
அத்தியாயம் 3
இந்தாம்மா ரைட்டரு மூணாவது எபியே வந்தாச்சு, இன்னுமும் ஹீரோயினை ஒழுங்கா கண்ணுல காட்டனயா நீயினு, நீங்க கேக்கறது புரியுது.
இதோ வாங்க போகலாம் நம்ம மதுரயாழினி வீட்டுக்கு.
ஆஹா வாசல்ல சாணி தெளிச்சு, அழகா வெள்ளையும் காவியும் கலந்து போட்டு இருக்க கோலம், இன்னிக்கு வெள்ளி கிழமைன்னு பறைசாற்றுது.
கேட் திறந்து உள்ளே போனா, நடைபாதைக்கு ரெண்டு பக்கமும் பூஜைக்குரிய செவ்வந்தி, செம்பருத்தி, அரளி மலர்களும், தலையில் சூடும் மணம் கமழும் மல்லிகை, மற்றும் முல்லை கொடிகளும், வாழை மரமும் செழிப்பா வளந்து இருக்கு.
கதவையெல்லாம் தட்ட வேண்டாம், வாங்க நாம நேரா உள்ள போவோம்.
அப்பப்பா அந்த ஊதுபக்தியோட சேர்த்து வர சாம்பிராணி மணம், மனசுக்கு அவ்வளவு இதம்மா இருக்கு.
வரவேற்பரையை தாண்டும் போதே, பில்டர் காபியோட மணம் நம்ம கால்களை, அதோட திசைக்கு இழுத்திட்டு போகுது.
அங்க இந்த வீட்டின் குடும்ப தலைவியான அன்னலட்சுமியம்மா, காலை உணவு சாப்பிட்டு கொண்டு இருக்கும் தன் கணவர் சிவராமனுக்காக, காபியை ஆத்திகிட்டு இருக்காங்க.
இவங்க பெத்த ரத்தினங்க ரெண்டும் ஒன்னு சோபாக்கு பின்னாடியும், இன்னொன்னு டிவிக்கு பக்கத்திலும் ஒளிஞ்சு நின்னு, எட்டி பார்த்துட்டு இருக்குங்க.
சிவராமன் காபியை குடிச்சுட்டு லட்சுமியம்மாட்ட சொல்லிட்டு கிளம்பராரு.
அவர அனுப்பிட்டு லட்சுமியம்மா உள்ள வராங்க,
என்னடா இது ஹால்ல ரெண்டு டிரம்மு உருண்டுட்டு இருக்கு?
அட அது நம்ம நாயகியும் அவளோட பாச மலரும் தானா.
லட்சுமியம்மா வந்து இதைப் பார்த்துட்டு தலைல அடிச்சுக்கிட்டு சமையல் அறைக்கு போய்டாங்க.
அவங்க கண்டுக்காம போறதை பார்த்தாலே தெரியுது, அண்ணன் தங்கச்சிக்குள்ள தினம் நடக்கற அக்கப்போர் தான் இதுன்னு.
“டேய்ய், அண்ணாண்ணு கூட பார்க்க மாட்டேன், மரியாதையா ரிமோட்ட குடுடா. நா சுட்டி டீவீல ஜாக்கி சான் பார்க்கனும்.”
“ஏய் குட்டிப் பிசாசே ரிமோட்டை விடுடி, அப்பா நேத்து நியூஸ் பார்த்துட்டு இருந்ததால என்னால மேட்ச் பார்க்க முடியல, நா ஹைலைட்ஸ் பார்க்கனும்.”
“முடிஞ்சு போன மேட்ச் தானே போய் பேப்பர்ல பாரு போ. இப்ப விட்டா திரும்ப இத போட மாட்டாங்க, எனக்கு ஜாக்கி தான் பார்க்கனும்.”
