
அத்தியாயம் 40
நேரம்: வெள்ளிக்கிழமை பிற்பகல்.
இடம்: அனு வீட்டின் சமையலறை.
“அனு இங்கே பாரு! முட்டை அதிகமாகிடுச்சோ?” -பீட்ஸா தயாரிப்பில் இருந்த நிரஞ்சனா.
“பரவாயில்ல. இன்னும் ஸாஃப்ட்டா தான் இருக்கும். நீ இந்த ஐஸிங்க்கு சுகர் சரியான்னு பார்த்து சொல்லு!” -கேக் தயாரிப்பில் இருந்த அனு.
இடையில் உதவிக்கு இருந்த இரு பெண்கள் விழிபிதுங்கி நின்றிருந்தனர்.
இருவரின் சம்பாஷணைகளையும் அவ்வப்போது பாத்திரங்கள் உருட்டும் சப்தங்களையும் கேட்டபடி, ஹாலில் வண்ணக் காகிதங்களால் தோரணங்களும் பலூன்களும் கட்டிக்கொண்டிருந்த பணியாளர்களுக்கு உதவியவாறு அவர்களின் கணவன்மார்கள்!
“அம்மாவையும் கூட்டிட்டு வந்திருக்கலாமே பிரபு?”
“நல்லவேளை அவங்க ஈவ்னிங் வர்றேன்னு சொல்லிட்டாங்க. இதுங்களாவது லீவு போட்டுட்டு டெகரெட்டிங் மட்டும்தான் செய்ய சொன்னாங்க. அம்மா வந்திருந்தா நம்மள அந்த ஆண்டவனே வந்தாலும் ரட்சிக்க முடியாது பாஸ்!”
“கேக், டிஃபன்லாம் ஆர்டர் பண்ணிக்கலாம், டெகரேட்டிங்க்கு ஏஜென்ஸி கிட்ட விடலாம்ன்னு சொன்னா எங்கே கேட்குதுங்க?”
“நானும் சொன்னேனே… ஒரு ஹாலே வேணும்னா புக் பண்ணிடலாம்ன்னு சொன்னேன். இந்த புது வீட்டுல ஃபர்ஸ்ட் டைம் செலபரேட் பண்ற ஃபங்ஷனாம்! நம்ம வீட்டுல எல்லாம் நம்ம கையாலயே செய்யணுமாம்! எல்லாம் இந்த ஓல்டு லேடி நம்மள வச்சு செய்ற சதி பாஸ்!”
“சத்தமா சொல்லாதீங்க பிரபு. உள்ளே இருக்க திரிங்க போய் வெடிகுண்டு கிட்ட பத்த வச்சிடப் போகுதுங்க!”
“ஆமா ஆமா!”
உள்ளேயிருந்து நிரஞ்சனா வர, இருவரும் கப்பென்று வாய்மூடிக் கொண்டனர். “என்ன ஒரே பேச்சு சத்தமா கேட்குது? ஒரு லைன் கூட இன்னும் கட்டி முடிக்கல?”
“இப்போதான் ‘பீக மடு’ன்னு சொல்லிட்டிருந்தேன்(சீக்கிரம் செய்)! ஹிஹி…” -பிரபஞ்சன்.
அவள் இருவரையும் சந்தேகமாக பார்த்துவிட்டு அங்கே உதவிக்கு இருந்தப் பையனிடம், “அப்பு! ரெண்டு பேரும் இவ்ளோ நேரம் என்ன பேசிக்கிட்டாங்க?” எனக் கன்னடத்தில் கேட்க,
பிரபஞ்சன் கண்காட்டுவதைக் காணாத பாஸ்கரன் சிரித்துவிட்டான். “அவனுக்குதான் தமிழ் தெரியாதே? ஹாஹா…”
முடியும் மட்டும் முழியை உருட்டியவள், “அனூ…” என இரைய,
அப்போது மாலை விழாவிற்காக விரைவிலேயே வேலைகளை முடித்துக்கொண்டு வந்த அக்னி, தன் இரு அப்பாக்களும் மாட்டிக்கொண்ட பாவனையில் முழித்துக் கொண்டிருப்பதையும் அம்மா இடுப்பில் கை வைத்து தோரணையாக நிற்பதையும் பார்த்து, நடந்திருப்பதை ஓரளவிற்கு ஊகித்துக்கொண்டான்.
அவனே இப்போதெல்லாம் அம்மாக்கள் இருவரும் சேர்ந்திருக்கும் பொழுதுகளில் இடையே தலையை நுழைப்பதில்லை. இருவரும் தன்னைக் கோமாளியாக்கி விடுவார்கள் என்று புரிந்து வைத்திருந்தான். பாவம்! அவன் அப்பாக்களுக்கு அவனளவிற்கு சாமர்த்தியம் போதவில்லை.
“அந்தக் கார்ட்ஸ் ப்ராஸஸ்ல இருக்குது சர்! நான் நெக்ஸ்ட் வீக்ல உங்களுக்கு ஸ்டேட்டஸ் அப்டேட் பண்றேன்.” என்று வராத அழைப்பிற்கு பதிலளித்தபடி மாடியேறி ஓடிவிட்டவனை, ‘துரோகி!’ பார்வைப் பார்த்தனர் அப்பாக்கள்.
