
தழல் 19:
வேகமாய் ஓடும் நொடி முள்ளை ஒருவித அச்சத்துடன் பார்த்திருந்தாள் ஆரா. இனம் புரியாத அச்சம் ஒன்று இதயத்தை இறுக்கி கவ்வி பிடித்திருந்தது. இப்படியே ஆளுக்கு ஒரு மூலையில் அமர்ந்திருந்தால் காணமல் போன பிள்ளை வந்துவிடுவானா என்ன?
தீவிர முக பாவத்துடன் அறிவை நிமிர்ந்துப் பார்த்தவள், “நீங்க முதல லோக்கல் ஸ்டேஷன்ல அமுதன காணும்னு ஒரு கம்பிளைண்ட் குடுத்துட்டு வாங்க அறிவு… நாம தேடறபடி தேடுனாலும் போலீஸும் ஒரு பக்கம் தேடுவாங்க இல்ல…” என்றாள் ஆரா. சொன்னாளே தவிர அவளுக்கு அத்தனை நம்பிக்கை எல்லாம் இல்லை. இவன் சென்று புகார் கொடுத்து, எப்பொழுது அவர்கள் தேட ஆரம்பிப்பார்களோ என்றுதான் தோன்றியது.
அவனும் அந்த யோசனையில் தான் இருந்தானோ? சரி என்னும் விதமாய் தலையாட்டி கிளம்பி விட்டான் அவன்.
“இருங்க அறிவு… நானும் உங்க கூட வரேன்…” என வெற்றியும் அவனோடு இணைந்துக் கொண்டான்.
சத்தமில்லாது தாயின் மடியில் அழுகையில் குலுங்கிக் கொண்டிருந்த தங்கையை தான் பார்த்தாள் ஆரா. அவளின் வேதனையை எவ்விதமான ஆறுதல் வார்த்தைகளும் தீர்க்க போவதில்லை என்று புரிந்தது. மகனைக் கண்ணால் காணும் முன் இந்த அழுகை நிற்கப் போவதுமில்லை என்றும் புரிந்தது.
இனி இவளால் செய்ய கூடிய எதுவும் இருப்பதாகவும் தெரியவில்லை. அவர்களுக்கு உதவக்கூடிய நம்பிக்கையான ஒரு ஆள் வேண்டும். நினைத்த மாத்திரம் வேந்தனிடம் தான் சென்று நின்றது அவளின் நினைவலைகள். நொடியும் யோசிக்காது அவனுக்கு அழைக்க கைப் பேசியை எடுத்து விட்டாள். கைப்பேசியின் தொடுதிரை உடைந்திருக்க, எதுவும் தெளிவாய் தெரியவும் இல்லை, அதை உபயோகிக்கவே முடியவில்லை. அழைப்புகள் வந்தால் மட்டும் ஏற்கும் வண்ணம் இருந்தது.
அதை மீண்டும் தன் கைப்பைக்குள் வைத்தவள், அன்னையின் கைப்பேசியை எடுத்துக் கொண்டாள். எவ்வித தடையுமின்றி மனனமாய் அவனின் எண்களை அதில் இயக்கியது அவள் விரல்கள். அழைப்பை ஏற்க அவன் எடுத்துக் கொண்ட இருபது விநாடிகளுக்குள் அத்தனை தவிப்பு அவளுக்கு.
“ஹலோ… அத்தை சொல்லுங்க…” என்றான் எடுத்ததும் பழக்கபட்ட நபராய் எதிர்பக்கம் வேந்தன்.
சில நொடிகள் இவளிடம் தயக்கம். அவனின் குரலை கேட்ட பின்புதான் நடந்தவை நினைவுக்கு வருகிறது. இப்படி அவனை உதறி தள்ளிவிட்டு மீண்டும் அவனிடமே போய் நிற்கிறோமே என தன்மீதே ஒரு சுயபச்சாதாபம் உண்டானது.
“ஆரா… ஆரும்மா… நீயா..? நீதானே…” பரிதவித்து ஒலித்தது எதிர்பக்கம் அவன் குரல். எப்படி கண்டுக் கொண்டானென ஒரு நொடி வியந்துதான் போனாள் அவள்.
