
தழல் 13:
நிமிடம் முழுதாய் கடந்த பின்னும் அவளின் அதிர்ச்சி கொஞ்சமும் குறைந்த பாடில்லை. அவனின் முகத்தில் பார்வையை நிலைக்க விட்டிருந்தவளிடம் என்னவோ ஒரு தேடல். ‘அவன் சொன்னது சரியாக தான் காதில் விழுந்ததா?’ என்றொரு சின்னஞ்சிறு ஐயம். அவனின் இதழ் கடையோரம் குறும்பில் குளித்த சிரிப்பொன்று, கேட்டது சரி தான் என்றது. ‘ஒரு வேளை எப்போதும் போல விளையாட்டிற்கு உளறிக் கொட்டி இருப்பானோ..?’ என்ற அசட்டு தனமான அவளின் எண்ணத்தையும், அந்த வார்த்தைகளை சொல்லும் போது அவன் குரலில் தொனித்த அடமும் பிடிவாதமும் உறுதி தன்மையும் சுக்கலாய் உடைத்துப் போட்டிருந்தது.
‘காதலா..? இவனுக்கா… அதுவும் என் மீதா..? எப்போழுதிலிருந்து..?’ திரும்ப திரும்ப தன்னையேக் கேட்டுக் கொண்டவளுக்கு இன்னும் அதை நம்பதான் முடியவில்லை. ஒரு நொடி, அவனின் ஒரு செய்கை காதலை அவளுக்கு கடத்தியதே இல்லை. ஆராய்ச்சியாய் அவனைதான் பார்த்திருந்தாள் அவள். அவனின் அந்த பார்வை விழி வழி நுழைந்து இயத்தை சேர்ந்து அவளின் முதுகு தண்டுவடத்தை சிலிர்க்க வைத்துக் கொண்டிருந்தது.
அவளின் முகம் வழியே அகத்தை படித்துக் கொண்டிருந்தான் அந்த கள்வன். அதிர்ச்சியில் உறைந்த விழிகள் இரண்டும் குழப்பத்தை சுமந்திருந்தது. ஓராயிரம் சந்தேகங்களை மனதில் தேக்கிக் கொண்டு, தெளிந்துக் கொள்ள கேள்வி கேட்டு காத்து நிற்கும் பள்ளி மாணவியின் அசட்டு முகப் பாவமொன்றை அவசரமாய் தத்தெடுத்துக் கொண்டிருந்தது அவளின் முகம். அதில் உதட்டோரம் உறைந்த மோகன புன்னகையுடன் அவளைப் பார்த்திருந்தான் அவன். அப்படி ஒரு வசீகர புன்னகை. மேலுதட்டை கொஞ்சமாய் மறைக்கும் கற்றை மீசையை தூக்கிப் பிடித்து முழுதாய் அந்த புன்னகையை காண தூண்டும் அளவிற்கான மாயப் புன்னகை. ஆனாலும் அது அவளை மயக்கவில்லை போலும். கேள்வியாய் தான் அவனைப் பார்த்திருந்தாள் பெண்.
சென்ற நிமிடம் வரை அவளின் மீது காதல் இருந்ததா என்றால் அவனுக்குமே அதற்கு பதில் தெரியவில்லை. ஆனால் இந்த நிமிடம், அவளின் காதலனென்று உரைத்த நொடி அதை முழுவதுமாய் உணர்ந்து, அவளைத் தவிர யாரையுமே அவன் காதல் சேராது என தெளிந்து தான் சொல்லி இருந்தான்.
ஆராவின் முகப் பாவமே, ‘அவளுக்குமே இது புதிய தகவல்…’ என்ற செய்தியை வெற்றிக்கு கடத்தி இருந்தது. ஆனாலும் ஆடவனின் கைக்குள் அடங்கி நின்றவளை பார்க்க பார்க்க ஆத்திரம் கூடியது.
வேகமாய் அவன் கையை வீசியதில் மேசை மீதிருந்த தேனீர் குவளை, தேனீரோடு சுவரில் சென்று மோதி சுக்கலாய் உடைந்திருந்தது. அந்த சத்தம் தான் ஆரா, வேந்தன் இருவரையும் சுயம் மீட்டு அங்கே இன்னொருவன் இருப்பதையும் நினைவுக்கு கொண்டு வந்திருந்தது. சிதறிக் கிடந்த கண்ணாடி துண்டுகளில் பார்வையை பதித்தவன், வெகு அலட்சியமாய் வெற்றியிடம் அந்த பார்வையை திருப்பி இருந்தான்.
