Loading

“சரி கவி, நாங்க ரூம்க்கு கிளம்பறோம். காலையில முகூர்த்தத்துக்கு வரணுமில்லையா… இப்பவே நேரமாகிச்சு.”

“எங்க போறீங்க? வாங்க எல்லாரும் நம்ம வீட்டுக்கு போகலாம்,” என்று பார்கவி தன் வீட்டிற்கு அழைக்க…

“இல்லத்தைப் பரவாயில்ல, எல்லாருக்கும் இங்கயே ரூம் அலாட் பண்ணிருக்கு. உங்களுக்கு எதுக்கு கஷ்டம்,” என்றான் வசீகரன்.

“இருக்கட்டுமே… எத்தனை ரூம் இருந்தா என்ன? அது நம்ம வீடு போல வருமா…? இங்க பக்கத்துல தான் வீடு. ஒரே அஞ்சு நிமிஷத்துல போயிடலாம்,” என்றவரின் முகத்தில் இருந்த ஏக்கத்தை கண்ட வசீகரன்,

“சரித்தை, நீங்க அம்மாவையும் அபிம்மாவையும் கூட்டிட்டு போங்க,” என்று சம்மதமளித்தவன். “எங்களுக்கு இங்க வேலை இருக்கு. இன்னொரு நாள் வரோம்,” என்று பிரணவிடம் சாவியை கொடுத்து திரு. பசுபதியை தங்க வைக்குமாறு கூறி நண்பர்களை கவனிக்க சென்றுவிட்டான்.

இங்கு வீடு வந்து சேர்ந்த தோழிகளுக்கு உறக்கம் தூரதேசம் சென்றிருக்க, இரவெல்லாம் கதை பேசியே ஓய்ந்து போனவர்கள் ஒருவழியாக காலை தயாராகி மண்டபத்திற்கு வந்து சேர்ந்தனர்.

அவர்களோடு வந்த இழை சர்வாவுடன் சிரித்து பேசிக்கொண்டு வருவதை கண்டவன்,

“ஹாய் இழை…” என்றிட அவளோ அவனை எதிர்பாராது நாயகியின் பின்னே பதுங்கினாள்.

“ஏன் இந்த விலகல்…?” என்று புரியாத வசீகரனுக்கு அதற்கு மேல் யோசிக்கும் அவகாசம் இல்லை.

அன்று திருமணம் நல்லபடியாக முடிவடைய, பம்பரமாக சுழன்று நண்பனின் திருமணத்தில் வேலை செய்துகொண்டிருந்தவனை கண்ட பார்கவி,

“இப்படியே சாப்பிடாம ஓடிட்டு இருந்தா எப்படி? தம்பு முதல்ல சாப்ட்டுட்டு அப்புறம் வேலையைப்paru,” என்று சர்வா மற்றும் பிரணவோடு அவனை அழைத்து அமர்த்தியவர்,

“என்ன பார்த்துட்டு நிக்கிற? தம்புக்கு என்ன வேணும்னு கேட்டுவை பிங்கி…” என்று இழையை விரட்டிக் கொண்டிருந்தார்.

“சரி ம்மா,” என்று தயக்கத்துடனே அவனருகே சென்று இலையை வைத்து உணவை பரிமாறியவள்,

“வேற ஏதாவது வேணுமா…” என்று மெல்லிய குரலில் கேட்டாள்.

“ஆம்,” என்று அவன் தலை அசைந்தது.

“சொல்லுங்க…” என்றவள் முடிந்தவரை தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு இயல்பாக அவனருகே நின்றாள்.

“அண்ணாக்கு கிழங்கு பிடிக்காது பிங்கி. தக்காளி சட்னி இருந்தா எடுத்துட்டு வா,” என்று சர்வா சொல்லவும் அவனை முறைத்திருந்தான் வசீகரன்.

தமையனின் பாசப்பார்வை புரியாத ஜித்து,

“என்னண்ணா…” என்றான்.

“இப்போ அவளை என்னன்னு கூப்பிட்ட…?”

“பிங்கி…”

“ஒழுங்கா அண்ணின்னு கூப்பிட்டு பழகு…” என்று வசீகரன் ஆணையிட…

“இப்பவேவா… இன்னும் கல்யா…” என்று தயங்கியவனுக்கு தோழியை சட்டென அண்ணி என்று அழைக்க முடியவில்லை…

“ஏன், நல்லநேரம் பார்த்து தான் அண்ணின்னு கூப்பிடுவியா…? சொன்னதை செய்டா…” என்று வசீ பல்லை கடிக்க,

“டேய் ப்ரோ, நான் அண்ணின்னு சொல்லலையா? உனக்கென்னடா பிரச்சனை? அட்லீஸ்ட் அண்ணாகிட்ட பேசறப்போவாவது அண்ணின்னு சொல்லி பழகு. கல்யாணத்துக்கு அப்புறம் அண்ணிக்கிட்ட சொல்லுவ” என்று பிரணவ் அவன் காதை கடிக்கவும்,

“சரிடா…” என்றவன்.

