில் அடக்கிவிட இயலுமா? உயிர் போவதைப்போல் தவித்தான்.
விட்டால் கதவை அடைத்துக் கொண்டு விக்கி அழுதுவிடலாம் போல் இருந்தது அவனுக்கு. அத்தனை வலித்தது.. கடமையை மீறி செயல்பட இயலாத அவன் நேர்மை கொடுத்த சன்மானத்தை, காதல் மனம் தான் அனுபவிக்க வேண்டியதானது…
பெண்கள் இருவருக்கும் அவனைக் காண கண்கள் கலங்கிட, “எங்கருக்கா?” என்று சிவப்ரியன் கேட்டான்.
சுசி தன் அறையைக் கண்காட்ட, மெல்ல எழுந்து சென்றவன் அவள் அறைக்குள் நுழைந்தான்…
அவள் அருகே வந்து அமர்ந்தவன் சோர்ந்து இருந்த அவள் முகத்தைப் பரிவோடு கோதினான்.
மனதில் மேலும் பாரம் ஏறியது! அவள் கரங்களைப் பற்றிக் கொண்டு அதில் தன் தலையைச் சாய்த்தவன், “சாரிடி ஸ்பார்கில்” என்று மெல்ல முனங்க, அவன் கண்ணீர் அவள் கரத்தின் வழியே வழிந்தது!
ஆம்! அக்னிகா ஒரு திருநங்கையே!
ராஜ், அமிர்தா தம்பதியரின் கடை வாரிசாய், தாய் தந்தையின் அதிக செல்லத்திலும் அக்காவின் சண்டை மற்றும் பாசத்திலும் வளர்ந்து வந்தவனே ஈஸ்வர்.
தனது பதின் வயதின் தொடக்கத்திலேயே தனக்குள் நிகழும் மாற்றங்களை உணர்ந்தவன், அதை கட்டுப்படுத்த பெரும்பாடுபட, உணர்வுகளையும் தாண்டி உருவம் அவனது மாற்றங்களை மெல்ல மெல்ல எடுத்துக்காட்டத் துவக்கியது!
அன்றைய இரவு அடைமழை ஒன்று வாணைப் பிளக்க, தன் நிலையை உடைத்துக் கூறியவன் வாழ்விலும் பெரும் புயல் வீசியது!
“என்னடா சொல்ற?” என்று அமிர்தா அதிர்ந்து வினவ,
“ஆமா ம்மா.. நானும் என்னைக் கட்டுப்படுத்த முயற்சி பண்ணேன்.. ஆனா முடியலை. உ..உடம்பே என் மாற்றங்களைக் காட்டிக்கொடுக்க ஆரம்பிச்சுடுச்சு..” என்று கூறினான். பயம் இருந்தபோதும் அவனிடம் தயக்கம் இல்லை.
இயற்கையாய் உடலுக்குள் நிகழும் மாற்றத்திற்கு அவனால் தடை போட இயலாது என்ற அறிவியல் அறிவு அவனுக்கு அதைத் தயக்கமாக எடுத்துறைக்க விடவில்லை!
“எங்க மானத்தை வாங்குறதுக்குனே வந்து பிறந்துருக்கியேடா பாவி” என்று அமிர்தம் அவனை அடிக்கத் துவங்க,
தந்தையிடம் ஓடியவன், “அப்பா.. நீங்களாது புரிஞ்சுக்கோங்க ப்பா. இதுல நான் பண்றதுக்கோ தடுக்குறதுக்கோ எதுவுமே இல்லை ப்பா. என் உடலில் இயற்கையாவே பெண் சுரபிகள் அதிகம் சுரக்குது ப்பா. அதன் வெளிப்பாடு தான் இது.. இது ஒன்னும் தப்பில்லை ப்பா.. உடலியல் கோளாறால நடக்குது..” என்று புரியவைக்க முயற்சி செய்தான்.