இன்னமுமே விலக்கபடாமல் ஆராவின் தோள் மீது படிந்திருந்த அவனின் கரத்தில் தான் பதிந்திருந்து வெற்றியின் பார்வை. அப்படியே அந்த கரத்தை இழுத்து வைத்து இரண்டாய் முறித்துப் போட வேண்டும் என்ற அளவிற்கான வெறி அவனின் உள்ளத்தில் பேயாட்டம் போட்டுக் கொண்டிருத்தது.
கழுத்து நரம்புகள் விடைக்க, சிவப்பேறிய விழிகளோடு அவளின் தோளில் பதிந்திருந்த வேந்தனின் கரத்தையே வெறித்துப் பார்த்தவனை கண்டு உள்ளங்கையெல்லாம் சில்லிட்டு போனது ஆராவுக்கு. அவள் கொண்டிருந்த திடமெல்லாம் வடிந்து ஒரு நொடி பயம் அவளின் உள்ளத்தை ஆட்சி செய்ய தொடங்கியிருந்து. அவனின் கண்களில் தெரியும் வெறி நிச்சயம் சதாரணமானது அல்ல. கொலையும் செய்ய துணிந்துவிடும் அளவிற்கான வெறி! அந்த நொடி அவன் வெகு ஆபத்தானவனாய் தெரிந்தான் அவளின் கண்களுக்கு.
“அவ மேல இருந்து கைய எடுடா பரதேசி நாயே…” என்றவன் மேசையையும் தாண்டி எக்கி வேந்தனின் சட்டையை பிடித்திருந்தான். அந்த குரலில் தெரித்த ரௌத்திரமும் வன்மம் ஆராவின் உடலில் மெல்லிய நடுக்கத்தை உண்டாக்கி இருந்தது.
அவனின் பிடிக்குள் இருந்தவளின் நடுக்கத்தை அவனால் துள்ளியமாக உணர முடிந்தது. ஆதுரமாய் அவனைப் பார்த்தவன் இதழ் கடையோரம் ஒருதுளி மென்னகை. விழிகளின் வழியே அவளுக்கு நம்பிக்கையும் தெம்பையும் கடத்திக் கொண்டிருந்தான். நொடிக்கும் குறைவான அவர்களின் அந்த பார்வை பறிமாற்றத்தை கூட ஏற்றுக் கொள்ள முடியவில்லை வெற்றியால்.
‘என்னிடம் இல்லாத எது அவனிடம் இருக்கிறது…’ என அவன் பற்றி இருந்த தோள்களை பிடித்து உலுக்கி கேட்டுவிடும் வேகம். அந்த வேகத்தில் அவன் கரத்தின் இறுக்கம் இன்னும் கூடியது. அவனின் இன்னொரு கரமும் இப்போது வேந்தனின் சட்டையை வலுவாய் பற்றி இருந்தது.
நிதானமாகவே ஆராவின் மீதிருந்து கரத்தை விலக்கிக் கொண்டவன், “என்ன மிஸ்டர் பண்ணறீங்க… கைய எடுங்க…” என்றபடியே வெற்றியின் கையை, தன் சட்டையிலிருத்து விலக்க முயன்றான். நிச்சயமாய் இத்தனை நிதானமாய் பேசும் ரகமில்லை அவன். வெற்றி சட்டையைப் பற்றிய அடுத்த நொடி சர்வ நிச்சயமாய் தரையில் கிடந்திருப்பான். ஆனால், ஆராவின் நடுங்கிய தேகமும் மருண்ட விழிகளும் அவனை நிதானத்தை இழுத்துபிடிக்க வைத்திருந்தது.
“விட முடியாதுடா வெண்ண… நான் மாசக் கணக்காக அவ பின்னாடி நாய் மாதிரி சுத்துவேனாம்… நீ பெத்துனாப்புல்ல வந்து கொத்திட்டு போவீயா… என் நெத்தியில என்ன கேனனு எழுதி ஒட்டி இருக்கா…” என்றவனுக்கு அவனை அடித்துவிடும் வேகம். ஒரு கையில் கட்டிருக்க, ஒரு கையால் நிச்சயமாக தன்னை சமாளிக்க முடியாது என்ற குருட்டு தைரியம்.வேந்தனுமே அவனின் இழுப்புக்கு இசைந்துக் கொடுத்துக் கொண்டிருந்தானே.
கீழ் கண்களால் அவனை பார்த்தவனின் விழிகளில் ஏளனம் தெரித்தது. அவனின் வலதுக் கையின் ஆள்காட்டி விரலை மட்டும் தனது சட்டையிலிருந்து பிரித்து எடுத்திருந்தவன், நொடியில் அதை எதிர் திசையில் வளைத்து பிடித்திருத்தான். நிச்சயமாய் உள்ளிருக்கும் எழும்பு உடைந்திருக்கும்.
