Loading

பூ-08

 

காவல் நிலையத்தில் தனக்கு எதிரே அமர்ந்திருக்கும் சாத்விக்கின் உடன்பிறந்த தம்பி சதீஷை தனது கூர் விழிகளால் அளவிட்டுக்கொண்டிருந்தான் சிவப்ரியன். சாத்விக் வீட்டிலிருந்து புறப்படும்போதே அவனது அசாத்திய அமைதி சிவப்ரியனையும் சந்தோஷையும் யோசனை கொள்ள வைத்தது. அவனைப் பற்றிய தகவல்களைத் தேடியபடியே, அவனை அழைத்துப் பேச வேண்டும் என்று இருவரும் குறித்திருக்க, அவர்களுக்கு எந்தச் சிரமமும் தராது தானே முன் வந்திருந்தான்.

 

“என்னைப் பார்க்க வந்த காரணம்?” என்று சிவன் வினவ,

 

“எ..என் அண்ணா கேஸ்ல எனக்கு ஒருத்தர் மேல சந்தேகம் இருக்கு சார்” என்று சதீஷ் கூறினான்.

 

“என்ன சந்தேகம்?” என்று சிவன் வினவ,

 

“என் அண்ணா யாரையோ லவ் பண்ணிருந்துருக்கார் சார்” என்று கூறினான்.

 

அவன் கூற்றில் உள்ளுக்குள் சுரேன் (சாத்விக்கின் இணையவழித் தோழன்) கூறியதும் நினைவு வந்து ஒருவித பரபரப்பைக் கொடுத்தபோதும் சிவப்ரியன் அவனை அமைதியாய் ஏறிட்டான்.

 

“என்ன ஆச்சுனு தெரியலை. ஒருநாள் ரொம்ப வருத்தமும் கோவமுமா என் ரூமுக்கு வந்தார். யாரையும் லவ் பண்றியாடானு மிரட்டலா கேட்டாரு. நான் இல்லைனு சொன்னதும் ‘யாரையும் லவ் எல்லாம் பண்ணிடாத. ஏமாற்றம் தான் கிடைக்கும்‌. அதுவும் நீ எதிர்ப்பார்க்காத அளவு ஏமாற்றம் தான் கிடைக்கும்’ அப்படினு அறுவறுப்பான குரலில் சொல்லிட்டுப் போயிட்டார். அடுத்து கொஞ்ச மாசத்துக்கு ரெஸ்ட்லெஸ்ஸாவே தான் இருந்தாரு. அப்றம் ஓகே ஆயிட்டாரு” என்று சதீஷ் கூற,

 

“சோ?” என்றான்.

 

“அவர் லவ் பண்ண பொண்ணுக்கு இதுல எதும் தொடர்பு இருக்குமோனு தோணுது சார்” என்று அவன் கூற,

 

“அவங்க யாரு என்னனு எதும் உங்களுக்குத் தெரியுமா?” என்று ராம் கேட்டான்.

 

“இல்ல சார். நான் அதுக்குப் பிறகு ஒருமுறை அண்ணாகிட்ட கேட்க முயற்சிப் பண்ணேன். ஆனா அவர் ரொம்ப ஏமாற்றமாவும், அந்த ஏமாற்றம் பொருக்காத கோவத்தோடவும் என்னைத் திட்டி அனுப்பிட்டார். அதுக்குப் பிறகு நான் எதுவும் கேட்க முயற்சிப் பண்ணலை” என்று சதீஷ் கூற,

 

சில நிமிட மௌனத்திற்குப் பின் “தேங்ஸ் ஃபார் தி இன்ஃபோ சதீஷ்” என்று அவனை அனுப்பி வைத்தனர்.

 

“சுரேனேட சேட்ஸ் கிடைச்சுதா ராம்?” என்று சிவன் வினவ,

 

“எஸ் சார்” என்று கணினியைத் திறந்து காட்டினான்.

 

அதில் முக்கால்வாசி பேச்சு வார்த்தையைத் துவங்கியிருந்தது சாத்விக்காகவே இருந்தது. 