இழை சட்னியோடு வரவும் கவனமாக அவள் பெயர் சொல்வதை தவிர்த்த சர்வஜித், “அண்ணாக்கு பொங்கல் ரொம்ப பிடிக்கும். இன்னும் கொஞ்சம் வை” எனவும், அதையும் கொண்டு வந்து வசீயின் இலையில் வைத்தவள்.

“அவ்ளோதானா?…” என்பதாக ஜித்துவை பார்த்தவள் கிளம்ப எத்தனிக்க…

“குலோப்ஜாமுன்…” என்ற வசீயின் வசீகர குரல்.

“குலோப்ஜாமுன் செய்யலையே…” என்று இழை சர்வாவை பார்க்க,

“அவன் என்ன உனக்கும் எனக்கும் மீடியேட்டரா? ஏன் என்கிட்ட சொல்ல மாட்டியா…?” என்று வசீ நேரடியாக கேட்டதில் பதற்றத்தோடு,

“இல்ல, அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல…” என்று அவள் நகர பார்க்க…

“ஒரு நிமிஷம். ஏன் நேத்திருந்து என்னை அவாய்ட் பண்ணிட்டிருக்க? நிஜமாவே உனக்கு என்னை ஞாபகமில்லையா? மறந்துட்டியா…?” என்றான்.

“அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல…” என்றவளின் கைகள் உதறல் எடுக்க சற்று நிதானித்தவள், “நீங்க சாப்பிடுங்க. நான் வரேன்” என்று அவனுக்கு தண்ணீரை எடுத்து வைத்து அறையில் இருந்து மெல்ல வெளியேறினாள்.

அதே நேரம் நாயகியோடு உள்ளே நுழைந்த பார்கவி, “பிங்கி, எங்க போற…?” என்றார்.

“ஒண்ணுமில்லம்மா… ஆஷ்மிக்கு ஏதாவது வேணுமா ன்னு கேட்கலாம்ன்னு…”

“ஆஷ்மியும் மாப்பிள்ளையும் இப்பதான் சாப்பிட போயிருக்காங்க. நீ முதல்ல அத்தைக்கு ஸ்வீட் எடுத்து கொடு” என்றார்.

“என்ன கவி, இப்போதானே சாப்பிட்டோம். திரும்ப என்ன ஸ்வீட்…” என்றார்.

“சொல்றேன். முதல்ல ஸ்வீட் சாப்பிடு” என்று நாயகிக்கு இனிப்பை ஊட்டியவர், “உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும் அம்மூ” என்றார்.

“நாங்களும் உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்க்கா” என்றார் அபிராமியும்…

“என்ன விஷயம் அபி…?”

“அதை அப்புறம் சொல்றோம் முதல்ல நீயே சொல்லு கவி”

“வர வெள்ளிக்கிழமை பிங்கிக்கு நிச்சயதார்த்தம், அம்மூ! மறக்காம நீங்க எல்லாரும் குடும்பத்தோடு கலந்துக்கணும்” என்று அவர்கள் தலையில் இடியை இறக்க, நாயகியின் தொண்டை குழியில் இனிப்பு சிக்கிக்கொண்டது.

“என்னக்கா சொல்றீங்க…” என்ற அபிராமியின் முகமும் சொல்லான்னா வேதனையில் உழன்றது.

“ஆமா அபி. ரொம்ப வருஷமா பார்த்துட்டு இருந்தோம். ரெண்டு வாரம் முந்தி தான் முடிவு பண்ணினோம். மாப்பிள்ளை பேர் இந்திரவர்மன் — வெளிநாட்டுல வேலை செய்துட்டு இருந்தவர். இப்போ சென்னையிலேயே செட்டில் ஆகிட்டார். எங்க எல்லாருக்கும் பிடிச்சிடுச்சு. அதான் வர வெள்ளிக்கிழமை நிச்சயம், அடுத்த மாசம் கல்யாணம். நீங்க எல்லாரும் குடும்பத்தோட வரணும்” என்று அவர் புன்னகையோடு அழைக்க அங்கிருந்தவர்களின் முகத்தில் அத்தனை அதிர்ச்சி…

இங்கே இரவு முழுக்க பசுபதியும் திருவும் திருமணத்தை எங்கு நடத்துவது, எப்படி, என்னென்ன தயாரிப்புகள் என்று திட்டமிட்டிருந்தனர் அனைத்தும் கானல் நீராகி போனதை கண்ட பிரணவ் மிகவும் உடைந்து போனான்.

