Loading

 

தழல் 21:

ஆராவையும் அமுதனையும் அடுத்த கட்டிடத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் அவர்களது மருத்துவமனைக்கு அழைத்து வருவதற்குள்ளாகவே வெகுவாய் தளர்ந்து களைத்துப் போய் விட்டான் வேந்தன். இன்னும் இருவருக்கும் என்னவென்று உறுதியாய் தெரியவில்லை. இரண்டு பேருக்கும் மருத்துவம் நடக்கும் அறைக்கும் மாற்றி மாற்றி நடந்தே கால்கள் தோய்ந்துப் போன உணர்வு.

இந்த மருத்துவமனையின் சேர்மன் முத்துகிருஷ்ணன்.  தலைசிறந்த நரம்பியல் மருத்துவரும் கூட. அனுராதவின் மிகப் பெரிய பலமே அவர்தான். அவர் இருக்க போய் தான் அரசு கல்லூரியில் வேலையை விடாமலே அறக்கட்டளையை கவனிக்க முடிகிறது அனுராதாவால். இருப்போது கிருஷ்ணன் ஒரு  மருத்துவ கலந்தாய்வுக்காக ஜெர்மன் வரை சென்றிருந்தார்.

‘சே… இன்னுமா இந்த அனும்மா வரலை..?’ சலிப்பாய் அலுத்துக் கொண்டது அவன் மனம். நொடிக்கொரு தரம் வரும் வழியைப் பார்த்துக் கொண்டது அவன் விழிகள். பர்வததிற்கும் அனுவிற்கும் மட்டும் அழைத்து விசயத்தை சுருக்கமாய் சொல்லியிருந்தான். இன்னும் சற்று நேரத்திற்கெல்லாம் அவர்கள் அங்கே வந்துவிட கூடும். ஆனால் அதுவரை அத்தனை பொறுப்பும் அவனுடையதல்லவா?

தலையை அழுந்த பிடித்தபடி காத்திருப்பவர்களுக்கான இருக்கையில் அமர்ந்து விட்டான் அவன். செவ்வரியோடி விழிகள் இரண்டும் தூக்கம் தொலைத்ததாய் சொன்னது. மனம் படபடவென அடித்துக் கொண்டது. இருவரும் நல்லவிதமாய் கண் விழித்துவிட வேண்டுமென பெரும் கலக்கமாய் இருந்தது. இத்தனை பலவீனமாய் அவன் இதுவரை உணர்ந்ததே இல்லை. எத்தனை நாள் உண்ணாமல் உறங்காமல் வேலைப் பார்த்திருப்பான்? அப்பொழுதெல்லாம் அண்டாத பலவீனம் இப்போது அவனை ஆட்டி படைத்தது. அது மனம் கொண்ட பலவீனமென்று புரியதான் செய்தது.

இதோ இந்த நொடி வரை அவனுக்கு அவள் மீதிருந்தது பிடித்தம், அன்பு என்ற வகையிலேயே நின்றிருந்தது. ஆனால், அதற்கும் மேல் என்று உணர்ந்துக் கொண்ட நொடி இது. அவளின் பலகீனங்கள் பலமாய் இவனை தாக்கிறது. அவளின் கண்ணீர் இவனை சுக்கலாய் உடைத்துப் போடுகிறது. இப்படியாய் அவன் யாருக்காவும் ஏன் அவனுக்காக கூட உருகி தவித்ததாய் நினைவில்லை.  வெற்றிடத்தை நிறைக்கும் ஒளி வெள்ளமாய் ஏதோ ஒரு நொடியில் அவனை அறியாமலே அவனை முழுவதுமாய் ஆக்கிரமித்திருந்தாள் அவள்.

அவனின் எண்ண அலைகள் அறுபட, வேக எட்டுக்களோடு பதற்றத்துடன் அவனை நோக்கி நடந்து வந்துக் கொண்டிருந்தார் அனு.

“என்னடா… என்னாச்சு ஆராவுக்கு..? என்னென்னமோ சொல்லற போன்ல…” அவர் அவனை நெருங்கும் முன்னமே கேள்வி அவனை தொட்டிருந்தது.

