Loading

பூ-04

 

அதிகாலை வேளை, சூரியன் தன் பணியைத் துவங்கும் முன்னரே, சிவன் தனது பணியைத் துவங்க ஆயத்தம் செய்துக் கொண்டிருந்தான்.

 

அமைதியாக எழுந்து தன்னவள் முகம் கண்டு விழித்த காலைப் பொழுதில் மேலும் உற்சாகத்தோடு தயாராகத் துவங்கியவன், குளித்து முடித்து, தான் கொண்டு வந்திருந்த காக்கி நிற கால்சட்டையை அணிந்துக் கொண்டு, வெள்ளை நிற சட்டையைக் கையில் எடுத்தான்.

 

மாத்திரையின் உபயத்தில் இரவு வெகுவிரைவாகவே தூங்கியிருந்த அக்னிகா தாகம் எடுத்தமையால் கண் விழிக்க, அரையில் மெல்லிய இருளும், இருளோடு இருளாய் சிவாவின் உருவமும் தெரிந்தது.

 

அதில் பதறிக் கொண்டு எழுந்தவள், “ய..யாரு” என்று பதட்டத்தோடு கத்த,

 

“ஏ.. அக்னி..” என்றபடி அவளை நெருங்கியவன் முதலில் மின் விளக்கைப் போட்டான்.

 

அவனைக் கண்டதும் அத்தனை நேரம் அவள் முகத்திலிருந்த பதட்டம் முற்றுமாய் மறைந்து, நிம்மதி பெருமூச்சு வெளியேற, அதுவே அடுத்த நொடி அவன் கோலம் கண்டு உஷ்ண பெருமூச்சானது.

 

“நி..நீங்க இ..இங்க என்னப் பண்றீங்க?” என்று அவள் பதட்டம் கொள்ள,

 

“ஷ்ஷ்..” என்று அவள் இதழில் விரல் வைத்தவன், “ரொம்ப பதட்டப்பட்டு பீபீ அதிகமாகி பொட்டுனு போயிடாதடி. உன்கூட ஒரு அழகான வாழ்க்கையைப் பெருசா கற்பனை பண்ணி வச்சிருக்கேன்” என்று வசீகரிக்கும் புன்னகையுடன் அழுத்தமான குரலில் கூறினான்.

 

அதில் அவள் கன்னங்கள் தாமாய் செம்மை பூச, சிரம் தாழ்த்தி அதை மறைக்க முயன்றவள், சட்டென நிமிர்ந்து, “சுசி..சுசி எங்க?” என்க,

 

“வெளிய தான் தூங்குறா. நல்லதாபோச்சு. நான் கிளம்பப் போறேன்டி ஸ்பார்கில்.. வந்து டோர் மட்டும் லாக் பண்ணிக்குறியா?” என்று வெகு உரிமையாகப் பேசினான்.

 

அவனையே சோர்வும், வியப்பும் ஒருசேரப் பார்த்தவள் மெல்ல தலையசைக்க, அவள் சிகையை கோதிவிட்டவன் கண்ணடித்துவிட்டு தனது சட்டையை அணிந்துக்‌ கொண்டான்.

 

அவனிடமிருந்து தன் பார்வையைத் திருப்பிக் கொண்டவள், தாளம் தப்பித் துடித்திடும் தன் மனதை வெகுசிரமப்பட்டு கட்டுப் படுத்தினாள்.

 

தன்னை தயார் செய்துகொண்டவன் அவளை நோக்க, மெல்ல எழுந்து வந்தவள் அவனுக்கு முன்பாக அறையை விட்டு வெளியே சென்றாள்.

 

“டோர் லாக் பண்ணிக்க. நல்லா ரெஸ்ட் எடு. டாக்டர் மூனு நாள் ரெஸ்ட் எடுக்கச் சொல்லிருக்காங்களாம். மஹதிக்கும் சொல்லிடு. சரியா?” என்று கேட்க,

 

“ம்ம்..” என்பதை மட்டும் பதிலாய் கொடுத்தாள்.

