

KKEN-23
எப்போது மாமியார் தானி விற்கப் போகிறாள் என்று தெரிந்ததோ அந்த நேரம் வீட்டில் யாருக்கும் தெரியாமல் தப்பி விட்டாள் .அங்கே வந்தப் பேருந்தில் ஏறிக் கொண்டாள் . நல்ல வேளை பேருந்தில் பெண்களுக்கு இலவசம். உடல் முழுவதும் வியர்வையால் நனைந்திருந்தது. கண்டக்டரிடம் கேட்டு வெற்றிக்கு இருமுறை அழைத்துப் பார்த்தாள். அழைப்புப் போகவில்லை. தந்தைக்கு, தங்கைக்கு அழைக்க விருப்பம் இல்லை. எதுவாக இருந்தாலும் வெற்றியுடன் சேர்ந்து வீட்டில் சென்று நேரில் பேசிக் கொள்ளலாம். கடைசிப் பேருந்து நிலையத்தில் வண்டி நின்றது. இங்கிருந்து இன்னொரு பேருந்தில் ஏறிக் கொள்ள வேண்டும். நிறுத்தத்தில் நின்றுக் கொண்டிருந்தாள். பழைய மலருக்கு இருக்கும் பயம் இந்த புது மலருக்கு இல்லை. வாழ்க்கைதான் நம் வாழ்வில் அனைத்தையும் எளிதாக மாற்றி விடுமே. அவளுக்கு இத்தனை தைரியம் எங்கிருந்து வந்தது? இவள் மட்டுமே நின்றுக் கொண்டிருந்தாள். கையில் ஒரு ருபாய் இல்லை. போன் இல்லை . இருந்தும் இதோ நின்றுக் கொண்டிருக்கிறாள். ஆச்சர்யம் என்னவெனில் கணவன் இருந்தவரை தற்கொலை செய்துக் கொள்ளலாம் என்று பல முறைத் தோன்றியவளுக்கு இப்போது இந்த நேரம் அந்த எண்ணம் வரவில்லை.
நிச்சயம் விதி வலியதுதான்………
அங்கே இருட்டில் மறைவிடத்தில் ஏதோ ஒரு சிறு குழந்தை அழுவது போல இருந்தது. யாரோ நான்கு ரவுடிகள் தான் குழந்தையை வைத்திருந்தார்கள். பசி போலும். குழந்தை கதறிக் கொண்டிருந்தது. பார்த்தாலே பணக்கார வீட்டுக் குழந்தை என்பது தெரிந்தது. எங்கிருந்தோ கடத்தி இருப்பார்கள் போலும். வட்டமாக அமர்ந்து குடித்து கொண்டிருந்தவர்கள் அடுத்த சில நிமிடத்தில் குடி போதையில் குழந்தையை மறந்து அரட்டை அடித்துக் கொண்டிருந்தார்கள். அதுவரை பொறுமையாக மறைவிடத்தில் மறைந்து நின்றிருந்தவள் மெதுவாக குழந்தையின் வாயை மூடி தூக்கிக் கொண்டு ஓடினாள். பார்த்தவர்கள் பின் தொடர்ந்து வந்தார்கள். வேகமாக ஓடினாள். வெகு தூரம் ஓடினாலும் கடந்த சில நாட்களில் சரியாக உண்ண முடியாததால் இவளுக்கும் மயக்கம் வந்தது. திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டு ஓடியவள் விழுந்தது மதுவின் வண்டியின் முன். ட்ரைவர் சரியாக கணக்கிட்டதால் பெரிய விபத்தாக இல்லாமல் பிரேக் போட்டிருந்தார். மதுவுக்கு மலரின் முகம் நன்றாகவே மனதில் பதிந்துப் போய் இருந்தது. எளிதில் அடையாளம் கண்டுக் கொண்டாள் . இவர்கள் வண்டியை பார்த்த ரவுடிகள் வேகமாக தப்பி ஓடினார்கள்.
மற்றவர்களையும் கையோடு பிடித்து விட்டார்கள். மலர் நினைத்தது சரியே. இது கடத்தப்பட்ட குழந்தைதான். காவல் நிலையத்திற்கு வந்தவுடன் ,
“மேடம்!”
“என்ன?” மதுவின் கண் பார்வை கேட்டது.
“குழந்தைக்கு கொஞ்சம் பால் கிடைக்குமா?”
“ஏன் ஒனக்கு எதுவும் வேணாமா?”
