
அத்தியாயம் – 41
நித்திலாவிற்கு எட்டு மாதங்கள் நிறைவடைந்து ஒன்பதாம் மாதம் தொடங்கும் வேளையில், வீடே விழாக்கோலம் பூண்டிருந்தது. அன்னலட்சுமி ஐயர் மூலம் நல்ல நாளைக் குறித்து, வளைகாப்புக்கான ஏற்பாடுகளைக் கோலாகலமாகச் செய்திருந்தார். அவர்களின் வீடு மாடமாளிகை போல் எங்கும் வண்ண விளக்குகளும், விதவிதமான நறுமண மலர்களின் தோரணைகளும் அலங்கரிக்கப்பட்டிருந்தன.
மலர்களால் செதுக்கப்பட்டது போன்ற அந்த அழகிய மேடையில், நித்திலா ஒரு தேரைப் போல அசைந்து வந்து அமர்ந்தாள்.
மேடிட்ட வயிறும், நீல வண்ண ஜரிகை வேலைப்பாடுகள் நிறைந்த பட்டுப்புடவையும் அவளுக்கு ஒரு தனி கம்பீரத்தைக் கொடுத்தன. தாய்மைக்கே உரிய அந்தப் பொலிவோடு, முகம் சிவக்க வெட்கத்துடன் அமர்ந்திருந்த நித்திலாவைக் கண்ட விக்ராந்த், தன் பார்வையை அவளிடமிருந்து விலக்க முடியாமல் தவித்தவன்
அவளை அப்படியே தன் விழிகளால் விழுங்குவது போல தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
முன்பை விட இப்போது உடல் மெருகேறி, சற்று பூசினாற்போன்ற அவளது தோற்றம் அவளுக்கு ஒரு பேரழகைத் தந்திருந்தது.
தாய்மை தந்த அந்தப் பூரிப்பில், நித்திலா ஒரு முழுமையான பெண்ணாகத் தெரிந்தாள். அவளது அந்த அழகில் விக்ராந்தின் இதயம் முற்றிலுமாகச் சிக்குண்டு, இடறி விழுந்தான். அவளைத் தவிர வேறு எதையும் கவனிக்கும் நிலையில் அவன் இல்லை…
தன்னவன் தன்னை இமைக்காமல் பார்ப்பதை உணர்ந்த நித்திலா, மெதுவாகத் தன் புருவங்களை மட்டும் உயர்த்தி ‘என்ன?’ என்பது போல் ஜாடை காட்டினாள். ஆனால் விக்ராந்தோ, சுற்றிலும் மக்கள் இருப்பதைக் கூட மறந்து, யாருக்கும் தெரியாத வண்ணம் அவளுக்கு ஒரு பறக்கும் முத்தத்தை
கொடுக்க, அவனது அந்தத் துணிச்சலான செய்கையில், நித்திலாவின் முகம் சட்டென்று செவ்வானமாய் சிவந்தது.
வெட்கம் தாங்க முடியாமல் அவள் தலைகுனிய, அவளது அந்த மாற்றத்தை ரசித்த விக்ராந்த், மீண்டும் ஒருமுறை கண்ணடித்து அவளது முகச் சிவப்பை இன்னும் அதிகமாக்கினான்.
விக்ராந்தின் இந்தச் செல்லச் சீண்டல்களில் நித்திலா ஒரு நிமிடம் தன்னையே தொலைத்தாள். அவனது இந்த அளவற்ற அன்பைக் கண்டு நிம்மதி அடைவதா அல்லது தான் விலகப் போவதை நினைத்து வருத்தப்படுவதா என்று அவளது மனம் போராட்டத்தை சந்தித்தது.
அவளது உள்ளம் அப்போதும் ஒரு தவறான திசையிலேயே பயணித்துக் கொண்டிருந்தது. ‘அவனுடன் என்னால் நிச்சயம் வாழ முடியாது, அவன் என்னை காதலிக்கவில்லை, சந்தர்ப்ப சூழ்நிலையால் வந்தது காதலே இல்லை’ என்று அப்போதும் தன் முடிவில் உறுதியாக இருந்தாலும்,
அவளது விழிகள் மட்டும் அவளது கட்டுப்பாட்டில் இல்லை. தன்னைச் சுற்றி இத்தனை பேர் இருந்தும், தன் கணவன் எங்கே இருக்கிறான்? என்ன செய்து கொண்டிருக்கிறான்? என்பதை அறிய அவளது விழிகள் அந்தத் திருமண மண்டபம் முழுதும் விக்ராந்தையே தேடி அலைந்தன.