 

தனது மனக்குமைச்சலுக்கு வடிகால் தேடுவதற்காகவே சுரேனை அவன் அதிகம் நாடியிருப்பது தெரிய, தனது காதல் தோல்வியைப் பற்றி அவன் பேசிய வசனங்களைப் பார்வையிட்டவன் கண்ணில் அது பட்டது!

 

‘அவ.. அவ கொடுத்த ஏமாற்றத்தைத் தாங்கவே முடியலைடா. ரெண்டுபேருமே வார்த்தையால சொல்லிக்கலைனாலும் அவளுக்கு என்னைப் பிடிக்கும்னு அவ அவளோட செயலால் எக்ஸ்பிரஸ் பண்ணினா.. ஆனா என்னை நம்ப வச்சு நல்லா ஏமாத்திட்டாடா’ என்று ஆற்றாமையுடன் அவன் பேசியவற்றைப் படித்துவிட்டு கீழே வந்தவன் சில நாட்களுக்குப் பின் சுரேனாக அவனது காதல் தோல்வி பற்றி விசாரித்ததற்கு, ‘இப்ப அதுலருந்து முழுசா வெளிய வந்துட்டேன்டா’ என்று அவன் கூறியதும் தெரிந்தது!

 

திலகா மற்றும் சந்தோஷும் கூட வந்து சேர்ந்திட அனைவருமே அவற்றைப் படித்துப் பார்த்தனர்.

 

“யாரோ அவனை நல்லா ஏமாத்திருப்பாங்க போல சார்” என்று ராம் கூற,

 

“நல்லா கவனிச்சுப் பாருங்க ராம் சார். அவன் தான் நல்லா ஏமாந்திருக்கான். அந்த பொண்ணு காதலைக் கூட இவன்கிட்ட சொல்லியிருக்கலை. அவங்களோட ஆக்டிவிடீஸ் வச்சு இவன் தான் லவ்வை உணர்ந்திருக்கான். அதனால முழுசா தெரிஞ்சுக்காம இவந்தான் ஏதோ ஏமாந்திருக்கனும்” என்று திலகா கூறினாள்.

 

“சார்.. மூனு பேருக்கும் நடுவில் எந்த ஒற்றுமையும் இல்லை. மினிஸ்டர் வீட்ல விசாரிச்ச வரை அவர் கட்சி எதிரிகளைத் தான் கை காட்டுறார். கட்சி எதிரிகள் இவரோட மகனைக் கொள்ள காரணங்கள் இருந்தாலும் மற்ற இரண்டு பேர் எதுக்கு சம்மந்தமில்லாம இதுல இன்வால்வ் ஆகனும்?” என்று சந்தோஷ் கூற,

 

அவன் ஏதோ கூற விளைவதைப் புரிந்துகொண்டவனாய் சிவன் தலையசைத்து மேலும் பேசத் தூண்டினான்.

 

“இங்க சம்மந்தமே இல்லாத எல்லாரையும் கூட சம்மந்தப் படுத்தும் விஷயம் செல்ஃபோன் தான். நாம ஏன் அவங்க ஆன்லைன் ஆக்டிவிடீஸ சோதனைப் பண்ணிப் பார்க்கக் கூடாது” என்று சந்தோஷ் கேட்க,

 

“குட் ஐடியா சந்தோஷ்” என்று கூறினான்.

 

நேரம் அவரவருக்கு ஒவ்வொரு வியூகத்துடன் கடக்க, தினேஷ் சம்மந்தப்பட்ட கோப்புகள் ஏதேனும் உள்ளதா என்று விசாரித்திருந்த திலகா, அதைத் திரட்டி பார்வையிட்டுக் கொண்டிருந்தாள்.

 

தன் கைக்கு வந்த ஒரு கோப்பைக் கண்டு அதிர்ச்சியடைந்தவள், “சார்..” என்று அதிர்ந்து நிற்க,

 

“என்னாச்சு திலகா?” என்றபடி சிவன் அருகே சென்றான்.

