

KKEN-28
அவன் சொன்ன அந்த விஷயத்தில் நடுங்கித் தான் போனாள் வித்யா . அவனின் தோற்றத்தில் இருக்கும் படி அவன் மனதால் நல்லவன் இல்லை. அவளுக்குப் புரிந்து விட்டது.
அவனின் ஆசை அனைத்தையும் பூர்த்தி செய்தாள் மகள். பெற்றவர்களுக்காக .முதலில் கண்ணீர் வந்தாலும் அடுத்த சில நாட்களில் அதுவும் வற்றிப் போக கல்லாகி விட்டாள். எத்தனை நாள் ? மாதங்கள் கூட அவனுக்கு உடன் இருக்க மனதை தயார் செய்துக் கொண்டாள் பெற்றவர்களுக்காக .
இந்த சம்பவம் நடக்கும்போது வெற்றி எங்கே?
வெற்றியின் வீட்டில் அன்று மிகப் பெரிய சண்டை தான். அவன் அக்காவுக்காக பேசப் போக அவன் தங்கை வித்யாவை மட்டமாக மிக மட்டமாக பேசி விட்டாள். இனி வீண் செலவு செய்யக் கூடாது என்று சொன்னால்?
“என்ன வெற்றி இது வரைக்கும் அக்கா தங்கச்சிய யாராவது ஏதாவது ஒரு வார்த்தை சொன்னாலே பாய்ஞ்சுடுவ ? இப்ப என்ன நீயே இப்டி பேசற? நீயா பேசறியா இல்ல அவ சொல்லி கொடுத்து பேசறியா?”
“அவங்களை பத்தி எதுவும் பேசாத. அவங்கள மாதிரி ஒரு தங்கத்தை இந்த உலகத்துல பாக்க முடியாது”
“ஏன் சொல்ல மாட்ட? கல்யாணத்துக்கு முன்னேயே கட்டி புடிச்சுக்கிட்டு நின்னவதானே? அது மட்டும் தானா இல்ல வேற எண்ணத்தை காட்டி மயக்கினாளோ? இந்த காலத்துல அததுக்கு உடம்பு..”
அவள் அடுத்த வார்த்தை பேசுமுன் பளீரென அவள் கன்னத்தில் அறை விழுந்தது.
“அவங்கள என்ன உன்ன மாதிரி பொறுக்கின்னு நினைச்சியா?”
அடுத்த நொடி அவன் கன்னத்தில் பளீரென அறை விழுந்தது தந்தையின் கையால்.
“எப்ப இந்த அளவுக்கு வந்துருச்சோ இதுக்கு மேல எதுவும் சரி பட்டு வராது. யாரோ ஒருத்திக்காக கூட பொறந்தவள அடிக்கற அளவுக்கு வந்துட்டியோ இனிமே உனக்கும் இந்த வீட்டுக்கோ எந்த ஒட்டோ உறவோ இல்ல. நீயும் உங்க அக்காவும் இனிமே எங்க மூஞ்சில முழிக்கக் கூடாது. இப்பவே இந்த வீட்டை விட்டு வெளில போடா நாயே .”
கழுத்தை பிடித்து வெளியில் தள்ளி விட்டார் தந்தை .
“அது எப்படி தான் பெற்ற ஒற்றை மகளுக்காக இரு பிள்ளைகளை வேண்டாம் என்று அவரால் ஒதுக்க முடியும்? வெற்றியால் இதை ஒத்துக் கொள்ள முடியவில்லை. வயதும் வேகமும் அவனை அதற்கு மேல் யோசிக்க விடவில்லை. இளமை முறுக்கேறியது.
“நீங்க என்ன என்னை வெளில அனுப்பறது? நானே இனிமே உங்க கண்ணுல முழிக்க மாட்டேன் .”
“போடா போ நாயே. நான் செத்தா கொல்லி வைக்க கூட நீ வரக் கூடாது. என் மூஞ்சிலேய நீ இனிமே முழிக்க கூடாது. புள்ளை செத்துட்டான்னு தலை முழுகிறேன்.”