உதடுகள் ‘பிரிவு’ என்று பேசினாலும், கண்கள் அவன் ‘அன்பையே’ யாசித்துக் கொண்டிருந்தன.
தனது மனையாள் தன்னை தான் தேடுகிறாள் என்பதை அறிந்து கொண்டவன் அவள் முன்னே வந்து, அவள் பார்வை தன் மீது படுமாறு நின்றுக் கொண்டு கண்களால் ‘போதுமா’ என்று கேட்க, அவளோ தன் மனதை புரிந்துக் கொண்டு நடக்கும் கணவனை வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்தாள்,…
கூட்டத்தில் இருந்த பெண்கள் அனைவரும் வளையல் அடுக்க, விக்ராந்தை அழைத்து சடங்கை செய்ய சொல்லினர், மிகுந்த மகிழ்ச்சியோடு மனைவியின் அருகில் வந்தவன், தங்கம் மற்றும் வைரம் இழைத்த நுணுக்கமான வேலைப்பாடுகள் கொண்ட தான் வாங்கி வந்த வளையல்களை, அவள் கைகளில் ஒரு மலரைப் போல மென்மையாகப் போட்டு விட்டான்.
அவன் தன் மீது வைத்திருக்கும் அக்கறையும், தேடித்தேடிச் செய்யும் இந்த அன்பும் நித்திலாவிற்குப் பெரிய இன்ப அதிர்ச்சியாக இருந்தது. அந்த வைரத்தின் ஒளிக்கு இணையாக அவளது புன்னகையும் பிரகாசித்தது.
அவனைத் தொடர்ந்து அடுத்தடுத்து வந்த பெண்கள், உறவினர்கள் என ஒவ்வொருவராக நித்திலாவின் கைகளை வளையல்களால் நிரப்பினர். ஒருபுறம் ஜெயமோகனும், வைத்தீஸ்வரியும் தன் பேத்தியின் இந்த நிறைவான கோலத்தைக் கண்டு கண்கலங்கி நின்றனர். தங்கள் குடும்பத்தின் அடுத்த வாரிசைச் சுமந்திருக்கும் பேத்தியை மனதார ஆசீர்வதித்தனர்.
அனைவரின் ஆசியும், கணவனின் அளவற்ற அன்பும் நித்திலாவைச் சுற்றி ஒரு பாதுகாப்பான வளையத்தை ஏற்படுத்தியிருந்தது.
வளைகாப்பு விழா இனிதே நிறைவடைந்தது. நித்திலாவின் கால்கள் உடல் எடைக்கு ஒத்துழைக்க முடியாமல் சற்று தள்ளாட,.. அதைக் கவனித்த விக்ராந்த்.. “பேபி, நீ இங்க உட்காரு. நான் போய் எல்லாரையும் அனுப்பிட்டு வரேன்,” என்று சொல்லிய விதம் அவளுக்குப் பெரும் வியப்பை அளித்தது.
முன்பு இருந்த விக்ராந்திற்கும் இப்போது இருக்கும் விக்ராந்திற்கும் எத்தனை மாற்றங்கள்! அவனிடம் இப்போது ஒரு தெளிவு, அதைவிட மேலாக ஒரு முதிர்ந்த பக்குவம் வந்திருந்தது. தன்னை ஒரு குழந்தையைப் போல அவன் தாங்குவதைக் கண்டு, ‘இவனை விட்டுப் பிரிந்து போகத்தான் வேண்டுமா?’ என அவள் இதயம் அவளிடமே கேள்வி கேட்டது. ஆனால், ‘அவனுடைய காதல் அவனுக்குக் கிடைக்க வேண்டுமென்றால் நீ போய்த்தான் ஆக வேண்டும்’ என அவளது மனசாட்சி அவளைத் தடுத்தது. அந்த நினைப்பே அவள் மனதில் சொல்ல முடியாத வலியை ஏற்படுத்தியது.