அவன் உண்மையைக் கூறியதிலேயே இடிந்துபோய் அமர்ந்திருந்தவருக்கு அவன் விளக்கம் ஏதும் காதுகளில் விழவேயில்லை.
தன் நிலையை யாருமே புரிந்துகொள்ள மறுக்கின்றனரே என்று அவன் அக்காவிடம் செல்ல, “ஏ.. அவகிட்டப் போகாத..” என்று அவனை நிறுத்தியிருந்தனர்.
“நீ உள்ள போடி..” என்று அமிர்தம் மகளை அனுப்ப,
“ம்மா.. தம்பி சொல்றதை புரிஞ்சுக்கோங்கம்மா.. அவன்மேல எந்தத் தப்பும் இல்லமா.. அவன் பாவம்மா..” என்று அவனது அக்காவும் கெஞ்சினாள்.
“எல்லாம் எங்களுக்குத் தெரியும் நீ உள்ள போ” என்று அவளை மிரட்டி அனுப்பிய பெற்றோர் மகனை என்ன செய்வதென்ற தீவிர ஆலோசனையில் இருந்தனர்.
“அப்பா.. அம்மா.. நானும் நீங்கப் பெத்த மகன் தானே? நீங்க என்னைப் புரிஞ்சுப்பீங்கனு நம்பிதானே நான் சொன்னேன்..” என்று கூறியவன் தலையில் பெரும் இடியை இறக்கும் விதமாய்,
“பேசாதடா.. உன்னைக் கொன்னுடுவேனோனு பயமாருக்கு” என்று ராஜ் உறுமினார்.
தன் சுண்டு விரலில் சிறு காயம் ஏற்பட்டாலும் தன்னை தாங்கும் தந்தையா இப்படியான வார்த்தைகளை உதிர்த்தது என்று நொந்துபோன ஈஸ்வரன் அந்த நொடி தான் பிறந்த வீட்டையே வெறுத்து நின்றான்.
தாய் தந்தையர் இருவருமாகப் பேசி முடிவு செய்து, அவனை ஒரு ஆசிரமத்தில் சேர்த்துவிட, விரக்தியான சிரிப்புடன் அவர்களை அடிப்பட்ட பார்வை பார்த்தவன், “நான் இல்லாம இருந்துடுவீங்களாம்மா?” என்று ஏக்கம் பொங்கி வழியும் குரலில் கேட்டான்.
“உனக்கு ஏன்டா இப்படி ஆகனும்?” என்று தலையில் அடித்துக்கொண்டு அமிர்தம் கதற,
“ம்மா.. இது ஒன்னும் கொலை குற்றம் இல்லம்மா” என்றான்.
“ஊருல நான் சேத்து வச்ச மானம் மரியாதை எல்லாம் மண்ணோட மண்ணா போயிடும்.. வாடி” என்ற கூறிய ராஜ் மனைவியை இழுத்துக் கொண்டு சென்றுவிட, தனக்கு விதிக்கப்பட்ட வாழ்வு இதுவே என அவற்றை ஏற்கும் பக்குவத்திற்கு தன்னை ஆட்படுத்த முற்பட்டான்.
தனது பள்ளி படிப்பை பலரின் கேலி பேச்சுகளுக்கு நடுவோடே முடித்த ஈஸ்வர், மொத்தமாகவே அவ்வூரை விட்டுச் செல்ல முடிவெடுத்தோனாய் புறப்பட்டு, வந்தாரை வாழ வைக்கும் மதராசியில், ஆதரவற்றோர் இல்லம் ஒன்றில் புகுந்தான்.
அங்கிருந்தே தனக்கான வேலை ஒன்றை தேடிக் கொண்டவன் ஒரு வருடம் வேலையில் ஈடுபட்டு, ஓரளவு பணம் சம்பாதித்த பின், தனது பெயர் மற்றும் அடையாளங்களை மாற்றிக் கொண்டு கல்லூரி சேர்ந்தான், அக்னிகாவாக…
புகைப்படம் மற்றும் காணொளி இயக்குதல் மீது அதீத ஆர்வம் கொண்டிருந்த அக்னிகா, அது சார்ந்த படிப்பையே தேர்வு செய்து படிக்கத் துவங்கினாள்.