“மயங்கிட்டா… அப்பவே சொன்னேன்… உங்க சிஷ்ய புள்ள மாசமா இருக்கா… என்னனு கவனிச்சு பாருங்கனு… நீங்க எங்க கேட்டீங்க…” முயன்று இயல்பாய் இருப்பதாய் காட்டிக் கொண்டான் அவன். இருந்தும் அந்த கண்களிலும் குரலிலும் பரிதவித்தது.

அவனை நின்று ஆராய நேரம் இல்லாதவராய் ஆரா இருந்த அறைக்குள் நுழைந்திருந்தார் அவர். அடுத்த இரண்டு நிமிடங்களுக்குள் வெளியே வந்தவரின் முகம் பழைய சாந்ததிற்கு மீண்டிருந்தது.

“ஒண்ணுமில்ல வேந்தா… ஸ்ட்ரஸ் தான்… கூடவே சாப்பிடாம இருந்திருப்பா போல… அதான் எல்லாம் சேத்து படுக்க வச்சுட்டு… சைலன் ஓடுது… கொஞ்ச நேரம் நல்லா தூங்கி ஏந்திரிச்சா சரி ஆகிடுவா..?” அவனை தேற்றும் விதமாய் விளக்கி சொன்னபடியே,  ஐ.சி.யூவை நோக்கி நடந்தார் அவர்.

அவன் அமைதியாய் கேட்டபடி, அவருடன் நடந்தான். “என்னாச்சு வேந்தா… தெளிவா சொல்லு… அமுதன் எப்படி காணாமப் போனான்… எங்க கிடைச்சான்… ஏன் என்கிட்ட காலையில வரைக்கும் நீங்க எதுவுமே சொல்லைல..?” குரலில் மென்மை இருந்தாலும், சொல்லியே ஆகவேண்டுமென்ற மறைமுக கட்டளையும் இருந்தது.

அவனும் எதையும் மறைக்க நினைக்கவில்லை. இங்கு வந்த முதல் நாள் அவளை அறையில் மயங்கிய நிலையில் பார்த்தது. அந்த வாழ்த்தட்டை, தினமும் அவளுக்கு வரும் பரிசுப் பொருள், அமுதன் எப்படி கிடைத்தான் என எல்லாத்தையும் சுருக்கமாய் சொல்லி முடித்து அவர் முகம் பார்த்தான்.

அவரின் நடையில் சின்னதாய் ஒரு தடுமாற்றம் வந்து சீரானது. “ஸ்கவுண்ட்ரல்…” என மெல்லமாய் முணுமுணுத்தவர், தொடர்ந்து சத்தமே இல்லாது அந்த நபரைத் திட்டி தீர்ப்பதும் தெரிந்தது. அவனின் அனும்மா ஒருவரை இப்படியெல்லாம் திட்டகூடும் என்பதே ஆச்சர்யம் தான் அவனுக்கு.

அவன் சொன்ன எதுவுமே அவரிடம் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதை  கவனமாய் குறித்துக் கொண்டான். கேட்ட பொழுது ஒரு வித ஒவ்வாமை உணர்வும் எரிச்சலும் தான் அவர் முகத்தில். அப்படியானால் இதுப்பற்றி ஏதோ ஒன்று, இல்லை முழு சமாச்சாரத்தை அவரும் அறிந்திருக்க வேண்டுமென்று தோன்றியது.

“அமுதன் சரியாகிடுவான் தானே…” நிச்சயம் அந்த குரலில் அவன் சரியாகிவிட வேண்டுமே என்ற மன்றாடல் இருந்தது.

“அமுதனுக்கு ஒண்ணும் ஆகாது வேந்தா… நான் பாத்துக்கறேன்…” அவனின் தோளைத்தட்டி சொன்னபடியே ஐ.சி.யூவிற்குள் நுழைந்துக் கொண்டார் அவர். அது அவனுக்காக அவர் சொல்லிச் சென்ற தேறுதல் வார்த்தைகள் போலத்தான் தான் தோன்றியது.

