
அருணின் மொத்த கடனும் சுதாகரன் தந்த பணத்தினாலும் நிலம் விற்றதினாலும் மொத்தமாக அடைந்திருந்தது. கடன் பத்திரங்கள் எல்லாவற்றையும் கிழித்து போட்டான். மனது நிம்மதியில் நிறைந்து கிடந்தது. சொல்லொணா உணர்வில் பிரதன்யாவின் கைகளை அழுத்திப் பிடித்துக் கொண்டான் .
கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் மேலாக இந்த கடனிற்காக மட்டுமே உழைத்து கொட்டி இருக்கிறான். கடன் அடைந்த மகிழ்ச்சியில் அவனின் மனம் திளைக்க பிரதன்யா புன்னகை மாறாமல் அவனைப் பார்த்தாள்.
“ஏதாவது கோவிலுக்கு போயிட்டு வருவோம் தனு. எனக்கு போகணும் போல இருக்கு”என்றதில் இருவரும் மகிழனோடு வடபழனி முருகன் கோவிலுக்கு தான் வந்திருந்தனர்.
முருகன் தரிசனத்தை முடித்து விட்டு வெளியே வருகையில் ஒரு திருமண ஜோடி எதிரில் வந்தது. அதுவரை இருந்த மனநிலை அருணுக்கு முற்றிலுமாக மாறியிருந்தது.
எதிரே மகிழனின் அம்மா அவளின் புதிய கணவனோடு கைகோர்த்து கொண்டு வந்து கொண்டிருந்தாள்.
அந்த புதியவனை அவளருகில் காணக் காண தன் அண்ணனின் இழப்பு அருணின் மனதைக் குத்திக் கிழித்தது.
தன் அண்ணனையே நினைத்துக் கொண்டு வாழ அவளுக்கு என்ன தலையெழுத்து என்று ஒரு பக்கம் வாதம் செய்தாலும் பெற்ற பிள்ளையை இப்படி விட்டு விட்டாளே என்ற ஆதங்கம் அவனுக்கு அதிகமாய் இருந்தது. இந்த திருமணம் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள மாட்டாளா அப்போது வராதா இந்த பிரச்சினை என்று யோசித்தவனுக்கு அப்போது தான் உரைத்தது. மகிழனின் கஸ்டடி கேட்டு வழக்கு தொடுத்த டாக்குமெண்ட் வந்ததே அது என்ன கணக்கு என்று குழப்பமாக நின்றான்.
“வாங்க போகலாம் ஏன் இப்படி நிற்கறீங்க மகிக்கு பசி எடுக்குதாம்”என்று சொல்லியபடி மகிழனோடு அருணின் கைப்பிடித்துக் கொண்டு நடந்தாள் எதிரில் வந்தவள் யாரென்று தெரியாதது போல.
அருணால் அப்படி அவ்விடத்தைக் கடக்கவே முடியவில்லை.
உணவகத்தில் மூவரும் அமர்ந்திருக்க அருணின் எண்ணங்கள் கடந்த காலத்தை நோக்கி பயணித்தது.
அருணின் அண்ணன் புகழேந்தி தன் காதல் மனைவியின் வளைகாப்பிற்கு பொருட்கள் வாங்க கிளம்பி இருக்க அவளோ தன் வீட்டினர் வருவார்களா என்ற ஆவலுடன் காத்திருந்தாள்.
அவளுக்கு சற்று முன் தான் வளையல்கள் வாங்கிய புகைப்படங்களை அனுப்பி வைத்தான். ஒவ்வொரு இடத்திலும் என்னென்ன வாங்கினானோ அத்தனையையும் நேரலையாக அவளுக்கு அனுப்பி கொண்டே தான் இருந்தான் புகழ்.
“எல்லாம் நேர்ல வந்து காட்டக் கூடாதா.. நான் தூங்க போறேன் டிஸ்டர்ப் பண்ணாதீங்க புகழ். இனிமே ஏதாவது மெசேஜ் பண்ணா நான் பார்க்கவே மாட்டேன்”என்று கிண்டலாக சிரித்தபடியே பதில் அளித்தவள் கைபேசியை போட்டு விட்டு உறங்கிப் போக அடுத்த அரை மணி நேரத்தில் புகழேந்தியின் விபத்து செய்தி வந்து சேர்ந்தது அவளுக்கு.
