Loading

பூ-06

 

“வாட்?” என்ற சிவன், அதிர்வை உள்ளடக்கிய குரலில், “சாத்விக் யாரையும் விரும்பலையா?” என்று கேட்க,

 

“எனக்குத் தெரிஞ்சு அவனுக்கு எந்த லவ்வும் இல்லை சார். நாங்கள்லாம் ஒன்னா சேந்து..” என்றவன் தன் குரலைச் செருமி, “ஒன்னா சைட் அடிச்சிருக்கோம்.. சிலருக்கு விளையாட்டா ப்ரபோஸ் பண்ணி ரிஜக்ஷனும் வாங்கிருக்கோம். ஆனா லவ்னு அவன் பண்ணதா எனக்குத் தெரியலை சார். மே பீ அவனோட வேலையிடத்தில் எதும் இருந்திருக்கலாம்” என்று கல்லூரி தோழன் நிதின் கூறினான்.

 

வேலையிடத்தில் பழகிய தோழர்களை விசாரித்தவரையில் அவனுக்கு எந்தக் காதல் விவகாரங்களும் இல்லை என்பது முன்பே தெரிந்துகொண்டிருந்ததால் அடுத்து அக்கம் பக்கத்தில் விசாரிக்க, அவர்களும் அவர்களுக்குத் தெரிந்தவரை அவன் யாரையும் விரும்பவில்லை என்றே கூறினர்.

 

“என்னசார் இது? இந்த சுரேன் லவ் பெயிலியர் ஆனதா அவன் புலம்பினதைச் சொல்றான். இவங்க எல்லாரும் அவன் லவ்வே பண்ணலைனு சொல்றாங்க. ஒன்னு சுரேன் பொய் சொல்லிருக்கனும். இல்லை இவன் காதல் விஷயம் மித்த யாருக்கும் தெரியாம இருந்திருக்கனும். ஆனா அது சாத்தியமா?” என்று ராம் கேட்க,

 

சிவன் முகத்திலும் அதே யோசனைத் தான் ஓடிக் கொண்டிருந்தது!

 

இது இப்படியிருக்க, சந்தோஷ் திலகாவிடமிருந்து பரபரப்பான செய்தி ஒன்று வந்து சேர்ந்தது.

 

“சார்.. நம்ம திலகா மேம் அன்ட் சந்தோஷ் சார் போன பட்டறை ஒன்றில் சமீபமா ஒரே ஆள் மூன்று கடப்பாரை வாங்கிட்டுப் போனதா தகவல் வந்திருக்கு. இதில் கூடுதலா கவனிக்க வேண்டிய ஒன்று, அந்தக் கடப்பாரையின் நீலமும் நம்ம கொலைக்குப் பயன்படுத்தினதோட நீலமும் ஒன்னுதானாம்” என்று ராம் கூற,

 

“அந்த நபரோட டீடெய்ல்ஸ் வாங்கிட்டு வரச் சொல்லுங்க ராம்” என்றான்.

 

சில நிமிடங்களில் நால்வரும் ஒன்றுகூடிவிட, “சார்.. யார் வாங்கிட்டு போனாங்க என்னனு பெயர் தெரியலையாம். ஆனா அந்தப் பட்டறைக்குப் பக்கத்தில் உள்ள சூப்பர் மார்கேட்டோட வாசல்ல சீ.சீ.டீ.வி ஃபொட்டேஜ் இருக்கும் அதுல காட்டுறேன்னு சொன்னாங்க. அதுபடி கூட்டிட்டுப் போய்ப் பார்த்தப்ப, கோணிப்பையால முக்காடு போட்டுகிட்டு வந்த ஒரு நபரைக் காட்டினார் சார்” என்றபடி திலகா அந்தக் காணொளியைக் காட்டினாள்.

 

“இவர் எப்ப வாங்கினாராம்?” என்று ராம் கேட்க,

 

“சரியா நாப்பது நாள் முன்ன இருக்கும்” என்று சந்தோஷ் கூறினார்.