அமைதியாய் அந்த அறைக்கு வெளியிலிருந்த இருக்கையில் அமர்ந்து விட்டான் அவன். ஒரே நாளில் பத்து வயது கூடி விட்டதைப் போல் அப்படி ஒரு தளர்ச்சி அவன் உடலிலும் மனதிலும். நல்ல வேளையாய் தூரத்தில் அவர்கள் வருவது தெரிந்தது. பெரும் சுமை ஒன்றை இறக்கி வைத்த உணர்வு அவனுக்கு.

கனியின் அழுகை முழுவதுமாய் நின்றிருந்தது. விடாது அழுதபடி இருந்த அன்னைக்கு ஏதோ ஆறுதல் வார்த்தை சொல்லியபடியே அவள் நடந்து வருவது துல்லியமாய் தெரிந்தது. அந்த முகத்தில் தான் எத்தனை தீர்க்கம், எத்தனை தெளிவு, எத்தனை நிமிர்வு, எத்தனை நம்பிக்கை. ஒரு சிறுப் பெண்ணிடம் இது சாத்தியமா என்று அவனுக்கே கூட ஆச்சரியமாய் இருந்தது. அமுதன் கிடைத்துவிட்டான் என்ற செய்தியே அவளை மீட்டிருக்க வேண்டுமென்று தோன்றியது. உடன் அறிவும் வெற்றியும் பின்னால் வருவதைக் கண்டவனுக்குள் சின்னதாய் ஒரு  எரிச்சல்.

‘இவன் எதுக்கு ஒட்டுப்புல்லு மாதிரி கூடவே சுத்தறான்…’ உள்ளத்தில் உண்டான எரிச்சல் முகத்திலும் தெரிந்தது. அதைவிட அதிக எரிச்சலுடன் அவனைப் பார்த்து முகத்தை சுழித்தான் வெற்றி. அவனைப் பார்க்க கூட பிரியப்படாதவன் போல வேகமாய் முகத்தை வேறுபக்கம் திருப்பிக் கொண்டான்.

“அமுதன் இப்போ எங்க… அவனுக்கு ஒண்ணுமில்ல தானே… கண்ணு முழிச்சுட்டானா..? நாங்க பாக்கலாமா..?” அவனின் கரங்களை பற்றியபடியே வினவிய, அறிவின் குரலே கமறி தோய்ந்து சோகத்தை வெளிபடுத்தியது. அவனை தோளோடு சேர்த்து இருக அணைத்துக் கொண்டான் வேந்தன்.

“ஒண்ணுமில்ல… அமுதனுக்கு ஒண்ணுமாகது அறிவு… ட்ரிட்மெண்ட் போய்ட்டு இருக்கு அறிவு… சீக்கரமே கண்ணு முழிச்சுடுவான் பாருங்களேன்…” என்றவன் நம்பிக்கையாய் அவனின் கரத்தை அழுத்திக் கொடுக்க, அவனை இறுக்கிக் கொண்ட அறிவின் கண்களில் இருந்து சரம் சரமாய் கண்ணீர் வழிய தொடங்கி இருந்தது. அவனை ஆற்றுப் படுத்துபவன் போல மெல்ல முதுகில் தட்டிக் கொடுத்தான் வேந்தன்.

இத்தனை நேரம் அவனுடனே அலைந்து தேடிய தன்னைவிட வேந்தனிடம் அவன் அதிக நெருக்கம் காட்டுவதாய் தோன்றியது வெற்றிக்கு. அந்த குடும்பத்திற்கு அவர்களுக்கு வேந்தன் புதியவனில்லை என்று தோன்றியது.

“ஆரா… ஆராவுக்கு ஒன்னுமில்லை தானே… கண்ணு முழிச்சுட்டாளா..? எங்க இருக்கா அவ…” சுற்றிலும் பார்வையை சுழற்றியபடியே வினவியவளின் குரலில் தவிப்பிருந்தது. கனியின் கேள்வி நிச்சயமாய் அவனுக்கு அந்த நேரத்தில் அபத்தமாய் தான் பட்டது. ஏன் அசாதாரணமாய் கூட பட்டது.

