
தழல் 25:
தினம் தினம் ஒரு பரிசுப் பொருள் அவளை தேடி வர ஆரம்பித்திருந்தது. முதல் சில தினங்கள் அந்த நபர் யாரென்று தேட முயன்று, அடுத்து தினங்களில் அந்த பரிசுப் பொருள்களை பிரிக்காமலேயே ஒதுக்கி வைத்து, கடைசியாய் ஒவ்வொரு நொடியும் அந்த பரிசுப் பொருட்களுக்காவும் அதில் இருக்கும் சின்ன குறிப்புக்காகவும் அவளின் மனது ஏங்க துவங்கி இருந்தது. இந்த கண்ணாமூச்சி ஆட்டம் நாட்களை கடந்து மாதத்தை தொட்டிருந்தது. நித்தம் நித்தம் காதலை கவிதையாய் ஒவ்வொரு விதமாய் அவளுள் கடத்த முயன்றது அந்த துண்டு காகிதங்கள். அவளும் தெரிந்தே அதில் அமிழ்ந்து மூழ்கிக் கொண்டிருந்தாள்.
சின்னதான ஒரு கள்ளத்தனம் அவள் மனதோடு கண்ணாம்பூச்சி ஆட்டம் ஆடியதஅ துவங்கியிருந்தது. அனைவரிடம் இருந்தும் அவளே ஒருபடி ஒதுங்கி நின்றாள். இதயம் முன் எப்பொழுதையும் விட இரண்டு மடங்கு வேகமாய் இயங்குவதாய் தோன்றியது. உடல் எப்பொழுதும் ஊக்க மருந்து உட்கொண்டதைப் போல உற்சாகமாகவே இருந்தது. மனம் இருந்த இடத்தில் இருந்துக் கொண்டே எங்கோ தொலைதூர குளிர் பிரதேசத்துக்கு இறக்கை கட்டிக் கொண்டு பறந்தது. இரவும் பகலும் கண்கள் விழித்தே கிடந்தது. விழித்திருக்கும் பொழுதும் கனவுகள் விரிந்தது. விரிந்த கனவுகளில் எல்லாம் ரகசிய காதலனுக்கு உருவம் கொடுக்க முயன்று அவளை ஏகாந்தத்தில் தள்ளியது.
ஒரு வேளை முகத்திற்கே நேரே வந்து காதலை உரைத்திருந்தால், விருப்பமில்லை என்று கடந்திருப்பாளோ என்னவோ? ஆனால், இந்த கண்ணாம்பூச்சி ஆட்டம் அவளுக்கு பிடித்தது. அவளின் ஆர்வத்தை தூண்டியது. ஒருமுறை அந்த உருவத்தை கண்டுவிட மனம் ஏங்கியது. அவனைப் பற்றிய அழகிய கற்பனையிலேயே இரவும் பகலும் கழிந்தது.
இன்றைய பரிசாய் ஒரு சாவிக் கொத்து வந்திருந்தது. அழகிய வேலைபாடுகள் கொண்ட தங்க சங்கிலியில் இதய வடிவில் ஒரு கிளிஞ்சல் கோர்க்கப் பட்டிருந்தது. அதன் உள்ளே குட்டியாய் இரண்டு பூனைக்குட்டிகள் ஒன்றை ஒன்று தழுவியபடி இருந்தது. பார்த்த மாத்திரத்தில் இதயத்தை அழகாய் நிறைத்தது அது. அத்தனை பிடித்துப் போனது அதை. வேகமாய் அதை தனது வண்டி சாவியில் கோர்த்துக் கொண்டாள் அவள்.
வீட்டிலிருந்து அவளின் பள்ளி கொஞ்சம் அதிக தூரம். பர்வதத்தாலோ ராஜனாலோ தினமும் கொண்டு வந்து விட்டு அழைத்து செல்ல முடியாது. அதை காரணம் காட்டியே அடம்பிடித்து ஸ்கூட்டியை வாங்கியிருந்தாள் அவள். அதுப் போக அதிகாலை வகுப்புகள், பள்ளி முடிந்த பயிற்சி வகுப்புகள் என அத்தனைக்கும் ஸ்கூட்டி தான் வசதியாய் இருந்தது அவளுக்கு.
