

KKEN-25
அவளிடம் பழகத் தொடங்கிய நேரம் அது.
அவள் காதில் வைத்துக் கொண்டு பாடல்கள் கேட்பதற்குப் பதில் இப்போதெல்லாம் ஸ்பீக்கரில் போட்டு கேட்க ஆரம்பித்திருந்தாள்.
“யாரோ மனதிலே” பாம்பே ஜெயஸ்ரீ குரலில் பாடல் மயக்கியது.
“என்ன மேடம் உங்க மனசில யாரு ?”
“யாருமில்லையே என் கேக்கறீங்க?”
“இல்ல தினமும் இவ்ளோ காதல் பாட்டா கேக்கறீங்களே,அதான் யாரு அந்த அதிர்ஷ்டசாலின்னு தெரிஞ்சுக்கத்தான்.”
“இது எல்லாம் எங்க அம்மாவோட கலெக்ஷன்ஸ். எங்க அம்மாவோட ஐ டி ல ஓபன் பண்ணி கேட்டுகிட்டு இருக்கேன்.”
“உங்க அம்மாவுக்கு நல்ல ரசனை மேடம் ”
“ஆமா ! அவங்களுக்கு பாட்டு பாடறது, உச்சரிப்பு, இசை, சொல் எல்லாமே நல்லா இருக்கனுன்னு தேடித் தேடி தான் லிஸ்ட்ல சேர்த்து வைப்பாங்க. ”
“அதுனாலதான் எல்லாமே இவ்ளோ நல்ல இருக்கு . ஆனா ஒன்னு மேடம். பாட்டு எல்லாம் எவ்ளோ நல்ல இருந்தாலும் கேக்கறதுக்கு நேரமும் நல்ல மன நிலைமையும் வேணும் மேடம். அது இல்லன்னா எல்லாமே வேஸ்ட் தான்.”
“அப்படி எதுக்கு நினைக்கணும் வெற்றி ?
மனசு குஷியா இருந்தா, “செல்பி புள்ளை”,துக்கமா இருந்தா, “வாழ்க்கையே அலை போலே”, தூக்கமா இருந்தா. “தூங்காதே தம்பி தூங்காதே” ஒவ்வொரு சந்தர்ப்பத்துக்கு ஏத்த மாதிரி அந்த காலத்துலேர்ந்து இப்ப வரைக்கும் ஆயிரம் பாடல்கள் இருக்கு வெற்றி .
“அதுவும் சரி தான் மேடம். ”
“வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை” பழைய சந்திரபாபு போல அவள் குரல் மாற்றி பாடவும்,
இவனும்,
“நானொரு முட்டாளுங்க. நல்லா படிச்சவங்க நாலு பேரு சொன்னாங்க.” என்றான்
“நீங்க ஒன்னும் முட்டாள் எல்லாம் இல்ல வெற்றி”
இவன் மீது காதல் வருவதற்கு முன்பே இவனுக்காக இவனிடமே வக்காலத்து வாங்கியவள் . அவளே தான் இவனை தாலி கட்டிய கணவனை வீட்டை விட்டும் வெளியில் அனுப்பியவள் .
அன்றுப் பேச விஷயங்கள் ஆயிரம், கனவுகள் ஆயிரம், பாடல்களும் ஆயிரம். இவள் இல்லாத இந்த காலத்தில் வெற்றி பாடல்கள் கேட்பதே இல்லை.
அப்படி என்றால் வித்யா? இவனை விரட்டி விட்டு அவள் மட்டும் என்ன சந்தோஷமாகவே இருக்க முடியும்? இப்போதெல்லாம் அவளும் தான் பாடல்கல் கேட்பதே இல்லை. காயத்ரியும் கேட்பதில்லை. மகளுக்கு ரைம்ஸ் கூட போடுவது இல்லை. எந்த பாடல்களும் வித்யாவின் காதில் கேட்டு விடக் கூடாது. கதைப் பொத்திக் கொண்டு கதற ஆரம்பித்து விடுவாள்.
வெற்றியுடன் இருந்த நாட்கள், அவனுடன் அந்தக்ஷரி விளையாடிது எல்லாம் மூளையில் வரிசை கட்டிக் கொண்டு வந்து நிற்கிறதே . அவனை வீட்டை விட்டு வெளியில் துரத்தியது போல அவனின் நினைவுகளை துரத்த முடியவில்லையே! எத்தனை கதறினாலும்..