தன்னையே மறந்து யோசனையில் இருந்த நித்திலாவை, விக்ராந்தின் குரல் நிகழ்காலத்திற்கு மீட்டுக் கொண்டு வந்தது. “பேபி… இப்போ ரூமுக்கு போகலாமா?” என அவன் கேட்க, ஏதோ ஒரு கனவிலிருந்து விழிப்பது போல அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
அவளது அந்த ஆழ்ந்த பார்வையில் தடுமாறிப் போன விக்ராந்த், “பேபி… இப்படியெல்லாம் ரொமான்டிக்கா பார்க்காத, எனக்கு என்னென்னமோ பண்ணுது!” மயக்கம் வருவது போல் தள்ளாடியபடி கூறியவனின் பாவனையில் அவள் வெட்க சிரிப்போடு பார்த்து வைத்தாள், இதையெல்லாம் தூரத்தில் இருந்து பார்த்த லட்சுமணனின் மனம் குளிர்ந்து போனது, விக்ராந்த் ஒரு பொறுப்பான கணவனாக மாறியிருப்பதையும், அவர்கள் இருவருக்கும் இடையே மலர்ந்திருக்கும் இந்த மென்மையான காதலையும் கண்டு அவர் நிம்மதி பெருமூச்சு விட்டார்.
பொதுவாகவே தலை பிரசவம் பெண்ணின் பிறந்த வீட்டில்தான் நடக்க வேண்டும் என்பது மரபு. அதன்படியே, ஜெயமோகனும் வைத்தீஸ்வரியும் நித்திலாவைத் தங்கள் வீட்டிற்கு அழைத்துச் செல்வது குறித்து விக்ராந்தின் குடும்பத்தாரிடம் பேசினர், அன்னலட்சுமியும் மற்றவர்களும் முறைப்படி அதற்குச் சம்மதித்தனர்.
ஆனால், இதைப்பற்றி நித்திலாவிடம் சொன்னபோது, அவள் திட்டவட்டமாக வர மறுத்துவிட்டாள். அவளது ஆழ்மனதில் ஒரு கணக்கு இருந்தது. ‘தான் அத்துவுடன் இருக்கப்போவது இன்னும் சில நாட்கள்தான். குழந்தை பிறந்ததும் பிரிந்துவிடப் போகிறோம்’ என்ற எண்ணம் அவளை வாட்டி எடுக்க, அந்த எஞ்சியிருக்கும் ஒரு சில நாட்களையும் பிரிந்து செலவிட அவள் துளியும் விரும்பவில்லை.
நேரடியாக உண்மையைச் சொல்ல முடியாத நித்திலா, விக்ராந்திடம் இதைக் லாவகமாகப் பேசினாள். “அத்து, பாட்டியும் தாத்தாவும் வயசானவங்க. அங்கே போனா, அவசர நேரத்துல அவங்களால எதுவும் செய்ய முடியாது. தேவையில்லாம அவங்களுக்குத்தான் கஷ்டம்,” என்று காரணங்களை அடுக்கினாள்.
உண்மையில் விக்ராந்திற்கும் அவளைப் பிரிந்து இருக்க விருப்பமே இல்லை. ஆனால், அவளது விருப்பத்திற்குத் தடையாக இருக்கக்கூடாது என்று தான் அவன் அமைதி காத்தான். இப்போது அவளே இங்கிருக்க விரும்புவதைக் கேட்டதும் அவனுக்குள் ஒரு நிம்மதி ஏற்பட்டது. அவனே முன்வந்து ஜெயமோகனிடம் பேசி, நித்திலா இந்த வீட்டிலேயே இருப்பதுதான் அவளது உடல்நலத்திற்கு நல்லது என்று புரிய வைத்துச் சம்மதமும் வாங்கினான்.
