Loading

தழல் 22:

ஆராவின் நடையிலேயே அத்தனை சோர்வு தெரிந்தது. அமுதனை தவிர எதுவுமே அவள் மனதிலில்லை. அவனைப் பார்த்துவிட்டால் போதுமென்ற எண்ணத்தில் தான் தடுத்தவர்களையும் மீறிக் கொண்டு அவனை தேடி வந்திருந்தாள் அவள்.  ஐ.சி.யுவின் கதவை அவள் திறக்க முயன்ற நொடி ஆங்காரமாய் ஒருகுரல்.

“எங்க போற நீ…” கதவின் பிடியில் படிந்திருந்த அவளின் கரத்தின் மீது அழுத்தமாய் பிடித்திருந்தது திலகத்தின் கரம். ஏற்கனவே சைலைன் ஏற்றுவதற்காக ஊசிக் குத்தப்பட்டிருந்த கரம் என்பதால் நிச்சயம் அவளுக்கு வலி உண்டாகி இருக்க வேண்டும். அந்த வலியை அப்பட்டமாய் அவள் முகம் பிரதிபலித்தது.

பேசவே திரணியற்றவள் போல், நிமிர்ந்து அவரைப் பார்த்தவள் விழிகளில் ஒரு மன்றாடல் தெரிந்தது. கண்ணீர் கோர்த்து தழும்பி நின்றதில் அந்த விழிகள் பளபளத்தது. மரணத்தின் கடைசி நொடியில் நிற்பவரின் மன்றாடல் அந்த விழிகளில் தெரிந்தது. எத்தனை பெரிய கல்நெஞ்சக் காரரையும் கரைத்துவிடும் தோற்றம் அது. ஆனால், அது கொஞ்சமும் திலகத்தை இளக்கி இருக்கவில்லை.

“ஆரும்மா… என்னடா… இங்க பாரு… அம்மாவ பாரு… நம்ம அமுதனுக்கு ஒண்ணுமாகது… அனு மேடம் கூட அதான் சொன்னாங்க…நீ  அழதம்மா…” அவளைத் தோளோடு சேர்த்து அணைத்தபடி சிறுப்பிள்ளையைப் போல் தேற்ற முயன்றார் பர்வதம்.

அன்னையின் வார்த்தைகள் காதிலே விழாதவள் போல், இன்னுமே அவளின் பார்வை திலகத்திடம் தான் ஒரு மன்றாடலுடன் படிந்திருந்தது.

“ப்ளீஸ் அத்தை… ஒரே ஒரு தடவ… அமுதன பாத்துட்டு போய்டறேனே…”  அவள் குரல் தழுதழுத்து கலங்கி ஒலித்தது.

அவள் முழுதாய் சொல்லி முடிக்கும் முன்னமே அவளை இழுத்து தூரமாய் தள்ளியிருந்தார் அவர். தளர்ந்திருந்த அவள் உடலும் அவருக்கு வாகாய் ஒத்துழைத்து தரையில் கிடந்தது.

“யாருக்கு யாருடி அத்தை… ஏன் ஏன் பேரன இங்க கொண்டு வந்து படுக்க வச்சது போதாதா..? அவன கொன்னு புதைச்சா தான் உனக்கு நிம்மதியா..?” ஆங்காரமாய் ஒலித்த அவரின் குரல் அந்த காரிடர் முழுவதையும் நிறைத்திருக்க வேண்டும். ஆங்காங்கே ஏதேதோ வேலையில் நின்றிருந்தவர்கள் அனைவரும் சுவாரஸ்யமாய் இவர்களை வேடிக்கைப் பார்க்க தொடங்கியிருந்தனர்.

அவரின் வார்த்தைகளை நம்ப முடியாதவராய் கீழே விழுந்த மகளை தூக்க வேண்டும் என்ற பிரஞ்சை கூட இல்லாமல் விக்கித்துப் போய் நின்றிருந்தார் பர்வதம்.

அவரசாய் ஓடி வந்து அவளை தாங்கிப் பிடிக்க முயன்றான் வெற்றி. அந்நிலையிலும் கூட அவன் கரம் தன்னை நெருங்கும் பின்வாங்கியது அவளின் உடல். சட்டென்று இரண்டடி நகர்ந்து நின்றுக் கொண்டவன் பார்வையில் ஒரு ஆற்றாமை.

