
தழல் 27:
அந்த மருத்துவமனையின் வாசலை நிறைத்தபடி நின்றிருந்தனர் உள்ளூர் பத்திரிக்கையாளர்களும் தொலைக்காட்சி நிருபர்களும். ஆராவை இங்குக் கொண்டு வந்து சேர்த்து இன்னும் அரைமணி நேரத்தைக் கூட கடந்திருக்கவில்லை. ஏன் பர்வதமும் ராஜனுமே இன்னும் அங்கு வந்து சேர்ந்திருக்கவில்லை. அதற்குள் எப்படி விசயம் வெளியே கசிந்தது என்பது வள்ளியம்மைக்கே குழப்பம் தான்.
“மேம்…” என்றவன் குரல் தயங்கி ஒலித்தது. ஆழ்ந்த சிந்தனையில் இருந்த வள்ளியம்மை தலையை மட்டும் நிமிர்த்தி என்னவென்பதைப் போலப் பார்த்தார்.
“ப்ரஸ் பீப்பிள் களைஞ்சுப் போற மாதிரி தெரியல மேம்… பெரிய இடத்து விசயம் வேற… நாம நம்ம பக்க கிளாரிபிகேஷன் குடுக்கனுமில்ல மேம்… இல்ல நமக்கு தான் தலைவலி…” என்றான் தர்மன்.
“பச்… அவங்கள கூட களைச்சு அனுப்ப முடியாம என்ன போலீஸ் மேன் நீ..? நீ எப்படி கலவரத்த எல்லாம் அடக்குவ… ஹான்..?” என்றவர் குரலில் கோபம் தெரித்தது.
“இல்ல மேம்… அது வந்து…” என பாவமாய் விழித்தபடி நின்றான் அவன்.
“வந்து போயி எல்லாம் இல்ல… இன்னும் ஐஞ்சு நிமிஷம் உனக்கு டைம்… ஒரு பய இங்க நிக்க கூடாது… மீறி எவனாவது நின்னான்…” என விரலை நீட்டி எச்சரித்தவர், “இன்னைக்கு நம்ம கூட வந்த எல்லாரையும் உடனே வர சொல்லு… கோ… பாஸ்ட்…” என்றார் கட்டளையாய்.
அடுத்த பத்தாவது நிமிடம் அவருடன் சென்ற அறுவரும் அங்கே நின்றிருந்தனர். “ப்ரஸுக்கு நீயூஸ் எப்படி போச்சு…” என்றார் வள்ளியம்மை உறுமும் குரலில்.
அமைதிமாக நின்றிருந்த அறுவரின் விழிகளிலும் பயத்தின் சாயல் அப்பட்டமாய் தெரிந்தது. “தர்மா.. இன்னும் முப்பது செகண்ட் டைம்… யாருனு சொல்லலை… நடக்கற எதுக்கும் நான் பொறுப்பில்லை…” அவரின் உறுமலில் சட்டென்று ஒரு அடி முன்னால் வந்திருந்தார் ஒருவர். அவரின் பயத்தில் காலெல்லாம் ஆட்டம் கண்டு விட்டிருந்தது அவருக்கு.
“மேடம் சத்தியமா ப்ரஸுக்கு நீயூஸ் குடுக்கணும்னு சொல்லலை மேடம்… கூட இருந்தவர்கிட்ட சாதாரணமா சொன்ன விசயம் மேடம்… அது இந்த அளவுக்கு ஸ்ப்ரட் ஆகும்னு நினைக்கல மேடம்…” என்றவர் குரலில் உதறல் இருந்தது.
அடுத்த நிமிடம் கன்னத்தை பற்றியபடியே தரையில் கிடந்தார் அவர். “யோவ் என்னைய்யா நினைக்கல நீ… இந்த மாதிரி கேஸ் எவ்வளவு கான்பிஷன்சியல்… நீ பாட்டுக்கு விக்டிமோட டீடையில் எல்லாத்தையும் குடுத்துட்டு நினைக்கல காய வைக்கலனு கதையா சொல்லிட்டு இருக்க… நாளைக்கு உன் பொண்ணுக்கே நடந்தாலும் இப்படிதான் கத சொல்லிட்டு வந்து நிப்பீயா நீ..?” வள்ளியம்மையின் குரலில் தெரித்த ரௌத்திரத்தில் அவரின் உடலெல்லாம் நடுங்கிக் கொண்டிருந்தது.