தன் பேத்தியைத் தங்களோடு அழைத்துச் செல்ல முடியாதது ஜெயமோகனுக்கும் வைத்தீஸ்வரிக்கும் சற்று வருத்தமாகத்தான் இருந்தது. ஆனாலும், விக்ராந்த் சொன்ன காரணங்கள் நியாயமாகத் தோன்றவே, மனதைத் தேற்றிக்கொண்டு பேத்தியிடமும் மற்றவர்களிடமும் விடைபெற்றுக்கொண்டு கிளம்பினர்.
நாட்கள் மிக வேகமாக உருண்டோடின. விக்ராந்தின் குணத்திலும் நடத்தையிலும் ஏற்பட்ட மாற்றங்களைக் கண்டு, வீட்டில் உள்ள அனைவரும் அவனிடம் பழையபடி இயல்பாகப் பேசத் தொடங்கிவிட்டனர். ஆனால், லட்சுமணன் மட்டும் இன்று வரை தன் மகனிடம் எந்தவித பேச்சுவார்த்தையும் வைத்துக்கொள்ளாமல் பிடிவாதமாக மௌனம் காத்து வந்தார்.
அன்று ஒரு மாலை நேரம்… வீட்டிற்குள் நித்திலாவுடன் சுமித்ரா, ஊர்மிளா, அன்னலட்சுமி மற்றும் இனியா என அனைவரும் அமர்ந்து கலகலப்பாகப் பேசிக்கொண்டிருந்தனர். விக்ராந்த் மட்டும் தனியாக வீட்டின் புல்வெளியில் அமர்ந்து, சில அலுவலகக் கோப்புகளைத் தீவிரமாகப் பார்த்துக் கொண்டிருந்தான்.
அப்போது, யாரோ ஒருவரின் நிழல் தன் மீது விழுவதை உணர்ந்து நிமிர்ந்து பார்த்த விக்ராந்த் அவனுக்கு எதிரே, தொண்டையைச் செருமிக் கொண்டு நின்றிருந்த அவனது தந்தை லட்சுமணனை கண்டு அவனுக்கு ஆச்சரியமும் வியப்பும்..
பல மாதங்களாகத் தன்னைப் பாராமுகமாகத் தவிர்த்து வந்த தந்தை, இப்போது தானாகவே முன்வந்து தன் முன் நிற்பதைக் கண்ட விக்ராந்திற்குள் அளவுகடந்த மகிழ்ச்சியும் ஏற்பட்டது…
”அ.. அப்பா…” என அவன் மிகவும் தயக்கத்துடன் அழைக்க, “வாடா” என்ற அந்த ஒரு வார்த்தையில் லட்சுமணன் தன் பாசத்தை வெளிப்படுத்தினார். பல நாட்களாகத் தந்தையின் ஒரு சொல்லுக்காக ஏங்கியிருந்த விக்ராந்த், ஓடிச் சென்று அவரை இறுகக் கட்டிக்கொண்டான்.
”என்னை மன்னிச்சிடுங்கப்பா…” எனச் சொல்லும்போதே அவனது குரல் அழுகையில் விம்மியது. “ஷ்… இப்போ எதுக்கு மன்னிப்பு?” எனக் கேட்டவர், ஒரு தாயைப் போல அவனை ஆதரவாகத் தன் தோளோடு அணைத்துக் கொண்டார்.
“நீங்க என்னை மன்னிச்சிட்டீங்களாப்பா, என் மேல உள்ள கோவம் உங்களுக்கு போயிடுச்சா” விக்ராந்த் ஏக்கத்துடன் கேட்க,…”உன் மேல உள்ள கோவம் எப்போதோ குறைஞ்சு போச்சு, என் மருமக முகத்துல உன் மூலமா எப்போ சந்தோசத்தை பார்க்கிறேனோ, அப்போ தான் உன்கிட்ட வந்து பேசனும்னு வைராக்கியத்தோட இருந்தேன்,” என்றார்,….
“இப்போ உங்க மருமக தான் என்கிட்ட பேச சொல்லி அனுப்புனாளா?”அவன் கேட்க,..
