Loading

தழல் – 17:

மெல்ல பின்னோக்கி நகரும் மரங்களை ஆசையாய் விழிகளில் தழுவியபடியே தனது வாகனத்தை செலுத்திக் கொண்டிருந்தாள் ஆரா. குறிப்பிட்ட அந்த சரக்கொன்றை மரம் வந்ததும், தன்னால் வண்டியின் வேகம் குறைந்தது. இன்றும் அவன் அங்கே நின்றிருந்தான். கைகளைக் கட்டியபடி தனது இருசக்கர வாகனத்தில் சாய்ந்து நின்றிருந்தவன் பார்வை இவளில் மட்டுமே பதிந்திருந்தது.

நெருங்கி வந்த நொடி, சின்னதாய் தலை சாய்த்து இதழ்கள் விரிய புன்னகைத்தவன், ஒற்றை கண்சிமிட்டி “ஐ லவ் யூ ஆரா…” என்றான் சத்தமாய் பறக்கும் முத்தமொன்றை தூதனுப்பி. சின்னதொரு தோள் குலுக்கலுடன் அவனை கடந்துப் போயிருந்தாள் ஆரா.

பார்வையிலிருந்து மறையும் வரை அவளை தான் வெறித்திருந்தது வெற்றியின் விழிகள். கடந்த ஒருவார காலமாக தவம் போல் இங்கே தான் நின்றிருக்கிறான் அவனும். அத்தனை நாளும் பொழும் அவனை அலட்சியமாய் கடந்து சென்றாலே தவிர, ஒரு முறைக்கூட நின்று பேசிடும் எண்ணமில்லை அவளுக்கு. எத்தனை விளக்கிச் சொன்னாலும் விளங்கிக் கொள்ள மாட்டேன் என்பவனிடம் என்னத்தை சொல்வதென்று விட்டு விட்டாள் போலும்.

தனது அறைக்குள் நுழைந்தவளுக்கு தன்னைப் போல வேந்தனின் நினைவு வந்து ஒட்டிக் கொண்டது. இன்றோடு அவன் அறக்கட்டளைக்கு வந்து இரண்டு தினங்கள் ஆகிறது. ‘ஏன் வரவில்லை..?’ என யாரிடமும் கேட்டுவிடும் துணிவு அவளுக்கு இல்லை.

அவள் தான் அவனை தவிர்த்து ஓடி ஓடி ஒழிந்தாள். அவன் முகம் பார்க்க கூட மறுத்தாள். இந்த கட்டிடத்தில் ஏதோ ஒரு இடத்தில் அவனும் இருக்கிறான் என்ற போது இருந்த மன நிறைவு அவன் இங்கில்லை என்ற போது பறிப் போயிருந்தது. அவனைக் காயப் படுத்தி விட்டோமோ என்ற பரிதவித்தது.

விலகிப் போனவளை அவன் நெருங்கி வரவும் இல்லை; வார்த்தைகளால் சீண்டவுமில்லை; காதலிக்க தூண்டவுமில்லை. அப்படியொருத்தி அங்கே இல்லவே இல்லை என்னும் விதமாய் மொத்தமாய் ஒதுங்கிக் கொண்டான். அவள் பார்வையில் விழுவதை கூட அறவே தவிர்த்துவிட்டான். ஒரு வகையில் அவள் எதிர் பார்ப்பதுவும் அதுதானே! நியாயமாக பார்த்தால், அவளின் மனம் நிம்மதிக் கொண்டிருக்க வேண்டும். ஆனால், அதுவோ அதற்கு நேர்மாறாய் பரிதவித்து அவனை கண்டு விட மாட்டோமா என தவித்துக் கிடந்தது.

தன் மன ஓட்டத்தை துல்லியமாய் அறிந்துக் கொண்டவளுக்கு பெரும் அதிர்ச்சி தான். அவன் மீதான அன்பு எப்பொழுதுமே உண்டு! ஆனால் அது நேசமாய் துளிர்விட துவங்கிய நொடியை அறவே வெறுத்தாள். முளையிலேயே கிள்ளிவிட நினைத்தாள். வேகமாய் தலையை உலுக்கி அவன் எண்ணங்களை துரத்தியடிக்க முயன்றாள். அந்தோ! பரிதாபம். காலம் கடந்த ஞானயோதம். விழுது விட்ட ஆலமரத்தை துளிர்விடும் சிறுச்செடியென்று அவள் எண்ணிக் கொண்டால் யார் பொறுப்பு?