“நம்பிக்கையானவனு உன்னையெல்லாம் கூட கூட்டிடுட்டு போனேன் பாரு… என்ன சொல்லனும்… இனிமே தப்பி தவறிக்கூட என் கண்ணு முன்னாடி வந்துடாத… வந்த…” என விரல் நீட்டி எச்சரித்தவர், “கெட் லாஸ்ட்…” என்றபடியே விறுவிறுவென திரும்பி நடக்க தொடங்கி இருந்தார்.
ராஜனும் பர்வதமும் மருத்துவமனை வந்து சேர்ந்திருந்தனர். எத்தனை கட்டுப்படுத்தியும் அவர்களை மீறிக் கொண்டு கண்ணீர் வழிந்தது.
ராஜன் வெகுவாய் தளர்ந்துப் போயிருந்தார். நேற்று உடுத்தியிருந்த அதே உடையில், முடி கலைந்து, உயிர்பற்ற விழிகளும் நிலைகுத்திய பார்வையுமாய் நடந்து வந்தவரை பார்க்கவே பரிதாபமாக இருந்தது.
“ரொம்ப தேங்க்ஸ் மேடம்… இந்த உதவியை ஜென்மத்துக்கும் மறக்க மாட்டேன்…” என்றார் பர்வதம் தான் வள்ளியம்மையை பார்த்ததும் தன்னை தேற்றிக் கொண்டவராய்.
“தைரியமா இருங்க பர்வதம்… பொண்ணுக்கு நம்பிக்கை குடுங்க… இந்த நேரத்துல நீங்க உடைஞ்சுப் போய்ட்டா… அவள மீட்டேக் கொண்டு வர முடியாது…” என்றார் ஆறுதலாய் அவரின் தோளில் தட்டிக் கொடுத்தபடியே வள்ளியம்மை.
சட்டென்று அவரின் தோளில் சாய்ந்து வெடித்து அழுதவரை அமைதியாய் அணைத்துக் கொண்டார் அவர். “என்னனு மேடம் நான் தைரியமா இருக்க… எப்படி மேடம் என்னால தைரியமா இருக்க முடியும்… இந்த நிலைமையில எங் பொண்ண பாத்தா செத்து போயிட மாட்டனா மேடம்… அவ தான் மேடம் எங்க உலகமே… என் பொண்ணுக்கு நடந்தா கால் வலிக்கும்னு எங்க போனாலும் தோள் வச்சுட்டே வருவாரு மேடம்… அவள இந்த நிலமையில எப்படி மேடம் பாப்போம்… எங்க சுட்டுப்பாளோனு ஒரு காபி கூட போட சொன்னதில்ல மேடம்… அப்படி பாத்து பாத்து பூ மாதிரி வளத்தது இப்படி பாக்கதானா..? நான் என்னனு மேடம் என் பொண்ணுக்கு நம்பிக்கை குடுப்பேன்… என்னனு அவள இதுல இருந்து மீட்டுக் கொண்டு வருவேன்..? கள்ளம் கபடமே தெரியாத பொண்ணு மேடம் அவ… யார் என்ன சொன்னாலும் நம்புவா..? இனிமேல் அவளால யாரையாவது நம்ப முடியுமா..? அந்த நம்பிக்கைய எப்படி மேடம் என்னால குடுக்க முடியும்..?” என்றவரின் தொடர்ந்த கதறலில் அங்கிருத்த அனைவருமே கலங்கிப் போயினர். அத்தனையும் ஒரு இயலாமையான பார்வையுடன் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த ராஜன் வாய் திறந்து ஒரு வார்த்தை உதிர்க்கவில்லை. அவரை தனித்து கவனிக்கும் நிலையிலும் அங்கு யாருமில்லை.