கைபேசி இசைத்திட எடுத்து காதில் வைத்தவள் “என்ன புகழ் ஏன் தொல்லை பண்றீங்க நீங்க”என்று சிரிக்க
“நாங்க மதுரா ஹாஸ்பிடல் ல இருந்து பேசறோம்”என்று தகவலை கூறி விட்டு விரைந்து வரும்படி சொல்லி இணைப்பைத் துண்டித்து இருந்தார்கள்.
அடித்துப் பிடித்து மருத்துவமனை சென்றதில் விபத்து பற்றி ஏதேதோ கூறினார்கள். கர்ப்பிணி கத்தி கதறுவதை அனைவரும் பரிதாபமாக பார்த்தனர்.
நிச்சயம் பிழைத்து விடுவான் என்று மருத்துவர்கள் நம்பிக்கை அளித்திருக்க அந்த நம்பிக்கை அடிப்படையில் பணத்தை தண்ணீராக செலவளிக்க அத்தனை பணத்தையும் விழுங்கிய மருத்துவம் இறுதியில் எதுவும் செய்ய முடியாத கையறு நிலையில் புகழின் பூதவுடலை வெள்ளைத் துணியில் சுற்றி கொடுத்தனர்.
அதை இன்று நினைத்தாலும் மனதால் இறந்து பிழைத்தான் அருண் பிரசாத்.
**********
தேஜா யுகனை எதிர்பார்த்து காத்திருக்க அவனோ நேரம் தாழ்த்திக் கொண்டே போனான்.
கைபேசியில் அழைத்தாலும் எடுக்க மறுத்தான். இவளுக்கு தான் இருப்புக் கொள்ளவில்லை. விட்டால் வாசலிலேயே போய் நின்று விடுவாள் அத்தனை துடிப்பு அவளுக்கு.
அவனின் கார் சத்தம் கேட்டது. பரபரப்பாகி விட்டாள் தேஜா. வேகமாய் வெளியே ஓடி வர சாரதாவிற்கு அத்தனை சிரிப்பு.
அவரைக் கண்டதும் தயங்கி நின்றவள் கதவையேப் பார்க்க “போய் தெறக்கறது என்னவோ என் மூஞ்சியில் தாழ்ப்பாள் இருக்கற மாதிரி தான்”என்று கிண்டலடித்தபடியே உள்ளே சென்று விட்டார்.
ஓடிச் சென்று கதவைத் திறக்க காரை பார்க் செய்து விட்டு உள்ளே வந்தவன் சைகையில் அவளை உள்ளே செல்லும் படி கூற அவளோ அது புரியாமல் “உங்க பேக்”என்று கைநீட்டி நின்றாள். உள்ளூர மனது படபடவென்று அடித்துக் கொண்டது அவளுக்கு.
“ப்ப்ச் உள்ள போ அஸ்வி சட்டுன்னு போயேன்”என்றான் முன் உச்சி முடியை சரி செய்து கொண்டே.
“எதுக்கு போக”எனும் போதே “உள்ள போடி”என்று அதட்ட தேஜாவின் விழிகள் தாராளமாக விரிந்தது அவனின் டியில்.
அவள் திரும்புவதற்குள் அவளை சமீபித்திருக்க கதவு அருகில் நின்றவளின் மூச்சுக் காற்று வேகமாய் பயணம் செய்ய துவங்கியிருந்தது.
வேண்டும் என்றே அவளை இடித்துக் கொண்டு செல்ல அவனின் செய்கை எல்லாம் அவளை இன்னும் திகைப்பில் ஆழ்த்தியது.
என்ன செய்கிறான் இவன் ஏன் இப்படி பண்றாரு ஒருமை பன்மை என மாற்றி மாற்றி மனதில் மரியாதை தந்தவள் அவன் பின்னோடு செல்ல சாரதா வெளியே வருவதற்குள் தேஜாவை தன்னறைக்கு இழுத்து கதவை சாற்றி இருந்தான்.
அவள் பேச வரும் முன்பே அதரங்கள் களவாடப்பட்டு கேஷத்தின் இடைவெளிக்குள் விரல்களில் நெரிபட்டு வன்மையின் பொருள் உணர வைத்து தன் உணர்வை எல்லாம் ஒட்டுமொத்தமாய் அவளில் இறக்கிக் கொண்டிருந்தான்.