அந்த வாழ்த்தட்டையில், “எ பிக் சர்பரைஸ் எவெயிட்ஸ் யூ டுமாரோ…” (A big surprise awaits you tomorrow) என்றதை தொடர்ந்து ஒரு கைப்பேசி இலக்கமும் எழுதப்பட்டிருந்தது. அவசரமாய் அதனை தன் பையினுள் பத்திரப்படுத்திக் கொண்டாள் ஆரா.
நாளை அவளின் பிறந்த நாள். நிச்சயம் அவன் அறிந்து வைத்திருப்பான் என்று தான் தோன்றியது. அதற்காக தான் இந்த ஆச்சரியமூட்டும் பரிசோ? ஒருவேளை அவள் எதிர்பாரா நொடியொன்றில் அவள் முன்வந்து நிற்பானோ? என்ன பேசுவான்? அவளை என்னவென்று அழைப்பான்? காதலை மொழிந்திடுவானா? அப்படி அவன் காதலை சொன்னால் இவளென்ன மறுமொழி சொல்ல வேண்டும். சட்டென்று அணைத்துக் கொள்வானோ? கன்னத்தில் இதழ் பதித்து பிறந்தநாள் வாழ்த்து சொல்வானோ? இன்னும் என்னென்னவோ அழகழகாய் விரிந்தது அவளின் கற்பனையில். கன்னங்கள் இரண்டும் சூடேறி சிவந்துப் போனது. வெட்கத்தில் முகம் பூரித்து காது மடலெல்லாம் சிவந்துப் போனது. எதிர்பார்ப்பில் உடலில் மெல்லியதாய் நடுக்கம் இழைந்தோடியது.
அதே மோகனத்தோடு அந்த எண்ணை ‘மை லவ்வபிள் டெவிள்…’ என அலைப்பேசியில் சேமித்துக் கொண்டாள் அவள். ஏனோ அழைக்கும் துணிவு வரவில்லை. மெல்ல அவளின் விரல்கள் அந்த பெயரையும் எண்ணையும் வருட, அவனின் முகத்தின் வடிவை வருடுவதைப் போன்ற பிரம்மையில் மீண்டும் அவள் முகம் சிவந்தது.
அன்றைய பொழுது முழுவதும் எதிலுமே நாட்டம் செல்லவில்லை அவளுக்கு. பள்ளி முடிந்ததுமே ட்யூசன் செல்லாமல் நேரே வீட்டிற்குள் சென்றுப் புகுந்துக் கொண்டாள். வீட்டில் அனைவருமே எட்டு மணிக்கு மேல் தான் வருவர். ஆரம்பத்தில் அவளை பெரிதும் வருத்திய இந்ந தனிமை இன்று இனித்தது. அவன் கொடுத்திருந்த ஒவ்வொரு பரிசுப் பொருளாய் தொட்டி தடவி முத்தம் பதித்து என அதிலேயே லயித்துப் போனது அவளின் மனதில்.
எல்லா வருடங்களும் போல இந்த வருடமும் சரியாக இரவு 12 மணிக்கு கேக் வெட்டி பிறந்தநாளைக் கொண்டாடியது அவளின் குடும்பம். அவள் தான் எதையோ எதிர்பார்த்து ஏமார்ந்துப் போனாள்.
அதே ஏமாற்றத்துடன் அறைக்கு திரும்பியவளின் கைப்பேசியை “கேன் ஐ கால் யூ…” என்ற குறுஞ்செய்தி அலங்கரித்து காத்திருந்தது.