அவளை வியப்பு மேலிட நிமிர்ந்துப் பார்த்தான் அவன். அவனுக்கு, தான் கேட்டது சரியாக காதில் விழவில்லையோ என்ற எண்ணத்தில் மீண்டும் அதையே கேட்டாள் அவள். அந்த குரலில் தான் எத்தனை பரிவும் அன்புமிருந்தது. உண்மையிலேயே அது என்ன மாதிரியான அன்பென்று அவனால் புரிந்துக் கொள்ளவே முடியவில்லை. அப்படியான அன்பை யாராலாவது காட்ட முடியுமா என்றும் தெரியவில்லை.

பதில் சொல்ல மறந்தவன் போல இன்னும் அவளைத் தான் அதிசயம் போல் பார்த்திருந்தான் அவன். அதே கேள்வியை வெற்றியும் அழுத்தமாய் கேட்கவும் தான் தெளிந்தது அவன் மனம். பர்வததின் பார்வையையும் அவன் பதிலை எதிர்பார்த்துக் காத்திருந்தது. அவர்கள் பயம் கொள்ளாத வகையில் அவளின் நிலையை விளக்கி சொன்னான் அவன்.

“அப்போ நான் போய் ஆராவ பாத்துட்டு வரேன்…” என அடுத்த நொடி அவளிருந்த அறையை நோக்கி நடந்த வெற்றியை தடுத்திருந்தது வேந்தனின் குரலில்.

“இல்ல… மயக்கம் தெளியற வரைக்கும் யாரையும் பாக்க வேண்டானு அனும்மா சொல்லி இருக்காங்க…” என்றவன் குரலில் கடினம் கூடியிருந்தது. அவன் மனமறிந்து பொய்யென்று தெரிந்தே சொல்லிருந்தான் அதை.

அதைப் பொய்யென்று அவனும் கண்டுக் கொண்டானோ? அவனை உறுத்து விழித்தான் அவன். ‘நீயெல்லாம் எனக்கொரு ஆளா..?’ என்ற ரீதியில் அசட்டையாய் இதழ்களை சுழித்த வேந்தனின் பார்வை அவனை தான் சுட்டது. அலட்சியமான ஒரு பாவனையுடன் அங்கிருந்த ஒரு இருக்கையில் சென்று அமர்ந்துவிட்டான் வெற்றி.

மற்றவர்களும் அங்கிருந்த இருக்கையில் தளர்ந்து அமர்ந்துவிட்டனர். கடிகார முள் அநாசமாய் நிமிடங்களை விழுங்கிக் கெண்டிருந்தது. இடைபட்ட நேரத்தில் அறிவின் தாயும் தந்தையும் கூட வந்துவிட்டிருந்தனர்.

மேலும் சில நிமிட தவிப்புக்கு பிறகு சோர்ந்த முகத்துடன் வெளியில் வந்தார் அனு. அங்கிருந்த கூட்டத்தை பார்த்து ஒரு சிறு தயக்கம் அவரிடம்.

“எம் பேரனுக்கு ஒண்ணுமில்ல தானே… அவன் பொழைச்சுப்பான் தானே…” என்றார் கண்ணீருடன் திலகம்.

“உயிருக்கு எந்த ஆபத்துமில்ல… ஆனா கண்ணு முழிச்சா தான் மத்தது சொல்ல முடியும்… அதுவரை அப்சர்வேஷன்லையே இருக்கட்டும்…” என பொதுவாய் சொன்னவர் திலகத்தின் கலங்கி தவித்த விழிகளைப் பார்த்து, “கடவுள நம்புங்க… நம்ப அமுதனுக்கு ஒண்ணுமாகாது…” என்றார் ஆறுதலாய்.

“கனி… நீயும் அறிவும் மட்டும் என் ரூம்க்கு வாங்க… பேசணும்…” என்றவர் வேறெதுவும் சொல்லாது வேக எட்டுகளுடன் அங்கிருந்து சென்றுவிட, அதுவே அவர்களுக்கு ஒரு நெருடலைக் கொடுத்தது.

அவசரமாய் பின்தொடர்ந்த கனியோடும் அறிவோடும் வேந்தனும் இணைந்துக் கொண்டான். அவர்களோடு உள்ளே நுழைந்தவனை கேள்வியாய் பார்த்தார் அவர்.