அவனின் பிடரி முடியை அவள் இறுக்குகையில் தான் உணர்ந்தான் தன் செயலை.
சட்டென சுதாரித்து விலகி நின்றவன்”அஸ்வி”என்று மெல்லிய குரலில் அழைக்க அவன் செயலை அவள் தனதாக்கிக் கொண்டாள்.
அவன் முகம் எங்கும் முத்த கையொப்பம் இட்டது அவள் இதழ் ரேகைகள்.
“அஸ்வி என்ன பண்றடி. லிஷன் அஸ்வி”என்று திணறலாய் அவன் அழைக்கவும் வெடுக்கென்று திரும்பி கட்டிலில் அமர்ந்து கொண்டாள். அழுகை வேறு வர முகத்தை அழுந்த துடைத்து கொண்டாள்.
“அஸ்வி”என்றவாறு அவளருகில் அமர்ந்த நொடி “ஐ மிஸ் யூ. உங்களுக்கு தெரியுமா. அதான் இப்படி”என்று அவன் முகம் காணாமல் கூற
“நானும் தான்.”என்றான் தாபத்துடன். உடல் வெம்மையை தத்தெடுத்திருக்க தேஜாவின் தோள்ப் பட்டையில் தன் தாடை பதித்து “உனக்கு ஒரு மாதிரி அக்வேர்டா ஃபீல் ஆகிடுச்சா அஸ்வி நான் நான்”என்றதுமே அவன் பக்கம் திரும்பி நன்றாக அணைத்துக் கொண்டு “ப்ளீஸ் எதுவும் பேசாதீங்க”என்றாள்.
“இல்லை எனக்கு தெரியணுமே”எனும் போதே சாரதா அழைத்து விட்டார்.
“அத்தை கூப்பிடுறாங்க”என்று விலகி ஓடப் போனவளை இழுத்தவன் “இன்னைக்கு இங்க ஸ்டே பண்ணிட்டு நாளைக்கு போகலாம்”என்றான்.
“நீங்க வாங்க”என்றவளுக்கு கையெல்லாம் சில்லிட்டு இருக்க இன்னுமே உடல் கிடுகிடுவென ஆடியது சற்று முன் நிகழ்ந்த அவன் நிகழ்த்திய சம்பவத்தில்.
“நான் போறேன்”என்று வேகமாய் ஓட அவனுக்கு அத்தனை மகிழ்ச்சி.
அவள் பின்னால் வந்தவன் சாரதாவை எப்படி எதிர்கொள்வது என்று சிந்திக்க
“ஏன் டா மகனே ஆரத்தி எடுக்க வெளியே நிற்ப காசு வாங்கலாம் னு நினைச்சா ஆள் எப்படி எஸ்கேப் ஆகிட்ட நீ”என்றபடி அவனின் கையில் தேநீர் கோப்பையை திணித்தார் சாரதா.
“தெய்வமே நன்றி சொல்வேன் தெய்வமே டீயை எவ்வளவு மிஸ் பண்ணேன் தெரியுமா”என்றபடி விழிகளை மூடி ரசித்துக் குடிக்க
“அதுக்கு தான் சொந்தமா சூனியம் வைக்க தெரியணும் னு சொல்றது”
“சூனியமா”என்று இருவரும் விழிக்க
“சும்மா டைமிங் டயலாக்”என்று சிரித்தவர் “லஞ்ச் பண்ணி வச்சுட்டேன். ரெண்டு பேரும் சாப்பிடுவீங்களோ என்ன செய்வீங்களோ எனக்கு தெரியாது. நான் டுடே ஷாப்பிங் போறேன்.”என்றார்.
“ம்மா தனியா எதுக்கு போறீங்க”என்று அதட்ட
“தனியா எங்க போறேன் எங்க குக்கிங் கிளாஸ் குரூப்போட போறேன் வர லேட் ஆகும் உங்கப்பாவுக்கும் லேட் ஆகுமாம் சொன்னார். ரெண்டு பேரும் பார்த்துக்கோங்க”என்று மகன் மருமகளுக்கு இடையில் இடைஞ்சலாக இருக்காமல் கிளம்பி விட்டார்.
இருவருக்குமான அந்த தனிமை ஒரு வித அவஸ்தையை கொடுக்க தேஜா என்ன செய்வது என்று தெரியாமல் சமையலறை நோக்கி சென்று விட்டாள்.
