Loading

    தேஜா மனதின் பாரம் குறையும் வரைக்கும் அழுது தீர்த்தவள் யுகாவிடம் பேச வேண்டும் என்று முடிவு எடுக்க அதே நேரத்தில் வீட்டின் காலிங் பெல் அடித்தது. யுகா தான் வந்திருந்தான்.

    கதவைத் திறந்ததுமே அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு “டோன்ட் டிஸ்டர்ப் மீ அஸ்வி. நான் ட்ரிங்க் பண்ணி இருக்கேன்”என்று சொல்லியவாறு அறைக்குள் செல்ல இன்னுமே கோபம் வலுத்தது தேஜாவிற்கு.

    “குடிப்பழக்கம் கூட இருக்கா”என்று சத்தமாய் கேட்டு விட

    “வாட் கம் அகெய்ன்”என்றவன் “ஏன் உனக்கு தெரியாதா… விருந்து அப்போ உன் பிரதர்ஸ் கூட ட்ரிங்க் பண்ணோம் தானே சீ நான் ஜஸ்ட் சோசியல் ட்ரிங்க்கர் தான் என்னை மொடா குடிகாரன் ரேஞ்சுக்கு யோசிக்காதே”என்று எச்சரிக்க

    “இன்னும் என்ன பழக்கம் எல்லாம் இருந்து தொலைக்குதுனு சொல்லி தொலைங்க”என பேசும்போதே குரல் உடைந்திருந்தது.

    அவளின் குரல் மாறுபாட்டில் துணுக்குற்றவன் “அழுதியா நீ… ஆமா என்ன கேட்ட இந்த பழக்கம் வேறயாவான்னா இல்லை புரியலை என்ன மீன் பண்ற நீ”என்றான் அழுத்தமாக.

    “எதுவும் இல்லை”என்று மூக்கை உறிஞ்சி கொண்டு சென்றவளின் கரம் பற்றி “சொல்லிட்டு போ தேஜஸ்வினி”என்றதில் எரிமலையானாள் தேஜா.

    “கவிலயா வை லவ் மட்டும் தான் பண்ணீங்களா இல்லை”என்று அழுத்தமாக கூறி நிற்க

    “இதென்ன கேள்வி லவ் தான் பண்ணேன்”

    “அப்போ லிவ் இன் ல நீங்க அவங்களோட இருந்ததா சொல்றது”

    “யார் சொன்னது அம்மாக்கு கூட தெரியாதே உனக்கு யார் சொன்னது”

    “யாரோ சொன்னாங்க உங்களால எப்படி முடிஞ்சது ஒரு பொண்ணை லவ் பண்ணி அவ கூட குடும்பம் நடத்தி”

    “ஜஸ்ட் ஷட் அப் தேஜஸ்வினி”என்று கத்தியவன் அவளை ஆத்திரமாக முறைத்து விட்டு கதவை அடித்துச் சாத்தினான்.

    அழுகையும் புலம்பலுமாக ஹாலிலேயே குளிரில் போர்த்திக் கொள்ள எதுவும் இன்றி படுத்து விட்டவளுக்கு தலை கனத்து காய்ச்சல் கண்டிருந்தது.

  நேரம் ஆக ஆக எழுந்து செல்லவும் முடியாமல் குளிரைத் தாங்கவும் முடியாமல் வெகுவாய் திணறிப் போனாள்.

    நடு இரவிற்கு மேல் தண்ணீர் தாகம் எடுக்கவே வெளியே வந்த யுகன் கூடத்தில் உறங்கும் அவளைக் கண்டு அதிர்ந்து போனான்.

    “மென்டல் மென்டல்”என்று திட்டிக் கொண்டே அவளை நெருங்கி தொட்டவன் அந்த வெம்மையில் பதறி கையை எடுத்துக் கொண்டான்.

    “ஷிட் ஃபீவர் வந்திடுச்சு”என்று சொல்லியபடி “அஸ்வி”என்று தட்டி எழுப்ப அவளோ “ஹ்ம்ம்” என்று முனகினாள் காய்ச்சலின் வீரியம் தாளாமல்.

