Loading

அத்தியாயம் – 39

 

நாட்கள் அதன் போக்கில் மிக வேகமாக நகர்ந்தன. நித்திலாவை அந்த வீட்டில் உள்ள ஒவ்வொருவரும் மிகவும் கவனமாகப் பார்த்துக் கொண்டனர். அவளை ஒரு சிறு வேலை கூடச் செய்ய அவர்கள் அனுமதிப்பதில்லை. மருத்துவர் அவளை அதிக ஓய்வில் இருக்கும்படி அறிவுறுத்தியதால், விக்ராந்தின் அன்புக்கட்டளைக்கு இணங்க அவள் அறைக்குள்ளேயே முடங்கிப் போயிருந்தாள்.

​இரவு நேரங்களில் மட்டும் பால்கனியில் மெல்லிய நிலவொளியில் விக்ராந்துடன் சிறிது நேரம் உலாவுவாள். விக்ராந்த் தன் அலுவலக வேலைகள் அனைத்தையும் வீட்டிலிருந்தே கவனித்துக் கொண்டான்.

“நான் பார்த்துக்கிறேன்டா, நீ உன் மனைவியோட இரு,” என வித்தார்த் அவனுக்குப் பக்கபலமாக நின்றான்

நித்திலாவிற்கு இப்போது ஐந்து மாதங்கள் முடிந்திருந்தது. அவள் உடலில் ஏற்படும் ஒரு சிறு அசைவு கூட விக்ராந்தைப் பதற வைத்தது. கர்ப்ப காலத்தின் சோர்வினால் அவளுக்கு அடிக்கடி கால் வலி ஏற்பட்டது. எவ்வளவு தடுத்தும் கேட்காமல், விக்ராந்த் தான் அவளுக்கு வெந்நீர் ஒத்தடம் கொடுத்து, கால்களைப் பிடித்து விடுவான். தன் வேலைகளுக்கு நடுவிலும் இதை அவன் ஒரு கடமையாக அல்லாமல், காதலால் தினசரி செய்து வந்தான்.

அன்றும் அப்படித்தான், அவள் எவ்வளவு மறுத்தும் கேட்காமல் அவள் கால்களைப் பிடித்துவிட்டு வெந்நீர் ஒத்தடம் கொடுத்துக் கொண்டிருந்தான்,  தனக்காக அவன் செய்யும் இந்தச் செயல்களைக் கண்ட நித்திலாவின் உள்ளம் உருகி, கண்களில் நீர் முட்ட அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

​”பேபி… இப்போ வலி இல்லையே? இன்னும் கொஞ்சம் பிடிச்சு விடவா?” என்று கேட்ட விக்ராந்த் அவளிடமிருந்து எந்தப் பதிலும் வராததால் நிமிர்ந்து பார்த்தவன், அவளது கலங்கிய கண்களைக் கண்டதும் அவன் இதயம் ஒரு நிமிடம் நின்று துடித்தது.

​”பேபி என்னாச்சு? வயிறு ஏதும் வலிக்குதா? சொல்லு பேபி… ஹாஸ்பிட்டல் போலாமா?” என அவன் துடிப்புடன் கேட்க, அவனது அந்தத் தவிப்பு நித்திலாவின் மனதிலிருந்த மீதிப் பிடிவாதத்தையும் கரைத்தது. தன் மேல் அவன் வைத்திருக்கும் அந்தப் பேராழமான அன்பைக் கண்டு, அவளுக்கு அவன் மீது இருந்த காதல் இன்னும் பலமடங்கு பெருகியது.

​”உங்களுக்குக் கஷ்டமா இல்லையா அத்து?” என நித்திலா உருக்கமாகக் கேட்க, அவள் கேட்பது புரிந்து அவளைப் புன்னகையுடன் பார்த்தவன்,.. “பேபி, நீ என் சுகமான வலி. உனக்காகச் செய்யுறதுல எனக்கு என்ன கஷ்டம் இருக்கப்போகுது?” என்ற அவனது வார்த்தைகள் நித்திலாவை நிலைகுலையச் செய்தன. உணர்ச்சிப் பெருக்கில் அவனை நெருங்கிச் சென்று இறுக்கமாகக் கட்டிக்கொண்டாள்.