இன்னும் ஒரே ஒரு மாதம். இங்கிருந்து அவன் சென்றுவிட்டால், பழையபடி அவள் வாழ்க்கை இயல்புக்கு திரும்பிவிடும் என்று ஆழமாய் நம்பினாள். ஆனால் இந்த ஒருமாத காலத்திற்குள் அவள் வாழ்க்கை மொத்தமாய் தலைகீழாய் மாறப் போகிறதென்று யார் சொல்வது?

நேரமாவதை உணர்ந்தவள், தனது எண்ணங்களை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு வகுப்பிற்கு கிளம்பிவிட்டாள். அன்றைய தினம் யுவா வகுப்பிற்கு வந்திருக்கவில்லை. யோசனையாய் நெற்றியை நீவிவிட்டுக் கொண்டவள், வகுப்பு முடியும் தருணத்திற்காய் காத்திருந்தாள்.

முடிந்த மறுநொடி வேகமாய் அவளின் கால்கள் விடுதியை நோக்கி தான் பயணித்தது. இவள் சென்ற நேரம் விடுதி காப்பாளர், அவன் அறை வாயிலிலேயே நின்று உள்ளே எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார்.

இவளைக் கண்டதும், “குட் மார்னிங் மேடம்…” என்றார் அவசரமாய்.

சின்னதொரு தலையசைப்புடன் அதை ஏற்றுக் கொண்டவள், “ஏன் மேடம் யுவா இன்னைக்கு கிளாஸ் வரலை… உடம்பு எதுவும் சரியில்லையா..?” என்றாள் பார்வையை அறைக்குள் செலுத்தியபடி.

“நேத்து மதியம் உள்ள வந்த பையன் மேடம்… அப்பவே அந்த படத்த எடுத்து வச்சு வரைய ஆரம்பிச்சுட்டான்… நேத்து மதியம் சாப்பிடத்தோட சரி… அதுக்கு அப்பறம் சாப்பிடவும் வரல… டீ காபியும் குடிக்கல… தூங்கினானும் தெரியல… உள்ள போய் பாக்கலானா விடவே மாட்டேங்கறான்…” என்றார் பரிதாபமாய்.

“இவ்வளவு நேரம் என்ன பண்ணனீங்க… காலையில நான் வந்ததும் சொல்ல வேண்டியது தானே…” என்றாள் அவனையே பார்த்தபடி.

“சாரி மேடம்… உங்க கிளாஸ்க்கு கண்டிப்பா கிளம்பிடுவானு நினைச்சேன்… கடைசி நிமிஷம் வரைக்கும் கிளம்பாம இருக்கவும் தான் பயமாகிடுச்சு… அதுக்குள்ள உங்க கிளாஸ் ஸ்டார்ட் ஆகிடுச்சு… அதான் நித்யா மேம்கிட்ட இன்பார்ம் பண்ணேன்… அவங்க வந்து பாத்துட்டு, அவனே சரியானதும் வந்துடுவானு சொல்லவும் தான்…” என அவர் தயங்கி நிறுத்த,

“சரி நீங்க போய் வேலைய பாருங்க மேடம்… நான் பாத்துக்கறேன்…” என்றாள் அவள்.

பாதி திறந்திருந்த கதவை முழுவதுமாய் திறந்துவிட்டு உள்ளே நுழைந்தாள் அவள். சட்டென்று திரும்பிப் பார்த்தவன், வேகமாய் எழுந்துக் கொண்டான். இருக் கைகளையும் விரித்தபடி அந்த ஓவியத்தை அவசரமாய் மறைத்து நின்றான்.

“பார்க்க கூடாது… பார்க்க கூடாது…” என்றான் அத்தனை அவசரமாய்.

அவனின் சோர்ந்திருந்த முகத்தையும் மீறி அதில் அத்தனை மகிழ்வு.

“சரி பாக்கல… நான் இப்படி உக்காந்துக்கறேன்… நீ முடிச்சுட்டு என்கிட்ட காட்டு சரியா..?” என்றவள் கட்டிலை கண்காட்டிவிட்டு அமைதியாய் அதில் அமர்ந்தும் கொண்டாள். தூரத்திலிருந்தே அது அன்றைக்கு வரைந்த அதே ஓவியம் தானென்று கண்டுக் கொண்டாள் அவள். அதில் முகங்களுக்கு உயிர் கொடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தான் யுவா.

