
தழல் – 14
அனுராதாவின் அறைக்குள் வந்து வேகமாக கதவடைத்துக் கொண்டவனுக்கு மூச்சடைக்கும் உணர்வு. கதவின் மீது சாய்ந்து நின்றவன், நெஞ்சுக் கூட்டை நீவிய விட்டுக் கொண்டான். ஆழமாய் காற்றை உள்ளிழுத்து நுரையீரலில் நிறைத்துக் கொண்டவனுக்கு இன்னும் படபடப்பு குறையவில்லை. நெற்றியில் துளிர்த்து நின்ற வியர்வையை புறங்கையால் துடைத்த பின் கரத்தைப் பார்க்க, விரல்கள் அத்தனையும் தாளம் தப்பி ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தது.
“ஸ்ஸ்ஸ்… ஹப்பா… லவ்வ சொல்லவே இந்த பாடுனா… இவள சம்மதிக்க வச்சு… கல்யாணம் கட்டி… புள்ள குட்டி பெத்து… கிழிஞ்சுது போ… உன் கனவெல்லாம் கனவாவே போக போகுது போடா… ஊருல லட்டு லட்டா அத்தன பொண்ணுங்க உன்ன சுத்தி சுத்தி வரும் போது உனக்கு இந்த சப்ப மூக்கி சைனா செட்ட தான் புடிக்கணுமா..? இப்போ ஏதோ ஷாக்குல இருந்ததால அடிக்காம விட்டுட்டா… திரும்ப சாய்ங்காலமா போய் கேட்டா… கத்துக்கிட்ட அத்தனை கராத்தே வித்தையும் இறக்கிடுவாளோ… இறக்கினாலும் இறக்குவா… ராச்சசி… சொல்லறதுக்கு ஒன்னுமில்ல… எதுக்கும் ஒரு இரண்டு நாளைக்கு அவ கண்ணுல படாம தலைமறைவாவே இருந்துக்கணும்… அது தான் உடம்புக்கும் உசுருக்கும் உத்திரவாதம்…” என தன் போக்கில் புலம்பியவனுக்கு இன்னும் படபடப்பு தான் குறைந்த பாடில்லை.
வேகமாய் மேசை மீதிருந்த நீரை எடுத்து அருந்தி சில நிமிடங்கள் கரைந்த பின் தான் அவனின் படபடப்பு சற்றே குறைந்தது. அங்கே இருந்த ஓய்வரைக்குள் நுழைந்தவன், நீள் இருக்கையில் கண்களை மூடி சாய்ந்து படுத்து விட்டான். அவளைப் பற்றி எதுவுமே தெரியவில்லை என்றால் கூட இத்தனை பரிதவிப்பும் படபடப்பும் தனக்கு இருக்காது என்றே தோன்றியது. ஆனால், அவளை முழுவதும் அறிந்து வைத்திருந்தவனுக்கு தன் காதல் கைக்கூடுமா என்பதில் பெரும் ஐயமிருந்தது. கிட்டதட்ட கனியின் திருமணத்திலிருந்து நான்கு வருடங்களாய் அவளுக்கு மாப்பிள்ளை தேடும் வேட்டை தீவிரமாய் நடப்பதை அவனும் அறிவானே! இது நாள் வரை எதற்கும் கொஞ்சமும் இசைந்துக் கொடுக்காதவள், இவன் காதலை உரைத்ததும் மட்டும், ‘வந்தேன் நாதா…’ என ஓடி வந்து கட்டிக் கொள்ளவா போகிறாள். அவளுக்கு இந்த நொடி வரை தன் மீதிருப்பது நல்லெண்ணமும் நட்பும் மட்டும் தான் என்பதை அவனும் அறிந்திருந்தான். அதை காதலாய் கட்டி எழுப்ப வேண்டும் என்று நினைக்கும் போதே மலைப்பாய் இருந்தது.
முதலில் அவனைப் பற்றி அவனுக்கே ஒரு சுய அலசல் தேவையாய் இருந்தது. அவளின் மீதான இந்த காதல் எந்த நொடியில் துளிர்த்து என்று அவனுக்குமே தெரியவில்லை. அதைதான் அவனின் மனமுமே இப்போது அலசி ஆராய்ந்துக் கொண்டிருந்தது. ஆனால், விடை தான் கிடைத்தபாடில்லை.