​’இந்த நிமிஷம், உங்க கூட இப்படியே இருந்துட மாட்டேனானு மனசு ஏங்குது அத்து… ஆனா எனக்குத்தான் அந்தக் கொடுப்பினை கிடைக்காமப் போச்சே’ என மனதிற்குள் வருந்தியபடி, அவனது அணைப்பில் தஞ்சமடைந்தாள்.

​”பேபி… நம்ம குழந்தை ஹர்ட் ஆகப்போகுது பாரு,” என விக்ராந்த் மெல்லிய கிண்டலுடன் சொல்ல, சட்டென அவனை விட்டுப் பிரிந்தவள். “ஓஹோ… இப்போ குழந்தை மேல அவ்வளவு அக்கறை வந்துடுச்சா?” எனப் பொய்யான கோபத்துடன் முறைத்தாள்.

​”இல்ல பேபி… நீ என்னை ரொம்ப டைட்டா ஹக் பண்ணிட்டு இருந்தல்ல, அதான் சொன்னேன்,” என அவன் விளக்கம் தர, நித்திலாவோ.. “எனக்குத் தெரியாதா என் குழந்தையைப் பத்தி? இதனால குழந்தை ஒன்னும் ஹர்ட் ஆகாது. நான் உங்களை அணைச்சது பிடிக்கலைன்னா நேரடியா சொல்ல வேண்டியதுதானே? எதுக்குக் குழந்தையைக் காரணம் காட்டுறீங்க?” என முகத்தைச் சுழித்தாள்.

அவளது சீண்டலில் அவளை நெருங்கி வந்தவன்.. “இது எனக்குப் பிடிக்காமப் போகுமா பேபி? உன்னோட ஹெல்த் மட்டும் நல்லா இருந்ததுன்னு வையேன், நான் இப்படியெல்லாம் பொறுமையா இருந்திருக்கவே மாட்டேன். நீ என்னை ஹக் பண்ண அடுத்த செகண்ட் இங்கே நடந்திருப்பதே வேறு!” என்றான். அவன் எதைக் குறிப்பிடுகிறான் என்பதை உணர்ந்த நித்திலாவின் முகம் குங்குமமாய் சிவந்தது.

​”பேபி… தயவு செஞ்சு வெட்கப்படாதே, அப்புறம் என் கண்ட்ரோலை நான் இழந்துடுவேன்,” என அவன் எச்சரிக்க, நித்திலாவோ குறும்பாக, “ம்ம்ம்… பிரசவ நேரத்துலதான் பிரச்சனை இருக்குன்னு டாக்டர் சொன்னாங்க, இப்போ நான் நல்லாத்தான் இருக்கேன்,” என்றாள்.

​அவள் கொடுத்த அந்தப் பச்சைக்கொடி விக்ராந்தைத் தூண்ட, அடுத்த நொடியே அவன் அவள் இதழ்களைச் சிறை செய்தான். நீண்ட நாட்களுக்குப் பிறகு அந்த அறையில் காதல் மணம் வீசியது. இதழ் முத்தம் அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்ல, அவளை முழுதாய் ஆக்கிரமிக்கத் துடித்தவன், அவளது தற்போதைய உடல்நிலையை நினைத்துப் பார்த்துச் சட்டெனத் தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டு விலகினான்.

​”என்னாச்சு அத்து?” என அவன் விலகியதற்கான அர்த்தம் புரியாமல் நித்திலா கேட்க, “பேபி, நீ வீக்கா இருக்க… இதெல்லாம் குழந்தை பிறந்ததுக்கு அப்புறம் வச்சுக்கலாம். இப்போ நீ ரெஸ்ட் எடு,” என்றான் விக்ராந்த் அக்கறையுடன்.

​”ஆனா நான் தான் குழந்தை பிறந்ததும் போயிடுவேனே!” என நித்திலா சட்டெனச் சொல்ல, விக்ராந்தின் முகம் வேதனையில் சுருங்கியது.

அவனது வலியை உணர்ந்தவள், “ஸாரி அத்து… உங்களை ஹர்ட் பண்ணணும்னு சொல்லல, ஆனா இப்போ எனக்கு நீங்க வேணும்” என்றாள். அவளது அந்த வெளிப்படையான பேச்சில் விக்ராந்தின் வேதனை மறைந்து சிரிப்பு வந்தது. அதற்கு மேல் அவன் பொறுமை காக்கவில்லை, காதலால் அவளை ஆக்கிரமித்தான்.