“நிஜமா…” என்றபடியே மீண்டும் பழையபடி அமர்ந்துக் கொண்டவன், அடிக்கடி திரும்பி அவள் பார்க்கிறாளா என சரிப் பார்த்துக் கொண்டான். அவள் கையிலிருந்த புத்தகத்தில் மூழ்கிப் போயிருந்தாள்.

அடுத்த இரண்டு மணி நேரங்கள் மெல்லமாய் கரைந்தோட ஒவியத்தை முழுவதுமாய் முடித்திருந்தான் யுவா. அப்படி ஒரு பிரகாசம் அவன் முகத்தில்.

“பாக்கலாம்… பாக்கலாம்…” அவன் ஆர்பட்டமாய் சத்தமாய் அவளைக் கூவி அழைக்கவும், மென் நகையுடன் எழுந்து அவனின் அருகில் சென்றாள் அவள்.

ஒவியத்தை நெருங்கவும் தான் அந்த முகங்கள் அவளின் இதயத்தை தொட்டது. உடலில் மெல்லிய நடுக்கம் ஓட, நடக்க முடியாது அப்படியே நின்றுவிட்டாள் அவள். அமர்ந்த வாக்கில் வரையும்படி பொருத்தப்படிருந்த அந்த சட்டத்திற்குள் தாயாய் இன்றைய அவளும் அவளில் கையில் சேயாய் இரண்டு வயது யுவாவும்.

அவளின் முகத்தில் அப்படியொரு தாய்மை உணர்வு வழிந்தோடியது. எப்பொழுதும் நெகிழ்ச்சியாய் பெருமிதமாய் யுவாவை அவள் பார்க்கும் அதேப் பார்வை. கனவிலும் அவள் கற்பனை செய்துப் பார்த்திராத காட்சி. தன் வாழ்நாளில் இனி சாத்தியமே இல்லை என்ற ஒன்றை சாத்தியமாக்கி அவளின் கரங்களில் தந்திருந்தான் யுவா.

“ஆரும்மா… என்னோட அம்மா…” என்றபடியே சிலையென நின்றிருந்தவளின் கைப்பற்றி ஓவியத்தின் அருகில் இழுத்துக் கொண்டிருந்தான் அவன்.

“இல்ல…  இல்ல… நான் வரல…” என மெல்லிய குரலில் மறுத்தவளின் உடலின் அளவுக்கதிமான நடுக்கத்தையும் பயத்தையும் யுவா உணர்ந்துக் கொள்ளவே இல்லை. அவனின் கவனமெல்லாம் அவளை அருகே அழைத்துச் சென்று காட்டிவிடும் முனைப்பில் மட்டுமே.

அவன் இழுக்க, அவள் விலக என அவளின் கால், வண்ணதட்டின் (palette) நுனியில் பட்டு அது எம்பி ஓவியத்தின் மீது சென்று விழுந்திருந்தது. அதிலிருந்த வண்ணங்கள் எல்லாம் ஓவியத்தில் பட்டு அதை பாழாக்கி இருந்தது. இன்னும் முழுவதுமாய் உலராததால்  பட்ட இடம் அழிந்தும் போயிருந்தது.

இருவருமே சம்பித்துப் போய் விட்டனர். நொடியில் இருவருக்குமே கண்ணில் நீர் காட்டிவிட்டது. அவளின் வாழ்வைப் போல அந்த அழகிய ஓவியத்தையும் அவளின் கரங்களினாலேயே அலங்கோலமாக்கி விட்டதாய் அவளே நினைத்துக் கொண்டாள்.

“நீ பேர்ட் கேர்ள்… ஆரும்மா பேர்ட் கேர்ள்…” என்றான் சத்தமாய் அழுகுரலில் யுவா.

“சாரி யுவா… நான்… நான்… சாரி யுவா… சாரி யுவா…” அதைத் தவிர வேறெதுவும் சொல்ல தெரியவில்லை அவளுக்கு.