ஈர்ப்பு கொண்டு தடுமாறும் பருவத்திலும் இப்போது அவன் இல்லை. அதை விட பிடித்ததுக்கும் காதலுக்கும் வித்தியாசம் தெரியாதவனும் அல்ல. சபலம் கொண்டு அவளை நாடும் ஈன புத்தியும் அவனுக்கில்லை. லட்சம் பெண்களை கடந்து வந்தவன் அவளைக் கடக்க முடியாமல் அவளில் லயித்து அங்கேயே தேங்கி நின்றான். இது வரை கடந்து வந்த அத்தனை பெண்களிலும் அவளின் பிம்பத்தை அல்லவா தேடி மறுத்து கொண்டு இருந்திருக்கிறது அவனின் ஆழ்மனம்.
உருவம் காணது, குரலை கேளாது, ஐம்புலன்களும் தீண்டாது, சதாசர்வ காலமும் நினைவகளில் மட்டுமே காதலை கொண்டாடிய ஆண்டாளைப் போல, ஆண் வர்க்கத்தின் ஆண்டாள் அவன். அந்த காவலனை இத்தனை காலமும் ஆண்டுக் கொண்டிருப்பவள் அந்த கள்ளி என்று இந்த நொடியில் தான் உணர்ந்து தெளிந்துக் கொண்டான் அவன்.
கரத்தை கன்னத்தில் பதித்துக் கொண்டவன், நாசி அருகே விரல்களை நகர்த்தி ஆழ்ந்து மூச்சை உள்ளிழுத்தான். பேச்சில் அவளை எத்தனை சீண்டினாலும், இதுவரை அவன் விரல்கள் அவளைப் பரிசித்ததே இல்லை. முதல் முறை தீண்டல், அவனின் உயிர் தொட்டது. இன்னும் அவனின் விரல்களோடு அவள் வாசம் ஒட்டிக் கொண்டிருப்பதைப் போல பிரம்மை. பதின்ம வயது பாலகனாய் போல, பல வண்ண பட்டாம்பூச்சி ஒன்று மனதில் சிறகை விரித்தது. அடிவயிற்றில் குறுகுறுவென்று ஒரு உணர்வு. அவளின் வாசமே அவனை மூச்சடைக்க செய்தது. தன்னால் அவன் முகத்தில் முறுவல் ஒன்று தோன்றி அப்படியே உறைந்துப் போனது.
“கனவு கண்டு முடிச்சாச்சுனா சாப்பிட போகலாமா..?” கேட்டபடியே, சுவரில் சாய்ந்து நின்று கைகளைக் கட்டிக் கொண்டு தீர்க்கமாய் அவனை தான் பார்த்துக் கொண்டிருந்தாள் ஆரா.
தீடிரென கேட்ட குரலில் பதறி எழுந்து, திருதிருவென விழித்து அவளைப் பார்த்து மழுப்பலாய் அசடு வழிய சிரித்து வைத்தான் அவன்.
“என்ன..?” என்றான் அவள் வினவியது சட்டென்று மனதிற்குள் பிடிபடாமல்.
“நித்தியும் யுவாவும் வெயிட் பண்ணறாங்க… சாப்பிட போகலாமானு கேட்டேன்…” இன்னும் அழுத்தமாய் அவன்மீது தான் படிந்திருந்தது அவளின் பார்வை.
“ஓஓஓ… போலாமே… ஜெஸ்ட் கிவ் மீ பை மினிட்ஸ்…” என்றபடியே கழிவறைக்குள் நுழைந்துக் கொண்டவன், முகத்தில் நீரை வாறி இறைந்துக் கொண்டான். அவனின் முகத்தோடு அங்கத்தையும் தழுவி நின்றது நீர். பூந்துவலையால் அழுந்த முகத்தை துடைத்தபடியே வெளியே வந்தான்.
