
தழல் 18:
அவளின் அருகாமையில் அவன் உருகி கரைந்துக் கொண்டிருந்தான். அவளின் விரிந்த விழிகள் இரண்டும் படபடத்து பரிதவித்துக் கொண்டிருந்தது. அந்த விழிகளுக்குள் மூழ்கியபடியே தன்னை தொலைத்து அவளை நிறைத்துக் கொண்டிருந்தான். தேன் உண்ட வண்டாய் அவன் இமைகளும் மயங்கி கவிழ்ந்துக் கொண்டது. கட்டவிழ்ந்திருந்த மோகமொன்று இருவரையும் பிணைத்திருந்தது.
அவளின் மறுப்போ, தேங்கி நின்ற ஒரு துளி கண்ணீரோ எதுவுமே அவனைக் கட்டுபடுத்தவும் இல்லை. கவனித்தில் பதியவும் இல்லை. உண்மையில் அவளுமே அவனை அத்தனை பலமாய் விலக்கிட முனையவில்லையே! அவளுமே அந்த முத்ததில் ஒரு சில நொடிகள் மயங்கி, திண்டாடி திணறிப் போனது சத்தியமான உண்மை தானே!
நொடிகள் நகர்ந்து நிமிடத்தை தொட்ட நேரம், வலுக்கட்டாயமாக தன்னிலிருந்து அவனை விலக்கி உதறி தள்ளியிருந்தாள் அவள். அவளின் உடல் நிலைக் கொள்ளாமல் உதறிக் கொண்டிருந்தது. நாற்கலியின் விளிம்புகளை இறுக பற்றிக் கொண்டவளுக்கு, இன்னுமே தன் அங்கமெங்கும் கரங்கள் ஊர்வதைப் போன்ற பிரம்மை. நொடிக்கும் குறைவான நேரம் அருவெறுப்பில் அவளின் முகம் விகாசித்தது.
நிலை தடுமாறி கீழே விழப் போனவன், கடைசி நொடியில் சுதாரித்து கால்களை அழுந்த ஊன்றி நின்றான். நிச்சயமாய் அதை அவன் எதிர் பார்த்திருக்கவில்லை. இப்படியான ஒரு மறுப்பை அவளிடம் சர்வ நிச்சயமாய் அவன் எதிர்பார்க்கவே இல்லை.
உறுதியாய் நின்றுவிட்டாலுமே கூட சட்டென்று நிமிர்ந்து அவள் முகம் பார்க்க முடியவில்லை. அவளின் பாதத்தில் பதிந்திருந்தது அவன் பார்வை. அவளின் உடலில் இன்னுமே நடுக்கம் இழைந்தோடிக் கொண்டிருந்தது. அவள் முகம் பார்க்காமலேயே அந்த நடுக்கத்தை அவனால் உணர முடிந்தது. இமைகளின் பள்ளத்தாக்கில் தேங்கி நின்ற நீர் எப்போது வேண்டுமானாலும் கொட்டி விடுவேன் என அவளுக்கே பயம் காட்டிக் கொண்டிருந்தது.
‘என்ன செய்து விட்டேன் நான்…’ தன்னை தானே கேட்டுக் கொண்டவனுக்கு பதில் தான் தெரியவில்லை. எத்தனை ஆழ்ந்து யோசித்தாலும் அதற்கு பதிலில்லை. திட்டமிட்டு நடந்தேறிய குற்றமா இது? நொடியில் அவளின் அருகாமையில் நேர்ந்த தடுமாற்றம் அது. அதற்காக குற்றமில்லையா என்றால், மாபெரும் பாதகம் என்றது மனது. நிமிர்ந்து அவளின் முகம் பார்த்து மன்னிப்பை யாசிக்கவும் கூசி நின்றது குற்றவுணர்வை சூடிக் கொண்ட அவன் மனது.
நொடிகள் ஆனாலும் இவனின் அருகாமையில் இவன் கரங்களில் உருகி மனமிளகி அவள் நின்றது உண்மை தானே! அதை அவனாலும் உணர்ந்துக் கொள்ள முடிந்தது தானே! ஆனால், அதற்கு பின் என்ன வந்தது என்ற கேள்விக்கு அவன் தேடி அறிந்தவற்றை விடையாய் பொருத்திப் பார்க்கும் போது இன்னுமே மனம் வலித்தது. அவளை காயப்படுத்தி விட்டோமோ என்ற எண்ணம் உயிரை குடித்தது.