“இல்ல… இல்ல… நீ பேர்ட் கேர்ள்… ஆரா பேர்ட் கேர்ள்…” அந்த ஓவியத்தை கழட்டி தூர வீசி ஏறிந்தவன், எல்லா பொருட்களையும் களைத்து அதை அவள் மீது வீசத் துவங்கியிருந்தான். கோபத்தில் பதற்றத்தில் அவனின் உடல் அளவுக்கு அதிகமாகவே நடுக்கம் கண்டிருந்தது. அவனின் கோபத்தில் அவளின் சுயம் மீண்டிருந்தது. நிதானம் திரும்பி இருந்தது.

“யுவா… ப்ளீஸ்… நிறுத்துடா… திரும்ப நாம வேற வரைஞ்சுக்கலாம்… ஆரா சாரி… ஆரும்மா தப்பு… தப்பு… சாரி… சாரி…” என்றபடியே அவனின் இரண்டு கரங்களையும் பின்னால் இருந்து இறுக்கி பிடித்து அணைத்தபடியே அவனை ஆற்றுப்படித்த முயன்றுக் கொண்டிருந்தாள் அவள். எங்கே அவனுக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்ற பயம் அவளை அதிகமாய் அழுத்த துவங்கி இருந்தது.

அவளை வேகமாய் விலக்கி தள்ளியவன் கையில் கிடைத்தெல்லாம் அவள் மீது வீச தொடங்கியிருந்தான். கடைசியாய் அவனின் காலில் இடறிய கைக்கு இடம் பெயர்ந்து வண்ணத்தட்டு அவளின் நெற்றியை ஆழமாய் பதம் பாத்திருந்தது. நொடியில் வேகமாய் ரத்தம் பெருகிவும் பயந்துப் போனான் பிள்ளை.

“ஆரா தான் தப்பு… ஆரும்மா தான் சாரி… நான்… நான்… இல்ல…” என்றபடியே வேகமாய் அவளை வெளியே தள்ளி கதவடைத்துக் கொண்டான் அவன். அதற்குள் அங்கே ஒரு சிறு கூட்டம் குழுமியிருந்தது.

“இங்க என்ன வேடிக்கை… அவங்க அவங்க வேலையை பாருங்க போங்க…” சத்தமாய் அதட்டிய வேந்தனின் குரலில் கூட அவளை எட்டியிருக்கவில்லை. யுவா எப்படி அவளை தள்ளினானோ அதே நிலையில் தரையில் அமர்ந்து மூடிக் கதவை வெறித்துக் கொண்டிருந்தாள்.

“நித்யா மேடம் இப்போ வந்துடுவாங்க… அதுவரைக்கும் நீங்க மட்டும் இங்கேயே இருந்து பாத்துக்கோங்க… ஏதாவது எமர்ஜென்சினா கூப்பிடுங்க…” என்றவன், ஆராவின் கைப்பற்றி தூக்கி நிறுத்தி இருந்தான்.

அவனிடமிருந்து தன் கையை உருவ முயன்றபடியே, “இல்ல… நான் யுவாவோட இருக்கேன்… கைய விடுங்க…” என்றாள் மெல்லிய அழுத்தமாய்.

“மூச்… சத்தம் வெளிய வந்துச்சு… தொலைச்சு கட்டிடுவேன்…” இதழ்கள் மீது விரலை பதித்து எச்சரித்தவன், அவளின் கைப்பற்றி இழுத்தபடி வேகமாய் நடக்க தொடங்கியிருந்தான். அவனின் நடையின் வேகமே சொல்லியது அவனின் கோபத்தின் அளவை. ஒரு இடத்தில் நிலைக் கொள்ளமால் அலைபாய்ந்த அவன் இரு விழிகளும் கோபத்தையும் ஒரு வித அவசரத்தையும் மாறி மாறி பிரதிபலித்துக் கொண்டிருந்தது.

அவன் வேகத்திற்கு ஈடுகொடுத்து அவன் இழுப்புக்கு இணையாய் வேக நடைப்போட்டவள் முகம், அவ்வேளையிலும் ஆழ்ந்த யோசனையில் அமிழ்ந்திருந்தது. அவளின் இயல்புக்கு குறைந்தபட்சம் இந்நேரம் அவனை உதறி தூரவாவது தள்ளி இருக்க வேண்டும். அதுவும் யுவாவை அப்படி விட்டுவிட்டு, அமைதியாய் அவனின் இழுப்புக்கு இசைந்துக் கொடுக்கும தன் மீதே அவளுக்கு ஒரு வித எரிச்சல் மண்டியது. அப்படியானால் அவளின் மனம் மெல்ல மெல்ல அவன் பால் சாய்கிறதே விட்டதா? அவளாலேயே நம்ப முடியவில்லை.

வேகமாய் அவன் வந்து சேர்ந்திருந்த இடம் அனுராதாவின் அலுவலக அறை. அவளின் தோள்கள் இரண்டையும் அழுந்த பற்றி, சுழல் நாற்காலி வலுகட்டாயமாக அமர வைத்திருந்தான்.

ஏதோ சொல்ல வாய் திறந்தவளை, “ஸ்ஸ்ஸ்… மூச்… சத்தம் வெளிய வர கூடாது… இன்னும் ஐஞ்சு நிமிஷம்… அவ்வளவு தான்… அதுக்கு முன்ன இங்க இருந்து இஞ்ச் அசையணும்னு நினைச்சா கூட நான் மனுஷனா இருக்க மாட்டேன்… பாத்துக்கோ…” விரல் நீட்டி அவளை எச்சரித்தபடியே படபட பட்டாசாய் அவசர கதியில் மொழிந்தான். அவள் அங்கிருந்து வெளியேற முயற்சிக்கவில்லை என்பதை நொடியில் அவதானித்துக்  கொண்டவனின் மனம் ஒருவித ஆசுவாசம் அடைந்தது.

அவசர அவசரமாய் எதிர் பக்க சுவரை நிறைத்திருந்த புத்தக அலமாரியில் எதையோ தேட தொடங்கியவன், கைகளுக்கு அது அகபட்டதும் அப்படியொரு பரவாசம்.  முதல் உதவி பெட்டி அது

அவசரமாய் அதை தூக்கிக் கொண்டு அவளிடம் வந்தவன், அருகிலிருந்த மேசையில் அதை வைத்துவிட்டு உள்ளிருந்து பஞ்சை வெளியிலெடுத்து அவளின் நெற்றியில் வழிந்த குருதியை துடைக்க துவங்கி இருந்தான். அந்த நொடி அவள் மருத்துவர் என்பதே அவனுக்கு முழுதாய் மறந்து தான் போயிருந்தது. அவனின் செயலில் அரும்பிவிட்ட புன்னகை ஒன்றை இதழ் கடித்து மறைத்துக் கொண்டாள் அவள்.

“அறிவிருக்கா உனக்கு… உன்னயெல்லாம் என்ன சொல்றதுனு தெரியல எனக்கு… நல்லா ஐஞ்சர அடி தார் டின்னு மாதிரி வளர தெரியுதில்ல… ஆனா கண்ணு மட்டும் தெரியலையா..? அதான் எல்லாத்தையும் தூக்கி மேல போடறானு தெரியுதுல… அவன தடுக்க தெரியாது உனக்கு… சரி தடுக்கல… கொஞ்சமா நவுந்து தொலையறது தானே… அதெல்லாம் செஞ்சுடாதா… ஆனா நான் ஏதாவது பேசுனா மட்டும் மூக்க உடைக்கற மாதிரி வார்த்தைக்கு வார்த்தை வாயாடறத மட்டும் சரியா செய்…” வாய் பாட்டுக்கு அவளை வசைப் பாடிக் கொண்டிருந்தாலும் கைகள் அதன் பாட்டிற்கு அருகிலிருந்த நீரில் பஞ்சினை ஒற்றி அவளின் குருதியை துடைத்துக் கொண்டிருந்து.

எப்போதும் ஓரிரு வார்த்தைகளில் அவனின் வாயடைக்க செய்து விடுபவள், ஏனோ அவனைப் பேசவிட்டு கேட்டுக் கொண்டிருந்தாள்.

அடுத்ததாய் டெட்டாலை கொஞ்சமாய் பஞ்சில் நனைத்து காயத்தை துடைத்தவன், “எரியுதா..? நல்லா எரியட்டும்… தெரிஞ்சே வேணும்னே நின்னு அடிவாங்குன தான… நல்லா எரியட்டும்… ஆளப் பாரு ஆள… எனக்கு அப்படியே பத்திட்டு வருது… அவ்வளவு என்ன  உனக்கு..?” ஓயாமல் திட்டயவன் இடையிடயே இதழ்கள் குவித்து அவளின் காயத்தின் மீது காற்றை ஊதி வலியை ஆற்றுபடுத்த முயன்றுக் கொண்டிருந்தான்.