அவள் அடுக்களையிலும் இவன் கூடத்திலும் அமர்ந்து இருந்தாலும் இருவரின் சிந்தனையும் இருவரையும் தொட்டே நின்றது.
இருவரும் கண்ணாமூச்சி ஆட எவ்வளவு நேரம் அவள் உள்ளேயும் இவன் வெளியேயும் நிற்பது.
தேநீர் குடித்து விட்டு கோப்பையை வைக்கும் சாக்கில் அடுக்களை உள்ளே செல்ல இன்னும் நடுக்கம் கூடியது பெண்ணுக்கு.
“அஸ்வி கப்”என்று நீட்டியவன் அவளை உரசும் தூரத்தில் நிற்க இன்னும் இன்னும் தாபம் விழுங்கும் தவிப்பு அவளுக்கு.
“சமையல் முடிச்சாச்சு தானே அப்புறம் ஏன் இங்கே”என்றவனுக்கு வேறு என்ன பேசுவது என்று புரியவில்லை.
“இல்லை அது வந்து ஹ்ம்ம் ஹான் அப்பளம் போடணும். நீங்க நீங்க சாப்பிடுறீங்களா”என்று கேட்க
“ம்ஹூம்”என்றவன் அடுத்து என்ன பேசுவது என்று தெரியாமல் அறைக்குச் சென்று விட்டான். தன் பின்னால் வருவாள் என்று எதிர்பார்த்து காத்திருக்க அவளோ தயக்கம் கொண்டு ஹாலிலேயே அமர்ந்து விட்டாள்.
சற்று முன் தான் செய்த செயலில் கூச்சமா தவிப்பா என்று பிரித்து அறிய முடியாத ஒரு உணர்வு நெஞ்சில் குடிபுகுந்தது. பிரிவின் உபச்சாரம் முத்தம் என்று முடித்திருக்க அடுத்து என்ன என்று இருவருக்கும் புரியவில்லை.
இனி அவன் எப்படி தன்னை அணுகுவான் என்ற சிந்தனையில் அவளும். அதற்கு மாறாக அன்று போல மறுபடியும் கோபப்பட்டு பேசுவாளோ என்ற அச்சத்தில் இவனும் தயங்கி நின்றனர்.
முதல் நாள் இரவெல்லாம் உறங்காததே அவளுக்கு கண்களை எரிய இவனுக்கோ தூக்கமின்மையும் இந்த தவிப்பும் இணைந்து மனதை ஏதேதோ செய்தது.
அவளைக் கண்டதும் உன் பிரிவு என்னை பாதிக்கிறது என்று சொல்ல தான் எண்ணி இருந்தான். ஆனால் அவளைக் கண்டதும் உணர்வுகள் பெருக்கெடுக்க நிலைமை கட்டுக்குள் அடங்க மறுத்து இந்த இதழ் பரிமாற்றத்தை நிகழ்த்தி விட்டான். நிச்சயம் இதற்காக அடிக்கப் போகிறாள் என்று அவன் நினைக்க அவளோ மாறாக தன் தவிப்பை அவனுள் இறக்கி அவனை இன்னும் பித்தாக்கினாள்.
தான் முன்னெடுக்காமல் அவள் வரப் போவதில்லை என்று உணர்ந்தவன் வெளியே வர எத்தனிக்க சட்டென கவனத்தில் பட்டது அந்த டைரி.
எச்சில் கூட்டி விழுங்கியவன் அந்த டைரியை எடுத்துப் பார்க்க கவிலயாவின் கவிதைச்சரங்கள் அவன் கண் முன்னே ஊஞ்சலாடியது. அந்த நொடியின் கணம் தாளாமல் பொத்தென்று அமர்ந்து விட்டான். மனதினுள் பாரம் குடியேற கண்களை மூடிக் கொண்டு அமர்ந்து விட்டான்.
தொலைக்காட்சி அதன் போக்கில் ஓடிக் கொண்டிருக்க இவளின் நினைவுகள் எங்கோ இருந்தது.
உணர்ச்சியின் பிடியிலும் பிரிவின் தவிப்பிலும் தங்களை வெளிப்படுத்திக் கொண்டவர்கள் இப்போது நெருங்கவே யோசித்தனர்.
…… தொடரும்
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
7
+1
2
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


Super super super super super super ini aduthu enna love ah உணருவார்கள் ah இல்லையா என்ன akapogutho