“நீயென்ன பாப்பா வா, சுட்டி டீவி பார்க்க. ரிமோட் எல்லாம் தர முடியாது போ போ”
ரிமோட்டை கனியமுதன் தூக்கிட்டு ஒட, மது அவனை பிடிக்க முடியாம டீவி சுவிட்ச்சை ஆப் பண்ண, ரெண்டு பேருக்கு கைக்கலப்பாக ஹால்ல இருக்க பொருள்களை எல்லாம் இழுத்து போட்டு, வீட்ட சந்தைகடை ஆக்கிட்டாங்க.
இதுங்க இப்படியே சண்டை போட்டுட்டு இருக்க, அவங்களை பெத்த புண்ணியவதி திரும்ப உள்ள வந்து, வீடு இருக்க கோலத்த பார்த்து கோபமா மொத்தராங்க ரெண்டு பேர் முதுகுலயும்.
“பொழுது விடிஞ்சுப் பொழுது போனா, இதேவேளையா போச்சு.
வீடு இருக்க லட்சனத்தை பாரு, யாராச்சும் வந்து பார்த்தா, வீடு இருக்க கோலத்துக்கு வாசலோட கும்பிடு போட்டுட்டு போய்டு வாங்க.”
“ம்மா, எல்லாம் இந்த குட்டி பிசாசோட வேல, அவதாம்மா இப்படி வீட்ட மொத்தமா கவுத்து வச்சிருக்கா.”
“அவ்வாஆஆ, பொய் பொய் நீயேன்டா ரிமோட்டை பிடிங்கிட்டு ஓடுன, உன்ன பிடிக்க போய் தான் இப்படி ஆச்சு. ஆரம்பிக்கறது நீ, கோர்த்துவிடறது மட்டும் என்னையா உன்னனன…”
“ஏன்டா ஒனக்கு வேலைக்கு லேட் ஆகல, இன்னும் இங்க என்னத்த பண்ணிட்டு இருக்க, போய் கிளம்பு போ.”
“அடியே குட்டி கழுத, வெள்ளி கிழமை அதுவுமா குளிக்காம இப்படி வந்து நிக்கற, ஒவ்வொரு பிரதோஷத்துக்கும் விரதமிருந்தா மட்டும் பத்தாது, சுத்தபத்தமா இருக்க வேணா. ஒனக்கும் வேலைக்கு போக டைம் ஆகுது பாரு, மொத குளிச்சிட்டு வா போ.
எந்தலையெழுத்து நல்லா பெத்தம்பாரு ஒங்க ரெண்டு பேரையும் வரம் வாங்கி.”
“என்னைய மட்டும் பெத்திருந்தா இந்த கொசுவெல்லாம் வந்து கொடைச்சல் குடுக்குமா? இந்த தொல்லையையும் ஏம்மா பெத்தே?”
“ஹம்ம்ம் உன்ன பெத்த பாவத்த கழிக்கத் தான், என்னைய பெத்து புண்ணியம் தேடிக்கிட்டாங்க அப்படிதானம்மா.”
ரெண்டு பேரும் மறுக்கா அடுத்த ரவுண்டை ஆரம்பிக்க, லட்சுமியம்மாக்கு கோபம் வந்துடுச்சு. மறுபடியும் அண்ணன் தங்கை தலைல கொட்டு விழுகுது.
“இப்ப ரெண்டு பேரும் போய் கிளம்பறீங்களா, இல்ல கிளம்பி போன உங்க அப்பாவுக்கு போன் பண்ணி திரும்பி வரச் சொல்லவா?”
அவ்வளவு தாங்க ரெண்டும் மொகத்தை தூக்கி வெச்சுக்கிட்டு, உள்ள போயாச்சு.
அம்மாக்கு தெரியாதா புள்ளைங்க எதை சொன்னா அடங்குவாங்கன்னு.
அவங்க அப்பாக்கு கோபம் அவ்வளோ சீக்கிரம் வராது, வந்தா வீட்டுல ருத்ரதாண்டவந்தான்.
கனியமுதன் ஒரு தனியார் கம்பெனியில் மேலாளரா இருக்கான்.
மது ஒரு சின்ன தனியார் ஆபிஸ்ல கணக்காளரா இருந்துட்டே, வெளியே நல்ல வேலையா தேடிட்டு இருக்கா.