 

“ஓகேடா..” என்று அவன் திரும்ப,

 

“ஒரு நிமிஷம்..” என்றவள் சமையலறைக்குள் சென்றாள்.

 

தானும் அவள் பின்னோடே சென்றவன் அவளை நோக்க,

 

இரண்டு ரொட்டித் துண்டுகளை எடுத்தவள், வீட்டிலேயே அவள் தயாரித்த பழ குழைமத்தைத் தேய்த்து அவனிடம் நீட்டினாள்.

 

அதில் மெல்ல புன்னகைத்தவன் மறுப்பின்றி வாங்கி உண்டுவிட்டு, “தேங்ஸ் ஸ்பார்கில்” எனப் புறப்பட,

 

வாசல் வரை சென்றவள் அவன் வெளியேறியதும் கதவை பூட்டிக் கொண்டு உள்ளே வந்தாள்.

 

அவனுடனான ஒரு வாழ்வு! அமைந்தால் இப்படித்தானே இருக்கும்? என்று அவள் உள்ளம் குளிர்ந்தது… ஆனாலும் அந்த குளுமையை நிரந்தரமாக சுகித்திடத்தான் அவளுக்கு மனம் வருவேனா என்கிறது!

 

விரைந்து காவல் நிலையம் வந்தவன், சேகரித்த காணொளிகளைப் பார்வையிடத் துவங்கினான்.

 

அவன் பணியைத் துவங்கிய சில நிமிடங்களில் ராம், திலகா மற்றும் சந்தோஷ் வந்துவிட,

 

அனைவருமாக சேர்ந்து அமர்ந்து காணொளியில் பார்வையிட்டனர். 

 

“சார். எல்லாரும் சேர்ந்து பார்க்குறதுக்கு ஆளுக்கு ஒவ்வொன்னா பார்த்தா சீக்கிரம் கண்டுபிடிக்கலாமே?” என்று சந்தோஷ் வினவ,

 

“சீக்கிரம் முடியும் தான். ஆனா ஒவ்வொருத்தரோட பார்வை கண்ணோட்டமும் வேறயா இருக்கும் சந்தோஷ். நான் பார்க்குற இதே கோணத்தில் நீங்க பார்க்க மாட்டீங்க. நீங்க பார்க்கும் அதே கோணத்தில் மிஸ்.திலகா பார்க்க மாட்டாங்க. ஒவ்வொருத்தர் பார்வைக்கும் ஒவ்வொரு கோணம் உண்டு. அதனால தான் எல்லாருமா சேர்ந்து பார்க்கலாம்னு சொன்னேன். என் பார்வைக்குப் படாத எதுவும் உங்க பார்வையில் சிக்கலாம். உங்க பார்வையில் படாதது என் பார்வையில் சிக்கலாம்” என்று நிதானமாக சிவப்ரியன் விளக்கமளித்தான்.

 

சிவப்ரியனைப் பொருத்தவரையில் ஒரு குழுவின் தலைமைப் பொருப்பை ஏற்பவன், அக்குழுவிற்கு தலைவன் என்ற செருக்கின்றி சக குழுவினராக இயங்க வேண்டும். மேலும் குழுவை நிர்வாகம் செய்ய முக்கிய அம்சமே பொறுமை தான். அனைவருக்கும் தக்க பதிலளித்து பொறுமையை கையாளும் வகையில் ஒருவருக்கு ஒருவர் இணக்கம் ஏற்பட்டு, அதனால் வேலையும் விரைவே நடக்கும் என்பது அவன் கருத்து. 

 

மேலும் தான் முதன்மை அதிகாரி என்பதற்காக பிறர் ஆலோசனையைக் கேட்காது, திரைப்பட நாயகன் போல் தானே அனைத்தையும் கண்டறிய வேண்டும் என்பதை விரும்பாதவன் சிவப்ரியன். ஆகவே அனைவரின் ஆலோசனையையும் கேட்டு முறைபடியே செயல்படுவான்.