 

தன் கையிலுள்ள கோப்பை அவனிடம் நீட்டியவள், “அரசியல்வாதி பையன். அப்பா சொத்தில் ஆட்டம் வேற போடுறவன்னு அவன் சார்ந்த வழக்குகள் எதுவும் இருக்குமானு விசாரிச்சு வைச்சிருந்தேன் சார். இந்த வழக்கைப் பாருங்க” என்று கூற,

 

அதை வாங்கி பார்வையிட்டவனும் சற்றே அதிர்ந்துதான் போனான்.

 

“விபச்சார விடுதியில் தன் தேவைக்கு அடிபணியாத யாரையோ போட்டு அடிச்சே கொன்னுறுக்கான் ராஸ்கல்.. இப்ப கொஞ்சம் வாரம் முன்ன தான் நடந்திருக்கு” என்று திலகா ஆத்திரத்தை உள்ளடக்கிய குரலில் கூற,

 

“இந்த கேஸ் யார் ஹாண்டில் பண்ணாங்க?” என்று சிவன் கேட்டான்.

 

“யாருக்கும் ஹான்ட் ஓவர் பண்ணலை சார். அங்கருந்து யாரோ வசந்தினு ஒரு லேடி வந்து புகார் குடுத்திருக்காங்க. அதுவும் கொஞ்ச நேரத்தில் அவங்களே வாபஸ் வாங்கிருக்காங்க. மேபி மினிஸ்டர் மகன்னு அவங்களா பயந்து வாங்கிருக்கனும். இல்ல அவனுங்க மிரட்டி வாங்க வச்சுருக்கனும்” என்று திலகா கூற,

 

அதை கூர்ந்து நோக்கியவன், “நம்ம கொலைவழக்கில் முதல்ல இறந்துபோனது ஒரு பெண் தான் இல்லையா?” என்று கேட்டான்.

 

“ஆமா சார்” என்று அவள் கூற, “சார்.. பாலியல் பலாத்காரம் பெண்களுக்கு மட்டுமில்ல. பெண்களால் ஆண்களுக்கும் கூட வெகு சில இடங்கள்ல நடக்குது. சமீபமா ஒரு ஸ்கூல் படிக்கும் பையன, காலேஜ் பெண்கள் சேர்ந்து அப்யூஸ் பண்ண முயற்சி செய்ததா ஒரு கேஸ் கூட பார்த்தேன்” என்று சந்தோஷ் கூற,

 

சிவப்ரியனின் முகத்தில் யோசனை ரேகைகள் வந்து போனது.

 

“திலகா.. சாத்விக்கோட பிரண்ட்ஸ் கிட்ட, தோழிகள் கிட்ட விசாரிக்க சொன்னேனே.. என்ன பதில் கிடைச்சது அங்க?” என்று சிவப்ரியன் வினவ,

 

“அவனைப் பற்றி அப்படி தப்பா எதும் கிடைக்கலை சார். கொஞ்சம் ஃப்ளர்ட் பண்ணுவான் தான். ஆனா தப்பா எல்லாம் யார்கிட்டயும் நடந்துகிட்டதில்லைனு தான் சொல்றாங்க. அன்ட் அவன் காதலைப் பற்றி யாருக்குமே தெரியலை” என்று திலகா கூறினாள்.

 

“நமக்கு இந்தக் கேஸ்ல முன்னேற ரெண்டு விஷயம் தெரிஞ்சாகனும். ஒன்னு தினேஷால் இறந்து போன பெண்ணுக்குச் சம்மந்தமானவங்க யாரும் இருக்காங்களா என்பது. இன்னொன்னு சாத்விக் விரும்பின பெண் யார் என்பது” என்று சிவன் கூற,

 

“அந்த விடுதியிலேயே விசாரிச்சுப் பார்க்கலாம் சார்” என்று ராம் கூறினான்.

 

“ம்ம்..” என்ற சிவன், “திலகா.. நீங்களும் ராமும் சேர்ந்து மற்ற ரெண்டு பேர் மேலேயும் எதுவும் கேஸ் இதுபோல அசைன் ஆகியிருந்ததானு விசாரிங்க. நானும் சந்தோஷும் அந்த விடுதிக்குப் போய்ப் பார்த்துட்டு வரோம்” என்று கூற,

 

ராமும் திலகாவும் சரியென்று புறப்பட்டனர்.