 

“அதெப்படி அவ்வளவு துள்ளியமா சொன்னாரு?” என்று ராம் கேட்க,

 

“அன்னிக்கு அவர் பேத்தியோட பிறந்தநாள் விழாக்கு கிளம்பிட்டு இருந்தாராம். அப்பதான் வந்து வாங்கிட்டு போயிருக்கான்” என்று திலகா கூறினாள்.

 

அந்த காணொளியை நிறுத்தி நிதானமாக பார்வையிட்ட சிவப்ரியன், “ஆள் பார்க்க ஏதோ கட்டுமானத் தொழில்ல வேலைப் பார்க்குற போல இருக்காரு. ஆனா கால்ல போட்டிருக்க செருப்பைப் பார்த்தா சம்மந்தமில்லாத போல இருக்கே?” என்க,

 

மற்றோரும் அப்போதே அதை கவனித்தனர்.

 

சில நிமிடங்களுக்குப் பின் “ராம்… சைபர் செகியூரிடி கிட்ட பேசி சுரேனோட ஃபோன் டிரேஸ் பண்ண சொல்லுங்க. அவனும் சாத்விக்கும் பேசின அத்தனை சேட்ஸும் எனக்கு வேணும்” என்று கூற,

 

“ஓகே சார்” என்று கூறினான்.

 

“திலகா.. நீங்க சாத்விக்கோட மற்ற சில பிரண்ட்ஸ் விசாரிங்க. அவனுக்கு எந்த பெண்கூடவாது தொடர்பு, அபெக்ஷன் ஆர் லவ் இருந்ததானு விசாரிச்சுப் பாருங்க. நானும் சந்தோஷும் அவன் பேரென்ட்ஸ் அன்ட் கசின்ஸ் கிட்ட விசாரிக்குறோம்” என்று ராம் கூற,

 

அனைவரும் அவரவருக்குக் கொடுக்கப்பட்ட வேலைகளைப் பார்க்க சென்றுவிட, சந்தோஷும் சிவனும் சாத்விக்கின் இல்லம் சென்றனர்.

 

மகனை அகோரமான கொலையில் பலி கொடுத்துவிட்ட சோகத்தில் ஆழ்ந்திருந்தது அக்குடும்பம்.

 

உள்ளே வந்தவனை வா என்று அழைக்கவும் யாரும் முன்வரவில்லை, வெளியே போ என்று சொல்லவும் யாரும் இல்லை.

 

சாத்விக்கின் தம்பி மட்டுமே எழுந்து நின்று அவரை கேள்வியாய் ஏறிட்டான்.

 

“சாத்விக் பற்றி விசாரிக்க வந்திருக்கோம். உங்களுக்கு யார்மேலயாது சந்தேகம் இருக்கா?” என்று சந்தோஷ் வினவ,

 

“சாதாரணமான முறையில் கொல்லப்பட்டிருந்தா கூட யோசிக்கலாம் சார். இ.. இப்படி கொடூரமா கொலை செய்யுமளவு என் பையனுக்கு யார் சார் பகையாளிகள் இருக்கப் போறாங்க?” என்று கண்ணீரோட அவனது தந்தை வினவினார்.

 

சாத்விக்கின் தாய் உயிருள்ள ஐடமாகவே வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருத்தார். அவன் வீட்டையும் சுற்றிலும் உள்ள பொருட்கள் மற்றும் புகைப்படங்களை தன் விழிகளில் அளந்து கொண்டே, “அப்ப உங்களுக்கு யார்மேலயும் சந்தேகம் இல்லயா?” என்று சிவன் கேட்க,

 

“இல்ல சார்” என்று அவனது தந்தைக் கூறினார்.

 

“உங்க மகனோட பிகேவியர்ல திடீர்னு எதும் மாற்றம் எதாவது ஃபீல் பண்ணீங்களா?” என்று அவன் கேட்க,

 

“என் மகனுக்கு பித்து பிடிச்சிடுச்சானு கேட்குறீங்களா சார்?” என்று விட்டத்தை வெறித்தபடியே அவனது அன்னை கேட்டார்.