வெற்றி இரத்தம் கொடுத்த அவர்தான் இன்று அவனைப் பெரிய வெற்றியாளனாகக் கொண்டு வரப் போகிறார். அவரே இவனுக்கு தனியாக ஒரு சூப்பர் மார்க்கெட் வைத்து கொடுக்கப் போகிறார். பணம், கடை, பெயர் அனைத்தும் அவருடையது. கவனிப்பும் உழைப்பும் வெற்றியினுடையது. வரும் லாபத்தில் ஒரு பகுதி வெற்றிக்கு. அவர் மகளுக்குத் திருமணம் ஆகி இருந்தது. இதற்கு மேல் வெற்றி அந்த வீட்டில் இருக்கக் கூடாது. புரிந்து கொண்டு தானே நகர்ந்து கொண்டான் வெற்றி. ஒரு பெரிய அடுக்ககத்தில் தான் அவர்கள் கடை வைக்கப் போகிறார்கள். வெற்றி அங்கேயே பார்த்து ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துக் கொண்டான்.
அவன் வீட்டிற்கு எதிர் வீட்டில் யார் இருக்கிறார்கள் என்பது கூட தெரியாது. ஏனோ அனைவருமே கதவை சாத்தியே வைத்திருக்கின்றனர். சற்று தூரத்தில் நின்று பார்த்தால் குடும்பங்கள் வாழும் இடம் போல் அல்லாமல் ஏதோ பெரிய நட்சத்திர தங்கும் விடுதிக்கு வந்தது போலவே இருக்கும்.
ஊசி விழும் சத்தம் கூட அத்தனைத் துல்லியமாக கேட்டு விடும். இவன் இருப்பது பன்னிரண்டாவது தளம். இன்னும் கடை திறக்கவில்லை. இன்விடேஷன் அடிக்க வேண்டும். இதே அடுக்ககத்தில் இருப்பவர்களுக்கு கொடுக்க பரிசுப் பொருட்கள் போட்ட பை தயார் செய்ய வேண்டும். கடையில் வேலை செய்ய ஆட்கள் ரெடி. இன்னும் டெலிவெரிக்கு ஆட்கள் எடுக்க வேண்டும். ஏஜெண்சியிடம் சொல்ல வேண்டும். பெயர் பலகை சரிப் பார்க்க வேண்டும் . அடுத்து வெளியில் டெலிவரி கொடுக்க ஆர்மபிக்கும்போது சில எலெக்ட்ரிக் வாகனங்கள் வாங்க வேண்டி வருமா ? யோசித்துக் கொண்டே லிப்டை திறந்தான். தவறுதலாக 12க்கு பதில் 11ஐ அமுக்கி இருந்தான் போலும். ஒரே தளம் தானே. மேல் தளத்திற்கு படி ஏறி வந்து கொண்டிருந்தான். அப்போது ஒரு பெண் குழந்தை தத்தி தத்தி படிகளில் இறங்கி கொண்டிருந்தது. ஒன்னரை வயது முடிந்திருக்கும். இளங்கன்று பயம் அறியாது. படியின் கைப்பிடி அடியில் முழுவதுமாக மூடி இருக்கவில்லை. அலங்கார கம்பிகள் வைத்திருந்தார்கள். பெரியவர்களுக்கு அது ஓகே தான் என்றாலும் குழந்தைகளுக்கு ஆபத்துதான். பார்த்தவனுக்கு அதிர்ச்சி. குழந்தை அடுத்த அடி எடுத்து வைப்பதற்குள் தாவி சென்று தூக்கி இருந்தான்.
“அப்பா ! சிரித்துக் கொண்டே அவன் கழுத்தை கட்டிக் கொண்டாள் குட்டி தேவதை. அப்போதுதான் மூச்சு வந்தது என்றாலும் அவளின் பிள்ளை மொழியும் மேனி வாசமும் அப்பப்பா சொல்ல முடியாதது. யார் வீட்டுக் குழந்தை யோசிக்கும்போதே யாரோ ஒரு பெண் வந்தாள் . குழந்தையை பார்த்துக் கொள்பவள்.
“யார் வீட்டுக்கு வந்துருருக்கீங்க?”
இவன் கேள்வி அவளுக்கு புரியவில்லை. ஏதோ வட கிழக்கு மாநிலத்தில் இருந்து வந்திருப்பாள் போலும். வீட்டை அடையாளம் காட்டினாள்.