மவுனம். இரவில் எதுவும் இருக்காது. இருவருக்கும் பாலும் பண்ணும் மட்டும் வாங்கி கொடுத்தார்கள்.
“எக்ஸ்ட்ரா இருவது ரூபா செலவு பண்ணறதுனால எனக்கு ஒன்னும் கொறஞ்சு போய்டாது.”
சொல்லிய மதுவின் முகத்தை பார்த்து நன்றி கூறியபடியே குழந்தைக்கு பாலை ஊதி ஊதி சிறிது சிறிதாக ஊட்டினாள்.
“அப்புறம் எப்படி இருக்காரு உங்க புருஷன் நல்லவரு?”
சிறிது மௌனம். “அவங்க செத்துட்டாங்க மேடம்”
“வாட்?”
“அவங்க லாரி ஓட்டிட்டு இருந்தாங்க. வழக்கம்போல குடிச்சுட்டு வண்டி ஒட்டினாங்க போல. எதிர்ல வந்த காரு மேல மோதி விபத்து ஆகிடுச்சு. நேத்து தான் தாலி அறுக்கற சடங்கு பண்ணாங்க. எங்க மாமியார் என்ன யாருக்காவது வித்து காசாக்க பார்த்தாங்க. அப்ப தப்பிச்சு போகறப்பதான் இந்த குழந்தையை பார்த்தேன்.”
“ஒனக்கு ஒரு தம்பி இருக்கான் இல்ல?”
“ஆமாங்க.! அவனுக்குத்தான் போன் போட்டு பார்த்த நம்பர் போகவே இல்ல”
“வா! வந்து கால் பண்ணிக்கோ. ஒடனே அவனை இங்க வர சொல்லு.”
இப்போதும் லைன் போகவில்லை.சார்ஜ் இல்லாமல் அனைத்து வைக்க பட்டிருந்தது.
மலருக்கு இப்போது என்ன செய்வது என்று புரியவில்லை.
“மேடம் ! ஆர் கே குரூப் ஓனர் குழந்தையை காணுன்னு கம்பளைண்ட் குடுத்துருக்காராம்”
ஒரு காவலர் வந்து சொன்னார்.
“எந்த ஸ்டேஷன்?”
“*** ஸ்டேஷன் மேடம்.”
“ஓகே! குழந்தையோட போட்டோவை பேக்ஸ் அனுப்ப சொல்லிடுங்க.”
அது ரவி வீட்டுக் குழந்தை தான் என்பது தெரிந்தது.
அடுத்த இருபது நிமிடத்தில் படபடப்புடன் வந்து நின்றான்.
கேர் டேக்கரை நம்பித்தான் விட்டிருந்தான். முதலில் இருந்தவருக்கு பதிலாக புதியதாக வந்திருந்தவள்தான் சில மாதங்களாக பார்த்துக் கொண்டிருக்கிறாள். நன்றாகவே பார்த்துக் கொண்டிருந்தாள். இப்போதுதான் தெரிந்தது அத்தனையும் நடிப்பு என்று. அவள்தான் குழந்தையை பார்க்குக்கு அழைத்துச் செல்கிறேன் என்று சொல்லி குழந்தையை இவர்களுக்கு விற்று விட்டாள் . பெரிய ஆபத்தில் இருந்து தப்பித்திருந்தாள் மீனு .
மலரோ எந்த கவலையும் இல்லாமல், குழந்தையை கொஞ்சிக் கொண்டிருந்தாள். மடியில் படுக்க வைத்து ஆட்டி இருந்ததில் மீனு அடுத்த சில நிமிடங்களிலேயே தூங்கி இருந்தாள் .
“ஓடி வந்து ரவி பார்த்தான். என் குழந்தை தான் மேடம்.” அடையாளத்திற்கு வேறு சில அத்தாட்சியங்களை வாங்கிக்கொண்டு குழந்தையைக் கொடுத்தார்கள்.
குழந்தையின் காதில் இருந்த தோட்டை பிடுங்கி எடுத்திருந்தார்கள். காது புண்ணாகி இருந்தது.
காப்பாற்றிய மலரை ரவி சந்தேகமாக பார்த்தான்.
“சார்! அவங்கள சந்தேகப்படாதீங்க. தன்னோட உயிரை பத்திக் கூட கவலைப்படாம உங்க குழந்தையை காப்பாத்தி இருக்காங்க”
கையில் இருந்த பணத்தை அவள் கையில் திணித்தான்.