 

“அது நீங்க நினைப்பதைப் பொருத்தது ம்மா. நீங்க சொல்ற முறையான பதிலில் தான் குற்றம் செய்தவனுக்கான தண்டனை இருக்கு” என்று தெரிவு செய்த வார்த்தைகளை அமைதியாய் பிரயோகித்தான், சிவப்ரியன்.

 

“உங்க மகனுக்கு காதல் விவகாரம் ஏதும் இருந்ததா? யாரையாவது காதலிச்சு ஏமாந்தப் போல?” என்று சந்தோஷ் வினவ,

 

“இல்ல சார். அவனுக்கு அப்படிலாம் ஏதும் கிடையாது. ரொம்ப நல்லவன் சார். வீட்டுக்காக தான் அவன் உழைப்பெல்லாம் போட்டான். யாரு என்ன நெனச்சு என் பையன கொன்னாங்களோ?” என்று கூறி தலையில் அடித்துக் கொண்டு அழுதார் பெரியவர்.

 

அவர்களிடம் பேசிவிட்டு சீக்கிரம் குற்றவாளியைப் பிடித்துவிடுவதாய் கூறியவன் வெளியே வர, சிவப்ரியனை அர்த்தமான பார்வை ஒன்று பார்த்த சந்தோஷ் சிறு தலையசைப்புடன் யாருக்கோ அழைப்பு விடுத்து சில ஏற்பாடுகளைச் செய்தான்.

 

அந்த நாள் மிகுந்த அமைதியாகவே கடந்தது, புயலுக்கு முன் அமைதி நிலவுவதும் இயல்பு தானோ?

 

மறுநாள் காலை சிவப்ரியனும் சுசித்ராவும் தங்கள் இல்லம் திரும்பத் தயாராகியிருந்தனர்.

 

“ஏன் அக்னி ரொம்ப பண்ற? உனக்கு என்ன அது புது இடமா? அங்க வந்து எங்களோடவே இரேன்” என்று சுசித்ரா வினவ,

 

“சுசி ப்ளீஸ். என்னைக் கம்பெல் பண்ணாத” என்று அக்னிகா கூறினாள்.

 

அவளும் சில மாதங்களை அவர்களுடன் அவர்களது வீட்டில் தான் கழித்தாள்… ஆனால் அவையாவும் சிவப்ரியன் தன் காதலைச் சொல்லும் முன்பு வரையே! 

 

தனது உடைமைகளை எடுத்துக் கொண்டு வெளியே வந்த சிவப்ரியன், “போலாமா சுசி?” என இயல்பாக வினவ,

 

‘அவள கூப்பிடேன் ண்ணா’ என்பதாய் அவனை ஒரு பார்வைப் பார்த்தாள்.

 

தங்கையின் பார்வை புரிந்தபோதும்கூட, சிவப்ரியன் அக்னிகாவை அழைக்கவில்லை!

 

“பை ஸ்பார்கில். எதுபத்தியும் யோசிக்காம இரு. காலேஜ்கு போ, மஹி கூட டைம் ஸ்பென்ட் பண்ணு. திரும்ப வீட்டுக்கு சேஃபா வா” என்று அவன் அறிவுரைகள் வழங்க,

 

சிறு தலையசைப்புடன் அதைக் கேட்டுக் கொண்டாள்.

 

திரும்பித் தன்னை முறைத்துக் கொண்டு நிற்கும் சுசியைப் பார்த்தவன், “போலாமா சுசிமா?” என்க,

 

அண்ணனை ஏகத்துக்கும் முறைத்தவள், “பை அக்னி.. டேக் கேர்” என்றுவிட்டு சென்று மகிழுந்தில் அமர்ந்து கொண்டாள்.

 

“டேர் கேர் ஸ்பார்கில்” என்று கூறி திரும்பியவன் சட்டென நினைவு மீண்டவனாய் அக்னியிடம் வந்தான்.