இந்த கூத்தெல்லாம் இன்று மாலை சந்தனாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக தான்!
அவள் பெங்களூர் வந்ததிலிருந்து தன் பிறந்தநாளைப் பெரிதாக கொண்டாடியதில்லை. அம்மா, அண்ணன், சித்தி, சித்தப்பா, அத்தை, மாமா, அர்ஜூன் என ஊரிலிருந்து அனைவரிடமிருந்தும் வாழ்த்தும் ஆசிர்வாதமும் அலைக்கற்றை வழி வந்து சேரும். அர்ஜூன் வெட்டியாக இருந்தால் திடுமென பரிசுப் பொருளுடன் வந்து நிற்பான். இவள் தோன்றினால் நட்புக்களுடன் வெளியே எங்காவது போய் வருவாள். சில பிறந்தநாட்கள் ஏனைய நாட்களைப் போல் சாதாரணமாக துவங்கி முடிந்துவிடும்.
ஆனால் இந்த வருடம் அனு அத்தை இங்கிருப்பதால், இங்கே வரச்சொல்லி வற்புறுத்தியிருந்தார். இவள் வேலையைக் காரணம் காட்டி மறுக்க, அவர் அபிராமி பாட்டியிடம் சொல்லி அழைக்க, பாட்டியும் சும்மா இராமல் அனு வீட்டில் சிறிய விழாவிற்கு ஏற்பாடு செய்யலாமென அதட்டல் போட்டிருக்க, இவளும் வேறு வழியின்றி தலையாட்ட வேண்டியிருந்தது.
வெளியே மழை தன் சாந்த முகத்தைக் காட்டிக் கொண்டிருக்க, ஒரு பணிப்பெண்ணின் உதவியுடன் அபிராமியும் வந்து சேர்ந்தார்.
குளித்துவிட்டு கருநீலத்தில் பார்க் அவென்யூவின் ஸ்லிம் ஃபிட்’ஐ அணிந்து கொண்டிருந்த சஞ்சய், வெளிவாசலில் வந்து நின்ற கேப் (cab) சப்தத்தில் ஜன்னலின் திரை விலக்கி எட்டிப் பார்த்தான். சந்தனா தான் வந்திருந்தாள்.
காரிலிருந்து இறங்கியவள் உள்ளே வராமல் அனு நட்டு வைத்திருந்த பவளமல்லி மரத்தினருகே போய் நின்றுகொண்டு தூறலுடன் உறவாட, இவனுக்கு முதல்முறை அவளை மகிழம்பூ மரத்தினடியில் மழை மேகம் அறிமுகப்படுத்திய நாளின் ஞாபகம்! இப்போதும் அதேபோலவே நிற்கின்றாள்.
புன்னகையுடன் அவளை விழிகளால் வருடியவன், அவள் உள்ளே செல்ல திரும்புகையில் திடுமென சிறு திகைப்பிற்கு சென்றான். தன் கண்கள் சொல்லும் உண்மையை ஏற்க மறுத்து, விருட்டென பால்கனியில் வந்து நின்று அவளை உற்றுப் பார்த்தவனின் நெஞ்சமெல்லாம் காதல் ஸ்பரிசங்கள்!
அன்று அவள் வீட்டில் பார்த்தபோது இவன்தான் உரிமை இருக்கிறது என்று அவளிடம் அடாவடியாக நடந்துகொண்டானே தவிர, அவள் கண்களில் அப்போதும் சிறு குழப்பம் மிச்சமிருந்தது. அப்போதைக்கு ஆறுதலை, காதலை, பாதுகாப்பை உணர்த்துவதைப் போல் ஓர் அணைப்பையும் நெற்றி முத்தத்தையும் தந்துவிட்டு வந்திருந்தான். அதன்பின் இப்போதுதான் பார்க்கிறான்.
பார்த்தவுடன் கண்டுகொண்டான். இவனின் காதல் ஜெயித்துவிட்டதாம்! மனம் தேன்சிட்டைப் போல் வெட்ட வெளியில் திட்டமின்றி பறந்தது.
அதே உல்லாசத்துடன் சட்டை பட்டனைப் போட்டுகொண்டு கீழே வர, கிச்சனிலிருந்து அவள் குரல் கேட்டது. “வர வர பயங்கர ஸ்லிம்மா, அழகாயிட்டு வர்றீங்க அத்தை. என்னைப் பாருங்க. சும்மா வந்து உங்க பிரியாணியை சாப்பிட்டு சாப்பிட்டு இங்கே அதிகமா வெய்ட் போட்ருச்சு.”
மாத்திரைகளை நிறுத்தியதால், அனுவின் சின்ன முகத்திற்கு சற்றும் பொருந்தாமல் கூடியிருந்த எடை வெகுவாக குறைந்திருந்தது. முதுமை வரைந்து கொண்டிருக்கும் அழகிய கோலம் தவிர, அவள் முகம் பொலிவுடனே காணப்பட்டது.
“சஞ்சு மாத்திரை போட வேணாம்னு சொல்லிட்டான்னு சொன்னேன்ல? இங்கே வந்த நாலு மாசமா டேப்லெட்ஸ் நிறுத்திட்டு டயட், யோகா மட்டும் கன்டினியூ பண்றேன். அதான் வெய்ட் லாஸ்!” என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே,
“அனு, வசு அண்ணி வர லேட்டாகுமாம். நம்மளை கேக் கட் பண்ண சொல்றாங்க.” என்றபடி நிரஞ்சனா உள்ளே வந்தாள்.