“என்ன பண்ணறீங்க வெற்றி… அவர் சட்டையில இருந்து கைய எடுங்க முதல…” ஆரா அதட்டவும் தான், தெளிந்தவன் போல வேகமாய் அவனிடமிருந்து கையை உருவிக் கொண்டான் வெற்றி. விரல் உடைந்ததற்கான சிறுதுளி வலியைக்கூட அவன் முகம் பிரதிபலிக்கவில்லை. அதில் வேந்தனின் ஏளன புன்னகை இன்னும் கூடியது.
“சாரி… சாரி… ஆரா… ரியலி வெறி சாரி… நான் தெரிஞ்சு எதுவும் பண்ணல… அந்த நேர கோபம்… என்ன பண்ணறேனே தெரியல… அவர் அப்படி சொல்லவும்… ரியலி சாரி சார்… தெரிஞ்சு எதுவும் பண்ணல… அவ என்னோட ஆரா சார்… நிச்சயமா அவ உங்கள லவ் பண்ணலனு தெரியும்… ஆனாலும் அப்படி சொல்லும் போது கோபம் வந்துட்டு… ரியலி சாரி சார்…” ஆராவிடம் தொடங்கி வேந்தவனின் மன்னிப்பை வேண்டிக் கொண்டிருந்தான் அவன். நொடியில் மாறிப் போயிருந்த அவனின் முகத்தை தான் யோசனையாய் பார்த்து நின்றான் வேந்தன்.
“நீங்க கிளம்புங்க வெற்றி…” அவள் அழுத்தமாய் சொல்ல, வெற்றியிடம் ஒரு கெஞ்சல் பார்வை.
“ப்ளீஸ் ஆரா… ரியலி சாரி… ஐ அம் மேட்லி லவ் வித் யூ… என்ன ஏன் நீ புரிஞ்சுக்கவே மாட்டற… நீ இன்னொருத்தருக்கு சொந்தம்னு என்னால கற்பனைக்கூட பண்ணிக் பார்க்க முடியல…” என்றவன் கண்களில் கண்ணீர் தேங்கி நின்றது. குரலில் ‘என்னை ஏற்றுக் கொள்ளேன்…’ என்ற ஒரு மன்றாடல்.
“ப்ளீஸ் வெற்றி… சீன் கிரியேட் பண்ணாம கிளம்புங்க…” அழுத்தமாய் ஒலித்த அவளின் குரலில் வேறு வழியின்றி கிளம்பிருந்தான் அவன். வெளியேறும் கடைசி நொடி அவனின் பார்வை வன்மமாய் வேந்தனின் மீது படிந்து விலகியிருந்தது.
அவன் சென்றதும் திரும்பி வேந்தனை முறைத்துப் பார்த்தாள் ஆரா. அவனோ அவளின் நாற்காலியை சரியாக இழுத்துப் போட்டு அமர்ந்தவன், கால்கள் இரண்டையும் மேசை மீது வைத்தபடி, அவனின் வழக்கமான வழக்கமாய் மெல்லிய விசையோடு ஆட்டத் தொடங்கி இருந்தான்.
“என்ன வேந்தன் இது…” குரலிலும் பார்வையிலும் எரிச்சல் மண்டிக் கிடந்தது.
“இதுவா..?” என்றவன் பார்வை கேலியாய் அவனின் ஆடிக் கொண்டிருந்த கால்களில் படிந்தது.
“ஸ்ஸ்ஸ்…” என்றபடியே நெற்றியை ஒரு கரத்தின் கட்டை விரலாலும் ஆள்காட்டி விரலும் ஒருசேர பற்றி சிலமுறைகள் அழுத்தி விட்டுக் கொண்டாள். ஆழ மூச்செடுத்து தன்னை நிதானப்படுத்த முயன்றாள்.
“விளையாட்டுக்கும் ஒரு அளவு இருக்கு வேந்தன்…” அவளின் வார்த்தைகள் அவளுக்கே அபத்தமாய் தெரிந்திருக்க வேண்டும்.
“நான் சொன்னது விளையாட்டுக்குனா தோணுது உனக்கு…” பட்டென்று எழுந்து நொடியில் அவளை நெருங்கி நின்றிருந்தான் அவன்.
மூச்சுக்காற்று உரசிக் கொள்ளும் அளவிற்கு அவளின் முகத்தருகே நெருங்கி நின்றவன், “நான் சொன்னது எந்த அளவுக்கு சீரியஸ்னு உனக்கு காட்டட்டுமா ஆரா…” என்றவனிடம் ஒரு குறும்பு புன்னகை.
வேகமாய் விலகிக் கொண்டவள், “எப்போதிலிருந்து சாருக்கு இந்த புதுக்காதல் முளைச்சுதாம்…” என்றாள் கடுப்புடன்.