    “ஏதாவது அறிவு இருக்கா பைத்தியமே இப்படியா பெட்சிட் கூட இல்லாம தூங்குவ”என்று திட்டியபடியே அவளைத் தூக்கிக் கொண்டு அவளின் அறைக்குச் செல்ல சுயநினைவின்றி இருந்தவளுக்கு எந்த உணர்வும் இல்லை.

    “ப்பா”என்று முனகி உளறிக் கொண்டே அவன் பனியனை இறுகப் பற்றிக் கொண்டாள்.

   அவளை படுக்கையில் விட்டவன் கைகால்களை நன்கு தேய்த்து விட்டான்.

    இரண்டு ரஜாயை போர்த்தி விட்டு தன்னறைக்கு மாத்திரையை எடுத்தவன் “சாப்பிட்டாளான்னு தெரியலையே”என்று சொல்லியபடி பாலை காய்ச்சி எடுத்துக் கொண்டு வந்தான்.

    உள்ளே தேஜா போர்வைக்குள் நத்தையாக சுருண்டு கிடந்தாள்.

    “அஸ்வி எழுந்துக்கோ டேப்லெட் போடு ஃபீவர் வந்திருக்கு”என்று தட்டி எழுப்பி விட

    “எனக்கு வேண்டாம் நீங்க போங்க”என்று குரல் மட்டும் தான் வெளியே வந்தது.

    “என்ன வேணாம். அடங்காம ஹால்ல தூங்கி ஃபீவரை இழுத்து வச்சுட்டு இப்ப வேணாம் அது இதுன்னு”என்று அதட்டியவன் அவளை எழுப்பி அமர வைத்து விட்டான்.

    “ப்ப்ச் வேண்டாம் எனக்கு தூக்கம் வருது விடுறிங்களா”என்று முறுக்கிக் கொண்டு மீண்டும் படுத்தாள்.

    “அடி போட்டுடுவேன் பார்த்துக்கோ.”என்று மிரட்ட அதற்கெல்லாம் செவி சாய்க்கவில்லை அவள். மீண்டும் உறங்க தான் முயற்சி செய்தாள்.

    “ப்ப்ச் பிடிவாதம் பிடிக்காம இந்த பாலை குடிச்சுட்டு டேப்லெட் போடு அஸ்வி”என்று சோர்வாய் சொல்வியவனுக்கும் உறக்கம் கண்ணைக் கட்டியது.

    “தேஜஸ்வினினு சொல்லுங்க”என்று பதிலுக்கு மல்லுக்கு நிற்க

    “இப்போ நீ வாங்கப் போற என் கிட்ட.”

    “அதான் அப்போ சொன்னீங்க தானே எப்போவும் அப்படியே கூப்பிடுங்க”

    “அதை பத்தி காலையில் பேசலாம் இப்ப இதை குடிச்சு டேப்லெட் போடு”என்று அவளுக்கு மேல் பிடிவாதமாக நின்றான்.

    இவள் முடியாதென மறுக்க அவன் செய்தே ஆக வேண்டும் என்று நிற்க அதிகாலை நான்கு மணி ஆகிப் போனது பாலும் ஆறிப் போனது.

    “என்னவோ பண்ணு”என்று கத்தியவன் அவளிடம் இருந்த ஒரு ரஜாயைப் பிடுங்கி அங்கேயே படுத்து விட்டான்.

    “நீங்க ஏன் என் ரூமில் தூங்கறீங்க அங்கே போங்க”என அதற்கும் மல்லுக்கு நின்றவளை ஆயாசத்துடன் பார்த்தவன் “சண்டை போடற எனர்ஜியில் நான் இல்லை. இந்த இம்சைக்கு தான் கல்யாணமே வேண்டாம்னு சொன்னேன் யார் கேட்டீங்க”என்று சலித்து கொண்டான்.

    “இப்பவும் உங்களை யாரும் பிடிச்சு வைக்கலை”என்றாள் கடுப்பாக.

    சடாரென எழுந்தவன் “என்னை யாரும் ஃபோர்ஸ் பண்ணவும் முடியாது எனக்கான முடிவை எடுக்க வைக்கவும் முடியாது”என்றவன் வேகமாய் பாலை எடுத்து அவளது வாயருகே கொண்டு சென்றவன் “பேச்சா பேசின ஒழுங்கா பாலை குடிச்சுட்டு டேப்லெட் போடு”என்று மீண்டும் அதட்டி விட்டு அவள் மறுக்க மறுக்க குடிக்க வைத்து மாத்திரையை போட வைத்தான்.