“ரொம்ப நன்றிங்க”
அவன் கொடுத்த பணத்தை பார்த்தாள் மலர் . இந்த சில ஆயிரங்களில் என்ன நடக்கும்?
“இதெல்லாம் வேண்டாங்க. குழந்தையை பத்திரமா பார்த்துக்கோங்க சார்.”
‘கன்னங்கள் ஒட்டி போய் தலை கலைந்து சாயம் போன சுடிதாரில் இருந்தவள் கையில் கிடைக்கும் பணத்தை வேண்டாம் என்கிறாளே ?’ ஆச்சர்யமாக இருந்தது ரவிக்கு.
“மிஸ்டர் ரவி. நீங்க ஏன் இவர்களையே குழந்தையை பார்த்துக்க வேலைக்கு வச்சுக்க கூடாது? இவங்க வீட்டுகாரரு இப்பத்தான் இறந்து போனாரு. எனக்கும் தெரிஞ்சவங்கதான். நம்பிக்கையான ஆளுதான்.”
மதுவின் உதவியால் அவளுக்கு ஒரு நல்ல வேலைக் கிடைத்தது. கூடவே தங்குவதற்கு ஒரு பாதுகாப்பான இடமும் தான்.
சார்ஜ் போட்டு போனை உயிர்பித்ததும் வெற்றி முதலில் பார்த்தது அந்த காவல் நிலையத்தின் எண்ணைத் தான். என்னவோ ஏதோ என்று பதறி அடித்து போன் செய்தான் . மதுவே அழைப்பை ஏற்றதால் எல்லா விவரங்களையும் சொன்னாள்.
‘இந்த இரவில் எப்படி ரவிக்கு அழைப்பது? அவனுக்கு உடனே அக்காவிடம் பேச வேண்டும். எப்படி?’
ரவியின் வீட்டிற்கு வந்தவள் அங்கே இருந்த சமையல் அம்மாவிடம் இருந்தது போன் வாங்கி வெற்றிக்கு அழைத்து விவரங்களைச் சொல்லி விட்டாள் . அக்காவின் கணவனும் இல்லை. இனி அவன் யாருக்கும் பயப்பட வேண்டிய அவசியமே இல்ல.
“சரிக்கா! நாம நாளைக்கே போய் அவரு அம்மா மேல ஒரு புகார் குடுத்துடலாம்.”
“ஏண்டா! புகார் குடுக்கறதா இருந்தா அந்த போலீஸ் மேடம் கேட்டப்பவே குடுத்துருக்க மாட்டேனா? போகட்டும் விடுடா. ஒரே ஒரு ஹெல்ப் வெற்றி. நான் எங்க இருக்கேன்னு மட்டும் யாருக்கும் தெரியாம பார்த்துக்கடா”
“சொல்லனுமா அக்கா . நீ கவலைய விடு. நான் பார்த்துக்கறேன்.”
அன்றைய இரவு மீனு குட்டி தந்தையுடனேயே தூங்கி இருந்தாள். யார் யார் கையிலோ சிக்கி தவித்தவள் தன்னை அறியாம ல் தந்தையின் தோளில் படுத்து உறங்கி இருந்தாள் . அவனும் தான் நன்றாக உறங்கி இருந்தான். அலைச்சலினாலா அல்லது மகளின் தழுவளினாலா ? அவனுக்கு அந்த குழந்தையின் மீது பெரியதாக பாசம் எல்லாம் இல்லை. இது அண்ணனின் உயிரா? இந்த சந்தேகம்தான் அவனுக்கு எப்போதுமே இருக்கும். ஏனோ அந்த குழந்தையை பார்க்கும் போதெல்லாம் அண்ணியின் முகமே வந்துச் செல்லும்.
அவள் அவனை எத்தனை அசிங்கமாக நினைத்திருந்தாலும் ரவிக்கு அவள் அண்ணி என்றே மனதில் பதிந்து விட்டாள் .
இந்தியாவில் இருந்து பெண்ணை நிச்சயம் செய்து விட்டு வந்த பிறகு தந்தையின் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி. எப்படியோ ஒரு நல்ல பொண்ண பார்த்து கூட்டிட்டு வந்துட்டேன். உன்னோட ஆசைப்படியே நம்ம ஊரு பொண்ணு தான் . உன்னோட ஸ்தானத்தை யாராலும் யாருக்கும் கொடுக்க முடியாது. ஆனா நம்ம ரவிக்கு உன்னோட இடம் அவளுக்கு வந்துடும். அண்ணினா அடுத்த அம்மா தானே . இரவெல்லாம் தந்தை அன்னையிடம் பேசிக் கொண்டிருந்தார்.