“கையில கட்டுதான போட்டு இருக்கு… தண்ணீ பட கூடாதுனு தெரியாதா… இப்படி நனைச்சுட்டு வரீங்க…” சட்டையின் பாதியை நீரில் நனைத்துக் கொண்டு வந்து நின்றவனைப் பார்த்து அவள் படபடவென பொறிய, புன்னகையோடு சேர்த்து தன் காதலும் கை கூடிவிடும் என சிறு துளி நம்பிக்கை அவனுள் மொட்டுவிட்டது.
“சின்ன காயம் தான்… இதோ இங்க…” என அவளை நெருங்கி நின்று தோள்பட்டையை தொட்டிக் காட்டியவன், “கைய அசைக்க கூடாதுனு தான் இந்த கட்டு… அங்க தண்ணீ படல… அதனால பிரச்சனை இல்ல…” என்றான் மெல்லிய குரலில்.
“காயம் சின்னதா இருந்தா கூட அத கவனிக்காம அலட்சியமா இருந்தா நிறைய வலிய தாங்க வேண்டி வரும்… அதுக்கு ஆரம்பத்துல இருந்தே கவனமா இருக்கது நல்லது தானே…” என்றவளின் வார்த்தைகளுக்கு இரு அர்த்தம் இருந்ததோ? அப்படி தான் என்றது அந்த அழுத்தமான விழிகள்.
“காயம் சின்னதா பெருசா… சரக பண்ண முடியுமா முடியாதானு காயம் பட்டவங்க தான் முடிவு பண்ணனும்… உடம்புல எவ்வளவு பெரிய காயம் பட்டாலும் அந்த வலிய என்னால தாங்கிக்க முடியும்… ஆனா இங்க…” என அவளின் கரம் பற்றி தனது நெஞ்சுக் கூட்டில் வைத்தவன், “சின்னதா காயம் பட்டாக் கூட என்னால தாங்க முடியாது ஆரா… அந்த வலியை நீ எனக்கு குடுக்க மாட்டேனு நம்பறேன்…” என்றவன் குரலில் இருந்தது தான் என்ன?
வேகமாய் அவனிடமிருந்து விலகிக் கொள்ள வேண்டும் என்று நினைத்தவளால் அதை செயல்படுத்த தான் முடியவில்லை. அவனின் ஆழ்ந்த குரலும் அதில் வழிந்த உணர்வும் அவளைக் கட்டிப் போட்டிருந்தது.
சில நொடிகளுக்கு பிறகு நெருப்பை தொட்டவள் போல் வேகமாய் விலகி கரத்தை உதறிக் கொண்டவள், “இது சரி வராது வேந்தன்… ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க… நான்… நான்… ஐ அம் நாட் இன்ட்ரஸ்ட் இன் மேரேஜ்…” என்றாள் படபடப்பாய்.
“நானும் ஒன்னும் உன்ன என்ன கல்யாணம் பண்ணிக்க சொல்லலையே… காதலிக்கலாம்… திகட்ட திகட்ட கல்யாணம் பண்ணிக்கலானு தோணற வரைக்கும் காதலிக்கலாம்… இந்த வாழ்க்கையில எப்பவாவது கல்யாணம் பண்ணிக்கலானு உனக்கு தோணுனா கல்யாணம் பண்ணிக்கலாம்… இல்லையா… கடைசி வரைக்கும் எனக்கு காதல் மட்டுமே போதும்…” அவன் குரலில் துளியும் பொய்யில்லை.
அழுந்த நெற்றியே இரண்டு விரலால் பிடித்து தேய்த்துக் கொண்டவள், “சும்மா டீன் ஏஜ் பையன் மாதிரி உளறாதீங்க வேந்தன்… காதலும் கிடையாது… ஒரு கன்ராவியும் கிடையாது… எல்லாமே ஹார்மோன்ஸ் படுத்துற பாடு தான்… ஜெஸ்ட் ஒரு அட்ராக்ஷன்… அவ்வளவு தான்… இங்கயிருந்து போயிட்டா குறைஞ்ச பட்சம் இரண்டு மாசம்… என்ன மறந்துட்டு மூவ் ஆகிடுவீங்க…” என்றவளை ஆழ்ந்த மந்தகாச புன்னகையோடு நோக்கினான் அவன்.
“நான் உன்ன காதலிக்கறேன் உணராதப்பவே இத்தனை வருஷமா உன்ன கடந்து என்னால வர முடியல… அப்படி இருக்கும் போது உன்னதான் காதலிக்கறேனு தெரிஞ்ச பின்னாடி என்னால எப்படி கடந்துப் போக முடியும்னு நினைக்கற ஆரா…” என்றவன் குரலில் அப்படியொரு பிடிவாதம், உறுதி.
“பச்… சொன்னா புரியாதா உங்களுக்கு… எந்த காலத்துலையும் எனக்கு காதல், கல்யாணம் எல்லாம் செட் ஆகாது… தேவையில்லாம மனச போட்டு குழப்பிட்டு உங்க லைப்ப ஸ்பாயில் பண்ணிக்காதீங்க… உங்க வீட்டுல எல்லாருக்குமே உங்க கல்யாணம் பத்தி அவ்வளவு கனவு இருக்கு… எவ்வளவு ஆசையா ஆர்வமா அந்த நாளுக்காக காத்துட்டு இருக்காங்க தெரியுமா..? எல்லாத்தையும் கெடுத்து வச்சுடாதீங்க…”
“உன் கல்யாணத்த பத்தின கனவு யாருக்குமே இல்லையா ஆரா… யாருமே ஆசையா ஆர்வமா அந்த நாளுக்காக காத்துட்டு இல்லையா..?” எதிர் கேள்விக் கேட்டவனை இயலாமையுடன் பார்த்தாள் அவள்.
மீண்டும் நெற்றியை அழுந்த பற்றி நீவிக் கொண்டாள். “சொன்னா ஏன் புரிஞ்சுக்க மாட்டேங்கறீங்க…” என்றவளை இதழ் மீது அவன் ஒற்றை விரல் பதித்து “ஸ்ஸ்ஸ்…” என்றிட அவள் வார்த்தைகள் அப்படியே தொண்டைக் குழிக்குள்ளேயே அமிழ்ந்துப் போனது.
“நீ எவ்வளவு சொன்னாலும் என் மனசு மாாறாது ஆரா… உன் காதல் கல்யாணம்… எல்லாமே உன் இஷ்டம்… எந்த இடத்துலையும் உன்ன கட்டாயப் படுத்தவோ, ஏன் எதுக்குனு காரணம் கேட்டகவோ செய்ய மாட்டேன்… ஆனா என் காதலை உணர்த்திட்டே இருப்பேன்… ஏன்னா என் காதல், கல்யாணம் எல்லாம் என் இஷ்டம்… புரியுது தானே உனக்கு…” சொல்லி முடித்ததும் தான் அவளின் இதழ்களில் இருந்து விரலை எடுத்தான்.
அவள் அதிர்ந்து அவனைப் பார்த்தபடியே நின்றுவிட, “பேசிப் பேசி பசிக்குது… சாப்பிட போகலாமா..? யுவாவும் பசி தாங்க மாட்டானே… அவங்க தேடி வரதுக்குள்ள நாமளே போய்டலாம்…” என்றபடியே அவளைக் கடந்து வெளியேறிவிட, இன்னுமே அப்படியே தான் நின்றாள் அவள்.
அவள் அறியாது அந்த விரலை இதழ்களில் ஒற்றி எடுத்தவன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டவனின் மனம் உல்லாச ஊஞ்சல் கட்டி ஆடியது. ஆனால் அவளோ, அவன் மனதை காயப்படுத்தாமல் தன்னை விட்டு தள்ளி நிறுத்தும் மார்க்கம் தெரியாது விழிப் பிதுங்கி நின்றாள். அவன் காயப்பட்டால் அவள் நேசிப்பவர்களும் அல்வவா காயப்பட்டு போவார்கள்.
“ஆரா இன்னும் உள்ள என்ன பண்ணுற… எனக்கு பசிக்குது… சீக்கரம் வா…” என்றபடியே அவன் கதவின் அருகிலிருந்து குரல் கொடுக்க, வேறு வழியின்றி மற்றவற்றை ஒதுக்கி வைத்து அவனின் பின்னோடுச் சென்றாள்அவள்.
– பற்றி எரியும்…

