Loading

    விருந்து கொண்டாட்டம் எல்லாம் முடிந்து அனைவரும் செந்தாளம்பட்டி விட்டு கிளம்பியிருந்தனர்.

   இனி இயல்பு வாழ்க்கை திரும்பி விட்டால் தான் தெரியும் புதுமணத் தம்பதிகளின் இணக்கமும் இயல்பும். ஏற்கனவே அறிந்தவர்கள் ஆயினும் அத்தனை நெருக்கம் கிடையாதே.

    அருணிற்கு பிரதன்யாவை திருமணம் செய்தது முழு விருப்பம் என்றாலும் இன்னும் அவள் தன்னை முழுமையாக அறியாததில் தயக்கம் கொண்டு தான் நெருங்காமல் நிற்கிறான். யுகாவும் அப்படியே. தேஜாவின் காதல் தெரிந்தவன் தன்னுடைய காதலையும் கூறவில்லை. காதலியின் நினைவில் தடுமாறி தயக்கமாக இருப்பதையும் கூறவில்லை. திருமணத்தில் இப்போது ஏனோ அவனுக்கு நாட்டமில்லை போல என்று எண்ணினாலும் அன்று அவன் தூக்கத்தில் உரைத்த லயா என்ற பெயரில் துணுக்குற்று தான் இருக்கிறாள். ஆனாலும் அவனிடம் எதையும் வெளிப்படையாக கேட்கவில்லை அவள்.

    சொல்ல வேண்டும் என்றால் அவனே சொல்வான் என்று விட்டு விட்டாள்.

    சென்னைக்கு சென்ற பிறகு அப்புறமாக அவரவர் வீட்டிற்கு செல்லுமாறு சொல்லி இருந்தார் பத்மநாபன்.

    “நீங்க சொல்றது போலவே செஞ்சுக்கலாம் ண்ணா”என்று சாரதா கூறிவிட அனைவரும் பத்மநாபன் வீட்டிற்கு சென்றனர்.

    “இந்த ஃபார்மாலிட்டி அது போல எதுவும் வேண்டாம் மாமா. சாதாரணமாக இருந்துட்டு கிளம்பற மாதிரி பார்த்துக்கலாம்”என கிருஷ்ணன் கூற கந்தசாயிக்கும் அதில் ஆட்சேபனை இருக்கவில்லை.

    “சரி மச்சான் நீங்க எப்படி சொல்றீங்களோ அப்படி செஞ்சுக்கலாம். அதான் பாத்திரம் பண்டம் எதுவும் வேண்டாம் னு சொல்லிட்டீங்க”என்றவருக்கு அதில் வருத்தம் தான்.

    “அண்ணா நான் என்ன பத்து பிள்ளையா பெத்து வச்சிருக்கேன் இவன் ஒரு ஆள் தானே எனக்கு நம்ம வீட்டில் தந்ததே பரண்ல தான் கிடக்கு. இதுல தேஜுக்கு வாங்கினா அதுவும் பரண்ல தான் போடணும்.இவன் வேற பெங்களூர் ல ஒரு கிச்சன் செட்டப் பண்ணி இருக்கான் எதுக்கு தேவை இல்லாத செலவு”என்றார் சாரதா.

    கந்தசாமியுமே பாத்திரங்கள் வேண்டாம் என்று சொல்லி இருக்க இரு பெண்களுக்கும் அதற்கான பணத்தை அவர்கள் கணக்கிலேயே போட்டு விட்டார் பத்மநாபன்.

    “பணம் எதுக்கு ண்ணா இவ்வளவு செலவு வேற”என்று சாரதா மறுத்திருக்க மறுத்து பேச வந்த அருணை தடுத்த பிரதன்யா “ப்ப்ச் தேவைப்படும் அமைதியாக இருங்க”என்று சொல்லி விட்டாள்.

    “அவருக்கு செலவு இழுத்து விட வேண்டாம் னு பார்த்தேன்”என்ற கணவனை முறைத்துப் பார்த்தவள் “நீங்க வேணாம் னு சொன்னாலும் அவர் கேட்க மாட்டார்.”என்றாள்.

    அவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அருணும் யுகாவும் “எப்படா முடிப்பாங்க தூக்கம் கண்ணை கட்டுது”என்று அகிலனிடம் கேட்க.

    “மாம்ஸ் தூக்கமா நான் நைட் படத்துக்கு போக ப்ளான் பண்ணி இருக்கேன் நீங்க தூங்கறேன்னு சொல்றீங்க”என்றான் படபடப்பாக.