“ச்சே ச்சே இல்ல, உங்களுக்கும் உங்க பையனுக்கும் இடையில நான் வர மாட்டேன்னு அவ ஏற்கனவே சொல்லிட்டா, சீமந்தம் அன்னைக்கு நித்திலா முகத்துல தெரிஞ்ச அளவுகடந்த சந்தோசத்தை பார்த்தேன், பார்த்ததும் என் மனசு நிறைஞ்சு போச்சு, என் மருமக இப்போ இருக்க மாதிரியே சந்தோஷமா இருக்கணும், அவளுக்கு ஏதாச்சும் கஷ்டத்தை கொடுக்க நினைச்ச?” என செல்லமாக மிரட்டியவர்,…”என் பையன் அப்படி பண்ண மாட்டான்னு தெரியும், அவன் அவனோட மனைவி மேல எவ்வளவு உயிரா இருக்கான்னு பார்த்துட்டு தானே இருக்கேன்” என்றார் பெருமையுடன்…
தன் தந்தையின் அரவணைப்பில் சிறுபிள்ளையாக மாறிய விக்ராந்த், சோகமான முகத்துடன், “ஏன்ப்பா… உங்க மருமகளைப் பத்தி மட்டும் கவலைப்படுறீங்க, உங்க மகன் மேலயும் கொஞ்சம் அக்கறை வைங்க,” என்றான்.
”ஏன்டா… உனக்கென்ன இப்போ?”
என லட்சுமணன் கேட்க, விக்ராந்த் தன் மனதில் உள்ள பாரங்கள் அனைத்தையும் கொட்டியவன்..
“குழந்தை பிறந்ததும் நிலா என்னை விட்டுப் போறேன்னு சொல்றாப்பா,” என்றான் வருத்தத்துடன்.
”என்னடா இது? நித்திலா ஏன் இப்படிப் பண்றா?” என அவர் அதிர.. “எல்லாம் நான் தான் காரணம். அவ என்னை இன்னும் மன்னிக்கல,” என்றான் விக்ராந்த்.
உடனே லட்சுமணன் “மடையனா இருக்கியேடா! உன்னை மன்னிக்கலன்னா அவ உன்கூட இவ்வளவு சந்தோஷமா இருந்திருக்க மாட்டா. உன்னை வருத்தப்பட வைக்கக் கூடாதுன்னு நினைக்கிறவ, உன்னை மன்னிக்காமலா இருப்பா?” என அவர் கேட்க, விக்ராந்த் புரியாமல் பார்த்தான்.
“எனக்கு தெரிஞ்சு என் மருமகளுக்கு உன் மேல எந்த வித கோபமும் கிடையாது” அவர் உறுதியாக சொல்ல….”அப்போ ஏன்ப்பா நிலா என்னை விட்டு போகணும்னு நினைக்கிறா” என்றான்…
“எனக்கும் தெரியலடா,” என்றவர்,…ஏதோ யோசித்தவராக,…”நீ நித்திலா கிட்ட எல்லா விஷயத்தை பத்தியும் சொல்லிட்ட தானே டா” என்று கேட்க,…”எதைப்பா கேட்கிறீங்க” என்றான் குழப்பமாய்,…
“அதான் டா,.. நீ உங்க கல்யாணத்துக்கு முன்னாடியே அவளை பார்த்தது, விரும்பினது, இதை தான் சொல்றேன்” அவர் கேட்க,…”இல்லப்பா சொல்லல” என்றான்…
“ஏன்டா,….. இந்த முக்கியமான விஷயத்தை அவ கிட்ட இன்னமும் சொல்லாம இருக்கியே, உனக்கு மூளைன்ற ஒன்னு இருக்கா இல்லையா” அவர் சற்று காட்டமான குரலில் கேட்க,…”என்னப்பா இப்படியெல்லாம் கேட்கிறீங்க, மூளை இருக்கிறதால தான் பிஸ்னஸ்ல புலியா இருக்கேன்” என்றான் கெத்தாய்,…
“பிஸ்னஸ்ல புலியா இருந்தாலும், லைஃப்ல பூனையா இருந்தா தான்டா வாழ்க்கையை நல்லபடியா வாழ முடியும்” அவர் சொல்ல,…”என்னப்பா… என்னன்னெமோ சொல்றீங்க” என்றான் பாவமான முகத்துடன்,…