“அப்போ பாவனாவும் வரலையா அத்தை? நான் இன்வைட் பண்ணும்போதே சொன்னேன், சீக்கிரம் வந்துடுன்னு!”
“அந்த மேடம் இப்போல்லாம் ரொம்ப பிஸி! வேலைக்கு போறாளாம். வீட்டுப்பக்கம் கூட வரவே இல்லை.”
“உன் ஃப்ரெண்ட்ஸ் யாரும் வரலையா?” -அனு.
“அபிக்கு வேற கமிட்மெண்ட் இருக்குதாம்!”
பேசிக்கொண்டே கேக் மற்றும் சிற்றுண்டி வகைகளை எடுத்து ஹாலில் ஒழுங்கமைத்து வைத்தனர். சஞ்சுவின் பார்வை சனாவை விட்டு எங்கும் நகரவில்லை.
பேரன் மட்டுமல்ல பாட்டியும் கூட சந்தனாவைத் தான் அதிசயம் போல் பார்த்தார். “இப்போ தான் உன் அழகு ஃபுல்ஃபில் ஆகிருக்குது தெரியுமா? என் கண்ணே நிறைஞ்சு போச்சு.”
“இனி முகத்தைத் திருப்புங்க… பார்த்துக்கறேன்.” என்று போலியாக மிரட்டியவளிடம், வேண்டுமென்றே முகம் திருப்பி காண்பித்து சிரித்தார்.
அனு சொன்னாள். “சின்ன வயசுல போட்டு விட்ட கோல்ட் செயினை ரெண்டு வாட்டி தொலைச்சிட்டு வந்ததுல, அவங்கம்மா கடுப்பாகி அடி மொத்திவிட்டுட்டா! அப்புறம் இமிட்டேஷன் ஜூவல்ஸ் போட்டு விட, அது இவ ஸ்கின்னுக்கு ஒத்துக்கலை. அதுக்கப்புறம் ஒண்ணுமே வேணாம்ன்னு போடறதில்ல. நான் கூட எத்தனையோ முறை சொல்லி அலுத்துட்டேன்ம்மா. இதுதான் டிரெண்ட், அழகு, ஃபீல் ஃப்ரீன்னு சொல்லி போடமாட்டா!”
“ஓஹோ!” என்ற அபிராமி சந்தனாவை விழிகள் சுருக்கிப் பார்க்க,
அவள் அதைக் காணாதது போல், “ஹாய் மாமாஸ்! இன்னிக்கு நீங்க தான் டெகரேஷன் இன்சார்ஜாமே? ரஞ்சி அத்தை சொன்னாங்க.” என்றபடி மாமன்களின் பக்கம் நகர்ந்துவிட்டாள்.
கீழே வந்திருந்த சஞ்சயைக் கண்ட அனு, அவனருகே சென்று மெல்ல சொன்னாள். “பப்ளிக்கா இப்டி பார்க்காதே சஞ்சு! மானமே போகுது.”
அவன் சந்தனாவின் மீதிருந்த பார்வையை விலக்காது, “அவ போட்டிருக்கறது நான் வாங்கித் தந்த செயின்!” என,
சந்தனாவைக் குறித்த பெரும் கவலையொன்று பட்டென்று மாயமாகிப் போனதில் அனு, “நிஜமாவா?” என தன் மொத்தப் பற்களையும் காட்டி சத்தமாகக் கேட்டிருக்க,
“இப்போ நீதான்ம்மா மானத்தை வாங்கற!” என மந்தகசித்தான் அவள் பிள்ளை.
“வசு வர நேரமாகும். நீ வந்து கேக் கட் பண்ணு.” என்று அபிராமி சொன்னதைத் தொடர்ந்து,
தனக்காக தன் அத்தைமார்கள் செய்திருந்த கேக்கை வெட்டி பிறந்தநாளைக் கொண்டாடினாள் சந்தனா. அத்தைகள், மாமாக்கள், பாட்டி என அனைவருக்கும் கேக்கை ஊட்டிவிட்டு அவர்களின் ஆசிர்வாதங்களையும் பரிசுகளையும் பெற்றுக்கொள்ள, தனக்கு ஊட்டவில்லை என்ற பிணக்குடன் அலைப்பேசியைத் தடவிக்கொண்டு ஓரமாக நின்றுகொண்டான் சனாவின் சஞ்சு.
பிரபஞ்சனும் பாஸ்கரனும் பேசியபடி லானில் போடப்பட்டிருந்த பெரிய குடையின் கீழிருந்த இருக்கைகளில் அமர்ந்துகொள்ள, அவர்களுக்கு பிறந்தநாள் கேக் மற்றும் சிற்றுண்டிகளைப் பரிமாற பணித்துவிட்டு வந்த அனு, இவனுக்கும் காகிதத் தட்டில் வைத்து தர, “உனக்கா பர்த்டே?” என்று கோபித்துக்கொண்டான்.
“ரொம்பப் பண்ற சஞ்சு!” என சொல்லிக் கொண்டிருக்கையில், அங்கே வந்த சந்தனா அனு கையிலிருந்த கேக் துண்டை எடுத்து, மிக மிக மரியாதையாக சஞ்சுவின் வாயருகே கொண்டு சென்றாள்.