“ம்ம்ம்…” அவள் சொன்னது அவனுக்கு கேட்டிருக்குமா என்பதே சந்தேகம். அத்தனை நலிந்து ஒலித்தது அவள் குரல்.
“என்னம்மா… எதுவும் பிரச்சனையா..?” குரலிலேயே அன்பையும் வாஞ்சையும் கடத்த முடியுமா? அவன் குரல் கடத்திக் கொண்டிருந்தது அவளுக்கு. எங்கே இவன் இப்படியே இன்னும் பேசினால் தாளாமல் உடைந்து கதறி அழுதுவிடுவோமோ என்றுக் கூட அவளுக்கு தோன்றியது.
“அமுதன காணும் வேந்தன்…” கமறிவிட்ட குரலில் ஒருவழியாய் சொல்லி முடித்திருந்தாள் அவள்.
“என்ன… என்ன சொல்லறம்மா… கனியோட பையனையா..? எப்போ இருந்து காணும்…” என்றான் படபடப்பாய் அவன்.
“காலையில ஒரு பதினொன்ரை மணியில இருந்து… நாங்க எல்லா இடத்துலையும் தேடிட்டோம்… எங்கையும் காணும்… எங்களுக்கு ரொம்ப பயமா இருக்கு வேந்தன்… அடுத்து என்ன பண்ணறதுனே தெரியல… அறிவு போலீஸ் கம்ப்ளைண்ட் குடுக்க போயிருக்காங்க… ஆனா… ஆனா… எனக்கு அவங்க தேடுவாங்கனு நம்பிக்கையே இல்ல… நீங்க வரீங்களா..?” என்றவளின் குரலில் பதற்றம் இருந்தது. காவல்துறை மீது நம்பிக்கையில்லை என்று ஒரு காவல்காரனிடமே சொல்லிக் கொண்டிருந்தாள் அவள்.
“ஒன்னுமில்ல ஆரும்மா… எப்படியும் நம்ம அழுதன் கிடைச்சுடுவான்… நீ எனக்கு அவன் போட்டோ ஒன்னு மட்டும் சீக்கரம் அனுப்பு… நான் வந்துட்டே இருக்கேன்… தைரியமா இரும்மா…” அவளிடம் கொண்டே கிளம்பியிருந்தான் வேந்தன். நேரம் கடத்தாமல், தனக்கு தெரிந்தவர்கள் மூலம், அமுதனை தேடும் பணியை தொடங்க செய்திருந்தான் வேந்தன்.
அடுத்த இருபது நிமிடத்தில் ஆராவின் வீட்டிற்கே வந்திருந்தான் அவன். அவனைப் பார்த்த நொடி அவள் கண்களில் அப்படியொரு நம்பிக்கையின் ஒளி. களைத்து கலைந்திருந்தவளை பார்த்த நொடி அள்ளி அணைத்து ஆறுதல் சொல்லும் வேகம் அவனுக்கு. தன்னை கட்டுபடுத்தியபடி வேகமாய் அவர்கள் மூவரையும் நெருங்கி இருந்தான் அவன்.
தவித்து அவன் முகம் பார்த்தவளுக்கு, “நான் பார்த்துக்கறேன் ஆரும்மா..? என மூன்றே வார்த்தைகளின் அவளுக்கான அத்தனை ஆறுதலையும் கடத்தி இருந்தான் அவன்.
என்னானது என்றவனுக்கு அழுதபடியே காலையில் நடந்ததை மீண்டும் ஒருமுறை சொல்லி முடித்தார் பர்வதம்.
“வேற யார் யார் பார்க்ல இருந்தானு சொல்ல முடியுமா அத்தை…” என்றான் பர்வதத்திடம். அவருக்கு நினைவில் இருந்தவர்களை சொன்னார் பர்வதம்.
“புதுசா யாராவது இருந்தாங்களா… அறிமுகமில்லாத எதாவது முகம்…” என்றான் கேள்வியாய் அவரிடம்.
“அப்படி யாரையும் நான் பாக்கலியே வேந்தா…” என்றார் அவர் பரிதாபமாய்.