விழிகள் இரண்டையும் அகல விரித்து அவனைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறாள் அவள்.அந்த முகம் சின்னதாய் கூட வலியில் சுணங்கவில்லை. ஆனால் அவளுக்கான வலியையும் அலைப்புறுதலையும் அவனின் கண்களில் கண்டப்பின், ஏதோ ஒரு நிறைவு. அவளின் எண்ணப்போக்கு அவளுக்கே பிடிக்கவில்லை போலும். விருப்பமின்மையின் விளைவாய் மெல்லியதாய் மிக மிக மெல்லியதாய் அவள் இதழ்களும் புருவங்களும் சுழிந்துக் கொண்டது. அதையும் கண்டுக் கொண்டான் அந்த கள்வன்.

“அச்சச்சோ… வலிச்சுடுச்சா… ரொம்ப அழுத்தி துடைச்சுட்டேனா..? சாரி… சாரி… ரியலி வெரி சாரி…” என்றவன் இதழ்களை குவித்து இன்னும் வேக வேகமாய் காற்றை இழுத்து காயத்தின் மீது ஊதிக் கொண்டிருந்தான்.

சில சென்டிமீட்டர் இடைவெளியில் தெரிந்த அவனின் முகத்தைதான் ஒரு ஆராய்ச்சியுடன் விழி விரித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் அவள். இந்த முகம் கொண்ட கம்பீரம் அவளை சாய்க்கவில்லை! அந்த முகம் காட்டும் வசீகரத்தில் அவள் வீழவில்லை! அந்த விழிகளில் கூத்தாடும் குறும்பு அவளை கட்டி இழுக்கவில்லை! ஓயாது படபடக்கும் அந்த இதழ்கள் அவளை ஈர்க்கவில்லை! அது மொழியும் காதல் வார்த்தைகளும் அவளுக்கு ரசிக்கவில்லை! ஆனால், இந்த நொடி அவன் அவள் மீது காட்டும் அக்கறை அவளை ஈர்த்தது. அவளுக்காக அந்த விழிகள் சுமக்கும் வலி அவளை அவன் பக்கம் இழுத்தது. காதல் வார்த்தை ரசிக்காத அவளுக்கு அவனின் கோப வார்த்தைகள் ஒவ்வொன்றும் தேனாய் இனித்தது. அந்த தந்த மயக்கத்தில் ஒரு மந்தகாச புன்னகை அவளிடம்.

நொடிகள் கடந்த பின் தான் அவளின் நிலை அவனின் கவனத்திலும் கருத்திலும் பதிகிறது. விழிகள் விரித்து அவனை ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்தவளிடம் கேள்வியாய் புருவம் ஏற்றி இறக்கியவன் மனதிற்குள் மத்தளம் கொட்டியது. அப்படியும் அவள் பார்வையில் அசைவில்லை என்றதும், ஆழ்ந்து அவள் விழிகளோடு தன் விழிகளை கலந்தவன், நொடி நேரம் அமைதியை சுமந்திருந்தான்.

“இப்படி என்ன பாத்தா நடக்கற எதுக்கும் நான் பொறுப்பெடுத்துக்க முடியாது. ஐ காண்ட் கண்ட்ரோல் மை ஷெல்ப்… அப்பறம் கட்டி புடிச்சுட்டேன்… கிஸ் பண்ணிட்டேனு கம்ப்ளைண்ட் பண்ணா… நான் ஒன்னும் பண்ண முடியாது சொல்லிட்டேன்…” தோளைக் குலுக்கி ஒருவித  அலட்சிய பாவணையுடன் அவன் சொல்ல, அப்பட்டாய் அவள் விழிகள் அதிர்ச்சியில் இன்னும் விரிந்தது. விரிந்த விழுகளில் இன்னும் தடுமாறி விழுந்தது அவன் இதயம். கவ்வி நின்ற நான்கு விழிகளின் பணியை இதழ்கள் நான்கும் இடம்பெயர்த்துக் கொண்டது.

                          பற்றி எரியும்…

Click on a star to rate it!

Rating 4.7 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
3
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்