அவளைப் பற்றி முழுமையாக அறிந்துக் கொள்ள வேண்டுமென்று அவன் முடிவெடுத்த பின், அவனுக்கு இந்த இரண்டு நாட்களே அதிகமாய் தான் இருந்தது. ஆனால், அறிந்துக் கொண்ட உண்மைகள் தான் உவப்பாய் இல்லை.
எத்தனை நாழிகை தான் இப்படியே தலையை தொங்க போட்டுக் கொண்டு நிற்பது. மெல்ல நிமிர்ந்து அவளின் முகம் பார்த்தான். இன்னுமே கொஞ்சமும் குறையவில்லை அவளின் நடுக்கம். ‘நீயா இப்படி..?’ என்ற குற்றம் சாட்டும் பார்வையை அவனை நோக்கி வீசியிருந்தாள் கூட தாங்கியிருப்பான் போல. ஆனால் அவளோ அடிபட்ட சிறு பறவையின் பலகீனமான மருண்ட பார்வை ஒன்றை அவனை நோக்கி வீசினாள். துடித்துப் போனது அவன் உயிர். அப்படியே அவளை அள்ளி மார்ப்பு கூட்டோடு புதைத்துக் கொண்டு ஆற்றுப்படுத்த வேண்டுமென்பதைப் போன்ற வெறியே உண்டானது. ஆனால் அதை செய்ய முடியாத கையாலாகாத தனத்தோடு விரல்களை அழுந்த மூடியபடி நின்றுக் கொண்டிருந்தான் அவன்.
“ஆரா…” ஒரு யாசகனின் குரல் போல் அத்தனை பரிதவித்து ஒலித்தது அவன் குரல். ‘என்னை இப்படி பார்க்காதேயேன்..!’ என வேண்டி மன்றாடியது இந்த குரல்.
சட்டென்று இருக்கையிலிருந்து எழுந்துக் கொண்டவள், வேகமாய் வெளியேற எத்தனிக்க, தடுக்கும் பொருட்டு அவளை நோக்கி உயர்ந்திருந்தது அவன் கரம். நொடியில் பதறி அவனின் தொடுகையில் இருந்து தப்பிப்பவளைப் போல சட்டென்று இரண்டடி தள்ளி நின்றாள் அவள். அவளின் அடிப்பட்ட பார்வையொன்றை அவள் பக்கம் வீசினான் அவன். அதைவிட அதிகமாய் அடிப்பட்டுப் போயிருந்தது அவனின் உள்ளம்.
அந்த பார்வையை எதிர்கொள்ள விரும்பாதவளாய் வேகமாய் தலை கவிழ்த்துக் கொண்டவள், அவன் முகம் பாராமலேயே வேகபாய் அவனை கடந்து வெளியேறி இருந்தாள் அவள். இம்முறை அவளை தடுக்க விரும்பவில்லை அவன் மனம். இன்னொரு ஒதுக்கத்தை தாங்கிக் கொள்ளும் நிலையில் இப்போது அவன் மனமில்லை.
வேகமாய் தனியறைக்குள் புகுந்து கதவடைத்துக் கொண்டவனுக்கு மனம் சமன்படவேயில்லை. ‘இனி எப்படி அவளை எதிர் கொள்வது? என்னவென்று சமாதானம் சொல்வது?’ என்ற பெருங்கவலை உள்ளத்தை ஆக்கிரமித்துக் கொண்டது. என்னவென்றாலும் இனி அவளை விட்டு விலகிவிட முடியுமென்று மட்டும் அவனுக்கு தோன்றவில்லை.
நெற்றியை அழுந்த பற்றியபடி அமர்ந்திருந்தவளுக்கு இன்னுமே நம்ப முடியவில்லை. எத்தனை இருமாந்திருந்தாள். எல்லாவற்றையும் கடந்து விட்டதாய்; மறந்து விட்டதாய். ஒரே ஒரு நொடியில் அத்தனையும் இல்லையென்று ஆகிவிட்டதே! மேலெழுந்த உணர்வுகளை, தவிப்பை, பயத்தை அடக்க தெரியவில்லையே அவளுக்கு.