அனு கலவரமாகி அபிராமியைத் திரும்பி பார்த்த நேரத்தில், அவன் வாயில் தந்தது மட்டுமல்லாது முகம், சட்டையென கேக்கை பூசிவிட்டு, நல்ல பிள்ளையாக பாட்டியினருகே போய் நின்றுகொண்டாள் அவனின் மாரியாத்தா!
நிரஞ்சனா மகனைப் பார்த்து சத்தமாக சிரித்துவிட, அனு பாவமாக டிஷ்யூவை எடுத்து நீட்டினாள்.
அதைக் கடுப்புடன் தட்டிவிட்டவன், “வரேன். இருடீ!” எனச் சந்தனாவைத் துரத்த, அவள் சின்னக் கூச்சலுடன் மாடிக்கு ஓடினாள்.
அனுவிற்கு எங்கே அவர்கள் தன் மருமகளைத் தவறாக நினைத்துவிடுவார்களோ என்ற அச்சம்! அதனால் அவளாகவே அபிராமியிடம் சொன்னாள். “அவ அர்ஜூன் கிட்ட மாதிரி விளையாடிட்டா… நான்… நான் சொல்லி வைக்கறேன்ம்மா…”
“ஏன் டென்ஷன் ஆகற அனு? அர்ஜூனை மாதிரி அக்னியையும் நினைச்சா நீ சந்தோஷம்தானே படணும்?” -நிரஞ்சனா.
அதில் இவள் அபிராமியைப் பார்க்க, “என்னை ஏன் பார்க்கற? அவளுக்கு பதில் சொல்லு.” என்று குரலுயர்த்தினார் அவர்.
வெடவெடத்துப் போனாள் அனு.
“சும்மா இருங்க அத்தை!” என்ற நிரஞ்சனா, அனுவின் கைப் பிடித்துக்கொண்டு, “என்கிட்ட எதுவும் சொல்லணுமா அனு?” என வினவ,
“இல்லை… ஆமா! சஞ்சுவுக்கு பொண்ணு பார்க்கலாம்ன்னு…” என்று தந்தியடித்தாள் அவள்.
“பொண்ணு பார்க்கணுமா? இல்லை, உன் மருமகளைப் பார்க்கணுமா?” -அபிராமி.
அவர் கேட்பதின் அர்த்தம் புரியாமல், “சனா நல்லப் பொண்ணும்மா…” என்று இழுத்தாள்.
“இதைச் சொல்றதுக்கு உனக்கு இத்தனை நாளாகிருக்குது என்ன?” -நிரஞ்சனா.
“அப்போ உனக்கு ஆல்ரெடி தெரியுமா?” எனக் கேட்க,
“ம்ம்!” என்றவள் மாமியாரைப் பார்த்தாள். அவள் சிந்தை மூன்றரை மாதங்களுக்கு முன்பு போய் நிலைத்தது.
இவர்கள் சென்னையில் அனு வீட்டில் இருந்தபோதே, சந்தனாவின் மனதில் அவளின் மாமன் மகன் சஞ்சு இருக்கிறான் என்று, அன்று காமாட்சி ஆற்றாமையுடன் பேசியதிலிருந்து இவர்களுக்கும் விடயம் தெரிந்திருந்தது. அத்துடன் கலியபெருமாளைச் சந்திக்க போனபோது அவரின் எண்ணமும் புரிந்ததில் நிரஞ்சனா ஓர் பாதுகாப்பின்மையை உணர்ந்தாள்.
பிரபஞ்சன் என்ன தான் ஆறுதல் சொன்னாலும் அவள் மனம் சமன்பட மறுத்தது. அனு பெங்களூரு வந்து ஒரு வாரம் சென்றிருந்த நிலையில், ஒரு காலையில் அக்னி வந்து பேசியிருந்துவிட்டு போக,
பிரபஞ்சன் நமுட்டுச் சிரிப்புடன் கேட்டான். “பையன் சனாவைப் பார்க்கற பார்வையே சரியில்லை ரஞ்சி. நீங்க கவனிச்சீங்களாம்மா?”
“ம்ம் ம்ம்! நீ லேட்! நான் சென்னைல அனு வீட்டுல இருந்தப்போவே கண்டுபிடிச்சிட்டேன்.”
“என்னடி உன் பிள்ளை சாமியாரா போயிடுவான்னு சொல்லிட்டிருந்த? இப்போ என்ன சொல்ற?” என மனைவியை வம்பிற்கிழுக்க,
அவள் கண்களின் கலக்கம் மாறாமல் சொன்னாள். “அனு மாமனாரைப் பார்த்துட்டு வந்தப்போவே எனக்கு கொஞ்சம் புரிஞ்சது. ஆனா…”
“என்ன ஆனா? உனக்கும் அந்தப் பொண்ணைப் பிடிக்குமே?”
“ம்ம் பிடிக்கும்… ஆனா அவங்க… அவங்க சனாவைக் கட்டி வச்சு அக்னியை அவங்க பக்கம்…”
“ச்சச்ச! பாஸ்கர் ஃபேமிலி அந்த மாதிரிப்பட்டவங்களா தெரியல.”
“இருந்தாலும் இது வேணாங்க!” என்றாள் பட்டென்று!
கோபம் வந்தது அவள் கணவனுக்கு. “அப்போ அவனுக்கு பிடிக்காத பொண்ணைப் பார்த்து கட்டி வைக்க போறியா?”
“அதில்ல… நாளப்பின்ன அக்னியும் மாறிட்டான்னா?”
அபிராமி சுள்ளென்று பேசினார். “முழுசா ஏழு வருஷங்கூட அவனை வச்சு வளர்க்காத அனு இருபத்திரண்டு வருஷமா நம்பிக்கையோட இருந்திருக்கா! நீ ஏழே நாள்ல இப்டி நம்பிக்கையில்லாம கலங்கிப்போய் நிற்கற! உன் வளர்ப்பை நீயே சந்தேகப்படற’ன்னு புரியலையா உனக்கு?”
“அக்னிக்கு நீ இப்டி நினைக்கறது தெரிஞ்சா எவ்ளோ வருத்தப்படுவான்?” – பிரபஞ்சன்.
அவள் அப்போதும் அமைதியாகவே இருக்க, அபிராமி கேட்டார். “உனக்கு அவ்ளோ பயமா இருந்தா சொல்லு! அனுவை ஒதுக்கிட்டு உன்னால அக்னி முகத்தைப் பார்த்து உறுத்தல் இல்லாம வாழ்ந்துட முடியும்ன்னா இப்போ கூட அனுவை இங்கிருந்து துரத்திவிடறேன்.”
பதறிவிட்டாள் நிரஞ்சனா. “அய்யோ அத்தை! அப்புறம் அந்தப் பாவத்தை நான் எங்கே போய் தொலைக்க?”
“புரியுதுல்ல? அனு நல்ல பொண்ணு! அவளைக் கைக்குள்ளே போட்டு வச்சிக்கறதுதான் நமக்கு நல்லது.”
சற்று நேர அமைதிக்கு பின்னர், “நிஜமாவே அவனுக்கு சனாவைப் பிடிச்சிருக்குதா என்ன? முன்னாடி ஊருக்கு போகும்போது அவளை நம்மளோட கூட்டிட்டு போறதுக்கு கூட வேணாம்ன்னு சொன்னானே?” என்று அப்போதும் வேறு வழியில் தட்டிக்கழிக்கவே பார்த்தாள்.
“அப்போ இவ்ளோ பெரிய விஷயத்தை மனசுக்குள்ளே வச்சிக்கிட்டு, பிள்ளை எப்டி தவிச்சிட்டு இருந்துச்சோ! இப்போ அதுவா முக்கியம்? அவன் உனக்காக கூட அந்நேரம் அவக்கிட்ட இருந்து ஒதுங்கி இருக்கணும்ன்னு நினைச்சிருக்கலாம்.”
“ம்ம்! ஆனா கல்யாணம், பொண்ணுன்னு ஆரம்பிச்சாலே சாமியார் மாதிரி இருப்பானே அத்தை?”
“உன் கவனமெல்லாம் அனு மேலேயே இருக்குது. அவளையே பார்த்துக்கிட்டு பிள்ளையை, அவன் மனசைக் கவனிக்காம இருக்க நீ!” என்று நிஷ்டூரமாக நிந்தித்தார்.
பரிதாபமாக விழித்தாள் அவள்.
“முதல்ல அனுவை உன் பிள்ளையைக் களவாண்டுட்டு போறவ மாதிரி யோசிக்கறதை நிறுத்து! அவளே ஒரு சரியான தத்தி! அவ அப்டி இருக்கறதுதான் உனக்கும் வசதின்னு சொல்றேன்.” விழிகளை உருட்டி தன் மனைவியை வழிக்கு கொண்டுவரும் அம்மாவை, கன்னத்தில் கைவைத்து சுவாரஸ்யமாகப் பார்த்திருந்தான் பிரபஞ்சன்.
“யோசிச்சு பாரு! அவ மட்டும் தத்தியா இல்லாம தந்திரக்காரியா, அக்னியை நம்மக்கிட்ட இருந்து பிரிக்கற சதிகாரியா இருந்திருந்தா உன்னால என்ன செய்ய முடியும்? இப்போன்னா உன் சொல் பேச்சு நடப்பா! நாமளும் அப்டியொண்ணும் அவளைத் தள்ளி வைக்க போறதில்லை. அக்னி சந்தோஷமும் நமக்கு முக்கியமில்லையா? அதனால நீ அவளை நினைச்சு பயப்படாம உன் கைப்பாவையா வச்சுக்கோ! எல்லாம் நல்லபடியா நடக்கும்.”
“நான் கைப்பாவையா வச்சுக்கணும்ன்னு அவசியமே இல்ல. அவளே ஃப்ரெண்ட்லி டைப் தான்!”
பிரபஞ்சன், “எல்லாம் புரிஞ்சும் என்ன பயம் உனக்கு? சரின்னு சொல்லு ரஞ்சி.” எனவும் சின்னதாகப் புன்னகைத்தாள்.
“தட்’ஸ் குட்! அப்புறம்… நீயே அவன்கிட்ட எதுவும் கேட்காதே! ம்மா, உங்களுக்கும்தான்! பையன் அவனே வந்து பொண்ணைக் கைக்காட்டி, கட்டி வைங்கன்னு சொல்லட்டும்.” என்றதில் உற்சாகமாகிவிட்டாள் நிரஞ்சனா.
அவளுக்கு கல்யாணம் என்றால் வேப்பங்காயைக் கடித்தாற் போல் முகத்தை வைக்கும் மகன் இப்போது என்ன செய்யப் போகிறான் என்று சுவாரஸ்யம் பிறந்துவிட்டது.
அதன்பின்னர் தான் நிரஞ்சனா அனுவிடம் நட்புறவுடன் இருக்க வேண்டுமென தன் வயதையும் பொருட்படுத்தாமல்
ஷாப்பிங், கோவில் என்று பொது இடங்களுக்கு சுற்ற ஆரம்பித்தார் அபிராமி. அனுவும் நிரஞ்சனாவிற்கு ஏற்றாற்போல் சஞ்சுவின் விடயத்தில் விட்டுக்கொடுத்து, அவளையே முன்னிருத்துவதால் அபிராமியின் வேலை சுலபமானது. அதனால்தான் பிரகதி பயந்தபோது கூட நிரஞ்சனா திடமாக பேசினாள்.
இன்றைய பிறந்தநாள் ஏற்பாடும் கூட பெண்களின் நல்லுறவிற்காக அபிராமி திட்டமிட்டதுதான்!
இப்போது அனு கேட்டதற்கு தங்கள் சம்பாஷணையை அப்படியே ஒப்பிக்காமல், சொல்ல வேண்டியதை மட்டும் சொன்னாள். “அத்தை என்கிட்ட அன்னிக்கே சொன்னாங்க. நான்தான் கல்யாணம்ன்னா இந்த சாமியார் ஒத்துக்கமாட்டானேனு யோசிச்சேன். அவன் மட்டும் சனாவைப் பிடிக்கலைன்னு சொல்லட்டும். என் ரெட்டைவட வைரமாலையை உனக்கே கொடுக்கறேன்னு சொன்னாங்க. அப்போவே எனக்கு புரிஞ்சிடுச்சு.”
“தாங்க்ஸ் ரஞ்சி. உனக்கு சனாவை மருமகளாக்கிக்க பிடிக்குமோ என்னவோன்னு நினைச்சேன்.”
“முன்னாடியே அவளை எனக்கு பிடிக்கும். அக்னி பொண்டாட்டின்னா இன்னும் சந்தோஷப்படுவேன். அவனோட அமைதியான குணத்துக்கு இவளை மாதிரி கலகலப்பான பொண்ணுதான் சரி! அவருக்கும் சனாவை ரொம்பப் பிடிக்கும் அனு.
யூ நோ வாட் அவருக்கும் விஷயம் தெரியும். ‘நீ கண்டுக்காம இரு! அவனே நம்மக்கிட்ட வந்து சொல்லட்டும்.’ன்னு சொல்லிருக்கார். ஹாஹா… நீயும் கண்டுக்காத மாதிரி இரு அனு. அவனே வந்து அவங்கப்பா கிட்ட பேசட்டும்.” என்று சொல்ல, அனு விழித்தாள்.
அவன் என்னடாவென்றால், ‘அங்கே நீ போய் பேசு!’ என்றுவிட்டு காலாட்டிக் கொண்டிருக்கிறான். இவர்களானால், ‘அவன் வந்து பேசட்டும். நீ அமைதியாக இரு!’ என்கின்றனர்.
‘என்னடா இது இந்த வயசுல எனக்கு வந்த சோதனை!’ என உள்ளுக்குள் பரிதாபமாக அலறிய அனு வெளியே அசட்டுத்தனமாகச் சிரித்து வைத்தாள்.
“எனக்கு மனசே நிறைஞ்சிடுச்சு ரஞ்சி. நீங்க என்ன சொல்லுவீங்களோன்னு நினைச்சிட்டு இருந்தேன். நிர்மலா கூட போட்டி போடறேன்னு சனா மனசைக் கலைச்சிட்டேனோன்னு ரொம்ப கில்ட்டியா ஃபீல் பண்ணிட்டிருந்தேன். ஆனா… இப்போ… ஐ’ம் ஓவர் தி மூன்… தாங்க்ஸ் ரஞ்சி… அவன் காணாம போனதுக்கப்புறம் என் லைஃப்ல சிரிப்பே கிடையாதுன்னு நினைச்சிட்டிருந்தேன். எல்லாம் உங்களால தான்…” கலங்கிய விழிகளைச் சிமிட்டினாள் அனு.
“என்ன அனு? இனி பழசைப் பேசக்கூடாதுன்னு நாம டீல் பேசினது மறந்திடுச்சா?”
இவர்கள் அவ்வப்போது அனுவின் அலைமோதும் விழிகளை நேரடியாகப் பார்க்க நேரிடுவதால், அக்னியின் அண்மை அவளுக்கு எத்துணை அவசியமானது என்று புரிந்திருந்தது. அத்துடன் பாஸ்கரன் கேட்டுக் கொண்டதன் பேரில் முடிந்தவரையில் அவர்கள் அவளைப் பழைய கதைகளைப் பேச விடுவதில்லை. இந்த விடயத்தில் பாஸ்கரனுக்கு பெரும் பரோபகாரியாய்த் தெரிந்தாள் நிரஞ்சனா.