“தெரியல… அததான் நானும் தேடிட்டு இருக்கேன்…” கண்களை மூடி இதயத்தை தொட்டபடி, ஆழ்ந்த குரலில் சொன்னவனிடம் ஒரு ரகசிய நகை வழிந்தோடியது.
சில நொடிகள் இருவரிடம் பெரும் மௌனம். “எந்த நொடி என் மனசு உன் பக்கம் சாஞ்சுச்சுனு தெரியல ஆரா… ‘இன்னைக்கு உங்க ஆரா என்ன பண்ணா…’ அப்படினு அனும்மாகிட்ட முதன்முதலா ஆர்வமா கேட்ட நாளா இருக்கலாம்… உன்னோட உருவமும் குரலும் தெரியாமலேயே உன்னோட ஒவ்வொரு செய்கைக்கும் கற்பனையா நான் உயிர் குடுக்க தொடங்கினா நாளா இருக்கலாம்… எல்லாத்துக்கும் இந்த இடத்துல ஆரா இருந்தா எப்படி யோசிப்பா? என்ன முடிவெடுப்பானு நினைக்க ஆரம்பிச்ச நாளா இருக்கலாம்… முதல் தடவை உன்ன பாத்தப்ப கைகட்டிட்டு என்ன திமிரா பாத்தீயே… அந்த பார்வையா இருக்கலாம்… பத்தடி தூரத்துல நின்னு சின்னதா ஒரு ஸ்மைல் பண்ணுவீயே அதுவா இருக்கலாம்… இல்லைனா உன்ன பொண்ணு பாக்க வந்தாங்கனு சொல்லும் போது எனக்குள்ள சின்னதா ஒரு போறாமை எட்டிப் பாத்துச்சே அதுவா இருக்கலாம்… இந்த பத்து நாளும் ஒவ்வொரு நொடியிலையும் உன்கிட்ட நான் உணர அருகாமையிலையும் உரிமையிலையும் இருக்கலாம்… இதுல எந்த நொடி என் மனசு உன் பக்கம் சாஞ்சுதுனு தெரியல…
ஆனா அவன் உன் பியான்சினி சொன்ன நொடி… என் மனசு முழுசா உன் பக்கம் சாய்ஞ்சுடுச்சுனு புரிஞ்சுகிட்டேன்… உன்ன யாருக்கும் விட்டு தர முடியாதுனு தோணுச்சு… சொல்லிட்டேன்…
இந்த நிமிஷம் வரைக்கும் கல்யாணம் குழந்தைகனு யோசிச்சதே இல்ல ஆரா… இந்த நிமிஷம் யோசிச்சா உன் முகம் மட்டும் தான் மனச நிறைக்குது… அழகா விரியற கற்பனை சுகமா இருக்கு… அந்த உணர்வே அப்படியே ஜிவ்வுனு வானத்துல பறக்கற பீல்…” கண்களை மூடி சிலாகித்து சொன்னவனை தான் இமைக் கொட்டாது பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்.
“ஒருவேளை எனக்கு உங்கள பிடிக்கலனு சொன்னா…” ஒவ்வொரு வார்த்தையும் நிறுத்தி நிதானமாய் அழுத்தம் திருத்தமாய் வெளிவந்தது அவளிடம்.
“பிடிக்கலங்கறவங்க இத்தனை நேரம் கைய கட்டிட்டு கத கேட்டுட்டு இருக்க மாட்டாங்க…” அவளை நேருக்கு நேர் பார்த்து சொன்னான் அவன்.
“அப்படியா..?” கைகளைக் கட்டிக் கொண்டு, அவனை ஆழ்ந்துப் பார்த்தபடி கேட்டாள் அவள்.
“அப்படியே தான்… எங்க என் கண்ண பார்த்து நேருக்கு நேரா என்ன பிடிக்கலனு சொல்லுப் பாப்போம்…” அவனின் கண்களில் சாவல் விடும் மிடுக்கு.
“பிடிக்கல…” என்றாள் அவனின் கண்களை ஆழ்ந்துப் பார்த்தபடியே நொடியும் தாமதிக்காது.
“ஏய்… என்ன பொசுக்குனு சொல்லிட்ட… செல்லாது… செல்லாது… இதெல்லாம் சுத்தமா செல்லவே செல்லாது… நின் போய்ட்டு அப்பறம் வரேன்… நீ நல்லா பொறுமையா யோசிட்டு சாய்ங்காலமா சரினு சொல்லு… என்ன… வரேட்ட…” என்றவன் கண் இமைக்கும் நேரத்தில் அவளின் கன்னத்தில் தட்டிவிட்டு, அந்த அறையிலிருந்து ஓட்டமாய் ஓடி இருந்தான். அவனின் செயலில் அழகிய இளநகை ஒன்று அவளின் இதழ்களில் தோன்றி உறைந்துப் போனது.
– பற்றி எரியும்…