வெற்றிக்கு குழந்தையை விட மனமில்லை. தன் வீட்டிற்கு எதிர் வீடு தான். அங்கே சென்றான். ‘வந்திருப்பது யாராக இருக்கும்? தனது யூகம் சரியாக இருக்குமா?’
ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும்போதும் படபடப்பு அதிகமாகிக் கொண்டே போனது.
‘இது என் குழந்தையா? தன்னவளின் உயிரில் வந்த கண்மணியா?’
ஆம்! அவன் நினைத்தது சரியே. அங்கே ஹவுஸ் ஓனரிடம் பேசிக் கொண்டிருந்தது விஜயனும் காயத்ரியும் தான்.
“ஆமா! ஆமா! அதுக்குத்தான் நானே நோ ப்ரோகர்ஸ்ல விளம்பரம் கொடுத்துட்டேன்” .
ஹவுஸ் ஓனர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே இவன் லேசாக கதவை தட்டினான்.
நெடுநெடுவென உயரத்துடன் கம்பீரமாக மிடுக்குடன் நின்றிருந்த வெற்றியைப் பார்த்து கேட்டார்.
“நீங்க ?” புருவத்தை நெளித்தார் ஹவுஸ் ஓனர் .
பெரியவர்களுக்கு வாயில் வார்த்தை வரவில்லை. அதிர்ச்சியில் அவர்களுக்கு வாய் ஒட்டிக் கொண்டதோ? ஹவுஸ் ஓனர் எதிரில் வெற்றி எதையும் காட்டிக் கொள்ள விரும்பவில்லை.
“நான் இங்கதான் இந்த வீடு. குழந்தை ? ”
“ஓ ! நீங்களும் புதுசா வந்துருக்கிறீங்க இல்ல? நீங்கதானே இங்க அந்த வெல்கம் சூப்பர்மார்கெட் ஓபன் பண்ண போறீங்க? ” எதிர் வீட்டு ஓனர் கேட்க,
“எஸ்!” சொன்னவனின் குரல் கம்பீரமாக இருந்தது.
“நைஸ் டு மீட் யூ !”இருவரும் கை குலுக்கிக் கொண்டார்கள். கூடவே அவன் விஜயனுக்கும் கை நீட்டினான். வித்யாவின் அன்னைக்கு வணக்கம் சொன்னான். அவர்தான் ஏதோ பேசிக் கொண்டே இருந்தார். மற்றவர்களுக்கு வாயில் இருந்து வார்த்தை இன்னும் வரவில்லை. இவன் கண்கள் மட்டும் தன்னவள் எங்கே என்று தேடிக் கொண்டிருந்தது. இருப்பினும் அலைபாயும் தன்னுடைய கண்களை கட்டுப் படுத்திக் கொண்டு எதிரில் இருப்பவர்களிடம் கவனம் செலுத்தினான்.
வேலை செய்யும் பெண் குழந்தையை வாங்கி கொள்ள போனாள் .
“பரவால்ல இருக்கட்டும்” வெற்றி தடுத்து விட்டான். குழந்தை தந்தையின் கழுத்தை கட்டிக் கொண்டு தலையை சாய்ப்பதும், நிமிர்வதும் வேடிக்கை பார்ப்பதுமாக விளையாடிக் கொண்டிருந்தாள். அவளின் கன்னம் மிருதுவா இல்லை, குட்டி உதடுகள் மிருதுவானதா ? அவளின் விளையாட்டு சில நிமிடங்கள் தான். அடுத்த சில நிமிடத்திலேயே கையில் இருந்து நழுவி அங்கும் இங்கும் ஓடினாள். அடுத்த இரண்டாவது நிமிடம் “அப்பா! தூக்கு” சொல்ல வரவில்லை அப்பா மட்டும் சொல்லி தூக்க சொல்லி சைகைக் காண்பித்தாள். குட்டியின் அளவுக்கு ஏற்ப குனிந்து அவளைத் தூக்குவது அவனுக்கு அத்த்னை பிடித்தது. அவள் அப்பா கூப்பிடும்போது மனம் கொள்ளை போனது.
வீடு எப்படி இருந்தாலும் இனி கவலை இல்லை.அவர்கள் இங்கேதான் இருக்க போகிறார்கள். வீட்டிற்காக இல்லை என்றாலும் வெற்றிக்காக. பெரியவர்கள் முடிவெடுத்து விட்டார்கள். தன்னுடைய மகளுக்கு நல்லது நடக்காதா என்ற ஏக்கமா?