இவங்க மெதுவா கிளம்பி வரட்டும் நாம அதுக்குள்ள வேடந்தூர்வரைக்கும் போய்ட்டு வரலாம் வாங்க.
தீபனின் வீடு, தான் வந்து நின்றது கூட தெரியாது தீவிரமாக ஏதோ கோப்புகளை பார்வையிட்டபடி யோசனையில் இருந்த தீபனின் முதுகைத் தட்டி, நிகழ்வுக்கு கொண்டு வந்தான் வேந்தன்.
“நா வந்தது கூட தெரியாத அளவுக்கு என்னடா யோசனை? நீ வந்தது தெரிஞ்சு, ஆத்தா அங்க உனக்கு புடிச்சது எல்லாத்தையும் செஞ்சு வச்சுட்டு காத்திருக்காங்க.
நீயென்ன இங்க ஆள் வந்து நிக்கிறது கூட தெரியாம ஒக்காந்து, கனா கண்டுட்டு இருக்க.”
“இல்ல மாப்ள இந்த மாரியப்பன் கேஸ் தான் பார்த்துட்டு இருக்கேன். எப்படி போனாலும் முட்டுது. அதையத்தான் யோசிச்சுட்டு இருந்தேன். அதான் நீ வந்ததை கவனிக்கல.”
“ம்ம்ம், நானும் கேள்விப்பட்டேன், ஆமா இந்த மாரி உங்க வீட்ல தான வேலை பார்த்துட்டு இருந்தான்?”
“ஆமா ஆனா ரெண்டு மூனு மாசமா இங்க வேலைக்கு வர்றது இல்லையாம், நா ஆல்ரெடி வீட்ல எல்லார்கிட்டையும் விசாரிச்சுட்டேன்.”
“ஊருக்குள்ளயும் கேட்டாச்சு அவனை யாரும் கொஞ்ச நாளா பார்க்கலையாம்.
யாரோ தோஸ்த்து ஒருத்தங்கூட வெளியூர் வேலைக்கு போறதாகவும், அதுக்கு முன்பணமா இருபதாயிரம் குடுத்ததாகவும் அவம்பொண்டாட்டிகிட்ட சொல்லி இருக்கான்.”
இவங்க பேசிகிட்டு இருக்கும்போதே நம்ம சின்ன மூர்த்தி அதை கேட்டுகிட்டே அங்க வருகை புரிகிறார்.
“அட அந்த பள்ளத்துகிட்ட இந்தமாறி நடக்கறது புதுசா என்ன?”
“அங்க ஏதோ பழங்கால பொக்கிஷம் இருக்குன்னு நம்பி போன, நம்ம ஊர்க்காரங்க நிறைய பேர்க்கு இதே கதிதானே ஆச்சு.
இந்த மாரி கூட அதுபோல கேஸாதான்டா இருக்கும், ஆனா அவங்கெல்லாம் எப்படி இறந்தாங்கன்னு மட்டும் யாராலயும் கண்டுபிடிக்க முடியல.”
“ம்ஹூம் அப்படி புதையல் தேடி போறவன்கிட்ட கோடாரி இருந்தது சரி தான், ஆனா மரத்தையே அழிச்சு அந்த நிலத்தையே விஷமா மாத்தர மருந்து ஏன் இருந்துச்சு.”
மூர்த்தியும், வேந்தனும் தாம் கேட்ட செய்தியில் அதிர்ந்து நோக்க, தீபன் தொடர்ந்தான்.
“இதோட பேர் டிரைக்ளோரோ பெனாக்ஸியாசெடிக். இது ஒரு களைக்கொல்லி மருந்து.
ஒரு சில வெளிநாடுகள்லையே இதை தடை செஞ்சிருக்காங்க.
ஏன்னா இதோட பவர், மரம் செடிகளை மட்டும் இல்ல, மனுஷங்க விலங்குகளையும் பாதிச்சுதுன்னு தான்.”
இங்கு தீபன் பேசிக் கொண்டு இருக்கும் போது, அவன் அறை ஜன்னலில் யாரோ ஓளிந்திருந்து, இவர்கள் பேசுவதை ஒட்டுக் கேட்டு கொண்டிருப்பது போல் தோன்ற, வேந்தன் தீபனுக்கு ஜாடை காட்டி விட்டு,வீட்டை சுற்றி ஆளுக்கொரு திசையில் சென்று, அவ்வுருவத்தை பிடிக்க முயலுகையில், அது அவர்களுக்கு போக்கு காட்டி விட்டு மறைந்து போனது.
மது கீழிறங்கி வரும் போது, லட்சுமியம்மா இவளுக்கு மதிய உணவை எடுத்து வைத்துக் கொண்டு இருந்தார்.
“என்னம்மா உன் சீமந்த புத்திரன் கிளம்பியாச்சுப் போல, வீடே அமைதியா இருக்கு.”
லட்சுமியம்மா அவள் தலையில் கொட்டி,
“அண்ணங்காரன்னு கொஞ்சமாச்சும் மரியாதை இருக்காப்பாரு. அவன் எப்பவுமே அமைதியானவன் தான்டி.
நீ பிறந்ததுக்கு அப்பறம் தான், உன் கூட சேர்ந்து இப்படி பேச ஆரம்பிச்சுட்டான்.”
“ஆமா உம்புள்ள பச்ச கொழந்த பாரு. ஏந்தான் இந்த அம்மாக்கள் எல்லாம் இப்படி இருக்கீங்களோ.
அவன் ஊமை மாறி இருந்து, எல்லா வேலையையும் பார்த்துட்டு இருக்கான், நான் பொறந்து தான் உம்புள்ள பண்ற ஏமாத்து வேலையெல்லாம் கண்டுபிடிச்சுட்டு இருக்கேனாக்கும் தெரிஞ்சுக்க.”
மறுபடியும் ஒரு கொட்டு அவளுக்கு இலவசமா விழுந்தது .
“ம்மா… நா ஏற்கனவே உயரம் கம்மி, நீங்க வேற இப்படி கொட்டிக்கிட்டே இருந்தீங்கன்னா, அப்பறம் ஒருத்தனும் என்னைய கல்யாணம் பண்ணிக்க வரமாட்டாம்மா.
அப்பறோம் இன்னும் பத்து பவுன் அதிகமா போட்டுத் தான், என்னை கட்டி கொடுக்க வேண்டி இருக்கும் பாத்துக்க.”
“கவலப்படாத செல்லம், உன்ன குள்ளமணிக்காச்சும் கல்யாணம் பண்ணி வச்சுட்டா போச்சு.”
இப்படி சொல்லிக் கொண்டே வீட்டின் உள்ளே வருகிறாள், மதுவுடைய உயிர் தோழியான வினு என்கிற வினோதினி.
எல்கேஜுயில் ஆரம்பித்த இவர்களது சிநேகம், வேலைக்கு சேர்ந்த பிறகும் கூட தொடர்கிறது.
இருக்காதா என்ன, வேறொரு டிபார்ட்மெண்ட்டில் சேரச் சென்ற வினுவை, ஐஸ்க்ரீம் ஒன்றை வாங்கி கொடுத்தே இவளது டிபார்ட்மெண்ட்டில் சேர்த்துக் கொண்டாள் மது.
மதுவுடைய குடும்பம் கொஞ்சம் கட்டுப்பாடானது. வினுவுடையதோ கொஞ்சம் சுதந்திரமானது, பிள்ளைகள் விருப்பம் தான் முக்கியம் என்று கூறுபவர்கள்.
மது வேலைக்கு செல்வதாக சொன்னதும், அவள் அப்பா சலித்து எடுத்து அவராக கொண்டு வந்தது தான் இந்த வேலை. சந்தோஷ் சுப்பிரமணியம் போல ஆப்ஷனே கிடையாது.
வினுவுக்கு வெளியூரில் வேறு நல்ல கம்பெனியில் வேலை கிடைத்தது.
ஆனால் வினுவுடைய அப்பா, அம்மாவை மூளை சலவை செய்து, இவளுடைய கம்பெனியிலயே அவளும் சேருமாறு செய்து விட்டாள் மது.
வினுவுக்கும் மதுவை விட்டு பிரிந்து இருக்க முடியாது. அதனால் இப்போது மதுவோடு சேர்ந்து வினுவும்தான் வேலை தேடிக் கொண்டிருக்கிறாள்.
“எனக்கு நீ குள்ளமணியைப் பார்த்தா, உனக்கு அதே ஊருல ஒரு தவக்களைய பார்க்கறேன்டி என் செல்லமே.”
“அடிப்பாவி கல்யாணம் பண்ணிகிட்டுப் போற இடத்துலயும் கூட, என்னையும் இழுத்துட்டு போவய்யா? உன் தொல்லையில் இருந்து நான் மீள்வதற்கு வழியே இல்லையா ,என் தெய்வமே…”
“நோ என் செல்லமே, நான் உன்னை விட்டு பிரிவதும் இல்லை, என் நிழல் உன்னை விட்டு விலகுவதும் இல்லை.”
“போயும் போயும் உன் வாயாலையா இந்த டயலாக்கை நான் கேட்கனும்.”
“வேணும்னா உன்னோட கனவு நாயகனை சொல்லச் சொல்லவா”
“ஏய் ரெண்டு பேரும் இப்படியே பேசிகிட்டே இருக்க போறீங்களா என்ன? லேட் ஆகலயா உங்களுக்கு?”
பிறகு தான் ரெண்டு பேரும் அடித்து பிடித்து ஆபீஸிக்கு கிளம்பினர்.
கமிஷனர் அலுவலகம், தீபன் தனக்கு முன்னே இருக்கும் கமிஷனரிடம், தன் கோபத்தை வெளிக்காட்டாமல், கஷ்டப்பட்டு தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு நின்றிருந்தான்.
“உன்ன யாரு மேன், என்னை கேக்காம இதுல இன்வால்வு ஆக சொன்னது.
எதுக்காக அந்த காட்டுக்குள்ள போய் சர்ச் பண்ணி பார்க்கனும்னு சொல்லிட்டு இருக்க?
அந்த இடத்துல அடிக்கடி மர்டர் நடக்கறது, உங்க ஊர்ல வழக்கம் தானே.”
“சார் இது பர்ஸ்ட் டைம் கிடையாது தான், ஆனா இப்படியே தொடர்ந்துகிட்டே இருக்கு. இதை நாம வேடிக்கை மட்டுமே பார்த்துட்டு இருக்கறதா சார்?
எப்படி எல்லாரும் ஒரே போல அதிர்ச்சில இறந்து போனதாவே போஸ்ட்மாட்டம் ரிபோர்ட் வருது?
அப்ப அங்க ஏதோ ஆபத்து இருக்குன்னுதானே சார் அர்த்தம். நாம இப்படியே ஒவ்வொரு முறையும் போல, இப்பவும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கலைன்னா எப்படி சார்?”
“என்ன ஓவரா பேசரே? உங்க ஊர்காரங்க சும்மா இல்லாம புதையல் தேடறேன், பொக்கிஷம் தேடறேன்னு போய் செத்தா, அதுக்கு டிபார்ட்மெண்ட் என்ன பண்ணும்.
அது பாரஸ்ட் ஏரியா, அங்கே பாரஸ்ட் ஆபீஷர்ரோட அனுமதி இல்லாம, நாமளா போய் சர்ச் பண்ண முடியாது புரிஞ்சுதா?
மொதல்ல ஹெல்த் ப்ராப்ளம்னாலதான் அந்த ஆள் செத்தான்னு கேஸ் க்ளோஸ் பண்ணு.”
“சார் ஆனா”
“யோவ் உன்கிட்ட இது கொலைனு நிரூபிக்க ஏதாச்சும் ஆதாரம் இருக்கா? இல்லல்ல சோ நான் சொன்னதை மட்டும் செய் புரிஞ்சுதா?
இதுக்கு மேலயும் நீ இதுல இன்வால்வு ஆனா, நான் உம்மேல சிவியர் ஆக்ஷன் எடுக்க வேண்டி இருக்கும், அண்டர்ஸ்டேண்ட் யூ கேன் கோ நௌ.”
தீபன் விறைப்புடன் சல்யூட் வைத்து விட்டு வேக நடையுடன் வெளியேறினான்.
அவன் வெளியேறியதை உறுதி செய்து விட்டு, கமிஷனர் யாருக்கோ அவசரமாக போன் செய்தார்.
“சார் நீங்க சொன்ன மாறியே தீபன்கிட்ட, இந்த கேஸை முடிக்க சொல்லிட்டேன். இதுக்கு மேல இது விஷயமா, இன்வஸ்டிகேட் பண்ண கூடாதுன்னும் சொல்லிட்டேன் சார்.”
அந்த பக்கம் என்ன கூறப்பட்டதோ,
“சார் சார் சார் இல்ல சார், அப்படி எல்லாம் எதுவும் செஞ்சுடாதீங்க.
கண்டிப்பா இனிமே இதுபோல எதுவும் நடக்காது.
பாரஸ்ட்குள்ள எல்லாம் அவனை போக கூடாதுன்னு தான், சொல்லி வெச்சு இருக்கேன் ப்ளீஸ் நம்புங்க.”
“ஓகே சார் ஓகே சார் ஷியோர் சார் வைக்கட்டுங்களா ம்ஹம்.”
பேசி முடித்து தன் நெற்றியில் பூத்த வியர்வை துளிகளை பதற்றத்துடன் துடைத்து கொண்டார் கமிஷனர்.
தீபனுக்கு அவ்வளவு கோபமாக வந்தது. கண்களுக்கு முன்னே நடக்கும் குற்றங்களை ஆதாரங்கள் இல்லாததால் எடுத்து கொள்ள மறுக்கின்றனர்.
இது முதல்முறை அல்ல, ஒவ்வொரு முறையும் அந்த இடத்தில் சடலம் கைப்பற்றப்பட்டு, விசாரணை நடத்தப்படாமலே முடிக்க படுகிறது.
விசாரணை கூட ஆரம்பிக்க விடாமல் கேஸ் முடக்கப்படுகிறது, கண்டிப்பாக இங்கு ஏதோ தவறு நடப்பது போல் தோன்றியது.
ஆனால் தான் எதுவும் செய்ய முடியாத நிலையில் இருப்பது, வருத்தத்தையும், கோபத்தையும் அவனுக்கு கொடுத்தது.
அப்போது அவனுக்கு வேந்தனிடம் இருந்து அழைப்பு வந்தது.
“சொல்லு வேந்தா ஏதாச்சும் முக்கியமான விசயமா என்ன? இல்லாட்டி வேலை நேரத்துல நீ கூப்பிட மாட்டயே.”
வேந்தன் சிரித்து கொண்டான் அவன் கூறிய பதிலில்,
“நேத்து உன் வீட்ல யாரோ உன்ன கண்காணிக்கறதை பார்த்ததுல இருந்து, ஏனோ மனசுக்கு சரியாபடல டா.
அதான் நான் நம்ம எல்லா கம்பெனிலயும் மாரியப் பத்தி விசாரிச்சேன், நம்ம கருப்பட்டி காய்ச்சர முனியண்ணா, அவனை யாரோ ஒருத்தன் கூட காட்டுக்குள்ள போனதை பார்த்திருக்காரு.
இவரு யாரது புதுசா ஊருக்குள்ளன்னு கேட்டதுக்கு, ஏகத்தாளமா பேசியிருக்கான் போல.”
“எது காட்டுக்குள்ளயா?”
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


நமக்கு இருக்கிற நல்ல வாய்ப்பை எல்லாம் கெடுக்கிற ஒரு பிரண்ட் இருப்பாளே அது மது தான் போல … மதுவும் வினுவும் ஒரே வீட்டுக்கு போக போறாங்க … பெரிய திகில் கதை அந்த காட்டுக்குள்ள இருக்கும் போல …
நன்றி சிஸ் 🙂