“என்னம்மா இது… அண்ணனுக்கு இப்பதான் அண்ணியை பிடிச்சது… ஆனா இப்படியா…” என்று அபியை கேட்க… அவரோ திகைப்பில் இருந்து விலாகாமல் அகிலாண்டநாயகியை பார்க்க, அவர் விழிகளில் கண்ணீர் முட்டி நின்றது…

சர்வஜித் முகத்திலும் உட்சபட்ச அதிர்ச்சி!

இத்திருப்பத்தை எதிர்பாராதவனின் முகம் வேதனையில் கசங்கிட  பெரும் தவிப்போடு தமையனை பார்த்தான்.

“நான் இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கேன் அம்மூ… இத்தனை வருஷமா என் பொண்ணு கல்யாணத்தை தள்ளி போட்டுட்டு இருக்கேன்னு சிலர் பேசினாங்க… ஆனா அவ கல்யாணத்துல நீங்க எல்லாரும் கலந்துட்டு ஆசிர்வதிக்கணும்னு தான் தள்ளிட்டு வந்திருக்கு போல. அதுல எனக்கு சந்தோஷமே” என்று பேசிக்கொண்டே செல்ல அனைவரின் பார்வையும் வசீகரனின் மீதே…

வசீகரனோ, அவனையே தவிப்புடன் பார்த்தவாறு நின்றிருந்த இழையை சில நொடிகள்凝視ப் பார்த்திருந்தான். விழிகளில் வலி வேகமாக பரவ அதற்கு மேலும் அங்கு அமர முடியாமல் கை கழுவியவன் சத்தமின்றி வெளியேறினான்.

அதன்பின் நொடியும் யாரும் தாமதிக்கவில்லை…

“என்ன அம்மூ, அப்படி பார்க்கிற? கண்டிப்பா வரணும். இல்ல நான் வர மாட்டேன் பார்த்துக்கோ” என்று செல்லமாக மிரட்ட முயன்று இதழ்களை இழுத்து பிடித்து புன்னகைத்தவர், “கண்டிப்பா வரோம் கவி” என்றார்.

வீட்டிற்கு அழைத்த பார்கவியிடம் மற்றொரு நாள் வருவதாக கூறி, கட்டுப்படுத்த முடியாத கண்ணீருடன் வெளியேறினார்.

அங்கே கைலாசம் மூலமாக விஷயம் திருவேங்கடத்திற்கும் தெரியவர, அவர் மனதும் அமைதியின்றி தவித்தது.. ஒற்றை மகனின் ஆசையை நிறைவேற்ற முடியா ஆதங்கத்தில்.

“அண்ணா…” என்று பசுபதி அழைக்க,

“கைலாசம் நம்பர் வாங்கினியா பசுபதி?” என்றார்.

“வாங்கிட்டேன் அண்ணா… இன்னும் நிச்சயம் நடக்கலையே. நாம பேசி பார்க்கலாமே. கண்டிப்பா வசீ இன்னொரு ஏமாற்றத்தை தாங்க மாட்டான் ண்ணா…” என்றார்.

“எனக்கும் தெரியும்…” என்பதாக தலை அசைத்த திருவேங்கடத்தின் முகத்திலும் அத்தனை தீவிரம்.

வீடு வந்து சேர்ந்த அத்தனை பேரின் முகமும் உயிர்ப்பற்றுத் தளர்ந்து போயிருந்தது. முதலிலேயே வீட்டிற்கு வந்திருந்த வசீகரன், தன் அறைக்குள் சென்று கதவு அடைத்திருக்க அவன் பின்னே வந்த யாருக்கும் அவனை நெருங்கும் தைரியம் இல்லை.

“எல்லாம் என்னால தான்கா… ஸாரிக்கா… நான் அப்படி பேசி இருக்க கூடாது…” என்று இதோடு நூறு முறையாவது தமக்கையிடம் மன்னிப்பு கேட்டிருந்திருப்பார் அபிராமி.

ஆனால் எதற்கும் பதிலளிக்கும் நிலையில் இல்லாத நாயகி, கண்ணீரோடு பூஜையறையில் நுழைந்தவர் — கனத்த மனதோடு கண்மூடி அமர்ந்திருந்தார்.