தன் மனதை கட்டியாளும் மந்திர சாவி தன்னிடம் இருக்கிறது என்றல்லவ்வா இத்தனை காலமும் எண்ணிக் கொண்டிருந்தாள். எத்தனை எத்தனைப் பேருக்கு மனதவில் நம்பிக்கை தந்திருப்பாள், மனதை தேற்றி மீண்டும் மனிதராய் நடமாட உதவியிருப்பாள். ஆனால் அவள் மனதை தேற்றி, தேக்கி வைத்திருந்த கசடுகளை வெளியேற்ற முடியவில்லை என்றால் அவளென்ன உளவியல் மருத்துவர்.
வெளிப்புற காயங்கள் தான் ஆறிப் போனதாய் தோற்றமளிக்கிறது. உள்காயமும் வடுக்களும் இன்னும் அப்படியே தான் இருக்கிறது. அதை சீண்டாத, தீண்டாத வரை அதன் ஆழமென்ன என்பலு யாருக்கு தெரிந்துவிடப் போகிறது. தெரிந்தாலும் காயத்திற்கான மருந்திட உரியவர் அனுமதித்தால் அல்லவா முடியும். சில நஞ்சுகளுக்கு நஞ்சு முறிப்பானாகவும் அதே நஞ்சு தான் இருக்கிறது. என்ன அதை எடுத்துக் கொள்ளும் முறைமையில் விகிதத்தில் மாறுபாடு இருக்கிறது. அதை அவளும் உணர்ந்துக் கொள்ள வேண்டுமே?
எத்தனை நேரம் அப்படியே அமர்ந்திருந்தாளோ? விடாமல் ஒலித்த கைப்பேசிக் கூட அவளின் சிந்தனையை களைக்கவில்லை. பலமுறை ஒலித்து அது அதிர்ந்து கீழெ விழுந்த நொடி தான் புத்திக்கு அதன் இருப்பு உரைத்திருந்தது.
கீழே விழுந்தும் இன்னும் விடாமல் ஒலித்துக் கொண்டிருந்தது அது. வேகமாய் எடுத்துப் பார்க்க, தொடுதிரை முழுவதும் நொறுங்கிப் போயிருந்தது. அவசரத்திற்கு அழைப்பைக்
கூட ஏற்க முடிவில்லை. அழைத்தது அன்னை என்றதும் சிறுதயக்கம்.
அழைப்பு சத்தம் அடங்கி மீண்டும் ஒலித்தது. ஒருவழியாய் போராடி இயக்கி கைப்பேசியை காதுக்கு கொடுத்தாள்.
“சொல்லுங்கம்மா…” எத்தனை முயன்றும் அந்த குரலில் வலிகள் தெரிந்தது. அவளின் குரலில் இழைந்தோடிய உணர்வை நிச்சயமாய் வேறு ஒரு நேரமாய் இருந்தாய் பர்வதம் கண்டுக் கொண்டிருப்பார்.
எதிர்பக்கம் அத்தனை அமைதி. பேச வார்த்தைகளை தேடுபவரை போல் தடுமாறியது பர்வததின் குரல்.
“என்னம்மா… என்னனு சொல்லுங்க…” என்றவளுக்கும் உண்மையிலேயே பதறியது.
அவரின் வார்த்தைகள் வெளிவரும் முன்னமே விசும்பல் தான் முன் வந்து அவளை அடைந்தது. “ஆரும்மா…” என்னவரின் குரல் அழுகையில் கரைந்திருந்தது. அவள் அன்னை அழுகிறாரா? நம்பதான் முடியவில்லை அவளால்.
நிலமையின் தீவிரம் புரிந்தவள், அந்த நொடியே தோள் பையை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டாள். அன்னை இன்னும் பதற்றபடுத்தாமல், அவசரபடுத்தாமல் அவரே விசயத்தை சொல்லும் நொடிக்காய் காத்திருந்தாள்.
“அமுதன காணும் ஆரா…” மெல்லிய விசும்பலுக்கு இடையே சொல்லி முடித்திருந்தார் அவர். அவளின் வேகநடை அப்படியே தடைப்பட்டு நின்றுப் போனது. உள்ள
“என்னம்மா சொல்லறீங்க…”
“இங்க தான்… வழக்கம் போல பார்க்
வந்தோம் ஆரும்மா… என் கண்ணு முன்னாடி தான் விளையாடிட்டு இருந்தான்… எங்க… எப்படினு தெரியவே இல்ல ஆரும்மா…” என்றவரின் குரல் தழுதழுத்து கண்ணீர் பெருகிக் கொண்டிருந்தது.