    “அதெல்லாம் நாளைக்கு போகலாம் டா இப்ப வேணும் ரெஸ்ட் உன் ரூம் எது”என்று வினவ

    “எதே என் ரூமிலா அக்காங்க ரூமுக்கு போகலையா நீங்க”என்று அதிர

    “மூணு பேருக்கும் தனி ரூமா என்ன” என்று கேட்க

    “ஹ்ம்ம் இல்லை பிரதியும் நானும் ஒரு ரூம் ஷேர் பண்ணோம் தேஜாக்கா தனி ரூம் எடுத்தாங்க”

    “இதென்னடா வித்தியாசமான ஷேரிங்கா இருக்கு”என்று அருண் கிண்டல் செய்ய

    “அதுவா நாங்க ரெண்டு பேரும் ப்ராஜெக்ட் அது இதுன்னு தூங்கவே லேட் ஆகும் தேஜாக்கா டைமுக்கு தூங்கினா தான் மண்டபம் போக முடியும் அதனால இப்படி ஷேர் பண்ணிட்டோம்”என்றவன் பேசிக் கொண்டே இருக்க யுகா ஷோபாவிலேயே தலையை சாய்த்து உறங்க ஆரம்பித்து விட்டான்.

    “தேஜு அவர் தூங்கறார் பாரு ரூமுக்கு கூட்டிட்டு போ”என்று திரிபுரசுந்தரி சொல்ல

    “ஹ்ம்ம் மா”என்றவள் அவன் தோளில் தட்டி எழுப்ப “டிஸ்டர்ப் பண்ணாத கவி”என்று முனகி விட்டான்.

    அகிலனும் அருணும் திடுக்கிட்டு பார்க்க தேஜா செய்வதறியாமல் திகைத்து ஒரு நொடி நின்றவள் “உள்ள வந்து தூங்குங்க ஆதி.”என்று வேகமாய் தட்டி எழுப்ப அவனும் உறக்கம் கலைந்து எழுந்து விட்டான். நல்ல வேளையாக பெரியவர்கள் அவன் முனகலை கவனிக்கவில்லை.

    “யார்டா கவினா”என்று அருண் மெல்லிய குரலில் கேட்க அகிலனோ “ஏதோ நேம் சொன்னீங்க மாமா”என்றான் புருவம் முடிச்சிட

    “அஸ்வி னு சொன்னாரு அகில். உங்க காதுல தப்பா விழுந்துடுச்சு அருண்”என்றவள் “வாங்க போகலாம்”என்று கணவனை அழைத்துச் செல்ல அருண் அதற்கு மேல் தோண்டி துருவவில்லை அதனை. ஆனால் அவனுக்கு நிச்சயம் புரிந்தது யுகா கவி என்று தான் கூறினான் என்று.

    “பார்த்தீங்களா ரெண்டு பேரும் செல்ல பேர் வச்சு கூப்பிடுறதை”என்று அகிலன் சிரிக்க அருணும் சமாளிப்பாய் புன்னகைத்தான்.

    “நல்ல வேளை இவன் கேட்கலை”என்று முணுமுணுத்த அருண் “ஏன் நானும் தான் உன் அக்காவை தனு னு கூப்பிடுறேன்

. அவ என்னை பிரசாத் னு சொல்றா இது ஒரு விஷயமா”என்றான்.

    “ஓஹோ”என்று சிரித்த அகிலன் “நீங்களும் போய் ரெஸ்ட் எடுங்க மாமா நானும் மகியும் கொஞ்சம் வெளியே போயிட்டு வர்றோம் பத்திரமா பார்த்துப்பேன் கூட்டிப் போகவா”என்று கேட்க

    “மால் எல்லாம் வேண்டாம் டா கண்ணில் பார்க்கறதை எல்லாம் கேட்பான்”என்று சொல்ல

    “அது நான் பார்த்துக்கிறேன். நீங்க பர்மிஷன் தந்தா மட்டும் போதும்”என்றிட “சரி போயிட்டு வாங்க”என்று ப்ரதன்யா அறைக்குள் சென்று விட அகிலனும் மகிழனும் வெளியே கிளம்பி விட்டனர்.

    ஆண்கள் மூவரும் பத்மநாபன் அறையில் படுத்து விட சாரதாவும் திரிபுரசுந்தரியும் ஹாலில் படுத்து விட்டனர்.

    ********

    “ஹோய் என்ன என்னை விட்டுட்டு நீ மட்டும் வந்து படுத்துட்ட”என்றபடி கட்டிலில் அமர பிரதன்யா மூக்கை சுரித்து”எவ்வளவு நேரம் கூப்பிடுறது நீங்க பேசிட்டே இருந்தீங்க அதான் வந்துட்டேன்”என்றவள் கைபேசியில் கவனம் வைத்தாள்.

    “அதை ஓரமா வை”என்று கைபேசியை பிடுங்கி மேசையில் வைத்தவன் “ஃபர்ஸ்ட் டைம் வந்திருக்கேன் உன் ரூமை சுத்திக் காட்டாம மொபைல் பார்க்கிற”என்றான் வம்பாக

    “ம்ம்க்கும் பெரிய தாஜ்மஹால் இதை சுத்தி வேற காட்டணுமா உட்கார்ந்த இடத்தில் இருந்தே கண்ணை சுழட்டினா மொத்த ரூமும் தெரியும்”என்றாள் சிரிப்புடன்.

   “ரூம் நல்லா நீட்டா இருக்கு நீ தான் மெய்ன்டெய்ன் பண்ணுவியா”என்று கேட்டதில் விழித்தவள் “அதெல்லாம் அகில் தான் பண்ணுவான் நமக்கும் க்ளீனிங்கும் ஏழாம் பொருத்தம்”என்றாள்.

    “என்ன அடிப்பாவி அப்போ நம்ம வீட்டில் க்ளீனிங்”என்று பதற

    “அஃப்கோர்ஸ் வழக்கம் போல நீங்க தான் பண்ணிக்கணும்”என்று சிரிக்க

    “போச்சா”என்று தலையில் கை வைக்க கலகலவென்று சிரித்தாள்.

    “ஹோய் சும்மா சொன்னியா”என்றவனின் தோளில் தட்டி “ரெண்டு பேரும் பார்ப்போம்”என்றாள்.

    இருவருக்குமான பேச்சு நீண்டு கொண்டே போக ஒரு கட்டத்தில் சட்டென நிறுத்தியவன் அவளை ஆழ்ந்து பார்க்க “என்னாச்சு” என்றாள் குழப்பமாக.

    “ஹ்ம்ம் நத்திங்”என்றவனுக்கு அதற்கு மேல் உணர்வுகள் கட்டுக்குள் நிற்கவில்லை.

    “தனு லெட் மீ கிஸ் ப்ளீஸ்”என்றவாறு அவள் இதழ்களை சமீபித்திருக்க பதற்றத்துடன் பார்த்தாள் பிரதன்யா.

    அவளின் அனுமதி வேண்டி அவன் பார்க்க அவளை அறியாமல் சம்மதமாய் தலையாட்டி வைக்க அடுத்த நொடி அவன் இதழ்கள் மென்மையாய் அவளது அதரங்களை கைது செய்திருந்தது வன்மையும் மென்மையுமாக

    இருவருக்குமான முதல் இதழ் கூடல். அழகிய தருணங்களாய் இருவரின் மனதிலும் பதிய இன்னும் நெருக்கமாக இணக்கமாக நெருங்கியது இருவரின் மனமும்.

    சத்தமின்றி சந்தங்கள் பாடிய இதழ்களுக்கு இடைவேளை தந்தது என்னவோ மூச்சு காற்றுக்கு ஏங்கிய பொழுதில் தான். அவன் விழி நோக்காமல் இமை மூடி கீழ் பார்த்தவளை மென் புன்னகை மிளிர பார்த்தவன் பின்னங்கழுத்தை வருடியபடி திரும்பிக் கொண்டான்.

    “நான் நான் தண்ணி கொண்டு வர்றேன்”என்று எழுந்து செல்ல முயன்றவளைத் தடுத்து இம்முறை அனுமதி கேளாமலேயே இதழ் யுத்தம் துவங்க அவனுக்கு இணங்கி நின்றாள் பெண்.

    ********

    இங்கே அறைக்குள் வந்த யுகாதித்தன் எதுவும் பேசாமல் படுத்து விட தேஜாவின் நினைவு எல்லாம் சற்று முன் அவன் கூறிய பெயரிலேயே தேங்கி நின்றது.

    ‘யார் அது கவி அன்றைக்கு லயா இன்றைக்கு கவி இருவரும் வேறு வேறா இல்லை ஒருவரா யார் அவள்…உறக்கத்தில் கூட அவள் பெயரை புலம்பும் அளவிற்கு அத்தனை நெருக்கமா இவன் காதலித்த பெண்ணாக இருப்பாளோ‌. விட்டு சென்று விட்டாளோ இவனுக்கும் என்னைப் போல காதல் தோல்வியோ அப்படி என்றால் ஏன் சொல்லவில்லை என்னிடம். மறைக்கும் அளவிற்கு என்ன.. யாராய் இருக்கும் இத்தனை நெருக்கமான இருவரும் எப்படி பிரிந்தார்கள். என்ன காரணம் அவள் பக்கம் தான் பிரச்சினையா இல்லை இவரா’ஏதேதோ மனதில் சிந்தனை ஓட அப்படியே உறங்கியும் போனாள் தேஜஸ்வினி.

    இரவு ஆனதும் யுகா எழுப்பி தான் மறுபடியும் எழுந்தாள் அதுவரையில் அப்படி ஒரு உறக்கம் அவளுக்கு.

    “அவ்வளவு டயர்டா எழுந்துக்கோ அஸ்வி டின்னர் வேண்டாமா உனக்கு”என்று கேட்க

    “ஹ்ம்ம் டைம் என்ன”

    “மணி எட்டு. ஃப்ரெஷ் ஆகிட்டு வா வெய்ட் பண்றேன்”என்று அமர்ந்து கொள்ள “நீங்க சாப்பிடலையா”என்றவள் பரபரப்பாய் உள்ளே சென்று தன்னை சுத்தப்படுத்தி கொண்டு வந்தாள்.

    அனைவருமாய் இரவு உணவை உண்ண கலகலவென்று நகர்ந்தது உணவு வேளை.

    அவ்வப்போது யுகாதித்தனை தேஜா பார்ப்பதும் பின் வேறு பக்கம் திரும்பிக் கொள்வதுமாக இருக்க என்னவென்று வினவினான் விழிகளால்.

    ஒன்றும் இல்லை என்று தலையாட்டியவளுக்கு மனம் முழுவதும் குழப்பம் விரவிக் கிடந்தது.

    இந்த பக்கம் மகிழன் தான் சென்று வந்த பார்க் பற்றி பிரதன்யாவிடம் வாய் ஓயாமல் பேசிக் கொண்டிருந்தான்.

    “ட்டெயின் ட்டெயின் போனோம்”

    “ஓஓஓ உனக்கு புடிச்சுச்சா இன்னொரு தடவை போவோமா”என்று பிரதி கேட்க “ஹ்ம்ம் புடிச்சுச்சே போலாம் போலாம் டாதி போலாம்”என்று அருணிடம் கூற

    “அது போகலாம் இப்ப ரெண்டு பேரும் சாப்பிடுங்க ஆள் கிடைச்சா போதுமே வாய் ஓயாதே உனக்கு”என்றபடி மகனுக்கு ஊட்டி விட பிரதன்யா யாரும் அறியாமல் தன் வாயைத் திறந்து வைத்தபடி எனக்கு என்று சைகை காட்ட சிரித்தபடி மகிழனுக்கு ஊட்டி விட்டான் அருண்‌

    “காலையில் ஏழு மணிக்கு எல்லாம் கிளம்பணும் மாமா அஸ்வி இங்கே இருக்கற துனா இருக்கட்டும் நான் நெக்ஸ்ட் வீக் வந்து கூப்பிட்டுக்கிறேன்.”என்றான் யுகா.

    “ஏன் ஏன் நெக்ஸ்ட் வீக். எல்லாம் ரெடியா தானே இருக்கு ஓனர் கிட்ட பேசியாச்சு அப்புறம் ஏன் தேஜ் இங்கே இருக்கணும்”என்று படபடத்தார் சாரதா.

    “ப்ப்ச் ம்மா. அங்க பிரச்சினை இல்லை இங்கே அஸ்வி வேலையை விட்டு வரணும் ல ரெண்டு ப்ரோக்ராம் கமிட் ஆகியிருக்கறதா சொன்னா அதை முடிச்சதும் கூட்டி போறேன் மா. அதுக்குள்ள அவசரம்”என்றான் சலிப்பாக.

    “நீயே தான் பண்ணனுமா தேஜா”என்று சுந்தரி கேட்க

    “ஒரு கம்பெனி பார்ட்டிக்காக கேட்டு இருக்காங்க மா. அது நான் இருந்தா தான் சரியாக இருக்கும் இன்னும் ஒரு வாரம் தானே”என்றாள் சமாதானமாக.

    “ஓகே எல்லாம் படுங்க” என்ற பத்மநாபன். “அகிலா நீ மாடி ரூமில் மாமா கூட படுத்துக்கோடா.அந்த ஃப்ளாட் ஓனர் கிட்ட நான் பேசிட்டேன் ” என்று கூற மகிழன் கந்தசாமியோடு போய் விட்டான் அகிலன். அங்கேயே மற்றொரு அறையில் சாரதா கிருஷ்ணன் இருவரையும் உறங்க அனுப்பி வைத்த சுந்தரி தானும் படுக்கச் சென்று விட்டார்.

     இரு ஜோடிகளும் தங்கள் அறைக்குச் செல்ல தேஜா யுகா உள்ளே நுழைந்ததுமே “யார் கவி”என்று கேட்க அவன் அதிர்ந்து பார்த்தான் அவளை ‌

    ….. தொடரும்

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 27

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
8
+1
24
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment