
தழல் 16:
“என்னங்க இன்னுமா காய நறுக்கறீங்க..?” சமையலறையில் இருந்து சத்தமாய் குரல் கொடுத்தாள் கனி.
“இன்னும் கேரட் மட்டும் தான்… இதோ கட் பண்ணிட்டேன்…” லவகமாய் அதை நறுக்கியபடியே பதில் கொடுத்தான் அறிவு.
கையிலிருந்த காபியை மிடறு மிடறாய் நிதானமாய் பருகியபடியே, மகனைத் தான் ஒரு வித எரிச்சலுடன் பார்த்திருந்தார் திலகம்.
“எவ்வளவு நேரமோ போங்க… லேட்டாகுது எனக்கு…” என்றபடியே வேகமாய் அவன் வெட்டி வைத்திருந்த காய்கறிகளை எடுத்துக் கொண்டு மீண்டும் அவள் சமையலறைக்குள் நுழைய, நொடியில் சாதரணமாய் மாறியிருந்தது திலகத்தின் முகம்.
“என்னம்மா பண்ணறது… எனக்கு முன்ன மாதிரி எதுவும் பண்ண முடியறதில்ல… இந்த மூட்டு வலி போட்டு பாடா படுத்தது… இல்லைனா சீக்கரமே ஏந்திரிச்சு உனக்கு கொஞ்சம் ஒத்தாசையா இருந்துருப்பேன்…” என்றார் வருத்தம் தோய்ந்த குரலில்.
“அதனால என்னத்தை… நான் பாத்துக்க மாட்டேனா..?” என்றாள் உள்ளிருந்தே அவள். அவள் சொல்லிய நொடி காயை நறுக்கிக் கொண்டிருந்த அறிவின் மீது படிந்து மீண்டது அவரகன் பார்வை.
“அதுவும் சரிதான்…” என்றவர், “அமுதனுக்கு காது குத்தறத பத்தி உங்க வீட்டுல சொல்லிட்டீயா கனி… இந்த வருஷம் அவன ஸ்கூல சேத்துட்டா அப்பறம் கஷ்டம்… பொறந்த ஒரு வருஷத்துலையே குத்தி இருக்கணும்… ம்ம்ம்… இத்தன நாள் தள்ளி போய்ட்டே இருக்கு…” என்றார் பெருமூச்சுடன்.
“பண்ணிடலாம் அத்தை… நான் இன்னைக்கு பேசிடறேன்…” குழம்பை அடுப்பில் கூட்டி வைத்து, மற்றவற்றை ஒதுங்க மூடி வைத்தவள், கைகளை துடைத்தபடியே வந்து நின்றாள் அவள்.
“ம்ம்ம்… வளைகாப்பு… புள்ள பொறந்ததுக்கு… பேரு வைக்கறதுக்குனு எதுக்கும் உங்க அக்கா வரல… நம்ம பக்கம் சொந்தத்துல யாருக்குமே அந்த பொண்ண தெரியல… இதுக்காவது அந்த பொண்ணு வருமா..?” என்றார் அவர் சாதாரணம் போல்.
சில நொடிகள் அவரை ஆழ்ந்துப் பார்த்தவள், “கண்டிப்பா வருவா…” என்றபடியே, “ஏங்க அமுதன எழுப்பி சட்டைய போட்டு விடுங்க… அப்படியே குழம்பையும் பாத்துக்கங்க… நான் குளிச்சிட்டு கிளம்பறேன்…” என்றபடியே அறைக்குள் நுழைய,
“இன்னைக்கு அமுதன கொண்டு அங்க விடப் போறீயாம்மா… நல்லது… நேத்து எல்லாம் பாட்டிட்ட போகணும்னு ஒரே அடம்… அழுதழுது புள்ளைக்கு மூஞ்சே வீங்கிப் போச்சு… எங்கயிருந்து தான் புள்ளைக்கு இந்த அடம் வந்து ஒட்டிக்கிச்சோ தெரியல…” என்றார் அவர்.
“புள்ளைங்கனா அழுறதும் அடம் புடிக்கறதும் சாதாரணம்… இதெல்லாம் ஒரு விசயமா சொல்லிட்டு…” என்றபடியே தூங்கிக் கொண்டிருந்த அமுதனை தூக்கிவர அவனும் அறைக்குள் நுழைந்துக் கொண்டான்.
அடுத்த அரைமணி நேரத்திற்கெல்லாம் பிள்ளையுடன் சொல்லிக் கொண்டு அவளுமே கிளம்பிவிட்டாள். கேட்டை திறக்கும் சத்தம் கேட்ட நொடி, சமையலறையில் இருந்து வேகமாய் எட்டிப் பார்த்தாள் ஆரா. சட்டென்று அவளின் முகம் மலர்ந்து விகாசித்தது. “ம்ம்மா… உன் சின்ன பொண்ணு வந்துட்டா பாரு…” தன்னை மறந்தவளாய் பின்புறத்தில் நின்றிருந்த தாயை தாயை சத்தமிட்டு அழைக்க, துணி துவைத்துக் கொண்டிருந்தவர் அதை அப்படியே வைத்துவிட்டு, கைகளை முந்தானையில் துடைத்தபடி வேகமாய் உள்ளே வந்தார்.
“கனிம்மா… வா… வா…” என்றவரின் குரலில் தான் எத்தனை எத்தனை நெகிழ்ச்சி.
வேகமாய் அவளை நெருங்கி இருந்தவர், “புள்ளைய இப்படி குடு…” என முதல் வேலையாய் பேரனை அவளிடமிருந்து வாங்கிக் கொண்டார்.
“பாட்டிய தேடுனீங்களா செல்லம்…” என்றபடியே அவன் முகம் எங்கும் முத்தம் பதிக்க, அவனும் ஆசையாய் அவரின் கழுத்தைக் கட்டிக் கொண்டான்.
அவர்களையே பார்த்துக் கொண்டிருந்த ஆராவுக்கு அந்த தவிப்பில் தேடலில் கண்ணீர் கட்டிக் கொண்டது. சமையலை முடித்திருந்தவள், மீண்டும் அடுப்பை பற்ற வைத்து வாணலியை வைத்தாள்.
அவளின் ஒவ்வொரு செய்கையையும் தான் அடிக் கண்ணால் நோட்டமிட்டுக் கொண்டிருந்தாள் கனி. “கொழுப்ப பாருங்களேன் இந்த ராங்கிக்கு… எத்தன நாள் கழிச்சு வரேன்… வானு ஒரு வார்த்தை சொன்னா என்னவாம்…” என்றாள் சிலிப்பிக் கொண்டு.
“அவள உனக்கு தெரியாதா கனிம்மா… விடேன்… எங்க நீ வரவே மாட்டீயோனு எவ்வளவு தவிச்சுப் போய்ட்டா தெரியுமா..?” என்றார் அப்பொழும் மகளுக்கு பரிந்துக் கொண்டு.
“நல்லா தவிச்சிருப்பாளே உங்க மக… அப்படி தவிக்கறவ… வீட்டுக்கு வாடினு ஒரு போன் பண்ணி சொல்ல என்னவாம்…” என நொடித்துக் கொண்டவள், மறு நொடியே, “நான் ஒரு கூறுகெட்டவ… அவள மாதிரி வெரப்பா என்னால இருக்க முடியுதா… இந்த பத்து நாள புள்ளைய தூக்கிட்டு வந்து வாசல நிக்கறேன்… வேற எங்க தான் போய் நிக்கறாதாம்… எனக்கும் தான் யாரு இருக்கா…” என்றவள் குரல் உடைந்து கண்ணீர் வழிந்தது.
“கனிம்மா… என்னடா…” என்றவருக்கு தாங்கவே இல்லை.
அதுவரை அமைதியாய் இருந்தவள், “என்னவாம் உன் சின்ன பொண்ணுக்கு… இது அவ வீடு இல்லையாமான்… இங்க வர அவள வெத்தள பாக்கு வச்சு அழைக்கணுமோ…?” என உள்ளிருந்த படியே ஆரா காய, கண்ணீரையும் மீறி புன்னகை அரும்பியது கனியின் முகத்தில்.
“இதெல்லாம் நல்லா வக்கனையா பேசுச் சொல்லு உன் பொண்ண…” என மெல்லமாய் முனகிய கனியின் குரலிலும் புன்னகை ஒட்டிக் கிடந்தது.
அடுத்த கொஞ்ச நேரத்திற்கெல்லாம் கமழ்ந்த நெய்யின் மணம், ஆரா அவசர அவசரயாய் கேசரி செய்வதாய் அறிவித்தது. அதை ஆழ்ந்து சுவாசித்தவள் புன்னகை இன்னுமே விரிந்தது.
எப்பொழும் போல சமைத்து முடித்து தயாராகி வந்தவள், சாப்பாட்டை எடுத்துக் கொண்டு, தாயிடம் மட்டும் சொல்லிக் கொண்டு கிளம்பியும் விட்டாள். செல்லும் அவளைத் தான் சீண்டும் புன்னகையுடன் பார்த்திருந்தாள் அவள்.