“சரித்தை… நான் போய் அந்த லலிதாங்கறவங்கள விசாரிச்சுட்டு… மத்தவங்களையும் விசாரிக்கறேன்… இப்ப போலீஸும் விசாரிக்க வருவாங்க… நீங்க உங்களுக்கு தெரிஞ்ச வரைக்கும் சொல்லுங்க…” என்றான் ஆறுதலாய். கண்ணீருடன் சம்மதமாய் ஆடியது அவர் தலை.
“ஒரு நிமிஷம்… நானும் உங்களோட வரவா..?” என்ற ஆராவின் குரல் அவன் நடையை தேக்கியது.
யோசனையாய் அவள் முகம் பார்த்தான். அதில் அத்தனை இறைஞ்சுதல். நிச்சயமாய் அவளால் இங்கே இருக்க முடியாது என்று தோன்றியது.
“நான் என்னோட பைக்தான் எடுத்துட்டு வந்துருக்கேன் ஆரா…” என்றான் தயக்கத்துடன்.
“நான் என் ஸ்கூட்டில வரவா..?” என்றவளை தலை சாய்த்து கண்கள் இடுங்க பார்த்தவன், “சரி வா…” என்றபடியே முன்னால் சென்று விட்டான்.
அவள் வாகனத்தை வெளியே எடுத்து வந்து நிறுத்த, சத்தமில்லாது பின்னால் வந்து அமர்ந்தான் அவன்.
“என்ன பண்ணறீங்க நீங்க..?” உஷ்ணத்தோடு வந்து விழுந்தது அவள் வார்த்தைகள்.
“கை வலிக்குது ஆரா… ட்ரைவர் கார் எடுத்துட்டு கவிய டீயூசன்ல விட போய் இருந்தாரு… நீ சொல்லவும் ஒரு வேகத்துல பைக் எடுத்துட்டு வந்துட்டேன்…” என்றான் மெல்லிய குரலில். உண்மையும் அதுவாகதான் இருந்தது.
அழுந்த நெற்றியை நீவி விட்டுக் கொண்டவள், ஒன்றும் சொல்லாமல் வாகனத்தை செலுத்தினாள். மீண்டுமே அதி தீவிரமான தேடுதல் வேட்டை ஒன்று தொடங்கிருந்தது. அதில் காவல் துறையும் இணைந்துக் கொண்டிருந்தது. இரவு முழுவதும் கோவையின் ஒவ்வொரு வீதிகளிலும் அவனல தேடி அலைந்துக் கொண்டிருந்தனர் அவர்கள்.
இரவின் இருள் கரைந்து ஒளிக்கதிர்கள் கொஞ்சமாய் தன் தளிர் கரம் நீட்ட துவங்கி இருந்த நேரமது. இன்னமும் அமுதனைப் பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை. கொஞ்சம் கொஞ்சமாய் அவர்கள் கொண்டிருந்த நம்பிக்கை கரைந்துக் கொண்டிருந்தது.
அந்த பூங்காவின் வெளியே தனது வண்டியை நிறுத்தியவள், திரும்பி வேந்தனைப் பார்க்க இறங்கிக் கொண்டான் அவன். அவனை முறைப்பதற்கு கூட உடலில் வலு இல்லாதவளைப் போல அத்தனை சேர்ந்துப் போயிருந்தாள் ஆரா. தளர்ந்த நடையுடன் அமுதன் கடைசியாய் விளையாடிய ஊஞ்சலின் எதிரிலிருந்த பெஞ்சில் சென்று மௌனமாய் அமர்ந்துக் கொண்டாள் அவள். சில நொடிகள் அவளையேப் பார்த்தபடி அமைதியாய் நின்றான் அவன். அத்தனை பாவமாய் இருந்தது அவனுக்கு.
“வீட்டுக்கு போய் கொஞ்சம் ரெஸ்ட் எடு ஆரும்மா… எப்படியும் அமுதன் கிடைச்சுடுவான்… நான் கண்டு புடிச்சுடுவேன்… என்ன நம்பணும் நீ…” என்றான் ஆழ்ந்த குரலில்.
“இல்ல… என்னால வீட்டுக்கு போக முடியாது… கனி அழுதுட்டு இருப்பா… என் பையன் கிடைச்சுட்டானானு கேட்டா… என்ன சொல்லுவேன் நான்..?” என்றவளின் கண்ணீர் தேங்கி இமைகளில் நின்றது.
“இதென்ன சின்ன பிள்ளை மாதிரி இத்தனை அடம் ஆரு உனக்கு… நீ வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடும்மா…”
“இல்ல நான் உங்க கூடவே இருக்கேன்… நீங்க தான் அமுதன கண்டு பிடிச்சுடுவேனு சொன்னீங்களே… கண்டு பிடிச்சு என் கையில குடுங்க… அதுக்கு அப்பறம் நான் வீட்டுக்கு போறேன்…” என்றாள் உறுதியாய். அவளின் சிறுப்பிள்ளை அடத்தில் சிரிப்புக் கூட வந்தது அவனுக்கு.
“சரி போக வேண்டாம்… ஏதாவது சாப்பிடறீயா..?” என்றான் அன்பொழுக.
மறுப்பாய் தலையசைத்தவள், “கண்டு பிடிச்சுடுவீங்க தானே…” என்றாள் அவனை கண்களை ஊடுறுவிப் பார்த்து சந்தேக குரலில்.
‘நான் மட்டும் வெத்தலையில மை தடவியாடி கண்டுபிடிக்க முடியும்…’ என நினைத்துக் கொண்டவனுக்கும் கிடித்துவிட வேண்டுமே என்ற தீவிர வேண்டுதல் தான். “கிடைச்சுடுவான் ஆரும்மா…” என்றான் மெல்லிய குரலில்.
பதிலெதுவும் சொல்லாமல் கண்மூடி தலைசாய்ந்து அமர்ந்துக் கொண்டாள் அவள். தனது கைப்பேசியில் யாரிடமோ பேசியபடி சற்று தூரம் நகர்ந்து சென்றிருந்தான் வேந்தன்.
கொஞ்ச நேரத்தில் கைப்பையில் இருந்த இவளது போன் ஒலிக்க, அதை இயக்கி “ஹலோ…” என்றபடியே காதில் வைத்திருந்தாள் அவள்.
“ஹேய்… மை ஸ்வீட் கிட்டி…” என்றது எதிர் பக்கத்தில் ஒரு ஆண்குரல். அந்த அழைப்பில் தனது கைப்பேசியை நழுவ விட்டிருந்தாள் அவள்.
அழைப்பு நின்று மீண்டும் ஒலிர, அதை எடுக்க முடியாத அளவிற்கு நடுங்கியது அவளின் கரங்கள். நடுங்கும் ஒரு கரத்தால் நடுங்கும் இன்னொரு கரத்தை இறுக பிடித்தபடியே, கைப்பேசியை இயக்கி காதுக்கு கொடுத்தாள்.
“யாரு… யார் பேசறீங்க..?” என்றவள் குரலும் நடுங்கியது
“ஹோ… மை ஸ்வீட் க்யூட் கிட்டி… பயந்துட்டீங்களா..?” அந்த குரலில் குறும்பும் கேலியும் கூத்தாடியது.
“யாரு… யார் நீ..?” வார்த்தைகள் தந்தியடித்தது அவளுக்கு. கைப்பேசி நழுவி கீழே விழுந்துவிடாமல் இருக்க இன்னுமே இறுக பற்றிக் கொண்டாள். அவளின் கைவிரல்கள் பதிந்திருந்த இடத்தில் கொஞ்சம் கொஞ்சமாய் சிவப்பேறிக் கொண்டிருந்தது.
“பாருடா… என் கிட்டிக்கு என்ன அடையாளம் தெரியல…” அத்தனை இளக்காரம் அந்த குரலில்.
“அமுதன் எங்க…? என்ன பண்ண அவன..?” மற்றதையெல்லாம் ஒதுக்கி முக்கியமான விசயத்திற்கு தாவியிருந்தாள் அவள். அவன் தான் அமுதனை ஏதோ செய்திருக்க வேண்டும் என்பதில் அத்தனை திடம்.
பலமான சிரிப்பு சத்தம் அந்த பக்கம். “ஹோ… மை ஏஞ்சல்… இவ்வளவு புத்திசாலியா இருக்க வேண்டாம் நீ…” என்றவனின் குரலில் மெச்சுதல்.
“அமுதன என்ன பண்ணேனு கேட்டேன்…” தீடிரென ஆங்காரமாய் மாறியிருந்த அவளின் குரலில் அவனுக்கு ஆச்சரியம் ஏற்பட்டிருக்க வேண்டும்.
“உன் தங்கச்சிக்கு நீனா ரொம்ப இஷ்டமோ கிட்டி… பிள்ளைக்கு கூட ஆராவமுதனு பேர் வச்சுருக்கா..? ஒருவேளை நீயா பிள்ளையானு வந்தா யார் பக்கம் இருப்பா கிட்டி…” என்றான் அவன் எள்ளல் குரலில்.
“அமுதன் எங்கடா..?” என்றாள் சத்தமாய் இவள். அவளின் சத்ததில் கைப்பேசியை அணைத்து சட்டை பையில் வைத்துவிட்டு அவளை நெருங்கி வந்திருந்தான் வேந்தன். அதையெல்லாம் கவனிக்கும் நிலையில் அவளில்லை.
“ஸ்ஸ்ஸ்… கத்தாதடி… உனக்கு அவன் இருக்க இடம் தெரியணும்னா அமைதியா நான் சொல்லறத கேக்கணும்… அத விட்டுட்டு இப்படி கத்திட்டு இருந்த எனக்கென்ன மயிராச்சுனு வச்சுட்டு போய்ட்டே இருப்பேன்… புரியுதா..?” என்றான் அவன் அதட்டலாய். பதிலெதும் சொல்லது அமைதியாய் இருந்தாள் அவள்.
“அச்சோ… அழகுடி செல்லம் நீ… என் சமத்து பூனைக்குட்டி… இப்படி தான் நான் சொல்லற எல்லாத்தையும் சமத்தா கேட்டு சரியா நடந்துக்கணும்… புரிஞ்சுதா..?” என்றான் கொஞ்சலாய் அவன்.
அவள் பதிலெதும் சொல்லவில்லை என்றும் அவனே தொடர்ந்தான். “இந்த பூனை இருக்குல பூனை… உன்னை மாதிரி புசுபுசுனு அழகா… ஸ்வீட்டா… க்யூட்டா… அது நினைச்சுக்குமான்… தான் கண்ண மூடினா உலகமே இருண்டு போச்சுனு… அதே மாதிரி என் பூனைக்குட்டி என்ன நினைச்சுட்டுன்னா… நான் அனுப்புன கிப்ட் எல்லாம் பிரிச்சு பாக்கலைனா… நான் அது பக்கமே வர மாட்டேனு… ரொம்ப சில்லியா இல்லே…” என மெல்லிய சிரிப்பை சிந்தினான் அவன்.
அப்பொழுதும் அவள் அமைதியை கடைபிடிக்க, “இந்த உலகத்துல நீ எந்த மூலைக்கு போனாலும் என்கிட்ட இருந்து தப்பிக்க முடியாது கிட்டி… அப்படி உன்ன ஈஸியா விட்டுடவும் மாட்டேன்… ஏன்னா திருப்பி குடுக்க நிறைய இருக்கே…” என்றான் கேலி குரலில்.
“இன்னைக்கு நான் உனக்கு அனுப்பியிருக்க கிப்ட் ரொம்ப ரொம்ப ஸ்பெஷல்… தொலைச்சுடாத… தொலைச்சுட்டா இன்னொரு தடவ கிடைக்கறது ரொம்ப கஷ்டம்…” என்றவனின் குரலில் ஒரு குரூரம் வழிந்தது.
“இனிமேல் உன்கிட்ட இருக்க ஒவ்வொன்னா தொலைக்க போறாடி… தொலைச்சுட்டு நீ தவிச்சு நிக்கறத பாத்து நான் சந்தோஷப் படப் போறேன்…” என்றனின் சிரிப்பு சத்தம் கொடூரமாய் ஒலித்தது. அதனை தொடர்ந்து, “கெட் ரெடிஃபார் டெவில்ஸ் ரிவெஞ்…” என்றதோடு அந்த அழைப்பு துண்டிக்கபட்டிருந்தது.
– பற்றி எரியும்…