“இல்லை… ஒருமுறை சஞ்சு…”
“நான் ஒருத்தி இருக்கேன்றதை மறந்துட்டு ரெண்டு பேரும் ஒண்ணு கூடிட்டாளுங்க!”
சட்டென்று பேசிக் கொண்டிருந்த விடயத்தை மறந்து அனுவின் கவனம் அபிராமியிடம் குவிந்தது. “அப்டியில்லம்மா… நீங்க சொல்லுங்க. உங்களுக்கும் சனாவைப் பிடிச்சிருக்குதா?”
“என் பேரன் போடற தாலியை, ஃபீல் ஃப்ரீன்னு சொல்லி இந்தக் காலத்து பிள்ளைங்க மாதிரி கழட்டிப் போடமாட்டேன்னு அவளைச் சொல்லச் சொல்லு!”
*********
மேலே…
மாடி ஹாலில் கண்ணாடியில் இழைக்கப்பட்டிருந்த அந்தப் பிரம்மாண்ட ஊஞ்சலில் ஒரு பக்கம் அவளும் மறுபக்கம் அவனுமாக, பாய்ந்தோடுவதற்கு ஏதுவாக நுனிக்காலில் நின்றிருந்தனர்.
“ஸ்வரூப்! நீங்கதான் கேக் ஊட்டி விடலன்னு ஃபீல் பண்ணீங்க!”
“மூஞ்சில பூசி விடலன்னு ஃபீல் பண்ணேனா? புது ஷர்ட்’டீ இது!”
“வாய்ல தரும்போது கைத் தவறி ஷர்ட்ல விழுந்துடுச்சு. அதுக்குப் போய் சின்னப்பையன் மாதிரி துரத்துறீங்க?”
“இந்தப் பக்கம் வா! நான் எவ்ளோ பெரிய பையன்னு காட்டறேன்.”
“யூ ஆர் பேட்! நான் போறேன், வழிவிடுங்க!”
“சரி, நான் உன் வீட்டுல வச்சு கேட்டேனே… அதைச் சொல்லு. போகலாம்.” சரசமாகக் கேட்க,
அவன் முகத்திலிருந்து பார்வையைத் தளர்த்திக்கொண்டாள். “எனக்கே தோணும்போது சொல்லுவேன்.”
எட்டி அவள் கையை உடும்பாக பிடித்துக்கொள்ள, பிடிமானம் தவறி ஊஞ்சலில் அமர்ந்தாள். “இப்ப மட்டும் நீ சொல்லல… என் ஷர்ட்ல இருக்க க்ரீம் மொத்தமும் உன் டிரெஸ்ல ஒட்டிக்க வைப்பேன்.”
பிறந்தநாளிற்காக அவளின் பாஸ் மாமா எடுத்துக் கொடுத்திருந்த வெண்பட்டு பாவாடை, தாவணியும் கழுத்தில் மாமன்மகன் வாங்கி தந்த சங்கிலியுமென அவனைக் கிறங்கடித்தாள். தூரத்திலிருந்து பார்க்கும்போதே அந்தக் குங்கும சிமிழ் டாலரில் பதித்திருந்த ரூபி கல் பளிச்சென்று தெரிந்தது.
அன்று அக்னி தன் வீட்டிற்கு வந்துவிட்டு போனபின்னர் கண்மூடி அமர்ந்து, மீண்டும் தன் மனப்பெட்டகத்திலிருந்த காதல் புத்தகத்தைக் கிளறினாள் இவள். அங்கே உருவமில்லா ஓர் உன்னதத்தின் மேல், தான் கொண்டிருந்த காதலுக்கு உருவம் கொடுத்துப் பார்க்கும்போது அங்கே அக்னிஸ்வரூப் நிற்கின்றான்.
அவன் சொன்னது உண்மைதானா? இப்போதெல்லாம் சஞ்சு என்றால் அவன் முகம்தானே ஞாபகம் வருகிறது! ஒருவேளை அவன்தான் சஞ்சு என்று தன் மனம் நம்ப ஆரம்பித்துவிட்டதா? இல்லை உண்மையிலேயே இவள் அன்பின் வேர் அவனிடம் தான் இருக்கிறதா?
குழம்பிக் கிடந்தவள் தனக்குத்தானே வைத்துக்கொள்ளும் சோதனை போல், அந்த வார இறுதியில் சென்னை சென்றாள். அங்கே இவளறையின் அலமாரியில் அன்று தூக்கியெறிந்த அந்த சின்ன நகைப்பெட்டியை எடுத்தாள்.
அன்று குற்றவுணர்வில் தூக்கியெறிந்தவளுக்கு இன்று கையிலெடுக்கையிலேயே, ‘சஞ்சுத்தான் வாங்கித்தந்தது’ என்ற எண்ணம் மேலிட, சிந்தை செல்லும் பாதையிலேயே பயணித்து, பெட்டியினுள்ளிருந்த நகையை எடுத்து உள்ளங்கையில் வைத்து பார்த்தாள். ‘சஞ்சு’ முத்தமிட்ட நினைவு வந்து தொலைத்தது.
குப்பென்று வியர்த்துப் போனதில் சிறு வெட்கமும் ஒட்டிக்கொண்டது. நேரெதிரே இருந்த கண்ணாடியில் தன் முகம் பார்த்தவளுக்கு சட்டென்று அந்த கேள்வி எழுந்தது.