 

“சார்.. நாம போலீஸ் யூனிஃபார்ம்லயே போனா அவங்க எஸ் ஆயிட மாட்டாங்க?” என்று சந்தோஷ் வினவ,

 

“ப்ச்..” என்று தலையை நீவிக் கொண்டவன், “நீங்கப் போய் காஸ்டியூம் மாத்திட்டு வாங்க சந்தோஷ்” என்றுவிட்டு புறப்பட்டான்.

 

வீட்டிற்கு வந்த அண்ணனைப் பார்த்த சுசித்ரா, “என்ன அண்ணா அதுக்குள்ள வந்துட்ட?” என்க,

 

“ஒன்னுமில்லடா… ஒரு வேலையா வெளிய போறேன். அதான்..” என்றபடி சென்று ஐந்தே நிமிடத்தில் உடை மாற்றி வந்தான்.

 

“எங்கனா? வேலை விஷயமாவா?” என்று சுசி கேட்க,

 

“ஆமாடா.. நைட் வர லேட் ஆகும்னு நினைக்குறேன். இங்கயே இருக்குறதுனா இரு. இல்ல உன் பிரண்டு கூடப் போய் இருந்துக்கோ” என்றபடி சென்றவன், “அங்க போய் சக்காளத்தி சண்டை போட்டுகிட்டு இருக்காதீங்க..” என்று அவளையும் மஹதியையும் குறிப்பிட்டுக் கூறிச் சென்றான்.

 

சந்தோஷும் நேரே தயாராகி அந்த விடுதிக்கே வந்திருக்க,

 

தானும் வந்து சேர்ந்தவன், “இங்கருந்து வசந்தினு ஒரு லேடி தான் வந்து கம்ப்ளைன் கொடுத்திருக்காங்க” என்க புரிந்தது எனும் விதமாய் சந்தோஷ் தலையசைத்தான்.

 

இருவரும் உள்ளே செல்ல, சிறு பிராயம் கொண்ட பெண்களிலிருந்து நாற்பது வயது பெண்மணிவரை அங்கே குழுமியிருப்பதைப் பார்த்து, சிவனுக்கு ஆத்திரமாக வந்தது!

 

சிவன் சந்தோஷை நோக்க, சந்தோஷ் அர்த்தமாய் தலையசைத்துக் கொண்டு தனது அலைபேசியில் சில குறுஞ்செய்திகளைத் தட்டிவிட்டான்.

 

“நீக்கு எவரு காவாலி? (யாரு நீங்க என்ன வேணும்?)” என்றபடி அங்கு வந்த ஒருவன் இருவரையும் பார்வையாலேயே அளவிட்டான்.

 

அவர்களின் உயரமும், உடற்கட்டும், சிகை வெட்டியிருக்கும் தோரணையும் கண்டு துணுக்குற்றவனாய், “ஹலோ.. நுவ்வு ராங் பிளேஸ் கே வச்சாவன்னி அனுக்குன்டுனா.. கெட் அவுட் (தப்பான இடம் வந்துருக்கீங்கனு நினைக்குறேன்.. வெளியே போங்க)” என்று காட்டமாய் கூற,

 

“மேமு சரேய்னு ஸ்தலாநிகே வச்சாவு (எல்லாம் சரியான இடத்துக்கு தான் வந்திருக்கோம்)” என்று கூறிய சிவன்,

 

“வசந்தி எக்கடா?” என்று கேட்க,

 

“கஸ்டமரோ?” என்று அவன் கேட்டான்.

 

உள்ளுக்குள் சளித்துக் கொண்ட சிவன் ஆம் என்பதாய் தலையசைக்க,

 

அசடு வழிந்த அந்த அடியாள், “மொடட்லோனே செப்பாலிக்காதா? இக்கட வசந்தி ஒக்கரே காது. ராதிகா உண்டி, கோமளா உண்டி, சுருஷ்டி உண்டி..” என்று அடுக்கிக் கொண்டே போக, 

 

“வசந்தி எக்கட?” என்று சிவன் சளிப்பாய் கேட்டான்.