“ப்ளீஸ் அத்தை… ஒரே ஒரு முறை…” என்றாள் இரைஞ்சுதலாய் திலகத்திடம் மீண்டும் அவள்.
அவள் முழுதாய் சொல்லி முடிக்கும் முன்னமே அவரின் வெட்டும் பார்வையில் வார் பசைப் போட்டதுப் போல ஓட்டிக் கொண்டது.

ஏற்கனவே இருந்த கொண்டையை அவிழ்த்து உதறி மீண்டும் முடிந்தவரிடம் ஒரு போருக்கு தயாரவதைப் போன்ற ஆங்கார தோற்றம் உண்டாகியிருந்தது.

“சொல்லிட்டே இருக்கேன்… அத்தை அத்தைனா என்னடி அர்த்தம்… யாருக்கு யார் அத்தை..? நீயென்ன எம்புள்ளைக்கிட்ட முறைப்படி தாலி வாங்குனவளா..? இல்ல முறையில்லாம வயித்துல வாங்குனவளா..?” என்றவரின் ஆவேசத்தில் பயந்து சட்டென்று நின்றுப் போனது அவளின் கண்ணீர். அவரின் வார்த்தைகளில் உடலெல்லாம் கூசிப் போனவள் போல் உடலை சுருக்கி ஒடுங்கி அமர்ந்தாள் ஆரா.

இப்படி ஒரு குரூரமான குணம் அவருக்கும் இருக்குமென்று அங்கிருந்த யாருக்குமே அனுமானம் இருந்திருக்காது. யாருமே அவரை எதுவும் செய்ய முடியாத ஒரு இயலாமையுடன் நின்றுவிட்டிருந்தனர். எது செய்தாலும் அது கனியின் வாழ்வை பாதிக்குமோ என்ற பயம் இருந்தது அப்படமான உண்மை.

அவசரமாய் அந்த இடத்திற்கு விரைந்து ஓடிவந்த கனிக்கூட கால்கள் வேரோடிப் போனதைப் போல அப்படியே அதிர்ந்து நின்றுவிட்டது. அதிர்ந்து அதட்டிக் கூட இதுநாள் வரை பேச தெரியாத பேசியிராத அவளின் அத்தையா இது.  நம்பவே முடியவில்லை அவள். தீடிரென ஒருவர் மேல் எப்படி இத்தனை வன்பத்தை உமிழ முடியும். நிச்சயமாய் முடியாது. அப்படியானால் ஆண்டாண்டுகளாய் அடிமன ஆழத்தில் தேக்கி வைத்திருந்த வன்மாய் தான் இது இருக்க வேண்டும். இத்தனை ஆண்டுகளாய் இந்த வக்கிரத்துடன்  தான் அவளிடம் பேசி சிரித்து பழகியிருக்கிறாரா? ஒருநாள் ஒருபொழுதுக் கூட அவளால் கண்டுக்கொள்ள முடியவில்லை என்றால் ஒன்று அவர் தேர்ந்த நடிகராய் இருக்க வேண்டும். இல்லை, இவள் அடிமுட்டாளாய் இருந்திருக்க வேண்டும். நிச்சயமாய் இவள் தான் அடிமுட்டாளாய் இருந்திருக்க வேண்டுமென்று தோன்றியது. கூடவே இத்தனை நாள் பிடிபடாமல் இருந்த மர்மம் ஒன்று பிடிபட்டுவிட்ட உணர்வு.

“திலகம்… என்ன பேசற நீ… வாய மூடிட்டு சும்மா இரு கொஞ்சம்…” அதட்டி மனைவியை கட்டுக்குள் கொண்டு வர பார்த்தார் அறிவின் தந்தை.

“என்னம்மா பேசற நீ… அறிவில்ல உனக்கு…” என்ற அதட்டலுடன் அறிவும் அவரை நெருங்கி இருந்தான்.

யாருக்கும் கட்டுப் படுபவரைப் போல் அவர் தெரியவில்லை. பல நாள் வன்மத்தை கொட்டியே தீர்வது என்று கங்கணம் கட்டிக் கொண்டிவர் போல் சிலிர்த்துக் கொண்டார் அவர்.

“என்னடா அம்மா… யாரோ ஒருத்திக்காக என்ன அதட்டுறீயே… என்னங்கறேன்..?” அவரின் ஆவேசம் முழுவதும் அறிவின் பக்கம் திரும்பி இருந்தது.