“வெள்ளிக்கிழமை வந்து பால் காய்ச்சிக்கறோம்”இது விஜயன் .
“அப்ப டாகுமெண்ட்ஸ் ரெடி பண்ணிட்டு நான் உங்களுக்கு கால் பண்ணறேன்.விடை பெற்றுக் கொண்டு ஹவுஸ் ஓனர் கிளம்பி விட்டார் .
அவர்களை வெற்றி தன் இல்லத்திற்கு அழைத்தான்.
வீட்டில் சாமான் எதுவும் இல்லை. நான்கு பிளாஸ்டிக் சேர் இருந்தது. எல்லா அறைகளிலும் ,மின் விசிறி இருந்தது.
“வாங்க! உக்காருங்க டீ போடறேன்.”
பிரிஜ்ஜில் இருந்து பால் எடுத்து டீ போட்டான். வேலை செய்யும் பெண்ணிற்கும் ஒரு கப்பை நீட்டினான் . அவர்கள் குடித்ததும் டம்ளரை வாங்கி மகளுக்கு ஆத்திஆத்தி ஊதி ஊதி ஹார்லிக்ஸ் ஊட்டினான்.
“அவளை நான் பார்த்துக்கறேன் ”
சொல்ல வந்த காயத்ரியை விஜயன் தடுத்துவிட்டார். காயத்ரியை விடவும் அவர் தானே வெற்றியைப் பற்றி நன்கு அறிந்திருந்தவர் .ஏன் வித்யாவை விடவும் அவருக்கு வெற்றியை பற்றி நன்றாகவேத் தெரியும். அவன் தன் மகள் மீது வைத்திருக்கும் காதலைப் பற்றியும் தெரியும். அவர் மகள் மேல் அவன் வைத்திருக்கும் அன்பை பற்றியும் அறிந்திருந்தவர் . குழந்தையை கையில் வாங்கியது முதல் முழுக்க முழுக்க அவளை பார்த்துக் கொண்டவன் அல்லவா? அதிலும் பிறந்த சில நாட்களில் கையில் இருந்த அந்த குட்டி குட்டி நகத்தை எத்தனை பாந்தமாக எடுப்பான்? நினைத்தவருக்கு கண் கலங்கியது.
காயத்ரி வெற்றியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள். இது ஏதோ கடவுளின் செயல்தான் அவள் நிச்சயம் நம்பினாள். இனியாவது தன் மகளுக்கு நல் வாழ்வு வருமா? மனதில் ஏக்கம் வந்தது.
“எப்படி இருக்கீங்க வெற்றி?”
“நல்லா இருக்கேன் மேடம்”
“வேற கல்யாணம் பண்ணிக்கலையா?”
“நீங்க என்னை பார்த்து இப்டி கேக்கறீங்களே?”
“இன்னும் எத்தனை நாளைக்கு இப்டியே ஓட்ட முடியும் வெற்றி?
“உயிரு போச்சுன்னா வேற இன்னொன்னு வாங்க முடியுமா மேடம் ?”
பூவுக்கு வலித்து விடுமோ ? குழந்தையின் முகத்தை கர்சீப்பால் மிக மெதுவாக துடைத்தான். அவன் எப்போதுமே அப்படிதான். அவன் இல்லை என்றால் வித்யா இருந்த நிலையில் அவளை விஜயனால் மட்டும் மீட்டிருக்க முடியாது.
“மேடம் எப்படி இருக்காங்க?”
“அப்டியேத்தான் இருக்கா . யாருகிட்டயும் பேசறது கூட இல்ல. சாட்டர் பாக்ஸ் ஸ்விட்ச் ஆப் பண்ணுன்னு சொல்லிகிட்டே இருப்பேன். இப்ப? நான் உங்கள பத்தி அவகிட்ட முதன் முதல்ல பேசினப்ப., “ரொம்ப யோசிக்காத. போய் உன் பொண்ணுக்கு பொடிமாஸ் செஞ்சு வைன்னு சொன்னா . இப்ப? அம்மா! பசிக்குதுன்னு கூட சொல்ல மாட்டேங்கறா ” சொல்லிய காயத்ரி குலுங்கி குலுங்கி அழுதார்.
ஜன்னல் வழியே வெறித்துக் கொண்டிருந்த தந்தைக்கும் கண்ணீர் வழிந்து கொண்டுதான் இருந்தது.
காதல் தொடரும் ….