வேகமாக தனது அறைக்குள் நுழைந்தவள் ஹாட்பாக்ஸை மேசை மேல் வைத்தாள். அதன் உள்ளே சூடான கேசரி. வேந்தனுக்கு கேசரி என்றால் அத்தனை பிரியம். அவனுக்காக தான் எடுத்தும் வந்திருந்தாள். ஆனால் கொடுக்க வேண்டும் எனும் போது ஒரு சிறு தயக்கம். எல்லாருக்கும் சேர்த்து என்றால், பரவாயில்லை. யுவாவிற்கு சுத்தமாய் இனிப்பு ஆகாது. இவளும் இனிப்பு சாப்பிடவதை நிறுத்தி வருடங்கள் ஆகிறது. நித்யா சாப்பிடுவாள் தான். ஆனால் அவளுக்கு இனிப்பு அதிகமாய் இருக்க வேண்டும். எதற்கு தொல்லை அதை அப்படியே வைத்துவிட்டாள்.
“ஆரா… இன்னைக்கு கட்டு பிரிக்கணும்…” என்றபடியே உள்ளே நுழைந்தான் வேந்தான்.
அழுந்த நெற்றியை தேய்த்து விட்டுக் கொண்டவள், “எனக்கு வேலையிருக்கு…” என்றாள் தலையை நிமிர்த்தாமல் கையிலிருந்த கோப்பிலேயே பார்வையை ஓட்டியபடி.
“அதெல்லாம் எனக்கு தெரியாது… நீ பண்ணறேனு சொன்ன தானா… பண்ணு வா… மத்தவங்கிட்ட காட்ட எனக்கு பயம்… போலி டாக்டரா இருந்து குத்த கூடாத இடத்துல ஒரே குத்தா குத்திட்டா என்ன பண்ணறதாம்…” என்றான் கண்களில் பயத்தை காட்டி.
“அப்போ உங்க அனும்மாகிட்ட காட்ட வேண்டியது தான…”
“காட்டலாம் தான்… ஆனா அனும்மா பிஸு…” என்றான் தோள்களை குலுக்கி.
“அப்போ என்ன பாத்தா உங்களுக்கு வெட்டியா இருக்க மாதிரி தெரியுதா..?” என்றவள் நிமிர்ந்து முறைத்துப் பார்க்க, அதை எங்கே அவன் கண்டான்.
“இது என்ன டிபன் பாக்ஸ்ல…” என்றபடியே திறந்துப் பார்க்க உள்ளே கேசரி.
“வாவ் கேசரி… மை பேவரைட்…” என்றபடியே எடுத்துக் கொண்டவன், அங்கையே அமர்ந்து சாப்பிட தொடக்கி இருந்தான்.
ஒரு வாய் உண்டவன், “பர்பெக்ட்…” என்றான் சிலாகித்து. அவனுக்கு இனிப்பு திகட்டாமல் அளவாய் இருக்க வேண்டும். நெய்யை கொஞ்சம் குறைத்து முந்திரியை அதிகம் சேர்த்தால் இன்னுமே பிடிக்கும். ஒவ்வொரு வாயிற்கும் ஒவ்வொரு முந்திரி வர வேண்டும் அவனுக்கு. அப்படிதான் இருந்தது அதுவும்.
“என்ன விசேஷம் ஆரா இன்னைக்கு… கேசரி எல்லாம் பலமா இருக்கு…” என்றான் உணவிலிருந்து கண்களை நிமிர்த்தாமல்.
“கனி வந்திருந்தா… அதான்…” என்றாள் அவளும் தன் முன்பிருந்த கோப்பில் மீண்டும் பார்வையை ஓட்டியபடியே.
“அப்போ எனக்காக இல்ல… ஆனா எனக்கு புடிச்ச மாதிரி இருக்கே…” என தலைசாய்த்து அவளை பார்த்து ஆழ்ந்த குரலில் சொன்னவனுக்கு பதிலொன்றும் சொல்லவில்லை அவள்.
சாப்பிட்டு முடித்து வெறும் டப்பாவை ஓரம் வைத்தவள், அங்கிருந்த தனியறைக்குள் சென்றிருந்தான்.
“ஆரா… நான் ரெடி… சீக்கரம் வா…” உள்ளிருந்து அவன் கத்தி அழைக்க, செல்லாமல் அடங்க போவதில்லை என அறிந்தவளும் உள்ளே சென்றிருந்தாள்.
சட்டையின்றி வெறும் மார்போடு அமர்ந்திருந்தவனை கண்டவள் நடை என்னவோ ஒருநொடி தான் தேங்கியது. இயல்பாய் அவள் கரங்கள் தனது படியை செய்ய துவங்கி இருந்தது.
“ஏன் ஆரா… நிஜமாவே நீ டாக்டர் தானே… உனக்கு தையல் பிரிக்க தெரியும் தானே…”
“நர்ஸ்க்கு கூட கட்டு பிரிக்க தெரியும்… நான் எம்.பி.பி.எஸ்., எம்.டீ முடிச்சுருக்கேன்… இந்த பேசிக் கூட எனக்கு தெரியாதா…” என்றாள் லவகமாய் அவன் கையிலிருந்த கட்டை பிரித்துக் கொண்டே.
“இல்ல ஒரு வேள போலி டாக்டரா இருந்தா என்ன பண்ணறதாம்… அதான் கேட்டேன்…”
“கொஞ்ச நேரம் பேசாம இருங்க… இல்ல இங்க இருக்கற ஸ்டிச்சஸ் இங்க இடம் மாறிடும்…” என அவன் இதழ்களை கண் காட்டியவள், வேலையில் கவனமாகி இருந்தாள்.
அவனின் பொறுமையெல்லாம் ஒரு சில நிமிடங்கள் தான். அவளின் முகத்தை அந்த விழிகளையே பார்த்திருந்தவன்,
“எங்கே எங்கே நீ எங்கே…
என்று காடு மேடு தேடி ஓடி
இரு விழி இரு விழி
தொலைத்து விட்டேன்…
இங்கே இங்கே நீ வருவாய்
என்று சின்ன கண்கள்
சிந்துகின்ற துளிகளில் துளிகளில்
உயிர் வளர்பேன்…
தொலைந்த என் கண்களை
பார்த்ததும் கொடுத்து விட்டாய்…
கண்களை கொடுத்து
இதயத்தை எடுத்துவிட்டாய்…”
மெல்லிய ஆழ்ந்த குரலில் பாட, நிமிர்ந்து அவனைப் பார்த்தவளின் விழிகளில் எந்த சலனமும் இல்லை.
“ஊடல் வேண்டாம்…
ஓடல்கள் வேண்டாம்…
ஓசையொடு நாதம் போல…
உயிரிலே உயிரிலே கலந்து விடு…
கண்ணீர் வேண்டாம்…
காயங்கள் வேண்டாம்…
ஆறு மாத பிள்ளை போல
மடியிலே மடியிலே உறங்கிவிடு…
நிலா வரும் நேரம்
நட்சத்திரம் தேவை இல்லை…
நீ வந்த நேரம் நெஞ்சில்
ஒரு ஊடல் இல்லை…
வண்ண பூக்கள் வேர்க்கும்
முன்னே வர சொல்லு தென்றலை…”
ஸ்ரூதியோ இசையோ தெரிந்த தேர்ந்த குரலில்லை அது. ஆனால் அந்த குரலில் உயிர்பிருந்தது. அது அவளிடம் காதலை வேண்டியது. காதலை கடத்தியது.
“முடிஞ்சுது… அவ்வளவுதான்…” என தன் பொருட்களை எடுத்துக் கொண்டவள், “கொஞ்ச நாளைக்கு கைய ரொம்ப அசைக்காதீங்க…” என்றபடியே வெளியே சென்றிவிட்டாள்.
அதுவரை இழுத்து பிடித்திருந்த மூச்சை அப்பொழுதான் ஆசுவாசய் வெளியிட முடிந்தது அவளால். அவன் குரல், அந்த பாடல் அவளை என்னவோ செய்தது உண்மை. அவளறியாமலே அவன் பக்கம் மனம் சாய்ந்துவிடுமோ என்ற பயம். அவனிடமிருந்து தள்ளியே இருக்க அறிவுருத்தியது மனம். முடியுமா அவளால். இல்லை அவன் தான் அதற்கு விட்டுவிடுவானா?
அவளின் செயலில் பேச்சில் அவன்தான் வாயடைத்துப் போனான். “இந்த சைனா செட்ட எப்படி கரெட் பண்ணறதுனு தெரியலை ஆண்டவா… நான் வேற வீம்புக்கு ‘காலமெல்லாம் காதலோடு காத்திருப்பேன் கண்ணே…’னு டைலாக் வேற பேசி தொலைச்சுட்டேன்… இவ பாட்டுக்கு இதான் சாக்குனு காவி வேட்டிய வாங்கிக் குடுத்து கைலாசா அனுப்பிடுவாளோ..?” சத்தமாய் அவன் புலம்ப, இவள் இதழ்கள் தன்னையறியாது புன்னகையை பூசிக் கொண்டது.
– பற்றி எரியும்….