அவருக்கு பக்கத்து இருக்கையில் அமர்ந்த பர்வதத்தின் கதறல் நிற்கவேயில்லை. ஆராவை பார்க்கலாம் என்றதும் பர்வதம் மட்டும் இரண்டு முறை சென்றுப் பார்த்து வந்தார். ராஜனையும் அழைத்ததற்கு மறுப்பாய் தலையை மட்டும் அசைத்தவரின் விழிகளில் இருந்து நிற்காமல் கண்ணீர் மட்டும் பெருகியது. அதற்குமேல் பர்வதமும் வற்புறுத்தவில்லை அவரை.
அன்று மாலை போல தான் கண் விழித்து எழுந்தாள். “பெசண்ட் முழிச்சுட்டாங்க… பாக்கறவங்க வாங்க…” என்று அறிவிப்பாய் சொல்லிவிட்டு சென்றார் செவிலியர் ஒருவர்.
அழுது அழுது புலம்பி தீர்த்து மகளுக்காவே தன்னை ஒரளவு தேற்றிக் கொண்டிருந்தார் பர்வதம். அழுந்த கண்களை துடைத்துக் கொண்டு, கணவரை நிமிர்ந்துப் பார்த்தார். ‘என்னால் என் மகளை இப்படி பார்க்கவே முடியாது என்ற மன்றாடல்… என்னை கூப்பிட்டு விடாதேயேன்…’ என்ற மன்றாடல் இருந்தது அந்த விழிகளில். அவரை கட்டாயபடுத்த விரும்பாமல் பர்வதம் மட்டும் உள்ளே சென்றார்.
நடந்த எதைப்பற்றியும் மகளிடம் தூண்டி துருவவில்லை அவர். அமைதியாய் அவளின் அருகில் அமர்ந்துக் கொண்டதை தவிர வேறெதும் செய்யவில்லை. செய்யவும் தோன்றவில்லை அவருக்கு.
இடையில் ஒருமுறை வள்ளியம்மை வந்து பார்த்துவிட்டு சென்றிருந்தார். ஆராவிற்கு அவரை அடையாளம் தெரிந்திருந்தது. அவரைப் பார்த்த நொடி இருண்டுக் கிடந்த அவளின் விழிகளில் கொஞ்சமாய் ஏதோ ஒளிர்ந்தது. அதில் கடலளவு நன்றியுணர்வு தெரிந்தது. அமைதியாய் அவளின் தலை கோதியவர் சிறு நம்பிக்கையூட்டும் புன்னகையுடன் எழுந்து வந்து விட்டிருந்தார்.
மறுநாள் மாலை வரை ஆராவை மருத்துவமனையில் தான் வைத்திருந்தனர். அதுவரையுமே சிலையென அதே இடத்தில் தான் அமர்ந்தாருந்தார் ராஜன். ஆராவுக்கு அதிகமாய் தந்தையை தேடியதென்றாலும் அவரை நேர்க் கொண்டு பார்க்கும் துணிவு வரவில்லை. ஆண்களை கண்டாலே ஒரு மெல்லிய நடுக்கம் ஒடியது அவளின் தேகத்தில். அதைக் கண்டுக் கொண்ட பர்வதமும் ராஜனை அழைக்கவில்லை.
வள்ளியம்மையே வந்து அவர்களை வீட்டில் விட்டார். அதற்குள் தொலைகாட்சி செய்திதாள்கள் வழியாக விஷயம் ஊர் எங்கும் பரவி இருந்தது. ஆராவின் புகைப்படத்தையும் பெயரையும் தவிர அத்தனை விபரங்களையும் செய்தியில் ஒளிபரப்பு இருந்தார்கள். கூடவே ஒன்றை ஒன்பதாய் திரித்து கதையும் கட்டியிருந்தார்கள். மற்றவர்களுக்கு எப்படியோ அவர்களை அறிந்தவர்களுக்கு பாதிக்கப்பட்டது ஆரா தான் என தெள்ளத் தெளிவாக தெரிந்திருந்தது. அவர்களுக்காவே வீட்டிற்குள் நுழையும் முன்பாகவே துக்கம் விசாரிக்கும் சாக்கில் வீட்டின் நடுக்கூடத்தில் ஒரு பெரும் கூட்டம் கூடி விட்டிருந்தது. கனி அழுகையுடன் அவர்களுக்கு பதில் சொல்ல முடியாமல் ஒரு மூளையில் அமர்ந்திருந்தாள்.