“இது நான் ஹேண்டில் பண்ணற கேஸ்… அமுதனுக்கு என்னனு தெரிஞ்சுக்க வேண்டியது என் கடமை மட்டுமில்ல உரிமையும் கூட…” என்றவன் சட்டமாய் அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்துக் கொண்டான்.

அவனை முறைத்துப் பார்த்தவர், வார்த்தையாட இது நேரமில்லை என்பதை உணர்ந்தவர் போல, கனிக்கும் அறிவுக்கும் அவர்களுக்கான இருக்கையை காட்டினார்.

“எனக்கு என்னமோ ரொம்ப பயமாயிருக்கு… அமுதனுக்கு ஒண்ணுமில்ல தானே ஆன்ட்டி…” என்றாள் தவிப்புடன் அவரிடம் கனி. அவரின் வருத்தம் தோய்ந்த முகமே விசயம் பெரிதென்றது.

“சாரி டூ சே திஸ் கனி…” என்றவரின் குரலில் உண்மையான வருத்தமிருந்தது.

“மத்தவங்களுக்கு சொல்லைனாலும் அவனோட பேரன்ட்ஸ் உங்களுக்கு சொல்லனுமே…” என்றவர் பெரும் துக்கத்தை விழுங்குவது போல எச்சிலைக் கூட்டி விழுங்கிக் கொண்டு தொடர்ந்தார்.

“அமுதனுக்கு ஹெவி ட்ரக்ஸ் இஞ்செக்ட் பண்ணி இருக்காங்க கனி… அது இரத்தம் முழுக்க கலந்துட்டு… இன்னும் கொஞ்சம் லேட்டா வந்திருந்தா கூட அவனுக்கு பிட்ஸ் வந்திருக்க வாய்ப்பு அதிகம்… அது என்ன மாதிரியான ட்ரக்ஸ்னு கண்டுபிடிக்க லேப்க்கு குடுத்துருக்கோம்…” என்றார் சோர்ந்த குரலில்.

“இனிமே அவனுக்கு ஒன்னும் ஆகாதுதானே…” என்றது அறிவு.

“இந்த அளவு ட்ர்க்ஸ பெரியவங்க எடுத்துட்டாளே சில நாட்கள் தொடர்ந்து போதை இருக்கும்… அவன் குழந்தை… இத அவன் உடம்பு தாங்காது அறிவு… இன்னர் ஆர்கான்ஸ் ஏதாவது டேமேஜ் ஆகலாம்… இல்ல மூளையோட செயல்பாட்ட பாதிக்கலாம்… இல்லைனா அது அவனை கோமாவுக்கும் கொண்டுப் போகலாம்… எதையுமே இப்ப உறுதியா சொல்ல முடியாது அறிவு… அவன் கண்ணு முழிச்சு… அவன முழுசா செக் பண்ண பிறகு தான் சொல்ல முடியும்… கண்ணு முழிச்சா கூட இரண்டு நாள் ஐ.சி.யூல அப்சர்வேஷன்லையே தான் இருக்கணும்…” என்றவர் தொண்டை செறுமியபடி தொடர்ந்தார்.

“சரியான நேரத்துக்கு உங்க பையன கிடைக்க வச்ச கடவுள்… அவன பொழைக்கவும் வைப்பானு நம்புங்க… கண்டிப்பா நம்ம அமுதனுக்கு ஒண்ணும் ஆகாது… நானும் அதை நம்பறேன்…” என்றார் உறுதியாய் அனு.

“மேம்… மேம்…” அனுமதியின்றி அவசரமாய் கதவை திறந்து உள்ளே நுழைந்த செவிலியரின் குரலில் பதற்றம் அப்படமாய் தெரிந்தது.

“என்னம்மா… என்னாச்சு…” என்றார் எழுந்து அவளை நோக்கி நடந்தபடியே பரிவாய் அனு.

“ஆரா… ஆரா மேடம திட்டி சண்ட போடறாங்க மேடம்…” என்றவளின் குரலில் பதற்றமே நிலமையின் தீவிரத்தை உரைத்தது.

                               பற்றி எரியும்…

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
2
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்