அன்றைய இரவு தோழனின் வீட்டில் படுத்துக் கொண்டவன் மறு தினம் காலையிலேயே கிளம்பி அத்தை வீட்டிற்கு சென்றான். கண்ணில் நிற்காமல் அழுகை வந்தது .இரவில் தன்னவளிடம் பேச ஆசையாக இருந்தது. இருந்தாலும் அவளிடம் தன்னை மீறி அழுது விடுவோமோ என்ற பயத்தில் அவன் அவளுக்கு அழைக்காமல் இருந்தான். ஆனால் அவளும் ஏன் தனக்கு அழைக்கவில்லை? அடுத்த இரு தினங்களில் அவனே அழைத்தான். அவன் தந்தை தான் எடுத்தார்.
“அவளுக்கு ஒடம்பு சரி இல்ல. தொந்தரவு பண்ணாதீங்க” அவள் வீடு வந்து சேரும் வரை வெற்றியின் அழைப்புகளை தவிர்த்தார். அவர் ஒதுக்குவது அவனுக்குப் புரிந்தது. அவர் மகளுக்கு வேறு திருமணம் ஏதும் செய்து வைக்கப் போகிறாரா? எந்த காரணத்திற்காகவும் அவள் தன்னிடம் பேசாமல் இருக்க வாய்ப்பே இல்லை. இவரே அவளை வேறு வெளி நாட்டிற்கு அனுப்பி இருப்பாரா? தந்தை திருமணத்திற்கு ஒத்துக் கொண்டதாக சொன்னாளே? அவர் இவளை ஏமாற்றி இருப்பாரா?அல்லது அவளுக்கு வேறு ஏதாவது ஆபத்தா ? மனம் ஏதோ சரி இல்லை என்று சொல்லியது. அவனால் பொறுக்க முடியவில்லை. பத்து நாட்கள் பொறுத்தவன் அதற்கு மேல் பொறுக்க முடியாமல் அவனே அவளை பார்க்க வந்தான்.
வரவேற்றது காயத்ரி.
“அடடே வா வெற்றி. அவ எங்க?”
“அவங்க என் கூட வரலையே ” பேச்சுக் குரல் கேட்கவும் வெளியில் ஓடி வந்தார் விஜயன். அவருக்கு வெற்றியை பற்றி தெரியுமே தவிர அவனை பார்த்ததில்லை.
“வணக்கங்க! நான் வெற்றி. அவங்கள தினம் ஆட்டோல வேலைக்கு கூட்டிட்டு போவேன். வித்யா அம்மா பத்து நாளா வேலைக்கு போகல. போனும் அணைச்சு வச்சுருக்கு. அதான் என்னாச்சுன்னு …..”
மகள் விரும்பியன். மனைவி நம்பியவன். அவனிடம் இன்னும் எத்தனை நாளைக்குத்தான் மறைத்து வைக்க முடியும்? பாவம் அவனாவது வேறு ஏதாவது பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளட்டும்.
அதுவும் இல்லாமல் இப்போது தான் இருக்கும் நிலைக்கே தனக்கே யாரிடமாவது சொல்லி விட மாட்டோமா ன்ற நிலையில் தான் இருந்தார்.
“உள்ள வாங்க வெற்றி.
“காயத்ரி தம்பிக்கு டீ போட்டு கொண்டு வாம்மா ”
“சரிங்க! ஆனா வித்யாவை இன்னும் காணோமே?”
“அவ இப்பதான் போன் பண்ணா. இதோ வந்துகிட்டே இருக்கா. நீ போய் தம்பிக்கு டீயும் வேற ஏதாவது சாப்பிடவும் கொண்டு வா. ”
“அப்டியா சரிங்க !”
ஆவி பறக்க டீ வந்ததும் மெதுவாக எடுத்து குடித்தான்.
“என்னங்க வித்யாவை இன்னும் காணுமேங்க ?”
“அதன் சொன்னேனே காயத்ரி. அவ வெளில பொய் இருக்கா. பிரான்சு கூட போனதுல லேட்டாகிடுச்சாம். ட்ராபிக்ல இருக்களாம். வந்துகிட்டே இருக்கா.”