“அதைக் கேட்டுக் கொண்டே ரவிக்கு அண்னினா அம்மாவா ? வர்றவங்களால் என்னோட அம்மாவோட இடத்தை பிடிக்க முடியுமா? வெறுமனே வீட்டை பார்த்துகிட்டா மட்டும் அம்மாவாக முடியுமா ?
அவன் மனதில் தோன்றிய சந்தேகங்கள் பற்றி தந்தைக்குத் தெரியாது . இருப்பினும் இவனை அழைத்து அவரேப் பேசினார்.
“சும்மா வீட்டைப் பார்த்துக்கறதுனால மட்டும் அவ உனக்கு அம்மாவாகிட முடியாதுப்பா. ஆனா அம்மாவோட பொறுப்புகளும் இருக்கு. அதுல நீ நான் எல்லாருமே அடக்கம். ஒனக்கு ஒரு விஷயம் தெரியுமா? என்னோட கடைசி சித்தப்பாவை விட எனக்கு வயசு கொஞ்சம் தான் குறைச்சல். அவரு பாடி வயத்துல இருக்கும்போது எங்க அம்மா தான் மாமியாருக்கு பிரசவம் பார்த்தாங்க. எங்க சித்தப்பாவை குளிப்பாட்டி மாய் வைச்சு சோறு கொடுத்து பீ மூத்திரம் அள்ளி எல்லாமே எங்க அம்மாதான். அவங்களுக்கு முத பிள்ளையே எங்க சித்தப்பா தான். அடுத்தது தான் நான். அவரு கூட, எங்க அம்மாவை இந்தும்மான்னு தான் கூப்பிடுவார். அந்த மாதிரி எங்க வீட்டுல மட்டுமில்லை. பல வீடுகளிலும் இருந்தது. அதுனால கூட அண்ணி அம்மாவுக்கு சமம்னு சொல்லியிருக்கலாம். எது எப்படியோ, நீ வர்றவளுக்கு அந்த அந்தஸ்து கொடுக்கணும். அவ உன்னை விட சின்ன பொண்ணுதானேன்னு நீ வா போன்னு சொல்லக் கூடாது. அண்ணி, வாங்க போங்கன்னுதான் சொல்லணும். அவ என்ன சொல்லறாளோ அதுக்கேத்தபடி கேட்டு நடக்கணும். உன்னோட படிப்பு அறிவு எல்லாம் காட்டக் கூடிய இடம் அவ இல்லை. உனக்கும் அவளுக்கு ஏதாவது சண்டை வந்தா அது நம்ம அண்ணன் வாழ்க்கையைத்தான் பாதிக்கும். உங்க அம்மா இருந்திருந்தா என்ன சொல்லுவாளோ அதைத் தான் உனக்கு இப்ப நான் சொல்லி இருக்கேன். பார்த்து கவனமா நடந்துக்கோ .”
தன்னுடையத் தந்தை தனக்கு அறிவுரைகள் வழங்கிய மாதிரி அவளுக்கு யாரவது அறிவுரை சொல்லி இருந்திருக்கலாம். அப்படியே சொல்வதானாலும் என்ன சொல்ல முடியும்? ‘உன்னோட புருஷன் கூட மட்டும் இரு. கொழுந்தனன் உனக்கு மகன் போல என்றா? அல்லது அவனை தவறாக பார்க்காதே என்றா? ‘நினைத்தாலே சங்கடமாகத் தான் இருக்கிறது. அவள் மனதில் வந்த அசிங்கத்திற்கு யார் பொறுப்பாக முடியும்? அது சரி குழந்தைக்கு பால் கூட கொடுக்காமல் கொண்டு வந்து கொடுத்த பெற்றவர்கள் மகளுக்கு மட்டும் எப்படி அறிவுரை கூற முடியும்? ரவியின் மனதில் எப்போதுமே ஒட்டிக் கொண்டிருக்கும் ஒரு விதமான அருவருப்பான எண்ணம் தான் இது.
ரவியின் எண்ணங்கள் மாறும். அவனுக்கும் ..
காதல் வரும் ….