 

அவனது அனுகுமுறையை முதன்முறை எதிர்கொள்ளும் மூவருக்கும் சற்றே ஆச்சரியமும், அவன்பால் தனி மரியாதையும் பிறப்பெடுத்தது! அதன் பொருட்டு உருவான இணக்கம் அவர்களை சற்றே சுறுசுறுப்பாக வேலை செய்யவும் வைத்தது.

 

அனைவரும் காணொளியில் பார்வையாக இருக்க, சாத்விக் எவ்வித கலக்கமும் இன்றி நண்பர்களிடமிருந்து விடைபெற்றது முதல், சந்தோஷமாய் வண்டியில் திரும்பிக் கொண்டிருந்தது என சில காணொளிகளில் தெரிந்தது. 

 

அணையப் போகும் விளக்கைப் போல் பிரகாசமாக இருந்த அவன் முகத்தைப் பார்க்க, காவலர்களுக்கு சற்றே கலக்கமாக இருந்ததும் உண்மையே! 

 

அதை பார்வையிட்டவர்களில் திலகா, “நல்லா ப்ளான் பண்ணிருக்கான் போல சார். சரியா ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியா தான் தேர்ந்தெடுத்திருக்கான்” என்று கூற,

 

“ஆனா சீ.சி.டீ.வி இல்லாத இடம் இல்லை திலகா மேடம்” என்றபடி கொலை நடந்த பகுதியில் இருக்கும் கடைகளில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு காமீராக்களின் காணொளியை ராம் ஓடவிட்டான்.

 

குறிப்பிட்ட நேரம் வரை யாருமற்ற வெறும் சாலை மட்டுமே தெரிய, திடீரென காணொளி பிசிற்விட்டு அப்படியே அணைந்தும்போனது.

 

“என்னதிது?” என்றபடி ராம் மற்ற கடைகளில் எடுத்த காணொளிகளையும் ஓட்ட, சரியாக அதேநேரத்தில் காணொளிகள் யாவும் அனைந்துபோனது.

 

“என்ன சார் இது?” என்று சந்தோஷ் வினவ, 

 

“ஜாமர்” என்று கணினியை அழுத்தமான விழிகளால் பார்த்தபடியே சிவப்ரியன் கூறினான்.

 

அவன் தோரணையே கூறியது, இதை அவன் முன்பே எதிர்ப்பார்த்து இருந்ததை.

 

“இப்ப என்ன சார் பண்றது?” என்று ராம் வினவ,

 

“அவன்கிட்ட ஜாமர் இருக்கு.‌ அதனால் கண்டிப்பா கண்காணிப்பு காமீரா நமக்கு உதவாது ராம். சரியா பதினொன்னு இருபத்தி ரெண்டுக்கு ஆஃப் ஆயிருக்கு. அப்பறம் இதைப் பாருங்க” என்று கணினியில் கட்டியவன், “மீண்டும் ஒன்னு பத்துக்கு ஆன் ஆயிருக்கு” என்று காட்ட, இறந்துகிடந்த சாத்விக்கின் உடல் அதில் தென்பட்டது!

 

“இந்த இடைப்பட்ட நேரத்தில் தான் கொலை நடந்திருக்கும். ஆனா சார். பொதுவா கொலையாளிக்கு தான் பயன்படுத்தும் ஆயுதம் ஒரு தனிப்பட்ட பிரைட் (pride) போலத்தானே? அதை ரொம்பவும் பத்திரமா பாதுகாப்பாங்க இல்லையா? இவன் இப்படியே இந்தக் கடப்பாரைய விட்டுட்டுப் போறானே? செய்யும் அத்தனை கொலைக்கும் கடப்பாரை எப்படி அவனுக்கு வந்து சேரும்?” என்று திலகா கேட்க,

 

“சார்.. இன்னொன்னு.. உலோகம் உருக்கிக் கொண்டு வந்து இவன் காத்திருந்தா விக்டிம் வர்றதுக்குள்ள அது மீண்டும் கட்டியாகிடாது?” என்று ராம் கேட்டான்.