“பிரணவ், நீ போய் கரண் கூட இரு… அவனை தனியா விடாதே” என்றார் பசுபதி.

“அப்பா, அண்ணா ரூம்ல இருக்கார். கதவை சாத்தியிருக்கு. அவரா திறந்தா தான் உண்டு…” என்று நிதர்சனத்தை கூற,

“பசுபதி, தம்புவை டிஸ்டர்ப் பண்ணாத…”
“இல்லன்னா…” என்ற பசுபதி தயக்கத்தோடு ஏதோ சொல்ல வர…

“ப்ஸ்… அவன் ஒன்னும் டீனேஜ் பையன் இல்ல எந்த ஒரு அவசர முடிவும் எடுக்க.. தேவையில்லாம எதுக்கு நீ இப்படி பயப்படற? அவனை கொஞ்சம் ஃப்ரீயா விடு. நைட் பேசிக்கலாம்” என்றார்.

“அம்மூவை பார்த்துக்கோ அபி. ரொம்ப டிஸ்டர்ப்டா இருக்கா. எங்களுக்கு கொஞ்சம் அவசர வேலை — சீக்கிரம் வரோம்” என்று வெளியில் கிளம்பவும், மகன்களிடம் வசீகரன் வெளியே வந்ததும் அழைக்குமாறு கூறிய பசுபதியும் திருவோடு கிளம்பினர்.

அவர் கிளம்பவும் மாடிக்கு சென்ற ஜித்துவும் ப்ரணவும் தங்கள் அறைக்கு செல்லாமல் ஹாலில் அமர்ந்து வசீகரனின் அறையை பார்த்தவண்ணம் அமர்ந்திருந்தனர்.

“அக்கா ஸாரிக்கா… நான்தான் அபசகுனமா. பிங்கிக்கு ஏற்கனவே கல்யாணமாகி இருந்தா என்ன பண்ணறதுன்னு கேட்டேன்… ஆனா அது நிஜமாகும்னு நான் கனவில கூட நினைக்கலை ஸாரிக்கா…” என்று அபி மீண்டும் மன்னிப்பை வேண்டினார்.

பல மணி நேரங்களுக்கு பின் முதல்முறையாக மௌனம் உடைத்த நாயகி, “நீ என்ன செய்வ அபி? எல்லாம் என்னால தான்! என் பையனுக்கு எங்கெங்கயோ பொண்ணு தேடினேன் எனக்கு நம்ம பிங்கி ஞாபகம் வரலையே… எப்படி மறந்தேன் அவளை? முதல்லயே பிங்கியை தம்புக்கு காட்டியிருந்தா இத்தனை வருஷம் வீணாகியிருக்காதே… இப்போ என் பையன் முழுசா உடைஞ்சு போயிருப்பான். அவனை எப்படி நான் மீட்க?” என்றார் கலங்கிய விழிகளோடு…

“அக்கா, நீ கவிக்காகட்ட பேசு அவங்க நிச்சயம் புரிஞ்சுப்பாங்க… நாம கேட்டு பொண்ணு இல்லைன்னு சொல்லிடுவாங்களா?”

“நிச்சயம் சொல்லமாட்டாங்க அபி… ஆனா நம்மள மாதிரிதானே அவங்களும் பெண்ணோட கல்யாணத்தை பற்றி எவ்வளவோ கனவு வச்சிருப்பாங்க… இப்போ திடீர்ன்னு நம்ம இஷ்டத்தை திணிக்கிறது எப்படி சரியா இருக்கும்…? அதோட பிங்கிக்கு விருப்பம் இல்லாமயா இந்த சம்பந்தத்தை பேசி முடிச்சிருப்பாங்க… ஒரு பெண்ணோட கல்யாண கனவை கலைக்கறது தப்பு அபி.. என் பையனுக்காவே இருந்தாலும் நிச்சயம் என்னால முடியும்னு தோணலை…”

“அக்கா… அதுக்காக தம்புவோட ஆசை… அதை எப்படி விட முடியும்…? தம்பு பேசினதை பார்த்தா இழை இல்லன்னா வேற பெண்ணை கல்யாணம் பண்ணிப்பான் போல எனக்கு தோணலைக்கா…” என்றவரின் குரலிலும் அத்தனை கலக்கம்.

“எனக்கும் அதுதான் அபி… புரியலை. என்ன இருந்தாலும் பிங்கியும் நம்ம வீட்டுப் பொண்ணு தானே? அவளோட விருப்பமும் எனக்கு முக்கியம். ஒருவேளை அவளுக்கு அந்த மாப்பிள்ளையை ரொம்ப பிடிச்சிருந்தா நாம என்ன செய்ய…?” என்றவரின் குரலில் அத்தனை நடுக்கம்.