    முகத்தைச் சுளித்தவள் “இப்போ நீங்க மட்டும் என் முடிவை எடுக்கலாமா”என்றாள் வெடுக்கென்று.

    “ஹஸ்பண்ட் வொய்ஃப்க்குள்ள அந்த பார்ஷியாலிட்டியே கிடையாது. உனக்கு நானும் எனக்கு நீயும் முடிவு எடுக்கலாம் நான் சொன்னது பிஃபோர் மேரேஜ்”என்றவன் மீண்டும் வந்து படுத்துக் கொள்ள அவளோ கடுப்பாக எழுந்து செல்ல போனாள்.

    “சொல்லிட்டே இருக்கேன் உன் இஷ்டமா செய்வியா நீ”என்று முறைத்து விட்டு தன் ரஜாய்க்குள்ளவே அவளை இழுத்துப் படுக்க வைத்தான்.

    “இதென்ன விளையாட்டு யுகா விடுங்க”என்று திமிறியவளை விட்டால் தானே அவன்.

    “ப்ப்ச் சைலண்டா தூங்கு அஸ்வி.”என்றவன் பிடியை தளர்த்தவே இல்லை.

    அவளும் திமிறிப் பார்த்து காய்ச்சலின் வீரியம் தாளாமல் அப்படியே படுத்துக் கொண்டாள். ஏனோ அவன் அண்மையும் அவளுக்கு இதம் பரப்பியது.

    தனது தோளில் தாங்கியபடி அவளை உறங்க வைத்தவனுக்குமே விழிகள் உறக்கம் தேட தான் செய்து கொண்டிருக்கும் செயலை மனதில் ஆராய்ந்தபடியே உறங்கியும் போனான். ஏற்றும் ஏற்காமலும் ஒரு விதமான அவஸ்தையை உணர்ந்தவன் தன்னை நம்பி வந்த பெண்ணின் நம்பிக்கையை உடைக்க மனதின்றி நிதர்சனம் ஏற்று கொள்ள நிம்மதியான உறக்கம் அவனுக்கு.

    ********

    மகிழன் உறங்கிக் கொண்டிருக்க அருண் எழுந்தமர்ந்திருந்தான். பிரதன்யா எப்போதோ எழுந்து விட்டிருந்தாள். அன்று விடுமுறை என்றாலும் விரைவில் எழுந்து சமைத்து முடித்தவள் காஃபியோடு அமர்ந்து விட்டாள்.

    “ஏன்டாம்மா லீவ் தானே மெல்ல எழுந்துக்க வேண்டியது தானே”என்று கந்தசாமி வந்தவர் கேட்க

    “வேலையை முடிச்சு வச்சுட்டா மகியை அழைச்சுட்டு வெளியே போகலாம் ல மாமா அதான்”

    “சரிம்மா சரி”என்றவருக்கும் காஃபியை கலந்து கொடுக்க அருணும் வெளியே வந்து விட்டான்.

    “எனக்கு காஃபி”என்றபடி வந்தவனிடம் “முழிச்சுட்டீங்களா இருங்க போடுறேன்”என்று எழ

    “இரு இரு நானே போடுறேன்”என்று சமையலறை புகுந்தான்.

    “நீ வந்த பிறகு இப்ப தான் கிச்சன் பக்கமே போறான். “என சிரித்தார் கந்தசாமி.

    “என்ன தனு இப்பவே சமையல் முடிச்சுட்ட பொறுமையா பண்ணி இருக்கலாம்ல”என்று கேட்டபடி தானும் அமர

    மகியோடு வெளியே போகலாம் என்று சொல்லியவள்”அகிலுக்கு லீவாம் வர்றேன்னான். அதான்”என்றாள்.

    “அப்போ ரெண்டு பேரும் போயிட்டு வாங்க நானும் அப்பாவும் ஒரு செக்கப் இருக்கு அதுக்கு போயிட்டு வர்றோம்”என்று சொல்லி தந்தையிடம் கண்காட்ட அவரும் அதே போலவே கூறினார்.

    “என்ன செக்கப் போன வாரம் தானே பண்ணோம் இப்போ என்ன”என்று குழப்பமாக கேட்க

    “ஐ செக் அப் கண்ணு உறுத்துதுனு சொன்னாங்க அப்பா”என்று சொல்லி விட பிரதன்யா நம்பி விட்டாள்.

    சற்று நேரத்தில் அகிலன் வந்து விட காலை உணவை முடித்துக் கொண்டவர்கள் அவரவர் திட்டப்படி கிளம்பினர்.

    “ஏன் ப்பா மருமகள் கிட்ட பொய் சொன்ன”என்று மகனிடம் ஆதங்கமாய் கேட்க

    “அவளுக்கு தெரிஞ்சா வருத்தப்படுவாப்பா விடுங்க இன்னும் கொஞ்ச நாளைக்கு”என்று தந்தையை சமாதானம் செய்தவன் நேராக தந்தையோடு ஒரு கந்துவட்டி கொடுக்கும் நபரைத் தான் காண வந்திருந்தான்.

    கந்துவட்டி தரும் நபர் அதிக வட்டி சொல்லிக் கொண்டிருக்க அருணுக்கு பகீரென்றது வட்டி விகிதம்.

    “என்ன தம்பி பண்றது காலம் கெட்டுக் கெடக்குது உங்களை நம்பி கணிசமான அமவுன்ட் தர்றேன் அதுவும் எந்த வித அடமானமும் இல்லாமல். வெளியே இதை விட கூடுதலாக வாங்கறாங்க தம்பி வேணும்னா விசாரிச்சுக்கங்க”என்றார் அவர் கறாராக.

    தனக்கும் வேறு வழி இல்லை என்று உணர்ந்தவன் அந்த வட்டிக்கு பணம் வாங்க சம்மதம் தெரிவித்தான்.

    “அப்போ காலையில் வந்து கையெழுத்து போட்டு விட்டு பணத்தை வாங்கிக்கங்க தம்பி”என்றார் அவர்.

    “சரிங்க”என்றவன் தந்தையோடு வெளியே வர அதை பிரதன்யா கண்டிருந்தாள்.

    “ஹாஸ்பிடல் போறேன்னுட்டு இதென்ன இங்கே ஃபைனான்ஸ் கம்பெனில நிக்கறாங்க”என்று எண்ணிக் கொண்டவள் சட்டென கோபம் துளிர்த்து “வீட்டுக்கு வரட்டும் கவனிச்சுக்கிறேன்”என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டு அகிலனோடு கிளம்பினாள்.

    ‘ஏன் இப்படி இருக்கிறான் தனக்கு ஒரு கஷ்டம் என்பதை என்னிடம் சொல்லக் கூடாதா’என்ற ஆதங்கம் அவளுள்.

    எல்லாம் தெரிந்து தானே திருமணம் செய்தேன் பிறகேன் இப்படி செய்கிறான் என்ற கோபம் ஆறாய் பெருகியது.

    இவர்கள் வருவதற்கு முன்பாகவே அருண் தந்தையோடு வீட்டிற்கு வந்திருக்க

    “வந்துட்டீங்களா செக்கப் முடிஞ்சதா என்ன சொன்னாங்க டாக்டர்” என்றாள் அழுத்தமாக.

    “ஹ்ம்ம் முடிஞ்சுது மா ட்ராப் தந்தாங்க அப்புறம் ட்ரிப்ஸ் போட்டு விட்டாங்க ரெண்டு நாள் ல சரி ஆகிடும் னு சொன்னார்”என்று கந்தசாமி சொல்ல

    “ட்ரிப்ஸா”என்று கேட்க

    “அதுவந்து கண்ணுக்கு காட்டிட்டு வரும் போது இன்னொரு ஹாஸ்பிடல் ல ட்ரிப்ஸ் போட சொன்னேன் அதை சொல்றார்”என்று சமாளித்தான் அருண்.

    “மங்களம் பைனான்ஸ் ல குளுக்கோஸ் எல்லாம் போட்டு விட்டு இருக்காங்களே”என்று ஆச்சரியமாக அவள் வினவ அருண் திடுக்கிட்டவன் பின் திருதிருவென விழித்தான் அவளிடம் அகப்பட்டு கொண்டதில்.

    ….. தொடரும்

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 22

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
9
+1
21
+1
5
+1
3

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. Super super super super super super super mangalam.mattitaye panguuu