​சிறிது நேரம் கழித்து, “அத்து… நீங்க எந்த அளவுக்குப் பொறுமையானவங்கன்னு இன்னைக்குத் தான் புரிஞ்சது,” என நித்திலா அவனது மார்பில் சாய்ந்தபடி சொல்ல, அவன் பதில் பேசாமல் அவளது தலையை வருடிக் கொடுத்தான்.

விக்ராந்திற்கு அவளைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை. ‘பிரிந்து போவேன் என்கிறாள், அதே சமயம் தன்னுடனான நெருக்கத்தையும் விரும்புகிறாள், இவள் மனதில் என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறாள்?’ என ஆரம்பத்தில் நித்திலா அவனைப் பற்றிப் புலம்பியது போலவே இப்போது விக்ராந்த் மனதிற்குள் புலம்பிக் கொண்டிருந்தான்.

​”அத்து தூங்கலையா?” என நித்திலா கேட்க, “ம்ஹும்.. நீ தூங்கு,” என்றான் விக்ராந்த். “பச்… தூக்கம் வரல, நாம பேசிட்டு இருக்கலாமா?” மெதுவாக தன் மனதில் இருந்த பாரத்தை பற்றி கேட்க முயல.. “ம்ம்.. சொல்லு” என்றான்,..,

​”லாவண்யா எப்போ இந்த வீட்டுக்கு வருவாங்க?” ​திடீரென லாவண்யாவைப் பற்றிக் கேட்டதும் விக்ராந்திற்கு எரிச்சல் ஏற்பட்டது.

“அவ ஏன் வரணும்?” என்றான்..

​”என்ன அத்து இப்படிச் சொல்லிட்டீங்க? அவங்க நீங்க லவ் பண்ண பொண்ணு. திடீர்னு போயிட்டாங்க… ஒருவேளை அவங்களுக்கு ஏதாச்சும் வேலை வந்திருக்குமோன்னு நானே நினைச்சுக்கிட்டேன்,” என நித்திலா சொல்ல, “அவ இனிமே இங்கே வரமாட்டா!” என்றான் விக்ராந்த் கறாராக.

இதில் திகைத்தவள், சட்டென எழுந்தமர்ந்து, “ஏன் வரமாட்டாங்கன்னு சொல்றீங்க?” என கேட்க, விக்ராந்தின் கோபம் எல்லை மீறியது. “பச்… இப்போ எதுக்காக அவ பேச்சு? தயவு செஞ்சு படுத்துத் தூங்கு, என்னையும் தூங்க விடு!” என அவன் கடுமையாகச் சொல்ல, நித்திலா அதற்கு மேல் பேசவில்லை.

​அவனை மேலும் கோபப்படுத்த விரும்பாமல், ‘இன்னொரு நாள் பேசிக்கொள்ளலாம்’ என அமைதியாகப் படுத்துவிட்டாள்.

ஆனால், அவன் ஏன் லாவண்யாவைப் பற்றிப் பேச மறுக்கிறான் என்பது அவளுக்குப் புரியாத புதிராகவே இருந்தது. அது ஒருவேளை பிரிந்துபோன காதலின் வலியாக இருக்குமோ என அவள் தவறாகவே எண்ணிக் கொண்டாள்.

​முக்கியமான மீட்டிங் காரணமாக விக்ராந்த் நீண்ட நாட்களுக்குப் பிறகு அன்று அலுவலகத்திற்குப் புறப்பட்டான். கிளம்பும் முன் நித்திலாவிடம் “கவனமாக இரு” என்று பலமுறை அறிவுறுத்திவிட்டு தான் சென்றான். அவன் சென்ற பிறகு, சுமித்ரா நித்திலாவுக்குத் துணையாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தாள்..

​”நித்தி… நீ சாப்பிட்டு ரொம்ப நேரமாச்சு, உனக்கு ஃப்ரூட்ஸ் கட் பண்ணி எடுத்துட்டு வரேன்” என்று எழுந்த சுமித்ராவின் கையைப் பற்றி அமர வைத்த நித்திலா.. “அக்கா… ஐம் ஸாரி” என்றாள் மெதுவான குரலில்.

​”திடீர்னு எதுக்கு நித்தி ஸாரி கேக்குற? நீ தப்பா எதுவும் பேசலையே?” என சுமித்ரா குழப்பத்துடன் கேட்க,  “அக்கா… நீங்கதான் இந்த வீட்டு மூத்த மருமக. இந்த வீட்டோட முதல் வாரிசு உங்க மூலமா வர்றதுதான் நியாயம், எனக்கு இது ஒரு மாதிரி இருக்குக்கா” என்றவளிடம்..
“அப்டியே அறஞ்சேன்னு வையேன், கன்னம் பழுத்துடும், என்னடி பேசிக்கிட்டு இருக்க நீ,” சுமித்ரா கோபம் கொள்ள,…”எனக்கு தெரியும்க்கா, உங்க மனசுல இதை நினைச்சு வலி இருக்கும்னு” என்றாள் அமைதியான குரலில்,..

நித்திலாவின் அருகே அமர்ந்து அவள் கைகளைப் பற்றிக் கொண்ட சுமித்ரா,.. ​”நித்தி… நீ எப்படி நினைக்கிறயோ தெரியல, ஆனா நான் உன்னை என் கூடப் பிறந்த தங்கச்சியா தான் பார்க்கிறேன். எனக்குக் குழந்தை பாக்கியம் தராத கடவுள் மேல ரொம்பக் கோபமா இருந்தது. ஆனா நீ கர்ப்பமா இருக்கேன்னு தெரிஞ்சதுல இருந்து, மறுபடியும் கடவுள் கிட்ட வேண்ட ஆரம்பிச்சேன். ஏன்னா, எனக்குக் குழந்தை இல்லைன்னா என்ன, என் தங்கச்சிக்குக் கொடுத்திருக்காரே! எனக்குப் பிறந்தா என்ன, என் தங்கச்சிக்குப் பிறந்தா என்ன… அதை வளர்க்கப்போறது நான் தானே? எனக்கு இதுவே போதும் நித்தி” என ஆனந்தக் கண்ணீருடன் சொல்ல.. “அப்படினா, நீங்க என் குழந்தையை நல்லா பார்த்துபீங்களாக்கா” என்றாள் கண்ணீர் வழிய,…

“பெத்துக் கொடுத்ததோட உன் வேலை முடிஞ்சுது. குழந்தை வெளி உலகத்துக்கு வந்ததும் அதை நான் தான் வளர்ப்பேன். உன் கிட்ட கூடக் கொடுக்க மாட்டேன், பார்த்துக்கோ!” என்று சொல்ல,… விழிகள் கலங்கி போனவள்,.. “தேங்க்ஸ்க்கா, தேங்க் யூ சோ மச்” என அவளை கட்டிக் கொண்டாள் நித்திலா….

அவளின் எண்ணவோட்டத்தை புரிந்து கொள்ளாத சுமித்ரா…”இப்போ எதுக்காக தேங்க்ஸ், அடி வாங்க போற பாரு நீ, என் குழந்தையை பார்த்துக்க உன்னோட தேங்க்ஸ் ஒன்னும் எனக்கு வேணாம், அதோட உனக்கு ஒன்னு தெரியுமா? குழந்தைக்கு நீ அம்மா மட்டும் தான், ஆனா நான் பெரியம்மா” அவள் பூரிப்புடன் சொல்ல, சுமித்ராவின் அந்தப் பாசமான பேச்சில் நித்திலாவிற்கு அழுகையுடன் கலந்த சிரிப்பு வந்தது. தன் குழந்தைக்கு ஒரு பாதுகாப்பான எதிர்காலம் இருப்பதை அவள் உறுதிப்படுத்திக் கொண்டாள்…

​”இங்க என்ன ரெண்டு பேரும் ஊர்க்கதை பேச ஆரம்பிச்சிட்டீங்களா?” என அதட்டலுடன் கேட்டபடி அன்னலட்சுமி அங்கே வந்தார்.

​”இல்ல அத்த… சும்மா குழந்தையைப் பத்தி பேசிக்கிட்டு இருந்தோம்,” எனச் சுமித்ரா மெதுவான குரலில் சொல்ல, “அட… அப்போ என்னையும் கூப்பிட்டிருக்கக் கூடாதா? நானும் வந்திருப்பேன்ல!” என மலர்ந்த முகத்துடன் வந்து அமர்ந்த அன்னலட்சுமி.. ​”சொல்லுங்க, என்ன பேசிக்கிட்டீங்க என் பேரன் பேத்தியைப் பத்தி?” என்றார் ஆர்வமாக,…

“அத்த… என் வயித்துக்குள்ள இருக்கிறது ஒரு குழந்தைதான். நீங்க என்ன பேரன் பேத்தினு சொல்றீங்க?” என நித்திலா சந்தேகமாகக் கேட்க… “அட அதில்லடி… பிறக்கப்போறது பேரனா பேத்தியானு தெரியலைல, அதான் ரெண்டையும் சேர்த்துச் சொன்னேன்,” என்று சொல்ல.. “ஓஹ்” என்றாள் நித்திலா…

“சரி சொல்லுடி, என்ன பேசிக்கிட்டு இருந்தீங்க” சுமித்ராவை பார்த்து அன்னம் கேட்க,…”அது… அது வந்து அத்த” என தயக்கத்துடன் இழுத்துக்கொண்டிருந்தாள் சுமித்ரா….

“ஏன்டி, உனக்கு ஒரு தடவை சொன்னா புரியாதா?” எனத் திடீரெனக் கோபப்பட, சுமியும் நித்தியும் அதிர்ச்சியில் விழித்தனர்.

​”இந்தத் தயக்கத்தை உதறித் தள்ளிட்டு, உன்னோட ஊர்மி அத்தை கிட்ட பேசுற மாதிரி என்கிட்டயும் பேசுனு பலமுறை சொல்லியும் நீ கேட்கமாட்டேங்கிறல? உனக்குலாம் பழைய அன்னலட்சுமிதான் சரி. நான் பழையபடியே மாறிடுறேன்!” என அவர் மிரட்ட, “ஐயயோ… வேணாம் அத்த!” என இருவரும் பதறினார்கள்.

​அவர்களின் பதற்றத்தைக் கண்டு அன்னலட்சுமி சிரிக்க, சுமித்ரா சுதாரித்துக்கொண்டு.. “நான் உங்க கிட்ட ஊர்மி அத்தை கிட்ட பேசுற மாதிரியே இனி பேசுறேன், அது என்னன்னா பழைய பயம் கொஞ்சம் ஒட்டிக்கிட்டு இருந்தது, அதான்” என இழுத்தவள்… “இனி பாருங்க அத்த, பழைய பயத்தை விட்டுட்டு நீங்க சொன்ன மாதிரியே சிறப்பாப் பேசிடலாம்,” என்றாள்.

“ஆமா அத்த… இனி பாருங்க உங்களை எப்படி வச்சு செய்றோம்னு!” குதூகலமாக நித்திலா சொல்ல,.. “என்னது… வச்சு செய்யப் போறியா?” என அன்னலட்சுமி கிண்டலாக உருமினார்.

​”ஐயோ… நான் அந்த அர்த்தத்துல சொல்லல அத்த, நான் என்ன சொல்ல வந்தேன்னா…” என நித்திலா தடுமாற, அன்னலட்சுமி அவளைத் தடுத்து.. ” விடுடி.. விடுடி… இப்போ என்ன, நான் பண்ணின அலப்பறைக்கெல்லாம் உங்க பங்குக்கு என்னை ஏதாவது செய்யணும்னு நினைக்கிறீங்க, அவ்வளவுதானே? தாராளமாப் பண்ணுங்க!” என அவர் கைகளை விரிக்க, அந்தப் பெருந்தன்மையைக் கண்ட மருமகள்கள் இருவரும் ஓடிச் சென்று அவரை இறுக அணைத்துக்கொண்டனர்.

​அன்னலட்சுமியின் அரவணைப்பில் அந்த வீட்டின் பகைமை மறைந்து, ஒரு தாய் மகள் உறவு அங்கே மலர்ந்திருந்தது.

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 21

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
21
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. அவனது பரிவான பராமரிப்பில் அக்கறையுடன் கூடிய பேரன்பினில் அவளது பிடிவாதம் சிறுக சிறுக குறைகின்றது.

    அவனது நெருக்கத்தினை நேசிக்கின்றாள் அதேநேரம் அவனுடன் வாழ்வை நகர்த்தி செல்ல மறுக்கின்றாள்.

    முன்னர் அவன் இவளை இவ்வகையான குழப்பத்தில் வைத்திருந்தான். இப்பொழுது இவள் அவனை அதே போன்றதொரு குழப்பத்தில் வைத்திருக்கின்றாள்.

    அவளாகவே கேட்டும் அதற்கு விளக்கம் அளிக்காமல் விட்டு விட்டானே.