இழை கை நழுவி செல்வதை நாயகியால் சுத்தமாக ஏற்க முடியவில்லை. அதேநேரம் பிள்ளையின் ஆசையும் மனதில் வலம் வர கண்ணீரோடு தங்கையை பார்த்தவர்,

“என் பிள்ளையோட ஆசையை நிறைவேற்ற முடியாத நானெல்லாம் என்ன அம்மா? ஏன் அபி எனக்கு மட்டும் இப்படி நடக்குது? கடவுள் ஏன் இந்த கல்யாண பேச்சுக்கு முன்ன பிங்கியை நாம் கண்ணுல காட்டாம போனார்…” என்று மீண்டும் தொடங்கிய இடத்திற்கே வந்து அலமலந்து போனார்.

“டேய் ப்ரோ, நீதான் அண்ணியோட க்ளோஸ் ஃபிரெண்டாச்சே. நீயே அவங்ககிட்ட பேசி பாருடா” என்றான் பிரணவ்.

“என்ன பேச சொல்ற ப்ரணவ்?”

“அதான், அண்ணாக்கு அண்ணியை பிடிச்சிருக்குல. ஸோ, அவங்க அண்ணனை தான் கல்யாணம் பண்ணிக்கணும்னு நீ சொல்லேன்டா? உன் பேச்சை அவங்க மறுக்கவா போறாங்க?”

“அறிவுகெட்டதனமா பேசாத ப்ரணவ். நான் சொல்றதுக்காக செய்ய இதென்ன விளையாட்டா இல்ல காம்ப்பிடிஷனா? இது வாழ்க்கை. பெண் பார்த்து நிச்சயம் வரைக்கும் வந்திருக்குன்னா, பிங்கியோட சம்மதமில்லாம அத்தை கல்யாண ஏற்பாடு செய்திருக்க மாட்டாங்க. அப்புறம் என்னன்னு சொல்லி அதை நிறுத்த?”

“அப்போ பேசாம நாம அந்த மாப்பிள்ளையை கடத்திடலாமா? அப்புறம் கல்யாணம் ஆட்டோமேட்டிக்கா நின்னிடும். நாமளும் அத்தைகிட்ட பேசி, அண்ணனுக்கும் அண்ணிக்கும் கல்யாணம் பண்ணிடலாமே. எப்படி என் ஐடியா?” என்று “அறிவுபூர்வமான” யோசனையை அளிக்க…

“ப்ச்… உளராம கொஞ்சநேரம் அமைதியா இரு, ப்ரணவ்.”

“டேய் அண்ணா, எது சொன்னாலும் முட்டுக்கட்டை போட்டுடுற. அப்புறம் அண்ணியை எப்படிடா நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வர முடியும்? அண்ணா யார்கிட்டயும் இதுவரை பேசலை… கவனிச்சியா இல்லையா நீ?”

“ப்ச்… புரிஞ்சிக்கோ ப்ரணவ். பிங்கி மனசுல என்ன இருக்குன்னு தெரியாம கல்யாணத்தை நிறுத்தி என்ன பண்ண? நீ இந்த மாதிரி யோசிக்கிறன்னு தெரிஞ்சா, அண்ணாவே உன்னை உதைப்பார். தேவையா உனக்கு? கொஞ்சம் அமைதியா இரு. வேற ஏதாவது யோசிப்போம்…”

“அடேய் ப்ரோ, அதுக்குத்தான் சொல்றேன். அண்ணிகிட்ட பேசி, அவங்க மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சுட்டு அண்ணனைப் பத்தி பேசு. ஒரு தீர்வு கிடைக்கும்.”

“இருடா. நானும் அதான் யோசிச்சிட்டு இருக்கேன்.”

“என்ன யோசனை?”

“காலையில அத்தை நிச்சயம் பத்தி பேசினப்போ, பிங்கி முகத்துல பெருசா சந்தோசம் இல்ல. ஏதோ டென்ஷனா இருந்த மாதிரி தான் இருந்தது… அதான் என்னவா இருக்கும்னு யோசிக்கிறேன்,” என்றவனுமே இழையின் அலைபேசி எண்ணை முறைத்தவாறு நடை பயின்று கொண்டிருந்தான்.

Click on a star to rate it!

Rating 4.5 / 5. Vote count: 6

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
6
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. இழை என்ன சொல்ல போறா தெரியல … அச்சோ வசீ பாவம் … கனவுல குழந்தை வரைக்கும் போயிட்டான் …