“நல்லா தேடிப் பாத்தீங்களம்மா… அங்கதான் எங்கையாவது விளையாடிட்டு இருப்பான்…” என்றவளின் வார்த்தைகள் அவளுக்கே அபத்தமாய் பட்டது.
“இரண்டு மணி நேரமா தேடுறேனே… கிடைக்கலையே… அக்கம் பக்கத்துல நம்ம தெருவுலனு எல்லா இடத்துலையும் தேடிட்டேன்… எங்கையுமே காணுமே…” என்றவரின் குரல் அழுகையை அடக்கிக் கொண்டிருந்தது.
“நான் என்ன பண்ணட்டும் ஆரும்மா…” என்றவரின் குழந்தை தனமான தவிப்பில் உருகிப் போனது இவளுக்கு.
“அழுதனுக்கு ஒன்னும் இருக்காது… நான் வந்துட்டே இருக்கேன்… இன்னும் கொஞ்ச நேரத்துல அங்க இருப்பேன்… நீங்க அமைதியா இருங்க…” என்றவள் மற்றவை எல்லாவற்றையும் மறந்தவளாய் அங்கிருந்து கிளம்பி இருந்தாள்.
இன்னும் என்னவெல்லாம் வைத்துக் கொண்டு இந்த வாழ்க்கை அவளுக்காக காத்திருக்கிறதோ என்ற எண்ணம் ஆயாசத்தை உண்டுப் பண்ணியது.
தூரத்திலிருந்தே அவள் வருவதைப் பார்த்துவிட்டான் வெற்றி. ‘இந்த நேரத்தில் வர மாட்டாளே..!’ என்ற எண்ணத்துடேனே அவளைப் பார்த்திருக்க, மின்னலென அவனைக் கடந்துச் சென்றிருந்தாள் அவள். அவளின் வேகம் அவனைத் திடுக்கிட செய்திருந்தது. யோசிக்காமல் அவளின் பின்னே தனது வாகனத்தையும் விரட்ட துவங்கி இருந்தான் அவன்.
இன்னும் அந்த பூங்காவின் வாசலிலேயே தவிப்போடு நின்றிருந்தார் பர்வதம். இவளை கண்ட மாத்திரத்தில் அழுகை வெடித்துக் கொண்டு கிளம்பியது.
அவசரமாய் வாகனத்தை நிறுத்தும் முன்னமே ஓட்டமும் நடையுமாய் அவளை அடைந்திருந்தார் அவர். அவளின் கையைப் பற்றி உள்ளே இழுத்துக் கொண்டுப் போனவர், “இங்க இங்க தான்… புள்ள ஊஞ்சல் ஆடிட்டு இருந்தான்… நான் இந்த பெஞ்சுல உக்காந்து தான் பார்த்துட்டே இருந்தேன்… லலிதா தெரியும்ல உனக்கு… நமக்கு இரண்டு வீடு தள்ளி இருக்காங்களே… அவங்க வரவும், அவங்ககிட்ட பேசிட்டே அவனை தான் பாத்துட்டு இருந்தேன்… எப்போ எப்படி காணாம போனானு யாருக்குமே தெரியல…” என்றவரால் அழுகையை அடக்கவே முடியவில்லை. அந்த லலிதா என்றவரோடு இன்னும் சிலரும் அங்கே நின்றிருந்தனர்.
அவர் பேச ஆரம்பிக்கும் பொழுதே அவர்களை நெருங்கியிருந்த வெற்றிக்கும் நொடியில் விசயம் புரிந்தது. “நீங்க கவலைப்படாதீங்க அத்தை… இத்தனைப் பேர் இருக்கும் போது எங்க போய்ட போறான்…” என்ற அவனின் வார்த்தைகளில் தான் வெடுக்கென நிமிர்ந்துப் பார்த்தாள் அவனை.
