

டிவியில் லோகல் சேனலில்
லைவ் ரிலே செய்துகொண்டிருந்தார்கள்.
அதைப் பார்த்துப் பார்த்து
அடக்கமுடியாமல் சிரித்தபடியே இருந்தாள்
முத்தம்மாள்.
வேலை முடிந்து
வீட்டுக்குள் நுழைந்தான்
மகன் சுப்பையா.
எரிச்சலுடன்
டிவியை ஆப் செய்தான்.
ஆனாலும்
அம்மா முத்தம்மாளின் சிரிப்பு
அடங்கவில்லை.
“அப்படி என்னத்த
டிவில காணாதத கண்டுட்ட?”
என்று குரலை உயர்த்தினான்
சுப்பையா.
“டிவில
உன் பொண்டாட்டிய பார்த்தேன்.
சந்தோஷமா இருந்துச்சு.
அதான் சிரிச்சேன்.”
என்றார் முத்தம்மாள்.
முத்தம்மாள் ஏன் சிரித்தாள்?
மருமகள் படித்தவள்.
ஆனால் வேலைக்குப் போவதில்லை.
காரணம்
மகன் சுப்பையா.
தன் மனைவியை
பத்திரமாகப் பார்த்துக்கொள்ளவே
வேலைக்கு அனுப்பவில்லை.
அதனால்
அவள் ஓவர் அட்வாண்டேஜ் எடுத்துக்கொண்டு,
வீட்டில்
பாத்திரம் கழுவுவதில்லை,
சமையல் செய்வதில்லை,
துணி துவைப்பதில்லை,
துவைத்த துணிகளை
மடித்தும்கூட வைப்பதில்லை.
நடுத்தரக் குடும்பம் என்றாலும்
அதற்கும்கூட வேலைக்கு ஆள் வைத்துவிட்டான்
சுப்பையா.
முத்தம்மாளுக்கோ
மகனுடைய இந்த நடவடிக்கையும்,
ரம்யாவுக்கு ஓவராக செல்லம் கொடுப்பதும்
பிடிக்கவில்லை.
ஒரு குழந்தையை
எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.
அதற்கு இன்னும் வழி பிறக்கவில்லை.
இந்த நேரத்தில்தான்
தேர்தல் வந்தது.
ரம்யா
அஜய் ரசிகை.
ரம்யா நடிகர் அஜய்யை ஒருதலையாக
காதலிப்பது திருமணத்துக்கு முன்பே
சுப்பையாவுக்கு தெரியும்.
அக்கம் பக்கத்திலுள்ள
எல்லாருக்கும் தெரியும்.
அவளைப் போலவே
இளம் குடும்பத்துப் பெண்கள்
நேரம் கிடைக்கும் போது
அஜய்யைப் புகழ்ந்து பேசுவார்கள்.
“ஆஹா… ஓஹோ…”
அதைக் கேட்டு
சகிக்க முடியாமல் இருந்தாள்
முத்தம்மாள்.
ரம்யா
பார்ப்பதற்கு லட்சணமாகவும்
ஸ்டைலிஷாகவும் இருப்பாள்.
அஜய் கட்சிக்கு
ஆள் கிடைக்காமல்
ரம்யாவையே வேட்பாளர் ஆக்கிவிட்டார்கள்.
அன்றிலிருந்து
ரம்யா சுறுசுறுப்பாகி விட்டாள்.
கழுத்தில் துண்டைப் போட்டுக்கொண்டு
வீடு வீடாக ஓட்டு கேட்பதும்,
சில நேரங்களில்
மூதாட்டிகளின் காலில் விழுவதும்கூட நடந்தது.
இதையெல்லாம்
லோகல் சேனலில்
லைவாக காட்டினார்கள்.
அதைப் பார்த்துத்தான்
சிரித்தாள் முத்தம்மாள்.
வீட்டில்
ஒரு துரும்பைக்கூட
கிள்ளிப் போடாத ரம்யா,
மக்கள் மத்தியில்
மைக் பிடித்து,
“நான் மக்களுக்காக உழைப்பேன்.
உங்கள் வீட்டுக்கு ஒரு கஷ்டம் என்றால்
ஓடோடி வருவேன்.
எனக்கு வாக்களியுங்கள்.”
என்று கெஞ்சி கேட்கிறாள்.
கையெடுத்து கும்பிடுவது,
பிறர் காலில் விழுவது,
நடந்து சென்று
வாக்கு சேகரிப்பது…
இவை எல்லாமே
உழைப்புதானே?
ஏதோ ஒருவிதத்தில்
மருமகள் உழைக்கிறாள் என்பதால்,
சந்தோஷம் தாங்காமல்
சிரித்தாள் முத்தம்மாள்.
தேர்தலில் நிற்பதற்கு
சுப்பையாவின் அனுமதியைக் கூட
கேட்கவில்லை ரம்யா.
“நான் சொன்னா
புருஷன் கேட்பான்”
என்ற தைரியம்.
ஆனாலும்
சுப்பையா
அதை ரசிக்கவில்லை.
நேரடியாக
எதிர்க்கவும் இல்லை.
இரவு
பத்து மணியைத் தாண்டியது.
மூச்சிறைக்க
வீட்டுக்கு வந்தாள் ரம்யா.
கோடை காலம்.
வியர்வையில் நனைந்திருந்தாள்.
“ஓட்டு கேட்கிறதுக்கு
இம்புட்டு கஷ்டப்படனும்னு
மொதல்லயே தெரியாம போச்சே.
நான் கும்பிட்டா
பதிலுக்கு கும்பிட மாட்டேங்கிறாங்க.
நான் சிரிச்சா
சிரிக்க மாட்டேங்கிறாங்க.
இவங்கள்லாம்
எனக்கு ஓட்டு போடுவாங்களா
மாட்டாங்களான்னு
எதுவுமே தெரியல.
ஆனாலும்
கும்பிட்டு தொலைய வேண்டியதா இருக்கு.
அஜய் சி.எம். ஆகணும்னா
இதெல்லாம் பண்ணணும்.”
என்று புலம்பினாள்.
அதை
சுப்பையாவும்
முத்தம்மாளும்
உள்ளுக்குள் சிரித்தபடி கேட்டனர்.
முத்தம்மாள்
மருமகளை நெருங்கி,
“ரம்யா கண்ணு…
ரொம்ப களைச்சுப் போயிருக்க.
காபி போட்டு தரவா?”
என்று கேட்டாள்.
“இப்ப நான்
காபி கேட்டேனா?”
என்று எரிந்து விழுந்தாள்
ரம்யா.
முத்தம்மாளுக்கோ
யார் யார் காலிலோ விழுகிறாள்,
யார் யாரையோ பார்த்து சிரிக்கிறாள்,
வீட்டில்
எனக்கும் ஒரு ஓட்டு இருக்கிறது
என்பது தெரியாமல்
கோப முகம் காட்டுகிறாளே…
என்று நினைத்து,
“அடி போடி…
நீயும் உன் அரசியலும்…”
என்று முணுமுணுத்தபடி
ஹாலுக்கு சென்று
பாயை விரித்து படுத்துக்கொண்டாள்.
முத்தம்மாள் கனவில்,
தேர்தல் முடிவில்
ரம்யா
டெபாசிட் கூட வாங்காமல்
தோற்றுவிட்டதாக
அதே லோகல் சேனலில் செய்தி.
கத்தி கூப்பாடு போட்டாள்
ரம்யா.
கனவிலும்
சிரித்தாள்
முத்தம்மாள்.