 

“வெல்.. தொடர் கொலை செய்யும் கொலையாளிகளில் சைக்கோ கில்லர் மற்றும் சீரியல் கில்லர்னு ரெண்டு வகை உண்டு. சைக்கோ கில்லர் மனநலம் பாதிக்கப்பட்டவர்போல. அவனே நினைச்சாலும் அவனால அவன் செய்யும் கொலைகளைத் தடுக்க முடியாது. அவன் மனசு அதுக்கு அடிக்ட் ஆயிடும். அதேபோல ஒரு வெறிபிடிச்ச நிலையிலதான் இருப்பான். அவனுக்கு மட்டும் எதாவது ஒரு கொலை மிஸ் ஆயிடுச்சு… அவ்ளோதான். அவனால அதை ஏத்துக்க முடியாம இன்னும் அரொகென்டா பிகேவ் பண்ணுவான். 

 

ஆனா சீரியல் கில்லர் அப்படி கிடையாது. உன்னையும் என்னையும் போல ஒரு சாதாரணமான மனுஷன் தான் அவனும். அவனுக்குள் அணைக்க முடியாத ஒரு அபாரமான வலியோ, கோபமோ இருக்கும். அதைத் தீர்த்துக்கத்தான் இந்தக் கொலைகளைச் செய்வான். அவன் நினைச்சாலோ, இல்ல அந்தக் கோபத்தையோ வலியையோ அவன் செய்யும் கொலை தீர்த்துடுச்சுனு தோனிடுச்சுனாலோ அவன் செய்யும் கொலைகளை நிறுத்திட்டு சாதாரண வாழ்க்கை வாழ ஆரமிச்சுடுவான். அதேபோல அவன் ஒரு இறையை மிஸ் பண்ணிட்டாக்கூட கேஷுவலா அதைக் கடந்து மறுபடியும் நல்லா யோசனை செய்து பக்காவான ப்ளானோட மறுபடியும் வருவான். இப்ப சாத்விக் விஷயத்துல அதுதான் நடந்திருக்கு.

 

அப்றம் சைக்கோ கில்லர்ஸ் தான் நீங்கச் சொன்ன போல இந்த ஆயுதம் சென்டிமென்ட் எல்லாம் பார்ப்பாங்க. சீரியல் கில்லர்ஸ் இதெல்லாம் பெருசா கண்டுகொள்ள மாட்டாங்க. அவங்களைப் பொறுத்தவரை அந்தக் கொலை நடந்தா போதும். இல்லைனாலும் பரவால பொறுமையா நடத்திக்கலாம்னு ஒரு எண்ணம் இருக்கும்.

 

இப்ப வரை ரெண்டு கொலை தான் நடந்திருக்கு. கடப்பாரை ஒன்னும் ரொம்ப கஷ்டபட்டு வாங்குற பொருள் இல்லை.. அதிகபட்சம் ஐநூறு ரூபாய் தான் வரும். ஆனா ஒன்னு தொடர்ச்சியா ஒரே இடத்தில் வாங்க முடியாது. அதுக்கு அவன் என்னமாதிரி வழி யோசித்திருப்பான்னு தான் நாம யோசிக்கனும்” என்று நீண்ட விளக்கம் கொடுத்தவன்,

 

“ராம் நீங்க என்ன கேட்டீங்க?” என்க,

 

“அந்த உலோகம் சார்” என்றான்.

 

சிவன் யோசனையாய் தன் புருவத்தை நீவிக் கொள்ள,

 

“சார்.. அந்த உலோகம் பாதரசம் மற்றும் டின் கலந்ததுனு ஃபாரென்சிக் ரிபோர்ட்ல இருந்தது. பாதரசம் உருகிய நிலைலயே இருக்கக் கூடிய ஒன்று தான். டின் சீக்கிரமே உருகிடும். ஆனா திரும்ப இறுக கொஞ்சம் அதிகமே நேரம் எடுத்துக்கும் ஒரு உலோகம் தான். அதுமட்டுமில்லாம அது ரெண்டையும் ரொம்ப சீக்கிரமே சூடு செய்திடலாம். எனக்குத் தெரிஞ்சு அவன் வந்து காத்திருக்கும் நேரத்துலயே இதை தயார் செய்திடுவான்னு தான் தோனுது” என்று சந்தோஷ் கூறினார்.