சற்றென்று பதற்றம் தொற்றிக் கொண்டது அவளை. என்ன சொல்லலாம் என்ற நொடி நேர தீவிர சிந்தனை. மறு நோடி ஆழ யோசிக்காமல், “ம்…” என்ற ஒற்றை எழுத்து பதிலை அனிச்சை செயலாய் அனுப்பியிருந்தது அவளின் விரல்கள். அடுத்த நொடி வேகமாய் சிணுங்கியது அவளின் கைப்பேசி. பதற்றத்தில் கையிலிருந்து நழுவி படுக்கையில் விழுந்தது போன். அவசரமாய் தலையணையை அதன் மேல் வைத்து அழுந்த மூடி சத்தத்தை குறைக்க முயன்றாள் அவள். இதயம் வேகமாய் அடித்துக் கொண்டது. யாராவது வந்துவிடக் கூடுமோ என்ற பயத்தில் உடலெங்கும் வியர்வை அரும்புகள் மொட்டுவிட துவங்கியிருந்தது. அதற்குள்ளாகவே முழுதாய் அடித்து ஓய்ந்துப் போனது அழைப்பு.
ஆசுவாச பெருமூச்சோடு அவள் தலையணையை நகர்த்த அடுத்த நொடியே மீண்டும் ஒலித்து அவளைக் கலவரப் படுத்தியது கைப்பேசி. அவசரமாய் ஓடிப் போய் கதவை தாழிட்டு வர அழைப்பு நின்றிருந்தது. மீண்டுமாய் ஏமாற்றத்தே பூசிக் கொண்டது அவளின் மனது.
‘தானே அழைக்கலாமா..? வேண்டாமா..?’ என அவளுள் ஒரு பட்டிமன்றமே நடந்துக் கொண்டிருக்க, மீண்டும் அவனின் அழைப்பில் சிணுங்கியது அவளின் கைப்பேசி.
எங்கே நின்றுப்போகுமோ என்ற அவசரத்தில் அழைப்பை ஏற்று காதுக்கு கொடுத்தவளுக்கு வார்த்தைகள் வரவில்லை. பெரிதாய் ஏதோ ஒன்று தொண்டைக்குழியை அடைத்துக் கொண்டு வார்த்தைகளை வெளிவர விடாமல் சதிசெய்தது. போனை அழுந்த பிடிந்த உள்ளங்கை வியர்வையில் பிசுபிசுத்துப் போயிருந்தது. கைப்பேசியை இடம் மாற்றி அவசரமாய் அதை உடையில் துடைத்துக் கொண்டாள் அவள்.
எதிர்பக்கம் அதைவிட பேரமைதி. சில நிமிங்கள் தொடர்ந்த மௌனப் பேராட்டத்தை அவள் தான் உடைத்திருந்தாள், “ஹலோ…” என்ற ஒற்றை வார்த்தையில்.
எதிர்பக்கம் மெல்லிய கிண்கிணி நாதமாய் ஒருவித ரிதத்தோடு நீண்டது சிரிப்பொலி. அவளை மயக்கி மதியிழக்க தான் செய்திருந்து. அந்த சிரிப்பை, அதிலிருந்த இதத்தை ஆழ்ந்து அனுபவித்தபடி அமைதியாய் இருந்தாள் அவள்.
“ஹேய் கிட்டி… ஒரு ஹலோ சொல்ல உனக்கு மூணு நிமிஷம் ஆகியிருக்கு உனக்கு…” ஆர்பாட்டமாய் சிரித்தது எதிர் பக்தமிருந்தவனின் குரல். ரசித்து மெய் மறந்து அதில் திளைத்துப் போயிருந்தவள் பதிலுரைக்கவும் மறந்திருந்தாள்.
“ஹேய் கிட்டி… உன்னதான் பேச மாட்டீயா என்கிட்ட..?” என்ற குரலில் மறுநொடியே ஏக்கம் வழிந்தது.
வேக வேகமாய் மறுப்பாய் தலையாட்டியவள் வாயிலிருந்து வார்த்தைகள் தான் வடிவம் பெறவில்லை.
“என்ன சொல்ல போன் பண்ணோனோ அத சொல்லாமா ஏதேதோ சொல்லிட்டு இருக்கேன் பாரேன்… விஸ் யூ வெரி வெரி வெரி ஹேப்பி பர்த்டே டூ மை டியரஸ்ட் ஸ்வீட் கிட்டி…” என்றான் ஆர்பாட்டமாய் ஆத்மார்த்தமாய் அவன்.
அதற்கும் அமைதியே எதிர்பக்கம். “விஸ் பண்ணா தேங்க்ஸ் சொல்லணும்… அதுக்கூட என் ஸ்வீட் கிட்டிக்கு தெரியாதாமான்..?” என்றான் கொஞ்சி கெஞ்சலாய் அவன்.
“அப்போ நீ பேசப் போறதில்லை… நாளைக்கு நான் ப்ரோப்போஸ் பண்ணாலும் இப்படி தான் அமைதியா இருப்ப இல்லையா..?” என்றான் குறும்பு கூத்தாடும் குரலில் அவன்.
வார்த்தைக்கு வார்த்தை மாயாஜாலம் காட்டும் அந்த குரலில் முழுவதுமாய் விழுந்து தான் போனாள் அவள்.
“சரி… இப்ப பேச வேண்டாம்… நாளைக்கு நேர்லையே பேசு… சரிதானா… சீக்கரமே ஸ்கூல் வந்துடு… உனக்காக நான் வெயிட் பண்ணிட்டு இருப்பேன்… அப்போ வச்சுடவா..?” என்றான் அவன் ஏமாற்றம் வழிந்தோடும் குரலில் வைக்க விருப்பமே இல்லாதவனைப் போல.
“ஒரு நிமிஷம்…” என்றாள் அவன் வைத்து விடுவானோ என்ற அவசரத்தில் இவள்.
“ஹப்பா பேசிட்ட… சொல்லு என்ன சொல்லணும் எங்கிட்ட… இல்ல கேட்க போறீயா..?” என்றான் அப்பட்டமாய் சந்தோஷத்தை குரலில் காட்டி அவன்.
மீண்டும் தயக்கம் வந்து ஒட்டிக் கொண்டது இவளுக்கு. “உங்க பேரு சொல்லலையே…” என்றாள் அதே தயக்கத்தொடு எழுத்துக்களை கோர்க்கின்றவள் போல.
மீண்டுமொரு அட்டகாசமான சிரிப்பு அவனிடம். “அதுக்குள்ள சொல்லிட்டா எப்படி..? நாளைக்கு சொல்லறேன்… நேர்ல… அதுவரைக்கும் வெயிட் பண்ணு… இப்போ குட்நைட்…” என்றவன் வைத்தும்விட போனையே வெறித்துக் கொண்டிருந்தாள் அவள். இரவெல்லாம் அவன் பெயர் என்னவாயிருக்கும் என்ற எண்ணத்திலேயே இவள் தூக்கம் பறிப் போயிருந்தது.
அடுத்த நாள் எப்பொழுதையும் விட இரண்டு மணி நேரங்கள் முன்னதாகவே பள்ளிக்கு வந்துவிட்டிருந்தாள் அவள். இன்னுமே பள்ளிக்கு யாரும் வந்திருக்கவில்லை. சுத்தம் செய்பவர்கள் மட்டும் தங்கள் பணியில் தீவிரமாய் ஈடுபட்டிருந்தனர். பள்ளியின் நடுநாயகமாகய் நிழலைப் பரப்பியபடி இருந்த பெரிய சரக்கொன்றை மரத்தை சுற்றி வட்டமாய் கட்டபட்டிருந்த சிமெண்ட் மேடையில் அமர்ந்துக் கொண்டாள் இவள். மெத்தன்ற மலர் படுக்கை அவளின் பாதங்களை உள்ளிழுத்துக் கொண்டது. அழகிய அடர் நீல வர்ண சுடிதார் குடையாய் விரிந்து அவளைச் சுற்றி படர்ந்திருந்தது. கனியின் பல மணி நேர தேடுதலின் பலன் அது.
அவளை அதிகம் காக்க வைக்காமல் தூரத்திலிருந்தே ஆர்பாட்டமாய் கை அசைத்தபடி அவளை நோக்கி வந்துக் கொண்டிருந்தான் அவன். அருகில் நெருங்க நெருங்க அவனை அடையாளம் தெரிந்தது. அவன் தீபக். இதே பள்ளியில் 12ஆம் வகுப்பு படிக்கும் நிர்வாகியின் இளையமகன் அவன். ஓரிரு முறை பேசியும் இருக்கிறாள். நேற்று பேசிய குரல் நிச்சயமாய் இவனது இல்லை என்பது உறுதி.
அருகில் நெருங்கவும் அவசரமாய் எழுந்துக் கொண்டாள் அவள். “ஹாய் சிஸ்டர்… விஸ் யூ மெனி மோர் ஹேப்பி ரிட்டன்ஸ் ஆப் தி டே…” என்றான் கை நீட்டி. அவன் இதழ்கள் புன்னகையை இழுத்துப் பிடித்துக் கொண்டிருந்தது.
“தேங்க்ஸ் அண்ணா…” என்றவள் மென்மையாய் அவன் கைப்பற்றி குலுக்கி விடுவித்தாள்
“யூ லூக் கார்ஜியஸ்…” என்றான் கண்களால் அவளை அளந்தபடியே.
“தேங்க்ஸ் அண்ணா…” என்றவள்
“ஆராவுக்கு தேங்க்ஸ் தவிர எதுவும் சொல்ல தெரியாதோ..?” என்றான் புன்னகையுடன்.
அவள் சங்கடமாய் நெளிய, “பர்த் டே விஸ் பண்ணறேன்… ஒரு சாக்லேட் கூட கிடையாதா..?” என்றான் இலகுவாய் அவன்.
“சாரி அண்ணா… மறந்துட்டேன்…” அசடு வழியா அவசரமாய் பையினுள் இருந்த மிட்டாயை எடுத்து நீட்டினாள் அவள்.
புன்னகையுடன் வாங்கி உடனே பிரித்து சாப்பிட தொடங்கியிருந்தான் அவன். “ஆரா யாருக்கவோ வெயிட் பண்ணறாங்க போல…” என்றவனை அதிர்ச்சியாய் நிமிர்ந்து பார்த்தாள் அவள்.
“இல்லையே… அப்படியெல்லாம் இல்லை…” என்றாள் தடுமாற்றத்துடன் அவசரமாய் அவள்.
“அப்படியா… அப்போ இத்தனை சீக்கரம் ஆராவுக்கு இங்க என்ன வேலை..?” என்றான் கேள்வியாய் அவன்.
பதில் சொல்ல தெரியாமல் திருதிருத்து விழித்தாள் அவள். “ஹெவ் ஸ்வீட்… உங்க காதலுக்கு தூது புறாவே நாங்க தான்ம்மா… அந்த கிப்ட் எல்லாம் வச்சுது சாச்சாத் அடியனே தான்…. வைக்க சொன்னது என் ப்ரண்ட்…” என்றான் புன்னகை விரிய.
அவனே தொடர்ந்து, “எவ்வளவு ஆசை ஆசையா இருந்தான் தெரியுமா உன்ன பாக்க… பச்… ரொம்ப முக்கியமான வேலை வந்துட்டு…” என்றான் வருத்தம் தோய்ந்த குரலில்.
“அப்போ என்ன பாக்க வர மாட்டாங்களா..?” என அவசரமாய் கேட்டவளின் குரலிலும் வருத்தம் ஒட்டிக் கொட்டிருந்தது.
“அவனால வர முடியலைனா என்ன..? நாம போய் அவன பாப்போம்…” என்றவனே புரியாமல் பார்த்தாள் அவள்.
“உன்னை அழைச்சுட்டு வர சொல்லி தான் என்ன அனுப்பி இருக்கான்… போகலாமா…?” என்றான் கார் சாவியைக் காட்டி.
“இல்ல… எங்க வீட்டுக்கு தெரிஞ்சா அவ்வளவு தான்… அம்மா ரொம்ப கோபப்படுவாங்க… நான் வரலை…” சட்டென்று பின்வாங்கினாள் ஆரா.
“வீட்டுக்கு தெரிஞ்சா தானே… இப்ப போய்ட்டு கரெக்டா ஸ்கூல் முடியற டைம்க்கு வந்திடலாம்… யாருக்கு தெரியப் போகுது சொல்லு…” என்றான் அவன்.
“இல்ல எனக்கு பயமாயிருக்கு…” என்றாள் ஆரா மீண்டும் தயக்கமாய்.
“ஏய் என்ன தெரியாதா உனக்கு… இந்த ஸ்கூல் கரெஸ்பாண்டென்ட் பையன் நான்… என்னை நம்பி கூட வர மாட்டீயா..?” என்றான் மீண்டும் அவன்.
“இல்ல… அதில்லை… இப்படியெல்லாம் நான் எங்கையும் போனதில்லை…” அவளின் மறுப்பெல்லாம் வலுவிழந்துப் போய்க் கொண்டிருப்பதை உணர்ந்துக் கொண்டான் அவன்.
“அப்போ உனக்கு அவனப் பாக்க வேண்டாமா..? சரி ஓ.கே… போன் பண்ணி தரேன்… நீயே அவன்கிட்ட வரலனு சொல்லிடு…” என்றபடியே சட்டைப்பையிலிருந்த கைப்பேசியை எடுத்து அழைக்க போனான் அவன்.
“இல்ல… இல்ல… நான் வரேன்…” என்ற அவளின் அவசர குரலில் புன்னகையுடன் கைப்பேசியை மீண்டும் சட்டைப் பையில் வைத்துக் கொண்டான்.
அவளின் ஆசை அச்சத்தை வென்றிருந்தது. யாரோ ஒரு முன்பின் தெரியாத மூன்றாம் நபரை சந்திக்க போகிறோம் என்ற எண்ணமே எழுதபடிக்கு அவளின் பருவம் மூளையை மலுங்கடித்திருந்தது.
அடுத்த அரைமணி நேரத்தில் அவளையும் சுமந்துக் கொண்டு, நகரைத் தாண்டி சென்றுக் கொண்டிருந்தது அந்த வண்டி. மெலெழுந்துவிட்ட அச்சத்துடன் சுற்றுப்புறத்தை கவனித்தபட்டி வந்தாள் அவள். அடுத்த கொஞ்ச நேரத்திலேயே ஆள்நடமாட்டம் குறைவான அந்த வீதிக்குள் நுழைந்தது கார். அங்கொன்றும் இங்கொன்றுமாய் தூர தூரமாய் வீடுகள். அத்தனையும் பணத்தில் குளித்திருந்தது. இவனின் காரும் ஒரு பெரிய கேட்டின் முன் சென்று நின்றது.
கேட்டை திறந்துக் கொண்டு காரை உள்ளே நுழைத்து நிறுத்தினான் அவன். இதுவரை இருந்த குருட்டு தைரியமெல்லாம் வடிந்தவளைப் போல, காரிலிருந்து இறங்கே அஞ்சிக் கொண்டு உள்ளேயே அமர்ந்திருந்தாள் அவள். தவறு செய்கிறோமோ என்ற எண்ணத்தில் மனம் தாளம் தப்பி துடித்தது.
“ஆரா… இறங்கி வா..!” என்றபடியே கார் கதவை திறந்தபடி நின்றிருந்தான் தீபக். வேறு வழி இருக்கவில்லை அவளுக்கும்.
“இது எங்க கெஸ்ட் ஹவுஸ் தான்… லீவ் நாள்ல ப்ரண்ட்ஸ் எல்லாம் இங்க தான் வருவோம்…” என்றபடியே கதவை திறந்து உள்ளே நுழைந்தான் அவன். தயங்கியபடி வாசலிலேயே நின்றுவிட்டாள் அவள். ஏதாவது ஒரு பொது இடத்திற்கு அழைத்துப் போவான் என்று நினைத்திருந்தாளே ஒழிய, இப்படி வீட்டிற்கே அழைத்து வந்தது அவளுக்கு அதிர்ச்சி தான்.
“ஏய் என்ன வெளியவே நின்னுட்ட… உள்ள வா… நான் ஒன்னும் உன்ன கடிச்சு தின்னுட மாட்டேன்… இன்னும் கொஞ்ச நேரத்துல இங்க வந்துடுவானாம்… மேஜேஜ் பண்ணிருக்கான்… இரு அவனுக்கு போன் பண்ணி தரேன்… நீயே அவன்கிட்ட பேசு…” என்றபடியே அழைப்பு விடுத்து அவளிடம் நீட்டினான் அவன்.
அவன் சொல்ல பெயரைக் கேட்க வேண்டுமென தீபக்கிடம் அவனின் பெயரை கேளாமலேயே விட்டிருந்தாள் அவள். ஆனால், இயல்பாய் கூட பேச்சு வார்த்தையில் அவன் பெயரை தவறிக்கூட தீபக் உச்சரிக்கவில்லை என்பதை குறித்துக் கொள்ள தவறியிருந்தது அவளின் அறிவு.
“ஹேய் கிட்டி…” என்றான் இரவுப் போல ஆர்பாட்டமாய் இப்பொழுதும் அவன்.
“சாரி… சாரி… ஒன் பிக் சாரி… நானே தான் உன்ன கூப்பிட வரணும்னு இருந்தேன்… பச்… ஒரு இம்பார்டெண்ட் வொர்க் வந்துட்டு… இப்போ அங்கதான் வந்துட்டு இருக்கேன்… நீ இப்படியே என்கிட்ட பேசிட்டே இருப்பியாம்… போன வைக்கும் போது நான் உன் கண்ணு முன்னால இருப்பேனாம்… ஓ.கே…” என்றான் கெஞ்சலும் கொஞ்சலுமாய் அவன். மலர்ந்து மிளிர்ந்தது இவளின் புன்னகை.
“இந்த ஆரா ஜூஸ் குடிச்சுட்டே பேசு…” என்றான் ஒரு கண்ணாடி குவளை நிறைய பழச்சாற்றை அவள் புறம் நீட்டி தீபக்.
அவள் மறுக்கும் முன்னமே, “எடுத்துக்கோ கிட்டி… நீ அத குடிச்சு முடிக்கறதுக்கு முன்னாடி நான் உன் முன்ன நிப்பேன்…” என்றான் அவன் தேன்குரலில். சிறு புன்னகையுடன் அவசரமாய் அதைப் பருகிவிட்டு குவளையை கீழே வைத்தவள், “நான் குடிச்சு முடிச்சுட்டேன்… நீங்க இன்னும் வரலை…” என்றாள் சிறுப்பிள்ளை சிணுங்களோடு. ஆர்பாட்டமாய் வெடித்து சிதறியது அவன் புன்னகை.
“வந்துட்டே இருக்கேன் கிட்டி… இன்னும் பை மோர் மினிட்ஸ்…” என்றான் அவன் அந்த ஆர்பாட்ட சிரிப்பிற்கு நடுவில்.
குடிக்கும் போது தெரியாத வித்யாசம் இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாய் தெரிய துவங்கியது. உடல் தளர்ந்துப் போயிருந்தது. கொஞ்சம் கொஞ்சமாய் மூளை மந்த நிலையை தாவிக் கொண்டிருந்தது. உடல் லேசாகிப் பறப்பதைப் போன்றிருந்தது. வார்த்தைகள் குழறியது. ஏதோ சரியில்லை என அவள் கிரகிக்க தொடங்கியிருந்த நேரம் எல்லாம் அவளின் கைமீறிப் போயிருந்தது.
– பற்றி எரியும்….