 

அக்னி அவனைப் புரியாது நோக்க, ஒரு வசீகரிக்கும் புன்னகையைச் சித்தியவன், “ஐ லவ் யூ டி ஸ்பார்கில்” என்று கூற, அவன் சொற்களைக் கேட்டபோது எழுந்த சிலிர்ப்புக் கூட அவன் நீட்டிய காகித ரோஜாவில் அப்படியே மடிந்து வீழ்ந்தது.

 

மடிந்து வீழ்ந்த சிலிர்ப்பிலிருத்து சினம் பிறப்பெடுக்க, அதைக் கோபத்துடன் கண்கள் சிவக்க பிடுங்கி கிழித்து எறிந்தாள்.

 

அவளது கோபத்தையும் மூச்சு வாங்க அவள் நிற்கும் தோரணையையும் குறும்பு சிரிப்போடு ரசித்தவன், “பை..” எனக் கூறி கண்ணடித்துவிட்டுப் புறப்பட,

 

கோபத்துடன் செல்பவனையே பார்த்து நின்றவள் வீட்டிற்குள் சென்று அடைந்து கொண்டாள்.

 

அன்று ஒருநாளும் கூட ஓய்வெடுத்துக் கொண்டு மறுநாள் வேலைகளைக் கவனிக்கலாம் என்று முடிவெடுத்து இருந்தவள், மஹதிக்கு அழைத்து வீட்டிலேயே அவளுக்கு வேண்டிய வடிவமைப்புகளைச் செய்து அனுப்பவதாய் கூறியிருந்தாள்.

 

அதன்படியே அன்றைய நாளை வீட்டில் அமர்ந்தபடியே வேலைப் பார்த்து ஓட்டியிருந்தாள்.

 

பகலில் நன்கு உறங்கி எழுந்ததால் இரவில் தூக்கம் வராமல் வேலை செய்துக் கொண்டிருத்தவளுக்கு வெளியே வித்தியாசமான சப்தங்கள் கேட்பதைப் போன்று இருந்தது.

 

ஏதோ ஒரு இரும்புப் பொருளை யாரோ தேய்த்துக் கொண்டே நடப்பதைப் போன்ற சப்தம் மெல்ல கேட்கவும், வேலையிலிருந்து கவனம் சிதறியவள் நிமிர்ந்து கடிகாரத்தைப் பார்த்தாள்.

 

மணி பன்னிரெண்டைத் தான்டி பல நிமிடங்கள் கடந்திருக்க, மேலும் முழித்திருக்க வேண்டாம் என்று யோசித்தபடி மடிகணினியை அணைத்து வைத்தாள்.

 

காற்றுக்குத் திறந்துகொண்ட ஜன்னல்கள் லேசாய் சப்தம் எழுப்ப, “ப்ச்.. இதுவேற” என்றபடி சென்று அதை மூட முற்பட்டவள் வெளியே கண்ட காட்சியில் உச்சந்தலையில் பனிக்கட்டியைக் கொட்டியதைப் போல் உறைந்து நின்றாள்.

 

தலைமுதல் கால் வரை கருப்பு நிற அங்கியில் தன்னை மறைத்துக் கொண்டிருந்த ஒரு ஜீவன் பெரிய கடப்பாரை ஒன்றை தரையோடு வைத்துத் தேய்த்துக் கொண்டே நகர,

 

மற்றைய கரத்தில் ஒரு பையும் ஆடிக் கொண்டிருந்தது.

 

‘இ..இது.. அ.. அந்த கொலையாளியா?’ என்று நினைக்கையிலேயே அவள் கைகால்கள் நடுநடுங்க,

 

அந்த நபர் அவள் புறம் திரும்புவதைப் போலிருக்கவும் சட்டென மறைந்து நின்றாள். ஜன்னலின் அருகே வந்து சுவரோடு ஒட்டி நின்றவள் இதயம் தாளம் தப்பித் துடிக்க, கைகால்கள் வெடவெடத்து நடுங்கியது அக்னிகாவிற்கு!

 

அவளது ரத்தகொதிப்பை மேலும் அதிகரிக்கும் விதமாய் அந்த கடப்பாரையின் சப்தம் அவள் வீட்டை நோக்கி வருவதைப் போன்றிருக்க, பரபரப்பாய் தனது அலைபேசியைத் தேடினாள்.

 

தொண்டையை அடைத்துக் கொண்டு பயப்பந்து உருள்வதை உணர்ந்தவள் தேகம் வெடவெடக்க, அவளை மேலும் சோதிக்கும் விதமாய் அவள் வீட்டிற்குள் அவ்வுருவம் ஏறி குதித்ததன் சப்தம் கேட்டது!

 

அப்படியே மடிந்து அமர்ந்தவள் இருகரம் கொண்டு தன் வாயைப் பொத்திக் கொள்ள, மெல்ல ஜன்னலின் அருகே நிழலாடுவது தெரிந்தது.

 

பயத்தில் கண்கள் கலங்கி பொழிய, வாயை மேலும் இறுக பொத்திக் கொண்டவள் மெல்ல தன் தலையை லேசாய் திருப்பி ஜன்னலை ஏறிட்டாள்.

 

கருப்பு நிற லெதர் கையுறைகள் போடப்பட்ட கரம் ஒன்று ஜன்னல் கம்பிகளுக்கு நடுவே உள்ளே வருவது தெரிய, பயத்தில் உடல் நடுங்க அதைப் பார்த்தாள்.

 

மெல்ல கரம் வளைந்து ஜன்னல் கதவின் பிடியைப் பற்ற, அவ்வுருவம் உள்ளே வர முயற்சிப்பதாய் நினைத்தவள் இன்றோடு தனது வாழ்வே முடிந்துவிட்டதாய் உணர்ந்தாள்.

 

மயக்கம் வராத குறையாய் அவள் உடல் நடுங்கியது.

 

அந்நேரம் பார்த்து பெரிய மின்னல் ஒன்று வெட்ட, அவ்வுருவத்தின் நிழல் எதிர்புறமிருக்கும் சுவரில் தெரிந்து மறைந்தது, உடன் அதன் கையில் இருக்கும் கடப்பாரையும்.

 

காற்றுக்குக் கூட இடமில்லாத வகையில் சுவரோடு ஒன்றி அமர்ந்தவள் பயத்தில் கண்களை சிமிட்டவும், எச்சில் விழுங்கவும் கூட மறந்தவளாய் அமர்ந்திருக்க, உள்ளே நீண்ட கரங்கள் மெல்ல ஜன்னலை சாற்றிவிட்டு, வந்து சுவடே இன்றி மீண்டும் ஏறி குதித்து வெளியே சென்றது.

 

நடந்தவற்றிலிருந்து மீள அவளுக்கு ஒருமணி நேரத்திற்கும் மேல் தேவைப்பட்டது!

 

உடல் முழுதும் வியர்வையில் குளித்தும், உஷ்ணமான உணர்வை கொடுக்க, நாவும் தொண்டையும் வரண்டு இருமல் வந்தது. ஆனால் இரும்புவதற்குக் கூட அவளுக்கு அச்சமாகவே இருந்தது.

 

உடலின் நடுக்கம் குறையாத நிலையில் தத்தித் தடுமாறி எழுந்தவள் சமையலறைக்குள் சென்று முகத்தை குளிர்ந்த நீரில் அடித்துக் கழுவ, அவளை சற்றே நிலையாக நிற்கச் செய்ய அது உதவியது.

 

மடமடவென்று நீரை எடுத்துப் பருகியவள், அப்படியே அங்கேயே சரிந்து அமர்த்திட, கைகால்கள் யாவும் அதன் நடுக்கத்தை மெல்ல மெல்ல குறைத்தது.

 

வியர்வையில் கூந்தல் நனைந்து ஈரம் பிடிக்கத் துவங்க, தலை அதீத பாரமான உணர்வைக் கொடுத்தது.

 

மெல்ல எழுந்து சுவரைப் பிடித்தபடி சென்றவள் நீள்விருக்கையில் அமர, மயக்கமா தூக்கமா என்று தெரியாத மாயை அவளை விழுங்கிக் கொண்டது…

 

-தொடரும்…

 

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
20
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்