“அட போடா, உனக்கு இதைலாம் மெதுவா சொல்லி தரேன், இப்போ நீ என்ன பண்றன்னா நித்திலா கிட்ட போய் நீ அவளை தான் விரும்புறதா சொல்லு” அவர் சொல்ல,…”சொன்னேன்ப்பா, ஆனா அவ தான் அசிங்கமா பேசிட்டு போயிட்டா” என்றான்
“இது எப்போ நடந்தது” அவர் கேட்க….”அது,… லாவண்யாலாம் இருந்தால்ல அப்போ” என்றான் யோசித்தவாறு…
“அப்போ அவ உன்மேல கோவத்துல இருந்தா, உன்னை அடிக்காம விட்டதே பெருசு, நீ என்னடானா அவ பேசுனத வச்சு இவ்ளோ ஃபீல் பண்ணுற” என்றார்…
“இப்போ நான் என்ன பண்ணுறதுப்பா” அவரிடமே சரணடைய,…”ஆரம்பரத்துல நடந்த எல்லாத்தையும் நீ நித்திலா கிட்ட சொல்லு, அப்புறம் அவ என்ன சொல்றான்னு பார்க்கலாம்” அவர் சொல்ல, சிறிது யோசித்தவன்,…”சரிப்பா,… ஆனா நாளைக்கு நிலாவை ஹாஸ்ப்பிடல்ல அட்மிட் பண்ணலாம்னு இருக்கேன்,” என்றான்,…
“ஏன்டா, என்னாச்சு” அவர் பதற,…”டாக்டர் சொன்னது தான்ப்பா, டெலிவரி டேட்க்கு முன்னாடி அவள அட்மிட் பண்ணனும், அப்சர்வேசனில் வைத்து டெய்லி செக் பண்ணி, பெயின் வருவதுக்கு முன் சிசேரியன் செய்தாகனும், பெயின் வந்துட்டா ப்ராப்ளம்னு டாக்டர் சொல்லிருகாங்க, அவ டெலிவரி டேட்க்கு இன்னும் ஃபிப்டீன் டேஸ் தான் இருக்கு, நான் ரிஸ்க் எடுக்க விரும்பல, அதான் நாளைக்கு ஹாஸ்ப்பிட்டல் போலாம்னு இருக்கேன், இதை பத்தி நிலா கிட்டயும் சொல்லிட்டேன், பாட்டி கிட்டயும் சொல்லிட்டேன்” என்றவன்,…”அதை பத்தி நிலாகிட்ட இன்னைக்கே சொல்லியாகனுமாப்பா” என்றான்,…
“சொல்லுடா,… எனக்கு தெரிஞ்சு இது அவளுக்கு தெரியணும்னு நான் நினைக்கிறேன், அவளை நீ நேசிக்கல அப்டிங்கிறது கூட உன் கூட இருக்க அவளுக்கு ஒரு உறுத்தலா இருக்கலாம், சொல்லி பாரு பார்த்துக்கலாம்” அவர் சொல்ல, அவனும் ஒரு பெருமூச்சுடன் தலையசைத்தான்….
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
18
+1
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


அவனது எல்லையற்ற அன்பை மகிழ்வாய் அனுபவிக்க இயலாமல் விட்டு விலகி செல்ல வேண்டும் என்ற எண்ணம் தடுக்கின்றது.
உதடுகள் பிரிவை கூறினாலும் கண்கள் காதலை உரைக்கின்றன.
அவள் இன்னும் தன்னை மன்னிக்கவில்லை என்ற நினைப்பினில் அவன் இருக்க, அவளோ அவனது முதல் காதல் தான் இல்லை தன்னால் அவனுடன் வாழ இயலாது என்ற சுய கழிவிரக்கத்தினில்.
லட்சுமணன் மருமகளது மகிழ்வான முகம் பார்த்ததும் மகனை மன்னித்து அவனை காண வந்துவிட்டார்.
இவன் தன்னை நேசிக்கவில்லை என்ற எண்ணம் கூட அவள் விலகி செல்ல நினைக்க காரணமாக இருக்கலாம் என்று சரியாக யோசித்து மகனிடம் பேசுமாறு அறிவுருத்திவிட்டார்.