“என்ன பாரு… நம்ம பொண்ணுக்கா இப்படி நடக்கணும்..? எவ்வளவு புத்திசாலி ஆன பொண்ணு நினைச்சுகிட்டு இருந்தோம்… காலம் இருக்கிற இருப்புல பார்த்து சூதானமா இருக்க வேண்டாமா..? இப்படியா கண்ண கட்டிக்கிட்டு போய் கிணத்துல விழறது..?” என்றார் அவர்களில் ஒருவர்.
” இந்த பத்திரிக்கை இலையும் நியூஸ்லையும் என்னென்னமோ சொல்றாங்களே… அதெல்லாம் உண்மையா பர்வதம்..? நாலு பேராமே..? அத்தனையும் ஸ்கூல் படிக்கிற பசங்கலாமே..? என்னன்னு அவங்களுக்கு இந்த தைரியம் வந்து இருக்கும் சொல்லு..?” என்றார் அங்கலாய்பாய் இன்னொரு பெண்மணி.
“பொம்பள புள்ளைங்க அடக்க ஒடுக்கமா வீட்ல வச்சு வளர்த்து இருக்கணும்..? என்னமோ ஊர்ல உலகத்துல இல்லாத அதிசயம் மாதிரி என் பொண்ணு படிச்சா மட்டும் தலையில் தூக்கி வைத்துக்கொண்டு ஆடுனா இப்படித்தான் சந்தி சிரிச்சு நிக்கணும்..?” என்றார் அறுபதை தொட்ட முதிய பெண்மணி ஒருவர்.
“என்னமோ போ… நம்ம பொண்ணு தான் இஷ்டப்பட்டு போனதா சொல்றாங்களே நெசந்தானா..? யாரு கூப்பிட்டாலும் இப்படித்தான் போயிறதா..? பெரியவங்க சும்மாவா சொன்னாங்க..? ஏட்டு சுரக்காய் கறிக்கு உதவாது… என்னத்த படிச்சு ஃபர்ஸ்ட் மார்க்க வாங்கி என்ன பிரயோஜனம்..? இப்படி புத்திகிட்டு போய் வாழ்க்கை எல்லாம் பழகிட்டு வந்து இருக்கான்..?” என்றார் ஒருவர் வருத்தம் போன்ற குரலில்.
“பிள்ளைய குத்தம் சொல்லி என்னத்தங்கேன்..? தாயைப் போல பிள்ளை… நூலப் போல சேலையினு அர்த்தமில்லாமையா சொன்னாங்க… ஆத்தாக்காரி இருவத்தி ஐஞ்சுல ஆம்படையான் தேடுனா… பொண்ணு கெட்டிக்காரியில்ல… பதினைஞ்சுலையே நாலு ஆம்படையான் தேடிட்டா..?” என்றார் அருவறுப்பாய் முகத்தை சுழித்துக்கொண்டு ஒருவர்.
“ஏன்னப்பா ராஜன்… பொட்ட புள்ள விஷயத்தை காதும் காதும் வச்சாப்புள்ள முடிகிறத விட்டுபுட்டு இப்படி ஊர்பூரா நாரடிச்சுட்டியேப்பா..? நாள பின்ன அந்த பொண்ணுக்கு ஒரு கல்யாணம் காட்சி எப்படி ஆகும் சொல்லு..? சரி அந்தப் பிள்ளையை வூடு… சின்னவ ஒருத்தி இருக்காளே அவளுக்கு தான் ஏதாவது ஒரு நல்லது நடக்குமா..? இப்படி இரண்டு புள்ள வாழ்க்கையை நட்டாத்துல நிறுத்தி புட்டியேப்பா..?” என்றார் இன்னொரு பெரியவர்.
“சொல்றவங்க ஆயிரம் சொல்லுவாங்க… புத்தி நமக்குள்ள இருக்கணும்… முள்ளு மேல சேலை விழுந்தாலும் சேல மேல முள்ளு விழுந்தாலும் சேதாரம் என்னமோ சேலைக்கு தானே… வெட்டி வீராப்புக்கு அவங்க மேல கேஸ் கொடுத்து நமக்கு என்ன ஆகப் போய் சொல்லு… போன நம்ம புள்ள மானந்தான் திரும்ப வருமா சொல்லு..?”
“அந்த நாலுப் பசங்க வீடும் நல்ஷ பச உள்ள இடம்னு சொல்லறாங்களே… கேஸு நிக்கிமுமா..? இல்ல நம்ம புள்ள மேலேயே திருப்பு விட்டுடுவாங்களா..?”
“வயசு புள்ள வீட்ல வச்சிருந்தா கண் கொத்தி பாம்பா இல்ல இருக்கணும்… இப்படி அலட்சியமா இருந்துட்டியே பர்வதம்… என்னத்த சொல்லு… நீ வீட்டுல இருந்து இந்த புள்ளைய கவனிச்சு இருந்தா இன்னைக்கு இப்படியொரு நிலைமை வருமா..?”
“ஆத்தாளும் அப்பனும் ஓடி ஓடி சேர்த்தீங்க… அதுல ஒத்த பைசா இன்னைக்கு இந்த புள்ள மானத்தை காப்பாத்த ஆவுமா..?”
ஆறுதல் சொல்கிறோம் என்ற பெயரில் அவர்களின் நெடி நாளைய வஞ்சங்களையும் பொறாமையையும் வார்த்தைகளில் கொட்டி தீர்த்துக் கொண்டிருந்தனர் அவர்கள். ஏற்கனவே துடித்துக் கொண்டிருக்கும் ஒரு உயிரை இன்னுமே வதைக்கிறோம் என்ற குற்றவுணர்வே இல்லை அந்த வார்த்தைகளில். அவர்களின் வார்த்தை இன்னும் இன்னும் ஆராவை ஒடுக்கியது. நடுங்கியபடி வழியும் கண்ணீரோடு சுவரில் ஒன்றில் அவள்.
“வெளிய போங்க எல்லாம்…” ராஜனின் ஆங்காரமான ஓலத்தில் சலசலத்துக் கொண்டிருந்த மொத்த கூட்டமும் அப்படியே அடங்கிப் போனது.
“என்னப்பா ஏதோ இப்படி ஆகிப்போச்சேனு ஆறுதல் சொல்லுவோனு வந்தா எங்களையே நாய் மாதிரி விரட்டுறீயே நீ..?”
“நீங்க சொன்ன ஆறுதல் வரைக்கும் போதும்… எங்கள சாகடிக்காம கிளம்புங்க மொதல…” கையெடுத்து கூப்பிட்டு அவர் வாசலைக் காட்ட, தங்களுக்குள்ளேயே சலசலத்து சலித்துக் கொண்டபடி நடையைக் கட்டியது அந்த கூட்டம்.
தளர்ந்துப் போய் மகளைப் பார்த்தார் அவர். இத்தனைக்கு பிறகு இப்பொழுது தான் அவளை நேருக்கு நேராய் பார்க்கிறார். இப்படி நடுங்கிக் கொண்டு பயந்துப் போய் ஒடுங்கி நின்றதாய் அவருக்கு நினைவேயில்லை.
“ஆரும்மா…” என்றபடியே அவளை நெருங்கி மார்போடு சேர்த்து அணைத்து ஆறுதல் படுத்த முயன்றார் அவர். “அப்பா நான் இருக்கேன்டா… அப்பா பாத்துக்கறேன்…” என சொல்லி மகளை தேற்றிட துடித்தது அவர் இதயம்.
அவர் நெருங்கிய நொடி சட்டென்று பயந்து அனிச்சை செயலாய் பின்வாங்கியது அவளின் உடல். அந்தரத்தில் அப்படியே நின்றுப் போனது அவரின் கரங்கள். அவளின் இந்த ஒதுக்கம் ஒரு தகப்பனாய் ஒரு ஆண்மகனாய் அவரை வேரோடு சாய்த்திருந்திருந்து.
“உன் அப்பாடா ஆரும்மா…” என்றபடியே மடங்கி தளர்ந்து அமர்ந்தவரின் பெரும் ஓலத்தில் பர்வதத்திற்கே குலை நடுங்கிப் போனது.
– பற்றி எரியும்…