மூன்று ஆண்டு கல்லூரி படிப்பை முடித்தவள், இணையம் வழியாக வேலை ஒன்றும் தேடிக் கொண்டாள்.
மீண்டும் மேற்படிப்புப் படிக்க ஆசை கொண்டவள் கல்லூரி வாசத்தை தொடர, அப்போது மலர்ந்ததே சாத்விக் மீதான காதல்.
கல்லூரியில் அவளுக்கு மூத்தோனாக அறிமுகம் ஆனவன். அவனைக் கண்டால் மனதில் எழும் ஒருவகையான புரியாத உணர்விற்கு பெயர் வைக்கத் தெரியாதவள் அதை இயல்புபோல் கடக்க முயற்சிக்க, அவளே அறியாமல் சாத்விக்கும் அவளை விரும்பத் துவங்கியிருந்தான்.
பெண்களும் ஆண்களைப் போன்று உடை அணிவது, ‘ரக்கட் கேர்ள்ஸ்’ என்ற அடையாளத்துடன் முரடான உடற்கட்டினை உருவாக்கிப்பது என யாவும் இயல்பான நிலையில், அவளைப் பார்ப்பதற்கு திருநங்கை போன்று யாருக்கும் தெரிந்திருக்கவில்லை!
அவள் புறத்தோற்றமோ? அவளது குணமோ? இல்லை பாடும் திறனோ? ஏதோ ஒன்று சாத்விக்கை அவள் பால் ஈர்த்தது! அந்த ஈர்ப்பு காதலென்று தன் மனதோடு முடிவு செய்தவன், அவள் கல்லூரி முடிக்கும்போது அதை அவளிடம் வெளிப்படுத்த வேண்டும் என்று மனதோடு நினைத்துக் கொண்டான்…
அதன் பிறகு அவள் பார்க்கும் பார்வை, யாவும் அவன் மனதில் குறிப்பிடத்தக்க இடம் பெற்றது! அவளும் தன்னை விரும்புகின்றாள் என்பது புரியவே அவனது கால்கள் தரையில் நிலைக்கவில்லை. அவளுடனான ஒரு வாழ்க்கை, குழந்தைகள் என பலதும் கற்பனை செய்து வைத்திருந்தவனுக்கு இடியாய் வந்து விழுந்தது அவள் திருநங்கை எனும் செய்தி...
ஒருநாள் கல்லூரி நிர்வாக அறையில் தனது விபரங்களைக் கொடுக்கச் சென்றிருந்தவன், அங்கே இருந்த அவளது புகைப்படம் தாங்கிய காகிதம் ஒன்றைக் கண்டான்…
தன்னவள் என்று மனதோடு வந்த உரிமை உணர்வில் அதை எடுத்துப் பார்வையிட்டவனுக்கு பாலினத்தில் அவள் கொடுத்திருந்த ‘அதர்ஸ்’ பெரும் இடியைத்தான் கொடுத்திருந்தது…
அவன் ஆசையும் காதலும் மோகமும் கலந்து கட்டிவைத்திருந்த பெரும் கோட்டை ஒரே நொடியில் மணல்கோட்டையாய் மாறி தகர்ந்து விழுவதைப் போன்று உணர்ந்தவனுக்கு அந்த நொடி, அந்த ஏமாற்றத்தைத் துளியளவும் தாங்க இயலவில்லை.
கோபத்தின் விபரீதம் எப்படியான முடிவுகளையும் எடுக்க வைக்கும் என்பதும், காதல் இவற்றுக்கெல்லாம் அப்பார்பட்ட உணர்வு என்பதும் அந்நொடி அவன் அகராதியிலிருந்தே அழிந்து போயிருந்தது… அதன் விளைவு?
-தொடரும்..