பார்வையை சுழற்றியவனுக்கு அத்தனை அவமானமாய் போயிற்று. “ம்மா… பேசறதோட அர்த்தம் புரிஞ்சு தான் பேசறீயா நீ..? மெல்லிய குரலில் கண்டிக்கும் விதமாய் சொன்னவன், “அப்பா… அம்மாவ கூட்டுட்டு முதல வீட்டுக்கு கிளம்புங்க… எதா இருந்தாலும் வீட்டுல வச்சு பேசிக்கலாம்…” என்றவன் அவரின் கைபிடித்து அழைத்துக் கொண்டு நடக்க முயல, வேகமாய் அவனிடமிருந்து கையை உறுவிக் கொண்டார் திலகம்.

“நான் ஏன்டா போகணும்… இல்ல நான் ஏன் போகணுங்கறேன்… உள்ள இருக்கறது என்னோட பேரன்… அவன விட்டுட்டு நான் போக முடியாது… இதோ ஒன்னும் தெரியாதவ மாதிரி, அவன இங்க கொண்டு வந்து படுக்க வச்சுட்டு பசப்பிட்டு உக்காந்து இருக்காளே அவள ஏந்திரிச்சு போக சொல்லு முதல…” என்றபடியே ஆராவைப் பார்த்தவரின் பார்வையில் இகழ்ச்சி மண்டிக் கிடந்தது.

“ம்மா… என்னம்மா பேசற நீ..? யாரோ அமுதன கடத்துனா… அதுக்கு அவங்க என்ன பண்ணுவாங்க… அவன கண்டுபிடிச்சு காப்பாத்தி இங்க கொண்டு வந்து சேத்ததே அவங்க தான்… அவங்களப் போய்…” என்றான் தவிப்பாய் ஆராவை ஒருமுறை பார்த்தபடி அறிவு.

“இப்படியே கேணப் பய மாதிரி அவளுங்க சொல்லறதெல்லாம் நம்பிட்டு இரு… அக்காளும் தங்கச்சியும் சேர்ந்து நல்லா உன் தலையில மொளகா அரைப்பாளுங்க… ஏன்டா எங்கையோ கடத்திட்டுப் போனவன் எதுக்குடா புள்ளைய அட்டப் பெட்டியில வச்சு இவ ரூம்குள்ள வைக்கணும்..?” அவர் சொன்ன தகவலில் எல்லாரும் அதிர்ந்துதான் போனார்கள்.

“ம்மா… உளறாத…” நம்ப முடியாதவனாய் அவரிடம் எரிந்து விழுந்தான் அறிவு.

“என் பேச்செல்லாம் உனக்கு உளறல் மாதிரி தான்டா தெரியும்… ஆமாவா இல்லையானு பசப்பிட்டு உக்காந்து இருக்காளே உன் கொழுந்தியா அவகிட்டையே கேளு… அவ சொல்லுவா உண்மை என்னனு..?” என்றார் இன்னுமே சத்தமாய்.

வெடித்துக் கொண்டு கிளம்பியது ஆராவின் அழுகை. கால்கள் இரண்டையும் குறுக்கி அதனுள் முகத்தைப் புதைத்துக் கொண்டு தேம்பி தேம்பி அழத் தொடங்கி விட்டவளிடம் என்னவென்று வினவ முடியும். அறிவிற்கே பரிதாபமாய் போயிற்று.

வேந்தனை தவிர இந்த தகவல் யாருக்குமே தெரிந்திருக்கவில்லை. அவனும் பிள்ளை கிடைத்து விட்டதென்பதை தவிர அவர்களிடம் வேறதுவும் சொல்லவில்லை. அனுவிடம் கூட இங்கு வந்தபிறகுதான் சொல்லி இருந்தான். அப்படியிருக்க இவருக்கு எப்படி தெரிந்திருக்கும் என்ற கேள்வி வண்டாய் அவனைக் குடைந்தது. அங்கிருந்த ஒவ்வொருவரிடமும் ஆராய்ச்சியாய் அவன் பார்வை படிந்து படிந்து மீண்டது.