 

“சார் சால கோபங்கா உன்னடலுன்னாரு.. சிந்திந்சுக்கு ஆமே பிரதிதி சரிசேஸ்துன்டி” என்று அசுடு வழியக் கூறியவன், “அக்கட எவருன்னாரு.. வசந்தியைக் கால் செய்யந்தி” என்று கத்திவிட்டு சந்தோஷ் புறம் திரும்பி “மீகு எவரு காவாலி சாரே? (உங்களுக்கு யார் வேணும்?)” என்றான்.

 

புதிதாக கல்யாணம் பேசிக் கொண்டிருக்கும் வீட்டில் தான் வந்திருக்கும் இடம் தெரிந்தால் என்னாகுமோ என்று மனதின் ஓரம் எழுந்த அச்சம், இவன் கேட்ட கேள்வியில் அதிர்ந்து துடிக்க, அதை முகத்தில் காட்டாதவனாய், “நாக்கு ஆமே கூட காவாலி (எனக்கும் அவள் தான் வேண்டும்)” என்றான்.

 

“ஆமிக்கு அந்த்த அவசரமா?” என்று சிரித்தவன், “இதோ ஆமே வச்சிந்தி” என்றவன் வசந்தியைப் பார்த்து கேவலமான ஒரு சிரிப்பு சிரித்துவிட்டுச் சென்றான்.

 

வசந்தி என்ற பெண் இவர்களைப் பார்த்து லேசான பயத்தோடு, “ஆ கதி (அந்த அறை)” என்று ஒரு அறையைக் காட்டிவிட்டுச் செல்ல, அவள் பின்னோடே சென்ற இருவருமே அறைக்குள் நுழைந்து கதவை அடைத்தனர்.

 

இருவரும் உள்ளே வந்திருப்பதில் முகத்தை சுருக்கி அவள் விழிக்க,

 

“நீங்க தானே வசந்தி?” என்று சிவன் கேட்டான்.

 

“நீங்க?” என்று அவள் புரியாது வினவ,

 

“போலீஸ்” என்று இருவரும் கூறினர்.

 

அதில் பதறிப்போனவள் வெடவெடத்து நிற்க, “காம் டௌன். சத்தம் போடாம நாங்க கேட்கும் கேள்விக்கு மட்டும் பதில் சொன்னா போதும். இந்த அறையிலிருத்து மட்டுமில்ல இங்கிருந்து மொத்தமா விடுதலைக் கிடைக்கும்” என்று சந்தோஷ் கூறினான்.

 

“எ..என்ன வேணும்?” என்று அவள் திணற,

 

மந்திரி மகனான தினேஷின் புகைப்படத்தைக் காட்டினான்.

 

அதைக் கண்டு மிரண்டு போனவள், “எ..எனக்கு ஏதும் தெரியாது என்னைய விட்ருங்க” என்று அவர்கள் காலில் விழ,

 

“ஒன்னுமில்லமா.. அமைதியாகுங்க..” என்று கூறிய சிவன், “இவனால அன்னிக்கு இறந்துபோன பொண்ணு யாருனு சொன்னா போதும்” என்றான்.

 

அவனை மிரட்சியுடன் பார்த்தவள், எச்சிலைக் கூட்டி விழுங்க,

 

அவனது பார்வை உண்மையை மட்டுமே எதிர்நோக்கி அவளை துலைத்தது.

 

“அ..அது சாந்தி.. அய்யா.. பாவமுங்க..” என்றவள் கண்களில் கண்ணீர் மின்னியது.

 

“அவங்க யாரு? என்னாச்சு? அவங்களைப் பத்தி உங்களுக்கு ஏதாது தெரியுமா?” என்று சந்தோஷ் வினவ,

 

“தெரியுமுங்க..” என்றவள் சாந்தியைப் பற்றிக் கூறிய தகவலில் இருவரும் அதிர்ந்து போயினர்!

-தொடரும்…

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
7
+1
23
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments