
தழல் 24:
இரண்டு நாட்களுக்கு பிறகு மீண்டும் அந்த வீடு பழமைக்கு திரும்பி இருந்தது. எத்தனை பாராட்டு, எத்தனை பெருமிதம். ஒருவர் மாற்றி ஒருவர் தொலைபேசியில் அலைத்த வண்ணம் இருக்க, ராஜனைக் கையால் பிடிக்க முடியவில்லை. ஒயாமல் அவர்களுக்கெல்லாம் பதில் சொல்லியே ஒரு சுற்றி இளைத்துப் போனார் அவர்.
ராஜன் வேலையை முடித்துக் கொண்டு வீடு திரும்பிய போது, ஆராவும் கனியும் தொலைக்காட்சியில் லயித்திருந்தனர். அவரைக் கண்ட மாத்திரத்தில் ஆராவிடம் ஒரு சந்தோஷ ஆர்பரிப்பு.
“அப்பா…” என்று எழுந்து ஓடியவள் அவர் கையிலிருந்த பையை பிடிங்காத குறையாக வாங்கிக் கொண்டாள்.
“இன்னைக்கு வாங்கிட்டு வந்துட்டீங்க தானே… இன்னைக்கும் வாங்கிட்டு வரலைனா நான் பொல்லாதவளாகிடுவேன் சொல்லிட்டேன்…” என்றபடியே அவசர அவசரமாய் பையினுள் துழவ, அவள் எதிர்பார்த்தது கிடைக்கவில்லை.
“அப்பா…” என்றாள் கோபத்தோடு சிணுங்களாய்.
“இன்னைக்கு வாங்க முடியல ஆரும்மா… அப்பா நாளைக்கு வாங்கி தரேன்…” என்றபடியே அங்கிருந்த சோபாவில் அமர்ந்தார் அவர்.
“போங்கப்பா… யூ ஆர் எ லையர்… இரண்டு நாளா இதே சொல்லறீங்க… ஸ்கூல் பர்ஸ்ட் வந்நா புதுசா வந்திருங்க ஸ்மார்ட் போன் வாங்கி தரேனு ப்ராமிஸ் பண்ணிங்க தானே… இப்போ ஏமாத்தறீங்க… என்னோட பேசாதீங்க போங்க…” முகத்தை திருப்பிக் கொண்டவளின் கண்களில் நீர் முட்டிக் கொண்டு நின்றது.
அவளின் நொடி நேர ஏமாற்றம் தாங்கிய முகத்தைக் கூட சகிக்க முடியவில்லை அவரால். “அச்சோ ஆரும்மா… அப்பா உன்கிட்ட பொய் சொல்லுவேனா..? வாங்கிட்டு வந்திருக்கேன்டா… சும்மா உன்ன டீஸ் பண்ணேன்…” என்றபடியே சட்டையின் பின்புறம் மறைத்து வைத்திருந்ததை எடுத்து அவளிடம் நீட்டினார் அவர். இப்போழுது ஆராவுக்கு ஸ்மார்ட் போன் வாங்கிக் கொடுப்பதில் ராஜனுக்கு அவ்வளவு விருப்பம் இல்லை. எங்கே மகளின் படிப்பை அது பாதிக்குமோ என்ற அச்சம் கூட இருந்தது. இருந்தும் அவளின் தொடர் பிடிவாதமும் சோர்ந்த முகமும் அவரை வேறு சிந்தனையின்றி வாங்கி வர வைத்திருந்தது.
“யூ ஆர் த வோர்ல்ட் பெஸ்ட் டாடி…” அவரை கட்டிக் கொண்டு கன்னத்தில் அழுத்தமாய் முத்தம் வைத்தவள், மறுநொடி கையிலிருந்த போனை பிடிங்காத குறையாக வாங்கிக் கொண்டு அறைக்குள் அடைந்து கதவை சாற்றிக் கொண்டாள். “ஏய்… ஆரா… நில்லுடி… நில்லுடி…” என அவளை துரத்திக் கொண்டே ஒடிய கனியின் முயற்சி எல்லாம் விழலுக்கு இறைத்த நீராய் போயிற்று.
முடிந்த மட்டும் வேகமாய் ஓடியும் அவளைப் பிடிக்க முடியாத கடுப்பில் உதட்டை பிதுக்கிக் கொண்டு தந்தையைப் பார்த்தாள் கனி. “பாருங்கப்பா எங்கிட்ட காட்டகூட இல்லை…” என்றவளின் சிணுங்கல் சிரிப்பை தான் வரவழைத்தது அவருக்கு.
“காட்டாம எங்க போவா… இன்னும் இரண்டு நாள் வச்சுட்டு சீன் போடுவா… அப்பறம் அவளுக்கே அலுத்துடும் பாரேன்…” என்றார் மகளிடம் சமாதானமாய் ராஜன்.
“அதெல்லாம் இல்ல… இப்பவே என்கிட்ட காட்ட சொல்லுங்கப்பா…” என்றாள் கனி பிடிவாதமாய்.
“காட்ட முடியாதுடி பம்பிளிமாஸ்… அப்பா வாங்கி தரலைனதும் என்ன எவ்வளவு ஓட்டுன… இப்ப எனக்கும் காட்டுங்க அக்கானு நல்லா கெஞ்சு… அப்ப தான் காட்டுவேன்…” என்றாள் ஆரா உள்ளிருந்து சத்தமாய்.
“அப்பா… பாருங்கப்பா…” என்றாள் கனி முகத்தை சுருக்கிக் கொண்டு தந்தையிடம்.
“விடு கனிம்மா… நீயும் ஸ்கூல் ஃபர்ஸ்ட் வா… அப்பா நீ கேட்டதையும் வாங்கி தரேன்… அப்போ நீ அவளுக்கு காட்டாதே… அவ்வளவு தானே…” என்றார் ராஜன் இலகுவாய்.
“இரண்டு நாள் அழுது அடம்பிடிச்சா கிடைச்சுட்டு போகுது… இதுக்குப் போய் வருஷமெல்லாம் யாராவது கஷ்டப்பட்டு படிப்பாங்களா..? போங்கப்பா…” என்றாள் கனி.
“490க்கு ஒரு மார்க் குறையட்டும் அப்பறம் இருக்கு உனக்கு…” என்றபடியே செல்லமாய் அவளின் தலையில் கொட்டியவரின் முகத்தில் புன்னகை அரும்பி இருந்தது. அதை நேரம் அழைப்புமணி ஒலிக்க, “போய் படி கனிம்மா… அப்பா யாருனு பாக்கறேன்…” என்றபடியே வாசலுக்கு விரைந்தார் அவர்.
இந்த வருடம் ஒன்பதிலிருந்து பத்தாம் வகுப்புக்கு செல்கிறாள் அவள். அதற்கான பயிற்சிகள் எப்பொழுதோ ஆரம்பித்திருந்தது. மே மாத விடுமுறையில் கூட காலையிலும் மாலையிலும் மூன்று மணிநேர பயிற்சி வகுப்புகள் உண்டு அவளுக்கு. முழு பாடத்திட்டத்தையும் முடித்து ஒருவார விடுமுறை விட்டிருந்தார்கள் இப்பொழுது. ஆராவும் அதே இடத்தில் +1க்கான பயிற்சி வகுப்பில் சேர்ந்திருந்தாள். அதற்கான பாடதிட்டமும் முடிந்திருந்தது. விடுமுறை முடிந்து +2விற்கான வகுப்புகளை தொடங்க இருக்கிறார்கள் அவர்கள்.
ராஜன் கதவை திறக்க பெரிய மனித தோரனையுடன் நின்றிருந்தார் ஒருவர். இதுவரை அந்த நபரை ராஜன் பார்த்திருக்கவில்லை. “யார் சார் வேணும்…” என்றார் ராஜன் கேள்வியாய்.
“நீங்கதானே ஆரல்மொழி அப்பா மகாராஜன்…” என்றதற்கு ஆமென்னும் விதமாய் ஆடியது அவர் தலை.
“உள்ள போய் பேசலாமே மகாராஜன்…” என்றவர் ராஜன் ஒதுங்கி வழிவிடவும் பார்வையால் வீட்டை அளந்தபடியே உள்ளே நுழைந்தார்.
“உக்காருங்க… என்ன சாப்படறீங்க…” என்றபடியே சோபாவை காட்டினார் ராஜன்.
“தண்ணீ மட்டும் குடுங்க மகாராஜன்…” என்றவர் பார்வை இன்னும் வீட்டைத் தான் வட்டமடித்துக் கொண்டிருந்தது.
அமைதியாய் அடுக்களைக்குள் நுழைந்தவர், நீரும் பழரசமும் எடுத்து வந்து அவரின் முன்னே வைத்தார்.
அதைக் கண்டவரின் முகத்தில் சிறுப் புன்னகை ஒன்று விரிந்தது. தமிழகத்தின் புகழ்பெற்ற கல்வி நிறுவனம் ஒன்றின் தலைமை ஆசிரியர் என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார் அவர். ஆச்சரியத்தில் விரிந்துப் போனது ராஜனின் கண்கள்.
“நான் ஓப்பனாவே சொல்லிடறேன் மகாராஜன்… எங்க சேர்மேன் உங்க பொண்ணு எங்க ஸ்கூல படிக்கணும்னு ஆசைப் படறாரு… நீங்க என்ன சொல்லறீங்க…” என்றார் அதிரடியாய் அவர்.
அந்த பள்ளியில் இடம் கிடைப்பதே குதிரைக் கொம்புதான். அந்த பள்ளியில் படித்தாலே பிள்ளைகளின் எதிர்காலத்திற்கு உத்திரவாதம். அந்த பள்ளியில் படிக்க பணம் கொழுத்தவர்களாய் இருக்க வேண்டும் இல்லையா முக்கிய புள்ளிகளின் சிபாரிசு இருக்க வேண்டும். அப்படியிருக்க அவர்களே வீடு தேடி வந்து கேட்க மலைத்து தான் போனார் ராஜன். நம்ப முடியாத மௌனம் மட்டுமே அவரிடம்.
“என்ன மகாராஜன் பேசாம இருக்கீங்க… உங்களுக்கு இதுல சம்மதம் தானே…” என்றார் புன்னகையை வீசி அவர். இன்னுமே அசாத்திய மௌனம் தான் ராஜனிடம். அதன் ஒருவருட கட்டணமே ஆறிலக்கங்களை தொடும். இப்பொழுதுதான் வீடு கட்டுவதற்காக பெரும் தொகையை கடனாய் வாங்கியிருந்தார் அவர். அவரின் சம்பளத்திலும் பர்வதத்தின் சம்பளத்திலும் பாதிக்கும் மேலேயே அதில் செலவழிந்து விடும். அப்படியிருக்க இது அவரின் கைமீறிய செலவு என்று தோன்றியது.
“பீஸ் பத்தியோ டோனேஷன் பத்தியோ யோசிக்காதீங்க மகாராஜன்… இது உங்க பொண்ணோட திறமைக்கு நாங்க தர கிப்ட்… ப்ரீ சீட்…” என்றார் இன்னுமே புன்னகையை பெரிதாக்கி.
சின்னதாய் அவரின் மனதிலும் ஆசை எட்டிப் பார்த்தது. “இரண்டு பொண்ணும் ஒரே ஸ்கூல படிக்கறாங்க… ஒரு பொண்ண மட்டும் மாத்துனா ரொம்ப வருத்தமா போகும் சார்… அதுவுமில்லாம அட்மாஸ்பியர்… ப்ரண்ட் சர்கிள்னு எல்லாமே மாறும்… அதான் யோசிக்க வேண்டியதா இருக்கு…” என்றார் ராஜன் தடுமாறி.
“வாய்ப்பு கிடைக்கும் போது வலுவா பிடிச்சுக்கணும் மகாராஜன்… இரண்டு வருஷத்துக்கு அப்பறம் எப்படியும் ஆரல்மொழி படிக்கப் போற அட்மாஸ்பியரும் ப்ரண்ட் சர்கிளிலும் மாறிதானே ஆகணும்… அதோட நம்ம சேர்மனுக்கு அரசியலையும் நல்ல செல்வாக்கு இருக்கு… நீங்க நினைக்கறத விட ஈஸியாவே மெடிக்கல் சீட்டும் வாங்கிடலாம்… நல்லா யோசிச்சு ஒரு முடிவெடுங்க… விருப்பம்னா இரண்டு நாள் கழிச்சு நம்ம ஸ்கூல் வந்து அட்மிஷன் போட்டுக்கங்க… அப்ப நான் வரேன்…” என்றபடியே கைகூப்பி விடைப் பெற்றுக் கொண்டார் அவர்.
அடுத்த இரண்டு நாட்களாய் எப்படியோ எப்படியோ யோசித்து ஒரு மனதாய் அந்த பள்ளியிலேயே ஆராவை சேர்ப்பது என்று முடிவானது. அடுத்த அதிமுக்கிய வேலையாய் அதே ஊரில் இருக்கும் அவர்களின் பள்ளியில் ஆராவை சேர்த்துவிட்டு தான் ஓய்ந்தார் அவர்.
விரலிடுக்கில் வழிந்தோடும் மணலாய் நாட்கள் விரைவாக கடந்து விட்டிருந்தது. இதோ அடுத்த பத்தாம் வகுப்பு தேர்விற்கான அட்டவணை வெளியாகி விட்டிருந்தது. தேர்வுக்கான காலம் இரண்டு இலக்க எண்களுக்குள் வந்து நின்றிருந்து.
வழமைப் போல ஆரா பள்ளிக்கு கிளம்பிக் கொண்டிருந்தாள். வீடே பேரமைதியில் மூழ்கி இருந்தது. கனி ஆறு மணிக்கே டீயூசன் கிளம்பி சென்றிருந்தாள். பர்வதமும் அதிகாலை பணிக்காக சென்றிருந்தார். ராஜனுமே ஒரு அலுவல் விசயமாக ஒருவாரம் வெளியூர் சென்றிருந்தார். ஏனோ என்றுமில்லாத அளவிற்கு இன்று தனித்து விடப்பட்டதைப் போல ஒரு உணர்வு அவளுக்கு.
எப்பொழுதும் பள்ளிக்கு செல்லும் நேரத்திற்கு முன்பாகவே இன்று கிளம்பி சென்றுவிட்டாள் அவள். அவள் இடத்தில் புத்தகத்தை அமர்ந்து புத்தகத்தை விரிக்க, பெஞ்சுக்கு அடியில் சின்னதாய் ஒரு பரிசுப் பெட்டி. கண்கள் விரிய அதனை எடுத்துப் பார்த்தாள் அவள்.
சின்னதாய் தங்க நிறத்தில் அவள் பெயர் எழுதிய அட்டை அதில் ஒட்டப்பட்டிருந்தது. பரபரப்பும் ஆர்வமும் தொற்றிக் கொள்ள, வேக வேகமாய் அதைப் பிரித்தாள் அவள். உள்ளே கருப்பு வார் வைத்த ஒரு டைட்டன் கைக்கடிகாரம். நீள்வட்ட வடிவ கற்கள் பதித்த அழகிய டையல். நேரம் 10.20ல் நிறுத்தபட்டிருந்தது. வெகு சாதரண ஒன்றாய் தான் தோன்றியது. தான் கட்டியிருந்த கைக்கடிகாரத்தை கழற்றிவிட்டு உடனே அதனைக் கட்டிக் கொண்டவளுக்கு அதன் உண்மையான மதிப்பு தெரியவில்லை தான். தெரிந்திருந்தால் அதை தொடவும் உள்ளம் நடுங்கி இருக்குமோ என்னவோ?
ஆர்வம் மேலிட குண்டு விழிகளை உருட்டி உருட்டி சுற்றும் முற்றும் பார்த்தாள். அவளைத் தவிர ஒன்றிரண்டு பேர் இருந்தால் அவர்களெல்லாம் வைத்திருப்பார்கள் என்று தோன்றவில்லை.
மீண்டுமே கடிகாரம் இருந்த பெட்டியை துழவிப் பார்த்தாள். அவள் எதிர்பார்ப்பை பொய்யாக்காமல் சின்னதொரு வாழ்த்து அட்டை அதனுள்ளே.
“மை டைம் இஸ் ப்ரோஜன்… தி மூவ்மெண்ட் ஐ சா யூ…” (My time is frozen… The moment I saw you…) என்று எழுதபட்டிருந்தது. அதற்கு கீழே, “பை யுவர் லவ்வபிள் டெவிள்…” (By your lovable devil) என்றும் இருந்தது. நொடியில் அவளின் இதய துடிப்பு பன்மடங்காய் பெருகிட, உடலின் அத்தனை வியர்வை சுரபிகளும் சீராய் ஒரே நேரத்தில் வியர்வையை பெருக்கி அவளை நனைத்திருந்தது. முன்னிலும் வேக வேகமாய் சுழன்றது அவள் மைவிழிகள். ஆனால், எதிர்பார்த்த யாரும் அங்கே காணக் கிடைக்கவில்லை. சட்டென்று ஏமாற்றத்தில் விழுந்துப் போனவில் முகம் யோசனையில் ஆழ்ந்திருந்தது.
– பற்றி எரியும்…