“பச்… அம்மா… அப்படியேக் கூட இருக்கட்டும்… அவங்க ஒன்னும் உன் பேரன கடத்து கொண்டு வச்சுக்கலையே… யாரோ கடத்துனத்துக்கு அவங்க என்ன பண்ணுவாங்க… அவங்க மேல நீ கோபப்படறதுல என்ன நியாயம் இருக்கு…” என்றான் அறிவு அவரை சமாதானப் படுத்தும் எண்ணத்தில்.

“நல்லா இருக்குடா உன் நியாயம்..? எவனோ ஒருத்தவன் கடத்திட்டு வந்து இவ ரூம்ல ஏன்டா வைக்கறேன்… அப்படியே வச்சாலும் அதெப்படிடா கரெக்டா இவளுக்கு தெரியும்… கேக்கறவன் கேணப்பயலா இருந்தா கேப்பயில நெய் வடியுதும்னாம்… அப்படிதான்டா இருக்கு நீ சொல்லறது…” என்றார் அவர் நொடித்துக் கொண்டு.

“ஏய் இந்தாடி… இன்னும் இப்படி நடிச்சு நடிச்சு எத்தன குடிய கெடுக்க போற… உன்னோட பசப்பலுக்கு எல்லாம் மயங்கற ஆளு நானில்ல… ஏந்திரிச்சு போடி முதல…” என்றபடியே கொத்தாக அவளின் முடியைப் பற்றி இருந்தது அவரின். சட்டென்று நிமிர்ந்தவளின் கண்களில் வலியையும் தாண்டிய அவமான உணர்வு. நிச்சயமாய் அவர் இப்படி செய்வரென்று யாருமே எதிர்பார்க்கவில்லை. நொடியில் நடந்துவிட்டதை தடுக்கவும் முடியவில்லை.

“ம்மா… என்ன பண்ணற… விடும்மா அவங்கள..?” என்றபடியே அவரிடமிருந்து ஆராவை பிரிக்க முயன்றான் அறிவு.

வேகமாய் அவரை நெருங்கிய கனியின் கை அழுத்தமாய் அவரின் கைமீது பதிந்து ஆராவின் முடியை விடுவிக்க முயன்றது. ஆள்காட்டி விரலை மட்டும் வெளியில் இழுத்து வேகமாய் பின்னோக்கி வளைத்தவளின் பார்வையில் அதை உடைத்துவிடும் வேகம்.
வலுக்கட்டாயமாக அவளிடமிருந்து கையை உறுவிக் கொண்டவர், வலிப் பொறுக்காமல் உதற தொடங்கியிருந்தார்.

“அவ்வளவு தான் அறிவு உங்க அம்மாவுக்கு மரியாதை… அவங்கள கூட்டிட்டு இங்கேயிருந்து கிளம்புங்க முதல…” என்றாள் அதிராத குரலில் அதட்டலாய் கனி.

“அம்மா… நீ முதல கிளம்பும்மா…” நிலமை கைமீறிப் போவதை உணர்ந்தவன், திலகத்தை தான் அங்கிருந்து நகர்த்தப் பார்த்தான்.

“ஏய்… நீ சொன்னா நான் போய்டணுமா..? அவன் என் பேரன்… எங்கையும் போக முடியாது என்னால… என்ன செய்வ நீ..?”

“அவன் எம்புள்ள… நான் பத்துமாசம் சுமந்துப் பெத்த புள்ள… அவன்கிட்ட உரிமைக் கொண்டாட உங்களுக்கு எந்த ரைட்ஸும் இல்ல… இந்தா நிக்கறாரு பாருங்க உங்க புள்ள… அவர வேணா கூட்டிட்டு போய் உரிமை போராட்டம் நடத்துங்க…” என்றவள் குரலில் எரிச்சல் மிகுந்திருந்தது.

இன்னும் என்ன பேசி இருப்பாரோ அவர். அவர் பேசும் முன்னமே அதட்டலும் கம்பீரமுமாய் ஒலித்த குரலில் அனைவரின் கவனமும் அந்த பக்கம் திரும்பியது.

“இங்க என்ன ட்ராமாவா நடக்குது… கூட்டமா நின்னு என்ன வேடிக்கை… போய் வேலையை பாருங்க… போங்க…” அவரின் அதட்டலுக்கு கட்டுபட்டதைப் போல் சட்டென்று களைந்தது கூட்டம்.

கருப்பு கால்சராயும் வெள்ளை சட்டையுமாய் நடந்து வந்தவரின் நடையில் ராணியின் கம்பீரம். ஒட்ட வெட்டிய கேசத்தில் ஆங்காங்கே வெள்ளி கம்பியாய் நரைகள். சுருள் சுருளான முடிகள் கொஞ்சம் மட்டும் முன்நெற்றியில் தவழ்ந்து அழகூட்டியது.

“இதான் நீ நிர்வாகம் பண்ணற லட்சணமா அனு… யாரா இருந்தாலும் இப்படிதான் பேசவிட்டு வேடிக்கை பார்ப்பீயா..?” அதட்டலாய் ஒலித்த அவர் குரலில் தன்னால் கவிழ்ந்தது அவரின் தலை.

“நீயெல்லாம் போலீஸ்னு வெளிய சொல்லாதடா…” மகனைக் கடக்கும் போது மெல்லிய சீற்றம் அவரிடம். அவரின் மகன் அவனென்று விளக்கி சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. தோற்றத்தில் மட்டுமல்ல குணத்திலும் அவன் வள்ளியம்மையின் நகல் தான்.

“ஆரா…” என்றவரின் குரலில் தான் எத்தனை அன்பிருந்தது. தேம்பி தேம்பி கரைந்துக் கொண்டிருந்தவள், அந்த குரலில் உலுக்கப்பட்டவள் போல சட்டென்று நிமிர்ந்து அவரைப் பார்த்தாள். நொடியில் அவளின் கண்களில் மகிழ்ச்சியின் ஊற்று. “ம்மா…” என்ற பெரும் ஓலத்தோடு தாவி அவரின் கால்களைக் கட்டிக் கொண்டவள் அழுகை பலமடங்கு பெருகி இருந்தது.

மண்டியிட்டு அவளைத் தாங்கிக் கொண்டவர், “ஒன்னுமில்ல ஆரா… அம்மா தான் வந்துட்டேன் இல்ல… எல்லாம் சரியாகிடும்… இதென்னது சின்ன பிள்ளை மாதிரி இத்தனை அழுகை… என் ஆரா இப்படி அழலாமா..?” என்றார் கண்ணீரை துடைத்தபடியே வள்ளியம்மை.

“நான்… நான்… என்னால தான் அமுதனுக்கு இப்படி ஆகிட்டும்மா… அப்பாவையும் நான் தான் கொன்னுட்டேன்… இப்ப அமுதனையும் நான் தான்…” மேலே சொல்ல முடியாது விக்கித்து அழுதவளை ஆதரவாய் அணைத்துக் கொண்டார் அவர்.

“காம் டவுன் ஆரா… நடந்த எதுக்கும் நீ காரணமில்ல…” என்றபடியே அவர் குறிப்பாய் தங்கையைப் பார்க்க, அதை உணர்ந்தவராய் வேகமாய் தனது அறைக்குள் ஓடினார் அவர்.

“இல்ல… நான் தான்… என்னால தான்…” மீண்டும் மீண்டும் அதையே பிதற்றியவள் தன்னிலையில் இல்லை என்று யாரும் விளக்கி சொல்ல தேவையிருக்காது. அதற்குள் மயக்க மருந்தை ஊசியின் வழியே அவளுக்கு செலுத்தியிருந்தார் அனு.

மயக்கத்தில் சொக்கியவளை எழுப்பி தோள் மீது சாய்த்துக் கொண்டவர், “வேந்தன் இந்தம்மாவ வெளிய அனுப்பு… போகலைனா நீயூசன்ஸ் கேஸைப் போட்டு தூக்கி உள்ள வைக்க சொல்லு…” என்றபடியே ஆரா முன்பிருந்த அறையை கேட்டு அந்த பக்கம் நடக்க தொடங்கிவிட்டார்.

“ப்ளீம்மா… கிளம்புங்க…” என்றான் அறிவும் கெஞ்சும் குரலில். வள்ளியம்மை யாரென தெரிந்தவருக்கு இதற்கு மேலும் அங்கே நிற்கும் துணிவில்லை.

வேண்டா வெறுப்பாய் எத்தனித்தவரை, “ஒரு நிமிஷம்…” என்ற கனியின் குரல் தடுத்து நிறுத்தி இருந்தது.

என்ன என்பதைப் போல் அவர் பார்க்க, “ஆராகிட்ட என்ன சொன்னீங்க…” என்றவளைப் புரியாத பார்வை பார்த்தார் அவர்.

“என்கிட்ட பேசாத அளவுக்கு ஆராகிட்ட என்ன சொன்னீங்கனு கேக்கறேன்… இப்ப புரியுதா..?” என்றவளின் குரலில் கடுமை கூடியிருந்தது.

“உன் அக்காகிட்ட கேளு விளக்கமா சொல்லுவா…” என்றவர் விறுவிறுவென அங்கிருந்து கிளம்பிவிட்டார். அவளுக்கிருந்த ஒருதுளி சந்தேகமும் தீர்ந்துப் போயிருந்தது.

அவளின் மேல் உயிரையே வைத்திருப்பவள், முகத்தை கூட காணாது ஒதுங்கிப் போக வேண்டுமென்றால், அந்த அளவிற்கு ஏதோ சொல்லியிருக்க வேண்டுமென்று தோன்றுயது. நிச்சயம் அது அவரின் மன வக்கிரத்தின் உச்சமாய் இருக்க வேண்டுமென தோன்றியது. அதை கேட்டு தாங்கிக் கொள்ளும் அளவிற்கு அவள் மனதில் திடமில்லை என்றும் தோன்றியது.

அவள் அறிவைப் பார்த்த பார்வையில் வெறுமை இருந்தது. “நிஜமா எனக்கு எதுவும் தெரியாது கனி… அம்மா இப்படினு நான் எதிர்பார்க்கவே இல்லை…” என்றவனுக்குமே இது அதிர்ச்சிதான்.

“ஏழு வருஷத்துக்கு முன்னாடி சொன்னத மறந்து இருக்க மாட்டீங்கனு நினைக்கறேன் அறிவு… இப்பவும் கூட ஆராவா நீங்களானு வந்தா ஆரா தான் எனக்கு முக்கியம்…” என்றவள் அவனைப் பதிலைக்கூட எதிர்பாராதவளாய் ஆராவின் அறையை நோக்கி விரைந்தாள். தளர்ந்துப் போய் இருக்கையில் அமர்ந்தான் அவன். ஒன்பது வருட அவனின் காதல் பொய்த்துப் போன உணர்வு. என்றுமே அவள் மனதில் அவன் முதலிடம் பிடிக்கவே முடியாதா என்ற ஆற்றாமை எழுந்தது. அதே நேரம் அதை அவள் ஏன் சொல்கிறாள் என்றும் புரிந்தே இருந்தது.

அவனை அறிந்தவளாய், அவனுக்கு இது எத்தனை வலிக்குமென்று அவளுக்கும் தெரியும். அதே நேரம், ஆராவையும் அவளால் விட்டுவிட முடியாது. அவள் மீது இத்தனை வெறுப்பை உமிழும் திலகத்துடன் கனவிலும் கூட ஒன்றி இனி வாழமுடியாது. இனி அவன் தான் முடிவெடுக்க வேண்டும் அன்னையா இவளா என்று.

கனி உள்ளே நுழையும் போது, ஆராவின் வலதுக் கையை தன் கைக்குள் பொத்திப் பிடித்தபடி அமர்ந்திருந்தார் வள்ளியம்மை. இவளைக் கண்டதும் மெல்லிய முறுவல் அவர் இதழ்கள். ஆரா இன்னும் முழுதாய் மயக்கத்திற்கு சென்றிருக்கவில்லை. பாதி மயக்கத்தில் மூளையில் மின்னலடித்த பழைய காலம் குழறலாய் வார்த்தை கோர்வையின்றி வெளிவந்தது.

“கனி எல்லாரும் அமுதன் கூட போய் இருங்க… நான் ஆரா கூட இருக்கேன்…” மறுக்கவே முடியாத கட்டளை குரல் அது.

“ஒண்ணுமில்லை ஆரா… உன் வள்ளிம்மா பக்கத்துலையே தான் இருக்கேன்… யாருக்கும் எதுவுமில்லை… தூங்கும்மா… தூங்கி ஏந்திரிச்சா எல்லாம் சரியாகிடும்…” அவளின் கைகளை தட்டிக் கொடுத்தபடியே சொல்லியவரின் மனதிலும் அலை அலையாய் கடந்த காலத்தின் நினைவுகள் தான்.

                     பற்றி எரியும்…

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
3
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்