“சரிங்க ! நான் சாமி கும்பிட போறேன். காயத்ரி காயத்ரின்னு என்னை தொந்தரவு பண்ணிகிட்டே இருக்காதீங்க.”
“தம்பி நீங்க பேசிகிட்டு இருங்க இதோ கொஞ்ச நேரம் வந்துடறேன். ”
“சரிங்க மேடம்!” மெதுவாக எழுந்து கொண்டே சொன்னான்.
‘எதுக்கு எழுந்துக்கறீங்க . உக்காருங்க.”
சொல்லி விட்டு சென்றார்.
பீஜ் நிற கல்யாணி காட்டன் புடவை. அடர் மெரூன் நிற பார்டர். எந்த டிசைனும் இல்லாமல் இருந்தது. அவளுக்கு மிகப் பாந்தமாகவே இருந்தது. சாமி அறைக்குச் சென்றாள் .
“அம்மாடி! அந்த சாமி படமெல்லாம் ஒரு தடவை துடைச்சு வைக்கனும்மா. தூசியா இருக்கு.”
திரும்பிப் பார்த்து விஜயன் சொன்னார்.
“எல்லாமே சுத்தமா தானே இருக்கு. எதுக்கு திருப்பி துடைக்க சொல்லறாரு?” அலுத்துக் கொண்டாலும் கணவன் சொன்னதை செய்தார் மனைவி.
“மேடம் எங்க? தன்னவளை காணவில்லையே?மனம் பரபரத்தது.
“காயத்ரி! நான் தம்பிக்கு வீட்டை சுத்தி காட்டறேன். நீ போய் தூங்கு. வேலை செஞ்சு ரொம்ப களைப்பா இருக்க.”
“வித்யா வரட்டுமே.”
“ரொம்ப ட்ராபிக்கா இருக்காம் . அவ வர்றதுக்கு இன்னும் நேரம் ஆகுமாம். அவ வந்ததும் நான் உன்ன எழுப்பறேன்.”
“இல்லங்க. இப்ப என்ன தூக்கம்? நான் இந்த படங்களை எல்லாம் துடைச்சு முடிச்சுட்டு அப்புறம் படுத்துக்கறேன் .”
“சரி மா! அப்புறம் உன் இஷ்டம் .”
அமைதியாக படங்களை துடைக்க ஆரம்பித்தவர், மீண்டும் வெளியில் வந்து,
“வெற்றி! வாங்க! வாங்க! எப்ப வந்தீங்க? வித்யா எங்க ? உங்க கூட தானே வருவா?”
‘மீண்டும் அதே வா? வெற்றிக்கு ஏதோ சரி இல்லை’ என்றுத் தெரிந்தது. விஜயன் மீண்டும் சொன்னதையே சொன்னார் . பிறகு
வித்யாவின் அறைக்கு அழைத்துச் சென்றார்.
“மேடம்!” அழைத்தவனை அவள் பார்க்கவில்லை. எங்கோ வெறித்துக் கொண்டிருந்தாள்.
மான் குட்டி போல துள்ளி வரும் தன்னவளா இவள்?
விஜயன் நடந்த விவரங்களைக் கூறினார். எதையுமே வெற்றியால் நம்ப முடியவில்லை. அதிலும் ஒரே நேரத்தில் அன்னை, மகள் இருவருக்குமே மூளையில் பிரச்சனை. வேறு வேறு மாதிரி. தலையை பிடித்துக் கொண்டு தரையிலேயே அமர்ந்துக் கொண்டான் வெற்றி .
காயத்ரி அதற்குள் திரும்ப வந்து விட்டார்.
“என்னங்க ! வித்யா இன்னும் வரலையே ? ஒரு தடவை போன் பண்ணி பாக்கட்டுமா ?”
‘இப்போது என்ன சொல்லப் போகிறார்?’ திகிலுடன் அவரைப் பார்த்திருந்தான்.
” இதோ இருக்காளே! அவ வந்த போது நீதானே கதவு திறந்த? மறந்துட்டியா? அவளுக்கு ரொம்ப அசதியா இருக்காம் . அதான் தூங்க போறாளாம் . உன்கிட்ட சொல்லிட்டுதானே மாடிக்கு வந்தா? வா! அவளுக்கு ரொம்ப பசிக்குமில்ல. ஏதாவது டிபன் செஞ்சு வை . ரெடி ஆனதுக்கு அப்புறம் எழுப்பிக்கலாம்.”
இவனுக்கு மண்டை வெடித்து விடும் போல இருந்தது.
“நீங்க எப்படி சார் எல்லாத்தையும் சமாளிக்கறீங்க?”
“நான் என்ன பண்ணறது வெற்றி . இதோ இவளுக்காக அஞ்சு நிமிஷத்துக்கு ஒரு தடவை ஏதாவது காரணம் யோசிக்கணும். அதத் தவிர என்னால வேற எதையுமே செய்ய முடியல. என்ன சம்பாதிச்சு என்ன? இப்டி மகளை உசுரோட பலி குடுத்துட்டேனே?”
குலுங்கி குலுங்கி அழுதவரை எப்படி சமாதானம் செய்ய முடியும். புரியவில்லை வெற்றிக்கு.
“நான் யாருக்கும் எந்த பாவமும் பண்ணலியே வெற்றி.
என்னோட மனைவி என்னை நம்பி வந்துட்டா. ராணி போல வாழ்ந்த அவளை நான் வேலைக்காரி மாதிரி தான் வச்சிருந்தேன். அவளைத் திரும்ப ராணியாக்க நான் கொடுத்திருக்க விலை! எங்களோட சந்தோஷமான நேரங்கள் தான். வெளில இருந்து பாக்கறவங்களுக்கு எங்களோட இந்த பணமும் பகட்டும் தான் தெரியும். அதுக்கு விலையா கொடுத்துருக்கற சந்தோஷமும் சிரிப்பும் தெரியாது வெற்றி. என்னோட பெண்ணும் அதே மாதிரி கஷ்டப் போடணுமா? இங்கயும் ராணி. போகிற இடமும் ராணியா இருந்தா? ஒரு பெண்ணை பெற்ற அப்பாவா நான் யோசிச்சதுல என்ன தப்பு ?
“உங்களை கூட உங்க அப்பா கண்டிச்சு வைக்கணுன்னுதான் சொன்னேனேத் தவிர அவரு உங்கள அடிப்பாருன்னு தெரியாது. என்னை பொறுத்த வரைக்கும் உங்க இரண்டுப் பேருக்கும் அடுத்து அடுத்து சந்திப்புகள் வரக் கூடாது. அதுக்கு நீங்களாவே விலகி போய் விட வேண்டும். இவ்வளவு தாம் பா நான் நினைச்சது.”
இத்தனை நேரம் பிரம்மை பிடித்தவன் போல அமர்ந்திருந்தவன் இப்போது வாய் திறந்தான்.
“புரியுது சார்!”
“இந்த பொண்ண எப்படி எல்லாம் வளர்த்தோம் தெரியுமா? ஸ்கூல் படிக்கும்போது அவளோட பேக்கூட தூக்க விட மாட்டா காயத்ரி. எத்தனை கணமா இருந்தாலும் இவளேதான் தூக்கிட்டு வருவா. சில சமயம் ராத்திரி எல்லாம் தோள் பட்டை வலிக்கும். அதோடவே தையல் வேலையும் செய்வா காயத்ரி . எத்தனை வித விதமா புது ட்ரெஸ் போட்டு தலை அலங்காரம் பண்ணி.,
வித்யா சுலபத்துல எதையும் கேக்க மாட்டா . கேட்டா பிடிவாதம்தான். பிடிவாதம் பிடிச்சுதான் வண்டி வாங்கினா. ஆனா அவளுக்கு ஏதாவது அடிபட்டுடுன்னு பயந்து கிட்டே அவளை நான் வண்டி கூட ஓட்ட விட்டதே இல்லை. கண்ணுக்குள்ள வச்சு , அப்டி வளர்த்த என் கண்மணியை அன்னிக்கு என் கண் முன்னாடி ..
அந்த நிமிடத்தை அவரால் யோசிக்கக் கூட முடியவில்லை ..
காதல் தொடரும்…