‘அன்று வந்த குற்றவுணர்வு எங்கே போனது?’
அவ்விடத்தை தான் பேரன்பு ஆக்ரமித்துக்கொண்டதே!
‘போதுமே!’ என்று மனம் சமன்பட, ஏகமனதாக அக்னியை சஞ்சுவாக ஏற்றுக்கொண்டு, அதனை அணிந்துக்கொண்டாள்.
ஆனால் இப்போது அவன் கேட்பதைச் சொல்லாமல் அவனை அலைக்கழிக்கிறது பெண்மனம்!
“ஸ்வரூப்!”
“ம்ம்…ஹூம்!” என்றபடி பிடித்த கையை விடாமல் ஊஞ்சலைச் சுற்றிக்கொண்டு அவளருகே வர,
“வேணாம் வேணாம்! ப்ளீஸ் கீழே எல்லாரும் இருக்காங்க.” என்றாள் கெஞ்சலாக!
அவளை மேலிருந்து கீழாக பார்த்தவன், “அச்சோ! ஆமால்ல? நீயும் க்ரீமோட போனா என்ன நினைப்பாங்க? பர்த்டே டிரெஸ் வேற!” என்று அவளை நகர விடாமல் வழி மறித்து நின்றுகொண்டு சட்டையைக் கழற்றி, ட்ரிம் செய்யப்பட்ட தாடியிலிருந்த க்ரீமைத் துடைத்துக்கொண்டவன், அவளை எழச்செய்து தன் கை வளைவிற்குள் கொண்டு வந்தான்.
அவள் அவன் பார்வையில் கட்டுண்டு சித்தம் கலங்கிப்போய் அவனையே பார்த்தபடி நிற்க, குனிந்து அவள் காதோரம் மெல்லிய குரலில், “எங்கேயோ வெய்ட் போட்ருக்குதுன்னு சொன்னியே? குறைக்கலாமா?” என்றவனின் விரல்கள் இடை வளைத்து தன்னோடு இறுக்கிக்கொண்டன.
விரல்கள் மீது பொறாமை கொண்ட இதழ்கள் எனக்கேதும் வேலையில்லையா எனக் கோபித்துக்கொள்ளக் கூடுமென்று அஞ்சி, முன்கூட்டியே அதற்கு இரு மடங்காக வேலைக் கொடுத்தான்.
ஒரு நிமிடத்தில் கணிசமான கலோரிகளைக் குறைக்கும் பயிற்சிக்கு பின்னர், சொட்டிக் கொண்டிருக்கும் காதல் ஈரத்தில் குழைந்திருந்த சந்தனம், “சஞ்சுத்தான்!” என்று சொல்லி அந்தத் தழலுக்கு நிழல் தந்தது.
அதன்பின்னர் தான் கேட்டான். “எப்போ’டீ குழப்பம் போச்சு மாரியாத்தா?”
அவளும் சொன்னாள்.
சிறிதுநேரத்தில் பாவனாவும் வசுதாவும் வந்திருக்கிறார்கள் என்று அனு குரல் கொடுக்க, குனிந்து தன்னைப் பார்த்துவிட்டு “நீ போ! நான் அப்புறம் வர்றேன்.” என்றான்.
கீழே திரும்புகையில் சந்தனம் தன் இயல்புக்கு மாறாக கேக் வாசனையைப் பூசிக்கொண்டிருந்தது.
ஒரு சிறுவலி இருந்ததுவே…
இதயத்திலே இதயத்திலே…
உனதிரு விழி தடவியதால்…
அமிழ்ந்துவிட்டேன் மயக்கத்திலே…
இசைக்கும்🎵💗🎶…
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
20
+1
2
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


என்ன பிக்பாஸ் ல வர்ற மாதிரி நேரம் இடம் எல்லாம் சொல்றீங்க 😜😜😜😜அக்னி சூப்பரா ரொமான்ஸ் பண்ற 🥰🥰🥰🥰
ஹாஹா… அப்டியா இருக்குது?😂😂
இரு பெண்கள் சண்டையிட்டு கொண்டால் கூட பரவாயில்லை, நட்புறவுடன் இணைந்து இருப்பின் அங்கே இடைப்புகாமல் இருப்பதுவே நலம்.
“மனம் தேன்சிட்டு போல் வெட்ட வெளியில் திட்டமின்றி பறந்தது”.
✨✨👌🏼
அபி பாட்டியின் சாதுர்யமான பேச்சுக்கள் ரசிக்க வைக்கின்றன.
தத்தி அனுவை கைப்பாவை ஆக்கிக்கொள். 🤣🤣
சம்மதம் என்பதனை, “ஃபீல் ப்ரீ என்று கழட்டி எரிய மாட்டேன் என்று சத்தியம் செய்யணும்” என்டு சொல்வது தான் என்ன அபாரமான ஒரு பேச்சுத் திறன்!
“காதல் ஈரத்தில் குழைந்த சந்தனம்” 💫💫
“தழலுக்கு நிழல் தந்தது” – அக்னி சந்தனம்
ரொம்பே ரசிச்சு எழுதியிருக்கீங்க.
Full of grandeur 👏🏼💛💛🌻
Royal Praise 🌈🫧 So grateful for ur enthusiastic comment sis🍃🌷