‘நீ எப்படி இங்கே..?’ என்ற கேள்வி தொக்கி நின்றது அதில். அதை உணர்ந்துக் கொண்டவனாய், “நீங்க அவசரமா போறதைப் பார்த்தேன்… இவ்வளவு வேகமா எப்பவும் போக மாட்டீங்களா..? என்னமோ ஏதோனு மனசு பதறிப் போச்சு… அதுக்கு மேல அப்படியே அங்க நின்னுட்டு இருக்க முடியல என்னால…” என்றவனிடம் விதண்டாவாதம் செய்யும் அளவிற்கு அவளுக்கு தெம்பில்லை.
“இங்க விளையாண்ட பிள்ளையா காணும்னா தெரிஞ்சவங்க யாரவது கூட்டிட்டு போயிருப்பாங்களா அத்தை…” என்றான் வெற்றி அவரிடம்.
“இல்லையே தம்பி… யார் கூப்பிட்டாலும் போற பிள்ளை இல்லையே… கனி வந்து கூப்பிட்டாலும் என்கிட்ட சொல்லாம போக மாட்டானே…”
“அப்போ தெரியாதவங்க யாராவது சாக்லேட் பிஸ்கேட்… இப்படி ஏதாவது குடுத்து கூட்டிட்டு போயிருப்பாங்களோ..?” என்றவனை ஆரா பார்த்த பார்வையில் அனல் தெரித்தது.
“தெரியாதவங்க யார் கூப்பிட்டாலும் போகவும் மாட்டான்… சாப்பிட குடுத்தாலும் வாங்க மாட்டேனே… இப்ப என்ன பண்ணுவேன் நான்… எங்க புள்ள போனான்… என்ன ஆனானு ஒன்னுமே தெரியலே…” என்றவரின் அழுகை அதிகமாகிக் கொண்டே இருத்தது. ஆராவையை காணும் முன் வரையும் கூட அழுகையை அடக்கி மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டு பேரனை தேடியவரால் இப்போது முடியவில்லை.
“ம்மா… அழுதா அமுதன் கிடைச்சுட போறதில்லை… புரியுதா உங்களுக்கு…” அவளின் அவசரமான அதட்டல் குரலில் அழுத விழிகளோடு அவளைப் பார்த்தார் அவர். பாவமாய் போனது அவளுக்கு.
“கனிக்கு சொல்லிட்டீங்களா..?” என்றாள் தண்மையான குரலில்.
“என்னனு சொல்லுவேன் நான்… உன்ன நம்பி தானே என் புள்ளைய விட்டுட்டு போனேன்… இப்ப என் புள்ள எங்கம்மானு கேட்டா என்ன பதில் சொல்லுவேன் நான்..?”
“நம்ம கனி அப்படி சொல்லுவாளாம்மா..? ஒருவேளை அவ மாமியார் வீட்டுல இருந்து யாராவது வந்து கூட்டிட்டு போயிருந்தா..? அந்த அம்மா வீம்புக்கே என் பேரப்புள்ள தூக்கிக் கொண்டு வச்சுக்கிட்டாலும் வச்சுக்கும்…” என்றவள் குரலில் அப்படியொரு ஒவ்வாத தன்மை.
எப்படி இருந்தாலும் பெற்றவளுக்கு சொல்லி தானே ஆக வேண்டும் என்பதை உணர்ந்தவராய், கனிக்கும் அறிவுக்கும் அழைத்துச் சொன்னார் அவர். அடுத்த அரை மணி நேரத்திற்கெல்லாம் அவர்கள் இருவருமே அங்கே வந்திருந்தனர்.
ஆரா நினைத்தபடி, அழுதனை திலகமும் அழைத்துச் சென்றிருக்கவில்லை. வெற்றி, ஆரா, கனி, அறிவு என ஆளுக்கு ஒரு பக்கமாய் தேடியும், எங்கும் அமுதனை காணவில்லை.
மாலையும் மங்கி, இருள் கொஞ்ச கொஞ்சமாய் கவிழவும் தான் அவர்களை உண்மையான பயமே பிடித்தது. கனி தாயைக் கட்டிக் கொண்டு தேம்மி தேம்பி அழுதுக் கொண்டிருந்தாள். அவளையேப் பார்த்தபடி மற்ற மூ
வரும் கையறு நிலையில் செய்வதறியாது திகைத்து நின்றிருந்தனர்.
– பற்றி எரியும்…