 

அவன் கூறுவது ஏற்புடையதாக இருந்த போதும் சிவன் மனதில் இன்னும் சில குழப்பங்கள் இருந்தன.

 

“எல்லாம் சரிதான் சந்தோஷ். ஆனா அந்த ரோட்ல விக்டிம் தவிர வேற யாரும் வரமாட்டாங்களா என்ன? ரோட்ல உட்கார்ந்து ஒரு மனுஷன் அர்த்த ராத்திரி உலோகத்தை காச்சிக்கிட்டு இருப்பதை மக்கள் பார்த்தா, அத்தனை சுலபமா கடந்து போக மாட்டாங்க இல்லையா?” என்று சிவன் வினவ,

 

அனைவர் முகமும் குழப்பத்தைத் தத்தெடுத்தது!

 

“அந்த குறிப்பிட்ட நேரம் அந்த சாலையில் யாருமே வராதபடி எப்படி கணக்கிடுவான்?” என்று திலகா யோசிக்க,

 

“சார்… அது முழுக்க கடைவீதி உள்ள இடம் தான். எந்தெந்த கடைகள் எத்தனை மணிக்கு மூடுறாங்கனு கணக்கு பண்ணாலே எல்லாம் பத்து மணியோட முடியுது. சுற்றுப்புறத்தில் வீடுகள் குறைவு அப்படிங்குறதால நைட்டு நேரம் அந்த பக்கம் கடக்க யாருக்கும் பெருசா தேவை இல்லாம இருக்கலாம். எப்படிப் பார்த்தாலும் நைட்டு பண்ணிரெண்டு மணிக்கு ஒரு கடைவீதியில் மக்கள் நடமாட்டாம் இல்லாம இருக்கும் என்பது தானே எல்லாரோட எண்ணமாவும் இருக்கும். அதையே கூட அவன் யோசித்திருக்கலாம். இன்னும் ஒன்னு நம்ம சந்தோஷ் சார் சொன்னது போல அவன் கொண்டு வந்த உலோகத்தை உருக்க பெருசா நேரம் தேவைப் படப் போறதுமில்லை, அதை அவன் நட்ட நடு ரோட்டுல உட்கார்ந்து காய்ச்சப் போறதுமில்லை. எதாவது ஒரு மறைவான இடத்தில் அதை காய்ச்சுவதற்கான ஆயத்தங்களை செய்து வச்சுட்டுக் கூட அவன் காத்திருக்கலாமே?” என்று துள்ளியமான கணிப்போடு ராம் கூறினான்.

 

அவனை ஒரு மெச்சுதலானப் பார்வைப் பார்த்த சிவன், “வாய்ப்பு அதிகம் ராம்” எனக் கூறி,

 

“ஒன்னுமே இல்லாத சீ.சிடீ.வி ஃபுட்டேஜ் வைத்தே இவ்வளவு கெஸ் பண்ண முடிஞ்ச நம்மலால சீக்கிரமே அந்த கொலையாளியையும் பிடிக்க முடியும். இங்க சுத்து வட்டாரத்துலருந்து ஆன்லைன்ல எதும் கடப்பாரை ஆர்டர் பண்ணிருக்காங்களானும், இங்க உள்ள பட்டறையில் எங்கேயும் யாரும் வாங்கிருக்காங்களானும் விசாரிப்போம். கொஞ்சம் பெரிய ப்ராஸஸா இருந்தாலும் இப்ப வேற ஐடியா நமக்கு இல்லை” என்று கூற,

 

அனைவரும் அவனை ஆமோதித்து தலையசைத்தனர்.

 

அவ்வழக்கு அவர்களை தலையால் தண்ணீர் குடிக்க வைக்கப் போவதை அப்போது அங்கு யாருமே அறிந்திருக்கவில்லை…

-தொடரும்…

 

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
18
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment

    1. பிரியன் காதல் கடமை இரண்டிலும் கலக்குகிறான்.